Monday, January 29, 2024

சரஸ்வதி பூஜை. நவராத்ரியின் ஒன்பதாம் நாள் !

நாம்  இன்னும் நவராத்ரியில்தான் இருக்கோம் என்று சொல்லிக்கொண்டு............ மறக்காமல் பொரிகடலையும் லட்டுமாய் ப்ரசாதம் ஆச்சு!   சட்னு காலைப்பூஜையை முடிச்சுக்கிட்டு,  ஒரு பொறந்தநாள் பார்ட்டிக்குப் போறோம். 
சீனியர் மக்கள் நாம் என்பதால்  நம்மாட்களின் வீட்டுக் கொண்டாட்டங்களுக்கு  அழைப்பு வந்துக்கிட்டே இருக்கும்.  நாமும் பெரியமனுஷங்களாப்போய் ஆசிகளை வழங்கிட்டு வர்றோம்.  குளிர்காலம் முடிஞ்சு ரெண்டுமாசம் ஆனாலும்  இன்னும் குளிர்விட்டபாட்டைக் காணோம்....
நண்பர் செந்தில்தான் அங்கேயும் கேட்டரிங். அருமையான  சுவை என்பதால் அவர் இனி எங்கே கேட்டரிங் செய்தாலும், தெரியாத இடமா இருந்தாலும்கூடப்  போகலாமேன்னு தோணுச்சு :-)



நான் லேபர் டேன்னு சொல்லிக்கிட்டு இருந்தது  இன்றைக்குத்தான் . அக்டோபர் நாலாம் திங்கள். அரசு விடுமுறை என்பதால் எல்லோருக்கும் வசதிப்படுமேன்னு நம்ம யோகா குழு  என்ற  யோகாகுடும்பத்தை, நம்ம கொலுவுக்குக் கூப்பிட்டுருந்தோம்.  மதியம் ரெண்டு மணிமுதல் நாலுவரை என்ற ஏற்பாடு.  






நாலரைக்கு  எல்லோருமாச் சேர்ந்து இப்படியே கிளம்பிப்போய் இக்குடும்பத்தின் இன்னொரு அங்கத்தின் வீட்டில் கூடிக்களிக்கணும்.  கர்பா,  பொறந்தநாள் விழா, டின்னர்னு அங்கேயும் ஒரு ஏற்பாடு.  
அங்கே டின்னர் என்பதால், நம்ம வீட்டில் ஸ்நாக்ஸ் வகைகள் மட்டும்  போதுமுன்னு முடிவு. 

எல்லோரும் வந்ததும் ஆரத்தி எடுத்து, பஜனைப்பாடல்கள் பாடி, ஃபோட்டோ ஷூட் நடத்தி,  நொறுக்குத்தீனி தின்னுன்னு சம்ப்ரதாயப்படி எல்லாம் ஒன்னுவிடாமல் ஆச்சு:-)

நாலரைக்குக்கிளம்பினோம், நம்ம புதினா காட்டிலிருந்து கொஞ்சம் புதினாவுடன்.  பக்கத்துப்பேட்டைதான். பத்தே நிமிடப்பயணம்.  

இந்த இடம் விமானப்படையின் விமானதளமா (Air Base ) ஒரு காலத்தில் இருந்தது.  சரியா நூறு வருஷ சரித்திரம்.  மொத்தம் 1210 ஏக்கர் பரப்பு. 1923  முதல் 1940 வரை செயல்பட்டுக்கிட்டு இருந்த  இடம். 1935 லே   ஊருக்கான விமானநிலையம் கட்டிக்கும் எண்ணம் வந்த சிட்டிக்கவுன்ஸில் திட்டம்போட ஆரம்பிச்சு 1940 இல் புது இடத்துக்கு திறப்புவிழா நடத்திட்டாங்க.  அப்புறம் இந்த இடம் ஃப்ளையிங் ஸ்கூலுக்குப் பயன்பட்டது.  நம்மவர் கூட வேலைசெய்த  நண்பர் ஒருவரின் பயிற்சி வகுப்பில்,   வானத்தில் போய்  வட்டமடிச்சு வர்றதுக்கு  மகள் ஆசைப்பட்டாள் என்று அனுப்பினோம்.  அது ஆச்சு ஒரு 25 வருஷத்துக்கு முன் !

இப்போ  அங்கே ஏர்ஃபோர்ஸ் ம்யூஸியத்துக்குக் கொஞ்சம் இடம் ஒதுக்கிட்டு,  பிஸினஸ்  ஏரியான்னு கொஞ்சமும்  குடியிருப்புப் பகுதியா  சுத்திவரவுமா  ஆக்கிட்டாங்க. இங்கே உள்ள தெருக்கள், இடங்களுக்கெல்லாம்  த ரன்வே, லேண்டிங், Kittyhawk Road,  Skyhawk Road, Propeller Swim  School விமானம் சம்பந்தப்பட்ட பெயர்கள் சூட்டியிருக்காங்க.!  எனக்கு ரொம்பப்பிடிச்சுருக்கு, இந்த பெயர்கள் மட்டும்!    வளாகத்தின் வாசலில் இருக்கும் Harv, ard Aircraftதான் இது என்னவா இருந்ததுன்னு அடையாளப்படுத்துது.  அம்பதாவது வருஷ விழாவில்தான்  (1973)இந்த விமானத்தை வாசலில் வச்சாங்களாம் ! 
நம்மூர்லே ஒரு பேட்டையில்  Byron, Wordsworth, Shekespeare, Tennyson  இப்படி இங்கிலாந்து எழுத்தாளர்கள், கவிஞர்கள் பெயர்களையே சூட்டி இருக்காங்க அந்தக் காலத்தில் !   

வாங்க,  வீடு வந்தாச்சு.   புதினா டீயும், சில நொறுக்ஸும் ஆனதும்  கேக் வெட்டிப் பொறந்தநாளையும்  கொண்டாடிட்டு வாசலுக்குப் போனோம்.  

இந்த நண்பர்/ யோகா குடும்ப அங்கம் பற்றியும் ரெண்டு வரி சொல்லிக்கறேன்.  ரொம்பவே ஜாலியா மனிதர். வீட்டில் டும்டும் எல்லாம் வச்சுருக்கார்.  நாலைஞ்சு பகடிகள் வேற !  முக்கியமாச் சொல்ல வேண்டியது, அவர் பிறந்து வளர்ந்த கிராமத்தில் வசதி குறைந்த மாணவர்களுக்காக ஒரு பள்ளிக்கூடம் நடத்தறார்.   எட்டாம் வகுப்புவரை இருக்காம். அடுத்த வருஷம் ஒன்பது, அதற்கடுத்த வருஷம் பத்துன்னு வகுப்புகளைக் கூட்டணுமாம். புத்தகம், சீருடைன்னு  எல்லாமே இலவசம்தான்.  கல்விக்கட்டணமும் கிடையாது. 





வருடம் சில மாதங்கள் போய் தங்கி இருந்து பள்ளி நிர்வாகத்தையும்  கவனித்து வர்றார்.  கல்விக்கண்களைத் திறப்பதுதான் உண்மையான  தர்மமும் மகிழ்ச்சியும் என்றுதான் நான் நினைக்கிறேன்.

வாசலில் கர்பா ஆடினோம். எதுத்த வீட்டுக்காரங்க வியப்போடு பார்த்தாங்க. வீட்டம்மா அங்கே போய் அவுங்களுக்கு விளக்கம் சொல்லி, அவர்களுக்கும் அழைப்பு கொடுத்துட்டு வந்தாங்க.

ஆடி முடிச்ச களைப்பில் டின்னரை ஒரு கை பார்த்தோமுன்னு தனியாச் சொல்லவேணாம்தானே !


எல்லாம் முடிச்சுக் கிளம்ப மணி எட்டரை ஆச்சு.       

வேறொரு விசேஷப் பூஜையில் கலந்துகொள்ளப் போயிருந்த  சிலர் மதியம் நம்ம வீட்டுக்கொலுவுக்கு வரமுடியலை என்பதால் கொலு தரிசனத்தை விடக்கூடாதுன்னு நம்மோடு வீட்டுக்கு வந்துட்டுப் போனாங்க.



குறையொன்னுமில்லை கோபாலான்னு நவராத்ரி நல்லபடியா முடிஞ்சது. 

மறுநாள் காலையில்............................


6 comments:

said...

விடுமுறை தினம் என்றால் இந்திய வழக்கப்படி சமர்த்தா வீட்டில் இருந்து டிவி பார்க்காமல் இப்படி கிளம்பி நண்பர்களை பார்த்து வருவது நல்ல பழக்கம்.

said...

நவராத்திரி கொண்டாட்டங்கள், பிறந்த நாள் விழா என அனைத்தும் அருமை. படங்கள் வழமை போல சிறப்பு. தொடரட்டும் பதிவுகளும், பகிர்வுகளும்.

said...

வாங்க ஸ்ரீராம்,

சிலருக்குத்தான் இந்தப் பழக்கம் இருக்கே தவிர, பெரும்பாலும் நம் மக்கள் டிவியே கதின்னுதான்...... ப்ச்....

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

இந்தக் கொண்டாட்டங்களும் இல்லைன்னா வாழ்க்கை சலிச்சுத்தான் போயிரும், இல்லெ ?

நல்லவேளை, பிழைத்தேன் !

said...

பிறந்தநாள், சிநேகிதர் சந்திப்பு என மகிழ்ச்சியான பொழுதுகள்.

said...

வாங்க மாதேவி,

பொழுதுகளை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்வது நம் முயற்சியால்தான்! அதுக்கேற்றாற்போல், நட்புகள் அமைவது பாக்கியம் !