க்றைஸ்ட்சர்ச் நகர நிர்மாணத்துக்கான பெரிய கட்டடங்கள் கட்ட ஆரம்பிக்கும்போது, தேவையான கற்களை வெட்டி எடுக்க , இடம் தேடுன்னப்ப ஊருக்கு வெளியே ஒரு 12 கிமீ தொலைவில் சின்னக்குன்றுகள் இருக்குமிடம் ஆப்ட்டது. அப்ப ஏது... கிமீ எல்லாம்! ( ஏழரை மைல் தொலைவு. அப்பவே ஏழரை வந்து உக்கார்ந்தது வெள்ளையருக்குத் தெரியாதுல்லே ! ) காலம் 1861 ஆம் ஆண்டு.
இங்கிலாந்தில் இருந்து புலம் பெயர்ந்த மக்கள்... கடும் உழைப்பாளிகளா இருந்தாங்க. மலையைப் பிளந்து கல்லுடைப்பு ஆரம்பிச்சது. அங்கெ இருந்து ஊருக்குள் வர ஒரு ட்ராம் லைன் கூடப் போட்டாங்க. மரத்துலே பண்ண ட்ராக் ! அப்போ எவ்வளவு உறுதியான மரமா இருந்திருக்கும் பாருங்க. நகரின் முக்கிய அரசாங்கக் கட்டடங்கள் எல்லாம் இந்தக் கற்களினால்தான் கட்டப்பட்டன. நான் சொல்வேன் பாருங்க.... எங்க ஊர் க்ளாஸிக் ஸிட்டியா இருந்ததுன்னு..... அதே. ஆனால் இப்ப ஒரு பதினொரு வருஷங்களுக்கு முன் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் அந்தக் கட்டடங்கள் எல்லாம் இடிஞ்சு விழுந்துருச்சு. அப்படியும் 150 வருஷம் தாக்குப்பிடிச்சுருக்கு இல்லே ! சில கட்டடங்கள் நின்னாலும் அதன் கீழே இருக்கும் இடத்தில் நிலத்தடி நீர் பீறிட்டு வந்த காரணம் புதைமணலா ஆகி இருக்குன்னு சொல்றாங்க. பாதுகாப்புக் கருதி இப்ப அந்தக் கட்டடங்கள் எல்லாம் பூட்டித்தான் இருக்கு.
இந்தக் கற்சுரங்கம் இருக்கும் இடத்துக்கு இப்போ ஹால்ஸ்வெல் என்ற பெயர். அப்போ வெறும் காடாக இருந்த இந்த இடம் . இதுலே 149 ஏக்கர் இந்த க்வாரி மட்டும். 129 வருஷம் (1990 வருஷம் வரை ) இங்கே கல் வெட்டி எடுக்கும் வேலை நடந்துருக்கு. பெரிய கற்கள் போக, சாலை போடப் பயன்படும் ஜல்லி உடைக்கும் வேலையெல்லாம் வேற ! ஆரம்பகாலத்தில் முதல் 64 வருஷங்களுக்கு இது தனிப்பட்டவர்கள் வசம் இருந்து (பல கைகள் மாறித்தான்) 1925 முதல் நம்ம சிட்டிக் கவுன்ஸில் உடமையாகப் போயிருச்சு. நகரம் விரிவடைஞ்சுக்கிட்டே போன காலக்கட்டமா இருக்கணும்.
கல்லுடைக்கும் மக்கள் தங்க, ஒரு கட்டடத்தை, இந்தக் கற்கள் கொண்டே கட்டி இருக்காங்க. பதினாறு பேர் தங்கும் வசதி. அடுக்களை, பாத்ரூம் எல்லாமும்! 'சிங்கிள்மென்ஸ் க்வாட்டர்ஸ்'னு இதுக்குப் பெயர். தனியா சமையலுக்கு ஒரு ஆள். கல்க்வாரி வேலை ஆட்களைவிட சமையல்காரருக்கு சம்பளம் அதிகமாம். வாரம் அஞ்சு பவுண்ட். சரித்திரக் குறிப்புகளா அங்கங்கே தகவல் வச்சுருக்காங்க. சுவாரஸ்யம்தான் !
இங்கத்துச் சரித்திரத்தில் இடம்பெற்ற பெருமை இதுக்குண்டு. இப்பவும் பார்வையாளர்கள் வந்துபோகுமிடமா இதைக் காட்சிக்குத்திறந்து வச்சுருக்காங்க. 2011 வருஷ நிலநடுக்கம், இந்தக் கட்டடத்தையும் விட்டு வைக்கலை. அப்புறம் இதையும் பழுதுபார்த்து 2017 இல் திறந்தாங்க. அப்போ நாங்க அங்கே போய் பார்த்துட்டு வந்தோம்.
க்வாரி வேலை நின்ன பிறகு, ச்சும்மாக்கிடந்த இடத்தை நம்ம சிட்டிக்கவுன்ஸில் ஒரு 'ரிஸர்வ் பார்க்'காப் பண்ணிட்டாங்க. ரெண்டு லக்ஷத்து அம்பதாயிரம் மரச் செடிகளை நட்டதும், நாய்களுக்கான பார்க், மௌண்டன் பைக் போக சைக்கிள் ட்ராக், எங்க ஊருக்கு அக்காதங்கைகளா உலகில் அங்கங்கே இருக்கும் ஊர்களுக்கான பார்க் ( Sister Cities of Christchurch )உள்ளூர் மக்களுக்கான பிக்னிக் பகுதிகள் இப்படியெல்லாம் அமைச்சதும் குறிப்பிடவேண்டியதுதான்.
நம்ம ஊருதான் நியூஸியின் தோட்ட நகரம் தெரியுமோ !உலகத்துலெ இருக்கற மற்ற நாடுகளில் இருக்கும் தோட்ட நகரங்களுக்கும், எங்க ஊருக்கும் அக்கா தங்கை உறவுப்பாலம் கட்டி வச்சிருக்காங்க!
சியாட்டில், அடிலெய்ட், கிறைஸ்ட்சர்ச்( இங்கிலாந்து)கன்சு( Gansu, China), குராஷிகி (Japan), சொங்ப-கு( Songpa-Gu,Korea)இப்படின்னு பல நகரங்களோட நாங்க அக்கா தங்கையாக் கொஞ்சிக்குலாவிக்கிட்டு இருக்கோம். நம்ம பெங்களுர் தோட்டநகரம் எப்படி எப்படியெல்லாம் இருக்குன்னு பார்க்கவும், அதை உறவு ஆக்கிக்கவும் எங்க ஊர் சிடி கவுன்சிலர்ங்க சிலர் போயிட்டும் வந்திருக்காங்க! எங்க ஊரோட சரித்திரம் வெறும் 166 வருசம்தான் என்றபடியால் பெங்களுர் எங்களுக்கு அக்கா!
இந்தப் பகுதியில் புது ஏரியா உருவாகிருச்சு. வீடுகள் கட்ட ஆரம்பிச்சு, இப்போ வீடு கட்ட நிலம் கிடைக்கறதில்லையாக்கும்.
அஞ்சு வருஷத்துக்கு முன் போய் வந்த இடத்தைப் பத்தி இப்ப ஏன் திடீர்னு எழுதறேனாம் ?
ஹாஹா... காரணம் வச்சுருக்கேன். அடுத்த பதிவில் பார்க்கலாம் :-)
5 comments:
150 வருடத்துக்கு முந்திய கட்டிடங்கள் உறுதி என்பதால் தாக்கு பிடித்திருக்கிறது இப்போது உள்ளவை ??
நகரமும் விரிவடைய வீடுகளும்வர நிலங்களும் இல்லாமல் போவது எங்கும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இங்கு கடலோரம் தென்னந்தோப்புகளாக இருந்த நிலங்களையும் கடல்காற்று ஊருக்குள் பிரவேசிக்க முடியாதவாறு கட்டிடங்கள் மறைத்துக் கொண்டு ஹோட்டல் என்ற பெயரில் ஆக்கிரமிக்கின்றன.பசுமையும்போய் காற்றும் இல்லை.
கல் க்வாரி தகவல்கள் அனைத்தும் சிறப்பு. படங்களும் அழகு . ..
அருமை நன்றி
சுவாரஸ்யமான இடங்களும், படங்களும்!
நம்ம பெங்களுர் தோட்டநகரம் எப்படி எப்படியெல்லாம் இருக்குன்னு பார்க்கவும், அதை உறவு ஆக்கிக்கவும் எங்க ஊர் சிடி கவுன்சிலர்ங்க சிலர் போயிட்டும் வந்திருக்காங்க! எங்க ஊரோட சரித்திரம் வெறும் 166 வருசம்தான் என்றபடியால் பெங்களுர் எங்களுக்கு அக்கா! //
ஆஆ என்னாது!!? அக்கா இப்ப ரொம்பவே நலிந்து வருகிறாள். தோட்ட நகரமா? மேம்பாலம், மெட்ரோ நகரம்னு சொல்லணும்!!!!!
உங்கள் ஊர் தோட்டம் அழகு. க்வாரி தகவல்களும் சிறப்பு. இடம் சூப்பரா இருக்கு. பழைய சாமான் எல்லாம் பார்க்க.
வெளியே போனதுனால் ரஜ்ஜு தரிசனம் இல்லை போல!!
கீதா
Post a Comment