Monday, February 06, 2023

64 யோகினிகளும் ஒற்றை உருவில் ! (கோவிட்டுக்குபின் பயணம் ) பகுதி 10

நாட்கோட் என்றதும்   அதன்  சந்து முனையில் இறக்கிவிட்டார் ஆட்டோக்காரர். நம்மைப்பார்த்த செக்யூரிட்டி, நாம் லிஃப்டுக்குள் நுழைஞ்சதும்  ரெண்டாம் மாடின்னார். ஒவ்வொரு தளத்திலும் ஒரு வெராந்தா காலணிகளுக்காகவே ஒதுக்கி அதுக்கொரு ஸ்டேண்டும் போட்டுருக்காங்கதான். ஆனால் அடங்கணுமே...........
ஹாலுக்குள்ளே நுழைஞ்சால்....  நம்ம மக்கள்  தரையில் அங்கங்கே  நின்றும், இருந்துமா  சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க.  அந்தாண்டைக் கதவுப்பக்கம்  ஒரு ஏழெட்டுப்பேர் நின்னு பரிமாறும் வேலையில் !  நம்ம ராஜேந்திரனும் அங்கே இருந்தார்.  நம்மைப் பார்த்ததும் ஒரு புன்முறுவலுடன் தலையசைப்பு.  கூடத்தின் ஒரு பக்கம் ரெண்டுமூணு மேஜை போட்டு வச்சுருக்காங்க.   அங்கே நமக்கிடம் கிடைச்சது. 
தட்டுகளில் ஒரு பேப்பர் மாதிரி ஒன்னு போட்டு அடுக்கி வச்சுருக்காங்க. அதை எடுத்துக்கிட்டுப்போய் சாப்பாடு வாங்கிக்கணும். அங்கே ஏற்கெனவே வரிசையில் நின்னுருந்தவங்க செய்வதைக் காப்பி அடிச்சால் ஆச்சு. Food grade paper  ஆகத்தான் இருக்கணும்.   சக்கரைப்பொங்கல்,  சாதம், சாம்பார், கூட்டு, கறி, வறுவல், அப்பளம், பாயஸம்!   எல்லாம் அருமை !   சாப்பாட்டுக்கு டோக்கன் வாங்கிக்கலையேன்னு  விசாரிச்சால்  அன்னதானமாம்.  பொதுவா திங்கக்கிழமைகளிலும் அமாவாசை தினங்களில் மட்டும் நடக்கும் அன்னதானம், இப்போ தீபாவளிப் பண்டிகை சமயம் என்பதால்  தினமும்தானாம். 
சாப்பிட்டு முடிச்சதும் அந்தாண்டை இருக்கும் அறைக்கு நம்ம தட்டுகளைக் கொண்டுபோய், அந்தப் பேப்பரை எடுத்துக் குப்பைத்தொட்டியில் போட்டுட்டு, அந்தத் தட்டை மட்டும்  அங்கிருக்கும் தட்டு வரிசைகளில் வச்சுடணும்.  ஆளுயரத்துக்கு அடுக்கி இருக்கும் தட்டுகளை இன்னொரு மூலையில் வச்சுத் தேய்ச்சு அலம்பிக்கிட்டு இருக்காங்க சில பணியாளர்கள்.   அந்தப் பேப்பர் போட்டதால் தட்டு அழுக்காகாமல் இருக்கு. ஓ.... அதுதான் சூட்சுமமா !!!!

வயிறாற உணவளித்த அன்பை நினைச்சு, திரும்பக் கீழ்தளத்துலே இருக்கும்  கோவிலுக்குப்போய் நகரேஸ்வரியைக் கும்பிட்டுக்கிட்டு அங்கிருந்து கிளம்பினோம். இப்ப எனக்கு ஒரு மாதிரி வழி தெரிஞ்சு போச்சு.  நாட்கோட்  அருகில் இருக்கும் புடவைக்கடை (அன்னபூரணா சேலைகள் பேக்டரி )சந்தில் போனால்  மெயின் ரோடு. அங்கிருந்து இடப்பக்கம் கொஞ்சதூரம் போனால் நம்ம சந்தின் நுழைவாசல்!  பொடிநடையாகப் போனால் ஆச்சு.  நம்ம சீதாவுக்கு இறங்கும் இடம்வரை பிரச்சனை இல்லை.  அப்புறம் அந்தப் படிகள்தான்.......... ஐயோ.....  
இன்னும் கொஞ்சம் ஆராய்ஞ்சு பார்த்து, குறுக்குவழி இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டேன். மெயின் ரோடு வரை வராமல் நாட் கோட்டுக்கு இடதுபக்கச் சந்திலேயே  போனால் குறுக்கும் மறுக்குமா இருக்கும் சந்துகளில் திரும்பி (அதான் வாயிலே இருக்கே வழி !) நடந்தால்  பத்து நிமிட்டுக்குள்  சீதா போயிருக்கலாம். கூகுள்காரன் ஏழுன்னு சொல்றான் !

இருபது நிமிட்டில் அறைக்குப் போனதும்  கங்கையைப் பார்த்துட்டு, நம்ம பையில் இருந்த மாலைகளைக் களையும் முன் ஒரு ஃபோட்டோஷூட் பண்ணியாச். இப்ப மணி மூணுதான்.  கொஞ்சநேர ஓய்வுக்குப்பின், வெய்யில் தாழ்ந்ததும்  வெளியே போகலாமுன்னு நம்மவர் ஏஸி போட்டுக்கிட்டு ஒரு தூக்கம் போட்டார்.   எனக்குத்தான்  கங்கையும்  செல்ஃபோனும்  இருக்கே ! நோ ஒர்ரீஸ்.

காலையில்  எடுத்த படங்களைப் பார்த்துக்கிட்டு இருந்தேன்.  தஸ் அஸ்வமேதகாட் நம்ம காட்டுக்கு இடப்புறம் இருக்குன்னா........ அஸ்ஸி வரை இருக்கும்  மற்றவை  வலப்புறம் வரணும் இல்லையோ ! 

நாலே முக்காலுக்கு ரெடியாகிக் கீழே வந்தோம். வரவேற்பில் இருந்த மேனேஜர் பாண்டே,  விஷ்வநாத் மந்திர் போய் வந்தாச்சான்னார். ஆச்சு. இப்போ கேதார் காட் போக என்ன வழின்னு  விசாரிச்சோம்.  உயரப்படிக்கட்டுகளில்  ஏறிப்போனதும் , மேலே சந்தில் போகும் போது   இடதுபக்கம்  வரும் ரெண்டாம்  சந்தில் திரும்பணும் என்றார்.  நான் யூகிச்சது சரி !  அந்த மேலே ஏறிப்போவதுதான்  நினைச்சாலே பகீர்னு இருக்கு.
முக்கித்தக்கி மேலே ஏறிப்போகணும். படிகள் முடியும் இடத்தில் புத்தா கெஸ்ட் ஹௌஸ் இருக்கு.  பேசாம அங்கே ரூம் எடுத்திருக்கலாமோ ?   சந்தில் நுழைஞ்ச கொஞ்சதூரத்தில் காலையில் பார்த்த கோவில்! சௌஸாத்தி கோவில். 
நம்ம சீதா இருக்கும் Gகாட் சௌஸாத்தி Gகாட்தான்.  64 வது படித்துறை.  அதுதான் சௌஸாத்தி  கோவில்னு இருக்குமோ ?  ஊஹூம்..... இல்லை.   மஹா காளியின்   சக்தி  64  யோகினிகளா உருவாகி இருக்கு.  அந்த  64 யோகினிகளையும் ஒரே சிலையில் ஆவாஹனம் செய்த  மஹிஷாசுரமர்த்தினி உருவம்தான்  இங்கே மூலவர் !  அதனால்தான்  இந்த படித்துறைக்கே  அறுபத்திநாலாம் படித்துறை (Chausathi Ghat) னு பெயர்.  

நான் முதலில் ஹொட்டேல் கார்டு பார்த்ததும் இது Gகாட் நம்பர் 64 ன்னு நினைச்சேன். எந்த ஊரில்  தங்கினாலும்  முதலில் ஹொட்டேல் கார்டு ஒன்னு எடுத்துப் பையில் வச்சுக்கணும்.  அவசர ஆபத்துக்கு வேண்டி இருக்கும். இது ஒரு முக்கியப் பயணக்குறிப்பு !

காசியில் இப்போ இருக்கும்  Gகாட்களே மொத்தம் 88 னு  கணக்கு என்றதால் நம்ம 64 எங்கியோ கடைசியில் வருமுன்னு பார்த்தால் , இது Gகாட் நம்பர் இல்லைன்னு இப்பப் புரிஞ்சது.

(கங்கைன்னாலே முக்கியமாச் சொல்ல வேண்டியது  (Ghats ) படித்துறைகள்தான். மக்கள்ஸ் நடமாட்டமும் படித்துறைகளில் அதிகம்தான். ஒன்னையொன்னு தொட்டபடி கரை முழுசும்  படித்துறைகளே!  இந்த வருணா, அஸி நதிகளுக்கிடையில்தான் இந்தப் படித்துறைகள் இருக்கின்றன.  நூத்தியெட்டு, நூறு இப்படி பல எண்ணிக்கைகள் சொன்னாலும் இப்போதைக்குக் கணக்கில் இருப்பவை  ஒரு எண்பத்திநாலு தான்.  இப்பதான்  பண்டிட் மதன் மோஹன் மாளவியா படித்துறைன்னு   புதுசா ஒன்னைக்  கட்டிக்கிட்டு இருக்காங்க. Ghat என்பது கூட ஸ்நானக் கட்டம் என்ற பொருளில்தான் போல!)  இது நம்ம போன பயணத்தில் எழுதியது .


காசியில் இருக்கும் கோவில்களில் மூத்தது இதுன்னார் அங்கே இருந்த பண்டிட்.  காசியில் எல்லாமே ப்ராச்சீன்தான்!!!!

நம்ம ஒடிஸ்ஸா பயணத்தில்  ஹிராப்பூர்  64 யோகினி கோவில் பார்த்த நினைவு வருதோ?  அப்பப் பார்க்கலைன்னா இப்போ பார்க்கலாம் இந்தச் சுட்டியில் !

http://thulasidhalam.blogspot.com/2019/09/146.html

கம்பிகேட்டுக்குள் நுழைஞ்சால்  சின்னதா திறந்தவெளி முற்றம், அதைச் சுத்தியோடும் சின்ன வெராந்தா. அங்கிருக்கும் சிங்கம்  வான்னு கூப்பிட்டமாதிரி இருந்தது.  முற்றத்தின் இடது பக்கமும் வலது பக்கமும் ரெண்டு தேவி சந்நிதிகள். வாசலுக்கு நேரெதிரா இருக்கும் வெராந்தாவில் பண்டிட் இருக்கை. பின்புறசுவரில் படங்கள். 

பண்டிட் கோவிலைப்பற்றி விளக்கிச் சொன்னார் கோபாலிடம். நான் ? அவரிடம்  அனுமதி கேட்டுக்கிட்டு படம் எடுப்பதில் பிஸி ஆகிட்டேன் :-)
இடப்பக்க சந்நிதியில் காலடியில் மஹிஷன் கிடக்க மஹாகாளி !   மஹிஷாசுரமர்த்தினி !

வலப்பக்கம் சந்நிதியிலும் காளிதான்.  64 யோகினிகளை உள்ளடக்கிய உருவத்தில் ! இங்கேயும் ஒரு அசுரவதம் செஞ்சுதான் இருக்காள் ! அதோ காலடியில் கீழே கிடக்கறானே.....

நவராத்ரி சமயங்களில் பெருமளவு கூட்டமா இருக்குமாம். தீபாவளிக்குச் சொல்லவே வேணாமாம். நாளைக்கு தீபாவளி வேலைகள் ஆரம்பிச்சுரும் என்றார்.  மறுநாள் அங்கே திறந்த முற்றத்தில் பெரிய  கேஸ் அடுப்புகளில் ப்ரமாண்டமான கடாயில் பூந்தி பொறிக்கும் வேலை நடக்குது. லட்டு செய்யறாங்க.  இதுதான் சீதாவுக்குப் போகும்வழி என்பதால் போகும்போதும் வரும்போதும் கண்ணில்படாமல் இருக்காது. 

இப்ப அந்த ரெண்டாவது சந்து தேடிப்போகணும் !

தொடரும்.......... :-)



8 comments:

said...

போவதற்கு முன்பு ஒரு முறை படித்து விட்டு போகணும், அவ்வளவு விவரம் இருக்கு.

said...

நீங்கள் சென்றது நம்ம தீபாவளி நேரம் ...நாங்க அதற்க்கு அடுத்து 2 வாரம் சென்று அங்கு போனோம், கார்த்திகை பவுணர்மி அப்போ அங்க தேவ் தீபாவளி (தேவர்களின் தீபாவளியாம்)
நாட்கோட் திங்கட்கிழமை அன்னதானம் எங்களுக்கும் கிடைத்தது. அன்னக்கி அவங்க தீபாவளினால பரிமாற பையன் கொஞ்சம் கோபமா இருந்தான் மத்த வேலையாள் எல்லாம் விடுமுறை போல , அப்புறம் என் கணவரும் அவருக்கு உதவியா கொஞ்ச நேரம் பரிமாறிட்டு வந்தார்.

அதுவரை நான் அங்க வந்த விருந்தாளிங்க கிட்ட கதை கேட்டுட்டு இருந்தேன்..




said...

தொடரட்டும், தொடர்ந்து வர்றோம்.

said...

வாங்க குமார்.

போய் வந்து நீங்களும் எழுதுங்க. ஒவ்வொருவர் அனுபவமும் ஒவ்வொரு வகை இல்லையோ !!!!

said...

வாங்க அனுப்ரேம்,

எல்லோரும் மனுசங்கதானேப்பா..... அவரவருக்கு அவரவர் கவலை. அதான் சிலசமயம் கோபமா வெளிவருது.

said...

வாங்க விஸ்வநாத்,

தொடர் வருகைக்கு நன்றி !

said...

உணவு பரிமாறும் தட்டு இங்கும் விருந்துகளில் தட்டுகளுக்கு லஞ்ச் சீற் போட்டு தருவார்கள் உணவு அதில் பரிமாறுவதால் சுலபமாக தட்டுக்களை அலம்ப முடியும் நல்ல முறைதான்.

மகிஷாசுரவர்த்தினி நன்றாக காட்சி தருகிறாள்.

said...

வாங்க மாதேவி,

இப்படி லஞ்ச் பேப்பர் போட்டுத்தருவதை முதல் முறையாக இங்கே பார்த்தேன்! வியந்தேன். சிங்கையில் ப்ரௌன் பேப்பரில் கோவில்களிலும் டேக் அவேக்களிலும் உணவு தருகிறார்கள். அந்தப் பேப்பரின் உட்பக்கம் மெழுகு தடவியதுபோல் இருக்கும். பலவருஷங்களா சிங்கை போவதும் வருவதுமாக இருப்பதால் அது பழகிப்போச்சு !