Wednesday, September 27, 2017

கண்ணுக்குள்ளே GAS போட்டாச்சுபா......(இந்திய மண்ணில் பயணம் 55)

நர்ஸம்மாவிடம் சின்னப்பேச்சு கொடுத்தப்ப தெரிஞ்சது  இந்த  ஸர்ஜரி யூனிட்டில்  நைட் வேலைகள் ஒன்னும் இல்லையாம். ஆறு மணிக்கு  சில சமயம் ஆறரை மணிக்கு இழுத்துப் பூட்டிக்கிட்டுப் போறதுதான்.
ஓ... அப்ப ஏழுவரைன்னு சொன்னது ஒரு பேச்சுக்குத்தானா! நல்லதாப் போச்சு.

அறுவை சிகிச்சை நிபுணர்கள், அவுங்க  க்ளினிக்கில்  நோயாளிகளைப் பகல் ஒருமணி வரை பார்த்து முடிச்சுட்டுப் பகல் ரெண்டுமணிக்கு இங்கே வந்து  ஆபரேஷன் சமாச்சாரங்களை முடிக்கறாங்க. அதுவும் வாரம் ரெண்டு நாட்கள் மட்டும். சிலர் வாரத்துக்கு ஒரு நாள் மட்டும்.
அஞ்சு அஞ்சுக்கு  நம்மவரைக் கூட்டி வந்தார், கொண்டு போனவர்.  கீழே தலைகுனிந்தபடி வந்தவரைப் பார்க்க மனசுக்குக் கஷ்டமா இருந்துச்சு.            ( அந்தக் காலக்  கல்யாணப்பொண்ணு மாதிரி!)   கால் கட்டைவிரலைப் பார்த்தபடி நடக்கணுமாம். நர்ஸம்மா வந்து பிபி செக் பண்ணாங்க. அதிகமாகத்தான் காமிக்குது.  கையில் புதுசா ஒரு பச்சைப் பட்டை போட்டுருக்காங்க.  அதைக் கழட்டக்கூடாதுன்னு  சொன்னாங்க.
அதுலே இப்படி எழுதி இருக்கு!
டாக்டர் வேற  சொல்லி அனுப்பினார்.  கண்ணுக்குள்ளே GAS நிரப்பி இருக்கு. கவனமா இருக்கணும். விமானத்துலே போகக்கூடாது. பல்மருத்துவர், வேறு எதாவது அறுவை சிகிச்சை இப்படி நமக்கு சிகிச்சை நடக்கும் பட்சத்தில் அவுங்களுக்கு  'கேஸ்' சமாச்சாரம் தெரிஞ்சுருக்கணுமாம்.

ஐயோ.... நடமாடும் கேஸ் ஸிலிண்டர் !


அறுவை சிகிச்சையின்போது தேவைப்பட்டால் அப்போ வெயின் தேடிக்கிட்டு இருக்கமுடியாதுன்னு  அறுவை சிகிச்சைக்கான  முன்னேற்பாடுகள் நடக்கும்போதே ஐவிக்கான ஊசியைக் குத்தி வச்சுடறாங்கதானே. அதை இப்போ எடுக்கும் வேலை பாக்கி இருக்கு.  நர்ஸம்மா வந்து ஊசியை எடுத்துட்டுக் கையில் ப்ளாஸ்டர் போட்டாங்க. அதென்னவோ தபதபன்னு  ரத்தம் வர ஆரம்பிச்சது. அழுத்திப்பிடிச்சுக் கொஞ்சநேரம் ஆனதும் இன்னொருக்காப் போட்டாங்க.

இன்னொருக்கா பிபி செக் பண்ணிட்டு, நாளைக் காலை ஏழுவரை தலையைத் தொங்கப் போடணும். குப்புறப்படுத்துத் தலையணைகளை உயரமா வயித்துலே வச்சுக்கிட்டால்  இப்படிப்படுப்பது  கொஞ்சம் எளிதுன்னு டிப்ஸ் கொடுத்தாங்க. வீட்டுக்குப் போகும்போதும் காரின் பின்ஸீட்லே உக்கார்ந்து  முன் ஸீட்டைப் பிடிச்சபடித் தலையை குனிஞ்சு வச்சுக்கணுமாம்.  மொத்ததுலே தலையெடுக்கக் கூடாது!  தப்பு செய்யாமலேயே தலையைத் தொங்கப்போடும் நிலமை .

வலி இருந்தால் பெனடால் போட்டுக்கலாம். எழுதித்தரவான்னதுக்கு  'வேணாம். ஏகப்பட்டது இருக்கு'ன்னேன்.  வீட்டுக்கு வந்ததும்தான் தலைவலி ஆரம்பிச்சது எனக்கு!

கழுத்தைத் தொங்கப்போட்டு உக்கார்ந்தால் பின்னங்கழுத்து வலிக்குதாம். பாவம்....

ப்ளேனில் தூங்கும்போது கழுத்து சப்போர்ட்க்கான ஸ்லீப்பிங் பில்லோ புதுசு (பட்டன் வச்சது) ஒரு ரெண்டுவாரத்துக்கு முன்னால்தான் ஆளுக்கொன்னு  வாங்கி இருந்தோம். ஸேலில் இருந்துச்சு.  இருபத்தியஞ்சை இருபதுக்குக் கொடுத்தான்.  ஏற்கெனவே நாலைஞ்சு இருக்குன்னாலும் அதுலே பட்டன் இல்லை என்பதால் அதுபாட்டுக்கு வழுக்கிக்கிட்டுப் போயிரும்.  இவரோட கருப்பு பில்லோவை இந்தப் பயணத்துக்குக் கொண்டு போயிருந்தார்.  நேத்து திரும்பிவந்த பொட்டிகள் இன்னும் திறக்கப்படாமல் அப்படியே கிடக்கே... அதில் இருந்து இவருடைய நெக் பில்லோவை  எடுக்கலாமுன்னு  பார்த்தா....   அப்பதான் சொல்றார் அதை ப்ளேன்லே யாரோ திருடிக்கிட்டுப் போயிட்டாங்களாம்!!!!

எப்படிப்பா? எப்பூடி?

தேவைப்பட்டால் எடுத்துப் போட்டுக்காம,   ஏறிஉக்காந்தவுடனே எடுத்துக் கழுத்துலே மாட்டிக்கிட்டா? பட்டன் போடாம வச்சுருந்து அப்படியே தூங்கி, அது நழுவி விழுந்து யாரோ எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்க.... ஸீட்டுக்கு அடியில் விழுந்துருச்சோன்னு  தேடியெல்லாம் பார்த்துட்டு, ஏர்ஹோஸ்டஸ்கிட்டே  புகார் சொல்லி  அவுங்க போய் அக்கம்பக்கம் விசாரிச்சுட்டு வந்து  'காணோம்'னு சொன்னாங்களாம்! இந்த ப்ளைட்லே  உலகின் கூட்டம் மிகுந்த  நாட்டு மக்கள்தான்  நிரம்பிக்கிடந்தாங்கன்னு  ஒரு நியூஸும் சொல்றார் இவர்.

என்னோட நீலத் தலையணையைக் கொண்டு வந்து கொடுத்தேன்.  முன்கழுத்து சப்போர்ட். கொஞ்ச நேரம் போட்டுக்கிட்டு இருந்துட்டு  அதுக்கும்  குத்தம் ஒன்னு  சொல்றார்.  ஐயோன்னு பரிதாபப்படமுடியுதே தவிர வலியை நாம் வாங்கிக்க முடியுமா?

எதாவது குடிக்க வேணுமான்னு கேட்டு ஒரு டீ போட்டு, தலை குனிஞ்சே குடிக்க  அதுலே ஒரு ஸ்ட்ரா போட்டுக் கொடுத்தேன். ஒர்க்கவுட் ஆச்சு ! நானே மெச்சிக்கிட்டேன்:-)
'ஸர்ஜரி நடந்தபோது முழு உணர்வில்தான் இருந்தேன். என்ன செய்யப்போறோம் என்பதை சொல்லிக்கிட்டேதான்  செஞ்சாங்க. ஏற்கெனவே ரெடீனாவில்  அங்கங்கே கொஞ்சம்  கிழிசல் (!) இருந்துருக்காம். (இப்ப திடீர்னு கிழிஞ்சு தொங்கலை!  தாங்கும்வரை தாங்கிட்டு, திரை விழுந்துருக்கோ!  )  இப்படி ஆனதுக்குக் காரணம்னு சொல்லணுமுன்னா வயசாவதின் அறிகுறி. 55 முதல் 65 வயசுவரை உள்ளவர்களுக்கு  இப்படி நேரும்' என்றாராம் மருத்துவர்.

அடராமா.....   அப்போ அந்தக் காலத்துலே திடீர்னு   கண் தெரியாமப்போனவங்க... எப்படிக் கஷ்டப்பட்டுருப்பாங்க. வயசாச்சு, கண்ணு தெரியலைன்னு   விட்டுருவாங்களோ...   ப்ச்....

சாமிக்குத்தம்.  திடீர்னு கண்ணவிஞ்சு போச்சு!  இல்லே யாராவது சாபம் விட்டுருப்பாங்க.....  :-(  இப்படி எதாவது நினைச்சுக்கறதுதான் போல :-( 

கொஞ்சநேரம் படுக்கலாமேன்னு ஆரம்பிச்சு  தரையிலே கிடப்பு. குப்புறக்கிடக்கணும் என்பதால்தான் பிரச்சனையே. என்னமோ வழக்கத்துக்கு மாறா நடக்குது நம்ம வீட்டுலேன்னு  ரெஸ்ட்லெஸ்ஸா ஆனது யாருன்னு  தெரியுமா? பாவம்... குழந்தை! அப்பா தலைமாட்டுலே வந்து மோந்து மோந்து பார்த்துக்கிட்டு நிக்கறான்.....
சாப்பாடு  நார்மல்  என்பதால்  நல்லதாப் போச்சு. தலை குனிஞ்சு சாப்ட்டார்.  ராத்ரி தூக்கத்துக்கு எந்த மாதிரி? பல விதமா யோசிச்சு கட்டிலில் கால்பக்கம் தலையை வச்சுப் படுத்தால் முன்பக்கம் கைகளை நீட்டிக்க முடியும். ஹெட் போர்டு இடிக்காதுன்னு  நானே யோசிச்சுக் கண்டுபிடிச்சேன்:-) கால்பக்கம் முழுசும் ரஜ்ஜுவின் இடம் என்பதால் அவனுக்குப் புதுக்குழப்பம்.  ஆனாலும் கும்பலில் கோவிந்தா போட்டுக்கிட்டுத்தான் இருந்தான் :-)
தூக்கமில்லாமலேயே முழு இரவும் தொலைஞ்சது. எப்படா விடியுமுன்னு பார்த்து  எழுந்து, கடமைகளை முடிச்சு சமையலையும் ஒருமாதிரி செஞ்சு வச்சுட்டு ரெடியாகி கண் டாக்டர் அப்பாய்ன்ட்மென்டுக்குப் போனோம். மகள் வந்து கொண்டுபோறேன்னு சொன்னாள்.  'வேணாம். நானே கூட்டிப் போயிருவேன். நீ வேலைக்குப் போ'ன்னு சொல்லி இருந்தேன். (ஃபேமிலி எமெர்ஜன்ஸி எல்லாம் முடிஞ்சு போச்)

தலையைத் தலையை நிமிர்த்திக்கிட்டு இருக்கார், அதான் ஏழுவரைன்னு சொன்னாங்களேன்னு. விடுவமா?  ஊஹூம்... எதுக்கும் டாக்டரைப் பார்க்கும்வரை குனிஞ்சதலை நிமிரக்கூடாது....  ஆமாம்  :-)

ஒன்பதேகால் நமக்கான நேரம்.  முதலில் உள்ளே கூப்புட்டுப்போய் கண்கட்டை பிரிச்செடுத்து  கண்ணைச் சுற்றிச் சுத்தம் செய்யணும். அம்புட்டுத்தான். ஆனால் இந்த வேலையைச் செய்யும் ஆள்  வேலைக்கான பயிற்சியில்னு நினைக்கறேன். நிரூபிக்கறது போல  கட்டைப் பிரிச்சு சுத்தம் செஞ்சதோடு விடாம, கண்ணு தெரியுதா? போர்டுலே  இருப்பதை  வாசின்னு  சொல்ல, நம்மவர் சொல்றார் 'கண்ணு தெரியலை.  மசமசன்னு இருக்கு.  ஐலாஷ்  விழுந்துருக்கு போல'ன்னதும்  இன்னொருக்கா கண்ணைச்சுத்திச் சுத்தம் செஞ்சுட்டு 'இப்போ தெரியுதா?'

' இல்லை. இன்னும்  கண்முடி விழுந்து கிடக்கு.....'

உடனே  கையில் எடுத்தது  பக்கத்தில் இருந்த காட்டன் பட்ஸ். ஐயோ.... கண்ணுக்குள்ளே விட்டுடப்போறாளேன்னு சின்னக்குரல் கொடுத்தேன்.            "  நோ....இருக்கட்டும். டாக்டரைப் பார்க்கும்போது சொல்லலாம்"
இதென்ன  ஐஓஎல் சிகிச்சையா, கட்டைப் பிரிச்சதும் கண் பளிச்சுன்னு தெரிய? என்ன விதமான ஸர்ஜரின்னு தெரியாமலேயே  'ரைட்டா ? ரைட்டு' விளையாடணுமாக்கும். எனக்கு எரிச்சல். வலது கண் வீங்கி இருக்கு.  பாவம்.....
வெளியே வந்ததும் டாக்டர் வந்து கூட்டிப் போனார். மெஷீனில்  முகம் வச்சு கண்ணை சோதித்தபின்,  ரெடீனா நல்லா தன் இடத்துக்குப் போயிருக்கு.  கண்ணுக்குள்ளே கேஸ் இருப்பதால் இன்னும்  சரியாப் பார்க்க வராது.  கொஞ்சநாள் செல்லும்.  அதுவரை கவனமா இருக்கணும். வலது பக்கம் தலையைச் சாய்ச்சு  வச்சுத் தூங்கப்டாது. தலையில் தண்ணி ஊத்தக்கூடாது. கண்ணில் ஜெல்வழியாப் பார்ப்பது  போல ஒரு திரைக்குப்பின் காட்சிகள் தெரியும். அது பரவாயில்லை. அடுத்த வாரம் திரும்ப வந்து கண்ணைக் காமிக்கணும். இப்போதைக்கு ரெண்டு வாரத்துக்கு மெடிக்கல் லீவுக்கு எழுதித்தரேன்.  கண்ணில் வலி  வந்துச்சுன்னா   உடனே என்னை வந்து பார்க்கணும். மற்ற விதிகள் இதுன்னு  ஒரு அட்டையைக் கொடுத்தார்.
மருந்து எழுதித் தந்தார். தர்றது என்ன ஏற்கெனவே எல்லாம் அச்சடிச்சு வச்சுருக்கு.  எத்தனை முறை எத்தனை துளின்னு ....  மருந்து போட்டவுடன் போட்டேன்னு  குறிச்சுக்கணும். மறந்துட்டேன்,போட்டேனான்னு நினைவு இல்லைனு சொல்லமாட்டோமே....   ஹிஹி.

வீட்டுக்கு வரும் வழியில் நம்ம மருந்துக்கடையில் மருந்தை வாங்கிவந்து போட ஆரம்பிச்சாச்சு.  இன்றைக்கு  ஏழாம் நாள்.  கண் சிகப்புக் கொஞ்சம் குறைஞ்சுருக்கு. இந்த டிவி சனியன் வேணாமுன்னா கேட்டால்தானே? டிவி 'கேக்கறாராம்'  !!  :-)

'அதைக் கேட்காம கொஞ்சம் சாமி பாட்டு, கச்சேரி, விஷ்ணு சகஸ்ரநாமம் கேளுங்கோ'ன்னு  உக்கார்த்தி வச்சேன்.  ரஜ்ஜுவும் ஆழ்ந்த லயிப்பில் கம்பெனி கொடுக்கறான்.
இதுக்கு இடையிலே திடீர்னு தொண்டை கரகரப்பும் இருமலும் ஆரம்பிச்சு அது ஒரு வேதனை.  இருமும் வேகத்துலே எங்கே கண்முழி தெறிச்சு விழுந்துருமோன்னு  எனக்கு பயம்.  கைவைத்தியமா மருந்து எடுத்துக்கிட்டா நல்லதுன்னு அவர் நினைச்சதால் நம்ம வீட்டு கற்பூரவள்ளி இலையைச் சாறுபிழிஞ்சு தேனில் கலந்து கொடுத்தேன். அப்புறம் மிளகுத்தூளும் தேனும், இப்படி  தேன்பாட்டிலைத் தீர்த்தும் பயன் இல்லை. மருந்துக்கடையில்  ட்ரை காஃப்ன்னு வெத்து இருமலுக்கான மருந்தை வாங்கியாந்து  ராத்திரியில் மட்டும்  அஞ்சு மில்லி. இந்த இருமலும் பாருங்க... பகலில் அடங்கி இருந்துட்டு, ராத்திரி படுக்கும்போதுதான் வேலையைக் காட்டுது.

தோழி சொன்னாங்க 'இருமலும்  ஸர்ஜரியும் எப்பவும் ஒன்னா இருக்கும்.  எது கூடாதுன்னு இருக்கோமோ அப்ப அது கட்டாயம் வந்துரும்'  உண்மைதான். தையல் போட்டுருக்கும்போது  இருமக்கூடாதுன்னு இருந்தால் அப்போதான்  இருமல்வந்து படுத்தும் என்பது நம்ம அனுபவம் இல்லையோ!

பல்லைக்  கடிச்சு எட்டுநாளைத் தள்ளியாச்சு. இன்றைக்கு டாக்டரைப் பார்த்து வரணும்.  என்ன சொல்லப்போறாரோ...   பெருமாளே காப்பாத்து.......

நமக்குக் கொடுத்த நேரம்  மதியம் 1.40. பகல் சாப்பாட்டை முடிச்சுக்கிட்டுப் போனோம். இன்றைக்குக் காத்திருக்கவேண்டிய அவசியமே இல்லாமப்போச்சு.  போனதும்  போன திங்கள் ஏபிசிடி வாசிக்கச் சொன்ன அறை.  வலது கண்ணில்  மேலே கொஞ்சூண்டு மசமசன்னுதெரியுதாம். மத்தபடி அந்தக் கண்ணால் எதுவும் செய்ய முடியாது. சொட்டு மருந்து ஒன்னு விட்டாங்க.  காத்திருப்பு அறைக்குப்போய் உக்காரும்போதே டாக்டர் வந்து கூப்பிட்டார்.

இருட்டறையில் பரிசோதனை.  விழித்திரை அதன் இடத்தில் நல்லாவே பொருந்தி இருக்கு.  கண்ணுக்குள்ளே காஸ் இருப்பதால்  கண் லென்ஸுக்கு மேலே காடராக்ட் வந்துருக்கு. ஆனால் காஸ் போகப்போக இது சரியாகிரும். இந்த காஸ் மெள்ளமெள்ள வெளியேற  இன்னும் ரெண்டு வாரம் ஆகும்.  பிரச்சனை இல்லை.  தலையைச் சாய்க்காம வழக்கம்போல் படுத்துக்கலாம்.  கொஞ்சூண்டு  செல்ஃபோன், லேப்டாப் , டிவி எல்லாம் பார்த்துக்கலாம்.

இருமல் பிரச்சனையைச் சொன்னதும்,  கண் மருந்து போடும்போது  கண்வழியா தொண்டைக்குள் இறங்கி இருக்கலாமோன்ற சம்ஸயத்துலே  மருந்து போடும்போது  கண்ணும் மூக்கும் சேரும் இடத்தில் ஒத்தை விரலால் அமுக்கிக்கிடச் சொன்னாங்க. இதை எனக்குக் கண்சிகிச்சை நடந்தப்ப சொல்லி இருந்தாங்க. அப்படி அமுக்கலைன்னா  மருந்து கண்ணீர்சுரப்பிக்குள் போயிருமாம். ரெண்டு சொட்டு மருந்துகளில் ஒன்னு நேத்தோடு  சரி. இனி மூணு வாரத்துக்கு  ஒரு மருந்துமட்டும் நாலு வேளைக்குப் போடணும்.

இன்னும்  ஒரு வாரத்துக்கு  மெடிக்கல் லீவுக்கு எழுதிக் கொடுத்தாங்க. மே மாசம் 9 ஆம் தேதி  கண் நிலமை சரியாச்சுன்னா வேலைக்குப் போகலாம்.  இல்லைன்னா இன் னும் ஒருவாரம் ஆகட்டுமுன்னு சொல்லி வச்சுருக்கேன். அடுத்த செக்கப் அடுத்த மாசம் இதே தேதிக்கு.  இதுக்கிடையிலெ எதாவது கண்வலின்னா உடனே டாக்டரைத் தொடர்பு கொள்ளவேணும்.

ஒளிவுமறைவா எட்டிப் பார்த்துக்கிட்டு இருந்த  செல்ஃபோன்வகைகள் தைரியமா நம்ம கண்முன்னால் இப்போ!!

அதுக்கப்புறமும்  பார்வை முழுசும் சரியாகாமல் போகவே மாசாமாசம் இதே வேலையாப்போய் கண் டாக்டரைப் பார்த்துக்கிட்டே இருக்கோம். இப்பத்து பிரச்சனை என்னன்னா.....   பார்வை ஒரு  கண்ணில்  ரொம்பவே மசமச...

ரெட்டினாவைத் தைக்கறதுக்கு முன், கண்ணுக்குள்ளே இருக்கும்  ஆப்ட்டிகல் ஜெல்லை(fluid) முழுசும் எடுத்துட்டு கேஸ் நிரப்பறாங்க பாருங்க....  அப்போ ஒரு  துக்குனியூண்டு ஜெல் மட்டும் உள்ளேயே தங்கிருச்சு.  சரி ...  விடாப்பிடியாத் தங்குனியே   ஒரு ஓரமாப்போய் உக்காரப்டாதோ? நட்ட நடுவீட்டுலே  வந்து குந்திகினா எப்படி?

ஆப்டிக்கல்  நெர்வ்லே வந்து உக்கார்ந்துருக்காம். இதுக்கு வேற  இடம் கிடைக்கலை பாருங்க:-(

ஒரு லேஸர் சிகிச்சை கொடுத்து இதைத் தள்ளிடலாமுன்னு  அதையும் செஞ்சு பார்த்தாச்சு.  ஊஹூம்.... நகர்ற இனம் இல்லை... :-(

OCT scanning shows a persisting pocket of fluid at the right macula.
Retinal laser was tried to stimulate the retinal pump.   ஒரு ரிப்போர்ட்!
அதுலே பாருங்க.....   ஒரு மில்லியனில் ஒரு ஆளுக்கு இப்படி ஆறது உண்டாம். அட!  நாம்தான் அந்த அதிர்ஷ்டக்காரர் போல!

மூணு மாசம் டைம் கொடுத்தாங்க. அநேகமா சரி ஆகிரும். அப்படி ஆகலைன்னா இன்னொரு ஸர்ஜரி செஞ்சுடலாமுன்னு சொல்றார் டாக்டர்.
ஐயோ.... இன்னொருக்கா தலை குனிவு, குப்புறக் கிடக்கணும், கண்ணு வீக்கம்னு நினைக்கும்போதே எனக்கு வயித்தைக் கலக்குது.....

இதுக்கு நடுவில் செப்டம்பர் மாசம் முக்திநாத் போயிட்டு வந்துடலாமுன்னு  ப்ளானும் ஆச்சு.  முழுசாக் கண் அவுட் ஆகறதுக்குள்ளே  சாமியை தரிசனம் செஞ்சுக்கலாமுன்னு நினைச்சுட்டார்.  பாவம்....  இல்லே...ப்ச்....

அப்பதான் ஃபேஸ்புக்கில் நம்ம கண் மருத்துவர் ரோஹிணி கிருஷ்ணாவை வாசிக்க ஆரம்பிச்சு இருந்தேன்.  கண் சமாச்சாரம் இப்ப நம்ம வீட்டுலே பிரச்சனையா ஆனதும்  இவுங்க கிட்டே ஆலோசனை கேக்கலாமுன்னு   அவுங்களுக்கு  ஒரு மெஸேஜ் அனுப்பினேன்.

'அக்டோபர் மாசம் தமிழ்நாட்டுக்கு வர்றோம். உங்களை வந்து  பார்க்கலாமான்னு...'

என்ன பிரச்சனைன்னு கேட்டதும்   எல்லாம் விலாவரியா சொன்னேன்.  அதுக்கு அவுங்க, சங்கர நேத்ராலயாவில் கண்ணைக் காமிக்கச் சொன்னாங்க.  அங்கே சட்னு  அப்பாய்ன்ட்மென்ட் கிடைக்காதில்லையா.... அதுக்கும் உதவி செய்யறேன்னு  சொல்லி ஒரு தனிப்பட்ட தகவலையும் சொன்னாங்க. கூடவே ஒரு  ஃபோன் நம்பரும்.

நாங்க நேபாள் யாத்திரை முடிச்சுட்டு, சென்னை வந்ததும்   நம்ம ரோஹிணி கிருஷ்ணாவின் உதவியால்  அவுங்க சொன்னபடி செஞ்சு  நமக்கு அப்பாய்ன்ட்மென்ட்  கிடைச்சது.

அதுக்குத்தான் நாளைக்கு  அங்கே போறோமுன்னு  கொசுவத்திக்கு முந்தின பதிவில் சொல்லி இருந்தேன்!

ஒன்னே ஒன்னு ............   வீட்டாம்பளைக்கு  சுகக்கேடு வந்தால்  பார்த்துக்கறது........  ரொம்பவே கஷ்டம்ப்பா.....

மறுநாள்  நடந்தது என்ன?

தொடரும்.....:-)

PINகுறிப்பு:  இது ஒரு ஸீரியஸ் பதிவு. வெளையாட்டுத்தனமா நினைக்கப்டாது.  கண்.... கண்... கண்.....

19 comments:

said...

ஸார் பட்ட கஷ்டங்களைப் படிக்கும்போது கஷ்டமாக இருக்கிறது. கண்ணில் இப்படி கூட ஒரு பிரச்னை வருமா? பகவானே...

said...

துளசி. தெரிந்த விஷயம் னாலும் திரும்ப படிக்க ரொம்ப வருத்தமா இருக்கு. இருவரும் நன்றாக இருக்கணும்.

said...

அனைவரும் எச்சரிக்கையாக இருக்க உணர்த்துகின்ற அனுபவப்பதிவு.

said...

விலாவாரியா படிக்கும் போதே திக் திக் என்று இருக்கு. கண் என்னும் போதே இன்னும் பயம் அதிகமாகிவிடுகிறது.

said...

கண் பிரச்சனை எப்படி வந்தது? வயதானால் பொதுவா வரக்கூடியதா? படிக்கும்போதே திக் என்று இருக்கிறது (அந்தக் காலத்தில் நீங்கள் எழுதிய "கோபால் சார் ஆஸ்பத்திரியில் அட்மிட், பெண் வந்தபோது அவர் கண்களில் கண்ணீர்" ஞாபகம் வந்துவிட்டது). ஆனாலும் இப்போ எழுதுவது பழைய டைரி என்பதால் Everything back to normal என்ற உத்தரவாதம் இருக்கிறது. விலாவாரியாக எழுதுவது மிகவும் நன்று, மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகக்கூட இருக்கும்.

எப்போதும் இருவரும் நலமாக இருக்க ப்ரார்த்தனைகள்.

said...

என் சாண் உடம்பில் சிரசே பிரதானம். சிரசிலும் கண்ணே பிரதானம்னு சொல் பழக்கமுண்டு. அந்தக் கண்ல ஒரு பிரச்சனைன்னா ரொம்பவே கஷ்டம். நீங்க சொன்ன மாதிரி, அந்தக் காலத்துல எப்படி இருந்திருப்பாங்களோ! அருணகிரிநாதர் வாழ்க்கைல வர்ர பிரபுடதேவாராயர் (அரசர்) கண்ணும் பாதிக்கப்பட்டதுன்னு சொல்றாங்க. இந்த மாதிரியான காரணமாகக் கூட இருக்கலாம். ஆனா அப்பல்லாம் தெரிஞ்சிக்க வழி ஏது?

“டிவி கேக்குறது” - யாருக்கும் ஒடம்பு முடியாதப்ப பொதுவா கண்ணுக்கு ரொம்ப அழுத்தம் கொடுக்கக்கூடாதுன்னு சொல்வாங்க. அதுனால டீவி பாக்க விடமாட்டாங்க. அப்பல்லாம் டிவி கேக்குறதுதான் பொழுது போக்கு.

said...

அப்பா பட்ட கஷ்டம் மனசுக்கு வேதனையளிக்கிறது.

நோய் எதும் வரக்கூடாது. அதுதான் என் விருப்பம். வேண்டுதல்

said...

டாக்டரைப் பார்க்கும்போதே கண்ணுக்கு என்று ஒரு கடவுளும் இருப்பாரே அவருக்கு நேர்ந்துகொள்ளுங்கள் எல்லாம் சரியாகி விடும் நம்பிக்கைதானே எல்லாம்

said...

Oonjal enge vaangeneenga, or you brought it from India. I hope, Mr. Gopal sees better now.

said...

வாங்க ஸ்ரீராம்,

நம் உடலைப் பொருத்தவரை ஏராளமான மர்மங்கள் இருக்கே! அதது அனுபவப்படும்போதுதானே அதில் இருக்கும் கஷ்டநஷ்டம் புரியுது, இல்லையோ?

said...

வாங்க வல்லி.

ஆஹா... அதான் எதுன்னாலும் உங்ககிட்டே உடனே வந்து புலம்பிடுவேனே!!!

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

ஆமாங்க. ஒரு எச்சரிக்கையா இருக்கட்டுமுன்னுதான் சம்பவம் நடந்த சமயம் எழுதி வச்சதை இப்போ வெளியிட்டேன்.

நாலு விஷயமும் தெரிஞ்சுக்கிட்டா நல்லதுதானே?

said...

வாங்க குமார்.

கண்....

அதான் பயமே!

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

வயதானால் வருவதுதான். பொதுவா எல்லோருக்கும் வர்றதில்லை..... நமக்கு வந்துருச்சு.... :-(

ஆனா எதிர்பாராத விதமா வந்துட்டா உடனே என்ன செய்யணுமுன்னு தெரிஞ்சுக்கறது நல்லது என்றுதான் இந்தப் பதிவே!

இப்ப எவ்வளவோ பெட்டர். இன்னும் நாளாகுமாம்....

பிரார்த்தனைகளுக்கு மனம் நிறைந்த நன்றி.

said...

வாங்க ஜிரா.

சட் சட்னு என்னென்னவோ நடந்துருது பாருங்க.....





said...

வாங்க ராஜி.

மனுச உடம்பும் ஒரு மெஷீன் போலத்தானே..... அப்பப்ப எதாவது பார்ட்ஸ் பழுதாகிரு து. கொஞ்சம் கவனமா உடம்பைப் பார்த்துக்கணும் என்று சொல்றது இதுக்குத்தான்!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

கண்பார்வைக்கு திருவெள்ளியங்குடி கோவிலில் வேண்டிக்கணும். நம்ம கோவில் யாத்திரையில் இதே கோவிலுக்கு ரெண்டு முறை போயிருக்கோம், ஏற்கெனவே வந்துருக்கோம் என்ற நினைப்பு இல்லாமலேயே.....

ஒருவேளை பலன் ரிவர்ஸ் ஆகி இருக்குமோ? ( ஜஸ்ட் ஜோக்)

நம்பிக்கைதான் வாழ்க்கை என்பது நிஜம்!

said...

வாங்க ஜான்கென்னடி.

கிடக்கறது கிடக்கட்டும். கிழவனைத் தூக்கி மணையில் வை என்றதுபோல்.... சீரியஸா பேசிக்கிட்டு இருக்கும்போது ஊஞ்சல் விசாரணை :-)

சங்கிலி சிங்கப்பூரில் வாங்கினோம். ஊஞ்சல் பலகை இங்கே செஞ்சது ஒரு ஹாங்காங் சீனர்.

said...

கடினமான விஷயம் - குனிந்த தலை நிமிராமல் இருப்பது.....