Friday, September 22, 2017

ராமராஜ்யாவில்..... (இந்திய மண்ணில் பயணம் 53)

இஷ்டக்கோவிலின் வரிசையில் ஒரு  நாலைஞ்சு வருசங்களா நம்ம பூரணப்ரம்மம் கோவிலும் என் மனசில் இடம்பிடிச்சு உக்கார்ந்தாச்சு.  எப்ப சென்னைக்குப் போனாலும்  இவரையும் தரிசனம் செஞ்சுக்கிட்டுத்தான் வர்றோம்.  ஒரு  தள்ளுமுள்ளு கிடையாது. எவ்ளோ நேரமானாலும் சரி. யாரும் ஒன்னும் சொல்றதில்லையாக்கும்!
பெருமாளின் பத்து அவதாரங்களும்,  மார்பில் உறையும் மஹாலக்ஷ்மியுமா  நெடுநெடுன்னு நின்ற கோலம்.  விசேஷநாட்களுக்குத் தக்கபடி இவரே சிவனாகவும்,  க்ருஷ்ணனாகவும்,  மனம் கவரும் மோஹினியாகவும், இன்னும்  தாய், தகப்பனாக்கூட  மாறிக்கிறார்.

அதானே....   எல்லாமுமாய் நிறைஞ்ச பரிபூரணம் அல்லவா  தெய்வம்!  கடவுள்!

மேலும்....  இங்கே வந்தோமுன்னால்....  கூடுதல் போனஸா  'எல்லோரையும்' தரிசனம் செஞ்சுக்கலாம். பழனி முருகனில் தொடங்கி சகலருக்கும் தனித்தனி கோவில்களும் வளாகத்தில் நிறைஞ்சுருக்கு!

ஆசிரமக்கோவில் என்பதால்,  முன்கூட்டித் தகவல் சொன்னோமுன்னால் அங்கே போய் தங்கியும் இறையருள் பெறலாம். நாங்களும் சில முறைகள் தங்கி இருக்கோம்.

இந்த முறை  நேரம் கொஞ்சம் பற்றாக்குறை என்றதால்  தங்கலாமா என்ற ஆசையைத் தள்ளிப் போட்டோம். அதான் தங்கப் போறதில்லையேன்னு  அங்கே வர்றோம் என்ற தகவலையும் சொல்லலை.

சனிக்கிழமைகளில் காலை  வேளையில்  அக்கம்பக்கத்து  சனம் அத்தனையும் கோவிலில்தான் இருப்பாங்க.  அன்றைக்கு  அனைவருக்குமே அனுமதி உண்டு. நாமும்  இப்போ சனிக்கிழமையில்தானே கிளம்பிப் போய்க்கிட்டு இருக்கோம், இல்லே!

சென்னைன்னு சொன்னாலும்......  போய்ச்சேர ஒரு மணி நேரத்துக்குப்பக்கம் ஆகிருது. கேளம்பாக்கம் போகணும். சித்தயோகி ஸ்ரீ சிவசங்கர் பாபாவின் ராமராஜ்யா!

ராமராஜ்யா வாசலுக்குப் பக்கம் மிளகாத்தம்மன் கோவில் இருக்கு.  ஒரு நாள் போகணுமுன்னு நினைச்சுக்கிட்டே இதுவரை  போகலை.  கண்ணில் பட்டவுடன் ஒரு கும்பிடு போடறதோடு சரி.  ஆத்தா.... இன்னும் கூப்பிடலைன்னு  ஒரு நொண்டிச்சாக்கு சொல்லிருவேன்.  ஆத்தா.... சீக்கிரம் கூப்பிடு ஆத்தா.....

வருகைப் பதிவேட்டில்  பெயரைப் பதிஞ்சுட்டு, ராமராஜ்யா வளாகத்துக்குள் போறோம்.  காலை ஆறு மணிக்கே கிளம்பினதால்....  ஒரு வாய் காஃபிக்கு   மனசு அலையுது. நேரே போனது காண்டீனுக்குத்தான்.

இட்லியும், காஃபியுமா  முடிச்சுக்கிட்டு, ஸ்ரீபுரம்   போகணும்.  'பெரிய கோவிலில்' எட்டுமணிக்கு பூஜை ஆரம்பிச்சுருமேன்னு  காலை எட்டிப்போட்டு முதலில்  துர்கை தரிசனத்துக்குப் போனோம். நிகுநிகுன்னு  நிற்கிறாள்! முகத்தில் எப்பவும் மாறாத புன்முறுவல்!   சாமின்ற பயம் வர்றதில்லை....



சொந்த அம்மாவைப் பார்க்கறதுபோல் ஒரு உணர்வுதான் எப்பவும்!  அவளுக்கும் தன் பொண்ணைப் பார்க்கறது மாதிரிதான் இருந்துருக்கும்! உஷத்காலப் பூஜை  முடிஞ்சு  அலங்காரத்தில் மின்னறாள்! இன்றைக்கு  பவுர்ணமி என்பதால் சாயங்காலம் பகவதி ஸேவை உண்டு!

எதிரே  காயத்ரி மண்டபம் யாகசாலை பளிச்ன்னு சுத்தமா இருக்கு!   அடுத்த மண்டபத்தில் யோகா !  ராமராஜ்ய மக்கள் சிலர் பயிற்சியில்!  காலை வேளை, சுத்தமான காற்று, மரங்களும் செடிகளும் நிறைஞ்ச தோட்டம், பறவைகளின் இனிமையான  குரலிசை தவிர அமைதியான இடம் எல்லாம் மனசை  இழுக்குது என்பது சத்தியம்!

வாம்மான்னு  தும்பிக்கைத் தூக்கி வரவேற்பு கொடுத்தது ஐராவதம் :-)
புதுசா சரணம், அபயம் ஐஸ்வர்யம் னு  ஒரு  'சிற்பம்'  வச்சுருக்காங்க.
ராமராஜ்யத்துலே எனக்குப் பிடிச்ச விஷயமே....   'கோவிலைக் கட்டியாச்சு, நம்ம வேலை முடிஞ்சது'ன்னு இல்லாம புதுசுபுதுசா எதாவது  செஞ்சுக்கிட்டே இருக்காங்கன்றதுதான்!  எப்பவும் புதுமைகள் கூடிக்கிட்டேதான் போகுது!
இந்த  ராமராஜ்யத்தோடு சேர்ந்து இயங்கும் கல்விக்கூடம் இருப்பதால்  பிள்ளைகள்  வரையும் ஓவியங்கள் அங்கங்கே  வளாகம் முழுசும் இருக்கும்!  பார்க்கப் பார்க்க நமக்குக் கண்ணும் மனசும் பரபரன்னு நமக்கு சலிக்கவே சலிக்காது!



பூரணப்ரம்மம் கோவிலுக்குள் போனோம்.  முதற்பார்வையில் சட்னு கண்ணைக் கட்டிப்போடும் விஸ்தாரமான  முற்றம். அழகுத் தூண்களும் பளிங்குத் தரையுமா அந்த சுத்தமே ...  ஹைய்யோ!!!

'பெருமாள் அலங்காரத்தில்'  இருந்தார் பெருமாள் :-)   சிவன், முருகன், அம்பாள்,  க்ருஷ்ணன்ன்னு    காலத்துக்கேத்த வேஷம் போட்டுக்கறதில் கெட்டியாக்கும், கேட்டோ :-)

(இந்தப் பதிவை எழுதும் இன்று நவராத்ரி முதல் நாளுக்காக,  கர்பரக்ஷாம்பிகை கோலம் கொண்டு காட்சி தர்றார் எம் பெருமாள்!  மாலையில் இவரே பாரதி கண்ணம்மா !!! )

பெருமாளைக் கும்பிட்டுக்கிட்டுப்போய்  நீளப்படிகளில் உக்கார்ந்தோம்.  திண்ணை போன்ற அமைப்பு நமக்கிரு பக்கங்களிலும் இருக்கு. யார் வேணுமுன்னாலும் அவரவர் இஷ்டம் போல்  உக்கார்ந்துக்கலாம். இங்கே உக்காராதே... அங்கே உக்காராதேன்ற  கெடுபிடி, நாட்டாமைகள் எல்லாம்  இங்கே இல்லவே இல்லை.
எட்டடிக்கப் பத்து நிமிட் இருக்கும்போதே நம்ம பாபாஜி உள்ளே வந்தார். நேராப் போய் பூரணப்ரம்மத்துக்கு  ஒரு கும்பிடு போட்டுட்டு,   முற்றத்தில் இருக்கும்  மக்களிடம் வந்து  குசலம் விசாரிச்சுட்டு, அவருக்கான  இருக்கையில் போய்  உக்கார்ந்துக்கறது வழக்கம்.
நம்மைக் கண்டதும், 'எப்ப வந்தீங்க'ன்னு  விசாரிச்சார்.  ஊரை விட்டுக் கிளம்பி  மூணு வாரம் ஆச்சு. சென்னைக்கு வந்து  அஞ்சுநாளாச்சுன்னு கணக்கு சொன்னேன் :-)

அவர் இருக்கைக்குப் போனதும்  மக்கள் போய் ரெண்டொரு வார்த்தைகள் பேசலாம், வணங்கலாம்....   சம்ப்ரதாயமா  ஒன்னும் இல்லை.  தன்னைச் சுத்தி   உதவியாளர்கள் என்ற பெயரில்   'அரண்' எல்லாம் ஒன்னுமில்லை. அவர்கள் உதவியாளர்கள் மட்டுமே!  தவிர  எல்லோரையும் ஒரே மாதிரி நடத்தும் பண்பு!  அதிதி  உபசாரம் அதிகம்.  ராமராஜ்யத்தில்  வசிக்கும் சுமார் முன்னூறு குடும்ப மக்களுக்கும்  அதிதி உபசாரம்  முக்கியமான ஒன்னு!  யாரையும் வேற்றுமுகமாப் பார்க்கவே மாட்டாங்க. நாம் அப்படியே போய் ஜோதியில் கலந்துக்க வேண்டியதுதான் !

இதெல்லாம்தான் என்னைத் திரும்பத்திரும்பப் போகத்தூண்டும் சமாச்சாரம்!

கிட்டப்போனதும்  முதலில் தன் கையால் எதாவது ஒரு இனிப்போ பழமோ நமக்குக் கொடுத்துட்டுத்தான் பேசவே ஆரம்பிப்பார்!  அன்பர்கள்  கொண்டு போகும் அன்பளிப்புகளைத் தொட்டு ஆசி வழங்குவதோடு சரி.


நாங்களும் போய் வணங்கிட்டு,  புள்ளையாருக்கு வஸ்திரங்களும்,  பாபாவுக்குப் பொன்னாடையும் ஒரு மரியாதை நிமித்தமாக் கொண்டு வந்துருக்கோம் என்றவுடன்,  பையைத் தொட்டு ஆசீர்வதிச்சுட்டுப் புள்ளையாருக்கு  நீங்களே கொண்டுபோய் சார்த்திட்டுப்,  பொன்னாடையை உங்க விருப்பமுள்ள  ஸ்வாமிக்குப் போர்த்துங்கோன்னுட்டு பக்கத்தில் இருந்த  நபரிடம்  நமக்கு உதவி செய்யச் சொன்னார்.

நமக்குத் தெரிஞ்ச இடம் என்பதால் நாங்களே போறோமுன்னு சொல்லிட்டு,   ஈசனின் நெற்றிக் கண்ணுக்குள் இருக்கும் புள்ளையாரை நோக்கிப் போனோம்.
பிரமாண்டமாய் ஒரு சிவலிங்கம். நெற்றிப்பட்டையின் நடுவில் நெற்றிக்கண். அந்தக் கண் வழியாக நாமும் பார்க்கலாம்.  உள்ளே புள்ளையார் சந்நிதி!  சந்நிதிக்குள் போக படிகள் இருக்கு!
வஸ்திரம் சார்த்திய பிறகு, நாங்கள்  பூரணப்ரம்மம் கோவிலின் முன்னே இருக்கும்  யாக   மண்டபத்தில் புதுசா(அப்போ! ) அமைச்சுருக்கும் லக்ஷ்மிநாராயணருக்குப் பொன்னாடை சார்த்தினோம். பட்டர் அழகா மடிச்சு பெருமாளின் தோளில் போட்டார்.
ஏற்கெனவே பல பதிவுகள்  ராமராஜ்யத்தைப் பற்றி எழுதி இருக்கேன். அப்போ பார்க்காதவர்கள் விருப்பம் என்றால் சாம்பிளுக்கு இங்கே க்ளிக்கலாம் :-)

இங்கேயும்

இங்கேயும்


அதுக்குள்ளே சத் சங்கம் கூடி, ஒளியில்  காட்சி அளிக்கும் தெய்வ உருவங்களைப் பத்திப் பேசிக்கிட்டு இருந்தார் பாபாஜி. நானும் பலமுறை  அக்னியில் பார்த்து ஆச்சரியப்பட்டு இருக்கேன்.
பெருமாளுக்குத் தளிகை சமர்ப்பிக்கும் நேரம் வந்தாச்சு.  முழுக்க முழுக்க மகளிரணியின் சேவை!  (அதானே....  நாங்க சமைச்சோம். நாங்களே  பெருமாளுக்கும் படைப்போம்!   எனக்கு ரொம்பப் பிடிச்சுருக்கு !)     அடுக்களையில் இருக்கும் அன்னபூரணி சின்னச் சிவிகையில் ஏறி, அன்றைய தளிகைக்கான நைவேத்யங்களுடன் பவனி வருவாள் !
சனிக்கிழமை ஸ்பெஷல் இது!  குறைந்த பட்சம் பதினைஞ்சு ஐட்டங்களாவது  இருக்கும். கூடி வந்தால் இருபத்தியொன்னு!

பெருமாளுக்கும், மற்ற சந்நிதிகளில் உள்ள கடவுளர்களுக்கும் சமர்ப்பித்தவுடன்,  மக்களுக்கும் சமர்ப்பணம் ஆச்சு.  அதுக்குள்ளே நமக்கு ரெண்டு தட்டுகள் நிறைய ப்ரஸாதங்களை நிறைச்சு வச்சுக் கொண்டு வந்து கொடுத்தார் ஒரு  அன்பர்.  பாபா சொல்லி அனுப்பினாராம். அதிதி உபசாரம்!
கழுத்துவரை சாப்ட்டாச்சு:-)
பழைய நண்பர்கள் பலரையும் பார்த்துப்பேசின்னு கொஞ்சநேரம் போச்சு.
பாபாவும்  யாகமண்டபத்தில் வந்து உக்கார்ந்தார்.  நாங்களும் போய்க் கொஞ்சநேரம் அவரோடு பேசிக்கிட்டு இருந்தோம். போனமுறை நாங்கள் பார்த்த கல்யாணமண்டபம் கட்டி முடிச்சாச்சாம்.  பள்ளிக்கூடத்துக்கும் புதுக் கட்டிடங்கள் உருவாகிக்கிட்டு இருக்கு!  கட்டுமானப்பணிகளைச் சுத்திக் காட்ட  ஒரு  குட்டிப்பெண்ணை எங்களோடு அனுப்பினார்.

பெரிய குடும்பமா இருப்பதால்  அங்கே என்னென்ன விரிவாக்கம் நடக்குது என்பதெல்லாம் எல்லோருக்கும் அத்துபடி.  பெரியவங்க சமாச்சாரமுன்னு  பிள்ளைகளை ஒதுக்கி வைக்கறதில்லை.  எல்லாம்  வளரும் தலைமுறைக்கானது இல்லையோ!

கல்யாண மண்டபம் அட்டகாசமா இருக்கு!  பள்ளிக்கூடக் கட்டடம் ப்ரமாண்டம். கல்லூரிக்குள் நுழைஞ்சாப்போல!  அநேகமா அடுத்த வருசம் முதல் கல்லூரிப் படிப்பும் இங்கேயே தொடரும் வகையில் இருக்கும் போல!
மனசு நிறைஞ்சு போச்சுன்னு கிளம்பினோம். போயிட்டு வர்றோமுன்னு சொல்லிக்கப்போனால்....  இங்கே தங்கலையான்னு  கேக்கறார்.

இந்த முறை கொஞ்சம் நேரக் குறைவு . முக்திநாத், பத்ரிநாத் பயணங்களை நல்லபடியா நடத்திக் கொடுத்துட்டார் பெருமாள். இன்னும்  தமிழ்நாட்டுலே நாலு  கோவில்கள் பாக்கி இருக்கு. அங்கே போய் வரலாமுன்னு இருக்கோம் என்றதும், எல்லாம் நல்லபடி நடக்குமுன்னு  சொல்லி ஆசி  வழங்கினார்.
இவருடன் பேசும்போது,  ஒரு   ஆன்மிகத்தலைவருடன் பேசறோம் என்ற எண்ணமே  வர்றதில்லை. குடும்பத்தின் மூத்த அண்ணனுடன் பேசறாப்போலத்தான் எனக்கொரு உணர்வு.  அவரும்  பரிவோடு இருக்கார்.  அவர் கொள்கையும் அதுதான்.  Love all and Love is all!  அன்பே சிவம், அன்பே பெருமாள்!  அன்பே அனைத்தும்.
மனத்திருப்தியுடன் லோட்டஸ் வந்து சேர்ந்தோம்.  மிளகாத்தம்மன் சந்நிதி மூடி இருந்தது.  வேளை வரலை......

 மவுண்ட் ரோடில் ஒரு வீட்டு மாடியில் எம்ஜியார் இருந்தார் !


தொடரும்.....  :-)


7 comments:

said...

நன்றி

said...

வாங்க விஸ்வநாத்.

வருகைக்கு நன்றி.

said...

கோவில் தரிசனமும் ஆச்சு. பிரசாதமும் உங்கள் தயவுல சாப்பிட்டாச்சு. தொடர்கிறேன்.

said...

அருமையான படங்கள்

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

தொடர்வருகைக்கு நன்றி. மீண்டும் வருக !

said...

வாங்க ராஜி.

ரசித்தமைக்கு நன்றீஸ்ப்பா !

said...

வழக்கம் போல படங்கள் அழகு. தொடர்கிறேன்.