Wednesday, January 03, 2024

நம்ம பொண்களுக்குப் புறமுதுகு காட்டும் வழக்கம் இல்லையாக்கும்!

பொம்மைகள் வந்து சேர்ந்த  விவரம் அனுப்பும்போது, பாவையின் பின்னல்  கதியைச் சொன்னேன், படங்களோடு. பதைச்சுப்போயிட்டாங்க.  பாக்கிங் செய்யும்போது எடுத்த படங்களை அனுப்பினாங்க.  பொட்டியின் படத்தைப் பார்த்துட்டு, அதில் ஒட்டியிருக்கும்  நீல வண்ண டேப், நாங்க ஒட்டலைன்னு சொன்னாங்க. பெட்டியில் டேமேஜ் ஏதும் இருக்கான்னு கேட்டதும்தான், ஒரு ஓரத்தில் கொஞ்சம் நசுங்கி இருந்ததைக் கவனிச்சேன்.  பின்னல் மட்டுமில்லாமல் தலைக் கொண்டையிலும் ஒரு விரிசல் :-(  
மலேசியா வழியில் வந்துருக்கு.  அங்கேதான்  வேற விமானத்தில்  மாற்றும்சமயம், யாரோ கீழே போட்டுருக்காங்க போல.  நஷ்டஈடு கேட்கணுமாம். அது எதுவானாலும் அவுங்க பொறுப்பு.  இப்போ நாம் என்ன செய்யலாமுன்னு யோசிக்கணும். 'துல்ஸி ரிப்பேர் ஷாப்'தான் கதி.

நமக்கு அன்று நவராத்ரி ரெண்டாம் நாள் என்றாலும், ஃபிஜி பஞ்சாங்கத்தின் படி அது முதல்நாள் கணக்கு. இந்தியாவில் நடக்கும் விசேஷங்கள் எல்லாம் ஃபிஜியில் மறுநாள்தான். டேட் லைனில் இருக்கு பாருங்க ! நியூஸியும் டேட் லைனில்தான் இருக்கு !


நம்ம சநாதன் சபாவில்  ஒன்பதுநாள் நவராத்ரி விழா. தினமும்  தேவி பாகவதம் படிச்சு, விளக்கிச் சொல்வார் நம்ம  ஃபிஜி பண்டிட். எல்லா நாட்களிலும்  ப்ரஸாதம், மஹாப்ரஸாதம் சபா  வழங்கும்.  வேலைநாளாக இருப்பதால் வேலைக்குப்போய்வந்து வீட்டிலும்  சாப்பாடு தயாரிக்கணும், சபாவுக்கும் வரணும்  என்றால் கஷ்டம்தான் இல்லையா ?   அந்த சமையல் வேலை பக்தர்களுக்கு மிச்சம் !   ஒன்னு சொல்லணும்.... இப்படி நம்ம சபாவில் நடக்கும் பூஜை நிகழ்ச்சிகளுக்கு நிதிஉதவி செய்வதில் நான் பார்த்தவரை ஃபிஜி மக்களை யாரும்  மிஞ்சமுடியாது. தினமும் அன்னதானத்திற்கு யாராவது ஸ்பான்ஸார் செய்துருவாங்க.  பணம் கொடுப்பதோடு நில்லாமல்  மற்ற வேலைகள் (சமையல், சுத்தப்படுத்துவது இப்படி  எத்தனை வேலைகள் இருக்கு ? ) செய்யவும்  வாலண்டியர்களாகவும் வந்து நிப்பாங்க. இந்த ஒற்றுமை எனக்கு ரொம்பவே பிடிக்கும்.இதிலும் ஆண்களின் பங்குதான் அதிகம் !

  இந்த ஒன்பது நாட்களில்  தினமும் நம்மால் அங்கே  போக முடியாது. நம்ம வீட்டிலும் கொலு வச்சுருக்கோமே ! ஆனால் எந்த விழான்னாலும்  முதல்நாள் விழாவுக்குக் கட்டாயம் போய், நம்ம வகையில்  ஒரு தொகை செலவுக்குக் கொடுப்பது வழக்கம். அன்றைக்கும்  முதல்நாள் விழாவுக்குப் போய் வந்தோம். 

 இந்திய நேரத்துக்கும், இங்கே நியூஸி நேரத்துக்கும் ஏழரை மணி நேர வித்தியாசம் இருப்பதால்,  பொம்மை கம்பெனியுடன்  தொடர்ந்து தகவல் பரிமாற்றம்  இருந்தது.   பொட்டி கீழே விழுந்துருந்தால் உடைஞ்ச பொம்மையின் பாகங்கள், எப்படியும் பொட்டிக்கும் இருக்கும்தானே ?  

விழா முடிஞ்சு வீடு வந்ததும், அப்படியே ஒரு ஓரமாக எடுத்து வச்சுருந்த பொட்டியை எடுத்துக்குடைய   ஆரம்பிச்சதும்,  'மணி பத்தரையாச்சு. அங்கே என்ன பண்ணறே'ன்னு  கேட்டுக்கிட்டே வந்த நம்மவர், தானும் சேர்ந்து தேட ஆரம்பிச்சார்.  காகிதக்கூழில் செஞ்சு வண்ணம் தீட்டி இருக்காங்க போல. சின்னதா ஒரு துண்டு ஆப்ட்டது.  அப்பக் கட்டாயம் இன்னும் இருக்கணுமுன்னு கவனமாத் தேடியதும் கத்தரிச்சுப்போட்டக் காகிதக்குவியலுக்குள்ளே  இன்னும் சில துண்டுகள் கிடைச்சது. முதுகுப் பக்கமும் டேமேஜ்தான். ஆனால்  துண்டுகளா ஒன்னும் கிடைக்கலை. நொறுங்கித்தூளாப் போயிருக்கணும்.  
உடனே கொஞ்சம் கோதுமை மாவைப் பிசைந்து ரிப்பேர் வேலையை ஆரம்பிச்சேன். 'நாளைக்குப் பார்க்கலாம் 'என்று நம்மவர் சொன்னாலும்,  எனக்கு மனக்கவலையில் தூக்கம் வராது.  முதல் கட்ட வேலையையாவது  முடிக்கணும், ஒரு மாதிரி ஒட்டும் வேலை முடிஞ்சது. நல்லாக் காய்ஞ்சதும் அடுத்த கட்டம் தொடங்கலாம். 
இந்தக் கோதுமைமாவு சமாச்சாரம், போன வருஷக்கொலுவுக்கு நம்ம ரஜ்ஜுவின் காய்கறி வியாபாரத்துக்குக் காய்கள்  செய்யத் தொடங்கி நல்லாவே  வந்துருந்ததால்தான்.  தினமும் சப்பாத்திக்கு மாவு பிசைவதில் இருந்து கொஞ்சம் ஒரு சின்ன  உருண்டையைத் தனியாக எடுத்து வைப்பேன். அதில் கலர்ஸ் சேர்த்தால் ஆச்சு ! 


மறுநாள்  காலையில்  பெயிண்டிங் வேலையை முடிச்சேன். பரவாயில்லை.  ஓரளவுக்கு  நல்லாவே  செஞ்ச திருப்தி வந்துச்சு. சட்னு பார்த்தால் தெரியாது. மேலும்  புறமுதுகு காட்டவா போறாங்க ?  இந்தக் கொலு முடிஞ்சதும் ஒரு நாள் ஓய்வாக இருக்கும்போது  இன்னும் கொஞ்சம் சரி செஞ்சுக்கணும்.


புதுவரவுகளுக்கு  இடம் தேடிக்கொடுத்தேன். உண்மையில் நான் பயந்தது விஸ்வரூப தரிசனத்துக்குத்தான்.  ஏற்கெனவே பள்ளிகொண்டவனை,  இங்கே கொண்டுவந்தபோது கிடைச்ச அனுபவம்தான்.... இதிலும்  பாம்பு வேற இருக்கே......

ஆதிசேஷனுக்கு நடந்த விபத்து இங்கே......   

https://thulasidhalam.blogspot.com/2017/01/117.html

நவராத்ரி மூன்றாம் நாள் ச்சனா சுண்டல்.  கொஞ்சம் புளியோதரையும் தயாரிச்சு வச்சேன். இன்றைக்கு சில தோழிகள்  வர்றாங்க. பாட்டும், நடனமுமா கொலுவில் அமர்க்களம்! நம்ம புள்ளையார் கோவில் பண்டிட், எட்டரைக்குக் கோவில் மூடியதும்  வருவார்.  கோவிலிலும் கொலு வச்சுருக்கோம்தானே ! 




சில வீடியோ க்ளிப்ஸ்களை ஃபேஸ்புக்கில் போட்டுருக்கேன்.  அவற்றுக்கான  லிங்க்ஸ் இவை. நேரம் இருந்தால் பாருங்க. 

https://www.facebook.com/1309695969/videos/645376734454499/

https://www.facebook.com/1309695969/videos/336794025518160/

https://www.facebook.com/1309695969/videos/843969707354340/

https://www.facebook.com/1309695969/videos/698496692164757/

https://www.facebook.com/1309695969/videos/1378347749770424/

நம்ம வீட்டில் கொலு விஸிட் வரும்  நம்ம மக்கள், அவர்கள் கைகளால் ஆரத்தி எடுத்து வழிபடலாம். இப்படித்தான் ஆரம்பம் முதல்  வழக்கம். அதே போல சுண்டலைப் பொட்டலம் கட்டிக் கையில் கொடுக்காமல், இன்னும் சில  ஸ்நாக்ஸ் வகைகளுடன்,  இங்கேயே பரிமாறுவதும் வழக்கம்தான்.   



சிறுவர் சிறுமிகளுக்கு மட்டுமே ஏதாவது பரிசுப்பொருட்கள்.  பெரியவர்களுக்கு  குங்குமம் ! வெற்றிலை பாக்குக்குத்தான்  இருக்கவே இருக்கு ஆப்பிளும் ஆரஞ்சும் :-) இந்த முறை சிறுவர் பரிசுகளுக்காக கொஞ்சம் புத்தகங்கள்  வாங்கினோம். இந்த வருஷம் பிறந்த புதுப்பிஞ்சுகளுக்குச் சில Soft Toys.







நம்ம கோவில் பண்டிட், முதல்முறையா நம்ம வீட்டுக்கு வந்துருக்கார்.  நம்  பூஜை அறையைப் பார்த்து ரொம்பவே சந்தோஷப்பட்டார் !

6 comments:

said...

கொலு அமர்க்களமா இருக்கு துளசிக்கா!!! சுவாமி அறை, கொலு பொம்மைகள் எல்லாம் கண் கொள்ளாக் காத்கி!

ரஜ்ஜு உங்க கூட ஆஹா க்யூட்! அவனுக்கும் ஒரே கொண்டாட்டமா இருந்திருக்குமே இத்தனை பொம்மைகளையும் பார்த்து, எல்லாம் கரெக்ட்டா இருக்கான்னு எண்ணி வைச்சிட்டானா!

புறமுதுகு காட்டினாலும் புறமுதுகு காட்டி ஓடாத ரெண்டு பாவைகளும் சூப்பர் உங்க கைவண்ணத்துல ஒரு பாவைக்குப் பின்னல் ஃப்ராக்சர, தலைக்குக் கூட! கட்டெல்லாம் போட்டு சரி பண்ணிட்டீங்க! தெரியவே இல்லை நல்லாவே இருக்கு.

நானும் முன்ன ஒரு காலத்துல லாங்க் லாங்க் அகோ......வீட்டிலேயே பொம்மைகள் மைதாவும் வெள்ளை சிமென்ட்-ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் பௌடர் இப்படி பல கோம்போ - போட்டு ஃபெவிக்கால் போட்டு செஞ்சு பெயின்ட் அடிச்சு....ப்ச் கனாக்காலம்!

படங்கள் எல்லாம் வழக்கம் போல அருமை.

கொலுவுக்கு வரவங்க அவங்களே ஆரத்தி எடுத்து வழிபடறது ரொம்ப பிடிச்சிருக்கு துளசிக்கா.

சுண்டல் அங்கேயே சாப்பிட சொல்லி ஸ்னாக்ஸ் எல்லாம் உங்க ஊர்ல வொர்க்கவுட் ஆகும். இங்க ஒரே நாள்ல மாரத்தான் போல 10 வீடுன்னு போறப்ப எல்லா வீட்டிலும் சாப்பிட முடியாதே அதனால பாக்கிங்க் தான்!

கீதா

said...

இந்தியாவில் புத்தாண்டு கொண்டாடப்படுவதற்கு முன்னரே அங்கு கொண்டாடப்பட்டு விடுகிறதே..  பின்னே எப்படி விழாக்கள் மறுநாள் அமையும்?  நவராத்திரி கொண்டாட்ட படங்கள் அருமை.

said...

வாங்க ஸ்ரீராம்,

நம்ம பண்டிகைகள் நக்ஷத்திரம், திதி பார்த்து வருது பாருங்க. இந்தியாவில் காலை 6 மணின்னு பகல் தொடங்கும்போதே இங்கே மதியம் ஒன்னரை ஆகிருது. பலசமயங்களில் அங்கே பூஜைக்குக் குறிப்பிடும் நல்ல நேரம் இங்கத்து பின்மாலை. அதான் ஃபிஜி பஞ்சாங்கங்களில் மறுநாள் பண்டிகைன்னு வச்சுருக்காங்க போல. நான் இன்னும் இந்தியக் காலண்டர்படியே விழாக்களைக் கொண்டாடறேன். இந்தியப் பத்துமணிக்கு நல்ல நேரம் என்றால் எனக்கு இங்கத்துப் பத்துமணி நல்ல நேரம் ! இடும்பிக்கு சூர்யோதயக்கணக்குதான் !

said...

வாங்க கீதா,


அட! ஆமாம்... ஒரே நாளிலே கொலு மாரத்தான் இருப்பதை மறந்தே போனேனே !

அவுங்களே ஆரத்தி எடுக்கும்போது, நம்ம சாமின்னு ஒரு ஈடுபாடு வருதுல்லெ? அதுக்காகத்தான்.

படங்களை ரசித்தமைக்கு நன்றி

said...

நவராத்திரியை சிறப்பாக கொண்டாடி விட்டீர்கள்.

நண்பர்கள் வருகை , பூஜை என அமர்க்களம்.

said...

வாங்க மாதேவி,


ரொம்ப எதிர்ப்பார்ப்புடன் கொண்டாடுவது இந்த நவராத்ரிதான்ப்பா ! அருமையாகவும் அமைஞ்சுருது !