Friday, September 14, 2018

திப்பு, நீங்க நல்லவரா இல்லை, கெட்டவரா....... (பயணத்தொடர், பகுதி 9)

மனிதன் முக்கால், மிருகம் கால்ன்னு சொல்லலாமா? ஸ்ரீரங்கபட்னாவைத் தலைநகரமா வச்சுக்கிட்டு, இந்தப் பகுதியை ஆண்ட ஹைதர் அலியும், அவருக்குப்பின் பட்டத்துக்கு வந்த அவர் மகன் திப்பு சுல்தானும் கோவிலை இடிச்சுப்போடாம விட்டு வச்சதுக்கே நம்ம நன்றியைச் சொல்லத்தான் வேணும்! அதுமட்டுமில்லாம, கோவிலுக்கு கைங்கர்யங்களும் பண்ணினதாத்தான்  சொல்றாங்க. பெருமாளுக்கு வெள்ளி வட்டில்கள் எல்லாம் காணிக்கையாகக் கொடுத்துருக்கார்! இப்பவும் கோவிலில் இருக்கு!
வடநாட்டில் இருந்து  வந்த குடும்பத்தில் பிறந்த ஹைதர் அலி, ஒரு சாதாரணப் படைவீரராகத்தான்  மைசூர் அரசில் இருந்துருக்கார்.  அப்புறம் இவருடைய போரிடும் திறமையைக்  கவனித்த  தளபதிகள் கொடுத்த ஊக்கத்தினாலும், பதவி உயர்வினாலும் மெள்ள மெள்ள முழு சேனைக்கும் அதிபதியாகி, ஒரு கட்டத்தில் இவரே  முழுப்பொறுப்புடன் அரசனாகிட்டார். மதமாற்றம், ஹிந்துக்களை ஹிம்சை செய்ததுன்னு  ஒருபக்கம் குற்றம் சொல்லிக்கிட்டு இருந்தாலும்,  பொதுவில் நல்ல மன்னராகத்தான் இருந்துருக்கார் போல! ஏகப்பட்ட நல்ல திட்டங்களை அவர் காலத்துலே நாட்டுமக்கள் நன்மைக்கு அமல் படுத்தி இருக்கார்!  ராக்கெட் சமாச்சாரத்தை ஆதியில் பயன்படுத்தியது இவர்னு பாராட்டும் உண்டு!
வெள்ளையர்களுடன் கூட்டுச் சேர்ந்த சமஸ்தானங்கள் பல  இருந்தாலும்,  ஹைதர் அலி, முழுமையா வெள்ளையர்களை (கிழக்கிந்தியக் கம்பெனி)எதிர்த்துருக்கார். எதிரிக்கு எதிரி நண்பன் என்றாப்பல ப்ரெஞ்சு அதிகாரிகளுடன் நட்புப் பாராட்டி வந்துருக்கார்.
இவருக்குப்பின் ஆட்சிக்கு வந்த திப்பு சுல்தான், ஹிந்துக்களுடன் இணக்கமாவே இருந்துருக்கார்.  ஸ்ருங்கேரி மடத்துக்கு நிலங்களாகவும், பொருட்களாகவும் நன்கொடைகள் கொடுத்து வந்துருக்கார். நன்கொடைகள் கொடுத்ததால் நல்லவர்னு சொல்லலை. அப்ப ஒன்னும் கொடுக்கலைன்னா கெட்டவரா? 

மராட்டியர்கள் ஸ்ருங்கேரி மடத்தைத் தாக்க வந்தபோது, மடத்தலைவரே திப்புவுக்குத்தான் ஓலை அனுப்பி உதவி கேட்டாராம். திப்புவும் உதவி செஞ்சு மடத்தைக் காப்பாத்திட்டார்னு வரலாறு. போரில் பழுதாகிப்போன மடத்தையும் கோவிலையும் சரியாக்கிக் கொடுத்து, ஷாரதாம்பாள் சிலையை மறுபடி பிரதிஷ்டை செய்யறதுக்கும் உதவி செஞ்சுருக்கார்.

இப்பெல்லாம் மதச்சார்பின்மைன்னு என்னவோ பேசிக்கிட்டு,  ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டும்  இழிவாகவே நடத்தறாங்களே.... அதைப்போல இல்லாம உண்மையான மதச்சார்பின்மையைக் கடைப்பிடித்தார்னு வரலாறு சொல்லுது. எல்லா மதத்தினரையும் ஒன்னுபோலவே நடத்தினாராம். எந்த மதத்தையும் ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை ! (நிம்மதி!) அவருடைய நல்லெண்ணத்தைப் பாராட்டி, இப்போதைய கர்நாடக அரசு, திப்பு சுல்த்தான் பிறந்தநாளை கடந்த மூணு வருஷமாக் கொண்டாடிக்கிட்டு வருது. இதுக்கு எதிர்ப்பு தெரிவிச்சுக்கிட்டு இருக்காங்கன்னும்  கேள்வி.

உண்மையைச் சொல்லணுமுன்னா.... இது வரை எந்த சரித்திரமும் உண்மையாக, நடந்தது நடந்தபடியெல்லாம் எழுதப்படவே இல்லை.  எழுதறவங்களும், அந்தந்தக் காலக்கட்டத்தில் இருக்கும் அரசுக்கு சார்பெடுத்துதான் எழுதி இருப்பாங்க. எதிர்த்து எழுதுனா... கழுத்துமேலே தலை நிக்க வேணாமா? ஹூம்..... நமக்குத் தெரிஞ்சேகூட சமீபத்து வரலாறுகளில் காலப்பெட்டகம் புதைக்கிறோம், பள்ளிக்கூடப் பாடப்புத்தகத்தைத் திருத்தியமைக்கிறோமுன்னு  என்னென்ன தில்லுமுல்லு!!! ப்ச்...
மைஸூர் போர், மராத்தியப்போர்னு அந்தக் காலத்துலே ஏகப்பட்டது நடந்துருக்கு. அதுலே மூணாம் மைஸூர் போரில் வெள்ளையருடன் சண்டையிடப்போன திப்பு சுல்தான், மரணம் அடைஞ்சுடறார்.  இறந்துகிடந்த வீரர் கூட்டத்தில் இவருடைய உடலை அடையாளம் கண்டதா  சண்டையிட வந்தவரே  சொல்லி இருக்கார்.  அந்த உடல் கிடந்த இடத்தை இப்போ ஒரு நினைவிடமா ஆக்கி இருக்காங்க.  தொல்லியல் துறை அங்கே ஒரு தகவல் பலகையும் வச்சுருக்கு.

வெள்ளையரின் கைக்கூலிகளா திப்புவின் அரசில் இருந்த  சிலரின் துரோகமே  இவர் இறப்புக்குக் காரணமாம். துரோகத்துக்கு மட்டும் மன்னிப்பே கிடையாது, கேட்டோ!

ரங்கனை தரிசனம் செஞ்சுட்டு, நிமிஷாம்பாளைப் பார்க்க வந்த வழியில் இந்த இடம் பார்த்துட்டு வந்துருந்தோம்.
இறந்த உடலை அப்புறம் கொண்டுபோய் அடக்கம் பண்ண இடம்தான் இந்த கும்பஜ். அங்கேதான் இப்போப் போய்ச் சேர்ந்தோம்.

பெரிய அழகான விசாலமான தோட்டத்துக்கு நடுவிலே  ரொம்பவே அழகான ஒரு கட்டடம். ஜஸ்ட் ஒரு பெரிய ஹால்!  சுத்திவர கருப்பு க்ரானைட் கல்லால் இழைச்ச தூண்கள். எல்லாம் பெர்ஷியன் ஸ்டைலாம்!  உள்ளே மூணு சமாதிகள்!  ஹைதர் அலி, அவர் மனைவி, அவர் மகன் திப்புன்னு மூணுபேரும்  இதுக்குள்ளே!


நாங்க போனப்ப  ஒரு   பயண க்ரூப் மக்கள்  வந்துருந்தாங்க. கூட்டத்தைப் பார்த்ததும் அங்கிருந்த  ஒருவர், வாலண்டியர் கைடா மாறி, விளக்கம் சொன்னார்.  எந்தெந்த சமாதியிலே யாருன்னு.... ( மொத்தமே மூணுதான்! ) திப்பு சுல்தானுக்கு  மைஸூர் புலின்னு ஒரு பட்டப்பெயர் இருந்துச்சுன்னும், அதுக்காகச் சமாதி இருக்கும் கட்டடத்தின் உள்பக்கச் சுவரில் புலி டிஸைன் வரைஞ்சுருக்காங்கன்னும் சொன்னார்.  கூடவே ஒரு குண்டும் போட்டார், படம் எடுக்கக்கூடாது.....  என் முகம் போன போக்கைப் பார்த்துட்டு வாசலில் இருந்து எடுக்கலாம். உள்ளே நின்னு எடுக்கக்கூடாதுன்னார் :-)
வெளியே வந்தப்ப, ஒரு எட்டு மாசக்குழந்தையின் தலையை கீழே தரையில் படும்படி வச்சு  குழந்தையிடம் சாமி கும்பிட்டுக்கோன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க அதன் தாய். குழந்தை செல்லம் போல அழகா இருந்தான். என்னைப் பார்த்ததும்,  அந்த இளம்தாய், 'குழந்தை தலையில் கை வச்சு ஆசீர்வாதம் செய்யுங்கம்மா'ன்னு கேட்டுக்கிட்டாங்க.
(ஹா.... நம்ம தலைக்குப்பின்னால் ஒளிவட்டம் இருக்கோ? )

பெரியவளா லக்ஷணமா, (பெருமாளே...  இந்தக் குழந்தையை நல்லபடியா நீதான் பார்த்துக்கணுமுன்னு மனசுக்குள்ளே சொல்லிக்கிட்டே) குழந்தையை ஆசீர்வதிச்சேன். 'ஒன்னும் ஆகாதுல்லே மா? 'ன்னு  கேட்டதும் தூக்கி வாரிப்போட்டுச்சு. ஐயோ... நம்ம தொட்டதால் ஒன்னும் ஆகாதுன்னு கேக்கறாங்களோ?  தாய் முகத்தில் கவலை. குரலிலும்தான்!

என்ன ஏதுன்னு விசாரிச்சேன். குழந்தை கீழே விழுந்துருக்கு. தாய் பதறிப்போயிட்டாங்க. எவ்ளோ உயரத்தில் இருந்து விழுந்தது?  வேன் ஸீட்டுலே கிடத்தி  நேப்பி மாத்தும் போது, துள்ளி அந்தாண்டை  வேன் தரையில் விழுந்துருக்கான்.
'எப்படியும் வேனுக்குள்ளே  மிதியடியெல்லாம் இருக்கும்தானே?  உயரமும் ஒன்னரை அடிதான் இருக்கும். ஒன்னும் ஆகாது. பயப்படாதீங்க'ன்னேன். ரொம்ப அழுதானா?  இல்லையாம். கொஞ்சம் அழுதுட்டு நிறுத்திட்டான். நல்ல வேளை.... வலி ரொம்ப இருந்தால் அழுகையை நிறுத்தி இருக்குமோ?  தலையில் எங்காவது தொட்டால் வலியில் சிணுங்கறானா?  இல்லைம்மா. தொட்டுப் பார்த்துட்டேன்.

ஹப்பாடா.....  ஒன்னும் ஆகாது.  ஊருக்குத் திரும்பிப்போனதும் எதுக்கும் டாக்டராண்டை காட்டுங்க. கடவுள் இருக்கார்!
தாய் முகத்தில் கொஞ்சம் புன்னகை.  அவுங்க  அனுமதியோடு சில க்ளிக்ஸ். குடும்ப அங்கங்களோடு  பெரிய வேன்லே வந்துருக்காங்க, பெண்களூரில் இருந்து.  இதுக்குள்ளே குடும்ப அங்கத்தில் சிலரும் எங்களோடு வந்து சேர்ந்து பேசினாங்க. எல்லோருமா சில க்ளிக்ஸ்.


கட்டட வெராண்டா முழுசும்  கிரானைட் தூண்களுக்கிடையில் ஏகப்பட்ட சமாதிகள். சிலதில் பெயர்கள் இருக்கு. பலதில் இல்லை. சின்னதா இருப்பதெல்லாம் சின்னப்புள்ளைங்களோடதுன்னு எப்பவும்  நினைச்சுக்குவேன். இப்பவும்....


இதைத்தவிர வெளியே மேடையிலும் அங்கங்கே கூட்டங்கூட்டமா சமாதிகளே!   பெரிய குடும்பி போல!  ராயல் ஃபேமிலின்னா ச்சும்மாவா?

இந்த அழகான கட்டடத்தைக் கட்டுனவரே நம்ம திப்புதான்! அப்பா அம்மாவுக்கு சமாதி கட்டுனவரை, விதி இங்கே கூட்டியாந்து  வச்சுருச்சு பாருங்க!  சமாதிக் கட்டடம் தவிர ஒரு மசூதியும்  இங்கே இருக்கு.  நாங்க அதுக்குள்ளே போகலை.....

வளாகத்துக்கு வெளிப்புறம்   ஏகப்பட்ட கடைகள். அழகழகான பொருட்கள்.  ஒன்னும் வாங்கிக்கலைன்னா நம்புங்க. சனம் கூட்டங்கூட்டமா  வண்டியில் வந்திறங்குது!  ஸ்ரீரங்கபட்னாவில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களில் இது ஒன்னு ன்னு  சுற்றுலாத்துறைப் பரிந்துரைச்சு இருக்கே!

ஒரு இளநீர் மட்டும் குடிச்சுட்டுக் கிளம்பினோம். .  திப்புவின் கோட்டை இருக்குன்னாலும் போகலை.  கோட்டை மதில் சுவர் வழியா வரும்போது  அங்கங்கே இடிஞ்சு கிடப்பதை வண்டியில் இருந்தே பார்த்தது போதும்.  மைஸூர் எல்லைக்குள் வந்ததும், போகும்போதே பார்த்துவச்ச  கடையில் போய் மகளுக்கு ஒரு மைஸூர் ஸில்க் புடவையும், எனக்கொரு ஸல்வார் கமீஸ் துணியையும்  வாங்கினோம்.

புடவைகளின் படங்களை (ஷார்ட் லிஸ்ட்  ஆனதும்)மகளுக்கு அனுப்பிட்டுக் கடையிலேயே கொஞ்சம் காத்திருந்தோம். இந்தியாவில் இருக்கும்போது    மாலை நாலு மணி வரை மகளுடன் தொடர்பில் இருப்பது வாடிக்கை.   மகளுக்கு எது வாங்கணுமுன்னாலும் படம் அனுப்பி ப்ரிஅப்ரூவல் வாங்கணும்:-)

புடவைகளில் ஒன்னு செலக்ட் ஆச்சு.  வாங்குன கையோடு ஹொட்டேலுக்கு வந்துட்டோம்.

இங்கே நாலைஞ்சு நாளா நகைநட்டு எக்ஸிபிஷன் நடக்குதாம். நேத்து இங்கே வந்திறங்கியதுமே கவனிச்சேன்.  வாங்க, வேடிக்கை பார்க்கன்னு வர்ற கூட்டமே  பயங்கர மேல்தட்டுவாசிகளாத் தோணுச்சு.   ராத்ரி ஒன்பது வரை இருக்காம்... பார்க்கலாம்....

இன்னும் சில இடங்களைக் கார் இருக்கும்போதே பார்க்கணும்.  சின்ன ஓய்வுக்குப்பின் கிளம்பலாமா?

தொடரும்.......   :-)


16 comments:

said...

அதிகாலையிலேயே அங்கே போயிட்டீங்க போல! ஏழேகாலுக்கே வெளியே வந்துட்டீங்க!

நேற்றைய எங்கள் பதிவில் திப்புசுல்தான் பற்றி ஒரு செய்தி இடம் பெற்றிருந்தது!

படங்கள் அழகு.

said...

வாங்க ஸ்ரீராம்.

கடையில் இருக்கும் கடிகாரம் ஓடாது :-)

இதோ உங்க பதிவு போய்ப் பார்க்கிறேன். நல்லவர்னு எழுதுனீங்களா.... இல்லை....

said...

>>> ஹா.... நம்ம தலைக்குப்பின்னால் ஒளிவட்டம் இருக்கோ?...<<<

ஒளி வட்டம் தெரிஞ்சதால தானே அவங்க ஆசி வாங்க வந்திருக்காங்க!..
இதுக்கெல்லாம் கொடுத்து வெச்சிருக்கணும்...

உங்களது பதிவு அங்கே சென்று பார்க்கத் தூண்டுகிறது..

வாழ்க நலம்..

said...

கடந்த ஆண்டு இவ்விடங்களுக்குச் சென்றுவந்தோம். இன்று உங்கள் மூலமாக மறுபடியும் செல்லும் வாய்ப்பு. அண்மையில் நான் படித்த நூலிலிருந்து, திப்பு சுல்தானைப் பற்றிய கருத்து : "During my travels in the Bangalore region I was frequently surprised to hear local people speaking warmly of Tipu. I could understand why local Muslims admired him, even to the point of veneration as a saint and martyr. But what I found mystifying was that Tipu Sahib should be seen by wider sections of the general community as a patriot who fought and died in a vain attempt to halt British imperialism in India." (Charles Allen, Coromandel : A Personal History of South India, Little Brown, 2017, p.321)

said...

நாங்க கோவிலுக்குப் போனோம். கிளம்பும் வழியில் திப்பு இறந்த இடத்தைப் பார்த்தோம். மற்றபடி வேறு எங்கும் போகலை.

மகளுக்கு அப்ரூவலுக்கு அனுப்பியிருக்கீங்க. நான் மகளுக்கு வாங்குவதை நிறுத்தி பலப் பல வருடங்களாச்சு. அவ, அவ அம்மாவோட போய் வாங்கிக்குவா. ஹாஹா.

said...

அருமை நன்றி

(கோட்டை பார்க்கணும் ன்னு கோபாலண்ணா சொல்லிருப்பார். வழக்கம்போல நீங்க முடியாதுன்னு சொல்லிருப்பீங்க. )

said...

நாடு முழுக்க சாதி வெறியும் மதவெறியும் பரவிக்கிட்டிருக்கும் இந்தக் காலத்துல நாம நடுநிலையா இருந்துக்கிட்டாலே அது ரொம்பப் பெருசு. திப்பு சுல்தான் செஞ்சது சரியோ தப்போ... ஆதாரத்தோட அதுக்கு மறுப்பு வர்ர வரைக்கும் திப்பு சுல்தான் ஒரு நாயகன் தான். திப்பு சுல்தான் வரலாற்றை படமா எடுக்க நெனச்ச எல்லாருக்குமே தோல்வியாம். கடைசியா சஞ்சய்கான் டிவி சீரியலா எடுத்தார்னு சொல்வாங்க. ஆனா அதுலயும் நிறைய பிரச்சனைகள் போல. என்ன மந்திரமோ மாயமோ!

அந்தக் கொழந்தை கண்டிப்பா நல்லபடி இருக்கனும்னு கடவுளை வேண்டிக்கிறேன்.

திப்பு சுல்தானைப் பாத்தீங்க சரி. சாமுண்டி மலைக்குப் போகலையா?

said...

திப்பு சுல்தான் பற்றிய தகவல்களும் படங்களும் சிறப்பு.

தொடர்கிறேன்.

said...

திப்பு, நீங்க நல்லவரா இல்லை, கெட்டவரா.......

அதை சொல்லலையே நீங்க..

said...

வாங்க துரை செல்வராஜூ.

இந்தியாவில் ஏகப்பட்ட சுவாரஸியமான இடங்கள் இருக்கு! அதுலே ஒரு சதமாவது பார்க்கணும் என்று ஆசைதான். அதுக்கே ஆயுசு போறாது.....

உடல்நலம் நல்லா இருக்கும்போதே பயணம் தொடங்கணும். நாங்க ரொம்ப லேட்....

அந்த ஒளிவட்டம்..... ஹிஹி....

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

வெள்ளையரை எதிர்த்து நின்னு வீரமரணம் அடைஞ்சதும் அவர் புகழுக்கு ஒரு காரணமா இருக்கும்! தன் நாட்டு மக்களுக்கும் ரொம்பவே சேவை செஞ்சுருக்கார்னுதான் நானும் வாசிச்சேன். உழவர் சந்தைக்கு இவரே முன்னோடி!

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

நான் மகளுக்கு உடைகள் தைக்கிறதை நிறுத்தியே பலவருஷங்கள் ஆச்சு. ஹைஸ்கூல்வரை தைச்சுக் கொடுத்தது போதும், யூனிஃபார்ம் உட்பட!

இந்தியப் பயணங்களில்தான் எங்களுக்கு இந்திய ஸ்டைலில் உடை வாங்க முடியும். மத்தபடி இங்கத்து உடைகள்தான் பொதுவாப் பயன்படுத்தறோம்.

said...

வாங்க விஸ்வநாத்.

கோட்டைன்னா கொலை விழுமுன்னு முந்தியே (ராஜஸ்தான் பயணத்தில்) சொல்லி வச்சுருக்கேன் :-)

said...

வாங்க ஜிரா.

நல்லவரா இருக்கப்போய்த்தானே கர்நாடக அரசு விழா கொண்டாடிக்கிட்டு இருக்கு!

சாமுண்டி தரிசனம் ஆச்சு !

குழந்தை நல்லா இருக்கட்டும்!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

சரித்திரத்தில் சுவாரஸியம் அதிகம்தான். உண்மைச் சரித்திரம் இன்னும் எழுதப்படவில்லை என்பதும் ஓரளவு உண்மைதான், இல்லே?

பள்ளிக்கூடத்து சரித்திரப் புத்தகங்களால்தான் சரித்திரம் பலருக்கும் பிடிக்காமல் போச்சு.

தொடர் வருகைக்கு நன்றி!

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

ஆஹா.... நல்லவருக்கு நல்லவர், கெட்டவருக்குக் கெட்டவர் ! :-)