Friday, April 21, 2023

காது............ கேக்..................... காது ! கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 38

நேத்து விமானப்பயணத்தை ரொம்பவே நம்பி இருந்தேன். கேக்காத  காது கேட்டுருமுன்னு... அது என்னன்னா.... இன்னும் கொஞ்சம் புளியைச் சேர்த்துவச்சு அமுக்கி விட்டுருக்கு! எனக்கு ஒன்னும் பிரச்சனையாத் தெரியலைன்னாலும்.... நம்மவருக்கு இது பூதாகாரமான சமாச்சாரமாத் தோணிப்போயிருக்கு.  என் முகம் பார்த்துப்பேசினால் நல்லா விளங்கிக்குது. பதிலும் சொல்லிக்கிட்டுத்தான் இருக்கேன். ஆனால் முகம் பார்த்துப்பேச படு பேஜாரா இருக்கும் 'நல்லவரை 'என்ன சொல்றது?

 வலையில் காது டாக்டரைத் தேடுனவர், இங்கே நம்ம பேட்டையிலேயே ஒரு டாக்டர் இருக்கார், ப்ரேக்ஃபாஸ்ட் முடிச்சுட்டுப்போய்ப் பார்க்கலாமுன்னு சொன்னார்.  ஃபோன் செஞ்சு கேட்டதில் பத்து மணிக்கு மேலே வாங்கன்னு  ரிஸப்ஷனிஸ்ட் சொன்னாங்க. 
ராத்ரி முழுக்க மழை .....   ஏற்கெனவே அழுக்கா இருக்கும் தெருவில்  இப்போ அழுக்காறு ஓடுது.   எதிர்சாரி  அபார்ட்மென்ட் லே   பேஸ்மெண்ட்  தெருவுக்குக் கீழே !!  தேங்கி நிக்கும் தண்ணீரை பம்ப் வச்சு  வெளியேத்தித் தெருவில்  விடறாங்க.    சரியான மழை சீஸனில் வந்துருக்கோமேன்னு புலம்பக்கூட முடியலை. 'நீதானே தீபாவளிக்குக் காசியில் இருக்கணுமுன்னு கேட்டே.....'  கப்சுப்னு  இருந்துக்கலாம். 
பத்துமணிக்கு சதீஷ் வண்டி அனுப்பிட்டார். பர்கிட் ரோடுக்குப் போறோம். டாக்டர் சுந்தர் கிருஷ்ணன்    (பெயருக்குப்பின்னால்  நாலைஞ்சு வரிகள் இருக்கு ! ) வந்துட்டாராம்.  கொஞ்சம் காத்திருக்கச் சொன்னாங்க.  டாக்டரை சந்திச்சோம். பிரச்சனை என்னன்னார்.   காது கேக்கலைன்னு சைகையில் சொன்னேன் :-) 
அதுக்குள்ளே நம்மவர்,  சாப்பிடும்போது காதுக்குப்பக்கம் வலி இருக்குன்னு  பழைய கதையை எடுத்துவிட்டார்.   சப்பாத்தி மெல்ல முடியலை.  அது இங்கே நியூஸியில் இருக்கும்போதே  ஆரம்பிச்சதுதான்.  அதுக்குத் தனியா  இன்வெஸ்டிகேஷன் நடந்துக்கிட்டுத்தான் இருக்கு.  எம் ஆர் ஐ எல்லாம்  ஆச்சு. ரெண்டு ஸ்பெஷலிஸ்ட்டை வேற பார்த்தாச்சு. காரணம் ஒன்னும் கண்டுபிடிக்க முடியலை.  இன்னொரு எக்ஸ்பர்ட்டு பார்க்கப்போறாங்க.  அதுக்கே நாலு  மாசம் வெயிட்டிங்.  அதுக்குள்ளே வலி தானாகப் போயிறாதா ? 

'எதுக்கும் ஸ்கேன் பண்ணிட்டு வாங்க'ன்னார்.  ஸ்கேன்ஸ் வொர்ல்ட்   போகணுமாம்.  போனோம். ஆச்சு. ரிப்போர்ட்டைக் கையில் கொடுத்துட்டாங்க. 

திரும்ப பர்க்கிட் ரோடு வந்தோம்.  டாக்டர் ,  காது ரிப்போர்ட்டைப் பார்த்துட்டு , 'காதுக்குப்பக்கம் எலும்பு வளர்ச்சி ஆரம்பிச்சுருக்கு. அதுக்கான  ஸர்ஜரி பண்ணி சரி பண்ணிடலாம்'னு சொன்னார். 

இந்த இடத்துலே ஒன்னு சொல்லணும்.... 'நம்மவருக்கு' இந்த டாக்டர்கள் மேல் தீராத ஒரு  பாசம்.  முணுக்னு ஒரு சின்ன வலி வந்தால் போதும்.... உடனே டாக்டர் அப்பாய்ண்ட்மென்ட் வாங்கிருவார். இங்கே நம்ம குடும்ப டாக்டருக்கும்  ஸ்பெஷலிஸ்டுகளுக்கும்  கொடுத்துக் கொடுத்தே சிவந்த கைகள் நம்மவருக்கு !   இன்ஷூரன்ஸ் இருக்கோ பொழைச்சோமோ..... போதாக்குறைக்குப் பொன்னம்மான்னு இப்போ கூகுள் டாக்டர் வேற ! 
 ஆன்னா  ஊன்னா... முதல் கன்ஸல்டேஷன் அவராண்டைதான்.


யார் பண்ணுவாங்க, எங்கே எந்த ஹாஸ்பிடலில் ன்னு கேட்டதுக்கு அவரே பண்ணுவாராம். இதே பில்டிங் மாடியில் தியேட்டர் இருக்காம் ! நம்மவர் 'நேரங்குறிக்க' ரெடியானார்.  நான் உடனே.....  என்ன விவரமுன்னு எழுதித்தாங்க.  எங்கூருக்குப்போய் பண்ணிக்கறேன்னு  'தடா' போட்டேன். 
சரின்னு தலையாட்டினவர், ஒரு அரை முழ நீளத்துக்கு மருந்து வகைகள் எழுதி, நர்ஸைக் கூப்பிட்டுக் கொடுத்துட்டு,   எதுக்கும்  hearing Test ஒன்னு செஞ்சுருங்கன்னார்.  வேணாம் வேணாமுன்னு நான் ஜாடையிலே சொன்னாலும் 'நம்மவர்' கேட்காம  அது எங்கே செஞ்சுக்கணுமுன்னு   விவரம் கேட்டுக்கிட்டார்.

இங்கேயே  மருந்துக்கான்ன  டிஸ்பென்ஸரி இருக்கு. அங்கேதான் மருந்து வாங்கிக்கணும்.  எந்த மருந்து எப்போன்னு Pharmacist   சொன்னதுக்கெல்லாம்  தலையைத் தலையை ஆட்டிட்டு அங்கே கொடுத்த மருந்துகளை வாங்கிக்கிட்டு லோட்டஸ் திரும்பறோம். 

இதுக்குள்ளே லஞ்சு டைம் வேற வந்துருச்சு.  வேறெங்கேயும் போய் சாப்பிட ஆயாசமா இருக்குன்னு பக்கத்லே இருக்கும் சுஸ்வாத்லே போய்ப் பார்த்தால்  சப்பாத்தி & ஸப்ஜி தீர்ந்து போச்சாம். புட்டு இருந்தது.  பழமுதிர்நிலையத்தில்  தயிரும் பழங்களுமா வாங்கிக்கிட்டோம்.

நம்ம ட்ரைவர் விஜி, சின்னப்பையர். காசிப்பயணத்துக்கு முன் நமக்கு ட்ராவல் ஓனர்  சதீஷ் அலாட் செஞ்ச   கப்பல்காரர்  சரத்தின் தம்பிதான். பேச்சுலர் டிகிரி முடிச்சுட்டு, மேலே படிப்பதா  இல்லே வேலையான்ற தடுமாற்றத்தில் இருக்கார்.  அண்ணன் வேற லாங் ட்ரிப் போயிருக்காராம்.  நமக்கு சிலநாட்கள்  சென்னைத் தங்கல் என்பதால்  இவர் வந்துருக்கார்.  சாப்பிட்டுட்டுக் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துக்கச் சொல்லிட்டு  அறைக்குப் போயிட்டோம்.

நான் பலிக்கடா போல் கூப்பிட்ட இடத்துக்குப் போய்க்கிட்டு இருக்கேன்.  வயசாகும்போது, காது கேட்கும் திறன் குறைஞ்சுக்கிட்டுதான் வரும்.எப்பவும் பாம்புச் செவியா இருக்க முடியுமா ? ( பாம்புகளுக்குக் காதே இல்லைன்றது வேற விஷயம் !!! )  நம்மவரோ விடாமல் உபதேசம் பண்ணிக்கிட்டே இருக்கார். அதெல்லாம் வேற எனக்கு நல்லாவே கேக்குது!!!   பேசாம ஒரு ஹியரிங் எய்ட் வாங்கிக்கோ.  உனக்குப் பிரச்சனை இல்லைன்னாலும்.... உன்னோட பேசறவங்களுக்குக் கஷ்டம்தானே.... அதுக்காவது ஒன்னு வாங்கிக்கோ.....

இப்படித்தான்   கண்ணுக்குக் கண்ணாடியும்.  ஸர்ஜரி செஞ்சு   IOL பொருத்தின பின், படிக்க மட்டுமே   கண்ணாடி வேணும் என்ற நிலையில், பல வருஷங்களாக் கண்ணாடி போட்ட முகத்தையே பார்த்துப் பழகிட்டதால்.... கண்ணாடி இல்லைன்னா நல்லாவே இல்லைன்னு சொல்லிச்சொல்லி, இப்போ பவரே இல்லாத  ப்ளெய்ன் க்ளாஸ் ஒன்னு போட்டுக்கிட்டு இருக்கேன். இப்படி இழுத்த இழுப்புக்கெல்லாம் ஆடினா நல்லாவா இருக்கு ? 

 ஏற்கெனவே  இந்தக் காது பிரச்சனையால் ஒரு  ஹியரிங் எய்ட் நியூஸியிலே வாங்கி வச்சுருக்கேன்தான்.   ரொம்பவே லேட்டஸ்ட் மாடல்.  செல்ஃபோனில் கண்ட்ரோல் பண்ணிக்கலாம்.  ஆனால் அதை மாட்டிக்கிட்டால் காதுக்குள் சூடா இருக்குன்னு  எப்பவாவதுதான் போட்டுக்குவேன். அதுவும் வீட்டுக்குள்ளே.... !   மகள் வரும்போது மட்டும்.  அது என்ன ஃபேஷனோ....   அவ பேசறது  ஸீரோ டெஸிபலில்தான்.  அவளுக்கே கேக்குமான்னு எனக்கு சந்தேகம்.  உண்மையில் எனக்கு வெளியிலே எல்லாம்  இது தேவைப்படவே  இல்லை.     இப்ப  அதை ஏன் கொண்டுவரலைன்னு கேள்விமேல் கேள்வி ப்ச்....

இதுலே பாருங்க..... கண்ணு சரியாத் தெரியலைன்னா, இல்லே ஏதேனும் கண் பிரச்சனை, வயசான வர்ற சாளேஸ்வரம் இதுக்கெல்லாம் கண் பரிசோதனை முடிச்சு,  சட்னு  கண்ணாடி போட்டுக்கறோம்.  ஆனால்..... காது மெஷீனுக்கு என்னவோ ரொம்பக் கெட்ட பேரு இருக்கு !  கண்ணுபோலதானே காதும்  உடலின்  ஒரு அங்கம்?  ஏன் சமூகம் காது கேளாதவரை இளக்காரமாப் பார்க்குது ?  இல்லே அப்படி இல்லையோ... நாந்தான் வேண்டாத சிந்தனையில்  இருக்கேனோ ? 

நாமும்  கொஞ்சம் ஓய்வெடுத்துக்கிட்டு  நாலு மணிக்குக் கிளம்பினோம் .  இன்னும் அஞ்சே நாட்கள் சென்னையில் என்பதால், உறவினர், நண்பர்கள் என்று நேரம் கிடைக்கும்போது போய்ப் பார்த்துட்டு  வரணும். அப்புறம் அப்புறமுன்னு தள்ளிப்போட முடியாது.  முதலில் நம்ம அடையார் அநந்த பதுமன். சொந்தம் நம்பர் ஒன்னு ! காசிப்பயணம் நல்லபடி அமைச்சுக் கொடுத்ததுக்கு நன்றி சொல்லிக்கிட்டேன்.
அடுத்த ஸ்டாப், நம்ம சித்ராம்மா. எனக்கும் அம்மாதான்.  திருவான்மியூர். மாமிக்கு ஃபோன் செஞ்சு,  வரலாமான்னதும்,  'இது என்ன கேள்வி? கிளம்பி வா'ன்னாங்க.   மூணு வருஷக் கதை பாக்கி இருந்ததுன்னு சொல்ல முடியாது.  நடப்பு விவரம் எல்லாம் சித்ரா மூலம் போய்ச் சேர்ந்துருது!  சிங்கைச் சித்ரான்னதும் நம்ம பதிவுலகம் புரிஞ்சுக்கும் !



வயசு ஆகிக்கிட்டு வருதேன்ற  வீண் கவலை இல்லாமல் ஜாலியாக் கதைகள் பேசும் நம் இனம்தான் இவுங்க.  மகன் ராம்ஜியும் சென்னைக்கு வந்துருக்கார்.  பேச்சும் க்ளிக்ஸுமா நேரம் போச்சு.  அப்பப்பப் படங்களை சித்ராவுக்கு அனுப்பிக்கிட்டே  இருந்தோம்.  நேர வித்யாசம் ரெண்டரைதானே !
'இப்படித் தடால்னு வந்து தடால்னு கிளம்பாம நிதானமா சாப்பிட வா'ன்னு சொன்னதைக் கேட்டுக்கிட்டேன்.  தெந்தமிழ்நாட்டுப்பயணம் போய் வந்ததும் வரணும்.

அப்படியே  உயிர்த்தோழிகளில் அடையாரில் இருக்கும்  ஒருவர் வீட்டை நோக்கிப்போறோம்.  விஜிக்கு எல்லா இடத்தையும் காட்டிட்டால் நல்லது :-)

தோழிக்கும் வரேன்னு சேதி சொல்லியாச்சு.   இங்கேயும் மூணு வருஷக்கதைகள் ஒன்னுமே  கிடையாது.  அன்றாடச் செய்திகள் எல்லாமே அப்டுடேட்டு ! 

தோழி நம்ம மரத்தடிகாலத்து 'அலைகள்' அருணாதான் !  அவுங்களைப்பத்தி நான் சொல்றதைவிட  இந்த நாலு வரிகள் விரிவாகச் சொல்லிரும்.

சமீபத்தில் அவுங்க புத்தகம் ஒன்னு வெளிவந்துருக்கு! அன்புப் பரிசாக அதைக்கொடுத்து, ஒரு ரிவ்யூ எழுதச் சொல்லிக் கேட்டுக்கிட்டாங்க.   சொன்னதை உடனே செஞ்சுட்டா நான் ஆருயிர்த்தோழியாக எப்படி இருக்க முடியும் ? 






அங்கேயே  டின்னரையும் முடிச்சுக்கிட்டு லோட்டஸுக்கு  ஒரு  பத்துமணி வாக்கில் வந்து சேர்ந்தோம்.   அருணாவின் கைவண்ணத்தில் தீபாவளி ஸ்வீட்ஸ் வேற எனக்காகக் காத்திருந்தது :-)


PINகுறிப்பு : இன்னிக்குப் புலம்பல் பதிவா அமைஞ்சு போச்சு. மன்னிச்சூ.....

தொடரும்............. :-)


6 comments:

said...

அருமை நன்றி

said...

காது கேட்கவில்லை என்றால் மிகவும் சிரமம்தான்.

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க ஸ்ரீராம்,

சிலசமயம் நன்மையும் கூட.... வேண்டாத எதுவும் காதுலே விழாது :-)

said...

உறவுகள் சந்திப்பு மகிழ்ச்சி.

said...

வாங்க மாதேவி,

உண்மை !