Friday, February 24, 2023

ஹைய்யோ !!!!! கோ(விட்டுக்குபின் பயணம் ) பகுதி 18

அடடா......    நான்  தப்பு  பண்ணிட்டேன்..... பகல் வெளிச்சத்தில் வந்து அனுபவிக்க வேண்டிய இடம் இது.  இப்ப மணி  ஆறு. நல்லா இருட்டிப்போச்சு....   
இருட்டுக்குள் நுழைஞ்ச நாங்கள்  அந்தாண்டை போனால்.....  கண் விரியும் அளவுக்குப் பெரிய இடமா இருக்கு.  இங்கே அமைதியான சூழலுக்கான வெளிச்சம் வேண்டி  விளக்குகள் பொருத்தியிருந்தாலும்...  பகலில் இன்னும் வேறுவிதமாத் தெரியும்தானே ! 
இன்னும் கொஞ்சம் யோசிச்சால்....  படங்கள் பளிச்னு வராது என்ற மனக்குமுறல்தான் போல. பகல் நேரத்தில்  பயங்கரச் சூடா இருக்குமே....  என்னதான் காலணிகளுக்குத் தடை இல்லைன்னாலுமே.....  போகட்டும்... இவ்வளவாவது பார்த்து அனுபவிக்கக் கிடைச்சதே....  ஏதோ முன் ஜன்மத்தில் செஞ்ச புண்ணியமாகத்தான் இருக்கவேணும் !
நமக்கிடது பக்கம் காசி விஸ்வநாதர் கோவில் கோபுரம் மின்னுது .  அங்கே போக ஒரு அலங்கார வாசல் வச்சுருக்காங்க.  ஆனால்  காலணி, கைப்பை, கேமெரா, செல்ஃபோன் இப்படி ஏதும் கொண்டு போக முடியாதே...  
வலது பக்கம் பரந்து விரிஞ்சு போகும் இடத்தின் கடைசியில் இன்னொரு பெரிய அலங்கார வாசல் ! அழகோ அழகு !  அதைக் கடந்து அந்தாண்டை போனால்   படிகள் வரிசை கீழே ஓடும் கங்கை வரை போகுது !  லலிதா காட்.  கிட்டத்தட்ட  நாற்பது படிகள்!
நானூறு மீட்டர்  நீளமும் எழுபத்தியஞ்சு மீட்டர் அகலமாகவும் இருக்கும் இந்த இடம்தான் இப்போ புதுசாகக் கட்டியிருக்கும் காரிடோர்.  கோவிலைக் கண்ணுக்குத் தெரியவிடாமல் மறைச்சுக்கிடந்த  குடியிருப்புகளையெல்லாம் அகற்றியிருக்காங்க.  கிட்டத்தட்ட முன்னூறு குடியிருப்புகள் இந்த இடத்தில் இருந்துருக்கு. இந்த குடியிருப்புகள் எல்லாம் கோவில் இங்கே வர்றதுக்கு முன்னாலேயேவா இருந்துருக்கும் ?  ச்சான்ஸே இல்லைதானே ?  வேற்றுமதத்தினர் வசிக்கும் இடம் என்பதால்....  குய்யோ முறையோ கூச்சல்கள் எழுந்ததில்  அரசியல் புகுந்து விளையாடாம இருந்தால்தான் அதிசயம், இல்லையோ !  

தற்போதைய அரசு இதையெல்லாம் ஆராயாமலா இதை அகற்ற நினைச்சுருக்கும் ?  அங்கிருந்தவர்களுடன் பேச்சுவார்த்தை (வேறு இடங்களும், நஷ்ட ஈடும் தருவதாக ? ) நடத்தி,  அவர்களின்  இடங்களை  அரசுக்கு விற்கச் சொல்லிக் கேட்டு, அவர்களும் நியாயத்தை உணர்ந்து,   அனுமதி கொடுத்து,  வித்துருக்காங்க. சுமார் ஆயிரத்து நானூறு கடைகளும்  இதில் சேர்த்தி.  சந்துபொந்தெல்லாம்  கடைகளோ கடைகள் தானே !


 சாமி வரங்கொடுத்தாலும் பூசாரி குறுக்கே நிக்கறதுபோலன்னு ஒரு பழமொழி இருக்கு பாருங்க.... அதேதான். மீடியாவின் பேயாட்டத்தைத் தனியாகச் சொல்லணுமா ?  ஜனநாயக நாட்டின் நாலாவது தூண் மீடியா என்றிருந்த காலமெல்லாம் போயே போயிந்தி......  உங்களுக்கே தெரிஞ்சுருக்கும்தானே ? 
கிட்டத்தட்ட நாற்பது படிகள் இறங்கித்தான் இங்கே போகவேண்டி இருக்கு.  நல்ல நீளமான சின்னப்படிகள் !   இரண்டுபக்கச் சுவர்களிலும் லேஸர் லைட் டிஸைன் போல இருக்கு.   காரிடோர் முழுக்க  வட்டவட்ட மேடைகள் நடுவில் சின்ன மரங்களுடன் இருப்பதும் ஒரு வசதிதான். மக்களுக்கு  உக்காரவும்  இடம் வேணுமில்லையா ? 

இடது வலது ஓரங்களில் இருபத்திமூணு புதுக்கட்டடங்களும் கட்டி இருக்காங்க.  த்ரியம்பகேஸ்வரர் பவன் என்ற கான்ஃபரன்ஸ் ரூம்ஸ், லைப்ரரி,  ம்யூஸியம்,  வேதம் பயிலும் வசதி, பயணிகளுக்கான தகவல்,  யாத்ரிகர்கள் தங்குமிடம் போன்ற வசதிகள் இருக்குமாம்.  
மானஸரோவர் பவன்,  மஹாகாலேஸ்வர் பவன் வ்யாஸ் பவன், ராமேஷ்வர் பவன்னு  கட்டடத்துக்கான பெயர்கள்   !  ஆஹா....   ஒருவேளை பனிரெண்டு ஜ்யோதிர்லிங்கங்களின் பெயர்களை இந்தக் கட்டடங்களுக்குச் சூட்டிடயிருக்கலாமோ !    அதான் 23 இருக்கே ! பவன் என்றால் மாளிகை. (ஆனா நம்ம பக்கங்களில் பவன் என்ற சொல்லை ரெஸ்ட்டாரண்டுகளுக்குப் பயன்படுத்திக்கிட்டு  இருக்கோம். என்ன கொடுமை சரவணன் ? )

2019 மார்ச் எட்டாம் தேதி அடிக்கல் நாட்டி, 2021 டிசம்பர் பதிமூணாம்தேதி திறப்புவிழா ! ரெண்டேமுக்கால் வருஷத்தில் இந்த பிரமாண்டமான வேலையை நிறைவு செஞ்சதேகூட ஒரு அதிசயம்தான்! 


ஆதிசங்கரரின் சிலை, பாரத் மாதா சிலைன்னு இருந்தாலும்   ராணி அஹில்யாபாய் ஹோல்கர் சிலை வச்சுருப்பது  'நன்றி மறவாமை'க்காகன்னு  நான் நினைக்கிறேன்.  அன்னியர்களால் இடிக்கப்பட்ட  பல ஹிந்துக்கோவில்களை மீண்டும் கட்டிப் புனர்ஜன்மம் கொடுத்தவர் இவர்.  கோவில்களில் இருக்கும் தங்கத்தைக் கொள்ளையடிப்பதே அந்த அன்னியர்களின் நோக்கம். நமக்கோ.... நல்லதெல்லாம் சாமிக்குக் கொடுக்கணும் என்ற எண்ணம் இருப்பதால் சின்னச் சின்னக் கோவில்களில்கூட குந்துமணியளவுத் தங்கமாவது இருக்கும்!  

லலிதா காட் பக்கம் இருக்கும் அலங்கார வாசலுக்கு அந்தப் பக்கம்  மொட்டைமாடி போல் இருக்குமிடத்தில்  நிறைய   திண்ணை இருக்கைகள் போட்டுவச்சுருக்காங்க. ஆனால் உள்ளே போகத் தடைக்கயிறு.  லக்ஷமணரேகா :-)   கிட்டப்போய் அந்த மாடிக் கைப்பிடிச்சுவர் அருகே நின்னுபார்த்தால் கங்கை தெரிவாளேன்னு அங்கிருந்த  செக்யூரிட்டியிடம் கேட்டதும் கயிறுக்கடியில் நுழைஞ்சு போங்கன்னார். எதுக்கு அடியில் ? கொஞ்சம் மேலே கயிறைத் தூக்கினால் ஆச்சு :-) 

லலிதாகாட் படிகள். இங்கே ஆரத்தி நடக்குது என்பதால் அதுக்கான விளக்குத்தூண்கள் எல்லாம் கங்கையில் நட்டு வச்சுருக்காங்க.  வெள்ளம் காரணம் ஆர்த்தி பந்த். 


அப்பதான் கவனிக்கிறேன், பத்தியெரிஞ்சுக்கிட்டு இருக்கும், என்னோட ஃபேவரைட் இடத்தை.  ஆ.......  இது மணிகர்ணிகா காட் இல்லையோ !  போன பயணத்திலும் கிட்டேப்போய்ப் பார்க்க முடியலைன்ற ஆதங்கம்தான். 

சின்ன சின்ன   அழகான மண்டபங்கள்  இங்கே.  நான் 'எரியறதைக் கிட்டே கொண்டுவந்து பார்த்துக்கிட்டு இருக்கும்போது  ஒரு சின்னக்கூட்டம் நம்மைக் கடந்து  அந்தக் கோடிவரை போய் பார்த்துக்கிட்டு நின்னாங்க. கூட்டம் எப்பவாவது மௌனமாப்போகுமோ ?  யாராவது ஏதாவது பேசிக்கிட்டேதானே போவாங்க. காதில் விழுந்தது தமிழ் !

பரபரப்பாத் திரும்பிப் பார்க்கும்போது  போனகூட்டம் திரும்பி  நம்மைக் கடந்து போச்சு. ஒருத்தர் மட்டும் கடைக்கோடியில் நின்னு கீழே பார்த்துக்கிட்டு இருந்தார்.  நம்மவர் போய் பேச்சுக்கொடுத்தார்.  கரூரில் இருந்து வந்துருக்காங்களாம், கரூர் மடத்தின் சங்கராச்சாரியாருடன் !

அட! கரூரில் சங்கர மடம் இருக்குன்ற விவரமே எனக்குத் தெரியாது. ஒருவேளை நெரூர் மடமாக இருக்குமோ ? 
கரூர் என்ற பெயரைக்கேட்டதும்,  உங்க  இடும்பியின் அவதாரஸ்தலமல்லவா என்றொரு சந்தோஷம். வாய் சும்மா இருக்கோ ?  அவரிடம் 'அதுதான் என் அவதாரஸ்தலம்'னு சொன்னேன்.  அவ்ளோதான்... முன்னால் போய்க்கிட்டு இருந்த சின்னக்கூட்டத்தைக் கூப்பிட்டுக்கிட்டே ஓடறார் இந்த மனிதர். விளிக்கும் குரல் கேட்டு அவுங்களும் நின்னுட்டாங்க.  நாங்களும் கொஞ்சம் காலை வீசிப்போட்டு நடந்து போனோம். அறிமுகம் ஆச்சு.  எப்படி ? 'இவா பிறந்தது கரூராம்'னு  என்னைக் காட்டி !!!

கூட்டத்தில்  முகத்தில் நல்ல தேஜஸுடன் கையில் தண்டம் வச்சுருந்தவர், புன்னகையோடு நம்மைப் பார்த்தார்.  இளவயதுதான். ஒரு நாற்பது ?  நம்மவர் சட்னு கைகூப்பி வணங்கினார். கூடவே நானும்.  கை உயர்த்தி நம்மை ஆசிர்வாதம் செய்தார் 'சங்கராச்சாரியார்' . ஒரு ரெண்டுமூணு நிமிஷம் நம்மை பத்தி விசாரிச்சார். சொன்னோம்.  மீண்டும் கை உயர்த்தி ஆசி வழங்கினார். கூட்டத்தில் மூணு பெண்களும் இருந்தாங்க. நான் மெல்ல ஒரு தயக்கத்தோடு ஒரு படம் எடுக்கலாமான்னு கேட்டேன்.  வேணாமுன்னார் ஆச்சாரியார்.   சரின்னு சொல்லிட்டு விடை வாங்கிக்கிட்டோம்.  
இங்கே ஒரு வியூவிங் கேலரி. தனியறையில்  ஒரு டிக்கட் கவுண்ட்டர். விஸ்வநாதரை தரிசிக்கணுமுன்னா.... டிக்கெட்டுகள்  வாங்கிக்கலாம்.  லாக்கர் வசதிகள் இருக்கு. என்ன ஒன்னு....    செல்ஃபோன்கள் மட்டுமே வைக்கும் அளவிலுள்ள  சின்ன லாக்கர்கள். 

 மடத்து நபர் கூடப் பேசிக்கிட்டே அந்தாண்டை என்ன இருக்குன்னு சரியாப் பார்க்கலையேன்னு திரும்பப்போனால்.... ஸ்ரீ ராஜராஜேஸ்வரி கோவில் !   கங்கையிலிருந்துக் கரையேறிப் போகலாம்!  எனக்குப்போக ஆசைதான். ஆனால்  வழி ?  கங்கைக்கரை வழியாகச் சுத்திக்கிட்டுப் போகணுமே !

நேராத் திரும்பாம   இடதுபக்கம் பார்த்தால்  கார்த்திகேய் சௌக்.  அங்கே போனால் நம்ம முருகன் மயில் வாகனத்திலே (தனியாக )தேமேன்னு உக்கார்ந்துருக்கார்.  பொதுவா வடக்கீஸ்களுக்கு  கார்த்திகேயன் (நம்ம முருகன்தான்) ப்ரம்மச்சாரி !  

பூனாவாழ்க்கையில்  ஒரு சின்ன மலைமேல் (பர்வத் மந்திர்னு நினைவு )இருக்கும் கோவிலுக்குக் கஷ்டப்பட்டுப் படியேறிப்போனால்,  கார்த்திக் ஸ்வாமி கோவிலுக்குள் பெண்களுக்கு அனுமதி இல்லைன்னு என்னத் தடுத்துட்டாங்க. ஏனாம் ? அவர் ப்ரம்மச்சாரியாம் !  'அட! அப்படியா சமாச்சாரம். எங்க பக்கங்களில் வந்து பாரு.... ரெவ்வெண்டு பெண்டாட்டி'ன்னு சொல்லிட்டு வந்தது நினைவிருக்கு:-)

அப்ப அங்கே என்னைத்தேடி பைரவர் ஒருவர் வந்தார்.  ஏதாவது கொடுக்க இருக்கான்னு கைப்பையைத் துழாவினால்..... நியூஸி ம்யூஸ்லிபார் தான் இருக்கு. அதைத் தின்னுவானோன்னு தெரியாததால் கொஞ்சமா உடைச்சுப் போட்டேன்., நல்லா இருக்காம் ! ஓ... அப்ப இது உனக்குன்னு நியூஸியில் இருந்து வந்துருக்கு. ' Dதானா Dதானே  Pபே  லிக்கா ஹை Kகானாவாலா Kகா நாம்'  दाने दाने पे लिखा है खाने वाले का नाम  ரொம்பச் சரி ! 
'போயிட்டு வரேண்டா முருகா'ன்னு  வணங்கிட்டு,  நம்ம பைரூவுக்கும் டாட்டா சொல்லிட்டுக் கிளம்பினால் கூடவே வர்றாள் ! பாவம்..... 
பாரதமாதா சிலை!  பின்னால்  இந்தியா !   மொழிவாரியான மாநிலமுன்னு எல்லைகள் பிரிக்காத (இப்போதிருக்கும்) 'அகண்டபாரதம்' மட்டும்! 
பாரதமாதா சிலைக்குப்பின்னால் ஒரு கோவில்.  மாந்தாதா மஹேஷ்வர்! திறந்திருந்த வாசல் வழியாக தூரத்தில் தெரிஞ்சது சிவலிங்கம்.  காவலர் ஒருவர்,   கொரிடார் மூடும் நேரம் என்று சொல்லிட்டுப் போனார்.  இங்கிருந்தே ஒரு கும்பிடுதான்.  நாம் சரியாக ஒரு மணி நேரம் இங்கே இருந்துருக்கோம்.  ஏழு மணிக்கு மூடறாங்க போல ! 
பகலில்  வந்து பார்த்து அனுபவிக்க வேண்டிய இடத்தை இப்படி ராத்ரி தரிசனம் ஆக்கிட்டோமேன்னு மனசு தவிச்சது உண்மை. 
நாற்பது படிகள் வரிசைக்கு  வந்தாச்சு.  இங்கே ஒரு எஸ்கலேட்டர் கூட  சுவத்துக்கு அந்தாண்டை வச்சுருக்காங்க.  ஆனால் நகராமல் நிக்குது. சின்னதா ஒரு சங்கிலித்தடை அதுக்கு முன்னால்.  காவலரிடம்  கேட்டுட்டு, அங்கே ரெண்டு க்ளிக்ஸ்.  விசேஷநாட்களில் (! )நகரும் போல ! ஸீனியர் சிட்டிஸன்களுக்கு உதவக்கூடாதோ ? 



போனவழியே சந்துக்கு வந்திருந்தோம். வெளியே நம்மாட்கள்  அரைவெளிச்சத்தில்  அஞ்சாறுபேர் இருந்தாங்க. சத்யநாராயணர் கோவில்!  ப்ராச்சீன் !   



 இந்த காசி மாநகரே ப்ராச்சீன்தான். உலகின் பத்துப் புராதனநகர் பட்டியலில்  காசியும் உண்டு.  ஆனால்  அவுங்க பட்டியலின்படி அஞ்சாயிரம்  ஆண்டுகள் !  அதுக்கும் முன்னாலே இருந்துருக்கணும்னு என் தோணல்.  க்ருதயுகமாக இருக்கவேணும்!

பாரதத்தின் ஏழு மோக்ஷபுரிகளில் காசிதான் நம்பர் ஒன்னு, இல்லையோ !

தொடரும்........... :-)  



9 comments:

said...

அருமை நன்றி

நீங்க கரூரா ? நான் தஞ்சாவூர்.

said...

அருமையான பகிர்வு காசிப்பயணம் புதிய அனுபவம் எனக்கும் இவ்வருடம். முழுமையாக பார்த்து இருக்கின்றீர்கள்.

said...

ஸூப்பர்.  ஸூப்பர். இந்தப் பாதை போடப்பட்ட பிறகு சென்று பார்க்க வேண்டும் என்று எனக்கும் ஆவல்.

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க தனிமரம்,

காசி மாநகரின் கோவில்களை முழுமையாக யாருமே பார்த்திருக்க மாட்டார்கள் என்றுதான் நினைக்கிறேன்.

இருபத்திமூணாயிரமுன்னு ஒரு கணக்கு !

said...

வாங்க ஸ்ரீராம்,

திறப்புவிழாவை தூர்தர்ஷனில் பார்த்தது முதல் எப்போ எப்போ என்று ஏங்கியது நிறைவேறியது !

சந்தர்ப்பம் கிடைத்தால் விட்டுவிடாதீர்கள் !

said...

காசி பயணம் தொடர்கிறோம்.
இருபத்தி மூவாயிரம் கேட்கவே !!!!!!!!

said...

வாங்க மாதேவி,

நடக்கற காரியமா ? கிடைச்சவரை லாபம்னு இருக்கோணும் !

said...

படிகள் வரிசை கீழே ஓடும் கங்கை வரை போகுது ! லலிதா காட்....

ஆதிசங்கரரின் சிலை, பாரத் மாதா சிலை, ராணி அஹில்யாபாய் ஹோல்கர் சிலை ...வாவ் மா

இந்த இடத்தை அடுத்த முறை தவற விடாம பார்க்கணும் ரொம்ப அருமையா இருக்கு ..செம்ம