Friday, February 09, 2018

அத்தான்...... அத்தான்....... (@அமெரிக்கா.... 3)

கனவுப்பயணம் என்றதால் சட்னு ரெடியாகி ஆறுமணிக்கெல்லாம்  அறையை விட்டுக் கிளம்பியாச்சு.  ரெண்டு நைட்  கழிச்சுத்  மூணாம்நாள் திரும்ப இங்கேதான் வரப்போறோம். அந்த நேரத்திலும் அங்கங்கே ஒன்னுரெண்டு பேர் ஆடிக்கிட்டுத்தான் இருக்காங்க.  இங்கே இருக்கும் பயணிகளுக்குத் தேவையான சமாச்சாரங்கள் விற்கும் கடையில் கொஞ்சம் தீனி வாங்கிக்கிட்டோம்.


ட்ராப்பிக்கானா இருக்குமிடம் ஒரு கார்னர் சைட் என்பதால் இடதுபக்க ஓரத்துக்குப்போய் அப்படியே இன்னொரு லெஃப்ட் எடுத்தா அதோ கண் முன்னாடி தெரியுது லக்ஸர். (எகிப்து) நம்ம கணக்குலே அறுநூறு மீட்டர். சின்னப்பொட்டியை உருட்டிக்கிட்டே போகலாம். நடைபாதை நல்லாத்தான் இருக்கு.  நேத்து லக்ஸரின் முன்பக்கம் க்ளிக்கலையேன்னு  கார்பார்க்குப் பக்கம் போறோம். அடுத்த  கட்டடம்தான் மேண்டலே பே ஹொட்டேல். இங்கெதான் இந்தக் கார்ப்பார்க்கில் கொஞ்ச நாளைக்கு முன்னால் துப்பாக்கிச்சூடு ஆச்சு.  பச்......


வாசலில் இருக்கும் ஸ்பிங்ஸ்  படத்துலே  முழுசாத் தெரியணுமுன்னா  சாலைக்கு எதிர்ப்புறம் போகணும்.... அப்புறம் பார்த்துக்கலாமுன்னு இந்தாண்டையே நடந்து போறோம். உள்ளே போய்  வரவேற்பில் சரியா எந்த இடத்துலே பிக்கப்புன்னு கேட்டுக்கிட்டு  அங்கே போய் உக்கார்ந்தோம்.

ஹோன்னு  பரந்து விரிஞ்சு போகுது  கட்டடமும், சும்மாக்கிடக்கும் ஹால்களும்....  உள்ளலங்காரம் முழுசும் க்ளியோபாட்ரா ஸ்டைலோ....  அழகழகான ஆர்க்கிட் மலர்கள் அலங்காரம் சூப்பர்!

Hieroglyphic எழுத்துகள் இருக்கும் சுவர்களும் தூண்களும்......   இந்த எழுத்துகள் கடவுளே உருவாக்கித் தந்தவை(யாம்!)  இதுக்கு வெள்ளைக்காரன் எந்த எழுத்து ஏ, எது பி, எது சி ன்னு 'கண்டுபிடிச்சு வச்சதெல்லாம் தனி சமாச்சாரம் கேட்டோ!




நல்லவேளையாக் கிளம்புமுன்னே  ப்ரேக்ஃபாஸ்ட் (காஃபி &  நேத்து வாங்கிவச்ச சில பேக்கரி ஐட்டம்ஸ் ) முடிச்சுக்கிட்டதால்  பரபரப்பில்லாமல் நிம்மதியா இருக்க முடிஞ்சது.  நம்ம டூர் பஸ்,  கைடு எல்லாம் எப்படி இருப்பாங்க, எங்கே வருவாங்கன்ற பிடி ஒன்னும் கிட்டலை. எத்தனை பேர் பஸ்ஸில் இருப்பாங்க? ஙே...

வலையில் பார்த்துதான் இந்த டூர் ஏற்பாடு பண்ணி இருக்கோம். க்ராண்ட் கேன்யன் பார்க்கணும். ரெண்டு இரவு மூணு பகல்னு....  Viator னு ஒரு கம்பெனி மூலமாப் போறோம். ரெண்டு மாசத்துக்கு முன்னாலேயே  பணம் எல்லாம் கட்டி கன்ஃபர்ம் ஆகிருச்சு.

நம்மவர் காத்திருந்து பார்த்துட்டு, வேறெங்காவது வண்டி நிக்குதோ என்னவோன்னு  போயிட்டார். அப்போ ஒரு லேடி வந்து நம்ம பெயரை எப்படியெப்படியெல்லாமோ கஷ்டப்பட்டுச்சொல்ல ஆரம்பிச்சதும், அது நாங்கதான்னு சொன்னேன். சட்னு குனிஞ்சு நம்ம  ரெண்டு பைகளையும் தூக்கிக்கிட்டு, இன்னொருத்தர் எங்கேன்னதும் நான் இவரைத் தேடிக்கிட்டுபோறேன். கொஞ்ச தூரத்துலே  இவர் போய்க்கிட்டு இருக்கார்.  நம்மவர் பெயரைச் சொல்லிக் கூப்பிடாம.... (பழைய ஞாபகத்துலே!) அத்தான், அத்தான்னு  கூப்பிடறேன். பொட்டி தூக்கிக்கிட்டுப்போற லேடியும் அத்தான் அத்தான்னு  என்னைவிடச் சத்தமாக் கூப்பிடறாங்க :-)    அதுதான் அவர் பெயர்னு நினைச்சுக்கிட்டாங்க போல ....ஹா ஹா ஹா ஹா....


அங்கெ ஒரு பென்ஸ் வேன் நிக்குது, அதை நோக்கிப் போறாங்க. அங்கே ஒருத்தர் பொட்டிகளை அடுக்கி வச்சுக்கிட்டு இருக்கார். நம்மதும்  அடுக்கில் இடம் பிடிச்சது.

நம்மவருக்குக் கேட்டுச்சோ என்னமோ....   ஒரு பரவசத்தோடு  திரும்பிப் பார்த்துட்டு ஓடி வந்தார்:-)    இவரும் பஸ் நிக்குதான்னு தேடிக்கிட்டு இருந்தாராம். அறிமுகம் ஆச்சு. அந்த லேடிதான் நம்ம டூர் டைரக்டர், இன்க்ரிட்.   இன்னொருத்தர் ஸாம், நம்ம ட்ரைவர்.
வண்டிக்குள்ளே ஏற்கெனவே  ஆறுபேர் கடைசி வரிசையிலும் ரெண்டாவது வரிசையிலுமா உக்கார்ந்துருக்காங்க. ஆகமொத்தம் எட்டுப்பேர்தான் இந்த டூரில்.  இதுலே அஞ்சு பேர் இத்தாலியர் . ஒரு புது கல்யாணஜோடியும், இன்னொரு மூணு பேர் குழுவும். ஒருத்தர் ஸ்பெய்ன் நாடு.   நம்மோடு சேர்த்து  பயணிகளாக ஆறு பெண்கள், ரெண்டு ஆண்கள்.

நம்மைத் தவிர மற்றவர்கள் யாருக்கும்  இங்லிஷ் தெரியாது என்பதால் அவுங்களுக்காக ஒரு மொழிபெயர்ப்பாளர் பெண். இவுங்க மூவர். எல்லாம் சேர்த்தே பதினொரு ஆட்கள்!  பதினைஞ்சு ஸீட்டர்  வண்டி.  நமக்கு  முன் வரிசை. ஸாமுக்குப் பின்னாடி உக்கார்ந்துருக்கோம்.
மொழிபெயர்ப்பாளருக்கு ஸ்பானிஷும் தெரியுமாம்.  அந்த அறுவரோடு பின்னால் ஐக்கியமாகிட்டாங்க. வரவேற்பு, அறிமுகம் ஹை ஹை எல்லாம் ஆனதும்  சலோன்னு கிளம்பிட்டோம். கிளம்பின மூணாம் நிமிட் முதல் ஸ்டாப். ஃபோட்டோ பாய்ன்ட் :-)  தொட்டடுத்து ஏர்ப்போர்ட்.
ஊரை விட்டு மெள்ள வெளியில் போகுது சாலை..... சாலையில் வேகம் பிடிச்சது வண்டி. கண்ணாடியில் பிரதிபலிப்பு இருப்பதால் எடுத்த படங்கள் கொஞ்சம் சுமார்தான். ஆளுக்கொரு ஜன்னலாப் பிடிச்சு உக்கார்ந்ததால்.... ரெண்டு பக்க காட்சிகளும் ரெண்டு கேமெராவில் எடுத்தோம் என்றாலும்....  ப்ச்.....

ஒரு சின்ன ஊரின்  பப்ளிக் டாய்லெட்க்கு முன்னால்  வெண்கலச்சிலை ஒன்னு வச்சுருக்காங்க.   வலது தோளில் தூக்கிப்பிடிச்ச ஒரு வகையான ப்ரஷ். கழுத்தில் ஒரு வகை மாலை!   இவர் யாராக இருக்கும்?
நல்லா உத்துப் பார்த்தால் தெரியுது  கழுத்துலே இருக்கும் மாலை டாய்லட் பேப்பர் ரோல்ஸ். அமெரிக்க நிதிநிலமை சரியில்லாத காலக்கட்டம்.....   ஹூவர் அணைக்கட்டு கட்டிக்கிட்டு இருந்த சமயம்....  ஏழாயிரம்பேர் வேலை செஞ்சுக்கிட்டு இருக்காங்க.    இவுங்க அனைவரும் பயன்படுத்தும் கழிவறைகளை ஒத்தையாளா நின்னு சுத்தம் செஞ்சுக்கிட்டு இருந்தவர் இவர்.  இவருடைய பெயர் என்னன்னு யாருக்கும் தெரியாது.  அலபேம்  ( Alabam) னு கூப்புட்டுக்கிட்டு இருந்துருக்காங்க.   இவருக்கு வயசு அப்பவே எழுபது இருக்கலாமாம்.
இவர் மட்டும் இல்லைன்னா.....    அணைக்கட்டே நாறிப்போயிருக்கும், இல்லே!  இதை உணர்ந்து, இவருக்கு ஒரு சிலை செஞ்சு வச்சு அவருடைய சேவையை மக்கள் நினைச்சுப் பார்க்க  வச்சுருக்காங்க.  சிலையை வச்ச இடமும் இவர் தொழில் சார்ந்த இடமா இருக்கு பாருங்களேன்!

கழிப்பறை சுத்தமா இருக்கவேண்டியது எவ்வளவு அவசியமுன்னு.... இந்தியாவில் பயணம் போனால் தெரியும்......   ப்ச்.....    இந்த  பயத்துலே தண்ணிகூட குடிக்க மாட்டேன்.....
பொட்டல்காடு, மொட்டை வெயில், பாறைகளும் சின்னக்குன்றுகளுமா  காட்சிகள்.

 வண்டிக்குள் ஏறும்போதே தண்ணிபாட்டில் எடுத்து நம்ம கையில் கொடுத்தார் ஸாம். ட்ரைவர் ஸீட்டுக்குப் பக்கத்தில் பெரிய  அட்டைப்பொட்டியில் தண்ணீர் பாட்டில்கள்.  வேணுமுன்னா எடுத்துக் குடிச்சுக்குங்கோன்னு  எல்லோருக்கும் சொன்னார். ஆனால்  பின்னால் இருக்கும் யாருமே  கடைசிவரை எடுத்துக்கலை.  நாங்கதான் குடிச்சுத் தீர்த்தோம். இன்க்ரிட் சொன்னாங்க..... ' பாலைவனத்துலே பயணம். கட்டாயம் தண்ணீர் குடிக்கணும். இல்லேன்னா உடல்நிலை கெட்டுப்போயிரும்,   கஷ்டம்'னு.
கிளம்புன ரெண்டு மணி நேரத்தில் ஒரு பெட்ரோல்பங்க் ஸ்டாப்.  ரெஸ்ட்ரூம் வசதிகள் ஓக்கே!  வண்டிக்கும் பெட்ரோல் போட்டாங்க. ரொம்ப மலிவா இருக்கு பெட்ரோல். அதுவும் ஒரு கேலனுக்குள்ள விலை.  (எங்கூர்லே லிட்டருக்கு  ரெண்டு டாலர் பத்தொன்பது சென்ட்)
வெறும் பெட்ரோல்பங்கா மட்டும் இல்லாம, கடையும் சேர்ந்தே இருக்கு.  பயணிகள் தேவை அனுசரிச்சு சகலமும்.  என்னுடைய முதல் ஷாப்பிங் இங்கேதான் :-) சின்னப் பை நிறைச்சுக் கற்கள் .
அடுத்த ஒன்னரை மணி நேரத்துலே  மொழிபெயர்ப்பாளருக்காக ஒரு அவசர ஸ்டாப். ஒரு கடை வாசலில் நிறுத்தினோம்.  ஜஸ்ட் பத்து  நிமிட்தான். பக்கத்து வண்டியில் ஒரு செல்லம் (ராட்வீலர்) அழகன் !



தென்கிழக்கு நோக்கிப் போறோம், ரூட் 66 ன்னு பெயர்!   அமெரிக்காவின்  பழைய ஹைவே.   வயசு தொன்னூத்தியொன்னு!  Route 66 னு ஒரு படம் கூட 1960 இல் வந்ததுன்னு  அந்தப்  படத்தின் சில காட்சிகளை வீடியோவாக் காமிச்சாங்க.  இதே பெயரில் ஒரு இசைக்குழு இருக்காம். அந்தப் பாட்டுகளையும் போட்டுவிட்டாங்க. பயணம் போரடிக்காம இருக்கணுமேன்னு அவுங்க கவலை அவுங்களுக்கு.  ஒரு பை நிறைய ஆடியோ, வீடியோ ஸிடிக்கள் !!

அடுத்த காமணியில் வில்லியம்ஸ், அரிஸோனா ரூட் சிக்ஸ்ட்டிசிக்ஸ்.  சின்ன டௌன். ஒரு மணி நேரம் இங்கே. பகல் சாப்பாட்டை இங்கேயே முடிச்சுக்கணுமாம். ஆச்சு.  உருளையே தின்னு உடம்பைக் காப்பாத்திக்கப்போறேனோ!!!









லஞ்சு முடிச்சுக்   கிளம்புன ஒரு மணி நேரத்தில் கனவு நினைவாச்சு!   இதோ  க்ராண்ட் கேன்யன் நேஷனல் பார்க் உள்ளே நுழையறோம். பார்க் ரேஞ்சர் அலுவலகம் எல்லாம் கேட்டாண்டையே இருக்கு!  அங்கேயே  நுழைவுக் கட்டணத்தைக் கட்டிடணும். எவ்வளவுன்னு தெரியலை. எல்லாம் டூர் பேக்கேஜில் சேர்த்தி.  உள்ளே போகுமுன் வரைபடம், தகவல்கள் எல்லாம் அடங்கிய (கையேடு?) ப்ரோஷரைக் கொடுக்கும்போது மட்டும் எந்தெந்த மொழியில் வேணுமுன்னு  காட்டாங்க.  அஞ்சு இட்டாலியன், ஒரு ஸ்பானிஷ், ரெண்டு இங்லீஷ்னு  இன்க்ரிட் சொன்னாங்க.  அதுக்கப்புறம் ஒவ்வொரு இடத்திலும் நாங்களே சொன்னோம் :-)
வாங்க உள்ளே போய் சுத்திப் பார்க்கலாம்....


தொடரும் ... ...  :-)

20 comments:

said...

இவ்வளவு பிரம்மாண்டமான ஹால் போன்ற இடங்களில் ஆளே இல்லாமல் காலியாக இருந்தால் உலகிலிருந்து புறக்கணிக்கப் பட்டது போலத்தோன்றும்! நிறைய ஆள்களுடன் இருந்தால் மழைக்கு ஒதுங்கியது போல இருக்கும். ஆக ஒட்டாது!(எனக்குச் சொன்னேன்!) படங்கள் அழகு.

said...

இடங்கள் பிரமாதம். கமர்ஷியல் என்ற நினைவு இந்த அமெரிக்கப் பயணத்தைப் பற்றிய இடுகைகளைப் படிக்கும்போது வருகிறது. தொடர்கிறேன்.

ஸ்ரீராம் - அமெரிக்காவில் எல்லாமே பிரம்மாண்டம், சௌகர்யத்தை அடிப்படையாக வைத்தது. அங்க உள்ள காரே ரொம்ப சௌகர்யமா இருக்கும். நம்ம ஊர் நானோவுக்கெல்லாம் அங்க வேலையே இல்லை.

said...

Grand Canyon state my home state ,

said...

சுத்திப்பார்க்க நாங்க ரெடி

said...

அமெரிக்காவோ, இந்தியாவோ நெல்லை, இதுபோன்ற இடங்களின் என் பொதுவான அபிப்ராயம் அது!

said...

அமெரிக்காவோ, இந்தியாவோ நெல்லை, இதுபோன்ற இடங்களின் என் பொதுவான அபிப்ராயம் அது!

said...

பிரம்மிக்க வைக்குது

said...

//பொட்டி தூக்கிக்கிட்டுப்போற லேடியும் அத்தான் அத்தான்னு என்னைவிடச் சத்தமாக் கூப்பிடறாங்க :-)//

அண்ணாவுக்கு வெளிநாட்டுல ஒரு மச்சினிச்சி கிடைச்சுட்டா :-)))

said...

வீடியோவே தேவ்கயில்லை. அருமையான வர்ணிப்பு. அத்தான் அருமை. நன்றி.

said...

வாங்க ஸ்ரீராம்.

இந்த ஹாலைச் சொல்றீங்களே.... இதுகூட கமர்ஸியல்... இடம்.

எங்கூர் பப்ளிக் ஹாஸ்பிடலில் பார்க்கணும்.... தேவையே இல்லாமல்.... ஹோ.....ன்னு பரந்து விரிஞ்சு போகும் வெற்று ஹால்களைப் பார்க்கணுமே......

எனக்கு வயிறு எரியும்.....

சென்னையில் ஜி ஹெச் பார்த்துருக்கீங்களா? கால் வைக்க இடமில்லாமல் கட்டிலைச்சுற்றிக்கூட பாய்கள் போட்டு படுக்க வச்சுருப்பாங்க நோயாளிகளை.... :-(

said...

வாங்க நெல்லைத் தமிழன்!

நீங்க சொன்ன அத்தனையும் ரொம்பச் சரி!
!

said...

வாங்க தெய்வா.

உள்ளூர்காரர், நீங்கதான் !!

தவறான தகவல் எதாவது பதிவில் இருந்தால், தயங்காமல் எடுத்துச் சொல்லுங்க.....

said...

வாங்க விஸ்வநாத்,

தண்ணி பாட்டிலைக் கையில் எடுத்துக்குங்க.... !

said...

@ ஸ்ரீராம்.

எந்த சமாச்சாரமா இருந்தாலும் அவரவருக்கு ஒரு தனிக் கருத்து இருக்கத்தான் செய்யும். நோ ஒர்ரீஸ் !

said...

வாங்க ராஜி.

வருகைக்கு நன்றி ! தொடர்ந்து வருகை தரணும், நீங்க. பிரமிக்க இன்னும் ஏராளமானவை இருக்கு !!!

said...

வாங்க சாந்தி!

உங்க அண்ணனின் 'புதிய மச்சினிச்சி' இப்பவும் என்னோட (மட்டும்) தொடர்பில் இருக்காங்க. அண்ணனுக்கு இது தெரியாது :-)

said...

வாங்க டாக்டர் ராஜன்.

'கண்டதை' எழுதறேன் :-)

said...

அத்தான் அத்தான்..., ஹாஹா.... நல்ல காமெடி.

தொடர்கிறேன்....

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

கோபாலுக்குத்தான் புது மச்சினிச்சி கிடைப்பது ஜஸ்ட் மிஸ் ஆகிப்போச்சு :-)

said...

துளசிதரன்: சூப்பரா இருக்கிறது படங்கள் எல்லாம்...தொடர்கிறோம்

கீதா: அத்தான் அத்தான் ஹா ஹா ஹா ஹா...நீங்க கன்டினியூ பண்ணிருக்கலாமோ அத்தான் பாட்டை அப்படி அங்க பரப்பினா மாதிர்யும் இருக்குமே ஹா ஹா ஹா நல்ல காமெடி..

படங்கள் எல்லாம் ரொம்ப அழகு!!! செமையா இருக்கு...