Wednesday, September 26, 2018

மண்ணில் ஒரு மாயாஜாலம்....... (பயணத்தொடர், பகுதி 14)

மணல் சிற்பக்கூடம் னு விளம்பரத் தட்டியில்  பார்த்ததும்  கடற்கரை சமாச்சாரமாச்சே!  மைஸூரில் ஏது கடலும் கரையும்..... வேறெங்கோ இருக்குபோலன்னு நினைச்சுக்கிட்டேன். இப்போ மலையில் இருந்து இறங்கிக் கீழே மைஸூர் போகும் சாலையில் போகும்போது கைவினைப்பொருட்கள் கடைகள் ரெண்டுமூணு வரிசையில் இருக்கே,  அங்கே எட்டிப் பார்க்கலாமுன்னு நினைச்சேன். ட்ரைவரிடம் வண்டியை நிறுத்தச் சொன்னதுக்கு ஒரு மரத்தாண்டை நிறுத்தினார்.  இறங்குனதும் கண்ணில் பட்டுச்சு இந்த ஸேண்ட் ம்யூஸியம் பேனர். பக்கத்துலே  ஒரு வாசல்!  அட! இங்கேயா இருக்கு!

டிக்கெட் கவுன்டரில் யாரும் இல்லை. ட்ரைவர் போய் மரத்தடியில் நின்ன மக்களிடம் விசாரிச்சார்.  அங்கே பேசிக்கிட்டு நின்ன மக்களில் ஒருவர் ஓடி வந்து,  'மூடும் நேரம். பரவாயில்லை உள்ளே போய்ப் பாருங்க'ன்னார். டிக்கெட் அவரிடம் வாங்கிக்கிட்டு உள்ளே போனோம்.  மசமசன் னு இருட்டிக்கிட்டு வருது.
மொதல்லே நம்மை வரவேற்றவர் புள்ளையார்தான். பெரிய பிரமாண்ட உருவம்!   இடுப்பிலே பாம்பு பெல்ட், கையில் தட்டு நிறைய கொழுக்கட்டை, பக்கத்துலே மூஞ்சூறு,

இந்தியாவின் முதல் பெண் சிற்பி (மணல் சிற்பங்கள்) என்ற பெருமை கௌரிக்கு !  சின்ன வயதுப் பெண். 29 வயசுதான் ஆகி இருக்கு. ஏழு வருஷமா மணல் சிற்பங்கள் செஞ்சுக்கிட்டு இருக்காங்க.  இங்கே சுமார் நூத்தியம்பது சிற்பங்கள், நெருக்கியடிச்சுக்கிட்டு உக்கார்ந்துருக்கு!  நூத்திப் பதினைஞ்சு லாரி லோட்  ஆத்து மணல் வந்து இறங்கியிருக்கு, இந்த சாதனைக்காக!


தேவி சாமுண்டி, தஸராவில் யானை மேல் அம்பாரியுடன் ஊர்வலம்,  சிம்ஹாஸனத்தில் வீற்றிருக்கும் மன்னர் (Srikantadatta Narasimharaja Wadiyar ) சீனக்குபேரன், மற்ற உலகநாடுகள் சிலவற்றின் கலாச்சாரம் சம்பந்தப்பட்டவை,  ஆழ்கடலின் அதிசயங்கள்,  கடல்கன்னி,  ஒட்டகம், முதலை, குதிரைகள்.... எதைச் சொல்ல எதை விட?


இதுலே மஹாபாரதப்போரில் தேரோட்டி க்ருஷ்ணனும், அர்ஜுனனும் நாலு குதிரைகள் பூட்டிய ரதத்தில்.....  இப்ப மட்டும் கயித்தை விட்டால், நாலு குதிரைகளும் எழுந்து பறக்கத்தான் போகுது!





சின்னதா ரெண்டு வீடியோ க்ளிப் சேர்த்துருக்கேன். நீங்களே பாருங்க.....   அந்தி நேரம் என்றதால்.... சுமாராத்தான் வந்துருக்கு.  வீடியோக்ராஃபர் 'நம்மவர்'
மைஸூர் அரசகுடும்பம் தொடங்கி, அமைச்சர்கள், மற்ற பெருந்தலைகள் உட்பட பலரும் வந்து பார்த்துப் பாராட்டிப்போயிருக்காங்கன்னு அங்கே இருக்கும் படங்கள் சாட்சி சொல்லுது!
இப்ப ஒரு நாலு வருஷத்துக்கு முன்னால்தான் இதைத் திறந்துருக்காங்க.

13,500 சதுர அடிபரப்பில்  இத்தனையும்!  முதல்லெ பார்த்ததும், ஐயோ.... மழை வந்தால் இதெல்லாம் என்ன ஆகுமோன்னு மனம் பதறிப்போனது உண்மை.  சிற்பங்களுக்கு மேலே  பாலிகார்பனேட் கூரை போட்டுருக்காங்க.  திரைச்சீலைகள்  அங்கங்கே சுருட்டி நிக்குது.  பார்வையாளர்கள் போனபிறகு  திரைச்சீலையை இழுத்து மூடுவாங்களா இருக்கும்.
நாமே காலங்கடந்து வந்தோமுன்னா.... நாம் கிளம்பும் நேரத்தில் இன்னும் சிலர் வந்தாங்க. அதுவரை, நாளைக்கு வாங்கன்னு  பயணிகளை விரட்டாமல் உள்ளே விட்டது பிடிச்சுருக்கு. பயணத்தில் பல சமாச்சாரங்களைப் போற போக்கில் பார்க்கறதுதான். இதுக்குன்னே திட்டம் போட்டு வந்தாலொழிய, இன்னொரு சமயம், இன்னொருநாள் பார்க்கலாம் என்றது பெரும்பாலும் நடக்கறதில்லை...

வெறும் மணலும் தண்ணீரும் சேர்ந்த கலவையில் (நிமிர்ந்துருக்கும் சிற்பங்களில் கொஞ்சூண்டு கோந்தும் சேர்த்துருக்காங்கன்னு கௌரி ஒரு பேட்டியில் சொல்லி இருக்காங்க!)இப்படி ஒரு மாயாஜாலம் காமிச்ச இளம்சிற்பி கௌரியைப் பாராட்டத்தான் வேணும். அற்புத சிற்பியடி...... யம்மாடீ.....

படங்கள் எடுத்துக்கத் தடையும் இல்லை. தனிக் கட்டணமும் இல்லை. பின்னே என்ன? பூந்து வெளையாடலாம் ! இன்னும் ஒரு அரை மணி முன்னாலே வந்துருந்தா......  வெளிச்சம் இருந்துருக்கும்! படங்களும் அட்டகாசமா வந்துருக்கும்!

ஹொட்டேலுக்குப் போய்ச் சேர்ந்ததும், மறுநாள்  ஒன்பதுக்கு வண்டியைக் கொண்டு வரச்சொல்லிட்டு அன்றையக் கணக்கைத் தீர்த்து  ட்ரைவரை அனுப்பிட்டார் 'நம்மவர்' . எனக்குத்தான்  அரண்மனை லைட்டிங்ஸ் போய்ப் பார்க்கலைன்ற குறை இருந்தது.

அறை ஜன்னல் வழியாகப் பார்த்தேன். செல்ஃபோன்களை சார்ஜரில் போட்டுட்டுக் கிளம்பி தரைத் தளத்தில் நடக்கும்  நகைநட்டுக் கண்காட்சியைப் பார்க்கப் போனோம்.

வைரமும் தங்கமும் வெள்ளியும் !  மகள் திருமணத்துக்கு சீர் செய்யுங்கன்னு விளம்பரப்படுத்திக்கிட்டு இருக்காங்க! நல்லவேளை...  மகளுக்குக் கல்யாணம் முடிஞ்சுபோச்சு ! கல்யாணத்துக்குப் போடும் நகைகள் எல்லாம்  இப்ப அந்த ஒருநாளோடு சரி! அதுக்கப்புறம் எல்லாம் லாக்கரில்தானே தூங்குது.
புள்ளையாரும் மஹாலக்ஷ்மியும் பத்து கிலோ!

ராச்சாப்பாட்டுக்கு அடுத்தாப்லெ இருக்கும் மால் போகலாமுன்னு போனோம். இதே ராடிஸ்ஸன் ஹொட்டேலின் எக்ஸ்டென்ஷன்தான். நடுவில் ஒரு கம்பிகேட். அதுலே ஒரு  எட்டு வச்சால் போதும். கீழே ஒரு கடையில் தோதி பேண்ட்ஸ்.  மகளுக்குப் படம் அனுப்பிட்டு மேல்  மாடி ஃபுட் கோர்ட்டில் சன்னா பட்டூரா, ஆப்பம் வாங்கிக்கிட்டோம்.

 சாப்பிடும்போதே 'எஸ்' ன்னு பதில் வந்துச்சு. என்ன கலர் வேணுமுன்னு  கேட்டதுக்கு  எல்லாக் கலரிலும் ஒவ்வொன்னாம்!  இது எப்படி இருக்கு?

கருப்பும் சிகப்புமா ரெண்டு வாங்கினோம்.

 நல்லாத் தூங்கி எழணும். நாளைக்குக் காலை இன்னொரு முக்கியமான இடத்துக்குப் போறோம்!

தொடரும்....... :-)


14 comments:

said...

இவ்விடத்தில் நான் எடுத்த புகைப்படங்கள் இச்சுட்டியில்,
https://goo.gl/photos/mxi57W2eNdUaxbQK8

said...

ரொம்ப அற்புதமா இருக்கு காட்சிகள் எல்லாம் ..

என்ன அழகு

said...

(ஆத்துமணல் ....... ஹிஹிஹி )

நன்றி அருமை.

said...

அபார கலைத்திறமை. அழகு.. பிரமிப்பு.

said...

ஒரு முறையாவது அந்த உயரத்து வேலைகளை எப்படிச் செய்கிறர்கள் என்று பார்க்க ஆசை மணல் சரிந்துவிடாதோ

said...

அறுபத்துநாலு கலைகள்னு சொல்றாங்க. இப்ப அது வளந்து அறுபதாயிரம் கலைகள் ஆயிரும் போல.

சிற்பியம்மாவுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகள்.

ஆப்பத்துல பரோட்டால இட்லிலன்னு இப்ப எல்லாத்துலயும் கலர்கலரா விடுறதுதான் டிரெண்டு போல.

said...

வாங்க ஞானசேகர்.

அடடா.... எவ்ளோ துல்லியமான படங்கள் ! ரொம்ப நல்லா எடுத்துருக்கீங்க ! ரசித்தேன்!

நல்ல பகல் வெளிச்சம் போல இருக்கு!

said...

வாங்க அனுராதா ப்ரேம்.

அழகை, அழகுன்னுதான் சொல்லணும்! சொல்லுவோம்!

said...

வாங்க விஸ்வநாத்,

ஆத்து மணல்..... நம்ம கொள்ளிடம் இல்லைன்னு நம்புவோமாக !

said...

வாங்க ஸ்ரீராம்.

உண்மையில் அசந்துதான் போயிட்டேன், அப்போ! ஆஹா.... அடடா.....

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

அவுங்களுக்குன்னு சிலபல டெக்னிக்ஸ் இருக்குமே! ஒரு சமயம் அஸ்ட்ராலியா கோல்ட்கோஸ்டில் இப்படித்தான் பீச்சுலே சிற்பம் செஞ்சுக்கிட்டு இருந்தார் ஒருவர். நின்னு பார்த்துக்கிட்டு இருந்தேன். மிகப் பெரிய ட்ராகன் சிற்பம்.

ஒரு பக்கெட் தண்ணீரைப் பக்கத்தில் வச்சுக்கிட்டு ரெண்டு கைகளாலும் மணலை வாரித் தண்ணீரை அப்பப்பத் தொட்டுக்கிட்டு உருட்டோ உருட்டுன்னு பத்து நிமிஷத்துக்கு மேலேயே உருட்டிக்கிட்டு இருந்தார். அப்போ அது என்னன்னு எனக்குப் புரிபடலை.

ஒரு பிசிறு கூட இல்லாமல் மணல் உருண்டை உருண்டு வந்ததும், ட்ராகனின் கண் குழியில் வச்சார் பாருங்க! அப்படியே ஜீவனுள்ளதா மாறினது வியப்பே!

said...

வாங்க ஜிரா.

சிற்பியம்மா சின்னப்பொண்ணுன்னதும் அளவில்லாத அன்பும் மரியாதையும் அவுங்க மேலே கூடிப்போச்சு எனக்கு!

கருப்பும் சிகப்பும்னு சொன்னது ஆப்பம் இல்லை. மகளுக்கு வாங்கின தோதி ஸல்வார் :-)

said...

எத்தனை அழகான சிற்பங்கள்.....

சிற்பிக்கு எனது பாராட்டுகளும்.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

சிற்பி ஒரு இளம்பெண் என்பது எனக்குக் கூடுதல் மகிழ்ச்சி! நல்லா இருக்கணும்!