Wednesday, May 03, 2017

கால பைரவர் .......( நேபாள் பயணப்பதிவு 37 )

இந்த  காத்மாண்டு தர்பார் சதுக்கத்தில் மட்டும் பத்து முற்றங்கள் இருக்காம்.  இடிபாடுகள் காரணம் எல்லா இடங்களையும் பார்க்க முடியலை.  காலபைரவர் இருக்கும்  இடத்துக்குப் போறோம்.  எதிரில் குவிச்சு வச்சுருந்த மணல்மேட்டில் இந்தக் கால 'பைரவர்கள்' இருவர்:-)
சிவபெருமானின் 64  வடிவங்களில்  பைரவர்தான்  உலகெங்கும் வியாபித்து இருக்காராம்.  அந்த பைரவர்களில்  கால பைரவர் சிறப்பானவராம்.  திறந்த வெளியில்  பெரிய உருவமா கல்லில் செதுக்கி இருக்கும்  சிலை....   மூணு கண்கள், கோரப் பற்கள்னு  இருக்கார்.  பனிரெண்டடி உயரம். தலைக்கு மேலே ரெண்டு பக்கமும் சந்திரனும் சூரியனும்!
முழு உருவத்தையும் தரிசிக்க முடியலை. நல்ல கூட்டம் இங்கே. இதுலே ஒருத்தர் சாமியைக் கட்டிப்பிடிக்கறது போல சிலை மீது ஏறித் தொங்கிக்கிட்டே என்னமோ பிரசாதங்களை சாமி வாயில் ஊட்டி விடறார்.  சுத்தி நிக்கும் சனம் அவுங்கவுங்க  கொண்டு வந்த பிரசாதங்களை அவர்கிட்டே கொடுத்து ஊட்டச் சொல்றாங்க !  பாருங்க  வாயிலெ  பர்பி.  காஜு கத்லின்னு நினைக்கிறேன் :-)
கார்த்திகை மாதம்  கிருஷ்ணபக்ஷ அஷ்டமிதான் இவருக்கு ரொம்பவே விசேஷநாளாம்.  அன்றைக்கு பலியிடுவது  கூட நடக்குமாம்.
எதிரி பயம் ஒழிய இவரை வணங்கணுமாம். எல்லோருக்கும் நிறைய எதிரிகள் இருக்காங்க போல....
அஞ்சாம் நூற்றாண்டு  சிலைன்னு சொல்றாங்க. அந்தக் காலத்திலும் சரி, இந்தக் காலத்திலும் சரி .....  எதாவது வழக்கு,  சொல்றது பொய் இல்லைன்னு சத்தியம் செய்யறதுன்னு  இருக்கும் சண்டை சச்சரவு, மனஸ்தாபங்கள்  இதுலெயெல்லாம் இங்கே இவர்முன்னால் வந்து சத்தியம் செய்யச் சொல்வாங்களாம். பொய் சத்தியம் பண்ணா  கொஞ்ச நாளில் ஆள் காலி.  இங்கத்து சுப்ரீம் கோர்ட் இதுதான்னார் பவன் :-)

இவருக்கு முன்னால் காவல் சிங்கங்கள்  ரெண்டு இருக்கு. எல்லாம் நல்ல கருங்கல் சிலகள்தான்.
சனி பகவானின் கொடுமைகளில் இருந்து தப்பிக்கக் காலபைரவரை வணங்கினால் போதுமாம். இவரை மகிழ்விப்பது ரொம்ப சுலபம். தினசரி இந்தப் பக்கம் போகும்போது கையெடுத்துக்குக் கும்பிட்டால் போதுமாம். பார்க்கக் கொடூரமா, பயங்கரமா இருந்தாலும்.... இளகின மனசுடையவர் இவர். (அதானே... சிவனின் 64 வடிவத்தில் ஒருவர் ஆச்சே!  

சிவபெருமானையும் சுலபமா வசப்படுத்திடலாம். சாமிகளில் கொஞ்சம் அப்பாவி சிவன் தான்னு எனக்கு ஒரு எண்ணம். சாதுர்யமெல்லாம் கிடையாது. ரொம்ப ஸீதா சாதா...  இல்லாட்டி, பாற்கடலைக் கடைஞ்சப்ப வந்த ஆலகால விஷத்தைக் கண்டு எல்லோரும் பயந்து ஓடுனப்ப,  'உங்க  அனைவரின்  நன்மைக்கு வேண்டி நான் விஷத்தை முழுங்கறேன்'னு சொல்லி முழுங்கி இருப்பாரா?    கிடைச்ச ஐஸ்வரியங்களை எல்லாம் பங்கு போட்டுக்கிட்ட தேவர்கள் யாராவது , ஐயோ... வேணாமுன்னு தடுத்தாங்களா என்ன?  பாவம்... பெண்டாட்டிதான்  அழுதுகிட்டே   ஓடோடி வந்து, மயங்கிக்கிடந்தவரை மடிமேல் வச்சுக்கிட்டுப் புலம்பினாங்க....)

இப்பதான் இன்னொரு விஷயமும் நினைவுக்கு வருது. தக்ஷயாகம் கதை உங்களுக்குத் தெரிஞ்சுருக்குமே! திருவிளையாடல் சினிமா பார்த்துருப்பீங்கதானே?   யாகத்தீயில் விழுந்து இறந்துபோன மனைவி சதியைத் தோளில் தூக்கிக்கிட்டு  அலைஞ்சதும்,  விஷ்ணு  தன் சக்ராயுதத்தால்  அந்த உடலை 51 துண்டுகளா வெட்டியெறிஞ்சதும், அந்த உடல்பகுதிகள் விழுந்த இடங்கள் எல்லாம் சக்தி பீடமுன்னு கொண்டாடப்படுவதும் எல்லாம் நம்ம துளசிதளத்துலேயே பலமுறை எழுதியாச்சு.  அந்த சக்திபீடக் கோவில்களில் எல்லாம் காலபைரவர்  இருக்காராம்.

இவருடைய முழு உருவம் எப்படித்தான் இருக்குமுன்னு  வலையில் தேடினேன். ஆப்ட்டார்.  படத்தின் சொந்தக்காரருக்கு  நன்றிகள்.


பட்டாணி வேர்க்கடலை, பொரி ன்னு வச்சு வித்துக்கிட்டு இருக்காங்க. அநேகமா பேல் பூரி செஞ்சு தருவாங்க போல.....  பச்சை மிளகாய், தக்காளி உரிச்ச வெங்காயம்னு வச்சுருக்காங்க. கலர்ஃபுல்!
உள்ளூர் மக்களுக்கு இதுதான் பீச்.  சாவகாசமா உக்கார்ந்து பேசிக்கிட்டு இருக்காங்க. கூடவே சிறு தீனிகளும்.

இருட்டத்தொடங்குச்சு. போதும் பார்த்ததுன்னு  கிளம்பினோம்.   அப்பதான்    குமாரியின் மாளிகையின் முன்பக்கத்தைக் கவனிச்சேன். வெள்ளைச்சிங்கங்கள் காவலுக்கு இருக்கே!
ரவியை செல்லில் கூப்பிட்டு, அவர் வரச்சொன்ன  இடத்துக்கு நம்மைக் கூட்டிப்போனார் பவன். கிட்டத்தட்ட  அரைமணி நேரமாச்சு, லெமன் ட்ரீ வந்து சேர!  இத்தனைக்கும் ரெண்டே கிமீதான் தூரம் !
அப்படி ஒரு நெரிசலான போக்குவரத்து. ஆட்டோமேடிக் சிக்னல்  இருந்தாலும்  அதை கண்டுக்காம  ட்ராஃபிக் போலீஸ் கை காட்டிக்கிட்டு இருக்காங்க.

லெமன்ட்ரீயில்  ஓனர் ப்ரகாஷ் இருந்தார்.  போய் வந்த இடங்கள், பவன் நல்லபடியா வழிகாட்டுனாரா என்ற விசாரிப்புகள் எல்லாம்  ஆச்சு.  இந்த ரெண்டு நாட்களுக்கு மட்டும்தான் நமக்கு கைடு. பவன் தொழில் சுத்தம்:-)

கவனமாப் பார்த்துக் கூட்டிப்போனது பிடிச்சுருந்தது. பவனுக்கு  அஸ்ட்ராலியாவில் வந்து படிக்கணுமாம். மேற்படிப்புதான்.  சீக்கிரம் வந்து சேரச் சொன்னேன். அப்படியே நியூஸி வந்துட்டுப் போகவும் ஒரு அழைப்பு. நான் பதிலுக்கு வழிகாட்டியா இருக்கணுமா இல்லையா?

அறைக்குப்போய்  ஓய்வு எடுக்கணும்.  முக்கியமா வைஃபை மூலம் கொஞ்சம் மெயிலனுப்பணும்  ......

இன்றைக்கு நிறையவே சுத்திட்டதால்  இனி எங்கேயும் ராச்சாப்பாட்டுக்குன்னு கிளம்ப மனசில்லை.  கீழே சொல்லி ஒரு பிட்ஸா வரவழைச்சாச்சு. எல்லாம் அது போதும்.

மறுநாள் நேபாளை விட்டுக் கிளம்பறோம்.  ப்ரகாஷிடம் கணக்கு வழக்குகளைப் பார்த்து வைக்கச் சொல்லியாச்.

மறுநாளைக்கு வேண்டிய துணிமணிகளை வெளியே எடுத்து வச்சுட்டு, பெட்டிகளில் மற்ற சாமான்களை அடுக்கி (அடைச்சு) வைக்கத்தான் கொஞ்சம் நேரம் ஆச்சு.  ஜலநாராயணனையும், சாளக்ராம்களையும்  அடிபடாம பத்திரமாக் கொண்டு போகணுமே!

பாக்கி சமாச்சாரத்தை காலையில் பார்க்கலாம்.   குட்நைட்!

தொடரும்......... :-)





12 comments:

said...

கால பைரவர் பற்றிப் படிக்கும்போது மனதில் பாலமுரளியின் குரலில் கால பைரவாஷ்டகம் கேட்கிறது. 5 ஆம் நூற்றாண்டுச் சிலையா? அடேங்கப்பா... என்ன வலிமையா இருக்கு இன்னமும்?

நேபாளில் மூவிங் பாபுலேஷன்தான் அதிகமாயிருக்கும் இல்லை? சொந்த ஊர் மக்கள் கம்மியாய்த்தான் இருப்பார்கள்.

said...

அருமை. நன்றி. வணக்கம்.

said...

கால பைரவர் கோவில் நல்லா இருக்கு. உங்கள் நேபாள் பயணம் கிட்டத்தட்ட நிறைவுக்கு வந்துவிட்டதுபோல் இருக்கிறது. முக்தி நாத் பயணம் என்றாலும், காத்மண்டுவில் நிறைய இடங்களைப் பார்த்திருக்கிறீர்கள்.

said...

பாக்கப் பலாப்பழம் மாதிரி இருந்தாலும் உள்ள சுளைசுளையா இருக்காரு பைரவர். வெளிய வெள்ளையும் சொள்ளையுமா இருந்துக்கிட்டு உள்ள கொள்ளையும் கொலையுமா இருக்குறவங்கள விட இது மேல். சிவன் யார் என்ன கேட்டாலும் கொடுப்பார். அதுனால சிவனுக்குக் கொடுக்கத் தெரியாதுன்னு சொல்வாங்க. அது உண்மையில்லை. யார் எதை வாங்கினாங்களோ அதால்தான் அவங்களுக்கு வாழ்வோ சாவோ. வாங்குறவங்க நடத்தையிலிருக்கு முடிவு.

அதே மாதிரி பைரவர் வாயில் காஜுகத்லியைக் கொடுக்கும் அன்பு எனக்குப் பிடிச்சிருக்கு. மக்களை கடவுள் கிட்ட கூட்டீட்டுப் போறதுதான் ஆன்மீகம். தள்ளி நிக்க வெச்சு பயமுறுத்துறது இல்லை. ஆண்டவன் அனைவருக்கும் பொது. கும்பிடுறவன் கும்பிடாதவன் நம்புறவன் நம்பாதவன் அவன் இவன் உவன் எவனுக்கும் பொது. அதை மதிக்காத எதுவுமே ஆன்மீகம் இல்லை.

சிறுதீனிகள் உலகம் ரொம்பப் பெருசு. மக்களால சாப்பாட்டைக் கூட கட்டுப்படுத்திக்க முடியும். ஆனா சிறுதீனிகளைக் கட்டுப்படுத்த முடியாது. கார் சர்வீசுக்கு விட்டுட்டு லவுஞ்சில் காத்திருந்தேன். அங்க குடிக்க மோர், டீ, காபி, தண்ணி எல்லாம் வெச்சிருக்காங்க. அப்பளத்தைப் பொறிச்சு சிறுசும் பெருசுமா நொறுக்கி பெரிய கண்ணாடி பாட்டில்கள்ள போட்டு வெச்சிருந்தாங்க. பெரும்பாலும் கார் சர்வீஸ் பண்ண வர்ரவங்கள்ளாம் ஓரளவு நல்லாயிருக்கும் மக்கள். அவங்களும் அப்பளை அதுவரைக்கும் பாத்ததேயில்லைங்குற மாதிரி டிஷ்யூபேப்பர்ல எடுத்துப் போட்டு நொறுக்கிக்கிட்டிருந்தாங்க. சிறுதீனியைப் பொறுத்தவரைக்கும் வாயைக் கட்டுறது ரொம்பக் கஷ்டம்.

said...

ஆஹா !!அருமையான தகவல்கள் ..காலபைரவர் இடத்தில நிஜ பைரவர்களும் அழகா மணல் பாத் எடுக்கும் காட்சி அட்டகாசம் ..

said...

வாங்க ஸ்ரீராம்.

இங்கே B.C.சமாச்சாரங்கள் நிறைய இருக்கு. முக்கால்வாசியும் ப்ராச்சீந்தான்! அதோட அருமை தெரிஞ்சோ தெரியாமலோ ... பாதுகாத்துக்கிட்டுத்தான் வர்றாங்க. நம்ம பக்கங்களில்தான்.... ப்ச்.... ஒருவேளை இங்கே அந்நியர் படையெடுப்பு அதிகம் இல்லாததுகூட காரணமா இருக்கலாம்.

உலகின் ஒரே ஹிந்து நாடு என்பதில் நமக்கும் பெருமையாத்தான் இருக்கு.

ஃப்ளோட்டிங் பாப்புலேஷனுக்குக் காரணம்... ஹிமயமலைதான்! எவெரெஸ்ட் ஒன்னு போதாதா?

said...

வாங்க விஸ்வநாத்.

வருகைக்கு நன்றி.

said...

வாங்க ஜிரா.

//அதே மாதிரி பைரவர் வாயில் காஜுகத்லியைக் கொடுக்கும் அன்பு எனக்குப் பிடிச்சிருக்கு. மக்களை கடவுள் கிட்ட கூட்டீட்டுப் போறதுதான் ஆன்மீகம். தள்ளி நிக்க வெச்சு பயமுறுத்துறது இல்லை. ஆண்டவன் அனைவருக்கும் பொது. கும்பிடுறவன் கும்பிடாதவன் நம்புறவன் நம்பாதவன் அவன் இவன் உவன் எவனுக்கும் பொது. அதை மதிக்காத எதுவுமே ஆன்மீகம் இல்லை.//
சொன்னது சத்தியமான உண்மை. கடவுள் காட்சிக்கு எளியவனா இருக்கணும். ஆனா நம்ம பக்கங்களில் காசு பண்ணிக்கப் பயன்படுத்தறாங்க கடவுளர்களை:-(

போதாக்குறைக்கு, அரசியல் கட்சிகள் வேறு சாமி இல்லைன்னு சொல்லி மக்களை நல்லாவே குழப்பி விட்டுருக்கு. என்னத்தைச் சொல்ல ? ப்ச்

சிறுதீனிகள் உலகம் உண்மையிலேயே பெருசுதான் :-)

said...

வாங்க ஏஞ்சலீன்.

என்ன ரொம்ப நாளா ஆளையே காணோம்? நலம்தானே?

நல்ல ஸ்நேகமுள்ள பசங்களா இருக்காங்க. சத்தம் போடறதில்லை. குலைக்கக்கூட இல்லைன்னா பாருங்களேன் !

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

எல்லாம் அவன் அருள். அங்கே ஜொம்ஸொம்மில் நாள்கணக்கா அடைச்சு வைக்காம சட்னு தரிசனம் கொடுத்துட்டு, போய் மற்ற இடங்களைப் பார்த்து எழுதுன்னு சொல்லிட்டான்:-)

இங்கிருக்கும் அழகு தெரியாம, வெறும் ஒரு வாரம்னு திட்டம் போட்டதுதான் தப்பு. இன்னொருமுறை போயிட்டு வரணும் என்ற ஆவல்தான் அதிகம் இப்போதைக்கு.

said...

அக்கா ..நான் நல்லா இருக்கேன்கா அங்கே முகப்புத்தகத்தில் இல்லை இங்கே பிளாக்ஸ் பக்கம்தான் சுத்திக்கிட்டிருக்கேன் :)
ரஜ்ஜூ அப்புறம் மற்ற செல்லங்கள் எல்லாம் எப்படி இருக்காங்க

said...

@ ஏஞ்சலீன்.

எல்லோரும் நலம். குளிர் ஆரம்பிச்சதால் வீட்டுக்குள்ளே கப் சுப் :-)