Monday, June 13, 2022

பூத்தையல் படிக்கலாமா ?

நம்ம பேட்டையில் ஒரு புத்தர் கோவில் இருக்கு. இங்கிருக்கும்  தாய்வான் நாட்டு மக்கள் கட்டியிருக்காங்க.  அங்கே கோவில் மட்டுமில்லாமல், கீழ்தளத்துலே ஒரு பெரிய ஹால், கல்ச்சுரல் சென்ட்டர் / ஆர்ட் கேலரி வகையிலே உண்டு.   இங்கே அடிக்கடி  கண்காட்சிகள் நடக்கும். சீனக்கலைகள் மட்டுமில்லாமல்  மற்ற  நாட்டுக்கலைகளும்  சிலசமயம்  உண்டு. மாடியிலும் ரெண்டு மூணு பெரிய  அறைகள் இப்படியே  ஓவியங்களுக்குன்னு ஒதுக்கியிருக்காங்க.
நாம் அங்கே அடிக்கடி போவோம். அவுங்க மெயிலிங் லிஸ்ட்லே இணைஞ்சுருப்பதால்  நிகழ்ச்சி விவரங்கள் எல்லாம் முன்கூட்டியே அனுப்பிருவாங்க. 

மாடியில் ஒரு அழகான புத்தர் சந்நிதி.  இவரே ஒரு காரணம் நாம் அடிக்கடி போய் வர்றதுக்கு ! 

இங்கே நம்மூரில் எம்ப்ராய்டரியில் ஆர்வம் இருக்கும் மக்களால் ஒரு குழு ஆரம்பிக்கப்பட்டு ஆச்சு, அம்பத்தியஞ்சு ஆண்டுகள்.  கற்றுக்கொள்ள ஆர்வம் இருக்கும் மக்களுக்குச்  சொல்லியும்  தர்றாங்க.  மஹா பொறுமைசாலிகளுக்கு மட்டுமே இது ! என்னைப்போல ஆட்களுக்கு நினைச்சே பார்க்க முடியாத ஒரு கலை !   இங்கே புத்தர் கோவில் ஹாலில் இவுங்களுடைய கைவேலைகளைக் காட்சிக்கு வச்சுருந்தாங்க.
போனமுறை இதே போல் ஒரு பூத்தையல் கண்காட்சிக்குப்போய், அப்படியே அடிச்சு வச்ச சிலை போல மெய்மறந்து நின்னது உண்மை. எல்லாம் சீனர்களின் கைவேலை.  அதிலும் அந்த கோயி (KOI )மீன் கூட்டங்கள் அப்படியே கண்ணைக்கட்டி இழுத்தது... ஹைய்யோ !

நம்ம துளசிதளத்தில் அதைப்பற்றி எழுதியது இங்கே. நேரமிருந்தால் பாருங்களேன் !

http://thulasidhalam.blogspot.com/2021/05/blog-post.html

இதே ஆர்வத்தில்  உள்ளூர் கைவேலைகளைப் பார்க்கப்போனேன்.  உள்ளே போனதும்  தேவதையின் வரவேற்பு !  ஆஹா....
எங்கூரில்  நடந்த  ஒரு முக்கிய சமாச்சாரத்தை நாலைஞ்சுபேர் 'பின்னி' இருந்தாங்க.  மனசில் பெரும் பாரத்தை ஏத்திவச்ச  நிலநடுக்கம். ஊரில் பாதி அழிஞ்சே போச்சு. 'நடந்து' பனிரெண்டு வருஷங்கள் ஆனாலும்... இன்னும் ஊர் பழைய நிலைக்கு வரலை. ப்ச்....

மேகம் சூழ்ந்த நிலவு நல்லாவே இருக்கு. இன்னும் சில அழகிய கைவேலைகளைப் பார்த்துக்கிட்டே போனப்ப...  மயில் ஒன்னு அட்டகாசமா உக்கார்ந்துருக்கு !









எல்லா பூத்தையல் வேலைகளையும் அழகான ஃப்ரேம்களுடன்  தூசி தும்பு படியாமல் இருக்கக் கண்ணாடி போட்டு வச்சுருக்காங்க. கூடவே  அததுக்கான தலைப்பும், எந்த மாதிரி நூல்களைப் பயன்படுத்தியிருக்காங்கன்ற விளக்கமும்.

இப்பக் கடந்த மூணு வருஷமா பூவுலகத்தை ஆட்டிப்படைக்கிற நுண்கிருமிக்கு முதலில் பெயர் வைக்கும்போது, அதன் தாயகத்தின்  பெயரைச் சேர்த்தப்ப, அந்த நாடு ஏதோ தில்லுமுல்லு செய்து தன் நாட்டின் பெயரை அதோடு இணைக்க விடாமல்  செஞ்சுருக்குன்னு  ஒரு தகவல் வாசித்த நினைவு.  ஆனால் எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுதான் உண்மை. எங்க ரஜ்ஜு உட்பட... அது எங்கே இருந்து ஆரம்பிச்சதுன்னு எல்லோருக்கும் நல்லாவே தெரியும்! (ரஜ்ஜுவுக்கு நாந்தான் சொன்னேன் :-)ஹிஹி  )
இதையும் ஒரு பூத்தையலாப் போட்டு வச்சுருந்தாங்க. பெயருக்குப் பதிலாப் படம்.  பார்த்தவுடனே தெரியும்,   படத்தில் இருப்பது  எந்த நாட்டுக்குரியதுன்னு :-)


ஒரு பூத்துக்குலுங்கும் மரத்தடியில் பெஞ்சு போட்டு வச்சுருக்காங்க. போய் உக்காரலாமான்னு இருந்தது உண்மை !





புதுவித முறையில் பூத்தையலும் பெயிண்டுமாக்கூட சில பரிசோதனைகள் நடத்தி இருக்காங்க.  மனுச மனசின் கற்பனைகளுக்கு எல்லை ஏது ? கண்டுபிடிப்புகள் எல்லாமே மனசு உருவாக்கினதுதான்  இல்லையோ !

சரி, மாடி அறைகளுக்குப் போகலாமுன்னு போனால்,  எதிரில் சாலையில் ஒரு ஊர்வலம்.  இங்கே இப்படி ஊர்வலம் பார்ப்பதெல்லாம் அபூர்வம் என்பதால், கொஞ்சம் நின்னு பார்த்தோம். 
அரசுக்கு எதிரான ஊர்வலம்தான். அது என்னன்னா.... இந்த கோவிட் சமாச்சாரம் 2019 லே ஆரம்பிச்சு உலகப்பயணம் செஞ்சுக்கிட்டு இருந்துச்சுல்லே.....   அப்போ இதன் தீவிரம் அதிகரிச்சது.  அப்போ எங்கள் கோடைகாலம் வேறயா....  நிறையப்பேர் வெளிநாடுகளுக்கு சுற்றுலா போயிருந்தாங்க. நாங்களும் இந்தியப்பயணம் முடிச்சு  வருஷக்கடைசிநாள் திரும்பி வந்துருந்தோம்.  2020 பொறந்துச்சு. பயணம்போய்த் திரும்பி வந்த மக்களில் ஈரான் போய் வந்த ஒருவர்,  அவருக்குத் தெரியாமலேயே  கோ. சனியனைக் கையோடு கூட்டி வந்துருக்கார்.  வீடு வந்தவுடன் அக்கம்பக்கம் கடைகண்ணி, நண்பர், உறவினர்னு  எல்லா இடத்துக்கும் போயும் வந்துருக்கார்.  அப்புறம்தான் நோய்க்கான அறிகுறி தெரிஞ்சது.   ஃபிப்ரவரி 28லே  நாட்டுக்குள் நுழைஞ்சது ஏழரைன்னு தகவல். அதுக்குள்ளே பரப்பியாச். 
அரசு பாதுகாப்பு நடவடிக்கையா முதலில் நியூஸியின் எல்லைகளை மூடிட்டாங்க. நாட்டின் குடிமக்களை மட்டும் எப்படியாவது நாட்டுக்குள்ளே கொண்டுவரணுமேன்னு அரசு செயல்பட்டது.  அப்படி வர்றவங்களை, வந்து இறங்கியதும் ஊருக்குள் விடாம , ரெண்டு வாரங்களுக்குத் தனிமைப்படுத்தணுமுன்னு  திட்டம்.  அவுங்களுக்குக் கோவிட் பாதிப்பு இருந்தால்  அடுத்தடுத்த  பரிசோதனைகளில் தெரிஞ்சுரும். அப்புறம் அவுங்களுக்குத் தேவையான சிகிட்சை தருவாங்க. 


இதுக்காக , பெரிய ஊர்களில் உள்ள (எங்கூர்தான் தெற்குத்தீவின் பெரிய ஊர் !)  அஞ்சு நட்சத்திர ஹொட்டேல்களையெல்லாம் அரசு வாடகைக்கு எடுத்துச்சு. ரெண்டு வாரம் தங்கல், சாப்பாடு எல்லாம் அரசின் செலவில் தான்.
யுகாதிப் பண்டிகை( 2020 ) கொண்டாடுன நாள் இரவு ஊரடங்கு ஆரம்பிச்சது.

நாட்டில் என்ன ஆச்சுன்னு ஒரு மினித்தொடர் அப்போ எழுதியிருந்தேன். அதன் தலை இங்கே....

http://thulasidhalam.blogspot.com/2020/07/1.html

வெறும் அஞ்சு பதிவுகள்தான். விருப்பம் இருந்தால் பாருங்க.  தடுப்பு மருந்து அப்போ வரலை.  

தடுப்பு மருந்து வந்தவுடன், எல்லோரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கணுமுன்னு அறிவிச்சாங்க. இது தங்கள் நலத்துக்காகன்னு புரிஞ்சுக்காத சிலர்,  கண்டுக்கவே இல்லை.  அதனால் அரசு தடாலடியா ஒரு அறிவிப்பு விட்டுச்சு. தடுப்பூசி போட்டுக்காதவங்களை வேலையிலிருந்து  நீக்குவோம்னு.  இவுங்க மூலமா  மற்றவங்களுக்குப் பரவக்கூடாது பாருங்க.....
அதுதான்  கொஞ்சம்,  மக்களை அரசுக்கெதிராகக் கிளப்பி விட்டுருச்சு.  அதுக்கான ஊர்வலம்தான் இது !  
இதென்னடா வம்பாப்போச்சேன்னு நினைச்சோம்.  மேலே சந்நிதி ஹாலுக்குள் போய்  புத்தரைக் கும்பிட்டுக்கிட்டு, இந்த இக்கட்டுலே இருந்து  உலக மக்களையும் நாட்டையும் காப்பாத்துன்னு  வேண்டுதல் வச்சுட்டு வந்தோம்.


உண்மையைச் சொல்லணுமுன்னா....  ஆரம்பகாலம் முதல்  எங்க தெற்குத்தீவில் இந்த நோய்ப்பரவல்  கிடையாது.   மனிதர்கள் வடக்குத்தீவில் இருந்து தெற்குத்தீவு வர்றதுக்குத்  தடை இருந்தது.  2021 க்றிஸ்மஸ் விடுமுறை சமயம்,   சொந்தங்களைப் பார்க்கணுமுன்னு அரசை நச்சரிச்சு  வடக்கு மனிதர்கள்  தெற்கே வந்து  கொஞ்சம் பரப்பிட்டுப்போனாங்க.  இந்த வருஷம் (2022) ஜனவரி 23 லே இருந்துதான்  எங்களுக்கும் பிடிச்சது சனி.         

 இதுக்குள்ளே அந்த ஆரம்பகால நுண்கிருமி, அவதாரங்கள் பல எடுத்து  படு வேகத்தில்  பரவிக்கிட்டே இருக்குன்றது,,,, உங்களுக்கும் தெரியும்தானே ? ப்ச்.....


6 comments:

said...

மயில் சேவல் மிக அருமை நன்றி

said...

படங்கள் யாவும் அழகு. வீட்டில் ரஜ்ஜு ஒரு சிரிப்பை அதிகம் முகத்தில் காட்டாத கண்டிப்பான முதலாளி போல இருக்கிறது!

said...

கைவேலைப்பாட்டு படங்கள் எல்லாம் சூப்பரோ சூப்பர்.

said...

வாங்க விஸ்வநாத்,

எனக்கும் மயில் ரொம்பவே பிடிச்சது !

said...

வாங்க ஸ்ரீராம்,

ரஜ்ஜு சிரிப்பதே அபூர்வம். ஆனால் குறும்பு அதிகம் இப்பெல்லாம்!

said...

வாங்க மாதேவி,

சிரத்தையாகச் செய்யும் வேலைகளில் ஒரு அழகு அமைஞ்சுருதுல்லே !