Friday, February 16, 2018

டைம் மெஷீன்லே ஏறிப்போய் ராமனையும், க்ருஷ்ணனையும் பார்த்தேன் ! (@அமெரிக்கா.... 6)

போற வழியிலே  பந்து விளையாடும் பொமரேனியன் கண்ணில் பட்டது. நம்ம   ரஜ்ஜு நினைப்பு வந்தது உண்மை. பாவம்.... எப்படி இருக்கோ....
அமெரிக்காவில் இத்தனை வகை கேன்யன்கள் இருக்குன்றதே இப்பத்தான் தெரிஞ்சுக்கிட்டேன். எனக்குத் தெரிஞ்சதெல்லாம் / தெரிஞ்சு வச்சுக்கிட்டதெல்லாம் க்ராண்ட் கேன்யன் மட்டும்தான், இதுவரை.   ரொம்ப முக்கியமானவையா பதிமூணு  இருக்காமே!!!

இந்த அரிஸோனா, உடா மாநிலங்களில்தான்  முக்கால் வாசியும்!  அடடா... தெரிஞ்சுருந்தால் இன்னும் கொஞ்சம் பெரிய டூர் பேக்கேஜ் எடுத்துருக்கலாமே....
ப்ரைஸ் கேன்யனுக்குள் நுழைஞ்சதும்,  மூணு மொழிகளில் கையேடு கொடுத்துட்டாங்க. அஞ்சு இட்டாலியன், ஒரு ஸ்பானிஷ், ரெண்டு இங்லிஷ் :-)

நமக்கு இங்கே ஒன்னரை மணி நேரம் டைம் கொடுத்தாங்க  நம்ம  இன்கிரிட்.     இப்பவே மணி  மூணே முக்கால்.  அஞ்சேகாலுக்கு வண்டிக்கு வந்துடணும்.
நீங்க போய்ப் பாருங்கன்னு சொல்லிட்டு அவுங்க அங்கேயே ஒரு பெஞ்சுலே உக்கார்ந்துட்டாங்க. இங்கேயும்  அணில்களுக்குத் தின்னக்கொடுக்காதேன்னு  படம்....
ஆனாலும் அதுகள் வரத்தான் செய்யுது...  நட்ஸ் கொடுக்கலாம்தானேன்னு   இன்கிரிட் வச்சுருந்த நட்ஸ்லே இருந்து  ஒரு பாதாம் எடுத்துக் கொடுத்தால் பவ்யமா வாங்கித்தின்னுச்சு ஒரு செல்லக்குட்டி.
இன்கிரிட்  கொஞ்சம் என்னப்போலன்னு சொல்லலாம்.  ஹீலிங் க்றிஸ்டல்ஸ் எல்லாம் வச்சுருக்காங்க. அதைக் கையில் வச்சுக்கிட்டு தியானம் செய்வாங்களாம்.

 உடனே கிறிஸ்டல்களை எப்படி சுத்தப் படுத்தணுமுன்னு  சொன்னேன். நம்ம பயன்படுத்தும்போது 'அதில் சேரும் எதிர்மறை எண்ணங்களை'  நீக்கப்   பாலில் கழுவி எடுத்து பின்னே நல்ல தண்ணீரில் போட்டு அலசி எடுக்கணும். இல்லைன்னா உப்புத்தண்ணீரில் போட்டு வச்சு கொஞ்ச நேரம் கழிச்சு எடுத்துத் துடைக்கலாம்.  ஆனால் உப்புப் படிஞ்சு சிலசமயம் வெள்ளையா அங்கங்கே தெரியும் என்பதால்  சுத்தமான குளிர்ந்த தண்ணீரில் போட்டு எடுக்கணும்.  சில வகைகளை வெய்யிலில் வச்சு எடுக்கலாம். சில கற்களை நிலா வெளிச்சத்தில்வச்சு எடுக்கலாம்.

சொல்லச் சொல்ல சந்தோஷமா கேட்டு வச்சுக்கிட்டாங்க. சரியான ஆளிடம் கேட்ட  மகிழ்ச்சியாமே!!!  தியானம் பண்ண விட்டுட்டு நாங்க கிளம்பினோம்.
இங்கே சூரிய உதயமும், அஸ்தமனமும் ரொம்பவே  விசேஷமாம்! ரெண்டுமே நமக்குக் கிடைக்காதே....  ப்ச்....
ரொம்பவும் உயரமான பகுதி.....  எட்டாயிரம் அடி உசரத்தில் இருக்கோமாம்!  சரி...  பார்க்குக்குள் அங்கே இங்கேன்னு போய்  பார்க்க ஷட்டில் சர்வீஸ் இருக்கு. இலவசம்தான்.  நமக்குத்தான் நேரம் இல்லை. ஒரு முழுநாள்  வேணும்......
1928 ஆம் வருஷம்தான் இதை நேஷனல் பார்க் பட்டியலில் கொண்டுவந்துருக்காங்க. ரொம்ப பெருசுன்னு சொல்லமுடியாது, ஆனாலும் பெருசுதான்...........   90 சதுர மைல்னு ஒரு குறிப்பு. பதிமூணு வியூ  பாய்ன்ட் இருக்குன்னும், மூணு மணி நேரமாவது குறைஞ்ச பட்சம் வேணுமுன்னும் சொல்லி இருக்காங்க....
அடராமா..... நமக்கு வெறும் ஒன்னரை மணி நேரம்தான் கிடைச்சுருக்கேன்னு   கேன்யனை நோக்கிப்போறோம்.
கூட்டங்கூட்டமா  மக்கள்ஸ்  ஏன் சிலை போல நிக்கறாங்கன்னு பிரமிப்பு !   சிலை போல....   ஊஹூம்.... சிலையாகவே..... மக்களைப்போல இருக்கும் சிலைகள்!

கம்ப்யூட்டர் க்ராஃபிக்ஸ் கண்டுபிடிக்குமுன் இயற்கை இப்படி அடிச்சு ஆடியிருக்கு!  முப்பதோ, இல்லை நாப்பதோ மில்லியன் வருசங்களுக்கு  முற்பட்டதாம், ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க.  இவ்ளோ நாள் எப்படி அலுங்காமக் குலுங்காம நிக்குது!
கீழே பள்ளத்தாக்குலே போய்ப் பார்க்கவும் சின்னதா ஒரு ஒத்தையடிப்பாதை இருக்கு. சனம் போய் வருது. எனக்கும் ஆசைதான். இறங்கிடலாம்.  அப்புறம் மேலே ஏறி வர்றதுக்கு  ஹெலிக்காப்டரில் இருந்து ஏணி தொங்கவிட ஏற்பாடு பண்ணிக்கலை, பாருங்க.....
நம்ம குழுவில் இருக்கும் ஸ்பானிஷ் பெண் நேதா, கீழே இறங்கிப் போறாங்க. சின்ன வயசு. முடியும்.  போயிட்டு வாங்கன்னேன் :-)
கொஞ்சம் சின்ன வயசாவும், உடல்நிலை நல்ல ஆரோக்யமாவும் இருக்கும்போதே பயணம் போகணும். ஆனா.... என்னைப்போல பலருக்கும் கடமைகள், வீட்டுக் கடன்கள் எல்லாம் தீர்ந்தால்தானே பயணத்துக்கான காசு சேர்க்க முடியும், இல்லீங்களா?  ப்ச்.... அதான் ஒன்னு இருந்தால் ஒன்னு இல்லைன்னு.....

இங்கெ பல இடங்களில் வீல்சேர் வசதிகள் இருப்பதால் நடக்கவே முடியாதவர்கள் கூட   ஓரளவாவது   ஆசைப்பட்ட இடங்களைப் பார்க்க முடியுது! இப்பெல்லாம் மோட்டரைஸ்ட்  வீல் சேர் கிடைப்பதால்,  தள்ளச் சொல்லி யாரையும் சிரமப்படுத்த வேண்டியதில்லை என்பது ஒரு ஆறுதல்.

 எங்கூர்லே வீல்சேரோடு போறதுக்கு எல்லா பஸ்களிலும் வசதி உண்டு. அப்படியே போய் அப்படியே இறங்கிக்கலாம்.   நானும் ஒரு வீல் சேர் பார்த்து வச்சுருக்கேன். ஆனால்.... நம்மவர்தான் இப்போ இல்லைன்னுட்டார்  :-(


ஆனா... கீழே ஒன்னுமில்லை.... அழகெல்லாம் மேலேதான்.  வெள்ளையும், காவியுமா ரெண்டு நிறப் பாறைகள். பாறைன்னு கூட சொல்ல முடியாது. கட்டி மண்ணு மாதிரிதான். அதுலே ஒரே உயரத்துலே,  ஒரே டிஸைன்லே செதுக்கி வச்சுருக்கு.....  சாமி என்ற இயற்கை.... உயரம் மட்டும்தான் ஒன்னு போல.... முகம் வெவ்வேற....எனக்கு ராபர்ட் க்ளைவ் கூடத் தெரிஞ்சார் :-)  ரெண்டுபக்கமும் கத்தை முடி அலை அலையா தோள்பட்டை வரை இறங்குற படத்தை, சின்ன வயசு சரித்திரப் பாடப்புத்தகத்தில் (*** மன்னர் குளம் வெட்டினார், சாலைகள் அமைத்தார்........) பார்த்த நினைவு இன்னமும் மிச்சம் இருக்கே....
காணக்கிடைச்சதுக்கு நன்றி சொல்லி, சின்னதா தியானம் செய்யலாமான்னு ஒரு  பெஞ்சில் உக்கார்ந்தேன்.  எங்கே.... அதோ..... ராமர் பட்டாபிஷேகத்துக்கு சனம் கூடி நிக்குது!  இந்தாண்டை பார்த்தால் தசரதனும்,  அவன் மனைவியரும்.....
இன்னொரு இடத்தில்... யாரு  இது   தம்புராவோடு? அன்னமாச்சார்யார்தானே?
புத்தர்,  அப்புறம் சீன அம்மன் Guan Yin    (ஆரோக்யமாதா....)
கோகுலம்.... க்ருஷ்ணன்,  அவன் பரிவாரம்.....
கண் பார்க்கப் பார்க்க மனசுக்குள் யார் யாரோ.... இதிகாசத்துலே இருந்து  எழுந்து வர்றாங்க.....
அதோ  அங்கே பாருங்களேன்..... தாய்லாந்து கோவில் கூட இருக்கே!
இந்த சிற்பங்களை (??!!!) Hoodoos னு சொல்றாங்க. டிசைனர் தூண்கள் :-)
எனக்கென்னவோ தூணாகத் தெரியலை.....    மனசு என்ன சொல்லுதோ அப்படித்தான், இல்லே?
ரொம்ப நடக்க வேணாமுன்னா சின்னச்சின்னதா 'வாக்' இருக்கு. அதுலே ஒன்னில் போறோம்.
நண்பர்கள் ஐவர் ஒன்னு சேர்ந்து சின்னதா டூர் வந்துருக்காங்களாம்.  ஒருத்தர் படம் எடுக்க நாலு பேர் போஸ் கொடுத்துன்னு மாறி மாறி படங்கள் எடுத்துக்கிட்டு இருந்தாங்க.....  நம்ம சேவையை அவுங்களுக்கும் செஞ்சோம் :-)   எல்லோருக்கும் மகிழ்ச்சி.
நமக்குத்தான் ஸெல்ஃபி எடுத்துக்க முடியுதேன்னு பதிலுக்கு உதவி செய்ய வந்தவங்களிடம் சொன்னப்ப,    ஆமாம், நான் கவனிச்சென்னு சொன்னாங்க ஐவரில் ஒருவர் :-) அவுங்க அனுமதியுடன்  ஐவரையும் ஒரு க்ளிக் :-)
கொஞ்சம் பள்ளத்தில் பார்க்க  கம்பித்தடுப்போடு லுக் அவுட் பாய்ண்ட் போட்டு வச்சுருக்காங்க.  கெமெராவில் க்ளிக்கும்போது  Zoom  தயவால் ரொம்பவே கிட்டக்கக் கொண்டு வந்துட்டா,  மூஞ்சு முகம் சரியாத் தெரியறதில்லை. ஓரளவு தூரத்துலே இருந்தால்தான்    நாம்,  யார், எவர்னு கண்டுபிடிக்க முடியுது :-)

கல்லை மட்டும் கண்டால் கடவுள் தெரியாது......  இல்லேன்னா நாயைக் கண்டாக் கல்லைக் காணோம் கதைதான் :-)

ரெஸ்ட் ரூம் வசதிகள் எல்லாம் நல்லாவே இருப்பதால் நமக்கும் பயணத்தில் அல்லாட வேண்டியதில்லை  :-)
மேலே படம்: வண்டி நல்லா இருக்குல்லே!!!  Pillion லே ராணி மாதிரி உக்கார்ந்துக்கலாம் :-)


சொன்ன டைம் அஞ்சேகாலுக்கு வண்டிக்கு வந்துட்டோம். இத்தாலியக்குழு  கொஞ்சம் லேட் பண்ணிட்டாங்க.  இங்கிருந்து  கிளம்பிப்போனது கொஞ்ச  தூரத்தில் இருக்கும் ப்ரைஸ் டவுன் சொவீனிர் கடை. ரூபீஸ் இன் (Ruby's Inn) ஜெனரல் ஸ்டோர்.  இதை விட்டா இந்த ஏரியாவில் வேறொன்னுமே இல்லையாம் ! கடைக்கு வயசு நூத்தியொன்னு!

இதுக்கு வர்ற  வழியில்  ப்ரைஸ் கேன்யன் வாசலுக்குப் பக்கமா மான்கள் மேய்ஞ்சுக்கிட்டு இருக்குன்னு போற போக்குலே ஸாம் சொன்னதும், அவசரமா க்ளிக்குனதில் படம் சரியா  வரலை.  Pronghorn Deer வகை. ஆனா   பெரிய கேம்பிங் க்ரவுண்ட் மாதிரி தெரிஞ்ச இடத்தில்  செவ்விந்தியர்களின் குடில்வீடு (Teepee) அங்கங்கே இருக்கு.  எல்லாம் டூரிஸ்ட் அட்ராக்‌ஷந்தான்.
ரூபி இன்னில் செவ்விந்தியர்கள் செஞ்ச கைவினைப்பொருட்கள் மட்டுமில்லாம .... நம் இந்திய சமாச்சாரங்களும் கொட்டிக்கிடக்கு!  எல்லாம் ராஜஸ்தான் !  மார்பிள்ஸ். துளசிதளத்தின் அஞ்சுயானைகள் கிடைச்சது.  நிறம் மட்டும்தான்  வேற....  பார்க்கலாம்.... நிறம் மாத்த முடியுதான்னு....  :-)

கிருஷ்ணபருந்து சூப்பர்!  ஆனா.... வாங்கலை....   :-(


ஷாப்பிங் முடிச்சுட்டு எல்லோருமே ஏறக்கொறைய ஒரே சமயம் வண்டியாண்டை வந்துட்டதால்  ஒரு க்ரூப் க்ளிக்ஸ் கூட ஆச்சு :-)  ஸாம்  வண்டியைப் பூட்டிக்கிட்டு கடைக்குள் போயிருந்தவர், எங்களைக் கவனிச்சுட்டு  ஓடி வந்தார்.  அவருக்கும் படம் எடுத்துக்க வேணுமே :-)


ஒன்னரை மணி நேரத்தில் கனாப் டேஸ் இன் வந்து செக்கின் ஆச்சு.  வைஃபை இருக்கு என்பது மகிழ்ச்சி :-)  இங்கே ரெஸ்ட்டாரண்ட் இல்லை. வெளியில்தான் ராச்சாப்பாட்டுக்குப் போகணும்.

வெளியே இடது பக்கம் திரும்பினால் கொஞ்ச தூரத்தில் சாப்பாட்டுக்கடைகள் இருக்குன்னதும் நடக்க ஆரம்பிச்சோம்.  சாலையில் அவ்வளவா வெளிச்சம் இல்லை.  பேசாம ஒரு பீட்ஸாவுக்குப் ஃபோன் செஞ்சுருக்கலாம், இல்லே?
கொஞ்சம் கொஞ்சமா நடந்து போறோம். சின்ன டார்ச் கொண்டு வந்தோமேன்னால்.....  அது லாஸ்வேகஸ் ட்ராப்பிக்கானாவில் விட்டு வந்த பெட்டியில் இருக்காம்!   வழியில்  அங்கங்கே உணவுக்கடைகள், பார் வசதியுடன் இருப்பதால், கூட்டம் கூட்டமா  மக்களும், ஒரே இரைச்சலுமா....  ப்ச்....
பெட்ரோல் பங்க் டைனோஸாரஸ் :-)
லிட்டில் ஹாலிவுட்!

நடந்து நடந்து  மத்யானம் சாப்பிட்ட இடத்துக்கே  அதே ஹூஸ்டன்'ஸ் ட்ரெய்ல்ஸ் எண்ட்   வந்துருந்தோம்.  இப்போ கொஞ்சம் வேகவச்ச காய்கறிகள், ஸாலட், அப்புறம் உ.கி. வேறொரு ரூபத்தில் :-)

( கொஞ்சநஞ்சம் இளைச்சுருந்ததெல்லாம்  திரும்பி வந்துக்கிட்டு இருக்கே.....)

போகவர  ஒரு மைல் தூரம் நடந்துருக்கோம்.....  நாளைக்குக் காலையில் எட்டுக்குக் கிளம்பணும்.

இன்றைக்குக் கனவில் த்ரேதா யுகமோ, இல்லை த்வாபர யுகமோ வரத்தான் போகுது :-)

குட்நைட்  :-)

தொடரும்......


11 comments:

said...

பந்து விளையாடும் பொமரேனியன்... அட, ஆமாம்!

ஒரு அணிலை சோம்பேறியாக்கிட்டீங்க!!

மனிதச் சிலைகள் அற்புதம். கண்களின் காட்சியில் மனசின் கற்பனைகள் அபாரம்.

said...

அருமை நன்றி

said...

படங்கள் பிரமாதம். அங்கு இருக்கிற உணர்வையே ஏற்படுத்துகின்றன.

கோமதி அரசு அவர்கள் கிராண்ட் கேனியன் பக்கம் டூர் என்றால் நீங்கள் இங்கேயா?

அட்லாண்டாவில் முதுகில் ராமர் கோடு போடாத அணில்களைப் பார்த்தவனுக்கு இங்கு நம்ம ஊர் அணிலைப் பார்த்ததில் ஆச்சரியம்.

தொடர்கிறேன்.

said...

இயற்கை என்னும் ஓவியன் தீட்டிய ஓவியங்கள் பெரும் அழகு. மனிதன் இயற்கையின் கால்தூசுக்குக் கூட எதையும் உருவாக்க முடியாது. இப்போ இயற்கையை விழுங்கும் மனிதனை விரைவில் இயற்கை விழுங்கும். இயற்கையை மிஞ்சி எதுவுமில்லை.

இவ்வளவு ஒயரமா இருக்கே. இதுல அடியாழம் வரைக்குமா இறங்கிப் பாத்துட்டு வர்ராங்க? பலசாலிகள் தான். நல்ல உடலுரம்.

சுற்றுலா எடங்கள்ள கடைகள்ள அதையும் இதையும் பாத்தா வாங்குற ஆசை வந்துரும். வாங்கிட்டு வந்தப்புறம் ஒவ்வொன்னையும் பராமரிக்கிறது ஒரு வேலை. அதுக்கு ஏத்தமாறியான பொருட்களா வாங்குனா வசதி.

டீச்சர் போற எடமெல்லாம் ஆனைகள் வந்துருதே :)

said...

வானத்தில் உங்களுக்கு அது பொமரேனியன் போல ஆமாம் அப்படியும் தோணுச்சு. முதலில் பார்த்தப்ப நம்ம சிங்கை, இலங்கை சிங்கம் போலவும் தோனுச்சு..

அப்புறம் ஹையோ இதென்னப்பா நம்மூர் முனிவர்கள், ராஜாக்கள் அந்தக்கால ஆளுங்க எல்லாம் சாமிகள் எல்லாம் அங்க போயிட்டாங்க போல!! அப்படித்தான் எனக்கும் தோணூச்சு...நோ சான்ஸ்!! எம்புட்டு அழ்கா இருக்கு!! மனுஷன் சிலை வைச்சா மாதிரி இய்ற்கை எப்படிச் செதுக்கி வைச்சுருக்கு மண்ணுலதான்...பார்க்கணும்னு லிஸ்ட்ல போட்டாசு எப்ப கிடைக்குமோ வாய்ப்பு..

ஹை நம்மூர் அணிலும் அங்கு இருக்கு போலருக்கே!! கோடு போடாத அணில்தான் அங்க பார்த்திருக்கேன் அதுவும் ரொம்ப பெரிசா புஷ்புஷுனு இருக்கும் வால் எல்லாம்...

படங்கள் எல்லாம் அழகு துளசிக்கா...

கீதா

said...

வாங்க ஸ்ரீராம்.

பசிக்குதுன்னு சொல்லும் உயிருக்கு ஒரு பிடி 'சோறு' கொடுக்கலைன்னா.... அந்தப் பாவம் நம்மைச் சும்மா விடுமா?

said...

வாங்க விஸ்வநாத்.

நன்றி.

said...

வாங்க ஜீவி.

நீங்க பார்த்த அணில்கள்..... க்ருதயுகத்து வம்சாவளிகள். இப்ப நாம் பார்த்தவை.... ராமர் காலத்துக்குப்பின் யூ எஸ்க்கு மைக்ரேட் ஆனவை :-)

தொடர்வதற்கு நன்றி !

said...

வாங்க ஜிரா,

இயற்கையை விஞ்ச மனுசனால் முடியுமா?

நல்ல ஒத்தையடிப்பாதைகள் இருக்கு. கால் பலம் இருந்தால் போயிட்டு வந்துடலாம்.

யானையைப் பார்த்தா இன்னொரு யானைக்கு ஆசை வந்துருதே :-)

அப்படியும் சின்னதா, கொஞ்சமா ஒன்னு வாங்கத்தான் வேணும்.... நினைவுக்காக !

said...

வாங்க கீதா.

நாய்தான். வரும் வருஷம் (2018) சீனநாய் உலகத்தை உருட்டப்போகுதுன்னு கோடி காமிச்சுட்டுப்போயிருக்கு :-)

கேன்யனுக்கு எதிரி உக்காந்து, மனசைக் கட்டவிழ்த்து விடுங்க..... வேற யுகங்களுக்குப் போயிருவோம்....

காவிய மனிதர்கள் கூட்டங்கூட்டமாய்...... ஹைய்யோ!!!

said...

ஆஹா என்ன அழகு. படங்கள் மூலம் நாங்களும் பார்த்து ரசித்தோம்.

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.