Monday, February 13, 2023

பார்த்த ஞாபகம் இல்லையே......... (கோவிட்டுக்குபின் பயணம் ) பகுதி 13

மணி மந்திர் தரிசனம் முடிச்சு, வண்டியில் ஏறி  சரியா உக்காரக்கூட இல்லை....  ஆட்டோ நின்னுருச்சு.  ஒரு ரெண்டு நிமிட் இருக்குமா ?  அடுத்த கோவில் வாசலில் நிக்கிறோம். 
சட்னு பார்க்கும்போது பார்த்த மாதிரியும் இருக்கு, பார்க்காத மாதிரியும் இருக்கு !  ஏன் அப்படின்னு......... ஆஹா.... போனமுறை பார்த்தப்ப  'ஃபொட்டாக்ராஃபி ஸ்ட்ரிக்ட்லி ப்ரொஹிபிட்டட்' ன்னு இருந்ததால் நோ படம்.  அந்த    சஞ்சய் ராமசாமிக்கு எழுதி வச்சுக்கிட்டால் ஞாபகம் வர்றாப்பல.....  எனக்குப் படம் பார்த்தால்தான் சரசரன்னு சினிமா மாதிரி எல்லாம் நினைவுக்கு வரும்.  இதுலே கூட என்ன சினிமா வேண்டிக்கிடக்கு  பாருங்க. தமிழனையும் சினிமாவையும் பிரிக்கவே முடியாது.......ப்ச்.
மேலே.... போன முறை எடுத்த படம்

அதுவே கூடக் கொரியாவிலிருந்து, ஹாலிவுட்க்குப்போய், ஓசைப்படாமத் தமிழுக்கு வந்து, கடைசியில் ஹிந்திக்கும் போயிருச்சுல்லே ?  இந்தியாவுக்குள் வந்துட்டா, ஒரிஜினலே நாங்கதான்னு துண்டோ, துப்பட்டாவோ போட்டுத் தாண்டிருவாங்க. இங்கத்து டிஸைன் அப்படி!  வெளிநாட்டுப் படங்கள் எல்லாம் இப்ப மாதிரி  வலையில் வராத காலம் இல்லையோ ! யார் கண்டுபிடிக்கப்போறாங்கன்ற மெத்தனம்தான். இதில் அதிகப்புகழ் பெற்றவர்களுக்கும் கூட  இப்படித்தான்.... ப்ச்... நன்றின்னு ஒரு சொல் ? மூச் !  பேசப்டாது.
கோவில் நுழைவு வாசல்  வேறமாதிரிதான் இருக்கு. ஆனால் கோபுரம் அதே நகரா ஸ்டைல் !  வாசலுக்கு ரெண்டுபக்கமும் பூஜைப்பொருட்கள் கடைகள்.  வழக்கமில்லாத வழக்கமா  ஒரு பூத்தட்டு வாங்கினேன்.   சிலசமயம் மனசுலே தோணிப்போகும்....   'சாமிக்கு எதாவது வாங்கிக்கிட்டு போயேன்'னு !   செம்பருத்திப்பூக்களால் ஆன மாலை ! 

துர்கா மாதா கோவில். சக்திபீடம் ! உள்ளே நுழைஞ்சதும்  ரொம்பவே அகலமான வெராந்தா நாலுபக்கமும் இருக்க நடுவிலே முற்றத்திலே கருவறை ! மூணு படி கீழே இறங்கிப்போகணும்.  வராந்தாவுலே ஒருபக்கம்  ஹோமகுண்டம். பூஜை நடந்து முடிஞ்சுருக்குன்னு நினைக்கிறேன். புகை இன்னும் வந்துக்கிட்டுதான் இருக்கு. இந்தாண்டை வெராந்தாவுலே ஏதோ பந்திக்கு உக்கார்ந்துருக்கறது போல மக்கள். வெராந்தா  கடைசியில் ஒரு சந்நிதி.


முற்றத்துலே இருக்கும் கருவறையில் துர்கை இருக்காள். இங்கேயும் மூணுபடி ஏறி முன் மண்டபம் கடைசியில் இருக்கும்  இடுப்புயரக் கம்பித்தடுப்பருகில் நின்னு   கருவறையை எட்டிப்பார்க்கணும். செந்தூர வண்ணத்துலேயே கோவிலும்  மூலவரும். மூலவருக்குச் சாத்தி இருக்கும் மாலைக்குவியலும் சிகப்பு நிறமே!  தங்கத்துலே முகம் செஞ்சு மூலவருக்குச் சாத்தியிருக்காங்க.
மேலே  2 படங்கள்: கூகுள் ஆண்டவர் அருளியது. நன்றி !
அம்மன்  ஸ்வயம்பு !  எப்படி இங்கே வந்தாளாம் ? 'கதை' கேட்க ரெடியா நீங்க ?


காசியை, மன்னர் நரேஷ் ஆட்சி செஞ்சுக்கிட்டு இருக்கார். அவருக்கு ஒரு  மகள்.  பெயர் சசிகலா ! செல்லமா வளர்க்கும்  மகளுக்குக் கல்யாணம் செய்யலாமுன்னு ஸ்வயம்வரத்திற்கு ஏற்பாடு செஞ்சு, அம்பத்தியாறு நாட்டு மன்னர்களுக்கும் ஓலை அனுப்பறார்.  அந்தக் காலத்தில் இப்படி ஓலை வந்தால் மன்னர்களும் இளவரசர்களும் கிளம்பி வர்றது வாடிக்கை.  ஏற்கெனவே கல்யாணம் ஆன  மன்னர்களும் வந்துருவாங்க. நம்மை ஒருத்தி வேணாமுன்னு சொல்லிருவாளா என்ற அதீத  தன்னம்பிக்கைதான் !  

இப்ப மாதிரி போக்குவரத்து இருக்கும் காலமா என்ன ? இந்தக் காசி யாத்திரைக்கே  ஊர்முழுசும் சேர்ந்து வழியனுப்பும் காலம்  அது. போனவுங்க திரும்பி வந்தால் ஆயுசு கெட்டின்னு நினைச்சுக்கணும்.  இப்பப் பாருங்க. ஒரே நாளில்  சாயந்திரம் அஞ்சரை மணி ஃப்ளைட் பிடிச்சமா,   அன்னிக்கு ராத்திரியே  கங்கைக்கரை சீதாவுக்கு வந்தமான்னு  இருக்கொம்ல.

சசிகலா அப்பதான் தகப்பனுக்குத்  தான் மனசுலெ ஒரு இளவரசரை  வரிச்சுட்டேன்னு மெதுவாச் சொல்றாள்.  பெயர் சுதர்ஸன். காட்டு இளவரசனாம்.  செல்ல மகளுடைய ஆசையை நிறைவேத்தியாகணுமில்ல ?  நல்லவேளை ...........    காடோ நாடோ.... ஏதோ ஒரு இளவரசன். ராயல் ஃபேமிலி ! 
மன்னர் நரேஷ்,  யோசிக்கிறார்.....  இதென்னடா வம்பாப்போச்சு..... ஸ்வயம்வர ஓலை அனுப்பியாச்சே...... அவுங்களும் கிளம்பி வந்துக்கிட்டு இருக்கறதா சேதியும் வந்துருக்கே.....

(பேசாம  சுதர்சனனையும்  ஸ்வயம்வரத்துக்கு வரச் சொல்லி இருக்கலாம் தானே ? கையில் மாலையோடு ஒவ்வொரு  எலிஜிபிள்  மாப்பிள்ளையையும் பார்த்தபடி வர்ற இளவரசி, தன் காதலனைப் பார்த்ததும் மாலையை  அவன்  கழுத்தில் போடமாட்டாளா என்ன ? )


மன்னர் என்ன செஞ்சார் ?   சசிகலாவுக்கும் சுதர்ஸனனுக்கும் ரகசியமாக் கல்யாணம் பண்ணி வச்சுட்டார்.  பொண்ணு கட்ட வந்தவங்களுக்கு விஷயம் தெரிஞ்சுபோய், போருக்கு ரெடியானாங்க.  மன்னர் நரேஷ் கொஞ்சம் பயந்துட்டார்.   அரசர்கள் என்ன தனியாவாக் கிளம்பி வருவாங்க ? கூடவே ஒரு படையும் வரும்தானே ?  அம்பத்தியாறு படைகளுடன் மோதணுமுன்னா பயம் வராதா என்ன ?

மருமகன் சுதர்ஸனிடம் ஆலோசனை கேட்கிறார். சுதர்ஸன் தேவி உபாசகன்.  கவலைப்படவேண்டாம்னு மாமனாரிடம் சொல்லிட்டு,  தேவியை வணங்கி  உதவி   செய்யணுமுன்னு வேண்டியதும்..... 'இதோ வந்தேன்'னு சிம்ஹவாஹனத்தில் தோன்றி, 'பகைவரை'  வென்று மன்னரையும் நாட்டையும் காப்பாற்றிக் கொடுத்தாள் !   

மன்னரும் மருமகனுமா அவள் தாள் பணிந்து வணங்கினதும்,  'வந்தது வந்தாச்சு. உனக்கு என்ன வரம் வேண்டுமென்று கேள்' னு கேட்க, மன்னரும்....  'இங்கே  எங்கள் நாட்டுலேயே இருந்து அனைவரையும்  காப்பாற்றி அருளணும்'ன்னு வேண்டியதும் அப்படியே ஆகட்டுமுன் னு இங்கேயே இருந்து எல்லோருக்கும் அருள் பாலிக்கிறாள்.

அப்படியே நம்ம வீட்டிலும்.....  என்ன ஒன்னு.... சிங்கத்துக்குப் பதிலா சிங்கம்புலி !

தேவி பாகவதம் 23 ஆம் அத்தியாயத்தில் இதைக் குறிப்பிட்டு இருக்காங்களாம். நான் துளியூண்டு  மஸாலா சேர்த்தேன். மன்னிச்சூ !   

இப்ப நாம் பார்க்கும் கோவில் 18 ஆம் நூற்றாண்டில்   வங்காள  ராணி, Rani Bhabani  of  Natore கட்டியது.  இப்ப  இந்தப்பகுதி பங்ளா தேஷில் இருக்கு !( அதானே அப்ப ஏது கிழக்குப் பாகிஸ்தானும், பங்ளா தேஷும் , இல்லையோ ! )

துர்கையின் நவ அவதாரங்களில் இந்தக் கோவிலில் இருப்பவள் கூஷ்மாண்டா. மற்ற அவதாரங்களின் கோவில்களும் காசி நகரைச் சுத்தியே அமைஞ்சுருக்கு !  பயங்கர செக்யூரிட்டிப்பா ! 

மூலவரைக் கும்பிட்டதும் சின்ன சரம் செம்பருத்திப்பூவும்,  கொஞ்சம் சக்கரை மிட்டாயும் ப்ரஸாதமாக் கிடைச்சது.
போனமுறை வந்தப்ப கோவில் முகப்பிலேயே  நோ ஃபொட்டாக்ராஃபின்னு  பெருசா எழுதி வச்சுருந்தாங்க. இப்ப  எல்லோர் கையிலும்   செல் வந்த பிறகு நிபந்தனை தளர்த்தப்பட்டுருக்கு போல !  மூலவர் தரிசனத்துக்குப் படியேறும் இடத்தில் மட்டும்தான் 'படமெடுக்கத் தடை'ன்னு சின்ன போர்டு. 

மற்ற இடங்களில் 'ஃபோட்டோ கீச்னா மனா ஹை' ன்னு இருந்ததில் மனாவை மட்டும்  கீய்ச்சுட்டாங்க :-)  நமக்கும் நல்லதாப் போச்சு !  எல்லாம் 'அவள்' அருள் 



கருவறையின்  கோஷ்டத்தில் மஹா காளியின் சந்நிதி !


கணேசர், மஹாவிஷ்ணு, ஹனுமன் சந்நிதிகள் ஒரு திண்ணை வெராண்டாவின் கடைசியில் !
வளாகத்தில் தனிச்சந்நிதி ஜ்வரஹரேஸ்வரி (பார்வதி)க்கு !  இங்கே நல்ல கூட்டம். உடம்பு படுத்தாமல் இருந்தால்தான்  மனம் லயித்து சாமி கும்பிடவும் , யாத்திரை போகவும் முடியும் இல்லையா ? 

கோவிலைத் தொட்டடுத்து துர்கா குளம்  (துர்கா குண்ட்) இருக்கு !  போனமுறையும் சரி, இந்த முறையும் சரி நாம் அந்தப் பக்கம் போகவே இல்லை...ப்ச்..... இந்தக் கோவில் இருக்கும் பேட்டைக்கே துர்காகுண்ட்  என்றுதான் பெயர்.   

காசியில் சந்துகளுக்குக்கூட... ரெண்டு மூணு சந்துகளே  ஒரு பேட்டை என்ற அளவில் தனித்தனிப் பெயர்களுடன் இருக்கு!!! 

அருமையான தரிசனம் கிடைச்ச திருப்தியுடன் (கூடவே படம் எடுக்க முடிஞ்சதே!) வெளியே வந்து ஆட்டோவில் ஏறினோம்.


PIN குறிப்பு :  Unable to change Text Colour. Don't know why :-(

தொடரும்......... :-)





7 comments:

said...

அம்மன் கோவில் கொண்ட கதை அறிந்தோம்.
கருவறை துர்க்கை அழகாக இருக்கிறாள்.

said...

அருமை நன்றி

said...

அப்பாடி.   நான் பார்த்த ஒரு இடம்...  அந்த நிறம் அடித்து நிறுத்தி மனசில் நின்று விட்டது.

said...

வாங்க மாதேவி,

அவளுக்கென்ன .... அழகிய முகம்.......

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க ஸ்ரீராம்,

ஆஹா.... ஆஹா....

said...

துர்கா மாதா கோவில். சக்திபீடம் !..ஆஹா

கவலைப்படவேண்டாம்னு மாமனாரிடம் சொல்லிட்டு, தேவியை வணங்கி உதவி செய்யணுமுன்னு வேண்டியதும்..... 'இதோ வந்தேன்'னு சிம்ஹவாஹனத்தில் தோன்றி, 'பகைவரை' வென்று மன்னரையும் நாட்டையும் காப்பாற்றிக் கொடுத்தாள் ! ...அடாடா அருமை