Friday, February 01, 2019

ஆனைக்கா போகணும், அகிலாவைப் பார்க்கணும்! .....(பயணத்தொடர், பகுதி 62 )

வழக்கம்போல் இந்த முறையும் நின்னு நிதானமா ராஜகோபுரத்தைப் பார்க்க வாய்க்கலை.  அதன்வழியாவே கார் போகும் பாதையும் இருப்பதால் அந்தாண்டை போய் பார்க் செஞ்சுக்க முடியுது.
முதல்வேலை முதலில்னு  அகிலாவைத் தேடிப்போனால்  அஞ்சு வருஷத்துக்கு முன்னே பார்த்த அதே அழகோடு நின்னுக்கிட்டு இருந்தாள். பாப்பானும் அதே அர்ஜுன் நாயர்தான்.  அவருக்குத்தான் வயசான அடையாளம் இருக்கே தவிர, நம்ம செல்லத்துக்கு  அப்படிஒன்னும் இல்லை. ஆச்சே அவளுக்கும் பதினைஞ்சு !
பதினொரு மணி வெய்யில்,  கூடுதல் என்பதால்,  அவளுடைய மஹலுக்குள் போக ரெடியா இருந்தாள்.  போய் வா மகளே....
மல்லப்பன் கோபுரவாசலுக்கு ரெண்டுபக்கமும்  புள்ளையாருக்கும், சுப்ரமண்யருக்கும் சந்நிதிகள்.  கோபுரவாசல் கடந்து உள்ளே போறோம்.
திருமாமணி மண்டபம் தாண்டி, கார்த்திகைக் கோபுரம்!
 இங்கேயும்  பழுதுபார்த்துப் புதுவண்ணம் பூசிக்கிட்டு இருக்காங்க.  ரெண்டு கோபுரங்களுக்கிடையில் சின்னதா  ஒரு நந்தவனம். நாகலிங்கமரங்களும் இருக்கு! இதுவரைஒரு மாறுதலும் இல்லை.... எல்லாம் வழக்கம்போல்!

மண்டபத்துக்குள் நுழைஞ்சால் ஒரு புதுஅறிவிப்பு  பார்த்தேன்.  ஒவ்வொரு பௌர்ணமிக்கும் திருநீற்றான் மதில் வலம் வர்றாங்களாம்!
 அந்த போஸ்டரில் இருந்த அழகான , கம்பீரமான சிவன்  எனக்குப் பிடிச்சுருந்தார். இப்படி ஒரு சிவன் சிலையை  நம்ம நேபாள் பயணத்தில் பார்த்தேன். அப்படி ஒரு அழகு! வாங்கிக்கலையேன்னு இப்பவும் ஒரு ஏக்கம் இருக்கு....

மண்டபம் முழுசும் கோவில் சப்பரங்களை நிறுத்தி வச்சுருக்காங்க.  அது பரவாயில்லை. ஆனால் வைக்கப்போரை எதுக்கு இங்கே வச்சுருக்காங்கன்னு தெரியலை. கோசாலைக்கு போகுதோ என்னவோ....
ஊஞ்சல் மண்டபத்தாண்டை சிலர்.  பெரிய கொடிமரமும் நந்தியுமா நாம்  மூலவராண்டை வந்துட்டோமுன்னு காட்சி கொடுக்கறாங்க.
சிவன் கோவிலில் எப்படிக் கும்பிடணுமுன்னுகூட ஒரு தகவல் பார்த்தேன்.  யானைக்கு முழங்கால்  பிரச்சனை. கீழே விழுந்து கும்பிடறதெல்லாம்  இனி கனவில் மட்டும்.
கோவில் திருப்பணிக்கு பொருளுதவி செய்யறவங்க பட்டியல் ஒன்னு போட்டுருக்காங்க. ரொம்ப நல்லது. இதைப் பார்க்கும் சிலருக்காவது அடுத்த முறை தானும் உதவலாம் என்ற எண்ணம் வரத்தான் செய்யும்.
அதேபோல இன்னொரு இடத்தில் கோவில் இடத்தை அனுபவிக்கும் பலர், கோவிலுக்கான  வாடகையைத் தராம பாக்கி வச்சுருக்காங்கன்னு  தெரிஞ்சது. சிவன் சொத்து குல நாசம் இல்லையோ? இதுவும் நல்லதுதான். பெயர் இருக்கே..... அசிங்கப்பட்டுப்போனோமேன்னு சிலராவது பாக்கியை அடைக்க முன்வரலாம்.

மண்டபத்து வரிசைத்தூண்களைப் பார்த்து இப்பவும் பிரமிச்சு நின்னேன்.  எத்தனை முறை பார்த்தாலும் அலுக்காத வகை !
முதலில் மூலவரை தரிசனம் செஞ்சுக்கணும். பத்து ரூபாய்  ஸ்பெஷல் தரிசனம். இல்லைன்னா, நவ துவார சுவர் வழியாப் பார்க்கணும்.  நல்லாவே பார்த்தால் ஆச்சு. இப்பெல்லாம்  வரிசையில் நின்னு நிதானிக்கப் பொறுமை இருக்கறதில்லை.  கோவில் கட்டணத்தில்  பெருமாள் கோவில்களை விட சிவன் கோவில்கள் கொள்ளை அடிப்பது  கொஞ்சம் என்ன... ரொம்பவே  குறைவுதான்.  பத்து ரூபாயே இருக்கட்டும். அவரிடமே கெமெராவுக்கும் ஒரு டிக்கெட் வாங்கினதும் நிம்மதி. ஜம்புகேஸ்வரர் தரிசனம் ஆச்சு!
ஆமாம்... கோபுரவாசல் கடந்து கோவிலுக்குள் நுழையும்போதே  கட்டண வசூல் வச்சுருக்கலாமே.....  சந்நிதிவாசல் வரை காத்திருப்பானேன்?  முக்கியமா அந்த கெமெரா டிக்கெட் ஆரம்பத்துலேயே வாங்கிட்டால் நிம்மதியாப் படம் எடுக்கலாம்.


அம்மன் தரிசனத்துக்குப் போகும் வழியில்  பாதையின் ரெண்டு பக்கங்களிலும் இருக்கும்  மண்டபங்களின் தூண்கள் அற்புதங்களே! எத்தனையோ முறை பார்த்து ரசிச்சது போக, இப்பெல்லாம் எல்லாம் அந்தந்த இடத்தில் ஒழுங்கா இருக்கான்னு பார்க்கும் பழக்கம் வந்துருக்கு.
ஒவ்வொருமுறையும், 'பெருமாளே.... யாரும் இதுலே கைவைக்காமல் இருக்கணுமே'ன்ற  வேண்டுதல்தான்.  சிற்பங்களின் அழகைச் சிதைக்கவே கைகள் கொடுத்துட்டானோ சிலருக்கு?

இனிமே க்ளிக்ஸ்தான். அதான் கெமெரா டிக்கெட் வாங்கியாச்சே :-)

நம்ம அகிலாண்டேஸ்வரி, வழக்கம் போல் புன்சிரிப்புடன் தரிசனம் கொடுத்தாள்!  அம்மா, தாயே நல்லா இரு!
கொஞ்சம் கூட்டம் அதிகம்தான். ஒரு முப்பதுபேருக்குக் குறையாம இருப்பாங்க. அம்மன் சந்நிதி வாசலுக்குள் இருக்கும் திண்ணையில்  மாலையும் கழுத்துமா ஒரு தம்பதியர்!  இப்படி யாரையாவது பார்த்தால் என்னால் சும்மா இருக்கமுடியாது. வாழ்த்திட்டுத்தான் மறுவேலை!  நல்லா இருங்கன்னு மனசார வாழ்த்தக் காசா பணமா?
மல்லிகா துரைராஜ்  ஜோடிக்கு அறுபதாங்கல்யாணமாம். மருமகள் சொன்னாங்க. அவுங்க சுற்றம்தான் இங்கத்துக்'கூட்டம்'னு புரிஞ்சது:-)

பக்கத்து கிராமமாம்.  கிராம வாழ்க்கையில் அதுவும் விவசாயத் தொழில்ன்னாலே கஷ்டங்கள் நிறைய. அதெல்லாம் மாப்பிள்ளை முகத்தில் படிஞ்சாப்லெ  எனக்குத் தோணுச்சு!  பெருமாளே.... இவுங்க நல்லா இருக்கட்டும்!

ப்ரகாரம் சுற்றப்போனோம். சின்னதா மரக்கொடிமரம்! அதுக்கு அந்தாண்டை இருக்கும் அம்மன் திருமணமண்டபத்துலே உண்மையிலேயே நல்ல கூட்டம்.  என்னன்னு எட்டிப் பார்த்தால்.... அங்கேயும் ஒரு கல்யாணம்!  நான் பரபரன்னு உள்ளே நுழைஞ்சதும், 'இவளுக்கு வேற வேலையில்லை'ன்னு  வெளியே இருக்கும் ஒரு நாலுகால் மண்டபத்தில் (முந்தி 'குரத்தி' மண்டபம்னு பார்த்த நினைவு)போய் உக்கார்ந்துட்டார் 'நம்மவர்'

இங்கேயும் அறுபதாங்கல்யாணம்தான். கொஞ்சம் பெரிய குடும்பம் போல!  வீடியோ , ஃபோட்டோன்னு அமர்க்களப்படுது!  மணமக்களை வாழ்த்தினேன்.  அவுங்க அனுமதியுடன் சில க்ளிக்ஸ். கல்யாணத்துக்கு வந்தவங்களுக்கு ரிட்டர்ன் கிஃப்ட் கொடுக்க வச்சுருந்த பைகளில் ஒன்னு எனக்கும்!  வேண்டாம்னு அன்போடு மறுத்தாலும்  மணமக்கள் கேக்கலை. 'எங்க நினைவா வச்சுக்குங்க'ன்னு .....   நல்லதுன்னு வாங்கிக்கிட்டேன்! பக்கத்துலேதான் கல்யாண விருந்துக்கு ஏற்பாடாம். 'இருந்து சாப்பிட்டுட்டுப் போங்க'ன்றாங்க.  விருந்தோம்பல் !
"நீங்க இப்படி அன்பா உபசரிச்சதே எனக்கு வயிறும் மனமும் நிறைஞ்சு போச்சு" 

(நமக்காப் பேசத்தெரியாது ?)

கையில் பையோடு வர்றதைப் பார்த்த 'நம்மவர்' முழிக்கிறார்!  'பை, கனம்,   எடை,  செக்கின் பேக்....'   அவர் கவலை அவருக்கு...... :-)
ரிட்டர்ன் கிஃப்ட் கிண்ணத்துலே ரொம்பவே அழகா  தம்பதியர் பெயர், விவரங்கள் எல்லாம் 'அச்சடிச்சு' இருக்காங்க! பாத்திரத்தில் பெயர் பொறிக்கும் காலம் போயிருச்சு போல !


(வைஸாக் வாழ்க்கையில் கண்ணாடியில் கூடப் பெயர் பொறிப்பேன்னு சொல்லி, நம்ம எவர்ஸில்வர் பாத்திரங்களில் அசிங்கமா பொறிச்சுக் கொடுத்ததை நினைச்சா.......  ப்ச்.... நல்லவேளை....  குடும்பம் நடத்த ஆரம்பிச்ச காலம். ஆறாறுன்னு ரெண்டே செட் பாத்திரங்கள்தான்.  இன்னும் வச்சுருக்கேன். தினப்படி பயனாகுது  )






ப்ரகாரம் சுற்றல் இன்னும் முடியலை. நல்லா சுத்தமாத்தான் இருக்கு ! பெரிய இடம் இல்லையோ!  பதினெட்டு ஏக்கர்!
கோவில்கதை சொல்லலையேன்னு  நினைச்சால்....   இங்கே க்ளிக்கவும் :-)  எழுதி ஆறு வருஷம் ஆனாலும் கதை என்னமோ அதே தான் !
உள்ப்ரகார வலம் முடிச்சுத் திரும்ப  கொடிமரத்தாண்டை வந்துருந்தோம்.  வலம் வரும்போதே  புள்ளையார், முருகன் சந்நிதிகளில் தரிசனம் கம்பிக் கதவு வழியாக் கிடைச்சது!

கோவிலில் இருக்கும் சந்நிதிகளின் வரைபடம் இப்போப் போட்டு வச்சுருக்காங்க!  ரொம்ப நல்லது.  கோபுரங்களின் பெயர்கள் பார்த்தால் ரங்கத்துக் கோபுரப்பெயர்களே அநேகமா இங்கும்! (ஒரு சில எழுத்து மாற்றத்தோடு!)கோவில் பிரகாரங்களில் அங்கங்கே போட்டு வச்சுருக்கும் பெயர்ப்பலகைகளுக்கும், இப்போ இங்கே போட்டு வச்சுருக்கறதுக்கும் வித்தியாசங்கள் இருக்கு. இனிமே  இதைப்போலவே அங்கே  மாற்றுவார்களோ என்னவோ....
கோபூஜைக்கான கோமாதா மஞ்சள் குங்குமத்தோடு  தயாராக இருந்தாள்.  இன்னும் பத்து நிமிட்டில் பூஜை நடக்குமாம்.  பார்த்துட்டே போகலாமுன்னு  மண்டபத்தில் உக்கார்ந்தோம். வெளியே அடிக்கும் வெயிலின் சுவடு கூட உள்ளே இல்லை!  நல்ல குளிர்ச்சி!
உச்சிகால பூஜைக்காகப் புடவை கட்டிய குருக்கள் ரெண்டுபேர் (மெரூன் ரெட் சேலை, சின்ன பார்டர். ஜரிகை இல்லை) கோபூஜை செஞ்சாங்க. கூட்டம் இருந்தாலும், நாம் உக்கார்ந்த இடத்தில் இருந்து நல்லாவே தரிசனம் செஞ்சுக்க முடிஞ்சது!
PC. Google

இந்தக்கோவிலிலும் இப்போ பேட்டரிகார் வச்சுருக்காங்க. நடக்க முடியாதவர்களுக்கும்,  சீனியர் சிட்டிஸன்களுக்கும் உதவி!
கோவில் திறந்திருக்கும் நேரம் காலை  அஞ்சரை முதல் பகல் ஒரு மணி. அப்புறம் மத்யானம் மூணு மணிமுதல்  இரவு எட்டரை வரை. இப்பவே மணி ஒன்னு ஆகப்போகுதுன்னு நாங்களும் கிளம்பினோம்.
வாசலில் ஒரு கடையில்  காளிமார்க் பன்னீர் ஸோடா  கிடைச்சது :-)  பகல் சாப்பாடு நம்ம பாலாஜி பவனில்!

தொடரும்....... :-)


15 comments:

said...

அகிலா காலில் கொலுசு... ரசித்தேன்.

said...

கோவிலுக்கு உதவி விட்டு பெயர் போட்டுக்கொள்ள வேண்டுமா என்றும் தோன்றும். அப்படி போட்டிருக்கும் பெயரைப் பார்க்கும் யாராவது அவர்களுக்கும் அப்படிக் கொடுக்கும் எண்ணம் வரலாம் என்று சொல்வார்கள். எனினும் பெயர் போடாமையே நன்று!

said...

படங்கள் வெகு அழகு. பெரிய கோவில் இல்லையா அது? சிகப்பு நிறத்தைக் கண்டால் மாடுகளுக்கு ஆகாது என்பார்களே... ஜிகுஜிகுவென சிகப்புப் புடைவையில் பூஜை செய்கிறாரே...!

said...

எனக்கு மிகவும் பிடித்த கோவில்.....

படங்கள் அழகு.

said...

மிகச்சிறப்பு அருமை அற்புதம்.
சிவனுக்கு உங்க தரிசனம் கிடைத்ததில் மகிழ்ச்சி.

said...

நன்றி மா.. படங்களுக்கும் தரிசனத்துக்கும் ...

said...

தலைப்பை பார்த்ததும் அகிலாண்டெஸ்வரி என்று நினைத்தேன் பிறகுதாந்தெரிந்தது அங்குள்ள யானையின் பெயரும் அகிலா என்பது

said...

ஆனைக்கா அன்னை எனக்கு மிகவும் நெருக்கம். மீண்டும் காண வேண்டும் அவளை.

அகிலா வளர்ந்துவிட்டாள். சில ஆண்டுகளுக்கு முன்பு சிறுமியாக இருந்தவள் இன்று குமரியாக நிற்கிறாள்.

இந்த யானைகளையெல்லாம் காட்டிலேயே குடும்பத்தோடு இருக்க விட்டாலென்ன இப்பொழுதெல்லாம் தோன்றுகிறது. எதோவொரு தாயைப் பிரித்துத்தானே இந்தக் குட்டியை கொண்டு வந்திருப்பார்கள். அந்தத் தாயும் இந்தச் சேயும் பிரியும் போது என்ன பாடுபட்டிருப்பார்களோ என்று நினைக்கையில் வருத்தமாக இருக்கிறது.

said...

வாங்க ஸ்ரீராம்.

கொலுசு போட்ட அழகுக் கால்கள் !!!!

தனிநபர் உதவும் போது பெயர் போட்டுக்காமல் இருக்கலாம். ஒரு நிறுவனம் உதவும்போது தொகையும் கொஞ்சம் பெருசாத்தான் இருக்கும். பெயர் போட்டுக்கிட்டால் அதுவும் அவுங்க வேலை நிறுவனத்துக்கு ஒரு விளம்பரமாக இருக்கும்தானே? போட்டுக்கட்டும். நல்லது செஞ்சால் சரி!

said...

@ஸ்ரீராம்

மாடுகளுக்குப் பழகிப்போயிருக்கும் இந்த நிறம். அதுவுமில்லாம இது என்ன ஸ்பானிஷ் ஜல்லிக்கட்டுக் காளை மாடா? பாவம்.... பசு! பெண்ஜென்மம் !!!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

அழகான, அமைதியான பிரகாரங்களுள்ள கோவில். உங்க கெமெராவுக்கு எப்பவும் நல்லாவே தீனி போட்டுடும்! விருந்துதான் போகும்போதெல்லாம்!

said...

வாங்க விஸ்வநாத்.

ஆஹா..... விஸ்வநாதரே சொன்னா.... அப்பீலே கிடையாது !

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

நன்றிப்பா !

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

பெரும்பாலும் அந்தந்தக் கோவில்களில் உள்ள ஸ்வாமி பெயரேதான் யானைகளுக்கு! எப்பவாவது தானம் கொடுப்பவருக்கிஷ்டமான பெயரும் உண்டு. இதே கோவிலுக்கு நம்ம சிவாஜி கணேசன் கொடுத்த கோவில் யானைக்குப் பெயர் சாந்தி.

said...

வாங்க ஜிரா.

அம்மாவின் அன்புக்கு யார் ஈடு இணை?

யானைகளைப்பொறுத்தவரை எனக்கும் இவை இந்தக் காலங்களில் கோவிலுக்குத் தேவை இல்லை என்ற எண்ணம்தான். கட்டாயம் வேணுமுன்னா குறைஞ்சது ரெண்டு யானைகளாவது இருக்கணும். அதுகளும் எத்தனை நாள்தான் மனுசப்பயல்களையே பார்த்துக்கிட்டு வாழ்வது?

மனுசன் சுயநலமி ஆனபிறகு.... யானை போன்ற வாயில்லா ஜீவன்களுக்குக் கஷ்டகாலம் ஆரம்பிச்சுருச்சு.... ப்ச்.... அதன் பராமரிப்புச் செலவிலேகூட பிச்சுத் தின்னுடறானுங்க....