நம்மூர்லே புள்ளையார் கோவில் ஒன்னு கட்டும் எண்ணத்தில் கொஞ்சம்பேர் சேர்ந்து ஒரு குழு ஆரம்பிச்சு இருக்கோமுன்னு முந்தி ஒருக்கா சொன்னது நினைவிருக்கோ ? அதன் ஆரம்பக் கட்டமா... சத்சங்கம் ஒன்னு மாசம் ஒருநாள் (ரெண்டாவது சனிக்கிழமை ) சின்னதா பூஜை, பஜன்னு தொடங்கி நடந்துக்கிட்டு இருக்கு ஒரு நாலரை வருஷமா.....
எங்க நியூஸி வழக்கப்படி எதெடுத்தாலும் வீக் எண்ட்தான்னு இருக்கோம். அதேபோல முக்கிய பண்டிகைகள் ஏதாவது வரும்போது அதையும் இந்த மாதாந்திரப்பூஜையில் கோர்த்து விட்டுருவோம்.
இது நம்ம தைமாசம் என்றபடியால் பொங்கலோடு பூசத்தையும் சேர்த்தாச். வழக்கமா கொஞ்சம் பெரிய அளவில் (!!!!) கொண்டாடும் முக்கிய பண்டிகை என்றால், வெலிங்டன் நகரில் இருந்து நம்ம தமிழ் குருக்கள் வந்து நடத்திக்கொடுப்பார். அபிஷேகம், அலங்காரம், ஆரத்தி எல்லாம் ரொம்ப அருமையா நடத்திக்கொடுத்து நம்ம மனங்களில் இடம்பிடிச்சவர் என்றுதான் சொல்ல வேணும் நம்ம பத்மன் ஐயரை !
விசேஷம் ஒன்னும் இல்லாத மாதங்களில் கூடும் சத்சங்கத்துக்கு, உள்ளூர் நேபாளி பண்டிட் வந்து நடத்திக்கொடுப்பார்.
பொதுவா சனிக்கிழமை சாயங்காலம்தான் சத்சங்கம் கூடல். ஆனால் ரொம்பவே முக்கிய விழான்னால்.... பகல் நேரத்தில்தான். பத்துமணின்னு சொல்லிவச்சால், சனம் எப்படியும் பதினொரு மணிக்கு வந்துரும். பூஜை முடிச்சுப் ப்ரஸாதம் விளம்பி, கடைசியில் அலங்காரங்களைப் பிரிச்செடுத்து, வாடகைக்கு எடுக்கும் ஹாலைச் சுத்தம் செய்து முடிக்க எப்படியும் பகல் மூணு மணியாவது ஆகிருமுன்னு வையுங்க.
இதுக்குத்தான் கோவில் ஒன்னு சின்ன அளவிலாவது கட்டிக்கலாமுன்னா..... எங்கே ? இன்னும் புள்ளையார் மனசு வைக்கலையே....
புள்ளையார் கோவில் என்று சொல்லிக்குவோமே தவிர, அவருடைய அம்மா, தம்பி, தம்பி குடும்பம் எல்லோரும் வந்துட்டாங்க. இன்னும் தகப்பன்தான் வந்து சேரலை. சத்சங்க அங்கத்தினர் ஒருவர் வீட்டிலிருக்கும் பாணலிங்கம் , மஹாசிவராத்ரி பூஜையில் கலந்து கொள்வது வழக்கம்.
இருவிழா என்பதால் பகல் நேர நிகழ்ச்சியாக அமைஞ்சது. இன்றைக்கு மாட்டுப்பொங்கல் வேற ! இன்றைக்குக் கோவிலே சாப்பாடு போடப்போகுது என்பதால் நம்ம வகையில் பழங்கள் மட்டும் கொண்டு போனோம்.
அபிஷேகத்துக்குத் தயாராக முருகன் குளத்தில் நின்னார்:-) அபூர்வமாகக் கரும்பு கிடைச்சது. புள்ளையாருக்கு ஆச்சு :-) யானைக்குக் கரும்பு ஃபேவரைட் இல்லையோ !
மற்ற ஏற்பாடுகள் எல்லாம் நடந்துக்கிட்டு இருக்கு. அலங்கரிச்ச காவடிகள், பாலபிஷேகத்துக்கான பால் சொம்புகள், பொங்கல் வைக்கறதுக்காக் கோலம் போட்டு வச்ச இடத்தில் அடுப்பு ..... எல்லாம் ரெடி!
வெலிங்டனில் இருந்து ஐயர் வரணும். காலையில் ஒன்பது மணிக்கு வரவேண்டிய ஃப்ளைட். வந்த ஃப்ளைட் , லேண்டிங் கியரில் ஏதோ குழப்பமுன்னு தரையில் இறங்க முடியாமல் திரும்பிப் போயிருச்சு. அவர் அடுத்த விமானத்தில் வர்றேன்னு தகவல் அனுப்பினார். எப்படியும் பதினொன்னரை ஆகிரும்.
ரொம்ப நேரம் ஆகிருமேன்னு, ராஹுகாலம் ஆரம்பிக்குமுன் பெரியவளா, லக்ஷணமா பொங்கல் விழாவை ஆரம்பிச்சு வச்சேன் :-) எல்லோரும் பங்கெடுத்துப் பொங்கலும் பொங்கி முடிச்சோம்.
பத்மன் ஐயர் வந்ததும், உடனே பூஜை ஆரம்பிச்சுப் பக்தர்கள் அனைவருமா பால்குடம் ஏந்தி வலம் வந்து பாலபிஷேகம் செஞ்சு முடிஞ்சதும் , மற்ற நியமப்படி செய்யும் அபிஷேகம் நடத்தி அலங்காரம் நடக்கும் சமயம்..... கலை நிகழ்ச்சிகளா பாட்டு, நடனம், பஜனை. எல்லாம் கொஞ்சம் அவசரகதியில்தான். குறிப்பிட்ட நேரத்தில் ஹாலைக் காலி செஞ்சு கொடுத்தாகணுமே! ( இதுக்குத்தான் சொந்தமாச் சின்ன அளவிலாவது கோவிலுக்குன்னு ஒரு இடம் வேணுங்கறது... இல்லை ? )
அலங்காரம் முடிஞ்சதும் அர்ச்சனை, தீபாராதனை. அதன்பிறகு சாமி ஊர்வலம். எல்லாம் ஹாலுக்குள்ளேயேதான்.
காவடி எடுக்கும் பக்தர்கள் காவடியுடன் வலம் வந்தார்கள். சின்னப்பிள்ளைகள்தான் அதிகம்.
நண்பர் யூட்யூபில் விழாவை காட்சிப்படுத்தியிருக்கார். நேரம் கிடைத்தால் பாருங்கள்'
<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/F9MgphjTSEU" title="YouTube video player" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>
பொங்கலுக்கான கும்மியும் 'லேடீஸ் ஸ்பெஷலா' ஆச்சு !
மேலே லிங்க் வேலை செய்யலைன்னா.... கீழே...
https://youtu.be/F9MgphjTSEU
அப்புறம் ?
சாப்பாடுதான் ! நல்ல கூட்டம்தான் இன்றைக்கு !
நாங்க வீட்டுக்கு வந்ததும் நம்ம ரஜ்ஜுவுக்குப் பூனைப்பொங்கல் வாழ்த்துச் சொல்லிட்டு, HSS (Hindu Swayam Sevak வாரம் ஒரு முறை நடக்கும் வகுப்பு ) சங்கராந்தி விழாவுக்குப் போயிட்டோம். எல்லா நாட்களிலும் நமக்குப் போக முடியறதில்லை. ஆனால் முக்கிய நிகழ்வுகளுக்குத் தவறாமல் போகத்தான் வேணும்.
ஒவ்வொரு மாநிலத்திலும் சங்கராந்தி விழாவை எப்படிக் கொண்டாடறாங்கன்னு பிள்ளைகள் பேசுனாங்க. திரையில் ஒரு ஸ்லைடும்!
தமிழ்நாடு விவரம் சரியான்னு என்னைக்கேட்டு உறுதிப்படுத்திக்கிட்டாங்க. (எல்லாஞ்சரிதான் ஒன்னைத்தவிர! போகட்டும் அடுத்தமுறை திருத்திக்கலாம்.)
சனிக்கிழமை என்றபடியால் சாயங்காலம் நம்ம ஹரேக்ருஷ்ணா கோவிலுக்கும் போய் வந்தோம்.
4 comments:
படங்களும் விழாவும் சிறப்போ சிறப்பு. ரஜ்ஜுவைக் காணாதது குறை.
பூசம் பால் குடம், காவடி , சுவாமி உலா என அனைத்தும் சிறப்பு.
படிக்கும்போது சிங்கப்பூர் வீரமகாகாளி அம்மன் விழாவை நினைவில் கொண்டு வந்தது .
அனைத்தும் நன்று.
வாங்க ஸ்ரீராம்,
ரஜ்ஜு வீட்டை விட்டு வெளியே வரமாட்டான். படிதாண்டாப் பத்தன் :-)
வாங்க மாதேவி,
கோவில் முக்கியஸ்தர்கள் மலேசியா மக்கள். அதான் அங்கே எப்படியோ... இங்கேயும் !
பண்டிட்டும் இலங்கையரே !
Post a Comment