Sunday, February 11, 2018

க்ராண்ட் கேன்யன்....... (@அமெரிக்கா.... 4)

ஒரு பத்தொன்பது  வருசத்துக்கு முந்தி 'மேலே' இருந்து  பார்த்தது முதல்,  ஒருநாள் இங்கே வரணுமுன்னு நினைச்சது இன்றைக்கு லபிச்சது.  நதிகளுக்குத்தான் எவ்ளோ ஆற்றல் பாருங்க.....    கல், பாறை எல்லாத்தையும் துளைச்சுருது இல்லே?  கொலராடோ நதியின் வேலைதான் இந்த கேன்யன் என்னும் பள்ளம்/ பள்ளத்தாக்கு.... (சரியான சொல்லா?)
இருநூத்தி எழுபத்தியேழு மைல் நீளமாம்!  அகலம்.... அவ்ளோ ஒன்னும் அதிகமில்லை.... பதினெட்டு மைல் !!!   கீழே கிடுகிடுப் பள்ளம் ஒரு மைல் ஆழத்துக்குப் போகுது.....
மைல் கணக்கு இப்பெல்லாம் சட்னு  புரியறதில்லைப்பா.....   கையேட்டில் 446 கிமீன்னு  போட்டது நல்லதாப் போச்சு.  அப்ப.... சென்னையில் இருந்து  கிட்டத்தட்ட மதுரை ! அம்மாடியோவ்....

இவ்ளோ நீளம் இருக்கேன்னு  நினைச்ச இடத்துலே பார்த்துட முடியாத வகையில் இதுக்கான சாலைகளை அமைச்சுருக்காங்க.  சாலையில் போகும்போது    பல இடங்களில்  கேன்யனின்     அந்தாண்டை  மேல் பக்கம், கட்டைச் சுவராட்டம் நீளமாத் தெரியுது. அதுக்கும் அந்தாண்டை எப்படி இருக்கும்?  சுவராவே நிக்குமா, இல்லை அப்படியே சரிஞ்சு இறங்கும் நிலப்பகுதியா?   க்யா மாலும்?  ட்ரோன் ஒன்னு இருந்தால் அனுப்பி வச்சுருக்கலாம். ஆமாம்.... ட்ரோன் அதிகப்பட்சமா  இருவது மைல் போகுமா?

பிரமாண்டமான ஏரியா என்பதால் க்ராண்ட்ன்னு சேர்த்துச் சொல்றாங்க போல! பார்க்க பிரமிப்பாவும், அட்டகாசமா இருப்பதாலும்  க்ராண்டா இருக்குன்னு க்ராண்ட் சேர்ந்துருக்கலாம் :-)

செம்மண் பாறையையும் நிலத்தையும் அரிச்சரிச்சு,  வரிவரியா  குறுக்கு வெட்டுத் தோற்றம் காமிச்சுக்கிட்டு இருக்கு......   பார்க்கப் பார்க்க ஆசையும் அடங்கலை, பிரமிப்பும் அடங்கலை.....

மணி மத்யானம் ஒன்னரை.... மொட்டை வெயில்,  காய்ஞ்ச பூமி,  நிழலுக்கு அங்கங்கே இயற்கையா வளர்ந்த (!) காட்டு மரங்கள் இருக்குன்னாலும் ................  ஸ்ஸப்ப்பா..........

பாதுகாப்புக்கு அங்கங்கே  கம்பிவலைத்தடுப்பு போட்டு வச்சுருக்காங்க. ஆனாலும்.... ரொம்பக்கிட்டப் போய் எட்டிப் பார்க்க தைரியம் வரலை....  வெவ்வேற இடத்துலே  வெவ்வேற  விதத்தில் மக்கள் போய்ப் பார்க்க  ஏற்பாடுகள் இருக்கே இந்த மொத்த நீளத்துக்கும்.  கண்ணாடித் தரையில் நடந்து போய் கீழே(யும்) பார்க்க ஸ்கைவாக் அமைப்பு கூட இருக்கு.   இதுக்குன்னே குட்டி விமானம், ஹெலிக்காப்டர் னு  பலதரப்பட்ட டூர் பேக்கேஜுகள்  வச்சுருக்காங்க. நம்ம டூரில் ஸ்கை வாக் பக்கம்  இல்லை. இயற்கையோடு இயற்கையா காலால் நடந்து போய்   கண்ணால் கண்டு களிக்கணும். 
நமக்கு மூணு மணி நேரம் டைம் கொடுத்தாங்க.  காலையில் கிளம்புனது முதல் ஒவ்வொரு நிறுத்தத்துலேயும் இவ்ளோ நேரம்னு  சொன்னதைக் கொஞ்சம் கூடத் தவறாமக் கடைப்பிடிச்சு இதுக்குள்ளேயே நல்ல பெயர் வாங்கிட்டோம் நாங்க  எட்டுப் பேரும் :-)

கண் விரியப் பார்த்துக்கிட்டே  வலப்பக்கம் போனா அங்கே ஒரு  வாட்ச் டவர். சட்னு எனக்கு  'டவர் ஆஃப் சைலன்ஸ்' ஞாபகம் வந்துச்சு.

ஹாங்ங்......   சொல்ல மறந்துட்டேனே....   கிளம்புன  நேரம் முதல் அங்கங்கே கருடன்கள்  பார்வையில் பட்டுக்கிட்டே இருக்காங்க.  பெருமாள் கூடவே வர்றார், கருட வாஹனத்தில்!  இதைப்பற்றி நெருங்கிய தோழியிடம் சொன்னப்ப, 'இது அமெரிக்கா....  பருந்து இல்லாத இடமில்லை'ன்னு சிரிச்சாங்க :-)  எங்கூரில் பருந்து/கருடனை இதுவரை பார்த்ததே இல்லையாக்கும்....... (இப்ப எங்கூர்னு சொல்றது நியூஸியை)  ஒரு காலத்துலே இருந்து இப்போ முழுசாவே அழிஞ்சு போன இனத்தின் பட்டியலில் சேர்த்துட்டாங்க.
நிறைய அணில்கள் ஓடியாடுதுங்க.  எனக்குப் பிடிக்கும் !  இங்கே நியூஸியில் அணில் கிடையாது :-(
இப்படிக் காலில் விழுந்து வணங்கிக் கேட்டால் நான் என்ன செய்யறது?  எதுவும் தீனி கொடுக்கக்கூடாதுன்னு ரூல்ஸ் இருக்கே....    பிச்சை எடுக்கும் வழக்கம் வந்துருமாம்....   தன் சாப்பாட்டைத் தானே தேடித் தின்னுக்கணுமுன்னு  (அதுகளுக்கு) புத்திமதி  சொல்லுது சட்டம்.
ஒருபகுதியில் இந்தியர்களின் வெவ்வேற குழுக்களின் பெயர்கள்  தரையில் இருக்கும் வட்டச் சக்கரத்தில் போட்டுருக்காங்க. இங்கே இந்தியர்கள்ன்னு சொன்னால்... அது செவ்விந்தியர்கள். நாம் இல்லை.  இந்தியாவைத் தேடிக்கிட்டு வந்து இங்கே ஒதுங்குன வெள்ளைக்காரன்,  இங்கத்துப் பழங்குடிகளை இந்தியர்ன்னும், இந்த இடம் இந்தியான்னும் நினைச்சுக்கிட்ட சமாச்சாரம் தெரியும்தானே?   அப்புறம் அசல் இந்தியாவையும் இந்தியர்களையும்  பார்த்துட்டு,  இவுங்களை  செவ்விந்தியர்னு சொல்லிட்டாங்க. (ஓ.... அப்ப  இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இப்படி ஒரு  பந்தம் இந்த ஐடி காலத்தால் வரலை! 526 வருசத்துக்கு முன்னாலே ஏற்பட்டுப்போச்சு !  (1492-  கொலம்பஸ் )
விஸிட்டர்ஸ் சென்டர் கட்டடத்துக்குள் போறோம்.  விலாவரியா வரலாறு  இருக்கு. கேன்யனுக்குள்ளே  இறங்கினால் குகைகள் கூட இருக்காமே!
அதலபாதாளத்துலே ஆறு இன்னும் ஓடிக்கிட்டுத்தான் இருக்கு!  அதோ.....

ஓரமாவே நடந்து அந்த டவருக்குப் போனோம். பார்வையாளர்கள் பாதுகாப்புக்குப் போட்டுருக்கும் வேலி  எல்லா இடத்திலும் கிடையாது.  கொஞ்சம் கீழே இறங்கிப்போக வழி இருக்கும் இடங்களில்தான் கம்பித்தடுப்பு. கொஞ்சம் கவனமாப் பார்த்துத்தான் போகணும்.  மண்தரை மேடும் பள்ளமுமா, மரங்களின் வேர்கள் அங்கங்கே நீட்டிக்கிட்டும்....ஏகாந்தமா இருக்குமிடத்தில் உக்கார்ந்து, சின்னதா ஒரு தியானம். பார்க்க அனுகிரஹம் செஞ்ச பெருமாளுக்கு நன்றி சொல்லிக் கைகூப்பும்போது   கருடன் வந்தார்!
வட்டமா கட்டி இருக்கும்  கோபுரத்துக்குள் நுழைஞ்சோம். உள்ளே மாடியெல்லாம் இருக்கு மேலே போக.  தலைக்குமேல் இருக்கும் விதானம் எல்லாமே  மரக்கட்டைகளையே வளைச்சுச் செஞ்சுருக்காங்க. இப்படி இதுவரை நான் பார்த்ததே இல்லை!!!
மொத்தம் நாலு மாடி. 1932 வது வருசம் கட்டுனதாம்!  விளக்கமா எழுதி வச்ச விளக்கத்தை க்ளிக் செஞ்சுக்கிட்டேன்.
வட்டவட்டமா மேலேறும் படிகளில் போய்ப் பார்க்கத்தான் வேணும்.  பழங்கால சித்திரங்கள் அழகு!

மேலே மொட்டைமாடி....  கடவுளைத் துதிக்க !  பெருமாளே..... எத்தனை கோடி இன்பம் வைத்தாய்....
நம்ம கெடு (மூணு மணி நேரம்) முடிவுக்கு வருதுன்னு  கார்பார்க்கைத் தேடி ஓடுனோம்.
  பாவம்.....   நம்ம கெமெராவுக்குக்கூட கண் வலிச்சுருக்கும். 897 படங்கள். மொட்டை வெயில் என்பதால்  படங்கள் கொஞ்சம் வெள்ளையடிச்சுக் கிடக்கு.
இந்த இடம் என் விவரிப்பு எல்லைக்கு அப்பாற்பட்டது..... கண்ணால் பார்க்கணும்..... பார்த்து அனுபவிக்கணும்....  செம்மண் பூமின்னு அப்படியே விட்டுற முடியாது....
முப்பத்துமுக்கோடி தேவர்கள் கண்ணாமூச்சி ஆடக் கடவுள்  படைச்ச  இடம்!  யாராலும் யாரையும் கண்டே பிடிக்க முடியாது இல்லே!!!
அடுத்த  அரைமணியில் கேமெரொன், அரிஸோனா.  மோட்டலுடன்  பெரிய கடை ஒன்னு!  நினைவுப்பொருட்கள், உள்ளூர்   இந்தியர்களின் கைவினைப்பொருட்கள்  இப்படி ஏராளம்...... 

ரசிச்சுப் பார்த்ததோடு சரின்னு இருக்க முடியுதா?   நம்மூர் ராஜாக்கல் (சன் ஸ்டோன்)  ஒன்னு ஆப்ட்டது.  நம்ம  சீனிவாச ஆச்சாரிக்கிட்டே கொடுத்து  பென்டன்ட்டா செஞ்சுக்கலாம். சின்னக்குழந்தையா இருந்தப்ப இதே போல ஒரு செட் போட்டுருந்தேன்.  அந்த ஞாபகத்துக்குத்தான் வாங்குனேன்.... :-)

அப்புறம்  கால், கை வலின்னு  ஒருசமயம் உள்ளூர்த் தோழி ஒருவருடன் பேசிக்கிட்டு இருந்தப்ப, செம்பு வளையல்/வளையம் ஒன்னு போட்டுகிட்டால் கைவலி வராதுன்னாங்க. உடனே நம்பிட்டேன்:-)  இங்கே செம்புக் காப்பு பார்த்ததும் விடமுடியுமோ?  கொஞ்சம்  விலை கூடுதல்தான். ஆனால் கை கால் வலிக்கு வைத்தியம் செஞ்சுக்கணுமா இல்லையா?  இது வெறும் செம்பா இல்லாம  வெள்ளி, தங்கம், செம்புன்னு மூணு பிரிநூல் போல இருக்கே!  நேடிவ் இன்டியன் செஞ்சதாமே! ஏர்ப்போர்ட்லே கழட்டறதும் ஈஸி :-)

    இந்தக்   கடையில்  அரைமணி  எங்களை சுத்த விட்டாங்க.

அடுத்த ஒன்னரை மணி நேரத்தில் லேக் போவெல் போய்  க்ளாரியன் இன் னில் செக்கின் ஆச்சு. முதல் வேலையா வைஃபை பாஸ்வேர்ட் வாங்கிக்கணும் :-)   கலி காலம்.....

சின்ன ஓய்வுக்குப்பிறகு (ஏழரை மணிக்கு)  சாப்பாட்டைத் தேடி  கொஞ்ச தூரம் நடந்து ஒரு ஷாப்பிங் ஏரியாவுக்குள் போனோம்.  நம்ம ஹொட்டேலுக்கு எதிர்வாடையில் முக்குலேயே எதோ பார்ட்டி போல....  சுட்டுத்தின்னுக்கிட்டு இருக்காங்க கூட்டமா.... இது நமக்கானது இல்லையாக்கும்.


ஷாப்பிங் ஏரியாவில் ஒரு சூப்பர் மார்கெட்.  தினமும்  சூப்பர் மார்கெட் போற ஆளாச்சே நான்....   எங்கே மறந்துடப்போகுதோன்னு உள்ளே போய்  என்னென்ன கறிகாய் கிடைக்குது இங்கேன்னு பார்த்துக்கிட்டேன்.  நமக்கும் பயணத்துக்காக கொஞ்சம் சிறு தீனிகள், பழங்கள் வாங்கிக்கிட்டு வெளியே போனதும் கண்ணில் பட்டது தாய்!  'தாயில்லாமல் நானில்லை. சோறில்லாமல்  வாழ்வில்லை' !

அறைக்குத் திரும்பும் போது..... மணி ஒன்பதரை.  ஒரு ஷவர் எடுத்துக்கிட்டு நல்லாத் தூங்கணும்.  காலையில்  கிளம்பணுமே!

    PINகுறிப்பு: கொஞ்சம் படங்களை ஒரு ஃபேஸ்புக்   ஆல்பத்தில் போட்டு வச்சுருக்கேன். நேரம் கிடைக்கும்போது எட்டிப் பாருங்க :-)  ப்ரிவ்யூ பார்த்தால்  சரியா வரலைன்னு கீழே சுட்டி கொடுத்துருக்கேன். 

https://www.facebook.com/media/set/?set=a.10211594397238067.1073741913.1309695969&type=1&l=d074deada8


தொடரும்......... :-)


18 comments:

said...

சண்டே ஸ்பெஷல்னு வச்சுக்குங்க.

நாளைக்குத் துளசிதளத்துக்கு லீவு :-)

said...

இவ்வளவு தைரியமான அணில்களா? அசைவு தெரிந்தாலே ஓடிவிடும் அணில், காலுக்குப் பக்கத்தில் வந்து கைநீட்டுகிறதே!

// நன்றி சொல்லிக் கைகூப்பும்போது கருடன் வந்தார்!//

ஹி...ஹி....ஹி ..

பிரமிக்க வைக்கும் இடம். அழகிய படங்கள்.

said...

கிரேன்ட் கேன்யானைப் பற்றி கேள்விப்பட்டிருந்தாலும், ஏற்கனவே படங்கள் பார்த்திருந்தாலும், இந்த இடுகையைப் படித்தாலும், அதன் பிரம்மாண்டம் புரிந்துகொள்ள முடியவில்லை.

ஆனால் உங்கள் படங்கள் அழகாக இருக்கு. (கேன்யான் முன்னால் உங்கள் படத்தைத்தான் காணோம். கோபால் சார் எடுக்கலையா? நான் வெட்கமில்லாமல் யாராவது இருந்தால் அவங்களை என்னை போட்டோ எடுக்கச் சொல்லிவிடுவேன்)

said...

வாங்க ஸ்ரீராம்.

மனுஷ இனத்தைப் பார்த்துப் பார்த்துப் பழக்கப்பட்ட அணில்கள் !

பாவமாத்தான் இருக்கு! அந்தப் பொட்டல் காட்டில் என்ன கிடைக்கும் அதுகளுக்கு..... ப்ச்...

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

ஸீயிங் இஸ் பிலீவிங் வகை!

படத்துலே பார்க்கறது நானூறு கிலோமீட்டருக்கும்மேலே போய்க்கிட்டெ இருக்குன்றதைக் கற்பனை செஞ்சுகூடப் பார்க்க முடியாது!!!

பதிவின் கடைசியில் ஆல்பத்துக்கு ஒரு சுட்டி இருக்கு பாருங்க. ஃபேஸ்புக் ஆல்பம்தான். அதுலே என் படங்களும் ஐ மீன் நான் இருக்கும் படங்களும் இருக்கே :-)

said...

எனக்கு இதுல வியக்கவைப்பது என்னன்னா, ஆறுகளை மாசு படாமல் (தெய்வத்துக்கு நிகரா நாம சொல்லிக்கிட்டே, முடிந்த அளவு அவைகளை மதிக்காமல் மாசுபடுத்துவோம்... நம்பிக்கை என்ற பெயரில்) பாதுகாக்கறாங்க. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளை இந்த விஷயத்தில் பாராட்டணும்.

படங்களையும் பார்த்தேன். கிளிப் போட்டிருக்கீங்களா?

said...

கிராண்ட் கன்யான் இயற்கையின் சாதனை பார்க்க ஆசை முடியுமா

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

ரொம்ப நடக்க வேண்டியதில்லை. ஈஸி ஆக்செஸ்தான்.

உங்கள் ஆசை நிறைவேற எம்பெருமாளிடம் வேண்டிக்கறேன்.

சந்தர்ப்பம் கிடைச்சால் விட்டுடாதீங்க.

said...

என் இரு வார வெளியூர்ப் பயணத்திறகுப் பின் இன்று உங்கள் பதிவினைக் கண்டேன். வரலாறு, தொல்லியல், இயற்கை ரசனை, ஆன்மீகம் என்ற பல நிலைகளில் தங்களின் பதிவினை ரசித்தேன். பாராட்டுகள்.

said...

அருமை நன்றி தொடர்கிறேன்

said...

ஒரு சின்ன இடைவெளியாகிப் போச்சு. வந்து பாத்த திவ்யதேசம் முடிஞ்சி டாலர்தேசம் நடந்துக்கிட்டிருக்கு. அருமை.

நான் போயும் சரியாகச் சுத்திப் பாக்காத நாடுன்னா அது அமெரிக்கா தான். வாஷிங்டன் டிசி + பென்சில்வேனியா ஸ்கீயிங் மட்டுந்தான் பாக்க முடிஞ்சது. நயாகரா கூடப் பாக்கலை. மத்த நாடுகள்ள தனியாகப் பயணம் போகலாம். அமெரிக்கால அப்படி முடியாது. உள்ளூர்ல யாராவது இருந்து கூட்டீட்டுப் போனாத்தான் சரியா வரும். அப்படி நம்மளைக் கூட்டிட்டுப் போய் சுத்திக்காட்ட யாருமில்லை அமெரிக்கால. இல்லைன்னா கூட்டமாகப் போகனும். பாப்பம். அமெரிக்கா கூப்புடுதான்னு.

சென்னைல இருந்து மதுரை வரைக்கும் உள்ள எடத்தை இப்படி ஆக்கியிருக்கே இயற்கை. ஓடும் தண்ணியோட வேகத்துல எல்லாம் அரிச்சிக்கிட்டுப் போயிருக்கு. அடேங்கப்பா. மலைப்புதான்.

விலங்குகளுக்கு நம்ம எதுவும் கொடுக்காம இருப்பது நல்லது. இல்லைன்னா நம்மளைப் போல செயற்கை ருசிக்கு அடிமையாயிரும்.

said...

வாவ்., இயற்கை வடித்த ஓவியம். க்ராண்ட் ஆக இருக்கு. உங்கள் மூலம் நாங்களும் பார்க்கிறோம்.

said...

@நெல்லைத் தமிழன்.

க்ளிப் இல்லை. பேட்டரி சீக்கிரம் தீர்ந்து போயிருதுன்னு படங்கள் மட்டுமே! சில சமயம் பனோரமா எடுப்பதுண்டு.

எங்கூரில் இருக்கும் ஏவான் ஆறு வளைஞ்சு நெளிஞ்சு ஊருக்குள்ளே எல்லாம் சுத்தோ சுத்துன்னு சுத்திட்டுத்தான் கடலுக்குப் போகும். பளிங்குமாதிரி தண்ணீர்தான். அழுக்கோ, குப்பையோ கூட இருக்காது.

இந்தியாவில் மட்டும் சுத்தம் சோறு போடுமுன்னு சொல்லிக்கிட்டே அசுத்தமா வச்சுருப்பாங்க :-(

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

இதுதான் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வர்றதுங்கறது :-)

நன்றிகள் !

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி.

said...

வாங்க ஜிரா.

தனியா சுத்தலாம். பிரச்சனை இல்லை. ஆனால் கூட ஒருத்தர் இருந்தால் பேச்சுத் துணைக்காச்சு :-)

எந்தப் பயணமுமே.... அதுவாத்தான் அமையணும். நாம் எத்தனைதான் முயன்றாலும்.... வேளைன்னு ஒன்னு வரணும்தானே?

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

இயற்கைக்கு மிஞ்சி வேறெதுவும் உண்டோ? சர்வ வல்லமை படைத்தது அல்லவா!!

வருகைக்கு நன்றி!

said...

அணில் அழகா இருக்கு!! அட பக்கத்துல வந்து கை நீட்டுது!! ஆச்சரியம்...ரொம்ப க்யூட். அங்குள்ள அணில்களுக்கு மூனு கோடு கிடையாதே!!அங்குள்ளதுங்க தான் ஸ்க்யுரில்..நம்மூர் சிப்மங்க்!!

க்ரான்ட் கன்யொன் அழகு செமையா பிரம்மாண்டமா இருக்கு..மரமே இல்லை...பாலையாச்சே!! பள்ளத்தைத் தாக்கி ஆறுகள் ஓடுறதுநால பள்ளத் தாக்கு!!! ஹிஹிஹிஹி...ஆனால் எல்லா பள்ளத்தாக்குலயும் ஆறு இருக்கா என்ன? படங்கள் எல்லாம்.சூப்பர்..துளசிக்கா. அதுவும் பள்ளத்தாக்கு செம...தொடர்கிறோம்...

கீதா