Friday, April 10, 2020

ஸ்பிங்ஸ் ஒரு கதை சொல்லி ! (பயணத்தொடர் 2020 பகுதி 38 )

'சாயங்காலம்  பெரிய பிரமிடுலே சவுண்ட் அண்ட் லைட் ஷோ இருக்கு. அங்கே போறோம். ஆனால் நான் கூட இருக்கமாட்டேன். இன்னொரு இளைஞர் வருவார்'னு ரெய்னா சொல்லிட்டுத்தான் போனாங்க. குடும்பத்தையும் கவனிக்க வேணுமா இல்லையா?

பாலைவனம் என்றதால், குளிர் அதிகமா இருக்கும்.  அதுக்கேத்தமாதிரி உடைகள் போட்டுக்கணுமாம். இப்ப குளிர்காலம் வேற அங்கே!  என்ன பெரிய குளிர்.... நாம் பார்க்காததான்னு இருந்தேன்.  நம்ம பயணம்  இந்தியா மட்டுமேன்னு ஆரம்பத்திட்டத்தில் இருந்ததால்  குளிருக்குத் தேவையான உடைகள் ஒன்னும் கொண்டும்போகலை. ப்ளைட்லே சில சமயம் வேண்டி இருக்குமுன்னு ஆளுக்கொரு லைட் வெயிட் ஸ்வெட்டர் மட்டும்தான்.  அதெல்லாம் போதாதுன்னு கீழே ஹொட்டேல் ஹௌஸ் கீப்பிங்கைக் கூப்பிட்டு, ஒரு கம்பளிப்போர்வை வேணுமுன்னதும் கொண்டு வந்து கொடுத்தாங்க. அதைத் தூக்கிக்கிட்டுப் போகணுமாம். 'நம்மவர்' கட்டளை.

அறையில் இருந்தவைகளைக் கொண்டு காஃபி போட்டுக் கொடுத்தார்.  சூடாக் குடிச்சதும்  களைப்பு போனமாதிரி இருக்கு.  ஃப்ரெஷப் பண்ணிக்கிட்டுக் கிளம்பிக் கீழே லாபிக்குப் போனோம்.  நல்ல கூட்டம். கலகலன்னு இருக்கு!

ஆறுமணிக்கு, அஸீஸ் என்ற இளைஞர்வந்து அறிமுகப்படுத்திக்கிட்டார்.  அவர்தான் இப்ப நமக்குக் கைடு.  சுருக்கமாச் சொன்னா அப்துல் அஸீஸ்.  வாசலுக்கு   இஸ்லாம் வண்டியைக் கொண்டு வந்ததும் புறப்பட்டோம். ஆறுமணிக்கே இங்கெல்லாம் நல்ல இருட்டு!  கய்ரோ ஸிட்டியில்  வேலைக்கு வந்துட்டு  கார்களில் வீடு திரும்பும் கூட்டம் நைல் நதிப் பாலத்தில் நெருக்கிப்பிடிச்சு அடைச்சு நிக்குது! 

ஒரு வழியா  பெரிய பிரமிடாண்டை இந்த ஷோ நடக்கும் இடத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். அஸீஸ் போய் டிக்கெட் வாங்கிவந்து கொடுத்தார். எவ்ளோன்னு தெரியலை.
காலத்துக்கேத்தாப்படி  விலை ஏறுமோன்னு பார்த்தால்.... இங்கே இங்லிஷ் மட்டுமில்லாமல் இன்னும் சில மொழிகளில் இதே ஷோ நடத்துறாங்களாம். ப்ரெஞ்சு, ஸ்பானிஷ், சைனீஸ்  மொழிகளிலும் ஷோ நடக்குது. தினமும் மாலை ஏழு மணிக்கு இங்லிஷ். அப்புறம் எட்டு மணி ஷோவில்  மேலே சொன்ன மொழிகளில் வெவ்வேற நாட்களில்.  வியாழக்கிழமை மட்டும் ராத்ரி ஒன்பது மணி ஷோ அரபிக்கில். ஞாயித்துக்கிழமை சீனருக்கு !அதான் எல்லாத்துக்குமா ஒரே டிக்கெட்:-)
இப்பக் குளிர் காலம் (அக்டோபர் முதல் ஏப்ரல் வரை)என்றதால் ஏழு மணிக்கு நடக்கும் இந்த ஷோ கோடை காலத்தில் (மே முதல் செப்டம்பர் வரை) ஏழரைக்காம். இஸ்லாமியர்களின் நோன்பான ரம்ஸான் மாசத்தில் மட்டும்  எட்டுமணிக்குத்தான் ஷோவே ஆரம்பம். போக விரும்புறவுங்க பார்த்துக்குங்க.
இங்கே இந்த நாட்டில்   அஞ்சு  ஊர்களில்  இப்படி  சவுண்ட் அண்ட் லைட் ஷோ நடக்குதுன்னாலும்  இங்கே பெரிய பிரமிட்தான் இவைகளிலும் மூத்தது.  ஜனாதிபதி Gamal Abd El-Naser  காலத்துலே 1960 இல் தான்  அவரே வந்து ஆரம்பிச்சுருக்கார். ஆச்சு 59 வருஷம். இந்தப்பதிவு எழுதும் சமயம் அறுபது ஆச்சு :-)
ஒரு வெட்டவெளியில் நிறைய ஸ்டீல் சேர்கள் போட்டு வச்சுருக்காங்க.  நிறைய டூர் க்ரூப் மக்களும்  வந்து சேர்ந்துக்கிட்டாங்க. உள்ளே வரும் வழியில் கம்பளி சப்ளை நடக்கறதை அப்புறம் தெரிஞ்சுக்கிட்டோம். ஒரே நிறம். நாங்க மட்டும்தான்  வேற நிறம் :-)
சரியா ஏழு மணிக்கு விளக்குகளை அணைச்சதும் ஸ்பிங்க்ஸ் பேச ஆரம்பிச்சது !   ஈஜிப்ட் மன்னர்கள் சரித்திரம், பெரிய பிரமிட் கட்டுன மகன் சரித்திரம், எப்படி அவர் தனக்கான பிரமிட்டையும் கட்டினார் என்பதையெல்லாம்  ஒலியில் கேக்கறோம். 
 மூணு பிரமிட் மேலேயும்  வெவ்வேற நிறத்தில் ஒளி வந்து போகுது. இதெல்லாம் நல்லாத்தான் இருந்தாலும்....  கதை சொல்லிக்கிட்டு இருக்கும்  வெள்ளைக்காரக்குரல் என்னவோ கரகரன்னு கேக்குது.  ஆரம்பகாலத்துக் குரலை இன்னும் அப்படியே வச்சுருந்தால் எப்படி? இப்பத்தான் இந்த அறுபது வருஷங்களில்  டெக்னிக்கலா வீடியோ ஆடியோவில் எவ்வளவு முன்னேற்றம் வந்துருக்கு. அதைச் சரி செய்யக்கூடாதோ? கொஞ்சம் போராக இருந்தது உண்மை.

நாங்க இதுவரை ரெண்டு மூணு ஒலியும் ஒளியும் நிகழ்ச்சிகள் பார்த்துருக்கோம். அதுலே எனக்குப் பிடிச்சது என்னன்னா..... குஜராத் பயணத்தில் சோம்நாத் கோவிலில் பார்த்ததுதான். அம்ரிஷ்புரி கதை சொன்னார்.  நல்ல கம்பீரமான குரல் ! அருமை ! 

'நம்மவர்' வேற குளிர் அதிகமா இருக்குன்னு கம்பளிக்குள்ளே என்னை மூடியே வச்சுட்டார். கைகள் உள்ளே மாட்டிக்கிச்சு. கொஞ்சம் அசைஞ்சால் கம்பளி நழுவிருது.  'உனக்கு ஆஸ்த்மா  இருக்குன்றதை மறந்துடாதே.... அப்புறம் இழுத்துக்கிட்டுப் போகப்போகுது'ன்னு மிரட்டல் வேற ! அதனால் வீடியோ க்ளிப் ஒன்னும் எடுக்கலை. (எனக்குத்தான் கை இல்லையே... அப்ப எப்படி எடுப்பேன்? ) மிரட்டலையும் மீறி அப்பப்பக் கொஞ்சம் படங்கள் மட்டும் எடுத்தேன். 'நம்மவரும்'  கொஞ்சம் படங்கள் எடுத்தார்.





இதுக்குள்ளே  ஒரு செல்லம்  அரங்கத்தில் நுழைஞ்சு  இங்கேயும் அங்கேயுமா குறுக்கே நெடுக்கே ஓடி முடிச்சு, கடைசியில் என் பக்கத்துலே வந்து உக்கார்ந்துக்கிச்சு. க்ளியோவைத் தேடிக் கண்டு பிடிச்சுருச்சோ !  ஹாஹா... கம்பளிக்கடியில் கையை நீட்டிக் கொஞ்சம் தலையைத் தடவிக்கொடுத்தேன். அவ்ளோதான் காலடியில் படுத்து ஒரே தூக்கம்.


சுமார் ஒரு மணி நேரம் நடந்தது இந்த ஷோ! அது முடிஞ்சாட்டுக் கிளம்பினோம். அங்கேயே ஒரு கூடாரம் போட்டு சாப்பாடு விளம்புறாங்க. அதுக்குத் தனியா டிக்கெட் வாங்கி இருக்கணும்.  என்ன சாப்பாடுன்னு வேற தெரியலை....     எதுக்கு வம்புன்னுட்டு போகலை. நேரா ஹொட்டேலுக்கே வந்துட்டோம்.  இங்கேயே ரூம் சர்வீஸில் சாப்பாடு ஆச்சு.  இங்கே என்ன ஆர்டர் செஞ்சாலும் ஒரு கூடை நிறைய ஈஜிப்ஷியன் ப்ரெட்ன்னு கூடவே அனுப்பி வச்சுடறாங்க.  எல்லாம் அட்டை போல இருக்கு. நாமும் அதை அப்படியே திருப்பி அனுப்பிக்கிட்டு இருந்தோம்.
ஈஜிப்டில் எக்கச்சக்கமான பிரமிடுகள் இருந்தாலும் ஒரு எம்பது பிரமிட்கள் மட்டும் கொஞ்சம் உருப்படியா  இருக்குன்னு  சொல்றாங்க. நாம் அதுலே ஒரு ஏழெட்டைத்தான் பார்த்தோம்.  அதுவே யதேஷ்டம்.... ஒரு பானை சோத்துக்கு... ஒரு சோறு.. பதம், போதாது?

தொடரும்........ :-)


9 comments:

said...

அருமை நன்றி

said...

ஒலி ஒளி காட்சிகள் நன்று.

இந்தியாவில் சில இடங்களில் பார்த்து ரசித்ததுண்டு - சமீபத்தில் பார்த்தது அந்தமான் செல்லுலர் சிறையில்.

தொடரட்டும் பயணம். நானும் தொடர்கிறேன்.

said...

க்தை சொல்லி ஷோ அழகாத்தான் தெரியுது. அங்கேயே சாப்பிட்டுப் பார்த்திருக்கலாம் (சுத்தமா இருந்ததா உணவு உண்ணும் இடம்?)

said...

நன்றாக இருக்கிறது.

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி !

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

பெரிய கூடாரமாட்டம் போட்டுருந்தாங்க. எல்லாம் வெள்ளையர்களுக்கான உணவுகள் கூடவே ' குடி'

அதான் போகலை.....

said...

வாங்க TamilBM,

Thanks.

said...

வாங்க மாதேவி,

நன்றிப்பா !

said...

உங்கள் அனுபவம் அருமையாகத்தான் இருக்கு ... அதை எங்களுக்கு எழுத்துக்களில் படங்களுடன் உணர்தும்விதம் இன்னும் அருமை ... >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<