Friday, April 17, 2020

Cavern Church என்ற குகைக்கோவில்..... (பயணத்தொடர் 2020 பகுதி 40 )

அவுங்க கணக்குப்படியே பார்த்தால் இந்தப் பகுதிதான் மூத்தது. ரெண்டாயிரத்து இருபது வருஷம் ஆகி இருக்குல்லே? Coptic Cairo என்று பெயராம்! மார்கெட்டுலே இருந்து கிளம்பி அரைமணியில் இங்கே வந்துருக்கோம்.  தெருவுக்குள் போகும் வழியில்  கம்பித்தடுப்பு வச்சு மூடி இருக்காங்க. பக்கத்தில் ஒரு ஓரமா இருக்கும் பந்தலுக்குள் போய், அங்கெ  இருக்கும் நபரிடம் சொல்லிட்டு, ரெஜிஸ்தரில் கையெழுத்தும் போட்டுட்டுப் போகணும். கணக்கெடுப்புன்னு நினைக்கிறேன்.

அந்தத் தெருவிலே ஒரு  பக்கம் பூராவும் நினைவுப்பொருட்கள் கடைகள்,  பாபிரெஸ் தாளில் வரைஞ்சுருக்கும் ஓவியங்கள்  விற்கும் கடைகள்னு நிறைய இருக்கு.




ஒரு இடத்தில்  கீழே போகும் படிகள் வழியா இறங்கிப்போறோம். சுரங்கப்பாதை போல இருக்கு.   கீழ்தளம் போனதும் புத்தகக்கடை, நினைவுப்பொருட்கள் கடைன்னு  ரெண்டு பக்கங்களிலும் இருக்க,  நாம் நடந்துபோறோம். இன்னொரு கட்டடவாசல்...  கன்யாஸ்த்ரீகளின் மடம்.


இதையெல்லாம் கடந்து சுரங்கப்பாதை முடிஞ்சு இன்னொரு சந்தில் போறோம்.  குகை சர்ச் இருக்கும் நுழைவு வாசலுக்கு வந்துருந்தோம்.   மேலே முகப்பில் கழுதை சவாரியில் ஒரு பெண்ணும் கையில் குழந்தையும் இருக்க, ஒரு ஆண், கழுதையின் கழுத்துக்கயிறைப் பிடிச்சுக்கிட்டு நடந்து போறார். பின்புலத்தில் அந்த மூணு  பிரமிடுகள் !




அதுக்குள்ளே நுழைஞ்சு போனால் எலக்ட்ரானிக் கேட்.  கடந்து போனால் ஒரு சர்ச்சு வாசலுக்கு வந்துருக்கோம். கீழே போக ஒரு ஏழெட்டு படிகள். இறங்குனதும் தரையில்  கண்ணாடி போட்ட ஒரு பகுதி.  நைல்நதியில் வெள்ளம் வரும்போது, கீழே இருக்கும் பள்ளத்திலே தண்ணீர்  வந்துருமாம். அப்ப ஒரு விழா நடத்துவாங்களாம்.  வெறும்  பள்ளமா இருந்ததைத்தான் இப்போ கண்ணாடித்தரை போட்டு மறைச்சுருக்காங்களாம். பழைய காலங்களில்  கிறிஸ்து மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு இங்கே நல்ல எதிர்ப்பு இருந்ததால்.... யாருக்கும் தெரியாமல்தான் அவுங்க பண்டிகைகளைக் கொண்டாடுவாங்களாம்.

உள்ளே  முழுசுமா செங்கல் சுவர்கள்...   இன்டீரியர் முழுக்கச் செங்கலோ செங்கல் ! பார்க்கக் கொஞ்சம் வித்யாசமாத்தான் இருக்கு.


கிறிஸ்மஸ்  பண்டிகைக்காகக் குழந்தை யேசு புல்குடிலில் கிடக்கும் நேட்டிவிடி ஸீனுக்கான அலங்காரம் ஒருபக்கம்.



இந்தச் சர்ச் நாலாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாம். பழைய ஓவியங்கள் பலதும் சுவர்களில் !  இப்போ  உள்ளே இருக்கும் தூண்கள் மட்டும்தான்  நாலாம் நூற்றாண்டு சமாச்சாரம். அப்புறம் எட்டாம் நூற்றாண்டில்  தீ விபத்தில்  அகப்பட்டுக்கிட்ட சர்ச்சைப் பழுது பார்த்துருக்காங்க.   இப்போ இருக்கும்  சர்ச்சைப் பதினோராம் நூற்றாண்டில்தான் புதுப்பிச்சுக் கட்டுனாங்கன்னு தகவல் கிடைச்சது.  எப்படியும் நூற்றாண்டுகள் கடந்த சர்ச்தான் இல்லையோ !





அப்புறம் இந்தச் சர்ச்க்குள்ளே போகும்போது   Abu Serga னு போர்டு பார்த்தோமே....  அது  என்னவோ என்ற விசாரணையில்,  சிரியா நாட்டுக்காரர்களான  இவர்கள் ரோமன் படையில் நல்ல பதவியில் இருந்தவங்களாம்  Sergius (or Serge) and Bacchus என்றவர்கள். இவுங்க கிறிஸ்டியன்கள் என்ற விவரம்  அப்போ யாருக்கும் தெரியலை.   கடைசியில் ஒருநாள் விவரம் வெளிப்பட்டதும்,  இந்த ரெண்டுபேரையும் பிடிச்சுச் சித்திரவதை செஞ்சுருக்காங்க ரோமன் படைத்தலைவர்கள்.  சித்திரவதை தாங்க முடியாமல் Bacchus மரணம் அடைஞ்சதும், Sergius தலையைக் கொய்து போட்டுருக்காங்க.   இதெல்லாம் நடந்தது நாலாம் நூற்றாண்டில்.  இவுங்களுக்குப் புனிதர் பட்டம் கொடுத்து, மரியாதை செய்யும் விதமாத்தான்  இந்தச் சர்ச்சைக் கட்டுனாங்களாம். சரி. இங்கே , இந்த இடத்தில் ஏன் கட்டுனாங்கன்னா.... ஒரு சுவாரஸ்யமான  விஷயம்  கிடைச்சது.
சுத்திப்பார்த்துக்கிட்டே இன்னொரு படிகட்டுகளில் இறங்கிப் போறோம். கீழேதான் குகை.  இங்கேதான் யேசு, குழந்தையா இருந்தப்ப, தாயும் தந்தையும்  Herod  மன்னனுக்குப் பயந்து  மூணு மாசம் ஒளிஞ்சுருந்தாங்களாம். ரெண்டு வயசுக்குட்பட்ட எல்லா ஆண்பிள்ளைகளையும் கொல்லணுமுன்னு மன்னன் உத்தரவு.  ஒளிஞ்சுருந்த குடும்பத்துக்கு தண்ணீர் சப்ளை, ரொம்பப்பக்கத்துலே இருந்தது இந்தக்கிணறுதான்னு  அங்கே ஒரு கிணத்தைக் கண்ணாடி மூடி போட்டு வச்சுருக்காங்க.  குடும்பம் இருந்த குகையின்  ஒரிஜினல் பாறைன்னு ஒன்னு!  எல்லாம் ரெண்டாயிரம் வருசங்களுக்கு முந்திய சமாச்சாரம்....   குழந்தையைத் தூக்கிக்கிட்டு மூணு வருஷம் இப்படி அலைஞ்சுக்கிட்டு  அங்கங்கே ஒளிஞ்சுருந்ததா ஒரு ரூட் மேப்  வாசலில் வச்சுருக்காங்க.





இந்த குகைக்கு மேலேதான் நாம் பார்க்கும் புனிதர்களின் நினைவுக்காகக் கட்டுன சர்ச். அதான் மொத்ததுக்கும் குகைக்கோவில்னு பெயர் !  Cavern Church.

உண்மையைச் சொன்னால்....  இந்தக் கிணறு பார்த்ததும்  நம்ம ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலின் கண்ணாடிக்கிணறு ஞாபகம் வந்தது.  சம்பவம்....  எட்டாவது குழந்தையைக் கொல்லணுமுன்னு , அந்தப்பிள்ளை  யாரு எங்கே இருக்கான்னு தெரியாம, ஊர்லே இருக்கும் அத்தனை ஆண் குழந்தைகளையும் கம்ஸன் கொல்லச் சொல்லி  ஆட்களை அனுப்பினான்னு....  
அப்புறம் இன்னொன்னு.....  மோசஸைக் காப்பாத்தறதுக்காக, பொட்டியில் வச்சு  ஆத்துலே விடறதும்....   அந்தக்குழந்தையை அரசகுமாரியே (பிள்ளைகளைக் கொலை செய்யச் சொன்ன ராஜாவின் மகள்)ஆத்துலே கண்டெடுத்து, ஆத்துக்குக் கொண்டுபோய் வளர்த்ததும்.... பாப்பிரஸ் ஓவியத்தில் பார்த்து.... சட்னு குந்தியும், குழந்தையும் ஞாபகம் வந்தது உண்மை.... 
திராக்ஷை ரஸம் எடுக்க அந்தக் காலத்து  மெஷீன் ஒன்னு.....

  சர்ச்சுலேயே ஒரு  பக்கம்  விற்பனைக்கு சில ஜெபமாலைகள், சின்ன பொம்மைகள் எல்லாம் வச்சுருக்காங்க.
 
இங்கே  ஒரு தூணில் இருக்கும் கொஞ்சம் அழுக்கான கறைகள் ஒரு அற்புதத்தை நினைவுபடுத்துதாம். 1967  இல்  இஸ்ரேலுக்கும், ஈஜிப்ட்டுக்கும் நடந்த போரின் போது,  அந்தத் தூணில் இருந்து ரத்தம் வடிய ஆரம்பிச்சுருக்கு.  அந்த சமயம்  இங்கே வருகை தந்த  Pope Cyril VI ஜெபிச்சதும், ரத்தம் வர்றது நின்னுபோச்சாம்.
சின்னச் சந்துகளில் பழங்காலக் கட்டடங்கள் !




அதுலேயே ஒரு பக்கமா யூதக் கோவில் (!) ஒன்னு. இது யேசு காலத்துக்கு முன்பே இருந்த (!) மதம்.  Ben Ezra Synagogue னு பார்த்துட்டு அதுக்குள்ளே போனோம்.   பளிங்குத் தூண்களும்  ஆல்டருமா அட்டகாசம் !  பழுதுபார்க்கும் வேலை நடந்துக்கிட்டு இருக்கு !  உள்ளே படம் எடுக்க அனுமதி இல்லை. அதுக்காக விடமுடியுமா?  கேட்டதும் கொடுக்கும் கூகுளாண்டவர் அருளினார் !

இந்தப்பகுதிகளுக்கெல்லாம்  போய்வர அந்த சுரங்கப்பாதைதான் வழி.  அப்படி  அமைச்சுருக்காங்க. சர்ச்சுக்குப்போன அதே வழியாகவே திரும்பி வர்றோம். தெருவின் ரெண்டு பக்கங்களிலும் ஒரே மாதிரியான மரங்கள். ஆலிவ் மரம்னு நினைக்கிறேன். இதே வகைதான் காலையில் போன கோட்டையிலும் கூட !

சுற்றுலாப்பயணிகளை, இங்கே  கூட்டிவந்து காமிக்கிறாங்க. அதுக்கான உள்ளூர் டூர்கள் நிறைய இருக்கு!  நடந்து  நடந்தே போய் பார்க்கவேண்டிய பகுதி....
ஈஜிப்ட்லே ரொம்பவே பழைய பகுதியான இதுலே இந்த  Cavern சர்ச் இருக்குமிடம்  Babylon Fortress !!!  அடுத்தாப்லே ஒரு  Hanging Church கூட   இருக்காம்.  அட!  அப்ப இங்கேதான் அந்த உலக அதிசயங்களில் ஒன்னான Hanging garden  இருக்கோ?  Babylon, Hanging  என்ற ரெண்டு வார்த்தைகள் காதுலே விழுந்ததும்  மனசு,  ரெண்டையும் சேர்த்து முடிச்சுப்போட்டுருக்கு....

ஊஹூம்.... இல்லை. அது வேற நாட்டுலே  இருக்கும் Babylon.  இங்கே இந்தச் சர்ச் கொஞ்சம் உசரமான இடத்துலே கட்டி இருக்காங்க என்றதால்  Hanging Church  னு பெயர் வந்துருக்கு ! நாம் அங்கே போகலை.... நம்ம ஐட்டிநரியில் இல்லை போல.... போகட்டும்!....
இதே ஏரியாவில் இன்னொரு மதர் மேரி சர்ச்சும் இருக்கு. அதுக்குப்பின்னாலே ஓடும் நைல்நதியில்தான்,   ஓலைப்பொட்டியில் மிதந்துவந்த  குழந்தையை (மோசஸ் ) அரசகுமாரி கண்டெடுத்ததாகச் சொல்றாங்க. அங்கேயும் போகலை. டென் கமாண்ட்மென்ட் படத்தில் பார்த்த நினைவு இருக்கோ?

இன்றைக்கு ஒருநாள் மட்டுமே உள்ளூர் டூர் என்பதால் இன்னும் முக்கியமான இடங்களுக்குப் போகணுமேன்னு கிளம்பிட்டோம்.

தொடரும்......... :-)


10 comments:

said...

அழகான இடங்கள். எத்தனை பழமை....

ஒப்பீடுகள் சிறப்பு.

படங்கள் அனைத்தும் அழகு.

said...

இந்த சர்ச் கேள்விப்பட்டதுல்லை. இயேசு மறைந்திருந்த இடமா?

ஆண்டாள் கிணறு, கர்ணன் உங்களுக்கு மட்டும் நினைவுக்கு வரவில்லை.

போட்டோக்களுக்கு தலைப்பு வைத்திருக்கலாம்.

said...

தங்கள் வலைத்தளம் எமது வலை ஓலை வலைத் திரட்டியில் இணைக்கப்பட்டுள்ளது.

said...

அழகிய இடம் .ஒவ்வொன்றுக்குமே ஒவ்வொரு சரித்திரம். பார்ததிலே நமக்கும் மகிழ்ச்சி.

said...

ஆகா ... பழமையை பார்க்கும் போது கூட புதுமையான உணர்வே மிஞ்சுகிறது ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

பார்த்தவுடன் மனசு தானாகவே ஒப்பிட ஆரம்பிச்சது...

வருகைக்கும் ரசித்தமைக்கும் நன்றி !

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

குழந்தை காலத்தில்.... ஒளிஞ்சு வாழ வேண்டியதாகப்போயிருச்சு.

கழுதை சவாரியில் தாயின் மடியில் இருக்கும் குழந்தை !

ஏற்கெனவே நீண்டு போகும் பதிவும் படங்களும்.... இதுலே தலைப்பு வேற வைக்கணுமுன்னா எப்படி ?

said...

வாங்க சிகரம் பாரதி,

நன்றி !

said...

வாங்க மாதேவி,

சரித்திரம் உள்ளே போனால் அனுபவிக்க ஏராளம் இருக்கே!

said...

வாங்க சிவா,

பழமை எப்போதும் புதுமைதான் !