Wednesday, September 12, 2018

கேட்டதும் கொடுப்பவளே..... (பயணத்தொடர், பகுதி 8 )

உண்மையில்  யாராவது எதையாவது கேட்டாங்கன்னா.... அவுங்களைக் காக்க வைக்காம உடனே அந்த க்ஷணமே கொடுக்கறதுதான் நல்லது.  ஒரு விநாடி தாமதிச்சாலும் மனசு மாறி செகண்ட் தாட் வந்திரும்.  கொஞ்சம் யோசனை பண்ணிப் பார்த்தால்.... இது எவ்ளோ நிஜமுன்னு நமக்கே புரியும், இல்லே?
தேவதாஸா விட்டலா சொன்ன கோவிலுக்கு வந்துருக்கோம். ஸ்ரீ நிமிஷாம்பாள் கோவில்!  தேவியிடம் கேட்கும் வரங்களையும், நாம் வைக்கும் நியாயமான கோரிக்கையையும்  நிமிஷத்துலே நிறைவேத்திடுவாளாம்!

காவிரிக் கரையோரமா இருக்கு கோவில்.  பார்க்கிங் இடத்துலே வண்டியை நிறுத்திட்டுச் சின்னதா இருக்கும் தெருவைத் தாண்டி அப்பாலே போகணும். ஆரம்பத்துலேயே  காலணி பாதுகாப்புக்கான இடம்.  காவலர் இருக்கார் :-)


ரெண்டுபக்கமும்  பூஜை சாமான்கள், பூக்கள் விற்கும் கடைகள்.  இடது பக்கம் அந்த ஓரத்தில் சின்ன அஞ்சு நிலை ராஜகோபுரத்துடன் கோவில். இந்தாண்டைக் கம்பித்தடுப்புகள் வச்சுருக்காங்க. ஸ்பெஷல் தரிசனத்துக்கு ஒரு கட்டணம் உண்டு. கம்பித்தடுப்புக்குள்  யாருமே இல்லை என்றதால் பொது தரிசனமே போதுமுன்னு போய் கோவில் படிகளில் ஏறினோம்.
உள்ளே படம் எடுக்கத்தடை!  வாசலில் நின்னே நாலு க்ளிக்ஸ் ஆச்சு.

ஒரு பிரகாரம்தான். கண்ணுக்குக்கு நேரா  உயரமான கருவறையில் மூணு சந்நிதிகள்! நடுவிலே தேவி நிமிஷாம்பாள்.  நமக்கு இடப்புறம் சிவனுக்கும், வலப்புறம் பெருமாளுக்கும்(ஸ்ரீலக்ஷ்மிநாராயணர்) தனித்தனியா சந்நிதிகள்! அவரவருக்கு அவரவர் வாஹனங்கள். நிமிஷாம்பாளுக்கு முன்னே ஸ்ரீசக்கரம் பிரதிஷ்டை செய்தவர் ஆதி சங்கராச்சாரியார் அவர்கள்.

இந்த மூவரைத்தவிர பிரகாரத்தில் சூரியனுக்கும், புள்ளையாருக்கும் தனித்தனி சந்நிதிகள். மொத்தம் அஞ்சு சந்நிதிகள்.  எல்லாம்  ஆதிசங்கரர் ஏற்படுத்திய பஞ்சாயதன பூஜை முறைகள் இங்கே!


கூகுளாண்டவர் அருளிய படங்கள் !  நன்றீஸ்!

எல்லா கடவுளர் சிலைகளும் பளபளன்னு கிருஷ்ண சிலா என்னும் கருப்புக் கல்லில் !

இந்தக் கோவிலுக்கு  வயசு ஒரு எழுநூறுன்னு தகவல்.  இந்தப்பகுதியை ஆண்டுவந்த முக்தராஜன் என்ற அரசன்,  தன்நாட்டுமக்களைத் துன்புறுத்திய  அரக்கன் ஜானு சுமண்டலனை எதிர்த்துப் போராடியும், அவனால் அரக்கனை கொல்ல முடியலை.  அம்பாள் பக்தனான மன்னன்,  அருள் வேண்டி உண்ணாவிரதம் இருந்து தன்னை வருத்திக்கறான். பக்தனுடைய வேண்டுகோளுக்காக  மனம் இரங்கிய அம்பாள், அரக்கன் முன்போய் நின்னு கண்ணை மூடிக் கண்திறந்த நிமிஷத்தில் அரக்கனை வதம் செய்து, அவன் பிடியில் இருந்து நாட்டுமக்களைக் காப்பாத்தினதாக கோவில் கதை !  அப்போ கட்டுன கோவில்! அம்மனுக்கும் நிமிஷாம்பாள் என்ற பெயரும் அப்போ வந்ததுதான்!

கோவில்கதைகளைச் சொன்னாக் கேட்டுக்கணும். நிமிஷத்தில் எல்லாம் செய்யக்கூடியவள், அரசனைப்  பலகாலம் உண்ணாவிரதம் இருக்கச் செய்தது ஏன்னு கேள்வியெல்லாம் கேக்கப்டாது, கேட்டோ!  கடவுள் என்பதே ஒரு நம்பிக்கைதான். நம்புனானாத்தான் கடவுள்!

நம்பிக்கையோடு இங்கே வேண்டிக்கிட்டவர்களின் கஷ்டங்கள் சீக்கிரம் போயிருது. அதுவும் பௌர்ணமி நாட்கள், நிமிஷாம்பாள் ஜயந்தி, பிரதோஷம்னு விசேஷ  தினங்களில் கோவிலுக்கு வந்து தரிசனம் பண்ணி, வேண்டுதலும் வச்சா ரொம்ப சீக்கிரமாவே நிவாரணம் கிடைக்குதாம். அந்த தினங்களில் மட்டும்  கிட்டத்தட்ட ஒரு லக்ஷம் பேர் வர்றாங்களாம்!  ஓ.... அதுதான்.... கம்பித்தடுப்பெல்லாம் போட்டு  சனம் வரிசையில் வர வழி பண்ணி இருக்காங்க! 

பிரகாரம் சுத்தி வரும்போது  ஆஞ்சிக்கும் தனியா ஒரு சந்நிதியும், அதுக்கு எதுத்தாப்லெ துலாபாரமும். சமீபத்துச் சமாச்சாரமா இருக்கணும்.  வாழைப்பழம் தராசுத்தட்டில் !


கோவில் காலை 6 முதல்  மாலை 8.30 வரை திறந்துருக்கு. ஹைய்யோ....   பயணிகளுக்கு எவ்ளோ சௌகரியம் பாருங்க !  இதே போல் நம்ம பக்கங்களிலும் இருந்தால் நல்லா இருக்கும்..... 


கோவிலையொட்டியே தொட்டடுத்துப் பெரிய அகலமான படித்துறை!  ஏராளமான படிகள் ! கடந்தால் காவிரி!  காவிரி, ஹேமாவதி, கபினின்னு  மூணு நதிகளின் சங்கமமாம்.
படியையொட்டிக் கொஞ்சமாத் தண்ணீர் குளம்போல இருக்கு!  அந்தாண்டை ஏதோ சிலை இருக்கேன்னு கேமெராக் கண்ணால் கிட்டே கொண்டு வந்தால்... நம்ம புள்ளையார்!
'ஒண்டிக்கொண்டி வர்றயா'ன்னு  கேட்டுச் சண்டைக்குத் தயாரா இருக்கான் ஒருத்தன். எதிராளிக்கு மூட் இல்லை. கொஞ்ச நேரம் நின்னு பார்த்துட்டு, சீ போன்னு போய்  உக்கார்ந்தான் அந்த ரௌடி :-)


இலவச  ஹெல்த் செக்கப்  முகாம்,  அன்றைக்கு  ரத்த அழுத்தம் பார்த்துச் சொல்றாங்க! 'நம்மவர்'  போய் செக் பண்ணிக்கிட்டார். நிறையத்தான் இருக்கு.  ஏற்கெனவே இருக்கும் அழுத்தம், பயணங்களில் கொஞ்சம் அதிகம்தான் அவருக்கு! எப்பவும், நான் எதாவது வாங்கிருவேனோ, அதுவும் கனம் அதிகமானதா வாங்கிட்டால் எப்படிக் கொண்டு போக.... இப்படி ஏகப்பட்ட பயத்தில் ப்ரெஷர் அதுபாட்டுக்கு ஏறி உச்சிக்குப் போயிருதே.....

கோவில் வாசலுக்கு முன் இருக்கும் பெரிய முற்றம் போன்ற இடத்தில்  காய்கறிகள், பழங்கள், தீனி இப்படி சிறு வியாபாரிகள். கீரையெல்லாம் தளதளன்னு இருக்கு!


முற்றத்துக்கு நடுவிலே உயரமான சிவலிங்கம் போன்ற அமைப்பின் மேலே ஒரு குட்டி சிவலிங்கம்!  தொட்டடுத்து ஒரு  பழைய கட்டடம்.


காலணிக்காப்பகத்துலே இப்போ ரெண்டு பேர் ட்யூட்டியில்!
பூக்கடைகளில் கனகாம்பரம் பார்த்ததும் வாங்கினேன். எனக்குப் பிடிச்ச பூக்களில் ஒன்னு. மணம் இல்லைன்னாலும் கனம் இல்லை பாருங்க!
குதிரை சவாரி இங்கே விசேஷமோ? கார்பார்க்கில் நாலைஞ்சு குதிரைகள், இதே வேலையா!  கொஞ்ச நேரத்துக்கு முந்தி ரெங்கநாத ஸ்வாமி கோவில் முன்னாலும் ரெண்டு மூணு குதிரைகள் சவாரிக்குத் தயாராத்தான் இருந்தன.
திரும்பிப் போகும் வழியில் தேன், தேனில் ஊறவச்ச சமாச்சாரங்கள்  வியாபாரம்!

ஏழெட்டு நிமிட்டுலே இன்னொரு புது இடம் !

ஆமாம்.... சென்னையில் நிமிஷாம்பாளுக்கு ஒரு கோவில் இருக்கு தெரியுமோ?

சௌகார்பேட்டை, காசி செட்டித் தெருவில் இருக்காம்!  அடுத்த பயணத்தில் போயிட்டு வரலாமா?

தொடரும்...........  :-)


13 comments:

said...

கோவிலுக்கு 700 வயசுன்னு எழுதியிருக்கீங்க. ஆதிசங்கரர் ஸ்ரீசக்ரம் பிரதிஷ்டை பண்ணினார்னு சொல்றீங்க.

தேன்... தித்திக்கும் தேன். நான், சிலவற்றை எங்கு பார்த்தாலும் தேவை இருக்கோ இல்லையோ வாங்கிவிடுவேன். தேன் அவற்றில் ஒன்று.

மாம்பழம்லாம் பார்க்கும்போது பயணம் செய்து இரண்டு மாதங்களாவது ஆகியிருக்கும். தொடர்கிறேன்.

said...

வாங்க நெல்லைத் தமிழன்,

இப்ப இருக்கும் கோவிலுக்கு எழுநூறு வயசு. பயணம் ஜூன் மாசம் போனது.

said...

வாங்க நெல்லைத் தமிழன்,

இப்ப இருக்கும் கோவிலுக்கு எழுநூறு வயசு. பயணம் ஜூன் மாசம் போனது.

said...

மிக அருமை. நன்றி.

மணம் கனம் .... கவித கவித
தினம் தினம் வேணும் என கேட்கும் மனம்.

said...

எங்கள் அனுபவம்வேறு கோவிலில் கைகட்டி இருக்ககூடாது எனறார்கள் அர்ச்சனை தெய்வத்தின் பேரில் செய்யக் கூடாது என்றார்கள் நாம்தான் கடவுளுக்கு நமக்காக வேண்டி அர்ச்சனை செய்ய வேண்டும்

said...

ஆகா... நிமிஷாம்பாள்னு மொதல்ல சொன்னது சரியாத்தான் போச்சு. நான் போன பொழுது நல்ல கூட்டம். ஆனாலும் நிம்மதியா பாக்க முடிஞ்சது. அப்போ தண்ணி நிறைய ஓடுச்சு. அங்க் விக்கிற காய்கறிகள் ரொம்ப நல்லாயிருக்கும். சென்னைல இதே மாதிரி ஒரு கோயில். பேரு மறந்து போச்சே. அங்கயும் இதே மாதிரி காய்கறிகள் நல்லா தளதளன்னு கிடைக்கும். பேர் ஞாபகம் வந்துருச்சு. சிறுவாபுரி முருகன் கோயில். காய்கறிகள் கடலை கீரைன்னு எல்லாமே அருமையா இருந்தது.

said...

நிமிஷாம்பாள் - பெயரே அழகா இருக்கு.

நம்பிக்கை - நம்பிக்கை தானே எல்லாம்.

தொடர்கிறேன்.

said...

அருமையான இடம்...

படங்கள் வழக்கம் போல் மிக அழகு..

said...

வாங்க விஸ்வநாத்,

சொற்களைப் பிய்ச்சுப் பிய்ச்சுப்போட்டால் கவிதையாமே!!! ஹாஹா

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

ஒவ்வொருவருக்கும் அனுபவங்கள் தனித்தனி !!!

ஏன் கைகட்டி நிற்கப்படாதாம்?

said...

வாங்க ஜிரா.

உண்மையிலேயே ஆத்தங்கரையில் காய்கறிகள் பார்க்கவே அருமைதான்!

சிறுவாபுரி எங்கே இருக்கு?

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

ரொம்பச் சரி ! நம்பிக்கைதான் வாழ்க்கை & நம்பினால்தான் தெய்வம்!

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

நன்றி !