Friday, May 12, 2017

யானையை உக்காரவச்சுட்டாங்களே!! (இந்திய மண்ணில் பயணம் 3 )

காலை ஆறு முதலே கங்கையைப் பார்த்துக்கிட்டு இருக்கேன். கிழக்காலெ இருக்கும் ஹிமயமலைத் தொடரின்  அடிவாரத்துலே இருக்கும் ஊராச்சே இது.  மலைக்குப்பின்னால் இருந்து மெள்ள வெளியில் வருவானான்னு  பார்த்தால் சூரியனைக் காணோம். ஒரே  மசமசன்னு  ஃபோகியா இருக்கு.
சாலையில்  வண்டிகளைக்கூடக் காணோம். எப்பவாவது  ஒன்னு ரெண்டு.  காலையில் லேட்டா எழுந்திருக்கும் ஊர்.  ஏழரைக்கு ஷிவாலிக்  மலைத் தொடர்களின்     மூணடுக்கு மலைக்கு மேலே போய்  'நான் இருக்கேனே'ன்னு தலையைக் காமிச்சான் சூரியன்.  பார்த்தபிறகு தான் நிம்மதி ஆச்சு.  வரலையே வரலையேன்ற தவிப்போடவே  காலைக் கடமைகளை முடிச்சு ரெடியாகி இருந்தோம்.
காலை உணவுக்கு மாடிக்குப் போகணும்.  காரிடார் முழுக்க  அங்கங்கே யானைகளா இருக்கு.   காரிடார் முடியும் இடத்தில் காவிக்கண்ணன்  குழலூதிக்கிட்டு இருக்கான்.
அறையிலேயே கவனிச்சேன்...  சின்னச்சின்ன இடங்களில் எல்லாம் பூக்களும் கொடிகளுமா ஒரு  பெயின்டிங்.  கலாரசனை  உள்ளவர்கள் போல !  நமக்கேத்த இடம்தான்னு  மெச்சிக்கிட்டே  மேல்மாடிக்குப்போனா  இன்னொரு இன்ப அதிர்ச்சி.

 ' த ஸிட்டிங் எலிஃபென்ட்'  இதுதான்  இங்கத்து ரெஸ்ட்டாரண்ட் பெயர். வாசலில் தொடங்கி  எங்கே பார்த்தாலும்  யானைகளே! (என்னையும் சேர்த்துத்தான்!)டிஷ்யூ பேப்பர் கூட யானைக் காலில்.
பஃபேதான். சௌத் இண்டியன்  வகையில் இட்லியும் தோசையும் உண்டாம். ஆனால் இன்றைக்கு தோஸான்னார் மேனேஜர்.  சொன்னா தோசை ஊத்துவாங்களாம். ஊத்திக்கோ....  ரெண்டா ஊத்திக்கோ....

ஒரு பக்கம் மொட்டைமாடியும்,தொங்கு தோட்டமுமா கங்கையைப் பார்த்தபடி இருக்கும் இடத்துக்கு நேர் கீழேதான் நம்ம அறை!  அதனால் கங்கையின் அதே காட்சிதான். இடையில் கண்ணாடித் தடுப்பு இல்லை:-) வேடிக்கையில் மனம் போனதால் வேற   என்ன சாப்பிட்டோமுன்னு சரியா நினைவில்லை....
முகேஷ் வந்ததும் கிளம்பினோம். நகரம் முழிச்சாச்சு. சாலையில் போக்குவரத்து அதிகம். சாலையோரக் கடைகள் திறந்து வியாபாரம் நடக்குது. பக்கத்துலே பெண்கள் பள்ளி  இருக்குபோல..... பிங்க் யூனிஃபார்ம் போட்ட மாணவிகள் கூட்டம் ஒன்னு நடந்து போய்க்கிட்டு இருக்கு. பெண்குழந்தைகள் படிக்கட்டும். அதுதான் நாட்டையும் வீட்டையும் முன்னேற்றும்!
நாங்க  முதலில் போன இடம் பரத் மந்திர்.  போனமுறை போனபோது  கோவில் மூடி இருந்துச்சு. இவர்  நம்ம ராமாயண பரதன் இல்லை. அப்போ எழுதுனது  இது. கோவில் சரித்திரம்  இப்பவும் அதேதான் :-)  விரும்பினால் க்ளிக்கி வாசிக்கலாம்.

பெரிய வளாகம்தான். கோவில் வாசலுக்குப் பக்கம் ஒரு  பெரிய மரம். சுத்திவரமேடை கட்டி விட்டுருக்காங்க. அரசும் ஆலுமா இருக்கும் இந்த மரத்துக்கு வயசு ஒரு முன்னூறு இருக்குமாம். இதுலே இன்னொரு மரமும் சேர்ந்து இருக்குன்னார் முகேஷ்.  அதன் பெயர் தெரியாதாம். போகட்டும், நம்ம முகேஷ்  ட்ரைவர்தான்.  கைடு இல்லை. அதுக்காக ஒன்னுமே தெரியாதுன்னும்  சொல்ல முடியாது.  உள்ளுர் சமாச்சாரம்  கொஞ்சமாவது தெரிஞ்சுருக்கும்தானே? இப்பப் பாருங்க... இதுலே மூணு மரம்னு சொன்னாரே!

(அப்புறம் கோவில் பட்டரிடம் விசாரிச்சப்ப இது பேல்  வ்ருக்ஷான்னார். நம்ம வில்வமரம்!  சிவா, விஷ்ணு, ப்ரம்மான்னு  மும்மூர்த்திகள்  அதுலேன்னார்! )

கோவில் திறந்துருக்கு.  வாசலில் இருந்து   பார்க்கும்போதே வெள்ளிக் கவசம் போட்ட கதவினூடே ரிஷிகேஷ் நாராயணன்  நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். பட்டர் ஸ்வாமிகளிடம் படம் எடுத்துக்க அனுமதி  வாங்கினேன்.

ப்ரஸாதமும் கொடுத்தார்.  பக்கத்து சந்நிதியில் வராஹ மூர்த்தி!
அந்தாண்டை  உற்சவ மூர்த்திகளுக்கு  ஒரு சந்நிதி.  வட இந்தியக்கோவில் வழக்கப்படி ஜிலுஜிலு உடையில்  இருக்காங்க எல்லோரும். இந்தாண்டை பெரிய , சிறிய திருவடிகள்!  பெரியவர்  இதுவரை பார்க்காத வடிவில்!  இவுங்க ரெண்டு பேருக்கும் நடுவில்  ப்ரளயத்தில் ஆலிலையில் மிதக்கும் ஸ்ரீகிருஷ்ணன்.  கங்கையில் நின்னு தியானம் செய்யும் முனிவர், ரைப்யர்.
ஒருபக்கம் நர்த்தன விநாயகர் விளக்கு!  சின்னதா ஒரு மண்டபம். அதில் பட்டுத்துணியில் பொதிஞ்சு வச்சுருக்கும்  ராமாயணம்,  ராதாக்ருஷ்ணர், வெண்ணை உண்ணும் கண்ணன், இப்படி அழகான சித்திரங்கள். கோவில் படு சுத்தம்.  மாடத்தில் ஒரு கல் புள்ளையார்!
அஞ்சாறு படிகள் இறங்கிப்போகும் இருட்டுச் சந்நிதியில்  சிவன், லிங்க ரூபத்தில்.   வெளியே பிரகாரத்தில் வலம் வர்றோம். தளதளன்னு நான் இருக்கேன் :-)
புதுவிதமான கோபுர அமைப்பு. அதில் ஒட்டிப்பிடிப்பிச்சு இருந்த  சலவைக்கல் சிலா ரூபங்களில்  சிலதைக் காணோம்.  டெர்ரகோட்டாவாகவும் இருக்க வாய்ப்புண்டு.

நரசிம்மம்,  ஹிரண்யனைக் கீசிண்டு இருக்கு! அடுத்தடுத்து  வெவ்வேற அவதாரங்கள் போல.... எனக்கு வாமனர்தான்  தெரிஞ்சது.

கழுத்துலே கத்தி வச்சுட்டாங்க.......
ஆதி சங்கரர் இருக்கார். இவர்தான் எட்டாம் நூற்றாண்டில்  கோவிலில்  நாராயணனைப் பிரதிஷ்டை செய்தவர். ஏற்கெனவே இருந்த  கோவில் கிட்டத்தட்ட அழிஞ்சு போன நிலையில் இருந்ததாக சேதி. உண்மையில் இந்தக்கோவில் ரிஷிகேஷில் ப்ராச்சீன் தான். பக்கத்தில் போகும் தெருவையொட்டியே இந்தக் கோவில் பிரகாரம். எதிர்வாடையில் ப்ராச்சீன் பத்ரகாளி மந்திர்  இருக்கு. காளியைக் கிட்ட வரவழைச்சு ஒரு க்ளிக்.

 ரிஷிகேஷ் நாராயணர்  முழுக்க சாளக்ராம மூர்த்தியாம். வருசத்துக்கொரு முறை   வஸந்த பஞ்சமி நாளில் இவரை (மூலவரையே)  ஊருக்குள் ஊர்வலமாக்கொண்டு போய் திருப்பிக் கொண்டு வந்து ப்ரதிஷ்டை செய்யறது வழக்கமாம்.

 அக்ஷயத்ருதியை நாளில் 108 முறை இவரை வலம் வந்தால் பத்ரிநாத் போய் வந்த பலன் உண்டாம்!  அன்றைக்கு ஒருநாள்தான்  நாராயணனின் பாத தரிசனம் கிடைக்கும்.  மற்ற நாட்களில் இப்படிக் கால்வரை நீண்ட அங்கிதான். நன்றி சொல்லிட்டு வெளியில் வந்தோம்.
வாசலைத் தொட்டடுத்து சிவன் சந்நிதி . அபிஷேகதாரையின் கீழ்  அரவத்தோடு இருக்கார். நாமும் போய் கும்பிட்டுக்கிட்டோம்.வளாகத்தில் மற்ற கட்டிடங்களைக் கட்ட நிலத்தைத் தோண்டியப்ப பழைய சிலைகள் நிறைய கிடைச்சதாம்.  மூணாம் நூற்றாண்டு சிலைகளாம்.(அப்ப ப்ராச்சீன்தான்,  இல்லே? )  கோவில் வாசலையொட்டிய ஒரு சின்ன ஹாலில் ம்யூஸியம் வச்சுருக்காங்க.
கிளம்பி வர்றப்ப,  நாளைக் காலையில் சீக்கிரம் கிளம்பணுமுன்னு  பேசிக்கிட்டு  இருந்தோம்.  அப்ப இப்பவே போய் பர்மிட் வாங்கிக்கலாமுன்னு  அதுக்குண்டான அலுவலகத்துக்குக் காரைத் திருப்பினார் முகேஷ்.  இங்கே நமக்கு  சார்தாம் யாத்திரைக்கான பர்மிட் கொடுக்கறாங்க.  நம்மை  படம் எடுத்துக்கிட்டு, மற்ற விவரங்கள்   வாங்கிக்கறாங்க. ட்ரைவருக்கும்தான்.
பேரு, ஊரு, எப்பப் போறோம், எப்ப வர்றோம் , எத்தனை பேர், எந்த வண்டி, அதோட ரெஜிஸ்ட்ரேஷன் நம்பர்  எல்லாம்....   நாளைக்கு எதாவதொன்னு ஆச்சுன்னால்....  அப்ப யாரு என்னன்னு விவரத்துக்காக அலைய வேணாம் பாருங்க. இது முற்றிலும் இலவசச்சேவைதான். உத்தரகண்ட் மாநிலம் நல்லாவே சுற்றுலாப் பயணிகளைக் கவனிச்சுக்குது ! போனவருசம்தான் ஆரம்பிச்சாங்களாம்!  ரொம்ப நல்ல விஷயம்.
இந்த வளாகத்துலேயே  அங்கங்கே சின்னச்சின்ன சந்நிதிகளில் ஆஞ்சி, சரஸ்வதி, ஸ்ரீகிருஷ்ணர், சிம்மவாஹினி, சிவன் இருந்து பயணிகளுக்கு அருள் பாலிக்கிறாங்க. புள்ளையாரைக் காணோம். வேற இடத்தில் இருக்கலாம்.... எல்லோருக்கும் ஒரு கும்பிடு போட்டு, நல்லபடியாத் திரும்பி வர உதவுங்கன்னு  வேண்டிக்கிட்டேன்.
வாங்க.... சௌத் இண்டியன் மந்திர் இருக்காமே.....  அங்கே போகலாம்.

தொடரும்..........:-)18 comments:

said...

ரிஷிகேஷ் நாராயண தர்சனம் ஆச்சு.

தோசையோடு தட்டுல சிவப்பா ஜலமா இருக்கே சாம்பாரா அல்லது லைட் ரிஃப்ளெக்‌ஷனீ?

வெண்ணை கிருஷ்ண௳ஷ்ணர் போட்டோ ரொம்ப அழகு (ஃபோட்டோ angle சரியில்லை என்ற போதும்)

ப்ராசீன் சிலைகளில் கோமதீஸ்வர்ர் சிலை இருக்கே (மஹாவீர்ர்?)

said...

அருமை நன்றி தொடர்கிறேன்.

said...

தோசையைப் போல ஒரு பண்டமுண்டோ! அடடா! எல்லாரையும் மயக்கி வெச்சிருக்கு.

ரெஸ்டாரண்டு முழுக்க யானைகள். உங்களுக்குக் கொண்டாட்டமா இருந்திருக்கும்னு பதிவு படிக்கும் போதே புரிஞ்சது.

ரிஷிகேசன் தரிசனத்துக்கு மிக்க நன்றி. வாழ்க. வாழ்க. போட்டோ எடுத்தா ஆற்றல் கொறஞ்சிரும்னு பீலா விடாம புகைப்படம் எடுக்க விட்ட அந்த ஊர் பூசாரிக்கு நன்றி. ஆண்டவனோட ஆற்றலை நம்ம எப்படி கொறைக்க முடியும்?!

சரசுவதி பக்கத்துல சட்டுன்னு பாக்க ஆஞ்சனேயர் புல்லாங்குழல் வாசிக்கிற மாதிரி இருந்தது. உத்துப் பாத்ததும்தான் கிருஷ்ணர்னு தெரிஞ்சது.

அந்தத் தலை எடுக்கும் கதை தசாவதாரக் கதை இல்லைன்னு நினைக்கிறேன். பீர்தாசன் கதைன்னு நெனைக்கிறேன். இந்த வீடியோவில் இந்தப் பகுதியைப் பாருங்க. https://youtu.be/D5zteXC94us?t=50s

வடக்கத்திய சிற்பங்களையும் கோயில்களையும் பாக்கும் போது தென்னாட்டுக் கலையும் மொழியும் சிலையும் எவ்வளவு சிறப்பானதுன்னு புரியுது.

கடைசியா ஒரு வேண்டுகோள். ஹிமயமலைன்னு எழுதுறீங்க. இமயமலைன்னு எழுதினா என்னுடைய தமிழுணர்வு மகிழும். :)

said...

படங்களும் விவரங்களும் சுவாரஸ்யம்.. முதலில் வயிற்றுக்குணவு. பின்பு கண்களுக்கு! ரிஷிகேஷ் நாராயணர் அழகா இருக்கார்.

said...

படங்கள் அழகு.

ரிஷிகேஷ் - இங்கே சில நாட்கள் தங்கும் விருப்பமுண்டு. பார்க்கலாம் எப்போது வாய்க்கிறது என!

said...

ரிஷிகேஷ் சென்றிருக்கிறோம் ஆனால் விவரங்கள் தெரியாது வட இந்தியக் கோவில்களில் மூலவரைப் படம் எடுக்க அத்தனை ஜபர்தஸ்து காண்பிப்பதில்லை என்று தோன்றுகிற்து

said...

தங்கள் தயவில் தரிசித்தோம்
புகைப்படங்களுடன் விளக்கமும் அருமை
(அந்த விடுதியில் நாள் வாடகை
தெரிந்து கொள்ளலாமா
செல்லும் உத்தேசம் இருக்கிறது )

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

அது ரிஃப்ளெக்‌ஷந்தான். தட்டு சிகப்பா இருக்கே ! படங்கள் அதிகம் போற போக்கில் எடுப்பவைதான். நின்னு ஆங்கிள் பார்த்து ஒவ்வொரு படத்துக்கும் கேமெரா செட்டிங்ஸ் எல்லாம் மாத்தின்னு எடுக்க நேரம் இல்லை.

முன்பு நிறைய சமணக்கோவில்கள் இருந்து அதில் பலவும் ஹிந்துக்கோவில் ஆச்சுன்னு சொல்றது உண்மையாகவும் இருக்கலாம்....

said...

வாங்க விஸ்வநாத்.

தொடர் வருகைக்கும் முக்கியமாக நினைவூட்டியதற்கும் மனம் நிறைந்த நன்றி.

said...

வாங்க ஜிரா.

இன்னும் நீங்க சொன்ன சுட்டி பார்க்கலை. இனிமேல்தான்....

அந்தந்தப் பகுதியில் அவுங்க வழக்கப்படி கலையும் மொழியும் இருக்கு. அதோடு நம்முடையதை பொருத்திப் பார்க்க முடியாது. அதது அவுங்க அம்மா மாதிரி. இன்னொருத்தருடைய அம்மா, நமக்கு அழகாத் தெரியலைன்னாலும்.... அவுங்களுக்கு அந்தம்மாதான் அழகு இல்லையோ?

உங்க தமிழுணர்வு இன்னும் பரந்து விரிஞ்சு இருக்கட்டும். பொதுவா நான் அந்தந்த ஊர் வழக்கபடித்தான் பெயர்ச்சொல்லை எழுதுவேன். எழுதணும் என்பது என்னுடைய எண்ணம். ஹரிஷ் என்ற பெயருடையவரை நாம் அரிஸ் ன்னு எழுதுனா சரியா இருக்குமோ? உச்சரிப்பு முக்கியமில்லையா?

எல்லாத்தையும் தமிழ்ப்படுத்தணும் என்பதெல்லாம் என் வரையில் சரிவராது...... மன்னிக்கணும், கேட்டோ! (ஒன்னாப்பு புத்தகத்தில் வடமொழி எழுத்துன்னு ஒரு அஞ்சு இருக்கும். அதுவும் தமிழில் எழுதியதே!)

ஜிராவிலும் ஜி உள்ளதே ஜி!

said...

வாங்க ஸ்ரீராம்.

ரசிப்புக்கு நன்றி.

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

பள்ளி விடுமுறையில் குடும்பத்தோடு ஒரு பயணம் போயிட்டு வாங்க. மகளுக்கும் இப்போ விவரம் உள்ள வயசு என்பதால் நல்லாவே ரசிச்சுப் பார்க்க முடியும்.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

பொதுவா, படம் எடுக்க அனுமதி கேட்டால் சரின்னு சொல்லிடறாங்க. நம்ம பக்கங்களில்தான் கெமெரா, கடவுளின் சக்தியைப் பறிச்செடுக்கும்னு ஒரு 'நம்பிக்கை' :-)

said...

வாங்க ரமணி.

ரொம்ப அதிகமுன்னு சொல்ல முடியாது. வசதிகள் இருந்தால் வாடகையும் அதிகம்தானே?

வலையில் பார்த்து புக் செஞ்சால் நல்ல டிஸ்கவுண்ட் கிடைக்கும்.

மெயில் ஒன்னு தட்டி விடுங்க எனக்கு.

said...

ஹரீஷ் என்ற பெயரை அரீசு என்று கட்டாயமாக எழுத வேண்டும் என்பதல்ல என் கருத்து. நீங்கள் ஹிமாச்சல் என்றோ ஹிமாலயா என்றோ எழுதியிருந்தால் அதை இமாச்சல் என்று மாற்றச் சொல்லிக் கேட்டிருக்க மாட்டேன். ஹிமயமலை என்று எழுதியததால்தான் அதை மாற்றச் சொன்னேன். பாதி மட்டும் ஏன் தமிழாக்க வேண்டும் என்றுதான் அதையும் சொன்னேன். மேலும் இமயம் இமயமலை என்ற பெயர்கள் பன்னெடுங்காலமாக இலக்கியத்தில் வழங்கப்பட்ட பெயர்கள் என்பதாலும் அதைச் சொன்னேன். மற்றபடி ஹாரி பாட்டரை ஆரி பாட்டர் என்றே எழுத வேண்டும் என்று கட்டாயப்படுத்தவில்லை. நான் சொல்ல வந்ததைப் புரியும்படி சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். உங்கள் எழுத்து உங்கள் உரிமை. உங்கள் எழுத்துக்கு ரசிகன் என்ற முறையில் கோரிக்கை மட்டுமே நான் வைத்தேன். மனம் புண்படும்படி ஏதேனும் கூறியிருந்தால் மன்னிக்கவும். :)

said...

அச்சச்சோ..... ஜிரா. உங்கள் மனம் வருந்தும்படி வெடுக்ன்னு பதில் சொல்லிட்டேனே....


மன்னிக்கணும்ப்பா.

நீங்க சொல்றதுலே இருக்கும் நியாயம் இப்பப் புரிஞ்சது. இனிமேக் கூடியவரை ஹிந்தியும் தமிழும் கலக்காமல் பார்த்துக்கறேன். ஆனால் பழக்க தோஷத்துலே வந்துருமோ என்னவோ?

ஹிந்தியும் தமிழும் பாய் பெஹன் ஆக இருக்கக்கூடாதான்னு குருட்டு யோசனை வருது :-)

said...

டீச்சருக்கு கோவப்பவும் உரிமை உண்டு. முழுக்க விளக்கமாக முதலில் சொல்லாதது என்னுடைய தவறுதானே. :)

எல்லா மொழிகளுமே பாய்-பாய் தான் டீச்சர். எந்த மொழியையும் கற்பதில் தவறில்லை. எல்லா மொழிகளும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்பதில் நல்லவர்களுக்கு என்று மாற்றுக்கருத்து இருக்க முடியாது.

said...

வாங்க ஜிரா.

இப்படி மனம் திறந்து பேசினாலே பல கசப்புகள் போயிருது பார்த்தீங்களா? எப்பவும் முகநக நட்பாக இல்லாமல், தவறு என்று தோணும்போது தைரியமா வந்து கேட்டு, திருத்தும் நல்ல நண்பராக நீங்க அமைஞ்சது எனக்கு ரொம்பவே திருப்தியா இருக்கு!

நல்லா இருங்க !