Tuesday, January 02, 2024

பொதுத்தேர்தலும் புதுப்பொம்மைகளும் !

செப்டம்பர் மாதம் ஒன்று முதல் வசந்தகாலம் இங்கே !  மூணு மாசம் வசந்தமாம்!  குளிர் முழுவதுமா விட்டபாடில்லை. சூரியன் கண்ணுக்குத் தெரிகிறான் என்பதுதான் கொஞ்சம் ஆசுவாஸம் தருகிறது !
குளிரில் நம்மூர் சண்டே மார்கெட்டுக்குப் போறதே இல்லை.  திறந்தவெளிக் கடைகளே ! உள்ளூர் ரோட்டரி க்ளப் நடத்துது. உள்ளூர் ரெஸ்கோர்ஸ் இருக்கும் வளாகத்துலேதான்.  தர்மகாரியங்களுக்கு அந்த காசு போகுது என்பதால்  ரேஸ்கோர்ஸ் இடம் கொடுத்துருக்கு. இதுதான் எங்க தெற்குத்தீவில் பெரிய அளவில் நடக்கும் மார்கெட் என்பதால்  டூரிஸ்டுகள் பஸ்ஸில் வந்திறங்கிச் சுத்திப் பார்த்துட்டும், வாங்கிட்டும் போவாங்க. ஏறக்கொறைய  'லண்டன் போட்டபெல்லா மார்கெட்'னு வச்சுக்கலாம்.

நாலைஞ்சுமாசமாச்சே இங்கே போயின்னு அக்டோபர் பொறந்ததும் போனோம். அஸலியா செடிகள் கிடைச்சது.  நம்மிடம் இல்லாத  நிறமாப் பார்த்து மூணு செடிகள் வாங்கினோம்.  நம்மிடம் ஒரு லைட் மஜந்தா பர்ப்பிள் இருக்கு !

வசந்தம் வந்துமே குளிர் விடலையேன்னு தோட்டவேலை ஒன்னும் ஆரம்பிக்கலை. பழைய செடிகள்  மட்டும் விசுவாசத்தோடு கொஞ்சமாப் பூத்து நிக்குதுகள். இந்த க்ளோபல் வார்மிங்னு சொல்றதெல்லாம் இங்கே இல்லை போல.... நாம் வந்த புதுசுலே இருந்த காலநிலைபோல இப்பெல்லாம் இல்லை. ஏராளமான மாற்றம். மழையும் கூடுதலாகப் பெய்யுது. இடி இடிப்பதெல்லாம் இப்போ ஒரு சில வருஷங்களாத்தான், கேட்டோ !

அக்டோபரில் குளிர் போகும் என்ற நம்பிக்கையுடன் இட்லிக்கு மாவு அரைச்சேன்.  ஆறுமாசத்துக்குமுன்னே நம்முடைய பழய க்ரைண்டர் மண்டையைப் போட்டுருச்சு. அதுவும் அரிசி, பாதி அரைச்சுக்கிட்டு இருக்கும்போது.  அவசரத் தேவைன்னு ஃபிஜி இண்டியன்  கடையில் எப்பவோ கண்ணில்பட்ட க்ரைண்டரை நினைவில் வச்சு, ஓடிப்போய் வாங்கிவந்தோம். ப்ரெஸ்டீஜ்தான். நல்லா அரைக்குதுன்னாலும் நடுத்தண்டை முடுக்கி வைக்கறதுக்குப் ப்ரம்மப் ப்ரயத்தனம் செய்யணும்.  கைவலிக்காரி என்ன செய்வாள்? பாவம் இல்லையோ !

இப்பெல்லாம் பேரன் அப்பப்ப வந்து போறான்.  சோறு கொடுக்கறது ஆரம்பிச்சபிறகு, உடல் நலத்துக்குக் கேடுவராத, நம்மூரில் டாக்டர்கள் பரிந்துரைக்கும் இட்லி கொடுக்கலாமேன்னுதான் மாவு அரைக்க மெனெக்கெடறேன்.....

குழந்தை வந்தவுடன், 'நம்மவனுக்கு' முகம் மாறிடுது. சிலசமயம் தோட்டத்தில் போய் நம்ம கப்புவின் மரத்தாண்டை உக்கார்ந்துக்குவான். சிலசமயம் ஆங்காரமாய்  கட்டிலில் இடம்பிடிச்சுக் கிடப்பான். என் இடம், யாருக்குமில்லை !  சரி, உன்னிடம் உனக்கு, எம்மிடம் குழந்தைக்குன்னு இருந்தால் சட்டைசெய்யாமல் தூங்கறதுபோல அசையாமக் கிடப்பான்:-)


நவராத்ரி வரப்போகுது.  கொஞ்சம்  கொலுப்படிகளை விஸ்தரிக்கலாமேன்னு பலவித யோசனைகள். என்ன மாதிரி  ஷெல்ஃப் கிடைக்குமுன்னு பார்க்க  நாம் வழக்கமாப் போகும் கடைக்குப்போனால்.... கடையின் ஒரு பகுதியில் ஓட்டுச்சாவடி வச்சுருக்காங்க. இந்த மாசம் 28 ஆம் தேதிதான் ஜெனரல் எலெஷன் வச்சுருக்காங்க. ஆனால் மூணு வாரங்களுக்கு முன்னேயே  அங்கங்கே மக்கள் வரப்போக இருக்கும் பெரிய கடைகள், மால், சூப்பர்மார்கெட் போன்ற  இடங்களில்  ஓட்டுச்சாவடிகளை அமைச்சுருக்காங்க.  என்ன பெரிய அமைப்பு.... நாலைஞ்சு மேசை போட்டால் ஆச்சு.

தேர்தலுக்கு ஒரு மாசம் இருக்கும்போதே நமக்குக் கடிதம் மூலம் நம்ம தொகுதியில்  எந்தெந்த  கட்சி, யாரை நிறுத்தியிருக்கு, அவர்களைப்பற்றிய தகவல்கள், கூடவே நமக்கான  அடையாளச் சீட்டு எல்லாம்  அனுப்பிடுவாங்க.  அந்த அடையாளச் சீட்டை நம்ம பர்ஸ்/ ஹேண்ட்பேகில் வச்சுக்கிட்டால், தேர்தல் தினம் நாட்டின் எந்தப் பகுதியில் நாமிருந்தாலும் அங்கே நம்ம ஓட்டைப் போட்டுடலாம்.  நல்ல ஓட்டைப் போடவே ஆளில்லை என்னும்போது கள்ள ஓட்டைப் போட யார் வருவாங்க ? 

என் அடையாளச் சீட்டை என் செல்ஃபோன் கவரில் வச்சுருந்ததால்  பத்தே நொடிகளில் என் ஓட்டைப் பதிவு செஞ்சு, பொட்டியில் போட்டாச்.  நம்மவரிடம்  அடையாளச் சீட்டு கைவசம் இல்லாததால் பெயர், வீட்டு விலாசம், சொல்லி, ட்ரைவிங் லைசன்ஸ்  காமிச்சதும் அவருக்கான ஓட்டுச்சீட்டு கிடைச்சது.  இதுக்கே அஞ்சாறு நிமிட்  ஆகிருச்சு . 

போனவாரம், ஒரு மீட்டிங் வச்சுருக்கோமுன்னு நண்பர்  வரச்சொல்லி இருந்தார்.  தேர்தலுக்கு நிற்கும் கட்சி, ஜெயிச்சு வந்தால்  நம்ம இண்டியன் கம்யூனிட்டிக்கு, என்னென்ன செய்யும், என்றெல்லாம்  சொல்லி நம்ம ஓட்டை அவுங்களுக்கு தாரை வார்க்க  வைப்பதற்கானது. அனைத்துக் கட்சியில் இருந்தும் நம்மூரில் நிற்கும் வேட்பாளர்கள் கலந்துக்கிட்டு  நம்மிடம் பேசுவாங்களாம். நாமும் அவர்களிடம் கேள்விகள் கேட்டுக்கலாம்.(என்ன செய்யப்போகிறாய் ? )

நண்பர் இந்திய ராணுவத்தில் உயர்பதவி வகித்து இப்போது  ரிட்டயர் ஆகி விட்டார். நம்மூரில்  இந்திய சுதந்திர தின விழாவில்  இவர்தான் கொடியேற்றணும் என்று  ஒரு வழக்கம் வச்சுருக்கோம்.  

மீட்டிங் போய் வந்தோம். எல்லாம் தேர்தல் வாக்குறுதிகள்தான்.  வெள்ளையர்களுக்கு இது புதுசா இருக்கலாம். நமக்குதான் இப்படி அரசியல் வியாதிகளின் வாக்குறுதிகள் கேட்டுக்கேட்டுக் காதுகள் புளிச்சுக்கிடக்குல்லெ ? நாலு  வேட்பாளர்கள்  வருகைன்னு சொல்லி மூவர் வந்துருந்தாங்க.

 ரெண்டு A Frame shelves Pack வாங்கி அசெம்பிள்  செய்து  தரையில் இருந்த  அலங்கார ஐட்டங்களையெல்லாம் மேலே ஏத்தியாச்சு.  வாழ்க்கையில் முதல் முறையா சென்னையிலிருந்து கொஞ்சம் கொலுப் பொம்மைகளுக்கு ஆர்டர் கொடுத்திருந்தேன். வரட்டும் பார்க்கலாம்னு நம்மவர் சொல்லிக்கிட்டு இருந்தார்.


இந்த வருஷம் மாளைய அமாவாசை புரட்டாசி கடைசி சனிக்கிழமையில்  வந்தது.  இதோ நாளைக்குக் நவராத்ரி ஆரம்பம்.  தெரிஞ்ச அளவில் சின்னதா பெருமாளுக்குப் படையல் போட்டோம்.  மனசு வந்து ஒரு வாழையிலையைச் செடியில் இருந்து வெட்டி எடுத்தேன். கையோடு மாவிளக்கும் போட்டாச்ச்!
சாயங்காலம்  ஆர்யசமாஜ் ஹவன் இருக்கு. இந்த முறை நம்ம சநாதன் ஹாலில் நடக்குது. ஆஞ்சியைக் கும்பிட்டுக்கிட்டு ஹாலுக்குள் போனோம். ஹவன் வழக்கம்போல் நல்லபடி நடந்தது. 

வீட்டுக்கு வந்ததும் மறுநாள்  கொலுவுக்கான படிகளைச் சுத்தம் செய்து, மரப்பாச்சிகளை  அலங்கரிச்சுத் தாயாரும்  பெருமாளுமா  கொலுவின் மேல்படியில்  ஆவாஹனம் செஞ்சுட்டு, நம்ம ஜன்னுவுக்குப் புது உடை என்ன இருக்குன்னு  பார்த்தால் , காசிப்பயணத்தில் வாங்கின காக்ரா செட் கண்ணில்பட்டது.  ப்ளௌவுஸ் துணி இருக்கு. நாம் தைச்சுக்கணும்.  பார்த்தால் கலர் பொருத்தமாத் தோணலை.  அதனால் வீட்டுலே நவக்ரஹங்களுக்கு வாங்கின துணியில் அவசர அடியில் ஒரு சட்டை தைச்செடுத்தேன்.
எல்லாம் ரெடி.நாளைக்குக் காலையில் மற்ற பொம்மைகளை வழக்கம்போல் அடுக்கணும்.  எல்லா வருஷமும் உள்ள அதே தீம்தான் இப்பவும். யானை & பூனை! 

பொம்மைகளை அனுப்பியாச்சுன்னு சொன்னாங்க.  ட்ராக்கிங் செஞ்சால்,  ஆக்லாந்துக்கு வந்துருக்கு.  அங்கே கஸ்டம்ஸில்  செக் பண்ணிட்டு அனுப்புவாங்க. இடையில் ஞாயிறு வந்துட்டதால்  திங்கள் செவ்வாயில் நம்மூருக்கு வரலாம்.  நல்லபடியா வந்து சேரணுமேன்னு புதுக்கவலை வேற ! 

நவராத்ரி முதல்நாள் பொம்மைகளை அடுக்கிட்டு, ப்ரஸாதமா வேர்க்கடலை சுண்டலும், மாம்பழக்கேஸரியும் செஞ்சேன்.  இன்ஸ்பெக்டர் ஆஃப் க்வாலிட்டி கன்ட்ரோல் வந்து பார்த்துட்டு, சரின்னு தலையாட்டிட்டுப்  போனார். ஞாயிற்றுக்கிழமையாக இருந்ததால், நாலு மணிக்கு தோழி தன் மகனுடன் வந்துட்டுப் போனாங்க.


நம்ம புள்ளையார் கோவிலில் கொலு வைக்கிறோம். சின்னதா அஞ்சு படிகள்.  கலசத்தில்  தீர்த்தம் வச்சு அம்மனை அதில் ஆவாஹனம் செஞ்சோம். நம்ம நேப்பாள் பண்டிட், இப்போ ஏறக்கொறையத் தமிழ்நாட்டுச் சடங்குகளைச் செய்யுமளவுக்கு தேறிட்டார். நவதானியங்களை முளைக்க வச்சுருந்தாங்க. ஞாயிறு  என்பதால் கோவிலுக்குக் கொஞ்சம் கூட்டம் வந்தது நல்லாத்தான் இருக்கு !
ரெண்டாம் நாள்  வீட்டுக் கொலுவுக்கு  விஸிட்டர்,  நம்ம பேரன்தான் !  இன்றைக்கு ப்ரஸாதம் புட்டு !

மத்யானமா நம்ம பொம்மைகள்  கூரியரில் வந்து சேர்ந்துச்சு. ரெண்டு பொட்டிகள். என்ன ஏதுன்னு நம்ம 'இவன்' போய்ப் பார்த்தான்.  Madras Golu Dolls என்ற கம்பெனி அனுப்பின பொட்டிகளில் சின்னதைத் திறந்தால்  நல்லபடி பேக் செஞ்சுருந்தாங்க.  கொஞ்சம் நிம்மதியாச்சு. பச்சைப்பட்டுடுத்தின கள்ளழகர் இருந்தார்.  அவர்கள்  முதலில் காமிச்ச கேட்லாகில் சிகப்பு உடுத்தியிருந்தார். எனக்குப் பச்சை வேணும் என்றதால்தான் அனுப்பக் கொஞ்சம் தாமதாகிருச்சுன்னு  சொன்னாங்க. குதிரை ரொம்பவே அழகு!


அடுத்த பெரிய பெட்டியைத் திறந்தால் சின்னதும் பெருசுமா பொதிகள் பப்புள்ராப் சுத்தி யிருக்கு. கனம் இல்லாத பேப்பர்மாஷேதான் சொல்லியிருந்தேன். மண்பொம்மைகள் அழகு என்றாலும் என்னால்  ரிஸ்க் எடுக்க முடியாது.


எதிரில் இருந்த சோஃபாவில்  ஏறி ஐஷூ வைஷூ கூட உக்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தான் நம்மவன்.

விஸ்வரூபம் செட், ராமாஞ்சநேயா,  பெரிய சிறிய திருவடிகள்,  கள்ளழகர், ரெண்டு பாவை விளக்குகள் தான் மொத்தமுமே ! 
 பாவை விளக்கு அவர்கள் காமிச்சதில் கொண்டை போட்டுருந்தாங்க. எனக்குப் பின்னல் போட்டது வேணும் என்றதால்  புதுசா ரெண்டு பொண்களுக்குப் பின்னிவிட்டு அனுப்பியிருந்தாங்க.  இவுங்ககிட்டே  நமக்கு வேண்டிய  மாற்றங்களைச் சொன்னால் அதுபோல செஞ்சு தர்றாங்க. எனக்குப் பிடிச்சிருந்தது.

அந்தப்பின்னல் அழகைப் பார்க்கும் ஆசையில்  திரும்பி நில்லுங்கன்னேன். 

 ஐயோ.......    




8 comments:

said...

கொலு மிக அழகு. இப்போதான் ஜன்னுவின் சைஸ் தெரிந்தது. இதற்கு முன்னால் அது சிறிய அளவு என்று நினைத்திருந்தேன்.

பேரன் வருகை அருமை. பேரனுக்காக விழுந்து வணங்குகிறாரா கோபால் சார்? பார்க்கவே அழகு

said...

அங்கிருக்கும் தேர்தல் நடைமுறை அருமை.  

வீட்டின் நிகழ்வுகள் எல்லாவற்றிலும் பங்கு எடுத்துக் கொள்ளும் ரஜ்ஜுவுக்கு பாராட்டு!

said...

வாங்க நெல்லைத் தமிழன்,

ஜன்னுவுக்கு ரெடிமேட் உடைகள் இந்தியாவில் வாங்கும்போது மூணு வயசுக்குழந்தைக்கானது சரியாக இருக்கு.

கோபால், பேரனுக்குக் கம்பெனி கொடுக்கறார் :-)

said...

வாங்க ஸ்ரீராம்,

எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல்தான் தேர்தல் நடக்குது. இதுக்குன்னு ஒருநாள் விடுமுறை கூடக் கிடையாது. ஒரு சனிக்கிழமையாத்தான் தேர்தல் நாள் இருக்கும்.

நம்ம ரஜ்ஜு, வீட்டின் முக்கிய புள்ளி. மாஸ்டர் ஆஃப் த ஹௌஸ். தெரியாமல் ஒன்னும் செய்ய முடியாது :-)

said...

ஆஹா கொலு விமரிசைய பார்த்துட்டு இப்பதான் அதுக்கு முன்னானதுக்கு வரேன்.

கொலு படி புதுசுல பொம்மை எல்லாம் வைக்க சரியா இருக்குமான்னு முத பொம்மை மாதிரி போய் இன்ஸ்பெக்டர் செக்கிங்க் பண்ணுறாரே....ஆக்டிவ் பார்ட்டிசிபேஷன்.

பொம்மைகள் எல்லாம் அழகோ அழகு! கிச்சன் டிபார்ட்மென்ட்லருந்து எல்லாத்துக்கும் நம்ம ரஜ்ஜு வந்துருவார் போல. பொம்மையோடு வேற உட்கார்ந்து போஸ்!

பேரன் செம க்யூட் துளசிக்கா! தாத்தாவும் பேரனுமா சாஷ்டாங்கமா...ரசித்தேன்.

உங்க ஊர் தேர்தல் செம போங்க. ஈசியா இருக்கு. ஹூம் இங்க இப்படி வந்தா எவ்வளவு நல்லா இருக்கும்!

பாவையின் பின்னலை ஏற்கனவே பார்த்துட்டேனே!!!!!

கீதா

said...

வாங்க கீதா,

எல்லாத்தையும் ஒன்னொன்னா கவனிச்சு எழுதறதுலே நீங்களும் ரஜ்ஜுதான் :-)

தாத்தா பேரன் ரொம்பவே ஈஷிக்குவாங்க. ரஜ்ஜுவுக்குத்தான் கொஞ்சம் எரியும் :-)

இங்கேயும் சிலர் ஓட்டுப்போடாமல் இருந்துருவாங்க. அண்டை நாடு மாதிரி ஓட்டுப்போடாதவங்களுக்கு அபராதம் விதிக்கணுமுன்னு சொல்வேன்.

said...

தாத்தாவுடன் பேரனும் வணங்குவது அழகாக இருக்கிறது.

கொலுப் பொம்மைகளின் புது வரவு மகிழ்ச்சி.

ரஜ்ஜு போட்டிபோடுவது ரசனை.

said...

வாங்க மாதேவி,

ரஜ்ஜு அப்பப்பக் கோவிச்சுக்கறான்ப்பா ! அவனுக்குத் தெரியாமல் ஒரு துரும்பையும் நகர்த்த இயலாது !