Monday, September 10, 2018

ஆதிரங்கத்தில் ஸ்ரீரங்கநாதர் !! (பயணத்தொடர், பகுதி 7 )

காலையில் முதல் வேலையா ஜன்னலாண்டை போய், அரண்மனை எங்கேன்னு பார்த்ததும்தான் நிம்மதி ஆச்சு. நல்ல அழகான வீடுகள் எதிர்வாடையில் இருப்பதையும் பார்த்தேன்!

நம்மவருக்கு  வேறு கவலை. இன்னிக்கு ஊர் சுத்த ஒரு வண்டி வேணும். முதல்வேலையா வலையில் தேடிப்பார்த்து ஒரு  ட்ராவல் கம்பெனியில்  டூரிஸ்ட் டாக்ஸி பத்து மணி நேரத்துக்கு புக் பண்ணிட்டார்.   அதுக்கு மேலே ஆச்சுன்னா  கிலோ மீட்டருக்கு  இவ்ளோ  ரூபாய்ன்னு ஒரு கணக்கு!  இன்றைக்குப் பூராவும் சுத்தப்போறோம் :-)

காலை ஒன்பதுக்கு  வண்டியை அனுப்பச் சொல்லிட்டு, மத்த  வேலைகளை முடிச்சுக்கிட்டு கீழே ப்ரேக்ஃபாஸ்ட்க்குப் போனோம். பஃபேதான்.  உள்ளே அடைய வேணாமேன்னு வெளியே தோட்டத்தாண்டை இருக்கும்  அவுட்டோர் டைனிங் ஏரியாவில் உக்கார்ந்து சாப்பிட்டோம். வழக்கமான ஹிந்தி பேசும் மக்களுக்கு மாறுதலா, ஹிந்தி தெரியாத  ஒரு அஸ்ஸாம்காரர்தான் நம்மைக் கவனிச்சுக்கிட்டவர்.
காஃபிக்குத் தனிக்குடில் அமைப்பு!

ஹொட்டேல் ட்ராவல் டெஸ்க்லே யாரும் இல்லை. அப்புறம் விசாரிக்கணும். ஒன்பதுக்கு டான் னு வண்டி வந்துருச்சு. முதலில் போக வேண்டிய இடம், சுமார் 23 கிமீ தூரத்தில் இருக்கும் ஸ்ரீரங்கபட்னா.

பஞ்சரங்க க்ஷேத்ரத்தில் இது  முதல்லெ வருது.  ஆதிரங்கம்னு சொல்வாங்க. நம்மூர்  ஸ்ரீரங்கம் போலவே  காவிரி ஆறு ரெண்டாப் பிரிஞ்சு, கொஞ்ச தூரத்துலே மறுபடியும் ஒன்னாச் சேர்ந்து ஒரு தீவு போன்ற அமைப்பை உண்டாக்கி இருக்கு இங்கே. இந்தத் தீவுலேதான் ஸ்ரீ ரங்கநாதர்  பாம்புப் படுக்கையில்   பள்ளிகொண்டுருக்கார்.

இந்த பஞ்சரங்க க்ஷேத்ரத்தில் ஆதிரங்கம் மட்டுமே கர்நாடக மாநிலம்.  மத்தியரங்கம், அப்பாலரங்கம், சதுர்த்தரங்கம், பஞ்சரங்கம்னு மற்ற நாலும் தமிழ்நாட்டுலேயேதான். ஸ்ரீரங்கம், கோவிலடி,  கும்மோணம் சாரங்கபாணி கோவில், திரு இந்தளூர் பரிமளரங்கன் கோவில். ஏற்கெனவே இந்த நாலு கோவில்களிலும் நமக்குத் தரிசனம் ஆச்சு. பாக்கி ஒன்னே ஒன்னு....  அதை ஏன் விடணுமுன்னுதான் மைஸூர் பயணம்.  இன்னும் ஒரு முக்கியமான கோவிலும் போகணும் என்று திட்டம்.
ஹொட்டேலை விட்டுக் கிளம்பிக் கொஞ்ச தூரத்துலேயே கண்ணில் பட்ட,  க்ளீனஸ்ட் ஸிட்டியை ஒரு க்ளிக்!
ஊர் எல்லையைத் தாண்டறதுக்கு முந்தியே சாலைக்கு மேலே தொட்டிப்பாலம் ஒன்னு  போறதைப் பார்த்தேன்.  காவிரித் தண்ணீரை அந்தாண்டை கொண்டு போகக் கட்டி இருக்காங்க. ஆனாலும் நம்ம மாத்தூர் தொட்டிப்பாலம் அழகு இல்லைதான். நாம் ஏறிப்போய்ப் பார்க்க முடியாதாம். அதுக்குண்டான வகையில் கட்டலைன்னு டிரைவர் ஜெய் சொன்னார்.
போகும் வழியிலேயே  மெயின்ரோடாண்டை ரெண்டு மூணு கோவில்கள் கண்ணில் பட்டன. அதுலே ஒன்னுலே  மதில்சுவர்மேலே   பெரிய அஞ்சுதலை நாகம் உக்கார்ந்துருந்துச்சு.  க்ளிக்கலாமுன்னு  கார் பறந்துல்லே போகுது!  முப்பத்தியஞ்சு நிமிட்டுக்குள் கோவில் இருக்கும் தெருவுக்குள் நுழைஞ்சாச்சு. மெயின் வாசலுக்கு  ஒரு இருநூறு மீட்டர் முன்னாலேயே  வண்டிகளுக்கான  பார்க்கிங் வச்சுருக்காங்க. நாங்க இறங்கி நடந்து போறோம்.  ரெண்டு பக்கத்துலேயும் வரிசையாக் கடைகள்!    கோவிலுக்குப் பக்கமா ஒரு ஷெட், காலணிகளுக்காக. பார்த்துக்கவோ, டோக்கன் கொடுக்கவோ யாரும் இல்லை. நாம பாட்டுக்கு அதுலே விட்டுட்டுப் போறோம்.
சின்னதா அஞ்சடுக்கு இருக்கும் கோவில் ராஜகோபுரத்துக்கு முன்னால் பலிபீடமும் அதுக்குப்பின்னால் ஒரு  கல்தூணும் அதுலே  ஒரு துளசிமாடமும். இதுதான் செல்ஃபிக்கான ஃபோட்டோ பாய்ன்ட் :-)
அப்ப  ஒருத்தர் வந்து 'கைடு வேணுமா? நூறுதான்'னார்.  நம்மவர் எதுக்குன்னு  கேக்கும்போதே, 'இருக்கட்டும். தெரியாத ஊரில் என்ன ஏதுன்னு சொல்லவாவது  வேணுமே'ன்னேன். 'தமிழ் தெரியும்மா'ன்னார் தேவதாஸ விட்டலா!

அவர்கூடவே போறோம்.  ராஜகோபுரம் கடந்து உள்ளே பிரகாரத்தில் நிக்கும்போது  நேர்எதிரா ஒரு மண்டபம். 'இங்கெல்லாம் படம் எடுத்துக்கலாம். உள்ளே எடுக்கமுடியாது'ன்னார். கெமெரா டிக்கெட் எல்லாம் கிடையாதாம். முதலில் மூலவர் தரிசனம்னு உள்ளே கூட்டிப்போனார். கொஞ்ச நேரத்தில் திரை போட்டுருவாங்களாம்!
நிறைய தூண்கள் இருக்கும் முன்மண்டபம் தாண்டி உள்ளே போறோம்.  பாம்புப் படுக்கையில்  கிடந்த கோலம். காலாண்டை தேவி! மஹாலக்ஷ்மியா?  ஊஹூம்... காவேரியாம்! கூடவே இன்னொரு உருவமும்!  ஒருவேளை அது லக்ஷ்மியோ?  இல்லையே....  கௌதம முனிவராம்.

மஹாவிஷ்ணுவின் தரிசனம் வேணுமுன்னு தவமிருந்த  கௌதமருக்குப் பள்ளிகொண்ட கோலத்தில் பெருமாள் காட்சி கொடுக்கறார். அப்போதைய வழக்கப்படி, 'என்ன வரம் வேணுமுன்னு கேள்' என்று  கேட்டதும், முனிவரும் அப்போதைய வழக்கப்படி, 'இதே கோலத்தில் இங்கே தங்கி எல்லா மக்களுக்கும் அருள் புரியவேணுமு'ன்னு  கோரிக்கை வச்சார். அப்படியே ஆச்சு !

ஓ.... அப்ப காவேரி எப்படி இங்கே? அதுக்கும் ஒரு 'கதை' இருக்கே!

பாபவிமோசனமுன்னு சனம் புண்ணிய நதிகளில் போய் நீராடறாங்க இல்லையா?  அப்ப சனத்தோட பாவம் எல்லாம் நதிகளில் சேர்ந்துருது. நதிகளுக்குப் பாவங்களைச் சுமப்பது பேஜாரா இருக்கு!  எல்லோரும் போய் காவிரியில் நீராடித் தங்கள் மேலே இருந்த பாவங்களைப் போக்கிக்கறாங்க. இப்ப பாவச்சுமை முழுசும் காவேரியில்!  பாவம் சேரச்சேர தன்னுடைய அழகான உருவை இழந்து அரக்கிபோல ஆனவள், எப்படி இதைப் போக்கலாமுன்னு நாரத மஹரிஷியிடம் கேட்க, அவர் நாராயணா நாராயணா.....  நாராயணர் காலில் போய் விழுன்னுடார்.

நாராயணரை தியானிச்சுத் தவம் செய்யும் காவேரிக்கு(ம்) தரிசனம் கொடுக்கறார் எம்பெருமாள். தன்னுடைய குறையைச் சொல்லி அழும் காவேரியின் மேலே இருந்த பாவங்களைப் போக்கினதும்,  அவர் வழக்கப்படி என்ன வரம் வேணும், கேள்னு ஆரம்பிச்சதும்,  'என்னால்  பொழுதன்னிக்கும் பாவம் சுமந்து தவம் செஞ்சுக்கிட்டு இருக்க முடியாது. பேசாம இப்படியே உம் காலருகில் இருந்துடறேன். அதுக்கு  அனுமதி கொடும்'னு கேக்க அப்படியே ஆச்சு! (கூடுதல் மஸாலாவை மன்னிச்சூ! )

கோவில் ரொம்பப் பெருசு ன்னு சொல்லமுடியாது. உள்ளே  ஒரு முற்றத்தோடு கூடிய  உள்ப்ரகாரம், அப்புறம்  ராஜகோபுரம் தாண்டி உள்ளே வந்ததும் இருக்கும் வெளிப்ரகாரம். அவ்ளோதான். வெளிப்ரகாரம் கொஞ்சம் பெருசுதான். ப்ரகாரம் சுத்திவர முடியாதபடிக்குப் பின்பக்கங்களில் பழுதுபார்க்கும் வேலைகள் நடந்துக்கிட்டு இருப்பதால் அங்கெல்லாம் போக அனுமதி இல்லை.

ஒன்பதாம் நூற்றாண்டின் கடைசிப்பகுதியில் திருமலைராயர் ஆட்சியில் இந்தக் கோவிலைக் கட்டி இருக்காங்க. அதுக்குப்பிறகு  அந்தப் பகுதியை ஆண்ட ஹொய்சாலர்கள், விஜயநகர சாம்ராஜ்ய  அரசர்கள்,  மைசூர் அரசவம்சத்தினரான உடையார்கள் இப்படி அந்தந்த ஆட்சி காலத்தில்  அவரவர் ஸ்டைலில் கொஞ்சம் விரிவுபடுத்திக் கட்டி இருக்காங்க. ஏறக்கொறையத் தமிழகக் கோவில்கள் மாதிரிதான் டிஸைன்! ஆனா அந்தக் காலத்துலே ஏது தமிழ்நாடு, கர்நாடகா என்ற  பிரிவுகள் எல்லாம்?

முன்மண்டபத்துக் கல்தூண்கள் மட்டும் பழமை மாறாமல் அப்படியே இருக்கு!  கோவிலுக்கு உள்ளேயும் கருங்கல் தூண்களும், சந்நிதிகளும் ஏறக்கொறைய பழையகாலம் போல. ஆனால் வெளிப்ரகாரத்தில்  மற்ற பக்கங்களிலும்,  பிரகாரத்தைச் சுற்றி இருக்கும் கல் கட்டடங்கள், தூண்கள்  எல்லாம்  சமீபகாலத்தில்  இருக்கும் காங்க்ரீட் கட்டடம் போலத்தான் இருக்கு :-(  பழமை மாறாமல் புதுப்பிக்கலை என்றது எனக்கொரு குறையாத்தான் தோணுச்சு.
ரங்கநாயகித் தாயாருக்குத் தனி சந்நிதி இருக்கு.  அப்புறம் நம்ம நரசிம்ஹர்,  சுதர்ஸனர், ராமர் அண்ட் கோ, வெங்கடாசலபதி, ராஜமன்னார், நம்ம ராமானுஜர்  எல்லாம் தனித்தனி சந்நிதிகளில் இருக்காங்க. ஒன்னு ரெண்டு தவிர  இந்த சந்நிதிகள் எல்லாமே மூடித்தான் கிடக்கு. சனிக்கிழமை என்றபடியால்  கோவிலில்  மூலவர் சந்நிதியில் மட்டும் கூட்டம் அதிகம்.
கோவில் வாஹனங்கள் எல்லாம் நல்லாவே ப்ளிச்சுன்னு இருக்கு.  கருடர் அட்டகாஸமா இருக்கார்.
இந்தக் கோவிலில் இன்னொரு விசேஷமுன்னா....  வைகுண்ட ஏகாதசிக்குச் சொர்கவாசல் திறப்பு இல்லை!  அப்புறம்?  நம்ம பொங்கலன்னிக்குத்தான்  சொர்கவாசல் திறந்து பெருமாள் அதன் வழியா பவனி வர்றார். பொங்கலுன்னு சொல்றதில்லை. மகர சங்கராந்தி தினம்.   மூலவர் ரங்கநாதருக்கு வெண்ணைய்க் காப்பு உண்டாம்!

கர்நாடகாவில் இருக்கும் பள்ளிகொண்ட பெருமாள் சிலைகளில், இங்கே ஸ்ரீரங்கபட்னா ரெங்கன்தான் அளவில் ரொம்பப் பெருசாம். முழுக்க முழுக்க சாளக்ராம் கல்!  அதுவும் சுயம்புன்னு சொன்னார் நம்ம தேவதாஸ விட்டலா!
 பளபளன்னு மின்னும் கருடவாஹனத்துக்குப் பக்கத்துலே  கொஞ்சம் நேரம் உக்கார்ந்து பேசிக்கிட்டு இருந்தோம். இன்னும் என்னென்ன கோவில்கள் இங்கே விசேஷமுன்னு கேட்டதுக்கு, சின்னக்கோவில்களா நிறைய இருக்கும்மா. ஆனால் நான் ஒரு முக்கியமான கோவிலைச் சொல்றேன். அங்கே கட்டாயம் போயிட்டுப் போங்கன்னார். விவரம் வாங்கிக்கிட்டோம்!
ரொம்பவருஷமா கோவிலைச் சுத்திக் காமிக்கும் வேலை(!) செய்யறாராம். நெத்தியில் நாமம் போல பச்சை குத்திக்கிட்டு இருக்கார். (கொஞ்சம் கோணையா இருக்கே...  )  ரெண்டு  மேல் கைகளிலும் சங்கு சக்கரம் அதே பச்சை குத்தலில். கூடவே ஆஞ்சி, கருடன்னு.....   பார்த்துட்டுச் சும்மா இருக்க முடியுதா? இதோ என் கையில் சங்கு சக்கரம்னு  விரலில் இருந்த மோதிரங்களைக் காமிச்சேன் :-)

அடுத்த வினாடி, சட்னு குனிஞ்சு என் பாதம் தொட்டுக் கும்பிட்டார். எனக்கு உடம்பே  ஆடிப்போச்சு.  ஐயோன்னு கத்திட்டேன். வெளிப்பக்கம் நாமே போய் சுத்திப் பார்க்கலாமுன்னு உடனே அவருக்கு ஒரு தொகை கொடுத்து  அனுப்பினபிறகுதான் படபடப்பு அடங்குச்சு.

வெளியே ஒரு மூலையில் சின்னதா, குட்டியா  ஒரு குளம்!  இறங்கிப்போக நாலுபக்கம் படிகள் இருந்தாலும் ஒரு தொட்டியின் அளவுதான் நடுவில். தீர்த்தவாரிக்குப் பயன்படுத்தறாங்கன்னு நினைக்கிறேன்.  அதுக்குப் பக்கம் இன்னொரு மண்டபம். அநேகமா உற்சவர் இங்கே வந்து ஸேவை சாதிப்பாரா இருக்கும்.
காவேரியில் மூணு இடத்துலே இப்படித் தீவு அமைப்பு  இருக்கு. மூணு இடங்களிலும் பள்ளிகொண்ட பெருமாள் ரங்கநாதர் என்ற பெயருடனேயே இருக்கார்.  ஸ்ரீரங்கப்பட்னா ஆதிரங்கம்,  ஷிவனசமுத்ரம் என்ற இடத்தில் மத்யரங்கம், கடைசியா நம்ம ஸ்ரீரங்கம், அந்திரங்கம்னு இவுங்க ஒரு கணக்கு வச்சுருக்காங்க.

தொல்லியல் துறை இந்தக் கோவிலின் பொறுப்பை ஏத்துக்கிட்டுத் தகவல் தரும் வகையில் ஒரு விளக்கப் போஸ்டர் ஒட்டி வச்சுருக்கு !
கோவில் முன்மண்டபத்துக்கு வந்து அங்கிருக்கும் தூண்களில் என்னென்ன சிற்பங்கள் இருக்குன்னு பார்த்துக்கிட்டு இருந்தேன்.  பலிபீடம், கல் கொடிமரம், பெரிய திருவடிக்கான சந்நிதி எல்லாம் இருக்கு! இந்தக் கல்கொடிமரத்தில் சங்குசக்கரம்,நடுவில் நாமம் ஒரு பக்கம், இன்னொருபக்கம் ஆஞ்சி, மூணாவது பக்கம் ஒரு வானரம்(!) கருவறை பார்த்தமாதிரி இருக்கும் நாலாவது பக்கம்  கருடர்! மற்ற தூண்களில் எல்லாம்  சிற்பச்செதுக்கல்கள் ஒன்னும் கிடையாது!அப்பதான் பட்டர்ஸ்வாமிகள் ரெண்டு வட்டில் நிறைய நைவேத்யம் ஆன  ததியன்னம் கொண்டு வந்து   கல் கொடிமர மேடையில் வச்சுட்டு,  பிரஸாத விநியோகம் ஆரம்பிச்சார்.  நமக்கும் கிடைச்சது!திரும்ப வண்டிக்கு வரும் வழியில் கடைகளையெல்லாம் வேடிக்கை மட்டும் பார்த்துட்டு சில க்ளிக்ஸ் எடுத்துக்கிட்டேன்.  குட்டியா ஆட்டுக்கல்!   சின்னதா குழவி! அதுக்கு ஒரு கைப்பிடி, குட்டியூண்டு திருகைக்கல்ன்னு சூப்பர்!  வாங்கணும் என்ற ஆசையை முளையிலேயே கிள்ளிப்போட்டேன்.
இந்த ஸ்ரீரங்கப்பட்னாவில்  இன்னும்  ரெண்டுமூணு சுவாரஸியமான சமாச்சாரங்கள் இருக்கு!  வாங்க அங்கே போகலாம்!

தொடரும்........ :-)


20 comments:

said...

ஆதிரங்கம் - உங்கள் தயவில் நாங்களும் தரிசனம் செய்தோம்.

தொடர்கிறேன்.

said...

இந்த ஶ்ரீரங்கபட்னா பக்கத்துலதானேதிப்புசுல்தான் இறந்த இடம் இருக்கு. அந்தக் கோவில்தானா?

said...

இந்த ஶ்ரீரங்கபட்னா பக்கத்துலதானேதிப்புசுல்தான் இறந்த இடம் இருக்கு. அந்தக் கோவில்தானா?

said...

மைசூர்ல வேல தொடர்பா அஞ்சு மாதம் தங்கியிருந்தப்ப இந்தக் கோயிலுக்கு பைக்ல போயிருக்கேன். கோயிலுக்குள்ள நல்ல பெரிய உருண்டையான தூண்களைப் பாத்தது நல்லா நினைவிருக்கு.

அந்தப் பக்கம் நிறைய கோயில்கள் இருக்கு. நிமிஷாம்பா, மேல்கோட்டே, நஞ்சன்கூடுன்னு போயிருக்கேன். அந்த வழிகாட்டி சொன்ன கோயில் எதுன்னு தெரியலையே.

பழமை மாறாத புதுமை கர்நாடக ஆந்திர கோயில்கள்ள கிடைக்காது. எதோ புதுசாக் கட்டுன கோயில் மாதிரியே இருக்கும்.

said...

ஸ்ரீ ரங்கப்பட்டினத்தில் கோவில் தவிர மற்ற இடங்களைப் பார்க்கவில்லயா இறந்தோருக்கு திதி கொடுக்குமிடமாக காவிரி இருக்கிறது இரண்டு மூன்று ஆறுகளின் சங்கமமாகவும் இருக்கிறது சங்கமிக்கும் ஆறுகளின்பெயர்கள்நினைவுக்கு வரவில்லை

said...

உங்கள் பதிவுகளை http://valaippookkal.com தமிழ் திரட்டியில் இணைத்து உங்கள் எண்ணங்களையும், கருத்துகளையும் உலகமெங்கும் வாழும் தமிழர்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டுகிறோம்

said...

பார்த்திராத இடங்களுக்கு அழைத்துச்சென்றமைக்கு நன்றி.

said...

அருமை நன்றி.

said...

ஸ்ரீ ரங்கப்பட்டினத்திற்கு இருமுறைக்கு மேல் சென்றிருந்தாலும் அப்பொழுது படங்கள் எடுக்கவில்லை..

நல்ல தரிசனம் இன்று..

ஆனாலும் எனக்கு மேல்கோட்டை செல்லுவ நாராயணரும், யோக நரசிம்மரும் தான் மிகவும் பிடிக்கும்..அருமையான இடம் ..இனி இங்கு உங்கள் பயணத்தில் வரும் என நினைக்கிறேன்..

said...

துளசி டீச்சர்... நீங்க தொண்டனூர் கவர் பண்ணினீங்களா (அங்கதான் ராமானுசர் சில வருடங்கள் வாழ்ந்தார். அங்க பெரிய ஏரியை நிர்மாணித்திருக்கிறார். அங்க 2 பெரிய கோவில்களும் உண்டு)? ஸ்ரீரங்கப் பட்டினத்துக்கு முன்னால், தொட்டமளூர் என்ற ஊர் கோவில் (மூலவர் பெயர் அப்ரமேயர்- அப்ரமேயோ ரிஷீ கேசோ என்று விஷ்ணு சகஸ்ரநாமத்தில் வரும். அந்தக் கோவிலின் பிராகாரத்தில்தான் நவனீதகிருஷ்ணன் சன்னிதி உள்ளது. அவர் மிகவும் சக்திவாய்ந்தவர்) சென்றீர்களா?

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

தொடர் வருகைக்கு நன்றி !

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

ஆமாம்.... திப்புவும் அவர் அப்பாவும் ஆண்ட பகுதி! தலைநகரமாக்கூட இருந்த ஊர்தான் இது!

தொண்டனூர் போகலை. 'அவன்' அழைக்கலை.....

இந்த முறை எந்த ஹோம் ஒர்க்கும் செய்யாமப்போனதில் பல இடங்களைக் கோட்டை விட்டுருக்கேன்.....

said...

வாங்க ஜிரா.

ஹொய்ஸலா அரசின் ஸ்டைல்தான் அந்த உருண்டைத் தூண்கள். உள் முற்றத்தில் சுத்திவர இருக்கு! மரத்தில் கடைஞ்செடுத்தாப்லே..... அப்படி ஒரு டிஸைன்!

வழிகாட்டி வழி காட்டுனது நம்ம நிமிஷாம்பாள் கோவிலுக்குத்தான். அதைமட்டும் விட்டுடாதீங்கம்மான்னு வற்புறுத்திச் சொன்னார்!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

இன்னும் சில இடங்களைப் பார்த்துட்டுத்தான் வந்தோம்! அந்தக் காவிரி த்ரிவேணி சங்கமம் கூட!

said...

நன்றி வலைப்பூக்கள்.

தமிழ்த்திரட்டியில் பகிர்ந்து கொள்ளும் அழைப்புக்கு நன்றி.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

காணாத கோவில்களின் எண்ணிக்கை கோடிகளைத் தாண்டுமே! கிடைத்தவரை போகணும். பார்க்கணும். பார்த்ததை எழுதணும் என்ற எண்ணம்தான்.

வருகைக்கு நன்றி .

said...

வாங்க விஸ்வநாத்,

நன்றி.

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

சரியாச் சொன்னீங்க.... இனிமேல் வரும் :-)

said...

வெண்ணைய்க் காப்பு இல்லை வெண்ணெய்க் காப்பு. நானும் சொல்லிக்கிட்டே இருக்கேன், ரீச்சர்ன்னு பார்க்காம பெஞ்ச் மேல ஏத்த வேண்டியதுதான் போல..

said...

வாங்க கொத்ஸ்.

கண்ணுலே எண்ணெய் விட்டுக்கிட்டு வாசிப்பீரோ!!!!

மனசுக்குத் தெரிஞ்சது விரலுக்குத் தெரியலையேப்பா......

பி.கு: இன்னும் 'புத்தகம்' வாசிக்கலை.