Monday, April 03, 2023

எழுந்துக்கோடா பறவை........... கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 33

என்னாண்டை   ஒரு பாட்டம் லெஸ்  பக்கெட்டுலே,   பக்கெட் லிஸ்ட் ஒன்னு  ,  இருக்குன்னு  முன்பொருக்கில் சொன்னேனில்லையா ?  அதுலே இருந்து ஒரு சமாச்சாரத்தை இன்னிக்கு வெளியில் எடுக்கறோம் !
ஷிவாஸ் கேலக்ஸியில்  நம்ம அறை நாலாவது மாடியில்!   அறைக்குள் நுழையுமுன் திரும்பிப்பார்த்தால் எதிரே  இருக்கும் மாடிப்படி லேண்டிங்கில்  ரவி வர்மா !  புவர்மேன்'ஸ் ரவிவர்மா ....  போகட்டும்..... நாம் மட்டும் என்ன அரச பரம்பரையா ?  சுத்திவர அறைகளும் நடுவுலே  முற்றமுமா இருக்கு  அமைப்பு.அறையும் பரவாயில்லை. 'அது'க்கு  இது எவ்வளவோ   மேல் !  
லிஃப்டில் வரும்போதே    இப்படி ஒரு தகவல்.  நம்ம அப்பு பயங்கர நான்வெஜ் ஆளு போல !  நமக்கு என்ன ராச்சாப்பாடுன்னு யோசிச்சு, தால்பாத் கொள்ளாமுன்னு தோணுச்சு ரெண்டு பேருக்குமே !  கூடக்கொஞ்சம் தயிரும்  பப்படமும் மதி கேட்டோ !

மறுநாள் காலை எட்டரைக்கு வண்டிக்குச் சொல்லியாச்சு.   ஃப்ரேக்ஃபாஸ்ட்க்குப்போய் வந்துட்டுக் கிளம்பிடணும்.  பஃபேதான்.  வழக்கம்போல்  நமக்கு இட்லிவடை. உள்ளூர் ஸ்பெஷல் வேற இருந்தது...... பிஸி பேளா பாத்.  உரைக்குமோன்ற பயத்துலே ஒரு டேபிள் ஸ்பூன் அளவு எடுத்துக்கிட்டேன்.  நாட் பேட் !



ஒரு ஒன்னரை மணி நேரப்பயணம்தான்.  பலமுறை திட்டம் போட்டும்  நிறைவேறாம ஏதேதோ தடங்கல்கள் !  இன்னிக்கு வாய்ச்சதுக்கு எம்பெருமாளுக்கு நன்றி சொல்லி, எட்டு நாப்பதுக்குக் கிளம்பிட்டோம்.  நேஷனல் ஹைவே 44 இல்  போறோம்.  இடம் ஆந்த்ரா எல்லைக்குள்  இருக்கு.  ஆனால் ஹைதையிலிருந்து எட்டு மணி நேரப்பயணம் போவதை விட  , பெங்களூருவில் இருந்து பக்கம். ஸ்டேட் டு ஸ்டேட் பர்மிட் வாங்கிக்கணும்.
ரோடு அருமையா இருக்கு. ஆனால்  இந்த லாரிக்காரர்களின்  அட்டகாசம் தான் அதிகம்.   ப்ச்....



எழுந்து நின்னு 'வா' ன்னது  பறவை. அட !  எழுந்துருச்சே !   ஸ்ரீராமனின் ஆணைக்கு மறு வார்த்தை உண்டா  என்ன ?  அடுத்த மூணாவது நிமிட் இலக்கை அடைந்தோம். அங்கே இன்னொரு வரவேற்பாளர் அமைதியா இருந்தார். வாயைத்திறக்கலை. கண்ணால் பேசுனது மட்டுமே!

சின்னப்பாதையிலே போறோம்.  இடம் சுத்தமா இருக்கு. தொல்லியல் துறையின்  கீழ் பாதுகாக்கப்பட்டது. வீரபத்ர ஸ்வாமி கோவில் !  ஆமை உருவில் இருக்கும் சின்னக்குன்றின் மேல் இருக்காம். சட்னு குன்று மனசுக்குத் தென்படலை.  கோவில் முகப்புக்கு முன் இருக்கும் தெரு.... கீழே தெரிவதால் நாம் உயரத்தில் இருக்கோம்தான் ! 


முகப்பைக் கடந்து வெளிப்ரகாரத்தில் நுழையறோம்.  கம்பீரமான கொடிமரம் ! அதுக்கு எதிரில் இருக்கும் வாசலிலேயே சிற்பங்களின் அட்டகாசம் ஆரம்பிச்சுருது.  தூண்களால் நிறைஞ்சுருக்கும் முன்மண்டபம்.  சிற்பிகள் ஒன்னையும் விட்டுவைக்கலையே !



கொஞ்சம் உயரத்தில் கருவறை !  வீரபத்ர ஸ்வாமி தரிசனம் ஆச்சு ! சிவனும் விஷ்ணுவும் எதிரெதிராக நின்னு ஸேவை சாதிக்கிறாங்க. 
தூண்களில் இருக்கும் சிலைகளில் அங்கங்கே  பாதிப்பு இருக்கு. அன்னியமதத்தினரின்  கைவரிசையா இல்லை நம்ம மக்களின் விஷமத்தனமான்னு சரியாத் தெரியலை.
பதினைஞ்சாம் நூற்றாண்டு கடைசியில் கட்டுன கோவிலாக இருக்கலாம்னு  சொல்றதைக் கேட்டுக்கலாம். விஜயநகரப்பேரரசு  கோலோச்சிய காலம் அப்போ !  
இந்தக்கோவிலில் அதிசயத்தூண் இருக்குன்றதால் அதைத் தேடிப் போகணுமுன்னு நினைச்சப்ப, 'யாரையும் கேக்க வேணாம்.... இங்கெ பாரு என் துப்பட்டாவை'ன்ற மாதிரி சரக்னு துப்பட்டாவை உருவிக் கீழே போட்டாங்க ஒருத்தர். நானும் சட்னு வீடியோ எடுத்தேன்.

https://www.facebook.com/1309695969/videos/914937069892467/

மண்டபத்தில் நிற்கும் அறுபது தூண்களில் இது மட்டுமே கொஞ்சம் அந்தரத்தில் தொங்குது ! கீழே தரைக்கும் தூணின் அடிப்பாகத்துக்கும் இடையில் சின்னதா ஒரு இடைவெளி. துப்பட்டாபோல கொஞ்சம் மெல்லிசான துணி, நியூஸ் பேப்பர் இப்படி நுழையும் அளவுதான்.  துணியுமே சரியா எதிர்ப்புறம் வரலை. மூணு பக்கமும் இருக்கும் இடைவெளியின் அளவு  நாலாவது பக்கம் இல்லைன்னு நினைக்கிறேன். ஆனாலும் இது ஒரு அதிசயம் தான் !  அந்தக் கால சிற்பிகள் எவ்வளவு நுட்பமான வேலைகள் செஞ்சுருக்காங்கன்னு நினைக்கும்போது  வியப்பாத்தான் இருக்கு!

அப்சரஸ்களின் நடனக்கச்சேரி நடக்குது இங்கே !  இப்பவும் கூடத்தான்னு நினைக்கிறேன்....  இரவில் தேவர்கள் நடமாட்டம் இருக்காதா என்ன ?  யானைக்கூட்டங்களும் எக்கச்சக்கம்.
இந்த கோவிலின் சிற்பங்களை ஒரு பதிவுக்குள் அடக்குவது ரொம்பவே கஷ்டமுன்னு இந்தப் பதிவு எழுத நேத்து ஆரம்பிச்சவுடனே தெரிஞ்சுபோச்சு.  ராவோட ராவா பேசாம ஒரு ஃபோட்டோ ஆல்பமா ஃபேஸ்புக்கில் போட்டு வச்சேன். இதுதான் சுட்டி. விருப்பம் இருப்பின் பார்க்கலாம் !

https://www.facebook.com/media/set/?set=a.10224031775524751&type=3

ராமாயணம் நடந்த காலக்கட்டம்.  ராமன்,   மனைவியோடும், தம்பியோடும் காட்டுக்கு வந்து  பதிமூணு வருசங்களாகிப் போச்சு. இன்னும் நாட்டுக்குத் திரும்ப  ஒரே ஒருவருசம் பாக்கி இருக்கு. இந்த நிலையில், ராவணன் என்னும் அரக்கன்,   ஆரண்யக்குடில் வீட்டுலே ஆம்பிளைகள் இல்லாத நேரத்தில் வந்து சீதையைத் திருடிக்கிட்டு ஆகாச மார்க்கமாப் போய்க்கிட்டு இருக்கான்.  நம்ம சீதையும்  குய்யோ முறைய்யோன்னு கத்தியபடி இருக்காள்.  அலறல் சத்தம் கேட்ட ஜடாயு என்னும் கழுகரசன், சீதையைக் காப்பாத்தும் எண்ணத்தில் ராவணனைத் த்டுத்து நிறுத்தப் பார்க்கிறான்.  இவ்வளவு திட்டம்போட்டுத் திருடிக்கிட்டுப்போகும் 'வஸ்து'வை விட்டுக்கொடுக்க முடியுமோ ? எடு , அந்த வாளை.... (அரசனாச்சே... இடுப்பில் வாள் இருக்காதா என்ன ? ) ஒரே போடு.... சிறகு முறிந்து கீழே விழுந்தான் ஜடாயு !

விழுந்த இடத்துலேயே அரற்றிக்கிட்டுக் கிடக்கான். ராமனுக்கு சேதி சொல்லும்வரை உடலில் இருந்து உயிர் பிரியாமல் இருக்கணுமே ன்னு இப்பத்துக்கவலை.... குடிலுக்கு வந்த ராமலக்ஷ்மணர்கள் சீதையைக் காணாமல் தேடிக்கிட்டே வர்றாங்க. எத்தனைநாட்கள் காட்டுலே நடந்து வர்றாங்களோ....ப்ச்....

எங்கேயோ , யாரோ அரற்றும் ஒலி லேசாய்க் கேட்குது இவுங்களுக்கு. அந்தத் திசை நோக்கி நடந்து போனால்... அதோ ஒரு பறவை வீழ்ந்துகிடக்கு.  கிட்டக்க ஓடிப்போய்ப் பார்த்து, 'எழுந்துரு பறவையே' ன்னு சொன்ன இடம்தான்  இந்த லேபக்ஷி. ( லேஸுக்கோரா.....  லேஸுக்கோ  )

'நாந்தான் எழுந்து நிக்க த்ராணி இல்லாமக் கிடக்கறேனே ராமா..... உன்னாண்டை ஒரு சேதி சொல்லத்தான் உசுரைக் கையில் புடிச்சுக்கிட்டு இருந்தேன்...  உன் மனைவியை  ஒரு கொடிய அரக்கன், புஷ்பகவிமானத்தில் வச்சுக் கடத்திக்கிட்டு, இதோ இந்தத் திசையில் போனான்' னு  சொல்லி, மண்டையைப் போட்டது  பக்ஷி. ஸ்ரீராமனின் தந்தை தசரத மஹாராஜாவின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர்தான்  இந்த ஜடாயு !

தன்னுடைய தந்தை மறைவுக்குத் தன்னால் அருகில் இருந்து நீத்தார்கடன் செய்யமுடியாமப்போனதை நினைத்து மனத்துயரம் கொண்டிருந்த ராமன்,  ஜடாயுவைத் தன் தந்தை ஸ்தானத்தில் வச்சு, ஈமக்கடன் செய்ததாக ராமாயணம்  சொல்லுது !  பாருங்க..... ராமாயணம் னு சொன்னதுமே... எப்படி சம்பவங்கள் நீண்டுகிட்டே போகுதுன்னு !!!!

தூண்கள் நிறைந்த மண்டபத்தைக் கடந்து வெளிப்ரகாரம் வர்றோம்.  இங்கேதான் நாகலிங்கம் ! ஃபோட்டோ ஸ்பாட் ! எப்பவும் ஒரே கூட்டம் இங்கே !  மற்ற ஆட்களில்லாத ஒரு ஃப்ரேம்  கிடைச்சால் நீஙக பாக்யசாலி !!!!
இஷ்டம்போலே க்ளிக்ஸ் முடிச்சு அந்தாண்டை இருக்கும் ஒரு  வாசலில் கீழே ரெண்டடி இறங்கறோம் !  ஆஹா....  குன்று தெரியலைன்னு சொன்னேனே....   வெல்லப்பிள்ளையாரை கொஞ்சம் தட்டி எடுத்து, அதையே பிரஸாதமா விநியோகம் செஞ்சாப்ல .....   அதே குன்றைத்தான்  வெட்டி வெட்டிக் கட்டி இருக்காங்க. 
பெரிய பெரிய மண்டபங்கள் !  எதுக்கும் கூரை இல்லை.  வானம் பார்த்து நிக்குதுகள் !  அந்தாண்டை  சுத்திவர ஓரத்தில் மட்டுமே நீண்டு ஓடும் வெராந்தா போல மேற்கூரை (கல்லுதான் ) போட்ட அமைப்பு ! அங்கங்கே ஒரு சில கற்றளிகள் !  உள்ளே சாமிச் சிலை இல்லை :-(   



டிஜிட்டல் கேமெராக் காலம் வந்ததோ....நாம் பிழைச்சோமோ..... 
முன்னோர்கள் நடமாட்டம் கொஞ்சம் அதிகம் இந்தப் பகுதியில் ! அந்தப் பையைக் கொண்டான்னு  வாங்கி, மரத்துக்குக் கொண்டுபோய் நிதானமாப் பிரிச்சு தனக்கு வேண்டியதை எடுத்துத் தின்னும் அழகை நின்னு பார்க்கணும்தான் !

இப்படி ஸ்வாதீனமா  கைநீட்டி வாங்கிக்கத் தெரியாத செல்லம் ஒன்னு பாவமா வந்து நின்னதும், 'நீ ஸ்பெஷல்டா. உனக்கு நியூஸி ம்யூஸ்லி பார் ரெடி. சத்துணவு' ன்னு பிய்ச்சுப்போட்டார் 'நம்மவர்'.

ஏறக்கொறைய ரெண்டு மணிநேரம் சுத்திப் பார்த்துருக்கோம். முழுசும் ஒன்னுவிடாமப் பார்த்தோமான்னு கேட்டால் இல்லைன்னுதான் சொல்லணும்....  கடிகாரம் பார்த்துதான்  போதுமுன்னு முடிக்கவேண்டியிருக்கு.



அடுத்த ஸ்டாப் இன்னொரு குன்றின் மேல் இருக்கும் ஜடாயு சிற்பம். சுத்தி வேலி போட்டு, இதை ஜடாயு தீம்பார்க் னு ஆக்கிட்டாங்க. உள்ளே போக பத்து ரூ  கட்டணம். க்ளிக்ஸ்  கடமையை முடிச்சுட்டுக் கிளம்பினோம்.



அடுத்த மூணாவது நிமிட்.... கல்நந்தி !  ஒற்றைக்கல்லில் செதுக்கினதாம். பத்து மீட்டர் நீளம், ஆறு மீட்டர் உயரம் !  காலை மடிச்சுப்போட்டு உக்கார்ந்துருக்கு ! கழுத்து நெக்லேஸ், மணி அலங்காரத்தில்  கண்டபேருண்ட பக்ஷியுடன்  சிங்க பெண்டன்ட் !!!!    கோவிலுக்குள் பார்த்தமே  பிரமாண்ட நாகமும் குட்டி லிங்கமும்.... அதை நோக்கி உக்கார்ந்துருக்குன்னு தகவல் பலகை சொல்லுது...  என் ஊனக்கண்களுக்கு இங்கிருந்து நாகம் புலப்படலை.... அந்த திசை நோக்கி....   ன்னு சொல்லிக்கலாம்.
லேபக்ஷி சின்ன ஊர்தான். நாம்   ஊருக்குள் போய்ப் பார்க்கலை. பனிரெண்டரை ஆச்சுன்னு கிளம்பிட்டோம்.  போனதை விட பத்து நிமிட் குறைவான நேரத்தில் ஷிவாஸ் கேலக்ஸி வந்து சேர்த்துட்டார் சந்த்ரசேகர் (ஓனர் ட்ரைவர் )  

தொடரும்...... :-)





11 comments:

said...

Lepakshi குறித்த தகவல்கள் அனைத்தும் நன்று. படங்களும் மிகவும் அழகு.

said...

மிக சுவாரஸ்யமான இடங்கள். வேறு ஸ்வாமி சிலைகள் எதுவும் இல்லையா?

said...

தங்கள் உபயத்தில் - கேள்விப்படாத ஊர் தரிசனம் ஆச்சி.
நன்றி

said...

அட லேபக்ஷி ....அருமையான இடம் மா அரை நாள் வேணும் முழுசா பார்க்க நாங்க 3 மணி நேரம் பார்த்த்தோம்.

முடிக்கப்படாத கல்யாண மண்டபத்தில் தூணில் உள்ள சிற்பங்கள் எல்லாம் அருமையாக இருக்கும். சார் நிக்கிற இடம் அந்த தூண்கள் எல்லாம் புடவை டிசைன்.

மேலே கருடன் இருக்கும் இடம் சென்று பார்த்தால் அத்தனை அழகான காட்சிகள்...

said...

லே பக்ஷி என் லிஸ்டில் ரொம்ப நாளாக இருக்கு அதுவும் இங்க வந்த பிறகு.

நம்ம அனுபிரேம் கூட படங்களா வீடியோக்களா போட்டு உசுப்பேத்தினாங்க...தொங்கும் தூண்கள் முடிக்கப்படாத மண்டம்பம் தூண்கள்னு ...அவங்ககிட்டயும் பேசி அங்க எவ்வளவு நேரம் ஆகும்னு ஒரே நாள்ல கவர் பண்ண முடியுமான்னும் கேட்டு.....ஆனாலும் இன்னும் வாய்க்கலை. போறது எப்படின்னு எல்லாம் போட்டு வைச்சாலும்...

குறிப்பா சிற்பங்கள் பார்க்கணும்னு....

படங்கள் எல்லாம் செமையா இருக்கு துளசிக்கா..

கீதா

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

வருகைக்கும் கருத்துக்கும் மிகவும் நன்றி !

said...

வாங்க ஸ்ரீராம்,

உள்ளே இருப்பவை மட்டும்தான். வெளிப்ரகாரத்தில் இல்லை.

said...

வாங்க விஸ்வநாத்,

என்ன ..... கேள்விப்படாத ஊரா !!!!

அந்த அதிசயத்தூணுக்காவே பிரபலமானது இல்லையோ !!!

said...

வாங்க அனுப்ரேம்,

வெளியில் சமதளம் இல்லாததால் நடப்பதே பிரச்சனை எனக்கு. அதுலே கருடன் இருக்கும் இடத்துக்கு ஏற முடியாதேப்பா...ப்ச்........... அதுக்குத்தான் உடலில் தெம்பு இருக்கும்போதே பயணங்களை ஆரம்பிச்சுறணும் !

said...

வாங்க கீதா,

பெங்களூரில் இருந்து பக்கம்தான். அரை நாளில் போய் வரலாம். ஆனால் எதுக்கும் நேரம் காலம் வரணுமேப்பா..... சீக்கிரம் அமைய வாழ்த்துகின்றேன் !

said...

அற்புதமான இடம் படங்களே சொல்கிறது பல கதைகள்.