Friday, April 24, 2020

ஆடோ ஆடுன்னு ஆடினால்.... (பயணத்தொடர் 2020 பகுதி 43 )

நம்ம ஹொட்டேலின் எதிரில் இருக்கும் பாலம் கடந்து அந்தாண்டை நைல் கரையோரமாப் போறோம். டின்னர் நமக்கு ஆண்ட்ரியாவில் !  ஒரு ஏழரை கிமீ தூரத்தில் இருக்கு இந்த ஆண்ட்ரியா. அஞ்சடுக்குக் கப்பல் இது.
நம்ம அறை பால்கனி வழியாப் பார்த்தால் நைலின் மறு கரையில் மிதக்கும் ரெஸ்ட்டாரண்டுகள்  தெரியுதுல்லே....    அதே மாதிரிதான் இதுவும்.  என்ன ஒரு வித்தியாசமுன்னா....   அதெல்லாம் தண்ணியிலே நிக்குது.  இதுவும்தான். ஆனால்  அப்பப்ப கொஞ்ச தூரம்  நகர்ந்து போய்  தண்ணியிலே ஒரு சுத்து சுத்திட்டு வருதாம்.   Andrea Maadi Dinner Cruise.
க்ரீக் நாட்டைச் சேர்ந்த Mr. Andrea Philotheou  என்பவர் 1958 இல் தொடங்கிய   ரெஸ்ட்டாரண்ட் இது.  வியாபாரம் நல்லாவே சூடு பிடிச்சு இப்போ  ஈஜிப்ட் நாடு முழுக்க எக்கச்சக்கமான கிளைகள் விட்டுப் பெருகிருச்சு.  நாம்  இப்போ வந்துருக்கும் இந்த இடம்தான் தாய் வீடு. 61 வயசாகுது.

ஆண்டிரியாவுக்கு முன் போய் இறங்குனதும் அஸீஸ் நம்ம கூட வந்தார்.  இஸ்லாம் வண்டியைப் பார்க் பண்ணப் போயிட்டார்.  நிறைய விளக்குகளோடு ஜொலிக்குது இந்த அஞ்சடுக்குக் கப்பல்படகு.

 நைல்நதியின் இந்தப்பக்கக் கரை முழுக்க இப்படித்தான் சின்னதும் பெருசுமான ரெஸ்ட்டாரண்டுகள் தண்ணிக்குள்ளே நிக்குதே !
உள்ளே போனால்  எக்கச் சக்கமான கூட்டம் !
ஜன்னலாண்டை நமக்கு இடம் கிடைக்கலை.  ஆறு பேருக்கான  மேஜைகளை  அங்கே போட்டு வச்சுருக்காங்க. நாம் ரெண்டே பேர் இல்லையோ....   நம்ம டூரில் இங்கே வந்து சாப்புடறதும்  சேர்த்தி என்பதால்தான் இங்கே வந்துருக்கோம். இப்படியே பல டூர்கம்பெனிகளும்  பயணிகளை இங்கே கொண்டு வந்து விட்டுருது. .....  ட்ரிங்ஸ்  சமாச்சாரங்களுக்கு மட்டும் நாம்   தனியாக் காசு கொடுத்துடணும்.

பஃபே வகைதான்.  வெஜிடேரியன் ஃப்ரெண்ட்லியாம் ! (ஹாஹா....) தினமும்  மாலை மூணு பந்தி போட்டுடறாங்க. அஸ்தமன சமயம், அப்புறம் எட்டு/எட்டரை,  அதுக்கப்புறம் பதினொன்னுன்னு.....
சாப்பாட்டுக்கு ஒரு நீளக் க்யூ......  நாம்  கூட்டம் ஓயட்டுமுன்னு  உக்கார்ந்துருந்தோம்.  கூடத்தின் நடுவிலே கொஞ்சம் இடம் விட்டுவச்சுட்டு  இருக்கைகள் போட்டுருக்காங்க.  யாரோ ஒருத்தர் வந்து மைக் பிடிச்சுப் பாட ஆரம்பிச்சார்.  கூடவே வாத்யம் (கீ போர்டு) வாசிக்க இன்னொருத்தர். அவுங்க நாட்டுப் பாடல்களைப் பாடப்டாதோ.....    வெள்ளைக்கார சங்கீதம்தான்.....   அதுலேயும் நல்ல பாடல்கள் இருக்க,  இவர் த்ராபையாப் பாடிக்கிட்டு இருக்கார்.

நாங்க போய் நமக்கானதை எடுத்துவந்தோம். ஈஜிப்ஷியன் ரொட்டின்னு ஒன்னு இருந்தது.  எப்படித்தான் இருக்குன்னு பார்க்கலாமே...  சோறு கிடைச்சது. கூடவே கொஞ்சம்  காய்களும்.  அந்த ரொட்டி.... ஐயோ.... தொட்டுக்க எதாவது கறி வகைகள் இல்லாமல் வறட் வறட்ன்னு.... பல்லுக்குக் கேடு....  வேணாம்...
டிஸ்ஸர்ட் செக்‌ஷன் பரவாயில்லை.

பாடுனவர் இடத்தைக் காலி பண்ணதும்.... பெல்லி டான்ஸ் ஆரம்பம்.  கொஞ்சம் ஸாலிடான உடம்போடு ஒருத்தர் வந்து ஆடுனாங்க. ஜிலுஜிலுன்னு ட்ரெஸ் (!) தவிர ஆட்டம் ரொம்பவே சுமார்.  இங்கே எங்கூரில் மட்டும்  13 பெல்லிடான்ஸ் ஸ்கூல்  இருக்கு. வெள்ளைக்காரப் பிள்ளைகள்  நிறையப்பேருடன் , இந்த  டான்ஸ் ஒரு விதமான ஃபிட்னஸ் ஒர்க் அவுட் என்பதால்  இங்கே அம்பது அறுவது  வயசுப்பெண்களும்கூட  இந்தப் பள்ளிகளில் சேர்ந்து படிக்கறாங்க. இங்கே  படிக்கும் நபர்கள், இங்கத்து கல்ச்சுரல் விழாக்களில் வந்து ஆடுவாங்க.  இத்தனை வருஷங்களில் நிறையப் பார்த்தாச்சு. என்ன ஒன்னு  ஆண்ட்ரியாவில் ஆடுறது தொழில்முறை ஆட்டக்காரி.

உலகில் பொதுவா எல்லா சமாச்சாரங்களுக்கும் ஒரு சரித்திரம் இருக்கறதைப்போல இதுக்கும் ஒரு ஆறாயிரம் ஆண்டு சரித்திரம் இருக்கு!  இதுக்குப் பொறந்த வீடு ஈஜிப்ட்தான். Pagan மதம் இருந்த காலங்களில் (இயற்கையைக் கடவுளாகக் கொண்டாடும் மதம்) பெண்மையைப் போற்றும் விதமாகப் பெண்கடவுளை கும்பிடும் போது  இந்த வகை நடனத்தை  ஆடுவாங்களாம்.  அப்புறம் கொஞ்சம் கொஞ்சமாக வெவ்வெற மதங்கள் உருவாகினபிறகும் நடனம் மட்டும் தொடர்ந்து இருந்துருக்கு.  பைபிளில் கூட இதைப்பற்றி இருக்குன்னு சொல்றாங்க.  இறைவனை ஆடிப்பாடிக் கொண்டாடுங்கள்னு  வர்ற இடத்தில் இருக்கும்  அந்த ஆடிப்பாடி.... ஆடுதல், இதுதானாம் !
ஈஜிப்ட்டில் இஸ்லாமிய மதம் பரவத் தொடங்கிய  காலத்திலும்  நடனம் தொடர்ந்தே வந்துருக்கு.  முகமதிய மன்னர்களின் சபைகளில்  இந்த நடனத்தை ஆடுவாங்கன்னு  ஒரு ஓவியரின் சித்திரம் கூட ஒரு சான்றாக இருக்கே !  என்ன ஒன்னு அப்பெல்லாம் நடனமணிகள் உடுத்திய உடைகள் வேற மாதிரி!

(நம்ம பரதநாட்டியத்திலும் கூட அந்தக் காலத்தில் புடவையையே கட்டி ஆடி இருக்காங்க. அப்புறம் கொஞ்சம் கொஞ்சமா ஃபேஷன் மாறி, இப்ப  ரெடிமேட் மாதிரி  டெய்லரே தைச்சுக்கொடுக்கற ஸ்டைல் வந்தாச்சு. சினிமாக்காரங்களின் பரத நாட்டிய உடையின் ஸ்டைல் தனி. கூடுதல் கவர்ச்சிக்கானது.  அதை மேடையில் உடுத்தி ஆடுனா ஆபாசமா இருக்குமுன்னு தோணுது....)

இப்படியெல்லாம் 'பெருமை' வாய்ந்த இந்த நடனத்தை, இதே  கய்ரோவில்  தடை செய்த  காலமும் இருந்துருக்கு! 1830களில் இதை ஆடறவங்க ஜிப்ஸிகள்னு காரணம்  சொல்லி இருக்காங்க.  கய்ரோவில்தானே ஆடக்கூடாதுன்னுட்டு  அவுங்களும்  அப்படியே மிடில் ஈஸ்ட் நாடுகளுக்குப் போயிருக்காங்க.  இப்பவும் பெஸ்ட் பெல்லிடான்ஸ் நடக்கறது சௌதிஅரேபியாவில்தானாம் !

எது எப்படியோ... இப்ப இந்த ஈஜிப்ட்டைச் சுத்தி இருக்கும் பல நாடுகளிலும்  பெல்லிடான்ஸ் சக்கைப்போடு போட்டுக்கிட்டு இருக்கு.  அதைவிட மற்ற உலகநாடுகளிலும் இதைப் போற்றிப்புகழ ஆரம்பிச்சாச். இதுலே பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களும் ஆடறாங்க. இந்தியாவில் இந்த நடனத்தைக் கத்துக்கிட்டு   ஆடுன முதல் நபர்  அருண் பரத்வாஜ். அப்புறம் அலெக்ஸ் விக்டர். 

ஆமாம்... எல்லா நடனத்தையும் கத்துக்கிட்ட நம்ம கமல்ஹாஸன், இதை விட்டு வச்சுட்டாரா என்ன?  சரி. நாமெல்லாம் சேர்ந்து ஒரு படம் எடுக்கறோம். கமல்தான் பெல்லி டான்ஸர்.  ஓக்கே ? படத்துக்கு என்ன பெயர் வைக்கலாமுன்னு உக்கார்ந்து யோசிச்சுச் சொல்லுங்க.

தனிநபரா மட்டுமில்லாமல், குழு நடனமாகவும்,  ரெண்டு மூணு பேர் சேர்ந்தும் கூட ஆடறாங்க..... பல நாடுகளிலும் நைட் க்ளப்பில்  பெல்லிடான்ஸ் ஆடிக்கிட்டுத்தான் இருக்காங்க. நம்மவர் பல பயணங்களில் (ஆஃபீஸ் வேலையாப் போறதுலேதான்ப்பா.....! ) பார்த்துருக்காராம்.  இதை எப்பச் சொன்னார் தெரியுமோ? நேத்து இந்தப்பதிவை எழுதும் சமயம்  :-)  விஆரெஸ்  வாங்கியே வருஷம் நாலாகுது, கேட்டோ !
அடடா.... உங்களை டான்ஸ் பார்க்க விடாமல் கதையடிச்சுக்கிட்டு இருந்துட்டேனே....  நோ ஒர்ரீஸ்... 'நம்மவர்' உங்களுக்காகவே  சின்ன வீடியோ க்ளிப் எடுத்துருக்கார். அதை இங்கே பார்க்கலாம். தவிர யூ ட்யூபில்  எக்கச் சக்கமான  நடனப்பதிவு கலெக்‌ஷனே இருக்கு. விருப்பம் இருப்பவர்கள் கண்டு உய்யலாம் !


நடனம் பார்த்துக்கிட்டு இருக்கும்போதே 'நடனமணி',  பார்வையாளர்களுடன் படம் எடுக்க வந்தாச்சு.  ஒரு பொட்டாக்ராஃபர் வந்து படம் எடுக்கறார். சனம் அலை மோதுது.....  டின்னர் முடியறதுக்குள்ளே ப்ரிண்ட் போட்டுக் கொடுத்துருவாங்க. தனிக் கட்டணம் உண்டு.
இப்போ ஒரு ஸூஃபி டான்ஸர்  ஆட்டத்தை ஆரம்பிச்சார். பெரிய பாவாடை போல ஒன்னு உடுத்தி இருக்கார். நடன அசைவோடு தட்டாமாலை சுத்த ஆரம்பிச்சு, இடைவிடாமல் வேகமா சுத்திச் சுத்தி, கடைசியில் அந்தப் பாவாடை  தலைக்கு மேலே  குடைமாதிரி சுத்துது ! ஒரு கையால்  குடைபிடிச்சுக்கிட்டு, (குன்றைக் குடையாய் எடுத்தாய் ....)  மற்றொரு கையால்  கோப்பையில் இருக்கும் ஜூஸ் குடிக்கிறார் !   வாவ் !  இது எனக்கு முதல்முறையாப் பார்க்கக்கிடைச்சது.  இப்படி  மேலே போகுமுன்னு தெரியாததால்  வீடியோ எடுக்காமல் விட்டுருந்தேன்.... ப்ச்....






டின்னர் க்ரூஸ் னு சொன்னாங்களே.... இருந்த இடத்தில் நிக்கறோமென்னா ... அப்பதான் கப்பல்படகு மெள்ள நகர ஆரம்பிச்சது.....    மேலே மற்ற மாடிகளைப் பார்க்கலாமுன்னு  மாடிப்படியாண்டை போனால் அஸீஸ் வந்து சேர்ந்துக்கிட்டார்.  சாப்பிட்டாரான்னு கேட்டதுக்கு ஆச்சாம்.  மூவருமா படியேறிப்போறோம்.
ரெண்டாம்  மாடியும் ரெஸ்ட்டாரண்டுதான்.  அது டூர் க்ரூப்பில் இல்லாமல் வரும் தனி நபர்களுக்கானது....    சின்னக்கூட்டம்தான்.... ஒரு பத்திருவது பேர் இருக்கலாம். முதல் மாடிக்குப் போனோம். மொட்டை மாடிதான் ஷாமியானா போட்டு வச்சுருக்காங்க. இங்கேயும் அவ்வளவாக் கூட்டம் இல்லை.  முக்கியமா...  இருப்பது Bபார் !




நதியின் இருட்டும் கரையோர வெளிச்சமுமா வேடிக்கை பார்த்துக்கிட்டே போறோம்.  ஒரு சின்ன  வட்டம் போட்டுட்டுத் திரும்பி யதாஸ்தானத்துக்குப் போய் நின்னது கப்பல் படகு. கீழே இறங்கி வந்தால்  பெல்லிடான்ஸ் நடக்குது. அதே ஆட்டக்காரர், ஆனால் ட்ரெஸ் சேஞ்ச்!

சரி.... ஆடுங்கன்னுட்டுக் கிளம்பிட்டோம்.
நாளைக்குக் காலையில் நாலரைக்குக் கிளம்பணும்.  அப்ப..... மூணரைக்கு எழுந்தால்தான்  குளிச்சுக் கிளம்ப சரியா இருக்கும், இல்லையோ?

தொடரும்........ :-)


14 comments:

said...

பெல்லி டான்ஸ்.... எங்கடா க்ளோஸப் காணோமேன்னு நினைத்தேன்... படத்தைப் போட்டிருக்கிறீர்கள்.

இது துபாயில் டெஸர்ட் சஃபாரி முடிந்து அங்கு ஒரு இடத்தில் உண்டு. நீங்கள் சொல்லியுள்ளபடி பலவித நடனங்கள் - குடை போன்று .. எல்லாம் பார்த்திருக்கிறேன்.

இது ஈஜிப்டிலிருந்து பரவியதா?

said...

அருமை சிறப்பு நன்றி

said...

அருமை சிறப்பு நன்றி

said...

மிதக்கும் ரெஸ்ராரென்ட் சூப்பர்.
ஆமா இந்த பெல்லி நடனம் துபாயில் பாலைவன சபாரியின் பின் அடக்கம். நல்ல அழகிய மெல் இடையாள்தான் ஆடினார். அப்புறம் அவரிடம் பேசியபோது கைக்குழந்தை இருப்பதாக அறிந்து ஆச்சரியப்பட்டோம்.

said...

மிதக்கும் ரெஸ்டாரென்ட். வித்தியாசமான, அழகான புகைப்படங்கள். கோயில் உலா என்றாலும், இதுபோன்ற உலா என்றாலும் பதிவதில் உங்களுக்கு நிகர் நீங்களே. மகிழ்ச்சி.
(எங்கள் பள்ளி நூற்றாண்டு விழா மலர்ப் பணியில் ஈடுபட்டுள்ளதால் பதிவுகளைப் பார்ப்பதில் சற்று தாமதம் ஏற்படுகிறது.)

said...

மிதக்கும் ரெஸ்டாரெண்ட் அனுபவங்கள் சிறப்பு.

நடனம் இசை என அனைத்தும் சிறப்பு.

said...

பதிவுகளை வாசித்து வருகிறேன் துளசிக்கா.

மிதக்கும் ரெஸ்டாரண்ட் வாவ்!! விவரிப்பு எல்லாம் செம...அந்த டான்ஸ் குறிப்பா சுஃப்ஃபி ..குடை போல விரித்து ஆடுறார் யப்பா என்னா திறமை...


கீதா

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

இதெல்லாம் இப்போ டூரிஸ்ட் அட்ராக்ஷன் ஆகிப்போச்சே ! இந்த வகை நடனத்துக்கு ஈஜிப்ட் தான் தாயகமுன்னு சொல்றாங்க !

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க மாதேவி,

இவுங்கல்லாம் தொழில்முறை நடனமணிகள்தான் ! குடும்பம் குழந்தைகுட்டி எல்லாமும் உண்டு !

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா,

வலைப்பதிவில் இது வசதிதான். எப்ப நேரம் கிடைக்குமோ அப்போ வாசிக்கலாம்.

நீங்களும் பல வேலைகளுக்கிடையில் நம்ம துளசிதளத்துக்கும் கொஞ்சம் நேரம் செலவளிப்பது, மனதுக்கு மகிழ்ச்சி தருகிறது !

அதுக்காகவே இன்னும் நன்றிகள் பல !

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,


தொடர்வருகைக்கு மிகவும் நன்றி !

said...

வாங்க கீதா,

ரொம்ப நன்றிப்பா !

சில சமாச்சாரங்கள் பார்க்கவே அற்புதம்தான் !

said...

நண்பர்களுக்கு இன்னொரு சமாச்சாரம் சொல்லிக்கிறேன்.

இந்த மிதக்கும் ரெஸ்ட்டாரண்ட் வகையில் நம்ம முதல் அனுபவம், ஹாங்காங் ஆபெர்டீன் பகுதியில் நாம் சாப்பிடப்போன இடம், ஜம்போ ஃப்ளோட்டிங் ரெஸ்ட்டாரண்ட். அங்கே போன உள்ளூர் டூரில், இங்கே டின்னருக்குக் கூட்டிப்போனாங்க. டூர் கைடு நல்ல ஃப்ரெண்ட்லி லேடி. Come with lots of money to Hong kong. No money.... no funny னு சொன்னது இப்பவும் நினைவில் இருக்கு. சம்பவம் நடந்தது 1982 மே மாசம்.

இந்த ஜம்போ ஒரு ஸீ ஃபுட் ரெஸ்ட்டாரண்ட்ன்னு அங்கே போனபிறகுதான் தெரியும். எல்லா சாப்பாடு வகைகளையும் We See only. அப்போ கைவசம் கேமெரா கூட இல்லை. ப்ச்.... வெறுஞ்சோறு நமக்கு முன்னால். அப்பதான் ஐடியா வந்தது. வெந்நீர் கொண்டு வரச் சொல்லி, மேஜையில் இருந்த டொமாட்டோ சாஸில் மிளகுத்தூள் கொஞ்சம் நிறையச் சேர்த்து, மொளகுரசம் பண்ணி, அந்த சோற்றில் கலந்து சாப்பிட்டு நம்ம 'டின்னரை' முடிச்சோம்!