Friday, February 02, 2018

கலைஞி !! (வடைப் பதிவு )

சமைக்கிறது பெருசில்லை.....  அதுலே எதாவது கடுபடு பண்ணிட்டோமுன்னா அதை ரிப்பேர் பண்ணறதுலே இருக்கு சமையல் கலைஞியின் பெருமை!

நம்ம வீட்டுலே  எப்பவும் தகராறு செய்வது ரெண்டு சமாச்சாரங்கள்தான். ஒன்னு  கொழுக்கட்டை,  ரெண்டாவது உளுந்து வடை.

கொழுக்கட்டை அச்சு வந்து ,  மானத்தைக் காப்பாத்திருச்சு :-) ஆனால்..... இந்த ரெண்டாவது....

என்னதான் கெட்டியா அரைச்சாலுமே நம்ம ஆஞ்சிக்குக்குக் கூட போண்டா மாலைதான் லபிக்கும்.

இந்த முறை, நம்ம க்ரைண்டரில் உளுந்து அரைச்சுப் பார்க்கலாமான்னு திடீர்னு தோணுச்சு இட்லிக்கு மாவு அரைச்சுக்கிட்டு இருக்கும்போது!

அதுசரி... தீபாவளின்னா இட்லி தோசை மெனுவில் இருக்கணுமுன்னு யார் ஆரம்பிச்சு வச்சாங்களோ....

அந்தக் காலத்துலே தீபாவளியன்றைக்குத்தான்  பலர் வீடுகளிலும் இட்லி தோசையே செய்வாங்களா இருக்கும்னு நினைக்கிறேன்.

 போகட்டும்.....பாரம்பரியத்தை மாத்த வேணாமேன்னு  முதல்நாள் ராத்ரியே அரிசியை மட்டும் ஊறப்போட்டுட்டுக் காலையில் காஃபிக்கு முன்னால் உளுந்தை ஊறவச்சேன்.

எங்கூர் காலநிலை காரணம், சாயங்காலமா மாவரைச்சுக் காலையில் இட்லி செய்றதெல்லாம் கனவுதான்.....

மாவு புளிக்கவே.... புளிக்காது.......  அவன்லெ வச்சுட்டு,  மறந்துறப்போறோமோன்னு கண்குத்திப் பாம்பாப் பார்த்துக்கிட்டே இருக்கணும். அப்படியும் மறந்துபோய் முழுக்க முழுக்க ஈரம் உலர்ந்து  கட்டி கட்டியாப் பேத்தெடுத்து, திரும்ப தண்ணீரில் ஊறவச்ச கண்ணீர் கதைகள் எல்லாம் இருக்கு என் வசம் :-)

 அரிசியை அரைச்சு எடுத்துட்டு,   உளுந்து அரைபட்டுக்கிட்டு இருக்கும்போதுதான்  வடை ஐடியா வந்தது. சட்னு ஒரு கப் உளுந்து எடுத்து ஊறப்போட்டேன்.  ஒரு முக்கால்மணி நேரம் ஊறவச்சுட்டு,  இட்லிமாவு வேலை முடிஞ்சதும் உளுந்தை அரைக்கிறேன்.   அப்பப்பத் துளி தண்ணீர் தெளிச்சாறது.  போதுமான தண்ணீர் இல்லாததால்  ரெண்டு உருளைக்கல்லும் நின்ன இடத்துலே நின்னுக்கிட்டு கர் கர்ன்னு  காறித்துப்புது.

ஒருவழியா அதைத் தாஜா பண்ணி அரைச்சு எடுத்த உளுந்து மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு ஃப்ரிட்ஜில் வச்சேன்.

மறுநாள்  காலையில் வடை செய்ய எல்லாம் ரெடியாக்கிட்டு,   மூணில் ஒரு பங்கு மாவை எடுத்து ஒரு டீஸ்பூன் அரிசி மாவைக் கலந்துட்டு வடை தட்டலாமுன்னா.... எங்கே  உருண்டையாத்தான் வருது.  போகட்டும் போ.... இது போண்டான்னு மனசைத் தேத்திக்கிட்டு போண்டா செஞ்சு படையலும் ஆச்சு.

பிரஸாதமாச்சேன்னு ஒன்னு எடுத்து  நம்மவர்க்குக் கொடுத்தேன்.  என்ன ஒரு மாதிரி முழிக்கறாரேன்னு  பார்த்தால்....  உப்பு கொஞ்சம் அதிகமா இருக்குன்னார்.

இப்ப தின்னு பார்க்கறது என் முறை....

 என்ன கொஞ்சமா?  ஹேய்.....  அதெல்லாம் இல்லையாக்கும்..... ரொம்பவே அதிகம்.  தவறுதலா ரெண்டு முறை போட்டுருக்கேன் போல.... அட ராமா....  பாவம் இல்லையோ ஸ்வாமி....   மன்னிச்சுக்கோ பெருமாளே....  மிஷ்டேக் ஆகிப்போச்சு....
பாத்திரம் நிறைய இருக்கும் படையலை.... இப்போ..... என்ன செய்யலாம்?
ரிப்பேர்!    இதிலும் அவசரப்படக்கூடாது....

தேங்காய்ப்பூ  (ஃப்ரோஸன். இந்தியன் கடையில் வாங்குனது) எடுத்து  மைக்ரோவேவில் ரெண்டு நிமிட் வச்சு டீஃப்ராஸ்ட் செஞ்சு  மிக்ஸியில் போட்டு  அரைச்செடுத்து, அதுலே தயிரைக்கலக்கி, கவனமா உப்புப் போடாமல்  எடுத்து வச்சுக் கொஞ்சம் போண்டாக்களை ஊறவச்சேன்.

அரைமணி கழிச்சு,  பதினொரு மணி ஸ்நாக் உங்களுக்குத் தயிர் போண்டான்னு  எடுத்து நீட்டினால்....  'தயிர்வடை டேஸ்ட் இல்லை'ன்னு ஆரம்பிச்சவரைக் கட் பண்ணேன்.  "இது வடை இல்லை.  தயிர் போண்டா. இப்படித்தான் இருக்கும்.  தாளிக்கலை. எப்பப் பார்த்தாலும் என்ன எண்ணெய் வேண்டிக்கிடக்கு?"
சாயங்காலம்  டின்னருக்கு வரும் மகள், மருமகனை வரவேற்க  இன்னொரு மூணில் ஒருபாகம் மாவு எடுத்து,  அதே ஒரு டீஸ்பூன் அரிசிமாவு, நாலு டீஸ்பூன் உளுத்தமாவு பவுடர் கலந்து, 'தேவையான உப்பை மட்டும்' போட்டு,  பொடிஸ்ஸா நறுக்குன வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கருவேப்பிலை சேர்த்து  வடையே தட்டியாச்!

பரிசோதனை வெற்றி !!

மருமகன்.... மாமியாரைப்போல் வடைப்ரேமி!

நேத்து  கடைசியா எஞ்சி இருந்த மாவில் சகல சமாச்சாரங்களையும் சேர்த்து  இன்னொருதரம்  வெற்றியை அனுபவிச்சுட்டேன்!
இப்ப நானும் ஒரு உ  வடை. எக்ஸ்பர்ட்டாக்கும் கேட்டோ!!!


PINகுறிப்பு:  பெரிய பயணம் எழுதிமுடிச்சதும் அப்பாடான்னு ஒரு ஆசுவாசம்!

கொஞ்சம் ஓய்வெடுத்துக்கிட்டு அடுத்த பயணத்தை ஆரம்பிக்கலாம்:-)  

அதுவரை வெறும் வாயை மெல்லாமல் வடையை மெல்லலாமா:-)

சேமிப்புக் கிடங்கில் இருந்ததில் ஒன்னு இந்த வடை. நல்லவேளை ஊசிப்போகலை, கேட்டோ!!!

7 comments:

said...

வடை அருமை நன்றி

// கொஞ்சம் ஓய்வெடுத்துக்கிட்டு அடுத்த பயணத்தை ஆரம்பிக்கலாம்:-) // பயணம் மட்டுமல்ல, ஓய்வும் உடம்புக்கு, மனதுக்கு நல்லது.

said...

வடையின்... முன்னேற்றம் அருமை.....

said...

வடைத்தட்டில் பூ எதற்கு .ஓ அது ஆஞ்சிக்கு படச்சதோ

said...

வடை உப்பு ஜாஸ்தியாயிடுத்துன்னவுடனேயே எனக்குத் தோணித்து, உப்பில்லாமல் தயிர் வடையா பண்ணிடலாமேன்னு.

இன்றைய வடைப்பதிவு நல்லா இருந்தது. மகள் மருமகன் படங்களைத்தான் போடலை.

said...

மூன்று விதமாக வடை! :) செய்வதை திருந்தச் செய்ய முடியவில்லை என்றாலும், செய்ததை திருத்துவதும் ஒரு விதத்தில் திறமை தானே!

அசத்துங்க....

said...

எனக்கு ரொம்பப் பிடிச்ச வடைன்றத விட, பிடிச்ச ஒரே வடை உளுந்த வடை தான் ம்மா. ஆனா, ஒரு தடவை கூட ஒழுங்கா வந்தது இல்லை :( ... பால் சேர்க்க சொன்னாங்க, அரிசிமாவு சேர்க்க சொன்னாங்க, fridge ல வச்சிருந்த தண்ணியைக் கூட சேர்க்க சொன்னாங்க. ஆனாலும் வடிவம் ... போண்டாவா மட்டும் தான் வருது. நீங்க சொன்ன, இந்த உளுந்து மாவை திரும்ப தனியா சேர்க்கிறது புதுசு... செய்து பார்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துகள்! :) (அப்புறம் அந்த படத்தில உள்ள ஸ்வீட் மதுரைக்கு வர்றப்போ செய்து கொடுங்க :) )

said...

அசத்தல்.