Monday, September 25, 2017

தென்றலும்..... ஒரு புயலுமா இருக்கே..... (இந்திய மண்ணில் பயணம் 54)

பயணங்களில் பதிவர் சந்திப்புகளையெல்லாம் ரொம்பவே முன்கூட்டி  அமைச்சுக்கறது  கொஞ்சம் கஷ்டம்தான். நண்பர்களை சந்திக்க ஆவல் இருந்தாலும்  பல காரணங்களால் நடைமுறைக்கு ஒத்து வர்றதில்லை.
கிடைக்கும் நேரத்தைப் பொறுத்து,  நண்பர்களுக்கு  ஃபோன் செஞ்சு அவுங்களுக்கு சரிப்படுமான்னு  கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு எட்டிப் பார்த்துட்டு  வரணும். அப்படித்தான்  இன்று புதுகைத் தென்றல் வீடுவரை போக முடிஞ்சது.
ஏற்கெனவே இவுங்களை ஹைதராபாத் நகரில்  சந்திச்சு அவுங்களோடு கொஞ்சம் ஊர் சுத்தியும் இருக்கோம் :-)பிள்ளைகளுக்கும் நம்மை அப்பப் பரிச்சயம் ஆனதால்  ரொம்ப மகிழ்ச்சியா நம்மை  வரவேற்றாங்கன்னு தனியாச் சொல்லணும்தான் :-)

இந்த ஏழு வருஷ காலத்தில்  பள்ளிக்கூடம் பருவம் போய் கல்லூரிக் காலம் வந்துருச்சு!

அன்பு நிறைந்த பேச்சுகளால்  சட்னு ஒரு மணி நேரம் ஓடியே போச்சு. வீட்டை ரொம்ப அழகா அலங்கரிச்சு வச்சுருக்காங்க புதுகைத் தென்றல். ஹைதை வீடும் அட்டகாசமா இருந்துச்சு.

ப்ளாஸ்டிக்  பைகளுக்கு எதிரியா இருப்பதால்,  காய்கறிகளை ஃபிரிட்ஜில்  வாடாம வைக்கும் துணிப் பைகளுக்கு ஆதரவாளரா மாறி இருக்காங்க. நமக்கும் நம்ம ஷேர் கிடைச்சது :-)
அங்கிருந்து கிளம்பி நம்ம வள்ளுவர் கோட்டம் (சென்னை) கைவினைப்பொருட்கள், துணிமணிகள் கண்காட்சி நடக்குதுன்னு  அங்கேயும் போய் எட்டிப் பார்த்தோம். என்னுடைய தேடல் கத்வால் ஸாரி.
ஆந்த்ரா மாநில ஸ்டால்களில் (தெலங்கானா உள்பட)தேடிப்பார்த்தும்  அவுங்க 'ஙே' ன்னு முழிச்சதுதான் மிச்சம்.  போனது வீணாக வேணாமேன்னு   வாசல்  நிலைப்படி  தோரணங்கள் ரெண்டு வாங்கினோம். கல்யாண வீட்டுக்குக் கட்டுனா அம்சமா இருக்காது?
கண் திருஷ்டி படாம இருக்க பச்சைமிளகாய் எலுமிச்சம் பழம் கட்டி விட்டுக்கிட்டு இருக்கும் மக்களுக்காக  கெடாமல் இருக்கும் தோரணம் கூட விக்கறாங்க. ஃப்ரெஷாப் போட்டா, சட்னு சமையலுக்காவது ஆகும். ப்ளாஸ்டிக் பச்சை மொளகாய் வேஸ்டு இல்லையோ! 

இன்னிக்குப் பொழுது இப்படிப் போச்சு. மறுநாள்  கத்வாலைத் தேடணும். வலைவீசிப் பார்த்ததில்  சென்னை போத்தீஸ் கடையில் இருக்குன்னு தெரிஞ்சது.

வேறென்ன வேலை......  மறுநாளே போத்தீஸ் போயாச்சு.   கத்வால்னு கேட்டத்துக்கு என்னென்னவோ எடுத்து காமிச்சாங்க.  சரியானதாத் தெரியலை.   கொஞ்சம் சுமாரா இருந்த ஒரு புடவையை வாங்கும்போதே... யானை கண்ணுலே ஆப்ட்டது. போதாததுக்கு பச்சை வேற!  விடமுடியலை.
சம்பந்தியம்மாளுக்கு  ஒரு  புடவை வாங்கறோம். சம்பத்தி சீர்?  அப்படியும் வச்சுக்கலாம்.  தெரிவு செய்ததை மகளுக்குப் படமா அனுப்பி, அப்ரூவ் ஆனதும் வாங்கினோம்.  இதை வெட்டி, கவுன் தைச்சுக்குவாங்களாம்.  முந்தானையை ஃப்ரேம் போட்டு மாட்டிக்கலாமுன்னு ஐடியா கொடுத்தேன்.

(ஐயோ....  வெட்டவா போறீங்க?   )

நாளைக்குக் காலையில் நமக்கு  சங்கரநேத்ராலயாவில்  ஒரு அப்பாய்ன்ட்மென்ட் இருக்கு.

எதுக்கு?

கொசுவத்தி ஏத்தித்தான் ஆகணும். இதோ ஏத்தியாச்......  சம்பவம் நடந்தது.... போன வருசம் ஏப்ரல் 17.  2016

 நரைதிரைன்னு வயசானால் வருமுன்னு சொல்றது இந்தத் திரைதானோ?

நம்ம கோபால் தூங்கிக் கண்விழிச்சது பினாங்குலே. எழுந்துருச்சப்பவே என்னமோ ஒரு மாதிரி இருக்கு காட்சிகள். சரியாத் தெரியலையே.....  ஒரே மசமசன்னு.....  இன்னும்  மூணு மணி நேரத்துலே ஏர்ப்போர்ட்டுலே இருக்கணும். அதனால் மடமடன்னு  காலை வேலைகளை முடிச்சுக்கிட்டுக் கிளம்பியாச்.

அங்கிருந்து நேரா சிங்கை.  ஒரு பதினொன்னே முக்காலுக்குப் போய்ச் சேர்ந்ததும், சிங்கைத்தோழி எழுத்தாளர் சித்ரா ரமேஷ் வீட்டுக்குப் போய்  விருந்து முடிச்சுக்கிட்டு, அவுங்களோடு கொஞ்சம் வீட்டுக் காரியங்கள் பேசிட்டு,  சித்ரா 'அன்பளிக்கப்போகும் புத்தகங்களை'  வாங்கிக்கிட்டு (இது ரொம்பவே முக்கியம்!) ஒரு  மூணரை நாலு மணி போல கிளம்பி செராங்கூன் ரோடு.

இந்த ஏப்ரல் மாசம் சிங்கையில் தமிழ்மொழி விழா என்பதால் சித்ரா டீச்சர்,  பள்ளிக்கூட விழா  ஒத்திகைக்குப் போயிட்டு அவசர அவசரமா வந்து சந்திப்பில் கலந்துக்கிட்டாங்களாம்.

ஃபேரர்பார்க் ஸ்டேஷனில் இறங்கி நம்ம சிங்கைச் சீனுவுக்கு ஒரு அட்டென்டன்ஸ். ஹை அண்ட் பை ஆனதும் நேரா நம்ம பழைய கோமளவிலாஸ். போற போக்குலே வீரமாகாளிக்கு ஒரு ஸல்யூட்.  கோமளவிலாஸில் ஒரு  பஜ்ஜி அண்ட் காஃபி.  தொட்டடுத்து இருக்கும் இதே கோமளவிலாஸின் நொறுக்குத்தீனிக் கடையில் கொஞ்சம் சீடை, மிக்ஸர், ரிப்பன் , முறுக்கு இப்படி நொறுக்ஸ். அங்கே போறதே இதை வாங்கிக்கத்தான்:-) எங்கூர்  ஏர்ப்போர்ட் மோப்பநாய்களுக்கு இந்த தீனி வாசம்  28 வருசமாப் பழக்கப்பட்டுருக்கு, நம்ம கைங்கரியத்தால்:-)

வாங்கின அடுத்த  நிமிசம் டாக்ஸி பிடிச்சு ஏர்ப்போர்ட் வந்தாச்சு.
சாயங்காலம் ஏழம்பதுக்கு விமானம் ஏறி  மறுநாள் காலை  பத்துமணிக்கு  ஊர்வந்து இறங்கியாச்சு. ராத்திரி சுமாராத்தான் தூங்குனாராம்.  கண்ணுவேற சரியாத் தெரியலை. ஒன்னும் படிக்க முடியலைன்னு அது ஒரு கவலை.

வீட்டுக்கு வந்தப்ப மணி  பத்தரை.  முதல் தகவல் கண் தெரியலை என்பதுதான்.  ரெண்டு கண்ணுமா? இல்லை.  இடது கண் தெரியுது. வலது கண்ணில்  கருப்பா இருக்கு. கருப்புக் கண்ணை மூடிக்கிட்டால்  இடக்கண்ணில் நல்லாவே தெரியுது.

இன்னும் கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ் .....

வலது கண்ணில்  மேல்பாதி பார்வை  மசமச. அப்புறமொரு அரைவட்டக் கருப்புன்னதும் உஷாரானேன்.  விழித்திரை..........

உடனே நம்ம உள்ளூர் தோழிக்கு  (மருத்துவர்) ஃபோன் செஞ்சு சமாச்சாரம் சொன்னதுக்கு முதலில் ரத்த அழுத்தம் எவ்ளோ இருக்கு பார். காய்ச்சல் இருக்கா?

காய்ச்சல் இல்லை. ரத்த அழுத்தம்  வழக்கம்போல கொஞ்சம் அதிகம்தான். அதிலும் வீட்டில் பார்த்தால் எப்போதும்  கொஞ்சம் அதிகமேதான். அதான் கிட்டத்தட்ட 42 வருசம் ஆச்சுல்லையோ:-)  வீடு எப்பவுமே டிமாண்டிங்....

பேசாம  நம்மூரு  ஆஸ்பத்திரி எமர்ஜென்ஸிக்குப் போயிடலாமான்னு ஒரு யோசனை. இன்றைக்கு ஞாயிறு என்பதால்  அங்கே  கண்பிரிவில் டாக்டர்ஸ் ஆன்காலில் தான். நாம்போனபிறகு அவுங்களைக் கூப்பிட்டனுப்பி, வர்றதுக்குள்ளே விடிஞ்சுரும். வலி இல்லைன்னா நாளைக்கு டாக்டரிடம் காமிக்கலாம்னு தோழி சொன்னாங்க.

நம்ம அமெரிக்கத் தோழி ஒருவரிடம் (இவரும் மருத்துவர்தான்) சமாச்சாரத்தைச் சொன்னதுக்கு  அவுங்களும்  நாளைக்குக் கட்டாயம் டாக்டரிடம் கூட்டிப்போகணுமுன்னு  சொல்லிட்டாங்க. சொல்ற அடையாளத்தை வச்சுப் பார்த்தால்  இது விழித்திரை சம்பந்தமானதுதான்னு சொன்னாங்க.

பொழுது எப்படா விடியுமுன்னு காத்திருந்து காலை எட்டேகாலுக்கு நம்ம கண்மருத்துவருக்கு  ஃபோன் செஞ்சால் அவர் ஒரு வாரம் லீவுலே போயிருக்காராம். அட ராமா.....   இந்த விசேஷ மருத்துவர்களுக்கான இடத்தில் இன்னும் ஆறு கண் மருத்துவர்கள் இருக்காங்களே... அவர்களில் யாரையாவது  பார்க்கமுடியுமான்னு  கேட்டதுக்கு  இன்னொரு மருத்துவரிடம் கேட்டுட்டு உங்களுக்கு உடனே தகவல் சொல்றேன்னு சொன்னாங்க வரவேற்பில் இருந்த பெண். கூடவே நீங்க தமிழான்னு  ஒரு கேள்வி!  ஆமாங்க. நானும்தான். கொஞ்சநேரத்துலே கூப்பிடறேன்னு சொன்னாங்க.

அதேபோல் ஒரு காமணியில் கூப்பிட்டு  டாக்டர் ஸோ அண்ட் ஸோ உங்களை வரச்சொன்னார். எப்ப வருவீங்கன்னதும்,  காலையில் இருந்து ரெடியாத்தான் இருக்கோம். இதோ புறப்பட்டாச்சு.

பார்வை சரியில்லாதவர் வண்டி ஓட்ட முடியுமா?  நாந்தான் ஓட்டறேன். ரொம்ப வருசமா வண்டியை ஓட்டாததால் கொஞ்சம்  நெர்வஸா இருக்குன்னாலும் சமாளிச்சு டாக்டர் க்ளினிக் போய்ச் சேர்ந்துட்டோம். முதலில்  கண் பார்வை பரிசோதனை. அஞ்சாவது  லைன் படி, மூணாவது லைன் படி இப்படி.

இடது கண் ஓக்கே. இப்ப ரெண்டு வாரத்துக்கு முன்னால்தான் இவருக்கு  ட்ரைவிங் லைசன்ஸ் புதுப்பிக்க ஒரு கண் பரிசோதனைக்குப் போயிருந்தோம். அப்ப எல்லாம் நல்லாத்தானே இருந்துச்சு.  இப்ப என்னடா திடீர்னு....  (என் கவலை எனக்கு)

அப்புறம் இன்னொரு அறைக்குப்போய்  இன்னொரு கண் மெஷீனில் பரிசோதனை. நேரடியா என்னென்னமோ டிஸைன் மானிட்டரில் தெரியுதே....   மெடிக்கல் டெக்னாலஜி ஈஸ் அமேஸிங்.......
மூணாவதா டாக்டர் சந்திப்பு. அவரும் பரிசோதனை செஞ்சு பார்த்துட்டு  ரெடீனா டிடாச்டு என்பதை கன்ஃபர்ம் செஞ்சார். தீர்வு என்ன? ஸர்ஜரிதான்.

இன்றைக்கே செஞ்சாகணும். என்னமாதிரி ஸர்ஜரின்னு நமக்கு விளக்க மேஜைமேல் இருந்த கண்ணை எடுத்து டபக்குன்னு திறந்து விளக்கினார்.  கண்ணுக்குள்ளே  கேஸ் ரொப்புவாங்களாம். அப்புறம் கொஞ்சநாளுக்கு ரொம்ப கவனமா இருக்கணும். இப்படித் தூங்கணும் அப்படி இருக்கணும் என்றெல்லாம் சொல்லிட்டு, இப்போ கண்ணின் கொள்ளளவு எவ்ளோன்னு  அளக்கணும். அதுக்கேத்தமாதிரி வாயுவை நிரப்பணும்னு இன்னொரு அறைக்கு அனுப்பினார்.  எதாவது கேள்வி இருக்கா? இருக்கு.

ஸர்ஜரி சதர்ன் க்ராஸிலா?  இல்லை. இங்கேதான். ஜஸ்ட் அ கப்புள் ஆஃப் ப்ளாக்ஸ் அவே!

யார் இந்த ஆபரேஷன் செய்யப்போறாங்க?  நாந்தான் என்றார்.

அடுத்த அறையில் கண்ணளவு எல்லாம் ஆச்சு.  எந்த மாதிரி சிகிச்சைன்னு விளக்கிச்சொல்லும்  தகவல் படிமங்கள்  கொடுத்தாங்க. Vitrectomy Surgery. என்னன்னு கண்டேன்?
உடனே பரபரன்னு அதுக்கான வேலைகள் ஆரம்பிச்சது.

கொஞ்ச நேரம் காத்திருக்கச் சொல்லிட்டு, பத்து நிமிசத்துலே ஸர்ஜரிக்குண்டான படிவங்களெல்லாம் கொடுத்து  நிரப்பிக்கிட்டு மூணு மணிக்கு  கண்ணாஸ்பத்திரிக்கு வந்து சேரணுமுன்னு சொன்னதும் வீட்டுக்கு வந்தோம். மறுநாள்  போஸ்ட் ஆபரேடிவ் கன்ஸல்டேஷன்  நேரமும் எழுதிக் கொடுத்துட்டாங்க.  கிளம்புமுன் தமிழ் பேசியவரைத் தேடி நன்றி சொல்லிட்டு வந்தோம். இங்கே பத்து வருசமா இருக்காங்களாம். சிங்காரச்சென்னைதான்.

  இதுக்கிடையில் அங்கே ஒவ்வொரு பரிசோதனைக்கு இடையிலும் இருந்த  காத்திருப்பு நேரத்தில் மகளுக்கு சேதி அனுப்பினேன்.

வியப்போடு வந்த முதல்  பதில்... செல்ஃபோன் கொண்டு போயிருக்கியா என்ன?

ஹிஹி  ஆமாம். இங்கே  இலவச வைஃபை  இருக்கு.

எங்கே இருக்கீங்க?  எங்கிட்டே ஏன் சொல்லலை? அப்பா கண் சரி இல்லைன்னா ட்ரைவ் பண்ணக்கூடாதே.  பின்னே  யார் ட்ரைவ் பண்ணினது?

ஸ்பெஷலிஸ்ட்களுக்கான பில்டிங்லே இருக்கோம். செயின்ட் ஜியார்ஜ் ஆஸ்பத்ரி வளாகத்தில். உனக்கு காலையில் வேலைக்குப் போகணுமேன்னுதான் சொல்லலை. நாந்தான் ட்ரைவர்.

இது ஃபேமிலி எமெர்ஜன்ஸியாச்சே. எனக்குச் சொல்லி இருக்கணும். இதோ கிளம்பி வர்றேன்.

வேணாம். இன்றைக்கு மதியம் ஸர்ஜரின்னு முடிவு பண்ணியாச்சு.  நாங்க இப்ப வீட்டுக்குப் போயிட்டு  மூணு மணிக்கு கண்ணாஸ்பத்ரிக்குப் போயிருவோம். நாலுமணி நேரம்வரை ஆகும் மொத்தத்துக்கும். அங்கே  மாலை 7 மணி ஆகிருமாம். நீ வேலையில் இருந்து  மாலை அஞ்சுக்கு வரும்போது ஆஸ்பத்ரிக்கு வந்துட்டுப் போயேன்.

இல்லை. நான்  பகல் ரெண்டரைக்கு வந்து உங்களை பிக்கப் செஞ்சு கண்ணாஸ்பத்ரியில் விடப் போறேன்.

முழு மயக்கம் கொடுக்கப்போறதில்லை என்பதால் பகல் சாப்பாடு சாப்பிட்டால் பிரச்சனை இல்லை.  எதுக்கும் இருக்கட்டுமுன்னு பகல் 12 மணிக்கே லஞ்சு கொடுத்தேன்.  மூணு மணிக்கு  ஆஸ்பத்ரிக்குப் போனால் எப்படியும் முன்னேற்பாடுகள் முடிய நாலு ஆகிரும்.  அதுக்குள்ளே  பகலுணவு ஜீரணிச்சுருமேன்னு ஒரு கணக்கு:-)

உக்கார்ந்து நிரப்ப வேண்டிய படிவங்களை நிரப்ப ஆரம்பிச்சோம். வருசப்பிறப்புக்கு என்ன நைவேத்யம் பண்ணேன்னு கேக்கலையே தவிர மத்ததெல்லாம் கேட்டுருந்தாங்க.  முக்கியமா இப்ப என்னென்ன மருந்து எடுக்கறோம். எதாவது அலர்ஜி தரும் மருந்து உண்டா? அதி முக்கியமா......   இந்த ஸர்ஜரிக்கு  எப்படி காசு கட்டப் போறே...? கேஷா, கார்டா?  கார்டுன்னா அதன் விவரம் இன்னபிற. நமக்கு மெடிக்கல் இன்ஷூரன்ஸ் இருக்குன்றதையும் அதன்  காப்பீடு எண்களையும் எழுதியாச்.  சிகிச்சை முடிஞ்சாட்டு  ஒரு நைட் தங்கற எண்ணம் இருந்தால்  நைட்டி,  மற்ற  தேவையானவைகளையும் எடுத்துக்கணுமாம்.

ரெண்டரைக்கு 'டான்' மகள் வந்து  கூட்டிக்கிட்டுப் போனாள். கிறைஸ்ட்சர்ச்  ஐ ஸர்ஜரின்னு  இங்கேயே நம்ம கண்டாக்டர்ஸ் க்ளினிக்குக்கு  அடுத்த வீதியில் இருக்கு. அங்கேதான் ஆபரேஷன். எங்கூர் நிலநடுக்கம் வந்து  அழிஞ்சுபோன ஒரு இடத்தில் புதுசாக் கட்டுன கட்டடம். இதுவழியாத்தான் வாராவாரம் நம்ம கோவிலுக்குப் போவோம். அஸ்திவாரம் போட்டதில் இருந்து கட்டடம் கட்டி முடியும்வரை பார்த்துக்கிட்டே இருந்ததுதான். இதுலே கண்ணாஸ்பத்திரி வருதுன்னு தெரியாமப் போச்சு பாருங்க. இந்தக் கட்டடத்துக்கு எதோ அவார்ட்கூட கிடைச்சுருக்கு. Eco building.


அட்டகாசமான வரவேற்பு. ஆளுக்கொரு பேனா எடுத்துக்கணுமாம்.  கையைச் சுத்தப்படுத்திக்கும் திரவம் நிரப்பிய பேனா அது:-)  உள்ளே கொண்டு போய்  எங்கே விருப்பமோ அங்கே வசதியா உக்காரச் சொல்லிட்டாங்க. வைஃபைக்கான பாஸ்வேர்ட் கிடைச்சது. மூணுபேரும் அவுங்கவுங்க செல்லுலே போட்டுக்கிட்டோம்.


நல்ல பெரிய ஹால். வசதியான இருக்கைகள்.  கண்ணாடிச்சுவர் ஓரமாவே திண்ணை இருக்கைகள். எனக்கு ரொம்பப் பிடிக்கும். நல்லகாலமா இன்றைக்கு வெயில்வேற இருக்கு. அப்படியே குளிர் காய்ஞ்சுக்கலாம். ஜாலி!


நான் 'குறையொன்றுமில்லை' முக்கூர் லக்ஷ்மி நரசிம்மாச்சார்யார் கையோடு கொண்டு போயிருந்தேன்.  'கொஞ்ச நேரம் இருந்துட்டு மகள்  வேலைக்குத் திரும்பப் போயிருவாள். பிறகு வேலை முடிஞ்சு அஞ்சரைக்கு வருவாள்'னு நினைச்சால்  ...  இல்லையாம்.  அப்பாவுக்கு மாரல் சப்போர்ட்.  அவ்ளோதான். தகப்பன் தலையில் ரெண்டு டன் ஐஸ்:-)

கோபாலை உள்ளே இன்னொரு அறைக்குக் கொண்டுபோய் விவரம் எல்லாம் சரிபார்த்துட்டு  ரத்த அழுத்தம் எடுத்துப் பார்த்து  கையில் பெயர் பட்டி போட்டு அனுப்புனாங்க. எனக்கு  ரெண்டு வருசம் முன்னால்  ஐஓஎல் மாத்துன அனுபவம் இருக்கே. ஆரம்ப சமாச்சாரங்கள்  அப்படித்தான் எல்லாம் நடக்கும்னு இருந்தேன்.

ஸர்ஜரி முடிஞ்ச நோயாளிகள்  கண்ணில் பட்டி போட்டுக்கிட்டு அப்பப்ப வர்றதும் கொஞ்ச நேரத்துலே டிஸ்சார்ஜ் ஆகிப் போறதுமா இருக்காங்க. நானே மூணு பேரைப் பார்த்தேன்.

கொஞ்ச நேரம் கழிச்சு நர்ஸம்மா வந்து கண்ணில் சொட்டு மருந்து போட்டாங்க. கூடவே ஒரு பையும் கொடுத்தாங்க. 'நோயாளி' தன் பொருட்களையும் விலை உயர்ந்த நகை நட்டுக்களையும் போட்டுக்கலாம். அதை பத்திரமா லாக்கர்லே வச்சுக் காப்பாத்திக் கொடுப்பாங்க.  காலுக்குப் போட்டுக்க  Anti Slippery socks கொண்டு வந்து கொடுத்தாங்க.  அப்பப்ப வந்து கண்ணுலே சொட்டு மருந்து.
இப்படியே ஒரு முக்காமணி நேரம் போனதும், பிள்ளை புடிச்சுக்கிட்டுப் போறமாதிரி ஒரு நர்ஸிங் ஸ்டாஃப் வந்து க்ளிக்ஸ்க்குப் போஸ் கொடுத்துட்டு கொண்டு போனார்.  எங்களுக்குக் குடிக்க என்ன வேணுமுன்னு கேட்டு  காஃபி, டீ  போட்டுக் கொடுத்தாங்க. கூடவே ஒரு பிஸ்கெட்.
குடிச்சுட்டு அவுங்கவுங்க அவுங்கவுங்க வேலைகளில். அப்பதான் நண்பர் சத்யாவிடமிருந்து  இன்பாக்ஸில் ஒரு தகவல். தென்றலில் துளசிதளத்தைப் பற்றி வந்துருக்குன்னு  அதை அனுப்பி இருந்தார்.

கொஞ்ச நேரம் ஆனப்ப  உள்ளூர் மருத்துவர் தோழி வந்தாங்க. அவுங்க வேலையை முடிச்சுட்டு வீட்டுக்குப் போகும் நேரம். நம்மகூட இருந்து கோபாலின் ஸர்ஜரி முடிஞ்சதும் நம்மை வீட்டில் கொண்டுபோய் விட்டுட்டுப்போறதா ஒரு ப்ளான்.

மகள் அங்கே  நம்மகூடவே இருக்காள்னதும்  ஒரு  முக்காமணி போல பேசிக்கிட்டு இருந்துட்டுக் கிளம்பிப் போனாங்க. ஒருமாசம் கோபால் டிவி பார்க்க விடக்கூடாதுன்னு  சொன்னது எனக்கு ரொம்பப்பிடிச்சுப் போச்சு.  அதை ஒரு ரெண்டு மாசம் ஆக்கக்கூடாதா?

பதிவின் நீளம் கருதி ரெண்டு பகுதிகளாப் போடறேன்.

தொடரும்......:-)

17 comments:

said...

டிவி என்பது நம் வாழ்வின் ஒரு அங்கமாகி விட்ட விந்தையை பல முறை யோசித்துள்ளேன்.

said...

சட்டுன்னு ஒரு எமர்ஜென்சி வந்தா கொஞ்சம் தடுமாறித்தான் சுதாரிக்கிறோம். அந்த ஆண்டவன் தான் அந்நேரத்துல தடுமாற்றத்தைக் கொறச்சு சுதாரிக்க வைக்கனும். எல்லாம் அவன் செயல். கார் ஓட்டி நாளாயிருந்தாலும் சட்டுன்னு எடுத்து ஓட்டீட்டீங்களே. அருமை.

said...

உங்க பதிவில் என்னை பொறாமைப்பட வைக்குறது ரெண்டு விசயம். ஒன்னு பதிவர் சந்திப்பு. ரெண்டாவது ஷாப்பிங். மத்தபடி உங்க பதிவை நானும் லவ் யூம்மா

said...

உங்களது பதிவுகள் நாங்களும் உடன் இருப்பதைப்போல உணரவைக்கின்றன.

said...

// ஒருமாசம் கோபால் டிவி பார்க்க விடக்கூடாதுன்னு சொன்னது எனக்கு ரொம்பப்பிடிச்சுப் போச்சு. அதை ஒரு ரெண்டு மாசம் ஆக்கக்கூடாதா?//
டீவி பாக்கக்கூடாதுன்னு நீங்க 'அன்பா' சொன்னா, சார் கேட்கமாட்டாரா என்ன ?

said...

அப்படியே உங்கள் வாழ்க்கையை கூட இருந்து பார்ப்பதுபோல் தோன்றுகிறது. ஆனால் சமயத்தில் தேதிகள் குழப்பமடையச் செய்கின்றன. இதுவே போன வருஷத்தில் நடந்தது, அதற்குள், வருட ஆரம்பத்தில் நடந்ததை உள்ளே கொண்டுவந்திருக்கிறீர்கள். இப்போது நடப்பது எப்போது வரும்?

said...

வாங்க ஜோதிஜி.

வீட்டுலே அதுவும் ஒரு ஆள். ஐ மீன் வேண்டாத ஆள். கத்திக்கிட்டே கிடக்கும் எப்பப் பார்த்தாலும்..... :-(

நண்பர் வீட்டுக்குப் போனா..... அது பாட்டுக்குக்கத்த, நாம் அதுக்கும் மேலே குரலெடுத்துக் கத்தணும்.

அதை ஸ்விட்ச் ஆஃப் பண்ணனும், குறைஞ்சபட்சம் வால்யூம் குறைக்கணுமுன்னு கூட அவுங்க வீட்டுலே யாருக்கும் தோணாது !!!

said...

வாங்க ஜிரா.

நீச்சல் மாதிரிதான்.... ஒரு நிமிஷம் திகைச்சுட்டு அப்புறம் சுதாரிச்சுக்குவோம். அதான் கற்ற வித்தை வீணாகாதுன்றது !

said...

வாங்க ராஜி.

அடடா.... உள்ளூர் ஆட்கள் எப்ப நினைக்குறீங்களோ அப்பப் போய் ஒவ்வொன்னா கூட வாங்கிக்கலாம். நாங்க?

வரும்போது வாங்கி வந்தால்தான். இல்லைன்னா அடுத்த பயணம் வரை காத்திருப்பு.

பதிவர் சந்திப்பு.... எல்லோரும் பத்துப் பதினாலு வருச நட்பு. அப்பெல்லாம் வலைப் பதிவர்கள் ஒரு குடும்பம் போலதான். ஃபேஸ்புக் போல இல்லை..... :-(

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

கூடவே நீங்கள் எல்லோரும் இருப்பதுதான் இப்படி எழுத வைக்குது :-)

said...

வாங்க விஸ்வநாத்.

என்னத்தை 'அன்பால்' சொல்றது?

இப்பெல்லாம் யாரும் யார் பேச்சையும் கேக்கறது இல்லை :-)

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

இப்ப எழுதும் பதிவுகளுக்கு ஒரு சம்பந்தம் அதுலே இருக்கே..... இல்லைன்னா மொட்டைத் தாதன் குட்டையில் விழுந்தான்னு போயிடாதா?

போனவருசக் கதை இந்த வருஷம். இப்ப நடப்பது அடுத்த வருஷம். ஸோ ஸிம்பிள், கேட்டோ :-)

said...

ஆஸ்பத்திரி படு சுத்தமாக இருக்கிறது. போட்டோ எடுத்தால் சரி என்று போஸ் தருகிறார்களே...

said...

அடாது மழை பெய்தாலும் என்று சொல்வ்துபோல என்ன நேர்ந்தாலும் பதிவுக்கு க்லிக்ஸ் செய்ய மறப்பதிலையே இப்போது கோபால் எப்படி இருக்கிறார்

said...

வாங்க ஸ்ரீராம்..

இங்கே எல்லோரும் இயல்பான வாழ்க்கைக்குப் பழகி இருக்காங்க. க்ளிக்...க்ளிக்.... நோ ஒர்ரீஸ் :-)

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

கோபாலுக்கு இன்னும் 100% சரியாகலை. சிலருக்கு ரெண்டு மூணு வருசம் கூட ஆகுமாம். போனமுறை செக்கப் போனபோது..... இன்னும் ஒரு வருஷம் பார்க்கலாமுன்னு 2018க்கு அப்பாய்ன்ட்மென்ட் கொடுத்துருக்கார் டாக்டர்.

கையில் கெமெரா இல்லைன்னா கை ஒடிஞ்சதுபோல் இருக்கு:-) அநேகமா எப்பவும் கைவசம் செல்ஃபோன் கெமரா இருக்கும்தானே....! க்ளிக் க்ளிக் தான் :-)

said...

புதுகைத் தென்றல் - தில்லியில் ஒரு முறை சந்தித்ததுண்டு.

தொடர்கிறேன்.