Sunday, September 03, 2017

கலெக்‌ஷன் டே (இந்திய மண்ணில் பயணம் 49)

லோட்டஸில் தங்கும் நாட்களில் எல்லாம்  தவறாமச் செய்யும் ஒரு வேலை,  காலை உணவைக் கிளிக்கி வச்சுத் தோழியருக்கு அனுப்புவதே!  சும்மாச் சொல்லக்கூடாது....  நோகாம நோம்பு கும்பிட்ட சுகம்  அது :-)
இன்றைக்கு என் ஸ்பெஷல் வேற இருக்கு!  ஆயுதபூஜை விழாவாம்!

லோட்டஸில்  ரங்கோலியும், அலங்காரமுமா அமர்க்களம்தான்.
நம்ம சீனிவாசனும் ட்ராவல்ஸ்  ஆயுதபூஜைக்குப் போய் வண்டிகளுக்குச் சந்தனம் பூசி வர வேணாமோ?  நிதானமா வரச் சொல்லி இருந்தோம்.  பதினொன்னுக்குப் போனால் ஆகாதா என்ன?
நவராத்ரி சமயங்களில் மயிலைக்குப்போகும் அதிர்ஷ்டம் எனக்கு வாய்க்கறதே இல்லைன்னு புலம்புவதைப் பார்த்த பெருமாள், இந்தவாட்டி போய்க்கோன்னுட்டார்.  முதல்லே அங்கெதான் போனோம்.
கொலு சமயம் ஒரு நகர் வலம்.
பொம்மைச்சுரங்கமா மாறிக்கிடக்கு மயிலை மாடவீதி.
எதை வாங்க என்பதை விட, எப்படிக் கொண்டுபோக என்பதுதான் நம்மவர் கவலை.

ஏர்லைன்ஸ்காரன் கொடுக்கும் முப்பது கிலோவில் நம்ம மற்ற உடைகள், லொட்டு லொசுக்கு எல்லாத்தையும் அடைச்சு வச்சு, பொம்மைகளையும் (உடையாமல்) கொண்டுபோகும் வித்தை தெரியலை பாருங்க....

கனமும் கூடாது, பொம்மையும் வேணும். அது கண்ணு மூக்குன்னு பார்க்க அம்சமாவும் இருக்கணும். ஆனால் குட்டியாக் கையில் அடங்கணும் இப்படி எல்லாம் கண்டிஷன்ஸ் போட்டால்.... ஹூம்.... நடக்குமா?

ஒரு பொம்மை வாங்குனா போதுமுன்னு சொல்லி, நம்மவர் வயித்துலே பாலை வார்த்து, ஒரு தசாவதாரம் வாங்கியாச். :-)
கடைக்காரர் ஆனந்த், விவரம் தெரிஞ்சநாள் முதல்
பொம்மையோடு வளர்ந்தவராம். அஞ்சு தலைமுறை பொம்மைக்கடை :-)
பக்கத்துலே விஜயா ஸ்டோர் 'வா வா'ன்னுச்சு. அங்கே   கைகால் வாங்கணும். நவராத்ரி சமயத்தில் மட்டுமே கிடைக்குமாம்.  அருமையான அம்சமான தேவி இருக்காள்.  ஒரு சமயம் ஒரு அதிர்ச்சி மட்டுமுன்னு கணக்கு வச்சுருப்பதால் வாங்கிக்கலை. பாவமில்லையோ  நம்மவர்?


அம்மிக்கல் கூட  ஆசையாத்தான் இருக்கு.......   ஹூம்..... அவருக்கு     அரைக்கத் தெரியுமோ என்னவோ?   உடம்புலே இருக்கும் எதாவது ஒரு பிரச்சனையைச் சொல்லி அதுக்கு நல்லதுன்னு சொல்லிப் பார்க்கலாமா?

கொலு பார்க்க மட்ட மத்யானத்துலே போனால் தப்பா? ஊஹூம்.... தப்பே இல்லை. நீங்க கட்டாயம் வந்தே ஆகணுமுன்னு ஒரே பிடிவாதம் என்னுயிர்த் தோழி ஒருவருக்கு!  நாம் போய்ச் சேரவும்,  பிரஸாதவகைகளுடன் தீபாராதனை  நடக்கவும் அப்படி ஒரு பொருத்தம். வலதுகாலை எடுத்து உள்ளே வைக்கும் போதே  ஒரு க்ளிக் :-)
வீணை எனது குழந்தை.............  கொலுவிலே வந்து உக்கார்ந்துருக்கும் குழந்தை !

சரஸ்வதி பூஜைக்கு  நானானி வீட்டுலே சாப்புடணும் என்ற  வேண்டுதல் :-) அதுவும் இலை போட்ட பிரஸாதம்!!!
பேசிச்சிரிச்சுச் சாப்பிட்டுக் க்ளிக்கின்னு  எல்லாம் முடிச்சுக்கிளம்பும்போது சம்ப்ரதாயமான வச்சுக்கொடுத்தல் !  வரவு  சூப்பர் !

அடுத்த ஸ்டாப் வல்லியம்மா வீட்டுக்கு! இந்த முறை நவராத்ரி சமயம் இவுங்க இங்கே  வந்துருக்காங்க. சாஸ்திரத்துக்குன்னாலும்  சூப்பரா அழகா ஒரு கொலு வச்சுருக்காங்க.



எவ்ளோ நாளாச்சுல்லே  பார்த்தே....  பேச்சுக் கச்சேரியை ஆரம்பிச்சுத் தொடரும் போட்டுட்டு,  கலெக்‌ஷனையும் முடிச்சுக்கிட்டு கிளம்பிப்போனது நேரா மச்சினர் வீட்டுக்குத்தான்.

வந்தவுடனெ ஒரு ரவுண்ட் முடிச்சுட்டோமுன்னா.....  அப்புறம் நம்ம வேலையை நாம் பார்த்துக்கலாம்.

அங்கே போயிட்டு உறவுகளிடம் பேசி, மகிழ்ந்தாச்.  மச்சினர் பொண்ணு (எம்பிஏ படிக்கிறாள். இப்போ  இதை எழுதும்போது..... அவள் படிப்பை முடிச்சுட்டாள். ) நவராத்ரி லீவுக்கு வந்துருக்காள். நகைநட்டு பண்ணறது ஹாபி.  செஞ்சு வச்சுருக்கும் வளையல்கள் இன்னபிற சமாச்சாரங்களைக் காட்டி  அக்காவுக்கு எடுத்துக்கிட்டுப் போகச் சொன்ன நல்ல மனசு!  ஆஹா!!!  ஆனால்  மகளுடைய நிறம்  இது இல்லை, ப்ளூன்னதும் .... மகளுக்கு ஒரு நீலக்கலர் வளையல் செட் செஞ்சு தரேன்னாள்.
 ஆஹா ஆஹா....

ராத்திரி எட்டுக்குக்கு ஸ்ரீராம் ட்ராவல்ஸ்லே பூஜை இருக்கு என்றதால் நாங்கள் ஆறரை மணி போல கிளம்பி தி நகர் ஏரியாவில் நம்ம டெய்லர் கடையில்  சண்டிகரில்  எனக்குன்னு வாங்கிய துணிகளைத் தைக்கக் கொடுத்துட்டு லோட்டஸுக்கு வந்துட்டோம்.

தொடரும்........:-)


13 comments:

துளசி கோபால் said...

வணக்கம். நண்பர்கள் தயவுசெய்து தமிழ்மணத்தில் சேர்த்து விடுங்க. நன்றி.

நெல்லைத் தமிழன் said...

ஆஹா.. காலை உணவுடன் பதிவு அமர்க்களம்.. கொலு பொம்மைகள், வல்லிம்மாவுடனான படம் அனைத்தும் ரசித்தேன். பதிவுக்கு இடைவெளி அதிகமோ?

துளசி கோபால் said...

பயணத்தில் இருக்கோம். அதான் வாரம் ஒன்னு 😊

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

பொம்மைச்சுரங்கம் அழகோ அழகு.

ராஜி said...

அம்மி வாங்க சதி பண்ணுறீங்க போல!

ரேவதிம்மா வீட்டு கொலு சூப்பர்.


படங்கள் அருமை

விஸ்வநாத் said...

// காலை உணவைக் கிளிக்கி வச்சுத் தோழியருக்கு அனுப்புவதே // மத்தவங்க காதுல புகை வர வைப்பது எப்படி ன்னு ஒரு புக் எழுதலாமே நீங்க,

// ஒரு பொம்மை வாங்குனா போதுமுன்னு சொல்லி, நம்மவர் வயித்துலே பாலை வார்த்து, ஒரு தசாவதாரம் வாங்கியாச். // தசாவதாரம் ன்னா 10 பொம்மை இல்லியோ ? அதையும் சார் சிரிச்சிக்கிட்டே வாங்கித்தறாரு பாருங்க, வாவ், அதிர்ஷ்டசாலி (நீங்க).

// பாவமில்லையோ நம்மவர்? // நீங்க வாங்காம போனா வியாபாரம் நடக்காதே, பாவமில்லையா கடைக்காரர்.

ஸ்ரீராம். said...

அடடே... வல்லிம்மா...! நேற்றிரவு ஒரு ரிசப்ஷன் போயிட்டு அவங்க வீட்டைத்தாண்டிட்டு வந்தேன். அவர்களை நினைத்துக்கொண்டேன். பொறை ஏறிச்சா அவங்களுக்கு,

G.Ragavan said...

கொலு பொம்மைகளின் உலகம் மிக அழகானது. எவ்வளவு வயதானாலும் நாமும் குழந்தைகள்தான் என்று நினைக்க வைத்துவிடுகின்றன. உயிரில்லாத இந்த பொம்மைகள் போதாதென்று உயிருள்ள பொம்மைகளையும் தமக்கே தமக்காய் வைத்துக்கொள்ள விரும்பி மனிதர்கள் செய்யும் தவறுகளும் எக்கச்சக்கம். அதை நினைக்கையில் களிமண்ணோடு பிறந்து நிறம் மங்கும்வரை வாழ்ந்து முடிக்கும் இந்தப் பொம்மைகள் கொடுத்து வைத்தவை.

வெங்கட் நாகராஜ் said...

கொலு பொம்மைகள் - அழகு.....

சுகமான நினைவுகள் - கூடவே கலெக்‌ஷன்சும்! தொடரட்டும்!

Johnkennday said...
This comment has been removed by a blog administrator.
மாதேவி said...

கொலுவும்தோழியர் சந்திப்பும் என்றும் நினைவில்.

துளசி கோபால் said...

Johnkennday

உங்க பின்னூட்டம் தவறுதலா டிலீட் ஆகிருச்சு. மன்னிக்கணும். இப்ப காப்பி ப்ண் ணி இங்கே போட்டுருக்கேன்.

ohnkennday has left a new comment on your post "கலெக்‌ஷன் டே (இந்திய மண்ணில் பயணம் 49)":

Is this self-pity, self-regret and self-proclamation G.Ragavan. :) :) :)

துளசி கோபால் said...

பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.

தனித்தனியா பதில் எழுத முடியலை. மன்னிக்கணும்.