Friday, February 22, 2019

தூங்காநகரம்..... !!!!! (பயணத்தொடர், பகுதி 70 )

சுகப்ரஸவம் ஆகட்டுமுன்னோ என்னவோ போற வர்ற சனம் எல்லாம் வயித்தைத் தடவிக் கொடுத்துக் கொடுத்து  வயிறே மின்னுது. இதுலே எண்ணெய் மஸாஜ் வேற.....  பாவம்... பொண்ணு.... இன்னும் எத்தனைகாலம் சுமக்கணுமோ?
பிரசன்ன வெங்கிடாசலபதி கோவிலில் இருந்து  அறைக்குத் திரும்பும் வழியில் ,  கூடலழகர் கோவில் மதில்சுவர்  கண்ணில் பட்டதும், பெருமாளைக் கும்பிட்டுப் போகலாமென்னு  ஒரே சமயத்தில் நானும் நம்மவரும் நினைச்சோம். (நான் பேச நினைப்பதெல்லாம்...... )
திவ்யதேசக்கோவில்!  நின்றும் இருந்தும் கிடந்தும் ஸேவை சாதிப்பான் என்பதால்.... ப்ளஸ் பாய்ண்ட்ஸ் கூடுதல் :-)
இதுவரை  ஏழெட்டுமுறை  தரிசனம் கொடுத்துருக்கான்தான்!  இப்பவும்.... வரவழைக்கலையா..... என்ன?

கோவிலுக்குள் நுழையும்போதே மனசு கொஞ்சம் பேஜாராத்தான்  இருந்தது.... நம்ம 'மதுரவல்லி' பெருமாள் கிட்டெயே போயிட்டாளே.... ப்ச்...  அவள் வழக்கமா நிற்கும் இடம் வெறிச்னு காலியாக்கிடக்கு.....

எனக்குப் பொதுவா மேலே ஏறிப்போய் பார்க்கத்தான் விருப்பம். இப்போ இருட்டிக்கிட்டு வருது.  மேலே போக அனுமதி இல்லை.... போகட்டும்....

 போனமுறை எழுதிய பதிவு பாருங்கபடங்கள்தான் கூடுதல் விசேஷம்.


பெருமாளை  தரிசனம் செஞ்சுட்டுத் தாயார் மதுரவல்லி  தரிசனமும் ஆச்சு.  உள்பிரகாரம் மட்டும் சுத்தலாமேன்னு போறோம்.  அப்பதான் புள்ளைத்தாய்ச்சியைப் பார்த்தேன்.... நல்லபடியா பெத்துப்பிழைக்கணுமேன்ற கவலையில் அவள் உக்கார்ந்துருக்காள்.....

திண்ணை மண்டபத்தில் வாகனங்கள் எல்லாம் ஓய்வில்......








என்னம்மா இப்படிப் பண்ணறீங்களேம்மா.... :-)
ஆண்டாள்  சந்நிதிக்கும் போய் தூமணிமாடம் பாடிட்டு (மனசுக்குள்தான்) நல்லா இருக்கியான்னு விசாரிச்சுட்டு வந்து, நவக்ரஹ சந்நிதியையும்  சுத்திட்டுக் கிளம்பியாச்சு.


சொர்க வாசல்.....  எப்பவும் படு சிம்பிள்தான், இல்லே? ஆனால் நம்ம அடையார் அநந்தபதுமன் கோவிலில் நீங்க பார்க்கணும்.....  அப்படி அட்டகாசமா இருக்கும்!  அந்தப் பெருமாள் கொடுத்துவச்சவர். அருமையான நிர்வாகம் அமைஞ்சுருக்கு! 

பெருமாள் கோவிலில் நவக்ரஹமான்னு கேட்டால்.... அதுவுமே ஒரு விசேஷம்தான் இங்கே!
கோவிலுக்கு  அந்தாண்டை இருக்கும் வேதாந்த தேசிகரை வெளியில் இருந்தே கும்பிட்டாச்சு. மதுரை ரெஸிடன்ஸிக்குத் திரும்பி வந்ததும், அதுவரை  மனசுக்குள்ளே இல்லாமல்  இருந்த அந்தப் பாழாப்போன வைஃபை, எட்டிப்பார்க்குது.  டெஸ்க்குலே கேட்டால் இன்னும் ரிப்பேர் பார்த்துக்கிட்டுதான் இருக்காங்களாம்.... பொய்யி....  செல்ஃபோன் வந்தபிறகு நாட்டுலே பொய் அதிகரிச்சு இருக்கு என்றது உண்மைதானே?

நம்மவர் செல்லில் டாட்டா இருக்கு. இதுலே பார்த்துக்கோன்னார். அதுலே கொஞ்சம் நேரம் போயிருச்சு. இனி ராச்சாப்பாட்டுக்கு எங்கே போகலாமுன்னு யோசனை..... ரமேஷ் வெளியில் சாப்பிட்டுக்குவாராம். இனி வெளியே எங்கும் வண்டியில் போகப்போறதில்லை என்பதால்   அவரை மறுநாள் காலையில்  ரெடியா இருந்தாப் போதும்னு சொல்லிட்டோம்.
பக்கத்துலேதானே காலேஜ் ஹௌஸ் இருக்கு.  பொடிநடையாப் போனால் ஆச்சுன்னு நாங்க கிளம்பினோம். அதென்னவோ சின்ன வயசில் இருந்தே காலேஜ் ஹௌஸ் எனக்குப் பழக்கப்பட்ட  இடம்தான்.  பெரிய பெரிய ஹாலும்,  அடுக்களைக்கு இந்தப்பக்கம்  கடகடன்னு சத்தத்தோடு மாவரைக்கும்  எலக்ட்ரிக் கல்லுரல்களும்  இன்னும் நினைவில் இருக்கு. குழவியை ஒரு நீண்ட இரும்புக்கை பிடிச்சுக்கிட்டு சுத்தும்....


அப்போ இருந்த மாதிரி இப்போ இல்லை. காலமாற்றத்தில் பெயரைத்தவிர எல்லாமே மாறிக்கிடக்கே.... 'நம்மவரிடம்' பழைய கல்லுரல் நினைவுகளைச் சொல்லிக்கிட்டே உள்ளே போனால், சொல்லி வச்சாப்ல கல்லுரல் கண்ணுலே தெம்பட்டது :-) சுத்தம் போதாது.... ப்ச்....
அன்னலக்ஷ்மி போல இது அன்னமீனாக்ஷியாம்!  புதுசா வச்ச பெயரோ? நானும் வந்து நாலு வருசமாச்சே....  வலைப்பதிவர் மாநாட்டுக்கு வந்ததுதான் கடைசி.

ஊத்தப்பம், தோசைனு  உள்ளே தள்ளிட்டு வேடிக்கை பார்த்தபடிப்  போறோம். தூங்காநகரம், இப்ப நல்லாவே முழிச்சுப் பார்க்குது..... அப்படி மக்கள் கூட்டம்  தெருவில்...

தென்னங்குருத்து வித்துக்கிட்டு இருக்காங்க.  இதுவரை சாப்பிட்டுப் பார்க்கலையேன்னு  கொஞ்சம் வாங்கினோம். சுமாரான சுவை.  துவர்ப்புதான் நுங்கு வெளியில் இருக்கும் லைட் ப்ரௌன் தோல்,  இளநீர் குடிச்சுட்டு அந்த வழுக்கையைச் சுரண்டினால் அதோடு ஒட்டிக்கிட்டு வரும் அதே லைட் ப்ரௌன் ருசிதான்.  ஆனால் உடம்புக்கு நல்லதாம்.  இது ஒரு காரணம் போதாதா.... நம்மவருக்குப் பிடிக்காமல் இருக்க.



பாருங்க.... நமக்கு வீடில்லை, ஹொட்டேலில் தங்கறோமுன்னு  இவருக்கும் தெரிஞ்சுருக்கு !! ஹோம்லெஸ் & ஹார்ம்லெஸ் :-)

கல்பவிருக்ஷம்னு தென்னையைச் சொல்றது உண்மைதான்.  எல்லாப் பகுதிக்குமே ஒரு பயன் இருக்கு! (பனையும் இதுலே சேர்த்தி இல்லையோ!)



பக்கத்துலே ஸ்ரீவாரி பவனில் ஆளுக்கொரு கப் பால்.  நம்மவருக்குப் பனங்கல்கண்டு போட்டது. செல்லம் ஒன்னு  வாசல்லே உக்கார்ந்துருக்கு. அதுக்கு ஒரு சின்ன பாக்கெட் பிஸ்கட்.
பெரிய பெரிய  தோசைக்கல்லை வச்சு பரோட்டா, சப்பாத்தி, தோசை வகைகளை நிமிஷமாச் செஞ்சு குவிச்சுக்கிட்டு இருக்காங்க. சீன உணவுதான் இப்போ ஃபேஷன்.... அது ஒருபக்கம்....



அண்ணாச்சி விலாஸில்  விஐபி வீட்டுச் சாப்பாடாம்!
ஹொட்டேலுக்குத் திரும்பிட்டோம். வரவேற்பு மட்டும் அட்டகாசமா வச்சுருக்காங்க.  அவ்ளோதான்....  வைஃபை கிடைக்கவே இல்லை.

நாளைக்கு எப்படின்னு பொழுது விடிஞ்சால் தெரியும்.

தொடரும்........ :-)


5 comments:

said...

அடடே... நம்மூரு! டவுன் ஹால் ரோட்லேருந்து அப்படியே மேலமாசி வீதியில் வலப்பக்கம் திரும்பி கொஞ்ச தூரம் நடந்தால் அங்கு ஒரு வடநாட்டுக்காரர் மசாலா பால் விற்றுக்கொண்டிருப்பார். நன்றாயிருக்கும்.

said...

அருமை அருமை.
I stayed in மேலமாசி வீதி.
//இது ஒரு காரணம் போதாதா.... நம்மவருக்குப் பிடிக்காமல் இருக்க// ஹாஹாஹா. பட் கோபால் சாரை பார்த்தா அப்டி தெரியலே.

//தென்னங்குருத்து// I saw in my last trip to Madurai but these were not seen/sold during 1996-98, at least around temple - I guess.

said...

ரெசிடென்சில ரெண்டு வாட்டி தங்கியிருக்கேன். Wifi எப்படியிருந்ததுன்னு நினைவில்லை. வேலை செஞ்சதா செய்யலையான்னு யோசிச்சுப் பாத்தாலும் நினைவுக்கு வரல. அனா கடவுச்சொல் வாங்கியதா லேசா நினைவுக்கு வருது. மத்தபடி நல்லாதான் இருக்கும்.

கூடலழகர் கோயில் ஒருமுறைதான் போயிருக்கேன். மூன்றடுக்கு கோயில். மேல ஏறியும் பாத்தேன். அங்கருந்து ரெசிடென்சி நடக்குற தொலைவுதான். மறுபடியும் மதுரைக்கு போகனும்.

காலேஜ்ஹவுஸ் முன்னப்போல இல்ல. ரொம்பவே சுமார். சபரீஸ்தான் அங்க கூட்டமான கூட்டமா ஓடிக்கிட்டிருக்கு. அதுலயும் ரெண்டு சபரீஸ் இருக்கு. ரெண்டும் ஒரே தெருவில் இந்தக் கடைசியும் அந்தக் கடைசியுமா இருக்கு. எது நல்லாருக்கும்னு தெரியல.

தென்னங்குரும்பை சாப்பிட்டதில்ல. அடுத்தவாட்டி கெடச்சா சாப்பிட்டுப் பாக்கனும்.

said...

தென்னங்குரும்பை திருவரங்கத்தில் கிடைக்கிறது. சாப்பிட்டதுண்டு.

மதுரை..... அங்கே சென்று ஒன்றிரண்டு நாட்கள் தங்கி சுற்றுவதற்கு ஆசை உண்டு..... ஆனால்.... எல்லா இடங்களுக்கும் போக ஆசை தான். ஆனால் ஆசை மட்டும் இருந்தும் என்ன செய்ய.... வேலை இருக்கிறதே! :))))

அழகான இடங்களை உங்கள் மூலம் பார்த்ததில் மகிழ்ச்சி.

said...

ஆஹா...நல்லா ஊர் சுத்தி பார்த்தாச்சு ..