வழக்கம்போல் கேசவா நாராயணா கோவிந்தா சொல்லிக்கிட்டே முக்கித்தக்கி 'முழம்படி' ஏறி மேலே போயிட்டேன். நேராச் செங்கலைப் பார்த்துப்போகாம கொஞ்சதூரத்தில் வலப்பக்கம் திரும்பும் சந்தில் நுழைஞ்சேன். 'நம்மவர்' கொஞ்சம் பதறிப்போய்' ஏம்மா அங்கே போறே?' ன்னதும் இந்த வழியில் போய்ப் பார்க்கலாம். தஸ் அஸ்வமேத Gகாட் வரும்னு (அடிச்சுச்) சொன்னேன். குண்டு தைரியம்தான் :-)
இந்தச் சந்துக்கு பங்கால் டோலா ரோட் (! )னு பெயர். மற்ற சந்துகளைவிட ஒரு அடி அகலம் கூடுதலோ ! வழக்கமான மாடுகள், நாய்களுக்குக் குறைவேயில்லை. ரோடின் (! )ரெண்டு பக்கமும் சுவாரஸ்யமான கடைகள் வேற! எதா இருந்தாலும் வரும்போது பார்த்துக்கலாமுன்னு போய்க்கிட்டே இருக்கேன், நம்மவரோடு. அங்கங்கே அடையாளம் பார்த்து வச்சுக்க மறக்கலை, கேட்டோ.....:-)
சந்து முடிஞ்ச இடம் ஒரு சுவர் ! வலப்பக்கம் ரோடு திரும்புது :-) அதுலே பத்தெட்டுப் போனால்.... இடப்பக்கம் இன்னொரு ரோடு (! ) பிரியுது. நேராப் போகணுமா இல்லை இடப்பக்கம் போகணுமா ? வாயிலே இல்லையா வழி ? இடப்பக்கமாம். இடப்பக்கச் சுவரின் ஒரு அழுக்கு மூலையில் தஸ் அஸ்வமேத Gகாட்னு தேவநாகிரி எழுத்தில் எழுதி ஒரு அம்பு போட்டு வச்சுருக்கு. நேராகப்போ ! போனால் ஆச்சு. ரெண்டு மூணு வளைவுகளுக்குப்பின் கொஞ்சம் பெரிய இடத்தில் தரையில் கூடைகூடையாய் காய்கறிகள். அதுக்கு நேரா நிஜமான ரோடு ! சந்து ரோடையொட்டி ஒரு பெரிய கட்டடம். பேங்க் ஆஃப் பரோடா...... ஆஹா.... இது லேண்ட் மார்க் !
இந்த தஸ் அஸ்வமேத Gகாட் ரோடு நல்ல அகலம் ! அதுக்கேத்தாப்போல கூட்டமும் அதிகம். கலகலன்னு இருக்கு ! வலப்பக்கம் திரும்பினால் கங்கைக்கரை. இடப்பக்கம் திரும்பினால் கொஞ்ச தூரத்தில் நேத்து பார்த்த நந்தித்தூண் நாற்சந்தி ! எங்கே பார்த்தாலும் டீக்கடைகள் ! கண்ணைக் கட்டி இழுத்த ஒரு கடையில் ரெண்டு டீ சொன்னோம்.
மண்குவளையைக் காட்டி 'இதுலேயா?' ன்னார் கடைக்காரர்! ரொம்ப சந்தோஷமா ஆமாம்னு தலையாட்டினேன். பெருசா சின்னதா ? சின்னது ! சாய் தயாராகும்வரை முன்னால் போட்டுருந்த இருக்கைகளில் உக்கார்ந்து வேடிக்கை பார்த்துக்கிட்டு இருந்தோம். நேரம் நிமிஷமாப் போயிருது ! நல்ல நடுரோடுலே உக்கார்ந்துருக்கறது கூட நல்லாத்தான் இருக்கோ ! . குல்லட் லே சூப்பர் சாய் !
பக்கத்துக் கடை தோஸா கார்னர். யாரும் ஒன்னும் வாங்கிக்காமக் கண்ணை நட்டு ஒரே பக்கமா பார்த்துக்கிட்டு இருக்காங்களே ! ஹாஹா.... க்ரிக்கெட் மேட்ச், கடையில் இருக்கும் சின்ன டிவியில் !
இடமா வலமான்னு நின்னு யோசிச்சதில் நமக்கிடம் ஓக்கேன்னு தஸ் அஸ்வமேதா Gகாட் நோக்கி நடந்தோம். யம்மா.... என்ன கூட்டம். கங்கை ஆரத்தி இங்கேதான் நடக்கும். நாமும் போனமுறை இங்கேதான் பார்த்தோம். கொஞ்சநாட்களா... கோவில் புதுப்பிச்சதில் இருந்து இந்தாண்டை கொஞ்சம் தள்ளி லலிதா காட்லே நடக்குதுன்னு கேள்வி. இப்ப ஏன் இங்கே? விசாரிச்சதில் கங்கையில் வெள்ளம் வந்துக்கிட்டு இருப்பதால் லலிதா காட் ஆரத்தியை இப்போதைக்கு நிறுத்தியிருக்காங்களாம். அட! பக்கத்துப்படித்துறையில் வரும் வெள்ளம், இந்தப் படித்துறைக்கு வராதா என்ன ? என்னவோ கணக்கிருக்கோ ? ஆனால் தஸ் அஸ்வமேத காட் ஆரத்தி படிக்கட்டாண்டை நடப்பதில்லை. கொஞ்சம் மேலே தரைப்பகுதியில்தானே நடக்குது, இல்லையோ ? என் கேள்விக்கு என்னிடமே பதில் :-)
படகுகளில் மக்கள் உக்கார்ந்து ஆரத்திக்காக வெயிட்டிங். இங்கே தரைப்பகுதியில் ரொம்பப் பக்கத்துலே உக்கார்ந்து ஆரத்தி பார்க்க ஒரு கட்டணம் உண்டு. பொதுவா ஆரத்தி ஸ்பான்சார் செய்யறவங்க முன் வரிசையில் உக்காருவாங்க. படகுலே இருந்து ஃப்ரீயாப் பார்க்கலாம். உயரமான இடத்தில் ஆரத்தி என்பதால் நல்லாவே தெரியும் ! அக்கம்பக்கத்துக் கட்டடங்களின் மொட்டை மாடி (! )யிலும் கூட்டம் இடம் தேடிப்போகுது ! இன்னும் இருட்டலை. கொஞ்ச நேரம் ஆகும்.
நாம் ச்சும்மா நிக்கவேணாமேன்னு திரும்பி இதே ரோடில் நடந்து போனோம்.நல்ல அகலமான ரோடு. ஒரு இடத்தில் சின்னதா ஒரு மண்டபத்தை நட்டநடுவில் கட்டிவிட்டுருக்காங்க. அதுக்கு ரெண்டு பக்கமும் சனத்தின் போக்குவரத்து !
கடைகளான கடைகள் இந்த ரோடில். கடைகளின் பெயர்ப்பலகைகள் எல்லாம் ஒரே மாதிரி, மெரூன் கலரில் வெள்ளை எழுத்த்தில் ! கொஞ்ச தூரத்தில் எதிர்சாரியில் ஆதிசங்கரர் வாசல் தெரிஞ்சது. போனமுறை கோவிலைத்தேடி இங்கே வந்தப்பதான் தீபக் பாண்டே நம்மை பிடிச்சுக்கிட்டார். அப்பவும் இந்த வாசலுக்குள் போகாமல் பக்கத்துலே இருக்கும் சந்து வழியாகத்தான் கோவிலுக்குப் போயிருந்தோம்.
இதுதான் முந்தி இருந்த ஒரே வாசல். இப்ப இது கேட் நம்பர் ஒன்னு. அதான் இப்ப நாலு கேட் வச்சுட்டாங்களே! எனக்கு ரெண்டாவது கேட் போகணும். காஷி விஸ்வநாத் காரிடோர் அங்கேதான்.
இந்த வாசலுக்குள் போகவிடாமல் குறுக்கே மூங்கில் கட்டைகளை வச்சுட்டு நாலைஞ்சு போலிஸ் நிக்குது. அவராண்டை போய் உள்ளே போகலாமான்னு கேட்டால் இப்ப இல்லையாம். இன்னிக்கு ரொம்பக்கூட்டம் ! ஏற்கெனவே உள்ளே ஜனநெருக்கம் அதிகம். தீபாவளி வருதே ! பாரத் மாதா பார்க்கணும்னு சொன்னதும் இடப்பக்கமே கொஞ்ச தூரம் போனதும் வரும் சந்துக்குள் போனால் கேட் ரெண்டு வருமாம். அதன்வழியா உள்ளே போகலாமாம்னு சொல்லி, கொஞ்சம் தேனை எடுத்து என் காதுலே வார்த்தார் !
கெமெரா கூட அலௌடு ! 'யப்பா.... போலிஸ், நல்லா இருப்பா'ன்னு மனசுக்குள் வாழ்த்திட்டு, சந்து அடையாளம் எதுன்னு விசாரிச்சேன். ஒரு போலிஸ் சௌக்கி இருக்கும். அதுக்கு அந்தாண்டைன்னார் !
திரும்பக் கங்கையை நோக்கிப் போறோம். தீபாவளி பட்டாஸ்கள் தலைக்கு மேலே படபடன்னு வெடிக்குது. ஊர்முழுக்க அங்கே இங்கேன்னு டப் டுப்புன்னு சத்தம் ! தஸ் அஸ்வமேத Gகாட் வரை போக வேணாம். நடுரோடு மண்டபத்தாண்டை ஒரு போலிஸ் சௌக்கி. ப்ளாட்ஃபாரத்துலே டென்ட் மாதிரி போட்டு உக்கார்ந்துருக்காங்க. அங்கே விசாரிச்சால் 'ஒரு பத்தடியில் வைபவ்னு ஒரு கடை இருக்கு. அதுக்குப் பக்கத்துலே'ன்னார்.
சந்தைக் கண்டுபிடிச்சாச். உள்ளே நுழைஞ்சு சரசரன்னு போறோம். வழக்கம்போல நெருக்கமாக் கடைகள். கிளைபிரியும் சந்துகளின் சுவரில் தகவல்கள். வலப்பக்கம் காசி விசாலாக்ஷி கோவில். ஓ...வரும்போது போகலாம். இடப்பக்கம் திரும்பிப்போனால்... இன்னொரு மூலையில் அம்புக்குறி போட்டு, வராஹி மந்திர். ஹா... இங்கியா இருக்கு ! மூளையில் முடிச்சு. 'கேட் 2, கேட் 2' ன்னு விசாரிச்சு ஒருவழியாப் போய்ச் சேர்ந்தாச். அங்கே இருந்தவர்களிடம்.... பாரத்மாதா..... இருட்டுச் சந்துக்குள் கை காமிச்சாங்க. நாம் பாட்டுக்கு விறுவிறுன்னு போறோம். ஒரு இடத்தில் மொட்டைமாடிபோல் இருக்கு. அங்கே ரெண்டு போலிஸ். அவுங்க கைகாட்டுன இடத்துக்குள் போனால்............ ஹா............ விஸ்தாரமான திறந்த வெளி !
தொடரும்............ :-)

7 comments:
அந்தந்த ஊரிலேயே இரண்டு மூன்று நாட்கள் தங்கி இப்படி ஊர் முழுவதும் சுற்றினால் நன்றாய்தான் இருக்கும். எங்கே? டிராவல் ஏஜெண்டைப் பிடித்துக் கொண்டு போகிறோம். அவர் ஆகட்டும் இடங்களை அவசரஅவசரமாக பார்த்து விட்டு ஓடி வந்து விடுகிறோம்...
தொடரட்டும், ஆர்வமாய்க் காத்திருக்கோம்
சந்துபோய் ரோட்டு வந்து ஒரு மாதிரி கங்கை வந்துவிட்டாள். அப்புறம் கேற் இரண்டு உங்கள் துணிச்சலான நடையுடன் நாமும் தொடர்கிறோம்.
விஸ்தாரமான திறந்திருக்கும் வெளிக்கு நாமும் வந்துவிட்டோம்.
வாங்க ஸ்ரீராம்,
நம்ம 'ட்ராவல் ஆர்கனைஸர்' இப்படித்தான் அவருடைய ஆஃபீஸ் டூர் போல ஒரு ஊரில் ஒருநாள்னு போட்டுக்கிட்டு இருந்தார். கடும் 'பேச்சுவார்த்தை'க்குப்பின் இப்ப ரெண்டு, மூணுன்னு ஆகி இருக்கு.
நான் ஒரு வாரமுன்னு ஆரம்பிச்சுருவேன்.... நாலைஞ்சு கிடைக்கும். இனி ஒரு மாசமுன்னு ஆரம்பிக்கணும் :-)
வாங்க விஸ்வநாத்,
இன்றைக்குப் பதிவு போட்டாச்.
வாங்க மாதேவி,
உள்ளே அட்டகாசமா இருக்குமே !
நாங்க போனப்ப ஆதிசங்கரர் வாசல் பல வண்ணத்தில் மின்னியது மா..
Post a Comment