Monday, January 08, 2024

நவராத்ரி நடக்கும்போதே தசராக் கொண்டாட்டம்

மேற்கு வங்காளம்னு சொல்லும் இந்திய மாநிலத்தில் இருந்து வந்தவங்க நிறையப்பேர் நம்மூர்லே இருக்காங்க.   அந்தந்த மக்கள், அவரவர் மொழின்னு இருக்கும்போது அவுங்களும் ஒரு குழுவா இயங்குவாங்கதானே !
நாம் பொதுவா நவராத்ரி ஒன்பது நாட்களும்,   முப்பெரும் தேவியரான  லக்ஷ்மி, துர்கை, சரஸ்வதின்னு  ஆளுக்கு மும்மூணு நாட்களைப் பங்குபோட்டுக் கொடுத்துட்டோமில்லையா !  பத்தாம் நாள் தசமியையும்  சேர்த்துக் கொண்டாடுவது  கொஞ்சம்பேரோன்னு  எனக்கொரு சம்ஸயம்.  இப்பப்பாருங்க.... நம்ம வீட்டில் அன்றைக்கு ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வோம். ஸ்ரீராமன்,  இலங்கைப் போரில் வெற்றியடைஞ்சநாள். 

இந்த மேற்கு வங்காள மக்கள் , தசரான்னு பத்துநாட்களும் துர்கையை மட்டும் பூஜிக்கிறாங்க.  துர்காஷ்டமிக்கு மிருக பலி கொடுப்பதெல்லாம் அவுங்க  மாநிலத்தில் உண்டு ! நம்மைப்போல் கொலு பொம்மையை எடுத்துப் பத்திரப்படுத்தாமல் துர்கையைத் தண்ணீரில் போட்டுடறாங்க. புள்ளை(யார்)யின் கதியே தாய்க்கும் !

நிறைய மக்கள் ஒரு இடத்தில் இருந்தால், தங்கள் கலை கலாச்சாரத்தைத் தொடர ஆர்வம்  காண்பிப்பாங்கதானே ?  இவுங்களும் தங்களுக்கான சங்கம் / சொஸைட்டி ஒன்னு ஆரம்பிச்சுச் சிலவருஷங்களா தசரா விழா நடத்திக்கிட்டு இருக்காங்க.  இதன் தலைவர் நம்ம நண்பர்தான் என்பதால்  எப்போதும் விசேஷ அழைப்பு அனுப்பிருவார்.  வீகெண்டுக்கு நேர்ந்துவிடும்  எங்க வழக்கப்படி நவராத்ரியில்  வரும் சனிக்கிழமைதான் எப்பவுமே !

இவுங்க  விழான்னால் ஒரு நாள் முழுசும்  நடக்கறமாதிரி அமைப்பாங்க.  காலையில்  எட்டரைக்குப் பூஜை ஆரம்பம். இங்கிருக்கும் பெங்காலி சமூகத்தின் மூத்தகுடிகள்,  அவர்கள் வழிபாட்டு முறைகளைச் சொல்லிக்கொடுக்க, உள்ளுர் குஜராத்தி பண்டிட் வந்து நடத்திக் கொடுப்பார். 
கொஞ்சம் விஸ்தாரமான பூஜை முறைகள்தான்.  இடைக்கிடையே குலவையிடுவார்கள்.   பெண்கள் சிலர், சங்கு ஊதுவாங்க.  சின்னதா ஒரு பறை மாதிரி ஒன்னு வச்சுக்கிட்டு அப்பப்போ ஒரு தட்டு ! அக்னி வளர்த்து ஹோமம் செய்வார்கள்.  கடந்த ரெண்டு வருஷங்களாக, நம்ம சிட்டிக்கவுன்ஸில் ஹாலில்தான்  விழா நடக்குது.  ஹோமம் செய்வதை, பின்பக்கத்தத் தோட்டத்தில் வச்சுக்கணும். ஹாலில்  அனுமதி இல்லை. ஃபயர் அலார்ம் இருக்கு.  இந்த ஹாலில் தான் எங்க யோகா வகுப்பு அஞ்சு வருஷங்களா நடக்குது.  அதனால் இது எங்க ஹாலுன்னு சொல்லிக்குவோம்:-)
பூஜைகள் முடிஞ்சதும் விருந்து சாப்பாடு.  அப்புறம்  கலைநிகழ்ச்சிகள் மாலை ஆறுவரை.  இது முடிஞ்சதும்  மஹா ஆரத்தி. ரொம்பவே விஸ்தரிச்ச விளக்கலங்காரத்தில் ஜிலுஜிலுன்னு இருக்கும்.  கடைசியில் பிரஸாத விநியோகம்.  எப்படியும் இரவு எட்டரை ஒன்பது ஆகிரும்!
பூஜைமண்டபத்தில்  துர்கை நடுவிலும், இடதுவலது புறங்களில் லக்ஷ்மி & சரஸ்வதி, கடையில் இருபக்கங்களிலும் புள்ளையாரும் கார்த்திக் ஸ்வாமியுமாக இருக்கிறார்கள்.  இதே வரிசையில் அமைஞ்ச ஒரு டெர்ரக்கோட்டா  பேனல் சிற்பத்தை, பல வருஷங்களுக்குமுன் உள்ளூர் ட்ரேட் எய்டு கடையில் வாங்கியிருக்கேன் ! 

இந்த வருஷம், இதே சங்கத்தின் பெயரில் இன்னொரு இடத்திலும்  இதே நாள் இதே நேரம்னு இன்னொரு இடத்தில் இருந்து அழைப்பு வந்தது. இது என்னடா நமக்கு வந்த சோதனை.  ஒரே சங்கமா இல்லை சங்கம் துண்டுபட்டுப்போச்சான்னு குழப்பம்.

சங்கத்தலைவர், தனி மடலில் இரண்டாவது அழைப்பு வேற ஒரு குழு. முதலில்  அனுப்பியதுதான் 'நம்ம' குழு.  மறக்காமல் வந்துருங்கன்னு செய்தி அனுப்பினார். 



நாங்களும் சனிக்கிழமை காலையில் நம்ம வீட்டில்  காலை பூஜைக்கு ட்ரைஃப்ரூட்ஸ் ப்ரஸாதம்  படைச்சுட்டு,  ஒரு ஒன்பதுக்குக் கிளம்பி. 'எங்க ' யோகா ஹாலுக்குப் போனோம்.  ஏற்கெனவே நான் எழுதியபடி விஸ்தாரமாப் பூஜை நடந்தது.  எங்க யோகா குடும்ப அங்கத்தினர்கள் பலரும் கலந்து கொண்டார்கள். 
தேர்தல் வர்ற சமயம் என்பதால்  வேட்பாளர்கள் சான்ஸ் கிடைச்சால் போதுமுன்னு மக்கள் கூடும் இடத்துக்கு  வர்றது இங்கே சகஜம்.  அதிலும் எத்னிக் கம்யூனிட்டி விழான்னால் வெல்லம் :-) நம்ம  பக்கத்துத் தொகுதி வேட்பாளர் வந்துருந்தார்.  ஏற்கெனவே இவரை நாம் ஒரு சில   நிகழ்ச்சி/ விழாக்களில் சந்திச்சுருக்கோம். நம்மைப் பார்த்ததும் ரொம்ப சந்தோஷமானார்.  அங்கே என்ன நடக்குதுன்னு விளக்கிச் சொல்ல ஆள்  கிடைச்சுருச்சு :-) நம்மவரை அவரண்டை இருக்கச் சொல்லிட்டு நான் என் கடமையைச் செய்யப்போயிட்டேன்.  அங்கே கூடுன கூட்டத்தில் ஒரு 80%  எனக்குத் தெரிஞ்சவங்கதான். பேச எவ்ளோ விஷயம்  இருக்கும், இல்லெ ?
லஞ்ச் இடைவேளைக்குப்பின்  மேஜிக் ஷோ ஒன்னு நடக்கப்போகுது !  இந்த மேஜிக்காரரை நாங்க இங்கே வந்த காலம் முதல்  பார்த்துக்கிட்டுத்தான் இருக்கோம்.  அப்பெல்லாம், பள்ளிக்கூட டெர்ம் ஹாலிடேஸ் சமயம் மாலில்  காலை  11 & பகல் 3  ன்னு ரெண்டு காட்சிகளை  மால் மேனேஜ்மென்ட் ஏற்பாடு செய்யும்.  இப்ப இருக்கும் அளவுக்கு நேரம் போக்கும் சமாச்சாரங்கள் அப்போ இல்லை.  டெக்னாலஜி அவ்வளவா  வளரலை.  வீட்டு வீட்டுக்குக் கம்ப்யூட்டர், ஆளாளுக்கு செல்ஃபோன் எல்லாம் கிடையாது.  சுருக்கமாச் சொன்னால்  சுவத்தில் மாட்டி இருக்கும்,   டயல் சுத்தும் டெலிஃபோன் காலம்!

வாரம் அஞ்சரை நாட்கள்  கடைகள் திறந்து வியாபாரம். சனிக்கிழமை பகல் ஒரு மணி முதல், திங்கள் காலை எட்டுவரை ஊரே ஜிலோன்னு கிடக்கும்.  சின்னக்குழந்தைகளை வச்சுருக்கும் தாய்களுக்குப் பைத்தியம் பிடிச்சுப் பாயைச் சுரண்ட வைக்கும் பள்ளிக்கூட விடுமுறைகள்.   இருக்கும் ஒரே மாலில் அடைக்கலம் தேடுவோம்.  அங்கேயே சுத்திக்கிட்டு இருந்து ரெண்டு ஷோவும் முடிஞ்சுதான் வீட்டுக்குப் போவோம். கொசுவத்தி தானாப் பத்திக்கிச்சு :-)


மேஜிக்காரரிடம்  ஒரு சின்னப்பேச்சு. ரிக்கர்ட்டன் மாலில்  உங்க மேஜிக் ஷோவைத் தவறாமப் பார்த்திருக்கேன்னதும்  அவருக்கு உற்சாகம் வந்துருச்சு.  பிள்ளைகள் எல்லாம் வளந்துருப்பாங்களேன்னார்.  கல்யாணம் ஆகிக் குழந்தையும் இருக்குன்னேன் !  படம் எடுத்து மகளுக்கு அனுப்பறேன்னதும்   போஸ் கொடுத்தார். ரெண்டு  க்ளிக் ஆச்சு.  ஷோ பார்த்துட்டுப் போவீங்கதானேன்னார். பின்னே ?  மகளுக்குப் படத்தை வாட்ஸப்பில் அனுப்பினேன். 
வெளியே ஹாலையொட்டி இருக்கும் இடத்தில் பகல் சாப்பாடு !  நம்மவரைக் காணோமேன்னு தேடினால் உண்மையாகவே கண்ணுக்கெட்டும் தூரம் ஆளையே காணோம்.   இவரைத்தேடி நான் அலைஞ்சுக்கிட்டு இருக்கும்போது, 'இன்னும் நீ சாப்பிடலையா'ன்னு  வர்றார்.  அரசியல்வியாதிக்குக் கம்பெனி கொடுத்து நல்லாக் கவனிச்சுக்கிட்டாராம்.  ரெண்டு பேரும் பிக்னிக் டேபிள் இருக்குமிடத்தில் உக்கார்ந்து  சாப்பிட்டாங்களாம்.   


'பாவம், அந்தாளைக் கவனிக்க  இங்கே யாருமே இல்லை'ன்னு பரிதாபம் வேற !  இங்கெல்லாம் அரசியல்வியாதிகள், ஆள் அம்பு, அடிப்பொடிகள்னு யாருமே இல்லாமத்  தனியாத்தான் வருவாங்க.    வண்டிக்கு ட்ரைவர் கூட கிடையாது !
நல்ல வெயில் வந்ததால் எல்லோருக்கும் மகிழ்ச்சியே !  எங்க தொகுதி பார்லிமென்ட் அங்கம் அப்போதான் வந்தாங்க. தேர்தல் வருதே.... வேலைகள் நிறைய இல்லையோ !  அதுவும் இவுங்க   அமைச்சர் வேற !  வார நாட்களில் தலைநகரிலும், வீக் எண்டுகளில் நம்மூரிலும் இருப்பாங்க. தொகுதிக்கு வர்றதே இல்லைன்னு யாரும் நாக்குமேலே பல்லைப்போடக்கூடாது , ஆமாம்!  ரொம்பப் பழைய கால நட்பு என்பதால் குசலவிசாரிப்புகள் ஆச்சு. 
நம்ம பொண்ணு மிஷல் இந்த ரெண்டு இடத்தில் நடக்கும் விழா நிகழ்ச்சிகளிலும் ஆடப்போவதாக   சேதி ஏற்கெனவே வந்துருச்சு. அவுங்க  அண்டைநாட்டுக்குப் போகப்போறாங்க என்பதால்  அநேகமாக இதுதான் கடைசி நிகழ்ச்சி. ஊக்குவிக்க நான் போகலைன்னா எப்படி ?  இன்னொன்னு சொல்லிக்கணும். இங்கே நம்மூரில் ஏகப்பட்ட சொஸைட்டிகள், விழாக்கள் நடப்பதால் இருக்கும் கலைஞர்களுக்கு ரொம்ப டிமாண்ட் உண்டு.  ஒரு நடனத்தை ஒரு இடத்தில் மிஸ் பண்ணிட்டால் கவலைப்பட ஏதும் இல்லை. இன்னொரு விழாவில் அதே நடனத்தைப் பார்த்துடலாம் .

லஞ்சு முடிச்சுட்டுக் கொஞ்சநேரம் மேஜிக் ஷோ பார்த்துட்டுக் கிளம்பிட்டோம்.  வீட்டுக்குப்போய் நம்மவனுக்கு  லஞ்சு பரிமாறிட்டு, அந்த இன்னொரு துர்கா பூஜைக்குத் தலை காமிச்சுட்டு வரணும் ! 




பதிவு நீண்டுபோனதால் பாக்கி அடுத்த பதிவில் :-)

6 comments:

said...

தெரியாத ஆனால் சுவாரஸ்யமான விவரங்கள். அவரவர்கள் வழக்கம், கலாச்சாரம்...

said...

வாங்க ஸ்ரீராம்,

எல்லாமே பலவிதம்தான் !

said...

இது அப்பவே படிச்சிட்டேன் ஆனா பாருங்க துளசிக்கா க்ளிக்கினப்ப இதுக்கு அப்பறமான பதிவு வந்துச்சா அதை வாசிச்சு போட்டுட்டு இந்தாண்ட வந்தாச்சு.

இந்தப் பிரிவு பத்தினதுதான் அந்தப் பதிவுல முதல் பாராவா?!!!!

உங்க ஊரு உங்க ஏரியா வட்டம் எப்பவுமே ஜே ஜே தான் போல! மனம் மகிழ்ச்சியா இருக்கும்.

உங்க ஊர் அமைச்சரோடு ஜாலியா நின்னு போச் கொடுக்கறீங்களே இங்க நம்ம ஊர்ல முடியுமா சொல்லுங்க!

கீதா

said...

வாங்க கீதா,

ஒன்னா இருக்காம இப்படிப் பிரிச்சுப் பிரிச்சுக் குரங்கு அப்பம் பிட்ட கதையாகிரும் போல.....

ஏராளமான நிகழ்ச்சிகள்ப்பா.... கூடியவரை போகணும்தான்.

அதிகார வர்க்கத்துக்குப் ப்ரொட்டகால் எல்லாம் இதுவரை இங்கில்லை. மேலும் இவுங்க நமக்கு ரொம்பவே தெரிஞ்சவங்கதான்.

said...

நவராத்திரியும் தசரா விழாக்களும் பூசைகள் படங்கள் கண்டு மகிழ்ந்தோம்.

said...

வாங்க மாதேவி,

வருகைக்கும் கருத்திற்கும் நன்றிப்பா !