Monday, February 19, 2018

சிகப்புக் கம்பளம் போடச் சொன்னா........... (@அமெரிக்கா.... 7)

நம்ம மூணுநாள் டூரின் கடைசி நாள் இன்றைக்கு.....   எங்கே போகப்போறோம் தெரியுமோ?  Zion National Park.  நாம் இப்போ இருக்கும் கனாப்பில் இருந்து அவ்ளோ தூரமில்லை.... ஒரு முப்பது மைல்.
எட்டுமணிக்குக் கிளம்பிட்டோம். போற வழியில் மவுண்ட் கார்மல் (  White mountain Trading post Shops  Mount Carmel ) கடையில் ஒரு ஸ்டாப்.  நம்ம  மாராவுக்கு என்னமோ வாங்கிக்கணுமாம். சொவீனிர் ஷாப் நல்லாவே இருக்கு. எல்லாம் செவ்விந்திய சமாச்சாரங்கள்.  நாம் வேடிக்கையோடு சரி. ஒன்னும் வாங்கிக்கலை...

அட!  நம்ம உண்டி வில்!!!


காட்டெருமை படம் பார்த்துட்டு, இன்கிரிட் கிட்டே கேட்டப்ப,  ஸியான் போற வழியில் ஒரு பண்ணை இருக்கு. சிலசமயம் கண்ணில் படும்னு சொன்னாங்க.
பட்டது. ஆனால் கொஞ்சம் தூரத்திலே மேயுதுகள். கிட்டப்போய் பார்க்க ச்சான்ஸ் இல்லை.....  ரெண்டு க்ளிக்கோடு நகர்ந்தோம்.

'என்னென்ன மொழி வேணும்' னு கேக்கறாங்க.... ரேஞ்சர் மேடம் :-)
அஞ்சு இட்டாலியன், ஒரு ஸ்பானிஷ், ரெண்டு இங்லிஷ் :-)  கையேடு கைக்கு வந்துச்சு!

உள்ளே ரொம்ப தூரம் போகணுமாம். அதுசரி..... நடந்தாப் போகப்போறோம்....வண்டிதானே!  அதுவும் சிகப்புச் சாலையில்!   அங்கங்கே முக்கியமானவங்களை வரவேற்கச் சிகப்புக் கம்பளம் விரிப்பாங்க.  இங்கே வர்றவங்க எல்லோருமே ரொம்பவே முக்கியமானவங்க என்பதால்  பூரா ரோடையுமே  சிகப்பு ரோடாவேப் போட்டு வச்சுட்டாங்க :-)

இங்கே கிடைக்கும் ஒரு விதமான  கல் (தாது?) செம்மண் நிறத்துலே இருக்கு. ஏராளமாக் கிடைக்குது.  சுத்தி இருக்கும் குன்றுகள்  முழுசுமே இதே வகைக் கற்கள்தானாமே!  இந்த இடமே மொத்தம் 229 சதுர மைல்கள்!

இந்தக் கற்களைப்பொடி செஞ்சு ரோடே போட்டு வச்சுட்டாங்க.  உலகில் வேறெங்கும் இதுபோல இல்லை(யாம்!)  நம்ம  இன்க்ரிட் சொன்னாங்க !


ஸியான் கேன்யன், ஸியான் நேஷனல் பார்க்குன்னு  இப்ப சொல்ற இந்த இடத்தை 1909 ஆம்  ஆண்டுதான்   அமெரிக்க அரசு  தேசிய நினைவிடத்தில் ஒரு அம்சமா அங்கீகரிச்சது.  அதுக்கப்புறம்  இந்த இடத்தைப் பாதுகாத்து,  மக்கள் வரப்போக வசதிகள் எல்லாம் செஞ்சு முடிக்க ஒரு பத்து வருசம் ஆகிப்போச்சு.  அப்பதான் பெயரும் வச்சாங்க. ஸியான் நேஷனல் பார்க் !

பத்தாயிரம் வருசங்களுக்கும் மேலா, இந்த இடம் பூர்வகுடிகளின் புழக்கத்தில் இருந்ததுக்கான ஆதாரங்கள் எல்லாம்  கிடைச்சுருக்காம்.  அப்ப ஏது அமெரிக்கான்ற பெயர்?  கொலம்பஸ் 'கண்டுபிடிச்சதே' 1492 இல் இல்லையோ?

இடம் இருக்குன்னு பார்த்து வச்சுட்டு போயிட்டார் கொலம்பஸ். அப்புறம் இன்னொரு பத்து வருசம் கழிச்சு,  Amerigo Vespucci  என்ற வியாபாரி, தன்னுடைய கப்பலோடு யாவாரம் செய்ய சுத்துனப்போ இங்கே இறங்கிப் பார்த்துட்டு, ஊருலகத்துக்குச் சேதி சொல்லப்போய்,  அவர் பெயரால் அமெரிக்கா ஆகிப்போச்சு. பாவம்..... கொலம்பஸ்....  ச்சான்ஸைக் கோட்டை வுட்டுட்டாரே..... (அவனவன்... பெயருக்கு எப்படி    அலையறான், இல்லே !!!)

இப்பவும்  இந்த அமெரிக்காவைக் கண்டுபிடிச்சது  யார் என்ற குழப்பம் இருந்துக்கிட்டுதான் இருக்காமே.....  மொதல்ல யார் தொலைச்சான்னு தெரிஞ்சா, யார் மொதல்லெ கண்டு பிடிச்சாங்கன்னும் தெரிஞ்சுரும் இல்லை?  இதுக்குத்தான்  சரித்திரத்தை சரியான முறைப்படி எழுதி வைக்கணுங்கறது..... போகட்டும்.... அப்ப வலை, ஃபேஸ்புக், ட்விட்டர் இப்படி ஒன்னும் இல்லாமப்போனது யார் குத்தம்?

ஆனா.... உண்மையான சரித்திரம் என்றது உலகில் எந்த நாட்டிலுமே எழுதிவைக்கப்படலைன்னு  சொல்றதை ஏத்துக்கத்தான் வேணும்.  பொற்காலம், கற்காலமுன்னு எழுதி இருக்கேன்னு பார்த்தால்..... அப்ப எந்த மாதிரி அரசர், ஆட்சி செய்தவர் இருந்தாங்களோ.... அவுங்களைப் போற்றிப் பாடி, அவுங்கபக்கம் சார்பு எடுத்துன்னுதான் எழுதி இருப்பாங்க.  பொருள்தேடும் உலகம் இது என்றதை நினைவில் வச்சுக்கணும்.  உண்மையை , உண்மையிலேயே எழுத வுட்டுருப்பாங்களா  என்ன?  தேசத்ரோகம், ராஜதண்டனைன்னு எத்தனை இருக்கு....

நம்ம நாட்டிலும்கூட,  பாடப்புத்தகங்களிலேயே எத்தனை விதமான புரட்டுகள்!!  டைம் கேப்ஸ்யூல் ஒன்னு புதைச்சு வச்சுருக்காங்களே.... அதுலே(யும்) என்னென்ன  புழுகு மூட்டைகள் இருக்கோ?  ப்ச்....

சரி...வாங்க போய்க்கிட்டே என்ன ஏதுன்னு பார்க்கலாம்.....

'காட்டுக்குள்ளே அங்கங்கே மொளைச்சுப் பூத்துக்குலுங்கும் வெள்ளைப் பூக்களை மட்டும் தொட்டுறாதீங்க.    மூளையைக் கலக்கிரு'முன்னு  இன்க்ரிட் சொன்னாங்களா.....  என்ன பூன்னு  கேட்டதுக்கு  டாட்டூரான்னாங்க.   எங்கியோ பார்த்த மாதிரி இருக்கேன்னு வண்டியில் இருந்தே எட்டிப் பார்த்துக்கிட்டு இருந்தேன்....  செல்ஃபோனில் படம் காமிச்சதும்.... அய்ய.... இது எங்கூட்டுலேயே இருக்கே......   இதுக்குப்பேர்  ஊமத்தைன்னேன் :-   உன்மத்தம் பூ.....  (நம்மவருக்கு மூளை கலக்கம் வேறெப்படி? )  Devil's Trumpet is the name  :-)
சிகப்புச்சாலை (செம்பாதை?) பயணம்....  கொஞ்ச தூரத்துலே ஒரு மலையாண்டை நம்மைக் கொண்டு போயிருச்சு.  மலைக்கு அந்தாண்டை போகணும். பெரிய டன்னல். உள்ளே நுழைய நிறைய வண்டிகள் காத்திருக்கு. நாமும் ஜோதியில் கலந்தோம்.  இப்ப அந்தாண்டை இருந்து வரும் வண்டிகள் வந்துக்கிட்டு இருக்கு!

இந்த டன்னலை வெட்டி முடிக்கப் பத்து வருசங்கள் வேலை நடந்துருக்கு! நம்ம வண்டி, ரொம்பப் பெருசா இல்லாததால் தப்பிச்சோம் :-)   ரொம்ப உயரமான கூரையுடனோ, ரொம்ப அகலமாவோ ( உயரம்  ஏழரை அடின்னு வச்சுக்குங்க,  அகலம் ஏழடி பத்து அங்குலம்) இருந்தால்  சிறப்பு அனுமதி  வாங்கிக்கணும்.  'உஷாரைய்யா    உஷார்னு' சொல்லிக்கிட்டே  உங்க வண்டிக்கு எஸ்கார்ட்  வண்டியும் முன்னால் போகும்.
டன்னல் நீளம் 1.1 மைல். ஒரு வண்டி போகும் அளவுதான் என்பதால்  ஒரு திசையில்  வண்டிகள் போகும்போது மறுதிசைக்குப் போறவங்க காத்து நிக்கணும். எங்க முறை வந்ததும் உள்ளே போறோம்.  அங்கங்கே  பக்கவாட்டுலே   பாதையாட்டம்  துளைச்சு, வெளியிலே இருந்து காத்தோட்டம் வர வழி பண்ணி இருக்காங்க !  சுரங்க ஜன்னல் !
(எங்க நாட்டுலே ஹோமர் டன்னல்னு ஒன்னு  இருக்கு. ஜன்னல் கிடையாது. முக்கால் மைல் நீளம். அதுவே எனக்குப் பெருசாத் தெரிஞ்சது....  இப்ப இங்கே அதைவிட நீளம்!  எங்கூர்லேயே லிட்டில்டன் போர்ட் போக  டன்னல் ஒன்னு  1.22 மைல் நீளம் போட்டுருக்காங்க.  நல்ல அகலமா பளிச்ன்னு வெளிச்சத்தோடு,  ரெண்டு பக்க சுவர் முழுசும்  டைல்ஸ் போட்டு  ரெண்டு லேனோடு இருக்கும்.  மலைக்கு அடியில் போகும் த்ரில் இருக்காது....) கன்டெய்னர் ட்ரக் போகும் அளவு பெருசு)


அந்தக் காலத்துலே  (1920- 1930) இது ஒரு  தொழில்நுட்ப அற்புதம்னு பெயர் வாங்கி இருக்கு. என்ன ஒன்னு.... மலைக்கு அடியில் இருந்து வெளிவராம...  கொஞ்சம் உசரத்துலே முடிஞ்சுபோயிருக்கு. ஆனா... இது ஒரு பெரிய பிரச்சனை எல்லாம் இல்லை....  சரிஞ்சு இறங்க ஒரு பாதையா ரேம்ப் போட்டால் ஆச்சு!
கடந்து வந்த மகிழ்ச்சியை அப்படியே க்ளிக்கிக்கிட்டோம் :-)
கண்போகும் இடமெல்லாம் செங்குன்றங்களே! ஆறுமைலுக்கும் கொஞ்சம் கூடுதலாப் போய்க்கிட்டே இருந்தோமா...... கார்பார்க் வந்துருச்சு.  Zion Lodge க்கு முன்னால் பெரிய புல்வெளி!  அதானே காட்டுக்குள்ளே இடத்துக்கு என்ன பஞ்சம்?
இங்கே வந்து ரெண்டு நாள் தங்கி, இயற்கை அழகை அனுபவிக்கணும் என்ற ஆசை  வரலைன்னாதான்... குத்தம், கேட்டோ  :-)

வரவேற்பும், ரெஸ்ட் ரூம்களும் அருமை!  லாட்ஜ் வாசலில்  ஷட்டில் ஸ்டாப்.  ரெண்டு ரூட்லே  ஜோடி ஷட்டில்ஸ் போய்ப்போய் வந்துக்கிட்டு இருக்கு!  இலவசம்தான்.  ஏறிக்கோ.... இறங்கிக்கோ....
நடக்க வேண்டியதில்லை......  நம்ம குழுவில் யாரும்  மலையேறும் ஐடியாவிலும் இல்லை..... வேடிக்கை மட்டுமே என்பதால் பகல் பனிரெண்டுக்கு  இதே லாட்ஜில் சந்திக்கலாமுன்னு  இன்க்ரிட் சொன்னவுடன், ஆளாளுக்குப் பிச்சுக்கிட்டோம்.... அவரவர் வழியில் :-)  ரெண்டேகால் மணி நேரம் இருக்கு!

எங்கெ இருந்து ஆரம்பிக்கலாம்?  !  இப்ப நாம் நடு சென்ட்டர்லே இருக்கோம். அஞ்சாவது ஸ்டாப். இந்தாண்டை நாலு அந்தாண்டை நாலு :-)

ஷட்டில் ரூட்லே  கடைசி ஸ்டாப் டெம்பிள்னு பார்த்தவுடன் அங்கே போகலாமுன்னு சொன்னேன். நம்மவர் அடுத்த கோடியில் விஸிட்டர் சென்ட்டர்தான்  முதல் ஸ்டாப். அங்கே போயிட்டு தகவல் எல்லாம் தெரிஞ்சுக்கலாமுன்னார். அதுவுஞ்சரிதான்..
வண்டி கிளம்பிருச்சு.... சுத்திவர மலை.... காட்டுக்குள்ளே போகுது சிகப்புச் சாலை..... அங்கங்கே கண்ணில் தெம்படுது  ஆறு!  விர்ஜின் ரிவர். இப்ப சாதுவாப்போறது,  மழைக்காலத்தில்  வெள்ளம் வரும்போது  மில்லியன் டன் மணலையும் கல்லையும் அள்ளிக்கிட்டு வந்து  நிரப்பிருமாம்!
குறுகலான  சந்துக்குள்ளே ரெண்டு பக்க மலைகளையும் உடைச்செறிஞ்சுட்டு ஓடி வந்துக்கிட்டு இருக்கு பாருங்க....  Narrow slot Canyon னு  இதை வகைப்படுத்தி இருக்காங்க.
ஒன்னொன்னாப் பார்த்துக்கிட்டே வந்துக்கிட்டு இருக்கோம். விஸிட்டர் சென்டரில்தான் கொஞ்சம் அதிக நேரம் எடுத்துக்கவேண்டியதாப் போச்சு. சரித்திரம் தெரியணும் இல்லே?
விஸிட்டர் சென்ட்டராண்டை கள்ளிப்பழம்!    சின்ன வயசுலே (வீட்டுக்குத் தெரியாம) தின்னுருக்கேன் :-)

ஹ்யூமன் ஹிஸ்டரி ம்யூஸியம் தொட்டடுத்துதான்.
மலைச்சிகரங்களில் என்னன்னு இங்கேயே நின்னு பார்த்ததுதான்....  மூவாயிரத்து எண்ணூறு  அடி மலையில்  ஏறிப்போக டைம் இல்லைப்பா   :-)
அங்கிருந்து இன்னும் நாலாயிரம் அடிகள் வேற    ஏறணும்.... அடடா.... காலில் பொருத்தமான  ஷூஸ் இல்லை....  ப்ச்....  (ஹப்பா.... தப்பிச்சோம்)
பலிபீடம்..... பேருக்கேத்தாப்லெ....  ரத்தம் வழிஞ்சோடின அடையாளத்தோடு.....


கோவில் கோவிலுன்னு போனா அது  இயற்கையின் கோவில்!  இந்த குறுகிய கேன்யனுக்குத்தான் கோவில்னு பெயர்!  எச்சரிக்கை, தகவல்கள் எல்லாம் அங்கங்கே!  நாம்தான் நம்மைப் பார்த்துக்கணும்....  ரொம்பச் சரி.


அங்கங்கே ஷட்டிலுக்குக் காத்திருக்கும்போது    பயணிகள் உக்கார, ஓய்வெடுக்கன்னு ஏற்பாடுகள். அணிலன்மார் 'என்ன வச்சுருக்கே?'ன்னு வந்து விசாரிக்கும்போது..... 'ஏமி லேது' ன்னு சொல்லணும். தீனி கொடுக்கறதை யாராவது பார்த்துச் சொல்லிட்டா, நமக்கு தண்டம் அதிகம்.....  இக்கட்டான  நிலையில் நான்.....  கோபால் கொடுத்த பழத்தைக்கூட வேணாமுன்னுட்டேன். பார்க்க வச்சுத் தின்ன முடியாது....




ஆத்தங்கரைப்பக்கம் நடக்கலாம்னு போனால்.... இன்றைக்குத் திடீர் வெள்ளம் இல்லையாம்....   புள்ளைங்க ஆட்டம் போட்டுக்கிட்டு இருக்கு:-)


மறுபடி லாட்ஜுக்கு வந்தப்ப மணி பனிரெண்டு ஆகப் பத்து நிமிட். நம்ம குழு மொத்தமும் வந்து சேர்ந்துருக்கு!

"எல்லோருக்கும் கைடு புக் கிடைச்சதா? "

இந்த புத்தகத்தில்  உடா மாநிலத்துலே இருக்கும்  பார்க் விவரங்கள் ஏராளம். இவ்ளோ இருக்கா என்ன ?

'பகல் சாப்பாட்டுக்கு ஒரு நல்ல இடம் இருக்கு, போற வழியிலே   அங்கே போய் சாப்பிடலாமா? இல்லே இங்கேயே சாப்புடறீங்களா?  நாஞ்சொல்ற இடத்துலே  வகைவகையா சாப்பிடலாம். வெஜிடேரியன் ஏராளமான வகைகள் (எனக்குக் கொக்கி போட்டாங்க! )    சீப் அண்ட் பெஸ்ட்' ன்னு இன்கிரிட் சொன்னதைக் காது கொடுத்து கேட்ட நாங்கள்,  அப்பச் சரி, இங்கே சாப்பிடலைன்னு   துப்பட்டாப் போட்டுத் தாண்டாத குறை :-)


"ஒரு மணி நேரம் ஆகும் அங்கெ போய்ச்சேர, பரவாயில்லையா?  "

"நோ ஒர்ரீஸ்....."

திரும்ப டன்னலுக்குள் போவோமுன்னு நான் நினைச்சுக்கிட்டு இருந்தேன்..... ஆனால் நாம்  பார்க்கை விட்டு வெளியேறுன வழி வேற...... 

தொடரும்.............  :-)


14 comments:

said...

அணில்களின் யாசகம் அழுகை வருகிறது. அவைகளுக்குத் தெரியுமா, அவற்றுக்கு ஒன்றும் தரக்கூடாது என்று சட்டம் இருப்பது? ஓ மை கடவுளே...

படங்கள் அழகு.

said...

டன்னல் பயணம் வியப்பாகவும் பயமாகவும் இருந்தது.

said...

அருமை
அட்டகாசம்
அணில் படங்கள் அத்தனையும் அமர்க்களம்.

said...

செம்பாதை பயணம்.. மிக சிறப்பு

said...

வாங்க ஸ்ரீராம்.

'யாசகம்' சரியான சொல். எனக்கும் ரொம்ப துக்கமா இருந்தது....ப்ச்..... கையில் நட்ஸ் ஏதும் இல்லை. இருந்துருந்தால் நைஸா நழுவ விட்டுருப்பேன். நாம் தீனி கையால் கொடுக்கக்கூடாதுன்னுதானே போர்ட் சொல்லுது.

பாவம்..... கை கூப்பி, ரெண்டு கைகளையும் விரிச்சு, பணிவாத் தலை குனிஞ்சு எப்படியெல்லாம் கேட்டது செல்லம்...... ஹூம்........

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

வாழ்க்கையில் முதல் டன்னல் ஹாங்காங் ஏர்ப்போர்ட்டில் இருந்து கௌலூன் வந்ததுதான். அது கடலுக்கடியில் !

அதுக்குப் பிறகு பல நாடுகளில் போயிருக்கோம். இங்கே எங்கூரிலும் ஒரு டன்னல் இருக்கு. நம்ம வீட்டுக்கு வரும் விருந்தினரை அதன் வழியாக் கூட்டிப்போய் காமிச்சால்தான் எங்கமனசு ஆறும் :-)

said...

வாங்க விஸ்வநாத்.

மனிதர் பற்றிய பயம் அறவே இல்லை அந்த அணிலன்மாருக்கு!

said...

வாங்க அனுராதா ப்ரேம்..

ரசிப்புக்கு நன்றி !

said...

படங்களும் இடங்களும் அருமை. எல்லா இடத்திலும் கிடைக்கும் உணவை வைத்து மேனேஜ் பண்ணிக்கொள்கிறீர்கள்.

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

சமாளிச்சுக்கணும்தான். இல்லைன்னா... பயணம் கஷ்டமாகிரும்.

said...

அணிலுக்கு ஒன்னும் கொடுக்காம வந்தது நல்லது. அது வேலைய அது பாத்துக்கட்டும். நம்மூர்கள்ள கொரங்குக்கு நம்ம கொண்டு போறதைக் கொடுத்து, அது இயற்கையா சாப்பிடுறதையே நிறுத்திருச்சுன்னு சொல்றாங்க. திருவரங்கம் கோயில்ல யானைக்கு வாளி வாளியா தெனம் காப்பி கொடுத்து அதுக்கும் சக்கரைநோய். அணில் அழுதாலும் அழட்டும்னு ஒன்னும் கொடுக்காம வந்த உங்களைப் பாராட்டுறேன்.

கவட்டைன்னு சொல்வாங்க எங்கூர்ப்பக்கம். இடுப்பிலிருந்து இரண்டு கால்களும் சேர்ந்து கவட்டைன்னும் அழைக்கப்படும். ரெண்டும் ஒரே மாதிரியான உருவ அமைப்புதான. அதை இப்பிடி புதுமையாகச் செஞ்சு வித்துக்கிட்டிருக்கான்.

உங்கள நல்ல சாப்பாடுன்னு சொல்லி ஆசையைத் தூண்டி கூட்டீட்டுப் போறாங்க. எங்க கூட்டீட்டுப் போனாங்களோ! அடுத்த பதிவுல பாக்கலாம்.

said...

கெஞ்சும் அணில்கள் - பார்க்கவே கஷ்டமா இருக்கே... இதுல 100 $ அபராதமா... அதிகம் தான்.

இருந்தாலும் அணில்கள் பாவம் தான்.

படங்கள் அழகு.

said...

அன்பின் துளசி:

உங்களுடைய 2.19.18 திகதி இப்பதிவை படித்தவுடன் ஒரு தகவலை பகிர்ந்து கொள்ள தோன்றியது, ஆயினும் தயக்கம்; ஒரு வகையான பீற்றிக்கொள்ளுதலாகிவிடுமோ என்று. தெற்காசியாவிலிருந்து அமேரிக்காவுக்கு புலம் பெயர்ந்த குடும்பம், அதுவும் தமிழர் சம்பந்தப்பட்ட மிகவும் மாறுதலான தகவல் என்பதால் சொல்ல விரும்புகிறேன்.

நீங்கள் வந்து சென்ற இடங்களில் கேன்யன் தொடங்கி அருகில் செடோனா, வழியில் [உ]வில்லியம்ஸ், பேஜ் போன்ற ஊர்களிலும், லாஸ் வேகஸீலும் மற்றும் பல கலபோர்ன்யா ஊர்களின் டிரேடிங் போஸ்ட் - களில் [தமிழ்?] விற்பனைக்கு இருக்கும் செவ்விந்திய கைவினைப்பொருட்கள் மற்றும் டர்கோய்ஸ் போன்ற கற்கள் பதித்த வெள்ளி நகைகள் செய்யப்படுவது எமது மாநிலமான நியு மெக்ஸிக்கோவில். செவ்விந்தியர்கள் உருவாக்கும் பொருட்களை விலை கொடுத்து வாங்கி அல்லது அவர்கள் பலரை வேலைக்கு வைத்து நகைகளை செய்து மேற்கத்திய மற்றும் தென்மேற்கு மாநிலங்களில் விற்பனையாளர்கள் வழியாக மொத்த விற்பனை நடக்கிறது, இன்றும். ஒரு காலத்தில் வருடத்துக்கு ஒரு பில்லியன் டோலர் அளவில் என இருந்த மொத்த விற்பனை, வெளிநாட்டு copy களால் சரிவடைந்துள்ளது.

1967 லிருந்து கொலோராடோ மாநிலத்தில் வசித்து வந்த ஓரு தமிழர் கலபோர்ன்யாவுக்கு விடுமுறைக்கு செல்லும் வழியில் - ஆரம்ப 70 களில் இத்தொழில் பற்றி அறிய வந்தார். மாநில அரசில் உயர் பொறியாளாராக இருந்த பதவியை உதறிவிட்டு இத்தொழிலில் ஈடுபட்டார். அவர் உதவியுடன் பின் புலம் பெயர்ந்த சகோதரர்கள் , சகோதரி மற்றும் அவர்களுடைய மகன்கள் சிலரும் இத்தொழிலில் ஈடுபட்டனர். அமேரிக்காவுக்கு வந்து ஆர்கிடெக்ட் வரைபடவாளர் மேற்படிப்பு முடிக்க விரும்பிய அடியேன், 18 வருடம் இந்த தொழிலில் இருந்துவிட்டு - ஊர் ஊராக அலைவது அலுத்துப் போனதால் திரும்பவும் கட்டிடத் தொழிலில் உள்ளேன் http://www.peerlessnm.com/

புலம் பெயர்ந்தத் தமிழர்கள் பல்வேறு துறைகளில், அதுவும் மிகவும் மாறுதலானவற்றிலும் வெற்றிகரமாக தடம் பதித்துள்ளனர் என்பதை பகிரவே நீளமான இப்பின்னூட்டம்! பொறுத்துக் கொள்ளுங்கள். தமிழில் எழுத ரொம்ப கடினமாயுள்ளது!

என்னுடைய உறவினன் ஒருத்தர் மட்டும் இன்னும் இத்தொழிலை செய்து வருகிறார் - https://buyindian.com/

said...

அணில் பாவமாக இருக்கு அக்கா..என்ன அழகா நிக்குது பாருங்க ஆனா பயமே இல்லாம நிக்குதுங்க...இங்கல்லாம் ஓடி ஓடிப் போய்டுமே...நிக்கவே நிக்காதே...இப்படிப் பக்கத்துல எல்லாம் பார்க்கவே முடியாது..

படங்கள் எல்லாம் சூப்பர். சிவப்பு மலை ரிவர் எலலம் அழகு.

கீதா