Monday, February 18, 2019

பாழாகிக் கொண்டு இருக்கும் பொக்கிஷம்... (பயணத்தொடர், பகுதி 68 )

நல்லாத் தூங்கி எழுந்ததும் உடம்பு நல்லா ஆகிருச்சு போல...... காலை ஏழரைக்கே குளிச்சு முடிச்சுப் பளிச்ன்னு இருந்தார் ரமேஷ்.   ப்ரேக்ஃபாஸ்ட் கூட  டவுனில் போய் முடிச்சுட்டு வந்துட்டாராம். அட! குடும்பத்தோடு செல்லில் பேசிக்கிட்டு இருக்கார்.  பிள்ளைங்க பள்ளிக்கூடம் போறதுக்கு முன்னால்  அவுங்களோடு  பேசினால்  மகிழ்ச்சிதான். இருக்காதா பின்னே!
நாங்களும்   தயாராகி ஒரு எட்டேகாலுக்கு க்ரீன்ராயல் காலை உணவுக்குப் போனோம்.  சுமார் ரகம். ரிஸார்ட்டுன்னு பெத்த பெயர் வச்சுக்கிட்டு பேப்பர் கப்பிலே காஃபி. இதுக்கே அங்கே அடிதடிபோல ஒரு கூட்டம்.  இந்தியாவில் நான் கவனிச்ச ஒரு விஷயம்.....    பிள்ளை வளர்ப்பு.   சமீபகாலமாப் பயணங்களின்போது பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன்.  பிள்ளைகளுக்குச் செல்லம் கொடுத்து வளர்ப்பது நல்லது. அதே சமயம்  கொஞ்சம் நல்ல பண்புகளையும்  சொல்லி வளர்க்கலாம்தானே.... பொது இடங்களில்  நடந்துகொள்ளும் முறைகளில்  இன்னும் கவனம் தேவை..... ப்ச்...என்னத்தைச் சொல்ல....   விளக்கமாச் சொல்லப்போனா.....  நமக்குத்தான் கெட்ட பெயர்....
ஊருக்குள் போகும் வழியில் எதிரில் வருது ஒரு மாடுக்கூட்டம்.  எலும்பும் தோலுமாத்தான் கிடக்குதுகள். அநேகமா கேரளாவுக்கு ஓட்டிக்கிட்டுப் போறாங்கன்னு நினைக்கிறேன்.  மனசு வலிக்குது.... 'அதெல்லாம் இல்லை....  மேய்ச்சலுக்குத்தான் போகுதுகள். கன்னுக்குட்டி எல்லாம் இருக்கு, பாரு'ன்னார் 'நம்மவர்' . அப்படியானால் சரி. நல்லா இருக்கட்டும்.
உள்ளூர்  பெருமாள் கோவில் போய் வரணும்.  அருள்மிகு ஸ்ரீநிவாசப்பெருமாள் திருக்கோவில். ரொம்பப் பழைய கோவில்னு சொல்ல முடியாது. முகப்புகூட ஒரு வீடுமாதிரிதான் இருக்கும்.
முகப்பு வாசலுக்கு மேலே சுதைச்சிற்பங்கள்.  ஸ்ரீராமர், சீதா, லக்ஷ்மணன், ஆஞ்சி  கூடவே  மத்த ரெண்டு தம்பிகளில் ஒருத்தர் மட்டும்.  சத்ருகன் வேறெங்கோ போயிட்டார் போல..... இல்லை... பரதனோ....  கூர்ந்து கவனிச்சால்  லக்ஷ்மணனுக்குப்பின்னால்  சின்னதா ஒரு முகம்.....  ஓஹோ..... எல்லாரும்தான் இருக்காங்க !
அகலிகை சாப விமோசனம், சபரி, கஜேந்திரமோக்ஷம், கீதா உபதேசம்.....  இப்படி  கலந்துகட்டி....
உள்ளே  போனால் தூண்களோடு விசாலமான முன்மண்டபம். இதுலேயே  கொடிமரம், பலிபீடம், பெரிய திருவடி.... எதுத்தாப்லெ கருவறையில் பெருமாள்!

பிரகாரம் சுத்தப்போனால் தனிச் சந்நிதியில் தாயார்.  ஒரு பனிரெண்டு வருசத்துக்கு முன்னே  இந்தக் கோவிலுக்கு வந்துருக்கேன். என்னமோ அப்போ பார்த்ததைவிட  இப்போ மாற்றம் இருக்குன்னு புரிஞ்சாலும்....  என்ன ஏதுன்னு சட்னு மனசுக்குப் புலப்படலை. பழைய படங்களை ஒருநாள் எடுத்துப் பார்க்கணும்....


சனிக்கிழமை கோவில் விஸிட் என்றது போலத்தான்  இன்றைக்கும்.  நல்ல கூட்டம் இருந்தது இங்கே!

இன்றைக்கு இங்கிருந்து கிளம்பறோம் என்பதால்  தம்பி & டீச்சர் நாத்தனார் வீட்டுக்குப்போய் சொல்லிக்கணும். ஆரம்பப்பாடசாலை சனிக்கிழமையும் அரைநாள் வேலை என்றதால் குழந்தை பள்ளிக்கூடம் போயிருந்தாள். நாத்தனார் உயர்நிலைப்பள்ளி டீச்சர் என்பதால் லீவு. அத்தையிடமும் சொல்லிக்கிட்டுக் கிளம்பறோம். அப்போதான்  க்ரேடு ஒன் ஏலக்காய் கொஞ்சம் வாங்கிக்கணுமுன்னு தோணுச்சு.  சாமிக்கு ஏலக்காய் மாலை போடலாமேன்னு.....
ஏற்கெனவே தம்பி ஒரு ஏலக்காய் பொதி, நாத்தனாரும் அத்தையுமாச் செஞ்சுருந்த மணிகள் வச்ச வளையல்கள் (மகளுக்காக)இப்படிக் கொஞ்சம் அன்பளிப்புகள் சேர்ந்துதான் போயிருக்கு. இதுலே புதுசா இன்னுமான்னு 'நம்மவர்' பார்த்த பார்வையைத் தவிர்த்தேன் :-)
வீட்டுக்குப் பக்கத்துலேயே  (முந்தாநாள் போய்ப் பார்த்த ஏலக்காய் தொழில் நடக்கும் இடம் )போய்  அரைக்கிலோப் பொதி  ஒன்னு வாங்கி வந்து கொடுத்தார் தம்பி.

அரண்மனையை ஒருக்காப் பார்த்தாத் தேவலாமுன்னு இருக்கு எனக்கு. ஊருக்கே நடுநாயகமா பளிச்ன்னு நிக்கும் இது, இப்போ காலப்போக்கில்  கடைகண்ணிகளுக்கு இடையில்  மறைஞ்சு போய்க் கிடக்கு.  ப்ச்.....


அரசு பிடுங்கி எடுத்துக்கிட்டு இருக்கு இப்போ.  அரசு அலுவலகங்கள் இதன் வளாகத்துலே....   யானை வாயில் போன கரும்புதான் ....  பராமரிப்பெல்லாம் ஒன்னுமே இல்லாமல் பாழாகிக்கிட்டு இருக்கும் பொக்கிஷம்....



நல்லாப் பராமரிச்சு,   ஒரு கட்டணம் வச்சு, பொதுமக்கள் வந்து பார்க்கும்படியா  செஞ்சால்  வருமானத்துக்கு வருமானமாவும், சரித்திரத்துக்குச் சரித்திரமாவும்  ஆகும்.  ராஜஸ்தான் பக்கம் பார்த்தீங்கன்னா.... இப்படி மாளிகைகளும் அரண்மனைகளும் நல்ல வருவாய்க்கு வழி செய்யுது! சுற்றுலாப்பயணிகளுக்கும்  விருந்துதான்!

போடிநாயகனூர் வழியாகத்தான்  மூணாறு, இடுக்கி, சபரிமலைன்னு  சுற்றுலாப்பயணிகள் போறாங்க என்பதால்  நல்ல வருமானம் வரும். ஏற்கெனவே  சேர, சோழ பாண்டியர்கள் வாழ்ந்த  அரண்மனைகளின் சுவடே இல்லாமல் அழிச்சுட்டோம். மிஞ்சிக்கிடக்கும் இந்த  ஜமீன் அரண்மனை, மாளிகைகளையாவது வச்சுக் காப்பாத்த வேணாமா?  சரித்திர சம்பந்தமான இடங்களும், பொருட்களும்  போனபிறகு.... ஐயான்னா வருமா? அம்மான்னா வருமா?  மதிப்புத் தெரியாத மக்களும், இவுங்களுக்கேத்த அரசுமா இருந்தால் எங்கெ போய் முட்டிக்க?

ஜமீன் குடும்பமும் இப்போ இங்கே இல்லை. பெரிய நகரத்துக்கு இடம் பெயர்ந்துட்டாங்க.

அரண்மனையைப் பார்த்தாலே கண்ணில் ரத்தம் வரும் நிலை. கொஞ்சநாளில்  இதையும் அரசும் அதிகாரிகளுமா ஸ்வாஹா செஞ்சுருவாங்க. பழமையைப் போற்றத்தெரியாத.....

இருநூறு வருஷங்களுக்கு முன்னால் (நாயக்கர் ஆண்ட காலங்களில்)ரொம்ப முக்கியமான  ஊராத்தான் இருந்துருக்கு!  இந்த ஊருக்குப் பழைய பெயர் தென்காசியம்பதி !   போடயநாயக்கர் ஆட்சி காலத்துலேதான் இந்த அரண்மனையைக் கட்டி இருக்காங்க. ஜெய்ப்பூர் அரண்மனையை மனசில் வச்சுக் கட்டுனதா ஒரு  தகவல் உண்டு. இந்த அரண்மனையெல்லாம் கட்டுனபிறகுதான் ஊருக்குப் பெயர் மாற்றம் வந்துருக்கு. போடயநாயக்கனூர் என்று  சொல்ல ஆரம்பிச்சுக் காலப்போக்கில்  போடிநாயக்கனூர் என்று ஆகிப்போச்சாம்!
அரண்மனை சமாச்சாரம்தான் கொஞ்சம் குழப்பம். திருவாங்கூர் மஹாராஜாதான் அரண்மனையைக் கட்டுனாருன்னும் ஒரு தகவல் கிடைச்சது.  அப்புறம் ஏன் பாளையப்பட்டு ஜமீன் அரண்மனைன்னு  சொல்றாங்க?
ஊரின் காலநிலை, அழகு எல்லாம் பார்த்த  பண்டிட் ஜவஹர்லால் நேரு, சௌத் காஷ்மீர்னு  சொன்னாராம்.  இப்ப  வந்துக்கிட்டு இருக்கும் காஷ்மீர் சேதிகளைப் பார்த்தால்.... நல்ல காலம் இந்தப் பெயர் இங்கே நிலைக்கலைன்னு சந்தோஷப்பட்டுக்கலாம்.

ராமாயணக்கதை முழுசும் ம்யூரல் சித்திரங்களா அங்கே இருக்கு. அசப்பில் பாங்காக் அரண்மனையில்  இருக்கும் சித்திரங்கள் போல....

மேலே: வலையில் சுட்ட படங்கள் இவை. கூகுளாருக்கு நன்றி.
சனிக்கிழமை. அதிகாரிகள் யாரும்  இல்லை என்பதால், உள்ளே போய்ப் பார்க்கும் ஆசை நிறைவேறலை....
க்ரீன்ராயல் திரும்பி நம்ம சாமான்களை எடுத்துக்கிட்டுக் கிளம்பும்போது  மணி பதினொன்னரை.


நேரா மதுரைக்குத்தான்.  நாம் வழக்கமாத் தங்கும் ராயல் கோர்ட்டில் அறை கிடைக்கலை என்பதால் மதுரை ரெஸிடன்ஸியில் தங்கல். அறைக்குப் போய்ச் சேர்ந்தப்ப மணி ஒன்னே முக்கால்.

கோவில் வ்யூ உள்ள அறையாம். திரைச்சீலையை விலக்கினால்.....

தொடரும்....... :-)


4 comments:

said...

பராமரிக்கப்படவேண்டிய பல இடங்கள் இவ்வாறுதான் தன் கலையை இழந்துகொண்டிருக்கின்றன. வேதனையே.

said...

மதுரை மாநகரம், ஆஹா அருமை.

said...

அருள்மிகு ஸ்ரீநிவாசப்பெருமாள் திருக்கோவில்...பழமையும் புதுமையும் அழகு..


அரண்மனை எத்தகைய பொக்கிஷம் ...வருத்தமாக இருக்கிறது மா பராமரிப்பு இன்றி காணும் போது ..

said...

தமிழகத்தில் இருக்கும் இந்த மாதிரியான கலைக்கருவூலங்கள் எந்தக் காலகட்டத்தைச் சேர்ந்ததாக இருந்தாலும் பாதுகாக்கப்பட வேண்டும். அரசுதான் செய்ய வேண்டும். கையிலிருக்கும் பொருளின் மதிப்பு தெரியாத அரசு. அல்லது தெரிந்தே வீணடிக்கும் அரசு.

முன்பு கல்கியில் இந்த சமீன் குடும்பம் இந்த அரண்மனையின் ஓவியங்களைப் பற்றிப் பேசியதைப் படித்த நினைவிருக்கிறது.

சேர சோழ பாண்டியர் அரண்மனைகளை நாம் அழிக்கவில்லை. ஒருவகையில் அவர்களே அழித்துக் கொண்டார்கள்.