Monday, February 11, 2019

குலதெய்வம்.....சர்ப்ரைஸ்.... (பயணத்தொடர், பகுதி 65 )

குழந்தையை ட்யூஷனுக்கு அனுப்பிட்டு, நாங்க கிளம்பினோம். நெருங்கிய சொந்தத்தைச் சந்திக்கணும்.   நாம் வந்துட்டோமுன்ற  சேதி... பரபரன்னு திக்கெட்டும் தீயாப் பரவி இருக்கு!  எல்லோருக்கும்  வீடுவரை  வந்து போகலைன்னு மனக்குறை!  முடிஞ்சவரை நாமும் போகத்தான் வேணும்.

திரும்பவும் சின்னச் சின்ன சந்துகளின் வழியில் பயணம் என்பதால்  ரமேஷ் ஓய்வெடுக்கட்டுமுன்னு  விட்டுட்டு ஆட்டோ எடுத்தாச்சு. லேடி ஆட்டோ ட்ரைவர்.   இவுங்களும்  தம்பி மனைவியின் மாணவியாம் ஒரு காலத்தில்.  போற வழி முழுக்க, டீச்சருக்கு வணக்கம் சொல்லும் பிள்ளைகள் !  டீச்சர் நாத்தனாரும்,  கை தூக்கி , தலை அசைச்சுன்னு பதில் வணக்கம் சொல்லிக்கிட்டே  வர்றாங்க!

இப்போப் போறதும்  ஒரு மச்சினர் வீடுதான். ஒரு நாத்தனார் அதே வீட்டு மாடியில் இருக்காங்க.   ஊருக்கு வரும்போது, இங்கே வராமப் போயிடறோமுன்னு  எனக்கொரு 'டோஸ்'  கிடைச்சது. அதை அப்படியே மடை திருப்பி விட்டேன் :-)

இதுவரை குலதெய்வம் கோவிலுக்குப் போகாதது குற்றம்தான். ரொம்பப் பக்கத்துலே என்பதால் நடந்தே போனோம்.  இந்த குலதெய்வம் சமாச்சாரமெல்லாம்  எனக்கு இதுவரை தெரியவே தெரியாது.  அங்கெ போனால் இன்ப அதிர்ச்சி!   ஆடு பாம்பே.....  நெளிந்தாடு பாம்பே....    வாவ்.....  ஸ்ரீ மது நாகம்மாள் கோவில்!   சர்ப்ப தோஷம்  வேற நமக்கிருக்கே!  தூக்கத்தில்  பாம்பு மாதிரி நான் சீறுவேன்ன்னு 'நம்மவர்' வேற சொல்றார்.  அந்த பயம் இருக்கட்டும்....

மத்யானத்துலே இருந்தே கரண்ட் இல்லையாம். அந்தி மயங்கும் நேரம், சின்ன விளக்கு வெளிச்சத்தில்,  நாகம்மாள் வசீகரம்! சின்னக் கோவில்தான்.  ஒரு பிரகாரம்.  எல்லோரும் கோவிலுக்குள்  தரையில் உக்கார்ந்துட்டோம்.   தீபாராதனை காண்பிச்சுப் பிரஸாதம் கொடுத்தார் பண்டிட். ஜிலுஜிலுன்னு நகை போட்டுண்டு இருக்காள்  நாகம்மாள்!  மச்சினர்கள் உபயமாம்.
கோவிலை இன்னும் கொஞ்சம் பெருசாகக் கட்டப் போறாங்களாம். அதுக்குன்னு தனி இடம் வாங்கியாச்சுன்னும் சொன்னார். இப்ப இருக்கும் கோவிலைப் பழுதுபார்த்துக் கட்டிய வகையில் நாகம்மாளுக்குப் பொருளுதவி செய்தவர்கள் பெயர்களை எல்லாம்  பளிங்குக் கல்வெட்டில் (!) பொறிச்சுருக்காங்க.  பட்டியலில் பாதி நம்ம உறவினர்கள்...  நாலுதலைமுறை!

கிளம்பும் நேரம் வரை கரண்ட் வரலை.....  இன்னொரு கோவிலும் நமக்கு அங்கே அதே ஏரியாவில் இருக்காம். அங்கேயும் போகலாமுன்னு போறோம். அதிக தூரமில்லை.... பத்து நிமிட் நடை இருக்கலாம். அங்கே போனால் கோவில் மூடி இருக்கு.  பண்டிட்டை வரச்சொல்லி ஆள் அனுப்பிட்டு,  கொஞ்சம் அடுத்தாப்லெ இருக்கும் இன்னொரு உறவினர் வீட்டுக்குப் போறோம்.

இந்த ஏரியாக் கொஞ்சம் சுத்தமாவே இருக்கு! 
நூத்தம்பது வருசப் புதுவீடு!   என் கனவு வீடுன்னும் சொல்லலாம்.  வெளிப்புறம்  திண்ணைகளும் நடுவில்  வாசலுமா இருக்கும் இடத்தைக் கடந்து போனால்.....   கோவில் ப்ரகாரம் போல  சுற்றிவர  அமைச்சு, நடுவிலே கம்பீரமா கொஞ்சம் உசரத்துலே நிக்கும் வீடு (!) அப்படியெ மனசைக் கட்டிப்போட்டுருச்சு.
வாசலுக்கு உள்ளேயும்  ரெண்டு பக்கமும்  பெரிய திண்ணைகள்.
பழைய கால வீடுகளுக்கே உரிய  தேக்கு மரத்தூண்களும் உத்திரங்களும்  போட்ட தாழ்வாரம்,  ஹால், இப்படி அதுபாட்டுக்குப் போய்க்கிட்டு இருக்கு!  நிலைவாசப்படியின் அழகு  ஆஹா....  இங்கேயும்  பழைய தலைமுறைகள் எல்லோரும் படத்தில்!  இப்ப இருக்கும் இளைய தலைமுறை, வீட்டின் அருமையும், அழகும், மதிப்பும் தெரிஞ்சு, சிதைக்காமல் காப்பாத்தி வர்றதுக்கு எவ்ளோ நன்றியைச் சொன்னாலும் தகும்! 

பழைய வீட்டுப் பராமரிப்புன்றது.....  யானையைக் கட்டித் தீனி போடுறதைப்போலத்தான்..... 


முந்திக் காலங்களில்  நிறைய பசுக்கள் இருக்கும் வீடுகளில், அக்கம்பக்கத்துக் குழந்தைகளுக்கு இலவசப் பால் தினமும் ஒரு செம்பு கொடுத்துருவாங்க.  அதேபோல் பகல் சாப்பாடும் ஒரு சின்னக்கிண்ணியில் கொடுத்துரும் வழக்கமும் உண்டு.  இதுக்குன்னே தனியா சோறாக்கி வைப்பாங்க.  நம்ம 'அக்கா' வீட்டில் தனியாக ஆக்கலைன்னாலும், 'வாத்தியார் வீட்டம்மா, புள்ளைக்கு  சோறு தாங்க'ன்னு கேட்டு, சின்னக் கிண்ணத்தோடு வரும் அம்மாக்களைப் பார்த்துருக்கேன். இடுப்பில் அந்தப் பிள்ளை உக்கார்ந்துருக்கும்.  எல்லாம் ஒரு ரெண்டு வயசுக்குள்ளேதான்!

இங்கே இவுங்க வீட்டில்  தனியா தினமும் சோறாகி வச்சுப் பிள்ளைகளுக்குக் கொடுக்கறாங்க.  தலைமுறையா வரும் வழக்கத்தை இப்பவும் தொடர்வது மனசுக்கு இதமா இருக்கு எனக்கு!  நல்லா இருக்கட்டும்! வீட்டம்மாவை  மனமார வாழ்த்தினேன்.

அதுக்குள்ளே கோவிலைத் திறந்துட்டாங்கன்னு  சேதி வந்துருச்சு.  அங்கே போனால்.... எம்பெருமாள் ! மூலவர் பெயரே எம்பெருமாள்சாமி தான்!  தீப ஆரத்தி எடுத்துப் பிரஸாதங்கள் கொடுத்தாங்க.  கூடவே.... ஊருக்கு வர இப்பத்தான் வழி தெரிஞ்சதான்னு........  க்க்கும்.... இப்பவாவது வந்தமே அதைப் பாருங்கன்னு...(மனசுக்குள்) சொல்லிட்டுக் கிளம்பினோம். 
இங்கேயும் பட்டைபட்டையா கல்வெட்டுகளும், அதை நிறைச்சுப் பெயர்களும்....  நம்ம குடும்ப அங்கங்கள் எல்லார் பெயரும் இருக்கு!  யார் பெயரையாவது நாம் மறந்துட்டோமுன்னா... இங்கே வந்து தெரிஞ்சுக்கலாம் :-)
சொல்ல விட்டுட்டேனே...   தாயார் சந்நிதின்னு ஒன்னு தனியா இல்லவே இல்லை!    பெருமாளே....  தனியாகவா இருக்கீர்? அடப்பாவமே.....
திரும்பிப்போய்  மச்சினர் வீட்டு வாசலில்  காத்திருந்த ஆட்டோவில் ஏறி டீச்சர் நாத்தனார் வீடு வந்து, ராச்சாப்பாடா ரெண்டு தோசையை முழுங்கிட்டு,  நம்ம வண்டியில் ஏறி க்ரீன்ராயலுக்கு வந்தோம்.  ரமேஷும், நாம் அனுப்பிய சேதியின் படி சாப்பாடை முடிச்சுக்கிட்டு வந்துருந்தார்.

நம்ம அறைக்குப் போறோம்.   இங்கே ட்ரைவர்களுக்குப் படுக்கத் தனியிடம் இல்லையாம்.  அவரவர் அறைக்குள் நுழையுமுன் இருக்கும்  கம்பியழி போட்ட வெராந்தாவில் (சின்ன முன்னறை) படுத்துக்கணுமாம்.

அடராமா...... இதென்ன ரிஸார்ட்டா.....

வைஃபை இருக்குன்னாலும்,  நம்ம அறைக்கதவைத் திறந்து  முன்பக்கம் வந்தால்தான் வேலை செய்யுது.  அங்கே ஒருவர் படுத்திருக்கும்போது.... நாம் எப்படி நம்ம அறையில் இருந்து வெளியே வர்றது?    ஐயோ.... எந்தொரு சல்யம்....
இவ்ளோ பெரிய இடத்தில் டிரைவர்ஸ் தங்க ஒரு இடம் வைக்கலாமில்லையா?   ரிஸார்ட் உள்ளே  குடும்ப விழாக்கள்,கல்யாணங்கள் நடத்திக்கத் தனிக் கட்டடம் இருக்கு.  வண்டியோட்டிவரும்  நபர்கள் பெரும்பாலும் குடும்ப அங்கங்கள் என்பதால் இதுவரை இப்படி ஒரு பிரச்சனை வரலை போல.... ஆனால்  கட்டாயம் கவனிக்க வேண்டிய  பிரச்சனை இது. 

 தமிழ்நாட்டில் ஒரு  'அதிமுக்கிய' அரசியல்வியாதியின்  ரிஸார்ட் இது என்பதால் 'அந்தப் பூனை'க்கு மணி கட்ட இன்னும் யாரும் முன்வரலை போல....

மொத்தத்தில்....  ஆலை இல்லா ஊருக்கு....   நான் சொல்லி முடிக்குமுன், இந்த ஊருக்கு இதுவே அதிகம்ன்னார் 'நம்மவர்'... 

"க்க்கும்.."

சரி... வாங்க கொஞ்சம் நல்லா ரெஸ்ட் எடுத்துக்கிட்டுக் காலையில் இன்னொரு இடத்துக்குப் போய்வரலாம்.....

தொடரும்.........:-)8 comments:

said...

அருமை நன்றி

said...

யார் அந்த 'அதிமு'க்கிய அரசியல்வாதி? பெயருக்கு ஒரு க்ளூ?

அந்தப் பழைய வீடு மஹா கவர்ச்சி.

said...

அந்த வீடு வெகு அழகு ..

குல தெய்வ தரிசனம் அருமை மா...

said...

ஸ்வாரஸ்யம்... ஓட்டுனர்கள் அறை இங்கே பல இடங்களில் இருப்பது இல்லை. கஷ்டம் தான்.

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி !

said...

வாங்க ஸ்ரீராம்,

க்ளூவா...... இருங்க டீ குடிச்சுட்டு வந்து சொல்லவா?

said...

வாங்க அனுராதா ப்ரேம்.


நல்ல அழகான அம்மன்தான்!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.


இதுவரை செய்த பயணங்களில் ஓட்டுனர்கள் அறையைப் பொறுத்தவரை நம்ம ஹயக்ரீவாதான் டாப் !