Wednesday, May 24, 2017

ஆசியாவிலேயே பெரியதாமே! (இந்திய மண்ணில் பயணம் 8 )

நல்ல வெயில் காலத்துலே  சாப்பாடானதும்  ஒரு தூக்கம் வந்துருதுல்லே?  நம்மவர்  ஒரு தூக்கம் போட்டார். நான் வைஃபை இருக்கேன்னு  வலை மேயறதும், கங்கையைக் க்ளிக்கறதுமா இருந்துட்டு, எப்படித் தூங்கினேன்னு எனக்கே தெரியலை  :-)  ஆனா ஒன்னு,   அரைமணிக்கு மேல் தூக்கம் போயிரும் வகைதான் எனக்கு.

அஞ்சுமணிக்கு எழுந்து ஃப்ரெஷப் பண்ணிக்கிட்டுக் கிளம்பியாச்சு.  இங்கே லக்ஷ்மண் ஜூலா அருகில் ஒரு லக்ஷ்மணன் சிலை  இருக்கும். அபார அழகு.  அங்கே போனோம்.  போனமுறை பார்த்த அதே அழகு !  சும்மாச் சொல்லக்கூடாது....   மெய்யாலுமே அழகுதான். நீங்களே பாருங்க...
இந்த சிலைக்கு எதிரில் ஒரு சிவன் கோவில் இருக்கு. சச்சா அகிலேஷ்வர் மஹாதேவ் மந்திர்.  போனமுறை நல்ல கூட்டம் இருந்துச்சு இங்கே. எல்லோரும் பக்கத்துலே இருக்கும் படிகள்   வழியாக மாடிக்குப்போய் அங்கிருந்து கங்கை நீரால் அபிஷேகம் செஞ்சுக்கிட்டு  இருந்தாங்க.
இன்றைக்கு...  நமக்கு ஏகாந்த தரிசனம் லபிச்சது.    பதினாலு அடி உயர லிங்கம்.   (ஆவுடையாரும் பீடமும் சேர்த்துதான் இருக்கணும்)              ஆசியாவில் பெரியதுன்னு சொல்றாங்க.
தனியார் கோவில் போல...  கோவிலுக்குள்  ஏழெட்டு சாதுக்களின் படங்களை மாட்டி இருந்தாங்க.  ரொம்பப் பழைய கோவில் கிடையாது. ஹரித்வார் ரிஷிகேஷ் பகுதிகளில் கோவில் கட்டிக்கறதும், ஆஷ்ரம் அமைச்சுக்கிறதும் ஒரு ஹாபி போல ஆரம்பிச்சு இப்ப அதில் இந்த யோகா சென்ட்டர்களும் சேர்ந்துக்கிட்டு இருக்கு. சச்சா என்ற  சாது  ( சச்சிதானந்த்?)   கட்டுன கோவில் என்றதால் சச்சா அகிலேஷ்வர் மஹாதேவ்  மந்திர்னு பெயரும்  வச்சுருக்காங்க. ஒரு பெரிய ஹால்தான் கோவில்.


  நடுவில் இந்த சிவலிங்கம் தவிர, சின்னதா ஒரு சிவலிங்கம்  தரையில் இருக்கு. கோவில்  சுவர்களில்  கண்ணாடிக் கதவு போட்ட மாடங்களில்,  பளிங்குச்சிலைகளா ஷிவா பரிவார்னு  சிவனின் குடும்பம்,  ராமலக்ஷ்மணர் சீதை, ஹனுமன்,  ராதா க்ருஷ்ணா, துர்கா  இருக்காங்க.


வட இந்தியக்கோவில்களில் பெரும்பாலும் சைவம் வைஷ்ணவம் பேதம் அதிகமா இல்லைன்னுதான் சொல்லணும். சிவன் கோவிலில்  பெருமாளுக்கு  இடம் கொடுக்கறதைப்போல், பெருமாள்  கோவில்களில்  சிவலிங்கம் வச்சுடறாங்க.   நாமும் சிவனை வலம் வந்து கும்பிட்டோம்.

லக்ஷ்மண்ஜூலா பார்க்க வரும் பக்தர்கள்  இந்தக் கோவிலைத் தவறவிட மாட்டாங்க.  எதிரில் ஓடும் கங்கையில் இருந்து  தண்ணீர் மொண்டு வந்து  மாடிப்படிகள் மேலேறி  அங்கிருந்து சிவனுக்கு கங்கை அபிஷேகம் செய்யும் பக்தர்களுக்கும் குறைவில்லை.
கோவிலுக்குள் படம் எடுக்கத் தடை உண்டு. ஆனால் சாலையில் இருந்து எடுக்க என்ன தடை?  அதுவும் பிரமாண்டமா இருக்கும் லிங்கம்  கஷ்டமில்லாம கெமெராக்குள் வந்துருதே!

எதிர்சாரிக்குப்போய்  அங்கிருந்து கீழே  பார்த்தால் லக்ஷ்மண ஜூலா பாலம் !  இறங்கிப்போகப் படிகள் இருக்கு.ராமாயணகாலத்துலே லக்ஷ்மணன் ஒரு கயிற்றைப் பிடிச்சுக்கிட்டு கங்கையைத் தாண்டின இடமாம்.

   கரையில் நின்ன மரத்தில் கயிறு கட்டி, லக்ஷ்மண் இந்த இடத்தைக் கடந்ததா ஒரு கதை இருக்கு. ( ஆமாம்.... அதான்   வேடர் குலத்தலைவன் குகன் படகில் ராமலக்ஷ்மண சீதையை அக்கரையில் கொண்டுபோய் விட்டாரே... அப்புறம் எதுக்குக் கயிறு கட்டி அதில்  தொங்கிக்கிட்டு Tarzan மாதிரி அந்தாண்டை போனாராம்? )

ராமனுக்கும் ஒரு பாலம் இருக்கு இங்கே, தெரியுமோ?

பலவருசங்களுக்கு அங்கே கயிற்றுப் பாலமாத்தான் இருந்துருக்கு. 1889 லே இந்தப் பாலத்தை இரும்பு கம்பிகளை முறுக்கிய கயிற்றால் கட்டிப் புதுப்பிச்சாங்க. 1924 வது வருசம் கங்கையில் வந்த வெள்ளப்பெருக்கில் இது அடிச்சுக்கிட்டுப் போயிருச்சாம். இங்கே பாலத்துக்கும் கங்கைக்கும் அம்பத்தியொன்பது அடி இடைவெளி. இந்தக் கணக்குலே பார்த்தால் அப்ப வந்த வெள்ளம் அறுபதடிக்கு மேலே போயிருக்கணும். ஐயோ..... நினைச்சுப்பார்க்கவே முடியலை! சில இடங்களில் கங்கையின் அகலம் ஒரு கிலோமீட்டர் மேலேயே இருக்கே!

பாலம் ஆறடி அகலம். எல்லோருக்கும் பொது! இங்கேயும் ஸ்கூட்டர், மாடு, கைவண்டிகள் எல்லாம் அக்கரைக்குப் போகுது.

மேலே பகுதி : நம்ம துளசிதளத்தில்  போன பயணத்தில்  எழுதுனதுதான் :-)

இந்த  வீலர்களைத் தள்ளிக்கிட்டு வராம ஓட்டிக்கிட்டே வர்றதால்  கம்பிப்பாலம் திடுதிடுன்னு ஆடும்போது கொஞ்சம் பயமாத்தான் இருக்கும்.  இதுலே மாடுகள் வரும்போது   நாம்  ஓரங்கட்டணும். என்னதான் சாது மாடுகள்னாலும்  தலையைக் குலுக்கும்போது  நம்ம துப்பட்டா கொம்புலே மாட்டிக்கிட்டா?  :-)

கீழிறங்கும் வழிக்குப் பக்கத்துலேயே ரெண்டு படி ஏறினால்   மொட்டைமாடி போல ஒன்னு. அதுலே நின்னு பார்த்தா    முழுப்பாலமும் அக்கரையும் அட்டகாசமாத் தெரிஞ்சது.



அங்கே ஒரு நாயார் ஸ்டைலாக் காலை நீட்டி உக்கார்ந்துருந்தார். கால் வலியோ என்னவோ?  முகத்தில்  ஒரு  சாந்தப் பார்வை. சித்தராகக்கூட இருக்கலாம்!  பக்கத்தில் போய் நின்னாலும் திரும்பிப் பார்க்கலை.  ஓரக்கண்ணால் பார்த்துச்சு :-)
திரும்பி  காருக்கு வரும்வழியில்   பளிங்குப்  புள்ளையார், மனைவிகளோடு இருக்கார். சித்தி அண்ட் புத்தி!

இன்னொருக்கா, பெரிய சிவனுக்கு  இந்தாண்டை இருந்தே ஒரு கும்பிடு போட்டுட்டுக் கிளம்பினோம்.

அடுத்து......

தொடரும்..........:-)


19 comments:

said...

ஆஹா படங்களும் தகவலும் வழக்கம் போல செம. லக்ஷமணன் ஜூலா பார்க்கணும்னு ஆசை உண்டு. அப்போ கயிறு இல்லையா இப்ப? ஜுலா மாதிரி ஆடும் நு கேள்விப்பட்டிருக்கேனே...இப்ப வண்டி எல்லாம் போகுதுனா சிமென்ட் பாலமா...அப்போ த்ரில் இல்லையோ...

பைரவர்/பைரவி ரொம்ப பாவமா இருக்காரே,ஏதேனும் உடல் நலக் குறைவோ என்னவோ...ஆனா அழகா இருக்காரு

கீதா

said...

அருமை நன்றி தொடர்கிறேன்.

said...

எங்கள் பயணத்தின்போது லக்ஷ்மண ஜூலா பாலத்தில் நடந்தோம். மறக்க முடியாத அனுபவம்.

said...

நல்லாருக்கு. தொடர்கிறேன்.

ஒரு இடத்துலதான் கங்கையைக் கடந்துருப்பாங்களா? அப்படி இன்னொரு முறை கடக்கும்போது (அல்லது திரும்பி வரும்போது) கயிறு போட்டுத் தாண்டியிருக்கலாம்.

ம்.ம். சித்தரா இருக்குமோன்னெல்லாம் சந்தேகம் வந்துடுச்சா? கங்கைக் கரையில் சாமியார்களைப் பார்த்தீர்களா (அகடால்லாம் போயி)

said...

அவ்வளவு ஒயரமான பாலத்துக்கு மேல வெள்ளம்னா எப்படியிருந்திருக்கும்!!! சென்னைல வந்த வெள்ளம் நினைவுக்கு வருது. ஆண்டவா!

இலக்குவணன் டார்ஜான் வேலை பண்ணதா யாரோ கதை சொல்லி வெச்சிருக்காங்க போல. நம்ம நாட்டுல கதை விடுறதுக்கா பஞ்சம். இது குகனோட புகழைக் குறைக்கச் செஞ்ச சதின்னு போராட்டம் பண்ண வேண்டியதுதான்.

நாயார் உண்மையிலேயே அமைதியா இருக்கார். எந்தச் சித்தரோ புத்தரோ!

said...

Veeramani Veeraswami added 11 new photos — in my face book images in your face book box
31 December 2015 ·

இந்தியாவிலேயே மிகப்பெரிய சிவலிங்கம்.
அருள்மிகு போஜேஷ்வரர் தரிசனம்.
போஜேஷ்வரர் திருக்கோவில், போஜ்பூர்,மத்தியப்பிரதேசம்.
கட்டி முடிக்கப்படாமல் இருந்தாலும், போஜேஷ்வரர் திருக்கோவிலின் கட்டமைப்பு நம்மை பிரமிப்பூட்டும் வகையில் அமைந்திருக்கிறது.
சிவபெருமானை மூலவராகக் கொண்ட இத்திருக்கோவிலில் தான் இந்தியாவிலேயே மிகப் பெரிய சிவலிங்கம் உள்ளது.
இந்தியாவிலிருக்கும் மிகப் பெரிய சிவலிங்கங்களில் ஒன்றான இது, ஒற்றைப் பாறையில் வடிவமைக்கப்பட்டதாகும். [அதாவது இணைப்புகள் இல்லாதது.]சுமார் 7.5 அடி உயரமும், 17.8 அடி சுற்றளவும் கொண்ட அழகிய லிங்கபாணம் 86 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார் மீது அமையப்பெற்றுள்ளது. இத்தகு சிறப்பை பெற்றதனால் இதனை கிழக்கு சோம்னாத் என்று அழைக்கின்றனர்.மொத்த உயரம் 30 அடிகள்.[ஒரே கல்லில் வடிக்கப்பட்டது.]
[The lingam in the sanctum rises to an awe-inspiring height of 7.5 feet with a circumference of 17.8 feet. Set upon a massive platform 21.5 feet square,]
தஞ்சைப் பெருவுடையார் சிவலிங்கம்===
6 அடி உயர லிங்கபாணம், 54 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார், பீடம் ஆகியன தனித்தனியாக கருங்கற்களால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.மொத்த உயரம் 23 அரை அடி.[இணைக்கப்பட்ட சிவலிங்கம் ]
11,12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டின் ஒப்பற்ற கட்டமைப்பை கொண்டதாக விளங்குகிறது போஜேஷ்வரர் திருக்கோவில். இந்தக் கோவில் மட்டும் கட்டி முடிக்கப்பட்டிருந்தால், தொன்மையான இந்தியாவின், அதிசயமாக திகழ்ந்திருக்குமாம்
போஜேஷ்வரர் கோவிலின் எழில்மிகு மண்டபம், நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ள கதவுகள், பாதைகள் மற்றும் சிற்பங்கள் காண்பவரை அதிசயப்படும் வகையில் அமைந்திருக்கிறது.
அழகிய தூண்கள் மாடிக்குச் செல்லும் வழியைத் தாங்கிப் பிடித்தவாறு அமைந்திருக்கிறது. வெளிப்புற சுவர்கள் மற்றும் அது தொடர்பான கட்டிடங்கள் கட்டப்படாமலே இருக்கிறது.
கோவிலை மண்டபத்தோடு சரி சமமாக உயர்த்த பயன்படுத்தப்பட்ட மணற்கற்களால் ஆன வளைவுகள் இன்றளவும் அங்கே காணப்படுகின்றன. இது நம் தொன்மையான கட்டிடக்கலை திறமைகளை பறைசாற்றும் ஆவணங்களாகத் திகழ்கின்றன.
இந்தியத் தொல்பொருள் துறையினரால் பராமரிக்கப்படுகிறது.

said...

நாங்கள் பல ஆண்டுகளுக்கு மு போய்வந்ததுநினைவுக்கு வருகிறது

said...

படங்களுடன் விளக்கத்துடன்
பகிந்த விதம் அருமையிலும் அருமை
தங்கள் இருவரின் தயவால்
தரிசிக்க இயலாத பல இடங்களை
தரிசித்து மகிழ்கிறோம்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்களுடன்

said...

சிலையா அது? அழகு. ஓவியம் போல இருக்கிறது.

தனியார் கோவில்களில் சுத்தம் இருக்கும். பக்தி இருக்குமா!

லக்ஷ்மன் ஜுலா படங்கள் அழகு.

//சித்தராகக் கூட இருக்கலாம்// ஹா... ஹா... ஹா... இருந்தாலும் இருக்கலாம்.

நீங்கள் திரும்பித் திரும்பி விரும்பிச் சென்ற க்ஷேத்திரம் எது?

said...

வாங்க துளசிதரன்/கீதா.

இரும்புக்கயிறு கட்டித் தொங்கும்பாலம்தான். நல்லாவே ஊஞ்சலாடும்:-) கீழே மரப்பலகைக்கு மேல் காங்க்ரீட் பூசி இருக்காங்க. மாடு கன்னு நடந்து போகும்போது கால் மாட்டிக்காம இருக்கணுமே! ஆனால்... நம்மாட்கள் சும்மாவா? அதுலே 2 வீலர் கொண்டு போகும்போது உருட்டிண்டு போகப்டாதோ?

த்ரில் உண்டு. கிளம்பி வாங்க :-)

said...

வாங்க விஸ்வநாத்.

தொடர்வதற்கு நன்றி.

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

ரிட்டயர்ட் வாழ்க்கை எப்படி இருக்கு?

இன்னும் வேற பயணங்கள் உண்டா?

இந்தியாவிலேயே இன்னும் எவ்வளவோ இருக்கே.... இந்த ஜென்மம் போதுமான்னு தெரியலை !

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

நம்மாட்களுக்குக்'கதை' கட்டத் தெரியாதா? :-)

காசியில் அகடான்னு தெரியாமலேயே அகடாக்குள்ளே போய் வந்துட்டேன்:-)

நீங்க துளசிதளத்தில் பார்த்தீங்கதானே?

said...

வாங்க ஜிரா.

சும்மாச் சொல்லக்கூடாது.... அந்த நாயார் அழகுதான் இல்லே!!! அசப்பில் நம்ம ச்சிண்ட்டு போல!

கங்கையிலே இவ்ளோ வெள்ளமுன்னா.... அந்த மழை எப்படி இருந்துருக்கணும்!!!!

said...

வாங்க வீரமணி.

அருமையான தகவல் பகிர்வு ! வலையிலிது ஒரு நன்மை. பின்னூட்டங்களிலே இப்படித் தகவல்கள்பலதும் கிடைக்குது. என்னைப்போல் ஏராளமானவர்களுக்கு இது மாபெரும் உதவி!

மனம் நிறைந்த நன்றிகள்.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

பழைய நினைவுகளை அசைபோடுவதும் ஒரு தனி சுகமே!

said...

வாங்க ரமணி.

கண்ணால் கண்டதை எழுதுன்னு சொல்லிட்டான் 'அவன்' அதுதான்.... :-)

தங்கள் பின்னூட்டம் ஊக்கம் தருகிறது. சரியா எழுதணுமே.... சரியாத்தான் எழுதறோமான்னெல்லாம் நினைக்க வச்சுருச்சே !!!

said...

வாங்க ஸ்ரீராம்.

கண்ணாடிப் பெட்டிக்குள்ளே நிக்கறார் லக்ஷ்மண். எங்கே 'விரோதி ' பரதன் வந்துருவானோன்ற பதற்றத்தோடு ஒரு பார்வை:-)

தனியார் கோவிலை விடுங்க. குறைஞ்சபட்சம் சுத்தமாவது இருக்கு. நம்ம பாரம்பரியக் கோவில்களில் இப்பெல்லாம் பக்தி இருக்குன்னு நம்பறீங்களா?

திரும்பத்திரும்பப் போகும் ஷேத்ரம்... பூலோக வைகுண்டம்தான்! வேறென்ன? :-) 108 லேநம்பர் ஒன் இதுதானே!

said...

ராம் ஜூலா, லக்ஷ்மண் ஜூலா - இரண்டுமே ஒரு பரவச அனுபவம் தான். அதிலும் வண்டிகள் போகும்போது பாலத்துடன் நாமும் சேர்ந்து குலுங்குவது! :)

படிக்கப் படிக்க செல்ல வேண்டும் எனத் தோன்றுகிறது.... :) ரொம்ப நாளாச்சே!

தொடர்கிறேன்.