Wednesday, January 17, 2024

உழைப்பாளர் தினத்தைச் சும்மா விடமுடியாது !

நவராத்ரிக்கிடையில் தீவாலின்னு தலைப்பு வைக்கலாமுன்னு பார்த்தால்  பதிவு எழுதும் சமயம் பொங்கல் வந்துருச்சு.  ஏகப்பட்ட வேலை. போகிப்பண்டிகை, பொங்கல் பண்டிகைன்னு வீட்டிலும் கோவிலிலும் பிஸியான நாட்களா இருந்ததால் திங்கட்கிழமை பதிவுக்கு லீவு விட்டுட்டேன். பொங்கல் விடுமுறை !  

சரி. வாங்க . நாம்  விட்ட இடத்திலிருந்தே ஆரம்பிச்சுப்போகலாம். எங்கே விட்டேன் ? ஆங்.... துர்கா பூஜை.

உழைப்பாளர் தினத்தைச் சும்மா விடமுடியாது !

மே டே/ லேபர் டேன்னு சொல்லும் சமாச்சாரம் 1880 இல் ஆரம்பிச்சதா  வலையில் ஒரு குறிப்புப் பார்த்தேன். ஆனால் நியூஸி சரித்திரத்தில் இருக்கும் இன்னொரு குறிப்பு கொஞ்சம் சுவாரஸ்யம். 
Samuel Parnell என்னும் தச்சுத்தொழிலாளி, 1840 இல்  சொல்றார், ஒரு நாளைக்கு 24 மணிநேரம் இருக்கு. அதுலே எட்டுமணி நேரம் தூக்கம், இன்னொரு எட்டுமணி நேரம் வீட்டுலே சமைக்க, சாப்பிட, குடும்பத்தோடு பொழுது போக்க,  வெளியே போய் வர, மத்த ஆட்களோடு  கூடி இருக்கன்னு வச்சுக்கணும்.  மூணாவது எட்டு மணிநேரம் கூலிக்கு உழைக்கணும்.  இதுதான் வாழ்க்கை நடத்தச் சரியான முறைன்னு  ஆரம்பிச்சு வச்சு,  நியூஸி சரித்திரத்தில் இடம் புடிச்சுட்டார்.

 அந்த வருஷம்தான்   மவொரிகளுக்கும்,  மேட்டிமை தாங்கிய மஹாராணி விக்டோரியாவின்  அரசுக்கும்  இடையில்  ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாச்சு. "நமக்குள்ளே எதுக்கு சண்டை?  சண்டை வேணாம். நாங்க இங்கே யே இருந்துக்குவோம். நாங்க இங்கே ஒரு சிவில் அரசாங்கம் உருவாக்குவோம். உங்க சொத்துங்க, உங்க கலாச்சாரம், பழக்க வழக்கம் இதுக்கெல்லாம் இங்கே குடியேறி வந்த/வரப்போற ப்ரிட்டிஷ் ப்ரஜைகளாலே ஒரு கஷ்டமும் வராது! உங்களுக்கு நாங்க பாதுகாப்பா இருப்போம். ப்ரிட்டிஷ் குடிமக்களுக்கு இருக்கற எல்லாவித உரிமைகளும் உங்களுக்கு இருக்கு!

இங்கே இருக்கற வனாந்தரங்கள், கடலிலெ மீன் பிடிக்கற உரிமை எல்லாம் உங்களுக்கே! எங்களாலே ஒரு தொந்திரவும் இருக்காது. உங்களுக்கு
விருப்பப்பட்டா(!) உங்க நிலபுலன்களை எங்களுக்கு விக்கலாம். நீங்களா உரிமை கொடுத்தா நாங்களும் கொஞ்சம் மீன் புடிச்சுக்குவோம்!"

இந்த ஒப்பந்தத்துக்குப் பெயர் வைட்டாங்கி ஒப்பந்தம். மேல் விவரத்துக்கு இருக்கவே இருக்கு உங்கள் துளசிதளம் :-)

https://thulasidhalam.blogspot.com/2005/02/blog-post_05.html

இந்த Samuel Parnell  சொல்றது நியாயமாத்தான் தோணியிருக்கணும். ஆனாலும்.... வேலைபோட்டுக்கொடுத்து, சம்பளம் கொடுக்குற முதலாளிகள் அப்படியே ஏத்துக்கிட்டு உடனே மாற்றம் வந்துருக்குமுன்னு நினைக்கிறீங்களா ?   
மேலே படம் :  நியூஸி சரித்திரத்தின் வலைப்பக்கம் நன்றி !

அது ஆச்சு  ஒரு அம்பது வருஷம்... அக்டோபர் 28 தேதி, 1890  வருஷம் முதல்முதலா லேபர் டேன்னு நியூஸியில்  கொண்டாடுனாங்க.  ஒரு நாளைக்கு எட்டுமணி நேர வேலைன்னு உறுதியாச்சு. இதுக்கு முந்தியே உலகின் பலபாகங்களில் மே மாசம் முதல் தேதியை மே டேன்னு  சொல்லும் உழைப்பாளர் தினமாக் கொண்டாடும் வழக்கம் வந்துருச்சு.  நம்ம நியூஸிக்கு பலநூற்றாண்டு சரித்திரம் எல்லாம் கிடையாது கேட்டோ !எண்ணிப்பார்த்தால்  183 வருஷம்தான் நாட்டின் வயசே !

அப்புறம் ஒரு ஒன்பது வருஷம் கழிச்சு  அப்போ இருந்த அரசு Labour Day Act of 1899 னு சொல்லி, இதுக்கு ஒருநாள் அரசாங்க விடுமுறை விட்டுக் கொண்டாடிக்கலாமுன்னு முடிவு செஞ்சு, அதுக்கடுத்த வருஷம் 1900  அக்டோபர் மாசம் ரெண்டாம் புதன் கிழமை  லீவுன்னு அறிவிச்சது.  
வாரத்துக்கு நடுவிலே ஒருநாள் லீவுன்றது ஆரம்பத்துலே நல்லா இருந்தாலும் அவ்வளவாச் சரி வரலைபோல.... ஒரு பத்து வருஷம் சரிப்படலைன்னு சரிப்படலைன்னு கூவிட்டு, நாளை மாத்திக்கிட்டாங்க.  அக்டோபர் மாசம் நாலாவது திங்கட்கிழமை !  சனி ஞாயிறு கூடச் சேர்ந்து மூணுநாள் லாங் வீக் எண்ட்ன்னுதான்  இப்போவரை !

 இப்போ ஒரு சமீபத்திய சரித்திரம் சொல்லிக்கறேன்.  1997 இல்  'நம்மவர்'  ஒரு நல்ல காரியம் செய்ய யோசிச்சு, இங்கே  நம்மூரில்  இருக்கும் இந்தியர்கள் (மலேசியா, ஃபிஜி, தென் ஆஃப்ரிகா & இன்னபிற நாடுகள்  உட்பட ) எல்லோருக்குமாய் ஒரு சங்கம் இருந்தால் நல்லதுன்னு ஆரம்பிச்சார்.  அந்த  சங்கத்துக்கு இண்டியன் சோஸியல் & கல்ச்சுரல்  க்ளப்னு பெயரும் சூட்டியாச்சு. ISCC  ஆரம்பிச்சார்னு ஒரு சொல்லில்  முடிச்சுட்டேன்.  அதுக்குமுன்னாலும் பின்னாலும் பட்ட அனுபவங்கள் எல்லாம் சொல்லப்போனா.......   தாங்க மாட்டீங்க. இன்னொருநாள் கச்சேரியை வச்சுக்கலாம்.)

அந்த வருஷம் இந்திய சுதந்திரத்தின்  பொன்விழா ஆண்டு இல்லையோ ! முதல் ஒன்று கூடலாக அமைஞ்சது பொன்விழாக் கொண்டாட்டம்தான் ! அப்புறம் தீபாவளி, க்றிஸ்மஸ் & புது வருஷம்னு வருஷத்துலே  ஒரு நாலைஞ்சு விழாக்கள்.ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாசங்கள் இங்கே குளிர்காலம் என்றதால்  குளிரில் எங்கேயும் போகாமல் முடங்கிக்கிடக்கும் மக்களை உற்சாகப்படுத்த  மிட் வின்ட்டர் கெட் டுகெதர்ன்னு கூட ஒன்னு.

இங்கே வேலைநாட்களில் யாருக்கும் பொழுதுபோக்குக்கும் விழாக்களுக்கும் நேரம் இருக்காது என்பதால்  வீக் எண்டுக்கு நேர்ந்து விடுவதுதான்  வழக்கம். அந்த  வீகெண்ட்லே கூட சனிக்கிழமைகள்தான் எல்லா நிகழ்ச்சிகளும் இங்கே  கல்யாணம் உட்பட !  ஒரே ஒரு நிகழ்ச்சிதான்  வீக்கெண்டுலே  வைக்கமாட்டாங்க.   அதைச் சொன்னால்.... துக்கம்.

கழுதை தேய்ஞ்சு கட்டெறும்பா ஆனது போல.....  ISCC யின் எல்லா விழாக்களும் ஒவ்வொன்னாக் காணமப்போய், கடைசியா ஒத்தை விழாவா நிக்கறது தீபாவளி / திவாலி DIWALI மட்டும்தான்.

நியூஸி நாட்டுக்கே இப்ப திவாலின்னாத்தான் தெரியும் ! நம்ம பாராளுமன்றத்தில் கூட கொண்டாடறாங்கன்னா பாருங்க.  இது ஊர்ப்பொதுவிழாவாக ஆகிருச்சு.  நம்மூரில் இதை நம்ம சங்கம்தான் கொண்டாடுது. சிட்டிக்கவுன்ஸிலின் நிதி உதவி கூடக்கிடைக்குதுன்னா பாருங்க !

தீபாவளி சமயமுன்னு  (அக்டோபர்- நவம்பர்) பார்த்தால்   இந்த லேபர் டே லாங்க் வீகெண்ட் அக்டோபரில் வர்றதால்  அந்த நாளில் கொண்டாடிக்கலாமுன்னு ஒரு முடிவாச்சு.லாங்க் வீகெண்டின் சனிக்கிழமை !  இன்றைக்கு அந்த லாங் வீகெண்டின் சனிக்கிழமை . ஆனாப் பாருங்க.... இந்த நவராத்ரி வேற செப்டம்பர்- அக்டோபர்னு  வர்றதால்  சில சமயங்களில்  நவராத்ரிக்கிடையில் தீவாலின்னு ஆகிருது.

அப்படியான தினம் இன்றைக்கு.  ஆரம்பிச்சு வச்ச ஸ்தாபகர் என்ற முறையில் போய்த் தலையைக் காமிச்சுட்டாவது வரணும். நம்மூர் ஹேக்ளி பார்க்கின் ஒரு பகுதியில் விழா நடக்குது.  பகல் ரெண்டு மணியில் இருந்தே  திருவிழாக்கடைகள் (எல்லாம் சாப்பாடுதான்) ரெடியாகிருது.  ஊருலே இருக்கும் இண்டியன் ரெஸ்ட்டாரண்டுகள் பலதும் ஸ்டால் போட்டுரும். தனியாரும்  கடைகள் போட்டுருவாங்க.  நம்மூர்த் திருவிழாக்கடைகளில்  சாப்பாடும் ஒரு அங்கம் என்றால் இங்கே சாப்பாடுதான்  99 %. சனமும் சாப்பிடத்தான் வரும்.  ஐ லவ் கறி !

ஹேக்ளி பார்க் என்னும் தோட்டம் ஊருக்கு நடுவிலே இருக்கு.  நானூத்தியேழு ஏக்கர் பரப்பளவு.  இதன் ஒரு பகுதியில்தான் பொது விழாக்கள் நடத்திக்க நம்ம சிட்டிக்கவுன்சில் அனுமதி கொடுக்கும். ஹோலி , சைனீஸ் விளக்குத்திருவிழா, க்றிஸ்மஸ் கச்சேரி இப்படி எதாவது  அப்பப்ப நடக்கும்.  விழா முடிஞ்சதும் இடத்தைச் சுத்தப்படுத்தும் செலவுக்கும், போக்குவரத்தை கண்காணிச்சு ஒழுங்குபடுத்தும்  ட்ராஃபிக் மேனேஜ்மென்டுக்கும்   அந்தந்த விழாக்கமிட்டி காசு கொடுக்கணும். 
இந்தத் தோட்டத்தை அநேகமா நீங்க எல்லோருமே டிவியில் பார்த்திருக்க வாய்ப்புண்டு.  2011 ஆம் வருஷத்தில் வந்த நம்ம ஊர் நிலநடுக்கம், உள்ளூர்  ஸ்டேடியத்தைப் போட்டுத் தள்ளிருச்சு. அதையுமே நீங்க 2010க்கு முன்னாலே  நடந்த க்ரிக்கெட் போட்டிகளில் பார்த்துருப்பீங்கதான்.

விளையாட்டுப்போட்டிகள் நடத்த இடம் இல்லைன்னதும்  மக்களுக்குப் பெருங்கவலை.  ஸ்போர்ட்ஸ்தான்  நியூஸியின் மதம் என்று சொல்லலாம். இந்த மதவெறி பிடிச்ச சனம்,  ஹேக்ளி பார்க்கில் கொஞ்ச இடம் கொடுங்க.  புது ஸ்டேடியம் கட்டும்வரை ஒரு ஓரமா விளையாடிக்கறோம்.  உலகக்கோப்பை போட்டி வேற நடக்கப்போகுது. இடமில்லேன்னா எப்படி ? ன்னு மூக்காலே அழுது , ஒரு பத்து வருஷத்துலே இடத்தைத் திருப்பிக்கொடுத்துருவோமுன்னு  சொல்லுச்சு. 

நம்மூர்லே நடக்க இருக்கும் போட்டி விளையாட்டுகளை,  இடமில்லைன்னு அடுத்த ஊருக்கு விட்டால்  நல்லாவா இருக்கும்ன்ற  மனக்கொந்தளிப்பைத் தவிர்க்க வீராவேசமா  இந்தா பிடின்னு  க்ரிக்கெட் போர்டுக்குத் தாரை வார்த்தது சிட்டிக்கவுன்ஸில்.  மூணடி மண் கேட்ட கதை !  ஆச்சு இப்ப  இந்த ஃபெப்ரவரி வந்தால் பதிமூணு வருஷம்! 

கோடைக்குக் க்ரிக்கெட், குளிருக்கு ரக்பின்னுதான்   ஸ்போர்ட்ஸ் மதத்துக்குள் பிரிவு. ரக்பி விளையாட்டுக்குத் தனியா ஒரு ஸ்டேடியம் கட்டிட்டாங்க.  க்ரிக்கெட் நடக்கும் இடத்துக்கு Hagley Oval   னு பெயரும் சூட்டியாச்சு !  இப்படியாக  ஊர்த்தோட்டத்தின்   ஒரு பகுதியை ஆட்டையை போட்டாச் !

 இப்ப இன்னொரு ஸ்டேடியம் கட்டறேன்னு ஊருக்கு நடுவில்  கட்ட ஆரம்பிச்சு இருக்காங்க.  வியாபார மையங்களா இருந்த இடங்கள் அவை. Prime Locality ! ஸ்டேடியம் கட்டணுமுன்னா ஊருக்கு வெளியில் ஒதுக்குபுறமாக் கட்டினால் ஆகாதா ?  என்னமோ போங்க..... ப்ச்.....
 
நாமும்  உடையை மாத்திக்கிட்டு ஒரு அஞ்சேகால் போலக் கிளம்பிப்போனோம்.  சிட்டிக்குள்ளே என்பதால் பார்க்கிங் ப்ராப்லம் நிறைய .  ஹேக்ளி பார்க்கில் இலவசப்பார்க்கிங் இடம் உண்டு.  பார்க்கின்  உள்ளே ரெண்டு பக்கங்களிலும் சுமார்  250 வண்டிகள் நிறுத்தலாம்.  என்ன ஒன்னு.... பார்க் கேட்டை பொதுவா ராத்ரி 9 மணிக்கு  அடைச்சுருவாங்க.  விழாக்களோ ராத்ரி பத்து, பத்தரைவரை நடக்கும். வண்டி உள்ளே மாட்டிக்கிட்டால் எப்படி வீட்டுக்குப் போறது ? 

சுத்தி இருக்கும் தெருக்களில்  வண்டி நிறுத்திக்கலாம்.  சிட்டிக்கவுன்ஸில்  பார்க்கிங் மீட்டர்கள்  வச்சுருக்கு. சார்ஜெல்லாம் கொள்ளை ! அதுவும்  2011 எர்த் க்வேக் வந்ததுக்கப்புறம்  எக்கச் சக்கமா விலையேத்திட்டாங்க. தொலையுதுன்னாலும்  இடம் கிடைக்கணுமே.....  

நம்மகிட்டே காசு இருந்ததுன்னு வச்சுக்குங்க.... வீடு வாங்கி வாடகைக்கு விடுவதைவிட,  காலி மனைகள் வாங்கி பார்க்கிங் ஏரியாவா வச்சோமுன்னா.... காசை அள்ளிறலாம்.  பார்த்துக்க ஆள் கூடத்தேவை இல்லை.  எல்லாத்துக்கும்தான்  மெஷீன் இருக்கே.  வண்டியை நிறுத்திட்டு மெஷினில் நம்ம வண்டி ரெஜிஸ்ட்ரேஷன் நம்பரை மெஷினில் பதிஞ்சா , சீட்டைத் துப்பிரும்.  வண்டியை திரும்ப எடுக்கும்போது, அதே சீட்டை  மெஷினுக்குள்ளே அனுப்பினால் எவ்ளோ காசுன்னு சொல்லும்.  அதை செலுத்திட்டு வண்டியைக் கிளப்பிக்கிட்டு போயிறலாம்..  Gகேட்டில்  இருக்கும் சென்ஸார், வண்டி நம்பரைப் படிச்சுட்டுக் குறுக்கே போட்டுருக்கும்  தடையைத் தூக்கிரும். காசையே போடாமல் வண்டியை எடுக்கலாமுன்னு நினைச்சால் அவ்ளோதான் குய்யோ முறையோ.....

நாங்களும் இடம் தேடி சுத்தோ சுத்துன்னு சுத்திட்டு, ரொம்ப தூரத்துலே வண்டியை நிறுத்தவேண்டியதாப் போச்சு.  விழா நடக்குமிடத்துக்குப் போக ரொம்ப தூரம் நடக்கணும். ஏறக்கொறைய  ஒரு கிலோ மீட்டர் தூரம்.
காலநிலை வேற சரியில்லை, ரொம்பக்குளிர் காற்று வேற . மழை வரும்போல இருக்கு. கனமான வுல்லன் கோட் போட்டுக்கிட்டு, விதியேன்னு நடந்து போறேன்.  
தோட்டப்பகுதியின் கேட்டைக் கடந்து மெயின் ரோடுலேயே   நேராப் போகாம, தோட்டத்துக்குளே நுழைஞ்சு போகலாமுன்னு சொன்னேன்.  சனி வாயில உக்கார்ந்துருக்கு ..... ரொம்ப நாளா இந்தப்பக்கம் வரலையேன்னு  நினைச்சது தப்பு.

புதுப் பூச்செடிகள் நிறைய வச்சு வசந்தகாலம் என்பதால் கோலாகலமாக இருக்கு! வேடிக்கை பார்த்துக்கிட்டே  விழாநடக்கும் பகுதிக்குப் போறோம். பாதை வளைஞ்சு வளைஞ்சு போய்க்கிட்டே  இருக்கு . இது ரொம்பவே சுத்து......ரெண்டு மடங்கு தூரம்.
 
தோட்டப்பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைஞ்சுருக்கு.   மணி ஆறாச்சே !  இங்கெல்லாம்  ராச்சாப்பாட்டை சாயந்திரம் ஆறரை ஏழுக்குள்  முடிச்சுக்குவாங்க. டின்னர்னு சொல்லாம இதுக்குப்பெயர் டீ ! வெள்ளையர் வழக்கம் நமக்கெதுக்குன்னு  நாம்தான் இந்த நேரத்துக்கு உண்மையான டீ குடிக்கும் மக்கள் ! 
வாத்துமார், குடும்பத்தோடு உல்லாச நடையில்  இங்கேயும் அங்கேயுமாப் போறாங்க. இருபத்தியஞ்சு நிமிட் நடையா நடந்து, விழா நடக்கும் இடத்துக்குப் போய்ச் சேர்ந்தாச்சு. ராட்டினம், பௌன்ஸிங் கேஸில்னு சில சமாச்சாரங்கள்.  பிள்ளைகள் கூட்டம் அதிகம்.

கொஞ்ச தூரத்துலே  இருக்கும் மேடையாண்டை அவ்வளவாக் கூட்டமில்லை. மேடையில்தான் கூட்டமா ஆடிக்கிட்டு இருக்காங்க. ஏதோ பாலிவுட் டான்ஸ் போல....

மேடைக்கு அந்தாண்டை வரிசையாக் கூடாரங்கள். முக்காவாசிக்கூட்டம் அங்கேதான். நாஞ்சொன்னமாதிரியே  சாப்பாடோ சாப்பாடு ! நம்ம நண்பர் ஒரு ஸ்டால் போட்டுருக்கார்.
ச்சும்மா ஒரு பெயருக்குக் கொஞ்சூண்டு   இண்டியன் காஸ்ட்யூம்ஸ்,  கொஞ்சம் புடவைகள்  விற்பனையா ரெண்டு ஸ்டால்கள். புடவை விக்கறவங்க நம்ம தோழிதான். நானும் அவுங்ககிட்டே ஒரு புடவை வாங்கியிருக்கேன். இன்னொரு கடை ஒரு ஃபிஜி இந்தியர் விக்கறார். அவரிடம் வேஷ்டிகள் கூட இருக்கு.   கடைசியா  டீ விற்கும் ஸ்டால், ஐஸ்க்ரீம் வண்டின்னு.....    









ச்சும்மா ஒரு ரவுண்ட் போய்ப் பார்த்தப்ப.... நம்ம  நண்பர்கள் பலரையும்  பார்த்து ஹேப்பி திவாலி சொல்லியாச்.  எங்க யோகா குடும்ப அங்கங்கள் சிலர் மேடைக்கெதிரில் உக்கார்ந்துருக்காங்க.  அந்தக்கூட்டத்தில் நீந்தி உள்ளே போக எனக்குத் தெம்பில்லை. என் ஆஸ்த்மா, வேலையைக் காமிக்க ஆரம்பிச்சது. ரெண்டொரு மழைத்துளி !





இன்னும் ஏகப்பட்ட கலைநிகழ்ச்சிகள், கடைசியில் பட்டாஸ் வெடின்னு இருந்தாலும்  ராத்ரி பத்துவரை காத்திருக்க முடியாதுன்னு  நண்பரின் ஸ்டாலில் ரெண்டு இட்லி வடை செட்  வாங்கிக்கிட்டு  திரும்ப ஒரு கிமீ தூரம் நடந்து வண்டியாண்டை போனோம். 


சூடா இருந்த வடையை மட்டும் பிய்ச்சு வாயிலே போட்டுக்கிட்டு,  வீட்டுக்குப்போய் நம்ம டின்னரை ( அந்த இட்லிகள்தான்) முடிச்சோம். ரெவ்வெண்டு இட்லிக்குப் பதிலா மும்மூணு இட்லி வச்சுருந்தார் நண்பர் !    
எப்படியோ கம்யூனிட்டி திவாலியைக் கொண்டாடியாச்சு.  வாங். க நாம் நம்ம நவராத்ரி வேலையைத் தொடரலாம் ! இன்னும் நவராத்ரி  முடியலை கேட்டோ !

4 comments:

said...

சிறப்பான கொண்டாட்டங்கள். நீண்ட நடை - கொஞ்சம் கடினம் தான்.

said...

காலநிலை சரியில்லாத போதும் தீபாவளி நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்துள்ளது பாராட்டப்படவேண்டும்.

உங்கள் உடல்நிலையும் சரியில்லாதபோதும் விழாவுக்கு சென்று வந்துள்ளீர்கள்.

said...

வாங்க மாதேவி,

பலசமயங்களில் அது பாட்டுக்கு அது, இது பாட்டுக்கு இதுன்னு இருக்கவேண்டித்தான் இருக்கு !!!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

உடம்பு தளர்ந்துவிட்டது. வயசாறது இல்லையோ ? அதான் நடைக்கு அஞ்சுகிறேன். ப்ச்.....