Friday, April 03, 2020

மன்னன் வீட்டு மாப்பிள்ளை ! (பயணத்தொடர் 2020 பகுதி 35 )

சின்னாம்ணின்னு சொல்றதைப்போல  Kagemni ன்னு ஒரு மன்னர்வீட்டு மாப்பிள்ளை அடுத்தாப்லெதான் இருக்கார்.  இந்த ஏரியாவில்  குன்றுகள் ஏராளம், அதுக்குள்ளேயும் வெளியேயுமா  சமாதிகளும் ஏராளம். அதுலே ஒன்னுதான் இப்போ நாம் போய்ப் பார்க்கறோம்.
நீதிபதி, பூஜாரின்னு அரசாங்கத்துலே பெரிய பதவிகளில் இருந்தவர். மன்னருடைய சொத்துபத்து நிர்வாகம் எல்லாம் இவர் பொறுப்புலேதான்.

பொறுப்புலே இருக்கறவனுக்குப் பொண்ணைக் கட்டிக்கொடுத்தால் .... பணத்தை எடுத்துக்கிட்டு ஓடமாட்டாந்தானே? எல்லாம் விவரமாத்தான் இருந்துருக்கார் மன்னர், இல்லே?
முதல்லே பார்த்த சமாதி மாளிகைன்னால், இது பங்ளா ! ஏகப்பட்ட அறைகள்.  மகனுக்கு அஞ்சு அறை, மனைவிக்கு அஞ்சு அறைன்னு ஒதுக்கியாச்சு. பெரிய கூடங்கள்!  அப்புறம் சாமான்செட்டு வச்சுக்க,  அதுக்கு இதுக்குன்னு அதுபாட்டுக்குப் போகுது !
வாசலைத்தாண்டி  கூடத்துக்குள் நுழைஞ்சதுமே  க்ரூப் டான்ஸ் ஆடிக்கிட்டே நம்மை  வரவேற்கிறாங்க!!   எல்லா சுவர்களிலும் செதுக்குச் சிற்பங்கள்.....   

அப்பத்திய  மக்களுடைய அன்றாட  வேலைகளும்,   வாழ்க்கை முறைகளையும் புரிஞ்சுக்கலாம்.  மாடுன்னா செல்வம்தானே.....  ஏகப்பட்ட மாடுகள் !

குட்டிப்பாப்பாக் கன்னுக்குட்டியைக் குழந்தைபோல முதுகில் சுமந்துக்கிட்டுப் போறார் ஒருத்தர்.  பன்னி ஒன்னைத் தூக்கி வச்சு அதைக் கொஞ்சறார் ஒருத்தர். அதுக்குப் பாலோ என்னமோ , ஒரு  ஜக்லே கொண்டு வர்றார் ஒருத்தர், வாத்துகளுக்குத் தீனி போடறார் ஒருத்தர் இப்படி.... மிருகநேயம் நல்லது!


நைல்நதியில் படகுலே போய் மீன் பிடிக்கறாங்க.  முக்கிய உணவு மீனாக இருக்கும்போல.... அந்த மீன்களும் ஏராளமா, என்னைப் பிடிச்சுக்கோன்னு தானாவே படகாண்டை வந்து நிக்குதுகள். முறம் மாதிரி கூடை ஒன்னுலே அப்படியே வாரிக்க வேண்டியதுதான் !


தூண்டிலில் ஒரு முள்  போட்டுப் பிடிச்சா டைம் வேஸ்டுன்னு  அஞ்சு கொக்கி ஒரே தூண்டிலில்.  எப்படியாப்பட்ட டைம் மேனேஜ்மென்ட் பாருங்க !  ( படத்தில் ஒரு வெட்டுக்கிளி, தவளை இருக்கு, தெரியுதா? )


எல்லாம் பெரிய பெரிய சைஸ் மீனுங்களே!  கழியில் தொங்க விட்டு ரெண்டு பேராத் தோளில் சுமந்து போறாங்க. அப்போதைய ஆட்கள் கூட ரொம்ப உயரமாவும் திடகாத்திரமாவும்  இருக்காங்க. ஊளைச்சதையோ, தொப்பையோ காணோம் !

ஆடு, கோழி, வாத்துன்னு  புடிச்சுக்கிட்டுப் போறாங்க.  வகைவகையான சாப்பாட்டுப் பொருட்களைக் கடவுளுக்குப் படையல் போடறாங்க. அப்படியே சமாதியில் இருக்கும்  மன்னர்களுக்கும் கொண்டு போய் வச்சுருவாங்களாம். அவுங்களுக்கு  அடுத்து வரப்போகும் பிறவிக்குத் தேவைப்படுமேன்னுதான்.....


அப்பத் தயிர்வடை, தினசரி பேப்பர் எல்லாம் கூட இந்த  எண்ணத்தினால்தான் போல ! 
குளிக்க பாத் டப் கூட இருக்கு இங்கே! (சமாதியின் உள்ளே கிடக்கறவரும் குளிச்சுச் சுத்தபத்தமா இருக்கவேணும்! )
ஒரு இடத்துலே பலி கொடுக்கன்னே ரெண்டு கற்சுவர். இடையிலே  நிக்கவச்சா அசையமுடியாதுன்னு ரெய்னா சொன்னப்ப , மனசுக்குக் கொஞ்சம் பேஜாராப் போச்சு. ப்ச்.....
ஆளுங்ககிட்டே வேலைவாங்க மேஸ்த்ரி கூடக் கையில்  சின்னக் கோல் வச்சுக்கிட்டு நின்னு பார்க்கறார்.  சனத்தை மேய்ச்சுக்கறதும் கஷ்டம்தான், இல்லே!
ஏகப்பட்டச் சுவர்சிற்பங்கள் இருப்பதால் நின்னு பார்த்துப் புரிஞ்சுக்கிட்டு ரசிக்க நேரம் எடுக்கும்.  இந்த சிற்பங்கள் செதுக்கி இருக்கும் கல்கூட  கொஞ்சம் வேற வகையா இருக்கு....  ஒரு மெரூன் கலர்.....

இங்கே ம்யூஸியம் கூட ஒன்னு இருக்கு.  ஆனால்  ரொம்ப முக்கியமானவைகள் கய்ரோ பெரிய ம்யூஸியத்தில் இருப்பதால் அங்கே போகும்போது பார்க்கலாம். இன்றைக்கு இன்னும் சில இடங்களுக்குப் போகணும்னு ரெய்னா சொன்னாங்க. அதுவுஞ்சரி. அவுங்களுக்கும் ஒரு  ஒர்க் ஆர்டர், ஐட்டினரி எல்லாம் இருக்குமுல்லெ?
இந்த வளாகம் ரொம்பவே பெருசு. ஒழுங்கா நிக்கும் ப்ரமிடுகள், வெறும் கற்குவியலா நிக்கும் ப்ரமிடுகள்னு  நிறைய இருக்கு!
பொட்டல் காட்டில் போற பாதையில் செக்யூரிட்டின்னு  சின்ன கூண்டுக்குள்ளே ஆர்மி உக்கார்ந்துருக்கு. குளிர் மட்டுமில்லே, வெயிலும் கொடுமைதானே... ப்ச்.... இந்தாண்டை ஒரு செல்லம்.... என்ன பொழைப்புடா.....
வந்த வழியாவே திரும்பிப்போறோம்னு  கண்ணில் பட்ட கட்டடங்கள்  சொல்லுது.  சுமார் ஒரு மணி நேரப் பயணம் இருக்காம்.

தொடரும்...... :-)



12 comments:

said...

படங்கள் அனைத்தும் அழகு.

எத்தனை விஷயங்களைச் செதுக்கி வைத்திருக்கிறார்கள். ஐந்து பல் கொண்ட தூண்டில் - எத்தனை திறமை! ஒவ்வொரு விஷயமும் பார்த்துப் பார்த்து செதுக்கி இருக்கிறார்கள்.

உங்கள் மூலம் நாங்களும் பயணிக்கிறோம்.

தொடரட்டும் பயணம்.

said...

மிக அருமை. நன்றி.

said...

//தயிர்வடை, தினசரி பேப்பர் எல்லாம் கூட // போகிறபோக்கில் அரசியலில் கால் வைக்கறீங்களே... ஆமாம் இந்த 'தயிர்வடை' நான் கேள்விப்படலையே..

ஐந்து பல் கொண்ட தூண்டில் - இதுதான் 3 அம்புகளை ஒரே சமயத்தில் பாஹுபலி படத்துல எய்யறதுக்கு இன்ஸ்பிரேஷனா இருந்திருக்குமோ?

ஆமாம்.. மூலையில் நீங்க நிற்கிற படத்துல உங்களோடயே இன்னொருவரும் இருப்பது என் கண்ணுக்கு மட்டும்தான் தெரியுதா?

said...

பார்த்திராதவைகளை உங்கள் எழுத்தின் மூலமாகப் பார்த்துக்கொள்கிறேன். நன்றாக இருக்கு. இன்னும் டீடெயிலா எழுதலாமேன்னு கேட்டால், நெட்டில் தேடிப் படிச்சுக்கோங்க என்று சொல்லிடுவீங்க.

said...

இப்படி எல்லாம் இருந்திருக்கிறதே ஆச்சரியம் தான்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்,

சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கை செதுக்கி வச்சது ரொம்பவே பயனுள்ள ஐடியாதான்.

இன்னும் நிறையப் படங்கள் இருக்கின்றன. ஒரு ஆல்பம் போடத்தான் வேணும். மது நிரம்பிய பெரிய ஜாடிகளைக் கயிறு கட்டி தரையில் இழுத்துப்போறாங்க. இதே ஐடியாதான் பிரமிடுக்கான கற்களை இங்கே கொண்டுவரவும் பயன்படுத்தி இருக்கலாமாம்.

அந்த மாடு, கன்று இவைகளின் கண்களில் உணர்வு தெரியுது பார்த்தீங்களா?

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி.

நீங்க போனபோதும் இதே தானே?

said...

வாங்க நெல்லைத்தமிழன்,

தயிர்வடைப் படையல் தெரியலையா? அச்சோ.... நாட்டு நடப்பைக் கோட்டை விட்டுட்டீங்களே ! :-)

ஆவிதான் நம்மைப் பார்க்க வந்துருக்கணும். நியூஸி மக்களைப் பார்த்ததில்லையாமே!

said...

வாங்க மாதேவி,

எனக்கும் அப்போதைய வாழ்க்கை 'அட! போட வச்சது !

said...

துளசி மேடம் தங்களின் வலைப்பதிவு அறிமுகம் திரு வெங்கட் நாகராஜ் அவர்களின் வலைப்பதிவிலிருந்து கிடைத்தது. தங்களின் பயணக்கட்டுரைகள் மிகவும் அருமை. சுமார் 38 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவை விட்டு வெளிநாடு சென்றாலும் இனிய தமிழில் நகைச்சுவை கலந்து எழுதும் தங்கள் திறமைக்கு பாராட்டுக்கள்.

said...

வாங்க கிருஷ்ணமூர்த்தி,

முதல்வருகைக்கு மிகவும் நன்றி.

நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

உங்களுக்குப் பயணக்கட்டுரைகள் வாசிக்க விருப்பம் என்றால் நம் துளசிதளத்திலேயே ஏகப்பட்டவை உள்ளன. நேரம் இருக்கும்போது வாசித்து விட்டு, முடிந்தால் பின்னூட்டுங்கள்.

said...

"பொறுப்புலே இருக்கறவனுக்குப் பொண்ணைக் கட்டிக்கொடுத்தால் .... பணத்தை எடுத்துக்கிட்டு ஓடமாட்டாந்தானே?"

.... ஹஹா...ஹஹா.. ஆமாம் சாமி .... நல்லா சொன்னீங்க ....

அப்புறம் இதில் உள்ள அத்தனை சிற்பங்களும் அற்புதம் ... எங்களுக்கு காண தந்த உங்களுக்கு கோடி புண்ணியம் ... அத்தனையையும் சேமித்துக்கொண்டேன் ...நன்றி !!! >> சயின்டிபிக் ஜட்ஜ்மென்ட் <<