பத்தெட்டுலே முதல் சந்து, அடுத்த பதினைஞ்செட்டுலே ரெண்டாவது ! வழிநெடுக ரெண்டு பக்கங்களும் சின்னச் சின்ன கடைகளால் நிறைஞ்சுருக்கு. அப்பப்ப திடுக் னு ஒரு கோவில். சின்னதா ஒரு சிவலிங்கம், அதன் தலையில் ஒரு சாமந்திப்பூ. போதாதா என்ன ?
மனுஷர்களுக்குச் சரியா மாடுகளும் போக்குவரத்தில். ஆனா ஒன்னு, பயந்து ஒதுங்கும் என்னைச் சட்டை செய்யாமல் போகுதுகள். நாய்களோ......... இன்னும். நீ கூடவான்னு .... மனசு நினைச்சது. போகட்டும். மரியாதை காரணம் இடிக்காமல் போகுது !
சட்னு ஒரு போர்டு கண்ணில் பட்டது. ஆ...... பெருமாள். அந்தச் சந்துக்குள் நுழைஞ்சால் அங்கங்கே ஒவ்வொரு சந்து முனையிலும் இதே போர்டுகள் வழிகாட்டியான்னா இருக்கு !
ஆனால் போகும்போதே சந்து முனைகளைப் பார்த்து மனசுக்குள் அடையாளம் வச்சுக்கிட்டேன். போகவேண்டிய சந்தைப் பிரிஞ்சு உள்ளே போய்க்கிட்டு இருக்கோமே.....
கடைசியில் ஒரு போர்டு வடக்கர்களுக்குப் புரியும் வகையில் ஸ்ரீ லக்ஷ்மி பாலாஜி மந்திர்னு இருக்கு. ஒரு வீடுதான். முன்பக்க அறையிலே சின்னக்குழந்தைகள் ரெண்டுபேர் விளையாடிக்கிட்டு இருந்தாங்க. திறந்திருந்த கதவை மெல்லத்தட்டியதும், ஒரு பெண் எட்டிபார்த்து 'வாங்க'ன்னு கை காமிச்சுட்டு உள்ளே போயிட்டாங்க.
நாங்க நாலடி எடுத்து உள்ளே போனால் இடதுபக்கம் பெருமாள் சிலை ஒன்னு. பக்கத்துலே தாயார். இன்னும் சின்னச் சின்ன விக்ரஹமா ஒரு ஏழெட்டு. இது மாடிப்படிக்கட்டின் கீழே இருக்கும் மாடம். எண்ணெய் விளக்குகள் தீபம். இன்னொரு ஆள் உள்ளேயிருந்துவந்து பெருமாளுக்கு என்னவோ சின்னப் பாத்திரத்தில் காமிச்சார். அம்சி பண்ணறார் போல !
படம் எடுக்கலாமான்னு கேட்குமுன்னே.... அவர் சட்னு வீட்டுக்குள் போயிட்டார். நாங்க திரும்பிப்போயிடலாமான்னு நினைச்சப்ப, இன்னொரு வயதான அம்மா வந்து, மாடிப்படியைக் கைகட்டி, மேலே போகச் சொன்னாங்க.எல்லாமே ஜாடையில்தான் ! மௌனவிரதமா என்ன ?
இடுக்கமான மாடிப்படிகளில் ஏறிப்போனால்..... மாடியில் கம்பி கூண்டுக்குள்ளே பெருசா மஹாமேரு, சின்னதா ஒரு கும்மாச்சி கோபுரம், ரெண்டு ஸ்படிக லிங்கங்கள், காயத்ரி இருக்காங்க. இந்தாண்டை தனியா ஒரு சாமி சிலை. புள்ளையாரோன்னு நினைச்சேன். ஆனால் இல்லைபோல... முகம் மாலைகளுக்கிடையில் சரியாத்தெரியலைன்னாலும் புள்ளையார் கிடையாது..... துல்ஸிக்கு யானை முகம் தெரியாதா என்ன ? நாலைஞ்சு க்ளீக்ஸ் ஆச்சுதான்.
கீழே இறங்கி வந்தோம். ரெண்டுபக்கமும் கம்பி போட்டுருப்பதால் தடுமாறாம இறங்கிட்டேன்.
அப்ப பெருமாள் சந்நிதியில் பட்டர் போல உக்கார்ந்திருந்தார் ஒருவர். அவரிடம் படம் எடுக்கலாமான்னு கேட்டேன். கூடாதுன்னார். சரின்னுட்டு பெருமாளைக் கும்பிட்டு, ஒரு இருபது ரூ தட்டில் போட்டதும், கொஞ்சம் குங்குமத்தைச் சின்னக் காகிதத்தில் பொதிஞ்சு கொடுத்தார் 'பட்டர்' !
வெளியே சுவரில் சேவைகளுக்கான கட்டணம் போட்டுவச்சுருக்காங்க. எப்படியோ பெருமாள் பிழைப்புக்கு வழி செஞ்சுருக்கார்னு தோணுச்சு. காலை ஆறுமணிக்குத் திறந்தா, ராத்ரி ஒன்பது மணிக்குத்தான் மூடுவாங்களாம்.
இந்தப் பதிவை எழுதும்போது, கூடுதல் விவரம் ஏதானும் இருக்குமான் னு பார்க்க, போர்டுலே இருந்த நெட் லிங்க்கைத் தேடினால் சைட் விற்பனைக்கு இருக்காம் ! 420 ஆக இருக்குமோன்னு இப்ப ஒரு டவுட்....
போனவழியைக் கவனமா மனசுலே வச்சதால் பத்திரமா நம்ம ரெண்டாம் சந்துக்கு வந்துட்டோம். அப்படியும் ஒரு இடத்தில் சின்னதா வழிதவறினோம்தான். போகட்டும்.....
வழியில் ஒரு டீக்கடை. அநேகமா ரெஸ்ட்டாரண்டுன்னு சொல்லலாம். மேஜை நாற்காலி எல்லாம் இருக்கே ! கடைக்காரம்மாவைப் பார்த்ததும் 'சாய் இருக்கா'ன்னு கேட்டேன். 'உக்காருங்க. இதோ போட்டுத்தர்றேன்'னாங்க. வெளியே போட்டுருக்கும் பெஞ்சே போதுமுன்னு உக்கார்ந்தோம். கொஞ்ச நேரத்தில் சாயா வந்தது. பரவாயில்லை. நல்லாத்தான் இருந்தது.
சாயங்காலம் கொஞ்சம் சூடா உள்ளே போனவுடன் புத்துணர்ச்சி வந்தது உண்மை. கொஞ்சதூரத்துலே ஒரு ஆஞ்சி கோவில் ! சிந்தூரப்பூச்சில் இருக்கார். ஒவ்வொரு சந்திலும் குறைஞ்சது மூணு கோவிலாவது இருக்கு !
வீட்டுத் திண்ணைகளில் அகல்களை ஏத்திவச்சுருக்காங்க. தீபாவளி வருதே !
ஏகப்பட்டக் கடைகள் இருக்கும் பகுதிக்கு வந்துருந்தோம். கவனிச்சதில் எல்லாமே தேங்காய் பழம் பூ மற்றும் பூஜை சாமான்கள் விற்கும் கடைகளே. இந்தப்பக்கம் இன்னொரு காலணிக்கடல். அப்ப இங்கெதான் கோவில் இருக்கணும். பார்வையை இந்தப் பக்கம் திருப்பினால் தூண்கள் நிறையத் தென்பட்டன. கொஞ்சம் காவிப்பட்டைகள் வேற ...... நீளமாப் பாதைமாதிரி போகுது ஒருபக்கம். அதுக்குள்ளே நுழைஞ்சு பார்க்கலாமுன்னா அது கோவிலுக்குள் கொண்டு விட்டுருச்சு.
இங்கே கங்கையில் படகில் போகும்போது படித்துறைகள்தான் விதவிதமாத் தெரியுதே தவிர, அந்தாண்டை தெருப்பக்கம் நுழைவுவழி எப்படி இருக்குன்னே தெரியறதில்லை. அழகெல்லாம் பின்பக்கம் !!!! அதிலும் இப்போ இருட்டினபிறகு வந்துருக்கோம்... சுத்தம்....
போனமுறைப் பயணத்தில் இந்தப்படித்துறையை கங்கையில் படகில் போகும்போது பார்த்ததுதான். (மேலே படம் ) இருக்கும் இத்தனைப் படித்துறைகளில் தனிப்பட்டுத் தெரியும்விதம் கட்டியிருக்காங்க. எல்லாம் நம்ம தெற்கத்திக் கட்டடக்கலைதான். இங்கே போய்ப் பார்க்கணும்னு நினைச்சது போனமுறை நிறைவேறலை.
கோவிலுக்குள் போனால்.... ரிஷப வாஹனத்தில் ஈசனும், ஈஸ்வரியுமா அலங்கரிச்சுக்கிட்டு உலாப்போக ரெடியா இருக்காங்க. சனிப்ரதோஷமாம் ! ஓ..... அப்ப ஊர்வலம் முடிஞ்சாட்டுச் சும்மாத்தான் உக்கார்ந்துருக்காங்களா !!!
மூலவருக்கு சாயரக்ஷை பூஜை நடக்குது. கணகணன்னு மணி ஒலிக்க, பெரிய சைஸ் உடுக்கைகள் / டமருகம் ? டுமுடுமுக்கன்னு ஒரே அமர்க்களம் போங்க.
சின்னப்பசங்கதான் பெரிய டமருகத்தைப் பிடிச்சு உலுக்கி எடுக்குதுங்க. அதுலே நடுவிலே கட்டித்தொங்கும் தோலுருண்டை ரெண்டு பக்கங்களுக்கும் மாறிமாறிப் போய் அடிக்குது !
நடுவில் சின்ன முற்றம் போலிருக்கும் இடத்தைச் சுத்தி உயரத்திண்ணைகள்! அதுலே சில சந்நிதிகள். மூலவருக்கு ஷோடஸ உபசாரம் ஆனதும், திண்ணைமேல் பாய்ந்து ஏறிப்போகும் சின்னவயது குருக்கள் அந்தந்த சந்நிதிகளில் ஆரத்தி எடுத்துக்கிட்டே போறார். கூடவே ஊம் ஊம்னு கத்திக்கிட்டே ( வழியில் நின்னுருக்கும் மக்களை விலகி நிற்கச் சொல்லும் செய்கை ! )போகும் சின்னக்கூட்டமும் ! டமருகம் அவுங்களைத் தொடர்ந்து போய்க்கிட்டு இருக்கு ! எனக்கென்னவோ... போனமுறை விவரம் தெரியாமல் ஒரு அகடாவுக்குள் போய் சாயரக்ஷை பார்த்த நினைவு வந்தது உண்மை. இங்கே இருக்கும் சின்னகுருக்கள் ஏறக்குறைய அகோரி வேஷம் !!!!
கூடவந்துக்கிட்டு இருந்தவரைக் காணோமேன்னு திரும்பிப் பார்த்தா...... ஒரு சாமியார் முன் பவ்யமா நிக்கறார். அந்த சாமியார் இவர் நெற்றியில் கைவச்சு என்னவோ சொல்லிக்கிட்டு இருக்கார். அப்புறம் பார்த்தால் இவர் பாக்கெட்டில் இருந்து காசு எடுத்துத் தர்றார்.
நான் மெதுவாப்போய் நம்மவர் பக்கத்தில் நின்னேன். இணக்கமான புன்னகையுடன் சாமியார் நகர்ந்துட்டார். போகட்டும்.... சிலசமயம் இப்படி நெற்றியில் கைவச்சு ஏதோ வசியம் பண்ணுவாங்கன்னு கேள்விப்பட்டுருக்கேன். அப்படியெல்லாம் ஒன்னுமில்லை போல. நம்மவருக்கு என்னை அடையாளம் தெரிஞ்சது :-)
மேலே பார்க்கமுடியலைன்னா... கீழே இதில் பார்க்கலாம் :-)
https://www.facebook.com/1309695969/videos/8701349609935938/
அந்தாண்டை இருந்த வாசல் வழியா கங்கைப்படித்துறைப்பக்கம் போனோம். கொஞ்சம் கூட்டமா மக்கள் படிகளில் உக்கார்ந்துருக்காங்க. அங்கே கங்கையில் மிதக்கவிடும் விளக்குகளை விற்பவரிடம் ஒரு விளக்கு வாங்கினதும், தீப்பெட்டி கொடுத்தாங்க அந்தம்மா. சின்ன தொன்னையில் கொஞ்சம் பூக்கள், நடுவிலே ஒரு அகலில் நெய்யில் (! ) தோய்த்த திரி! கீழே படி இறங்கிப்போய் தண்ணீர் தொடும் படியில் நின்னதும் நம்மவர் விளக்கைப் பற்றவச்சுட்டாரு. பெருமாளிடம் போன பெரியத்தையை மனசில் நினைத்து வணங்கி அவுங்களுக்கு ஒரு மோட்சதீபம் கங்கையில் மிதக்கவிட்டேன். மெதுவா நீரோட்டத்தில் நகர்ந்து போகுது விளக்கு. மனசு கொஞ்சம் கனத்தது .
திரும்ப மேலேறலாமுன்னா.... எல்லா படிகளில் ஜனக்கூட்டம் ! எப்போ இத்தனைபேர் வந்தாங்க? கங்கை ஆரத்தி நடக்கப்போதாம் ! அடிச்சக்கை. நாமும் படிகளில் இடம்பிடிச்சு உக்கார்ந்தோம்.
இளைஞர் ஒருவர் , கொஞ்சம் பெரிய அகலில் எண்ணெய் ஊத்தித் திரி போட்டு, விளக்கைப் பத்த வச்சுச் சின்னதா இருக்கும் மூங்கில் கூடைக்குள்ளில் வச்சு அதற்கான மூடியைப் போட்டார். அந்தக்கூடையைக் கயிற்றில் கட்டித்தூக்கி கொடியேத்தறதைப்போல் செய்யும்போது அலுங்காமல் குலுங்காமல் கூடை மெள்ள ஏறிப்போகுது. படிகளுக்கருகில் நட்டு வச்சுருக்கும் மூங்கில் கழிகள்தான் கொடிமரம் !
ஆரத்தி எடுப்பவர் கங்கா ஆரத்தி கமிட்டியின் அங்கம். ஆரத்தி எடுப்பவர்களுக்குப் பயிற்சி கொடுத்து, யூனிஃபாரமும் கொடுத்துருக்காங்க. நிறையப்பேர் நின்னு ஒன்னுபோல ஆரத்தி எடுக்கும்போது பார்க்க ரொம்ப நல்லாவே இருக்கும் ! இங்கே போன பயணத்தில் தஸ் அஸ்வமேதகாட்டில் ஆரத்தி பார்த்தோம். அது ப்ரமாண்டம் ! ஒரு ப்ராட்வே ஷோ மாதிரி இருந்தது. அதுக்கு முன்னே ஹரித்வாரில் பார்த்திருந்தோம். ஆறு வருஷத்துக்குமுன் போன பத்ரிநாத் பயணத்திலும் ரிஷிகேஷில் ஆரத்தி பார்த்தோம்.
ஆரத்தி எடுக்கும்போது வரிசைக்கிரமமா.... ஊதுபத்தி, ஒற்றை தீபம், அடுக்கு தீபம், சர்ப்பதீபம்னு வகைகள் தொடர்ந்து வருது ! இங்கே இப்போ ஆரத்தி எடுக்க ஒரே ஒரு பண்டிட்தான். ஆரம்பிக்கும்போது, ஒரு பொடியன் கீழ்ப்படிக்கட்டில் நின்னு டமருகம் அடிக்கிறான். ஒரு வேகமோ, ரிதமோ இல்லாமல் டொக் டொக்குன்னு நல்லாவே இல்லை. இதுக்குப் பேசாம பண்டிட்டே பூஜை மணியை அடிக்கலாம். யாராவது ஆரத்திப்பாட்டு /பஜன் பாடினால் கூடத்தேவலைன்னு தோணுச்சு. அடுக்கு விளக்கு கனம் அதிகம் என்பதால் கஷ்டம்தான். அப்புறம் ஸர்ப்ப ஆரத்தி எடுக்கும்போது அவரே பூஜைமணியை அடிச்சார். இந்த ஒலிதான் நமக்கு ஒரு ஆன்மீக அனுபவத்தைக் கொடுக்குது. பழக்கமான சப்தம் பாருங்க !
சின்னதா ரெண்டு மூணு வீடியோ க்ளிப்ஸ் எடுத்தேன். இப்பதான் ஃபேஸ்புக்கில் போட்டேன். இதுதான் லிங்க்.
https://www.facebook.com/1309695969/videos/756373862820061/
https://www.facebook.com/1309695969/videos/907789487079398/
https://www.facebook.com/1309695969/videos/1215558392400714/
ஆரத்தி முடிஞ்ச அடுத்த க்ஷணம்........ காக்கைக்கூட்டத்தில் யார் கல்லை எறிஞ்சதுன்னு........ கூட்டம் காலி. அமைதியாக இருக்கு, கங்கை படித்துறை. கொஞ்சநேரம் உக்கார்ந்து 'நாமம்' ஜெபிச்சேன். நம்மவர் படியிறங்கிப்போய் கங்கையில் கால் நனைச்சுட்டுத் தண்ணீரைத் தலையில் தெளிச்சுக்கிட்டார். வெள்ளைக்காரர் ஒருவர் இறங்கிப்போய் கங்கையில் முங்கி எழுந்தார்.
முக்காலிருட்டில் ஜொலிப்போடு ஒரு படகு ஊர்ந்து போகுது. அதுலே போக ஆசை வந்தது. எங்கே........ ? சொக்கா ... அது எனக்கில்லை.....
மெதுவாப் படிகளேறி வந்து உள்ளே போய் கேதாரீஸ்வரரை வணங்கிட்டு வெளியே சந்துக்குப் போனோம். நம்ம காலணிகள் எல்லாம் பத்திரமாத்தான் இருக்கு !
இந்த கேதார் காட்டைத் தொட்டடுத்த காட் விஜயநகரம்காட். கேதார்நாத் மடம் ஒன்னு இங்கிருக்கு. 1346 வது வருஷம் ஆரம்பிச்சதுன்னு ஒரு தகவல். இவுங்கதான் கேதார்நாத், காசியில் இருக்கணும் என்று விரும்பி சிவலிங்கம் ஒன்னு ஸ்தாபிச்சாங்களாம். கேதாரீஸ்வரர் ! பதினெட்டாம் நூற்றாண்டுலே விஜயநகர மன்னர், இங்கே அவுங்க சார்பில் ஒரு படித்துறை கட்டுனப்ப, தொட்டடுத்து இருந்த கேதாரீஸ்வரரை வணங்கி, இப்ப இருக்கும் கேதார் காட்டையும் கட்டிக்கொடுத்துருக்கார். மடத்து மக்களும் அப்பப்பப் பழுது பார்த்து, மேலே இருக்கும் சுதைச் சிற்பங்களுக்கெல்லாம் வர்ணம் பூசி, சுவருக்குக் காவிப்பட்டை அடிச்சு, சிவசிவ ன்னு எழுதி நல்லாவே வச்சுருக்காங்க.
இப்ப நாம் வந்த வழியாகவே திரும்ப சீதாவுக்குப் போகணும். அப்படியே வரும்போது ஒரு க்ரிஷ்ணன் கோவில் கண்ணில் பட்டது. குழலூதும் கண்ணனுக்கு இருபுறமும் இருப்பவர்கள் ருக்மிணி & ராதையாக இருக்க வேணும். பண்டிட்டைக் கேக்கலாமுன்னா எங்கே ? கோவில் அலங்காரம் ரெண்டு வாழைப்பழம் :-)
இன்னும் கொஞ்சம் நடந்து போனால் மோனாலிஸா கேஃபே & பேக்கரி. ராச்சாப்பாட்டுக்கு எதாவது வாங்கிக்கணும். மோனாலிஸா இண்டியன் ஸ்டைலில் நகைநட்டும், குங்கட்டுமா இருக்காள் !
இன்றைக்கு ரொம்பவே சுத்தியாச்சு. முழங்கால், 'என்னைக் கொஞ்சம் கவனி' என்றது. மீறமுடியுமா ?
பொழுது விடியட்டும். கங்கையைப் பார்க்கலாம்!
தொடரும்........ :-)
6 comments:
அருமை நன்றி
கேதார் காட்டை படகில் போகும் போது பார்த்த்தோம், நல்லா பளிச்சின்னு இருந்தாங்க..
எங்கு திரும்பினாலும் கோவில்கள் அற்புதம்.
' காண கண் கோடிவேண்டும் 'என்பார்கள் கண்டு வணங்குவதே அவன் கொடுத்த வரம் உங்களுக்கு கிடைத்துள்ளது.
உங்கள் பயணத்தில் நாமும் கண்டு வணங்குகிறோம்
நன்றி.
வாங்க விஸ்வநாத்,
நன்றி !
வாங்க அனுப்ரேம்,
நாங்களும் போனமுறை படகில் போனபோது பார்த்ததுதான். உள்ளே நம்மூர் பாணி கோவிலே இருக்குன்றது இப்பதான் தெரிஞ்சது !
வாங்க மாதேவி,
இப்படிக் கணக்கில்லாத சிவலிங்கங்கள் இருப்பதால்தான் ஹனுமனுக்கே எது 'உண்மையானது' என்று தெரியாமல் தவிக்கவேண்டி இருந்துருக்கு பாருங்க !
தரிசனங்கள் எல்லாம் அவன் அருள் !
Post a Comment