மறுநாள் நாள் வழக்கம்போல் காலைக்கடமைகள், ப்ரேக்ஃபாஸ்ட் எல்லாம் முடிச்சுட்டு ஒரு பத்துமணிக்கப்புறம் நுங்கம்பாக்கம் ஹை ரோடில் இருக்கும் Denoc Centre க்குப் போறோம். நம்ம விஜிதான் ட்ரைவர். நுங்கம்பாக்கம் ஹைரோடுக்குப் பெயர் மாத்திட்டாங்க. உத்தமர் காந்தி சாலையாம்.
அங்கே போனதும் ஒரு Audiologist, எனக்குக் காது எவ்ளவு கேக்குது/ கேக்கலைன்னு பரிசோதிச்சதும் இன்னொருத்தர் வந்து வேறொரு அறைக்குக் கூட்டிப்போனார். இப்ப மார்கெட்டில் இருக்கும் ஹியரிங் எய்ட்ஸ் எல்லாத்தையும் எடுத்து வச்சுக்கிட்டு, அதுலே எது நல்லதுன்னு விளக்க ஆரம்பிச்சார். நம்மவருக்கு அதில் எதையாவது வாங்கி என் காதுலே மாட்டியே ஆகணுமுன்னு நேர்ச்சை போல ! எனக்குக் காதுகள் அடைஞ்சுருக்குன்னு சொன்னால் அதையாருமே கண்டுக்கலை. அந்த நபரோ.... விக்கறதுலேயே குறியா இருக்கார். ரொம்ப நல்லதுன்னு ஒரு செட் எடுத்துக் காமிச்சார். இதே போல ஒன்னு, ஆனால் இன்னும் கொஞ்சம் சின்னதாகவே நியூஸியில் என்னாண்டை இருக்கு. அப்ப எதுக்கு இன்னொண்ணு வாங்கணும். முதலில் இந்தக் காது அடைப்புப் போனால்தானே ?
விலை வேற அதிகமாத் தெரியுது. 385 ஆயிரம். அப்புறம் வரிகள் சேர்த்து 410 ஆ ஆகுமாம். நம்மவர் வாயைத்திறக்குமுன் யோசிச்சுச் சொல்றேன்னு கிளம்பிட்டேன். இது என்னடா எனக்கு வந்த சோதனைன்னு ஒரு கழிவிரக்கம் கூட வந்துச்சுன்னா பாருங்க.
எனக்குக் கொஞ்சம் ஷாப்பிங் போகணுமுன்னு திரும்ப லோட்டஸுக்கு வந்து, ப்ளௌஸ் தைச்சுக்கக் கொண்டு போயிருந்த அளவு ப்ளௌஸையும், வாங்க வேண்டிய நிறங்களுக்காகப் புடவையின் ஓரத்தில் சின்னதா வெட்டியெடுத்த துண்டுகளையும் எடுத்துக்கிட்டுப் பாண்டி பஸார் போனோம். கைராசிக் கடை பெருசா பளிச்ன்னு இருக்கு. போன பயணத்திலும் அங்கேதான் வாங்கினேன். இப்பவும் இங்கேயே ஆகட்டும்.
சரியான மேட்ச்சிங் இல்லைன்னு விற்பனையாளர்களை வாட்டி எடுத்துக்கிட்டு இருந்த மக்களை வேடிக்கை பார்த்துக்கிட்டே எனக்கானதை வாங்கியாச். ஏறக்கொறைய மேட்ச்சிங் கலர் போதும். இங்கே நியூஸியில் நாம் புடவை கட்டுற சந்தர்ப்பத்துக்கு இதுவே அதிகம். எல்லாத்தையும் மாட்டிக்கிட்டு மேலே ஒரு ஸ்வெட்டர் போடத்தான் வேணும்.
சாப்பாட்டு வேளை வந்துருச்சுன்னு, எதிர்சாரியில் இருக்கும் ஏ 2 பி போனோம். அவுங்க ரெண்டுபேருக்கும் சௌத் இந்தியன் சாப்பாடு. எனக்குப் பசி இல்லை. காலை ப்ரேக்ஃபாஸ்ட் கொஞ்சம் நல்லாவே சாப்பிட்டுட்டேன். காஃபி மட்டும் போதும்.
லோட்டஸுக்கு வந்து கொஞ்ச நேரம் ரெஸ்ட். நாலுமணிக்குக் கிளம்பி சாலிக்ராமம் போறோம். போற போக்கிலேயே வடபழனி முருகனை தரிசனம் செஞ்சுக்கிட்டுப் போகணும்.
ஒவ்வொரு பயணத்திலும் மாமா வீட்டுக்குப் போகும் வழியில் வடபழனிக்கருகில் வரும்போது போகணுமுன்னு நினைப்பேன். நேராக் கோடம்பாக்கம் ஹைரோடில் போகமுடியாமல் எங்கெங்கேயோ திரும்பி சுத்திவளைச்சுப்போகும் வழியா வச்சுட்டதால் வரும்போது பார்க்கலாம்னு நினைக்கறது நடப்பதே இல்லை. இன்றைக்கு என்ன ஆனாலும் சரின்னு முதலில் கோவில்.
கடைசியா இந்தக் கோவிலுக்கு வந்தது எப்பன்னு யோசிச்சால் அது ஆச்சு அம்பது வருஷமுன்னு மனக்குரல் சொல்லுது. அடராமா........
கோவில் வாசலுக்குக் கொஞ்சம் முன்னால் வண்டியை நிறுத்திக்கணும். புதுக்கோவிலாட்டம் இருக்கு. முந்தி எப்படி இருந்துச்சுன்றது கூட நினைவில்லை. காலணி வைக்கும் இடத்தில் காலணிகளை விட்டுட்டுக் கோவிலுக்குள் போகத் திரும்பினால் ஒரு பெருமாள் கோவில் கண்ணில் பட்டது. இங்கே பெருமாள் இருக்காரா என்ன ? தெரியாமப்போச்சே.... திரும்பி வரும்போது போகணும்.
வடபழனி ஆண்டவர் இங்கே வரக்காரணம்?
அண்ணாசாமி நாயக்கர் என்ற முருகபக்தர் இங்கே இந்த ஏரியாவில் ஒரு ஓலைக்குடிசையில் இருந்துருக்கார். அப்பப்ப அறுபடைவீடுகளுக்குப்போய் முருகனை தரிசனம் செஞ்சுட்டு வருவார். இவருக்குத் தீராத வயித்துவலி இருந்துருக்கு. ஒரு சமயம் பழனிக்குப்போயிட்டுப் படி இறங்கி வரும்போது அங்கே இருந்த கடையில் ஒரு முருகன் படத்தைப் பார்த்து அதன் அழகில் மயங்கி அதை வாங்கிட்டு வந்துட்டார். தன்னுடைய ஓலைக்குடிலில் படத்தை வச்சுத் தினமும் கும்பிட்டுக்கிட்டு இருந்தார்.
ஒரு சமயம் ஏதோ கோவிலிலோ இல்லை கனவிலோ ஒரு சாதுவைப் பார்த்தப்ப, அவர் சொன்னாராம் , 'இப்படிக் கோவில்கோவிலாப் போறியே முருகன் உன் வீட்டுலேயே இருக்கான்!' (பலவிதமான கோவில் வரலாறு(!) அங்கங்கே கிடைச்சதால் எல்லாத்தையும் கலந்துகட்டி நாமும் ஒரு வரலாறு படைச்சுக்கலாமா )
அதிலிருந்து ஓலைகுடிசையை கொஞ்சம் பெருசாக்கி, முருகன் வழிபாடும் வளர்ந்துருக்கு. தென் பழனியில் வாங்கிய முருகன், பழனிக்கு வடக்கே மெட்ராஸுக்கு வந்துட்டதால் இந்த ஏரியா வடபழனின்னு ஆகியிருக்கு. வடபழனி ஆண்டவர்னு சாமிக்குப் பெயரும் ஆச்சு. இது நடந்ததெல்லாம் 1865 ஆம் வருசத்தில். முருகனின் படத்தோடு ஒரு வேல் நட்டு வச்சு சாமி கும்பிட்டுக்கிட்டு இருந்தார். அக்கம்பக்க சனமும் கோவில்னு வந்து போய்க்கிட்டு இருக்காங்க.
அப்பதான் தன் தீராத வயித்துவலியைத் தீர்த்துவைக்கணுமுன்னு திருத்தணி கோவிலுக்குப்போய் தன் நாக்கை அரிந்து காணிக்கையாப் போட்டுருக்கார் ! வயித்துவலி போயிருக்கு !(அடராமா.... வயித்துவலி போய் வாய் வலி வந்துருக்காது ? ) இதுக்குப் பாவாடம் னு பெயராம்.
இங்கே வடபழனி ஆண்டவர் கோவில் பூஜைகள் கொஞ்சம் கொஞ்சமா விரிவானதும், பக்கத்துலே வசித்த ரத்தினசாமி செட்டியார் கூடமாட உதவிகள் செஞ்சுக்கிட்டு இருக்கார். இந்த சமயத்தில் அண்ணாசாமி நாய்க்கருக்கு முருகனின் அருளால், அவர் சொன்னதெல்லாம் பலிக்க ஆரம்பிச்சது. அருள்வாக்கு சொல்ல ஆரம்பிச்சார். (நாக்கு இல்லாமல் பேச்சு வந்துருக்குன்னா....... மனசே அடங்கு.... சொன்னால் கேக்க மாட்டியா ? எழுதிக் காமிச்சுருக்கலாமுல்லெ? )
அருள்வாக்கு கேக்கக் கூட்டம் சேர ஆரம்பிச்சதும், குடிசையைக் கொஞ்சம் பெரிய கொட்டகையா மாத்தியிருக்காங்க. கொஞ்ச நாளில் அண்ணாசாமி நாயக்கர், முருகனாண்டையே போய்ச் சேர்ந்ததும், ரத்தினசாமி செட்டியார், கோவில் பொறுப்பை ஏத்துக்கிட்டுக் கோவில் வேலைகளைப் பார்த்துருக்கார்.(இவரும் 'பாவாடம்' செஞ்சுக்கிட்டு அருள்வாக்கு சொல்ல ஆரம்பிச்சார்னுகூட ஒரு இடத்தில் படிச்சேன்!ஙே )
1920 ஆம் வருஷம் கொட்டகை இருந்த இடத்தில் பக்காவா, கோபுரத்துடன் கோவிலைக் கட்டிட்டாங்க. அதுக்குப்பின் எப்படி இவ்வளவு பெருசா நாலு ராஜகோபுரங்களுடன் கோவில் வளர்ந்ததுன்னு தெரியலை.
இப்ப இருக்கும் கோவில் அட்டகாசமா நிறைய சந்நிதிகளுடன் இருக்கு ! எனக்கு ஞாபகம் இருப்பதெல்லாம் ஆறுமுகன் சந்நிதின்னு ஒரு சின்ன இடத்தில் ஆறுமுகனைச் சுத்தி அஞ்சு பக்கமும் கண்ணாடிகளை வச்ச இடம்தான். ஒரு முகத்தை நாம் நேரா நின்னு பார்க்கும்போது, மற்ற அஞ்சு முகங்களும் கண்ணாடியில் தெரியும். அப்போதெல்லாம் எனக்குப் பிடிச்ச இடம் இந்தக் கண்ணாடி அறை(!)தான்.
அதனால் இப்ப இருக்கும் கோவிலைப் புதுசா அன்றைக்குத்தான் பார்த்தேன்னு சொல்லலாம். கோவிலுக்குள் நுழைஞ்சதுமே இருந்த 'கோவில் மாடல்' பார்த்ததும் கண்கள் விரிஞ்சது உண்மை !
ஒரு தனி மண்டபத்தில் கோவில் வரலாறு, சித்திரங்களால் சொல்லப்பட்டு இருக்கு. ஆனால் கண்ணாமுண்டான் சாமான்களை வச்சுருப்பதால் வரிசையா வாசிக்க முடியலை. அவ்வளவா வெளிச்சமும் இல்லை.... ப்ச்....
நாள் முழுதும் பிரசாத விநியோகம் நடக்குதாம். சனம் அங்கங்கே ஆற அமர அமர்ந்து சாப்பிட்டுப்போறாங்க.
கம்பளம் விரிச்சதுபோல கோலங்கள் போட்டு வச்சுருக்கறது ரொம்பவே அழகா இருக்கு. ஏகப்பட்ட சந்நிதிகள், மண்டபங்கள்னு.... அருமை. ஆனால் அப்போ இவ்வளவு பெருசாவா இருந்துச்சுன்னு திரும்பத்திரும்ப, வரும் எண்ணம் ஓய்ஞ்சபாடில்லை.... அம்பது வருஷம்.... அரை நூற்றாண்டு ! எதுவும் சாத்தியம் தானே !
கொஞ்சம் படங்களைக் க்ளிக்கிட்டு வெளியே வந்தேன்.மருமானை தரிசித்த கையோடு மாமன் தரிசனத்துக்கு கஜேந்திர வரதர் வளாகத்துக்குள் போறோம்.
இது மேற்குவாசல்னு போட்டுருக்காங்க. அப்போ கிழக்கு வாசல் அந்தாண்டை இருக்கணும். பரவாயில்லைன்னு பின் வாசலுக்குள் போயாச்சு. பெரிய வளாகம்தான். அங்கங்கே சில சந்நிதிகள். பெரிய ஆலமரம் ஒன்னு விழுது விட்டு நிக்குது. கோவில் பார்க்கறதுக்கு ரொம்பப் பழசாத்தான் இருக்குன்னாலும், சென்னையில் பல இடங்களில் கட்டியே ரெண்டு வருசம் ஆன கட்டடங்கள் கூட அறுதப் பழசா பெயிண்ட் எல்லாம் அழிஞ்சு பார்க்கப் பரிதாபமா இருப்பதைப் பார்த்திருக்கேனே..... கால நிலை அப்படிப் பாழ்படுத்திருதோ என்னவோ....
கோவில் ம்யாவ் ஒன்னு வாங்கோன்னுச்சு. தேங்க்ஸ்னு சொல்லிட்டு உள்ளே போனேன். மூலவர் சந்நிதியில் திரை போட்டுருந்தாங்க. சாயரக்ஷை பூஜைக்கான நேரம். நடை திறக்க இன்னும் அரைமணி ஆகுமாம். சரி... மத்த சந்நிதிகளைப் பார்க்கலாம்முன்னா..... மழை காலம் என்பதால் தரையெல்லாம் ஒரே சகதி.
ரொம்பவே சிம்பிளான கோவில். முன்மண்டபம், கருவறை விமானம் எல்லாம் இல்லை. சட்னு பார்த்தால் , நாம் தின்னவேலிப்பக்கம் நவதிருப்பதிகள் தரிசனத்துலே பார்த்தமே அது போலவே ! ஆனால் முன்பக்கம் தகரக்கூரை.
மூலவர் ஆதிமூலநாதர் என்னும் கஜேந்திரவரதர். தாயார் ஆதிலக்ஷ்மி. தாயார் சந்நிதி மட்டும் திறந்திருந்தது. போய் கும்பிட்டோம். மூலவர் சந்நிதிக்கு முன்னால் சின்ன மாடத்துலே பெரிய திருவடி. அவரைக் கும்பிட்டு, நாம் வந்து போன சேதியைப் பெரியவரிடம் சொல்லும்னு வேண்டிக்கிட்டேன்.
கோவில் விவரங்களை வலையில் தேடுனப்போ இது 600 வருசப் பழமைன்னு தெரியவந்தது. சின்னதா ஒரு வீடியோ க்ளிப் போட்டுருக்காங்க. அதன் சுட்டி இங்கே !
https://youtu.be/nwSQcnaHHfg
இன்னொருநாள் கட்டாயம் வரணும் என்ற முடிவோடு அதே பின்வாசல் வழியாக வெளியே வந்து, விஸிட் போகும் வீட்டுக்காகக் கொஞ்சம் பூக்கள் வாங்கிக்கிட்டுக் கிளம்பினோம். மாமா வீட்டுக்குத் தகவல் ஏற்கெனவே சொல்லிட்டதால், அவுங்களும் காத்திருப்பாங்கதானே...
நம்ம பூனா மாமியும் மாமாவும் பெருமாளாண்டை போயே பலவருசங்களாச்சு. அதுக்காக பந்தம் விட்டுப்போயிருமா ? மாமா வீட்டுலே மழை காலத்தில் வீட்டுக்குள் தண்ணீர் வந்துருது. உசத்திக் கட்டணும்தான். தாற்காலிகமா என்னென்னவோ செஞ்சு பார்த்துட்டு, இந்த முறை வேலையில் மும்முரமா இறங்கிட்டாங்க. அதனால் நம்ம தம்பி வீட்டு மாடியில் இப்போ குடித்தனம்.
ரெண்டு குடும்பத்தையும் ஒரே சமயத்தில் பார்த்துப் பழங்கதைகள் எல்லாம் ஓரளவு பேசிட்டுக் கிளம்பினோம்.
மழை வேற பிடிச்சுக்கிச்சு. நல்லவேளை.... கோவிலில் இருக்கும்போது மழை வரலை.
மழை காரணம், நம்ம காவேரி விநாயகர் கோவிலுக்குப் போகலை. ஆரம்பகாலத்திலிருந்து மாமாதான் ட்ரஸ்டியாக இருந்தார். இப்போ மாமாவின் புதல்வர் !
இப்போ நவம்பர் மாசம். அடுத்த வருசத்துக்கான திருப்பதி தேவஸ்தான கேலண்டர், நமக்காகத் தம்பியிடமிருந்து ! ஹையோ பெருமாளே !
தொடரும்......... :-)
8 comments:
அருமை நன்றி
வடபழனி ஆண்டவர் கோவில் ...பளிச்ன்னு அழகா இருக்கு .
சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்த சமயம் வடபழனி கோவில் சென்றிருந்தது.... நாளாச்சு பார்த்து.. சமீபத்து கோவில்தானா அது? அருகிலிருந்த அந்த பெருமாள் கோவில்தான் அமைச்சர் சேகர் பாபு கடை ஆக்கிரமிப்புகளை அகற்றி வெளிக்கொண்டு வந்த கோவிலோ...
வாங்க விஸ்வநாத்,
நன்றி !
வாங்க அனுப்ரேம்,
ஆமாம்ப்பா.... அருமை !
வாங்க ஸ்ரீராம்,
ரொம்பப்புதுசு இல்லை. ஆச்சே ஒரு 157 வருஷம் !
சேகர்பாபு... அட! இப்படி இன்னும் பலகோவில்களைக் காப்பாத்தியிருக்காரோ ?
வட பழனி ஆண்டவர் கோவில் தரிசனம் பெற்றோம். முன்னர் இரு தடவை தரிசித்திருக்கிறேன்.
வாங்க மாதேவி,
சென்னைப்பயணங்களில் கோவில்கள் தான் முக்கியமாகத் தெரிகிறது !
Post a Comment