Monday, May 22, 2017

போட்டாரே ஒரு போடு ! அதுவும் முதுகிலே....( (இந்திய மண்ணில் பயணம் 7 )

அங்கே இங்கேன்னு விசாரிச்சுப்போயும் கூட ஐயப்பனைக் காணோம்.... கண்டுபிடிக்க முடியலை. யாரோ கை காட்டுன திசையில் போய்க்கிட்டு இருக்கும்போது  பெரிய கலசம் ஒன்னு கண்ணில் பட்டது. இது புதுசு. இதே ரோடில் போன பயணத்தில் வந்துருக்கோம்.  அப்ப இதைப்போல ஒன்னு இல்லவே இல்லை.  அடிச்சுச் சொன்னேன்!
கண்ணில் படாமப் போக ச்சான்ஸே இல்லை!  அப்படி பெரூசு..... அதைக் கடந்து வண்டி போன விநாடியில் உள்ளே பெருமாள்.   ருக் ருக் தான். முகேஷ் ருக்கோ....
அப்புறம் போன பயணப்படங்களைத் தேடுனதில்  அப்ப இந்த வாசல் வேற டிஸைனில் இருந்துருக்குன்னு  தெரிஞ்சுருச்சு.... அப்பாடா நிம்மதி. ஆனா அப்போ இதுக்குள்ளே நாம் போய்ப் பார்க்கலை :-)     படம்:     மேலே    உள்ளது பழையது! 

இறங்கிப்போய்ப் பார்த்தால்  கலசம் டிஸைனில் வாசல்.  அதுக்குள்ளே நுழைஞ்சு போனால்  பெருமாள் ஒய்யாரமா  (உத்தான சயன போஸ்?)பாற்கடலில்  படுத்திருக்க, தாயார் ஸ்டைலா சாய்ஞ்சு காலை அமுக்கி விடறாங்க. நாபிக் கமலத்தில்  ப்ரம்மா! கொள்ளை அழகு!

 அப்படியே தலையைத் தூக்கிப் பார்த்தால்....   பாய்ந்து இறங்கும் கங்கையைத் தலையில் தாங்கும் சிவன், பார்வதி, பகீரதன் இப்படி. ஆனால் அந்த  ரிஷபம்தான் சூப்பர். என்னமா தலையைத் தூக்கி ப் பார்க்குது பாருங்க!
இடது  வலது பக்கங்களில் அசுரனோடு போர் புரியும் சிம்ம வாஹினி,  தக்ஷயாகத்தில் இறந்துபோன  மனைவி சதியைத் தூக்கிட்டு கோபத்தோடு  இருக்கும் சிவன் ....   (மொத்தமும் ஒரே ஃப்ரேமுக்குள்ளே அடங்காது!) 

இதையெல்லாம் க்ளிக்கினதோடு வெளியே வந்துருக்கலாம்.... ஆனால்....

பக்கத்துலே இருந்த  ஹாலுக்குள் போனால்... அதுதான் பூமா நிகேதன் ஆஷ்ரம் ஆஃபீஸ்.  இருவது ரூபாய்  கட்டணம் உள்ளே போய் பார்க்க.  பெருமாளின் அழகில் மயங்கிப்போய்  கொஞ்சம் கூடுதலா ஒரு டொனேஷன் கொடுத்துட்டு  அவர் சொன்ன வழிக்குள் நுழைஞ்சோம்!

 மாடியேறிப்போனதும் அங்கே ஒரு குகைக்குள் பயணம் !  உள்ளே நுழைஞ்சால் ஒன்வே மாதிரிதான்....
கோவிலுன்னு சொன்னாலும்.... இது  சம்ப்ரதாயக் கோவிலாட்டமில்லை.  ஆனா சின்னப்புள்ளைகளைக்  கூட்டி வந்து கட்டாயம் காமிக்க வேண்டிய இடம்தான். பசங்க்ளுக்கும் போரடிக்காது.  புராண கதைகளையெல்லாம்  ஸீன் காட்டி விளக்குனா சட்னு புரிஞ்சுக்குவாங்க.  சின்ன வயசுலே காதுலே, கண்ணுலே விழுந்ததெல்லாம்  கல்லில் பொறிச்சாப்ல.   மூளை மடிப்புலே போயிருச்சுன்னா, அழியாம  அதுபாட்டுக்குக் கிடக்கும் ஒரு பக்கம்:-)

சாமி சந்நிதிகளை விட்டுட்டு, மற்ற  'கதை' சொல்லும்சித்திரங்கள் எல்லாம் ஜெயிலுக்குள்ளே  :-(  இதனால் க்ளிக்கிய படங்களும் தெளிவாக  இல்லை:-(
கிருஷ்ணரின், ராமரின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள்தான் அதிகம்.
குகன் குடும்பத்தோடு  ராமரை வணங்குவதும்,  கம்ஸன்   எட்டாவது குழந்தையைக் கொல்லும்போது  கல்காதேவி தோன்றுவதும் கூட நல்லாவே புரிஞ்சது.

இடைக்கு இடையே  பிள்ளையார், ஸ்ரீ லக்ஷ்மி நாராயண்,  கருடர்,  சந்தோஷி மாதா, காளி, க்ருஷ்ணா, காலபைரவர்,  பாதரஸ லிங்கம், ஸித்தேஷ்வர் மஹாதேவ்,  பக்தவத்ஸலா மா துர்கா தேவி,    இப்படி சாமிச் சந்நிதிகளும்  இருக்கு.

மாதா ராஜராஜேஸ்வரி த்ரிபுரசுந்தரி, ஸ்படிகலிங்கம் சந்நிதிகளுக்கு  விசேஷ கவனிப்பும் அலங்காரமும்!


ஒரு இடத்தில்  பண்டிட் ஒருத்தர்  பிரஸாதத் தட்டோடு உக்கார்ந்துருக்கார். நம்மவர் குனிஞ்சு  பத்து ரூபாயை தக்ஷிணையாக பக்கத்தில் இருந்த தட்டில் போட்டதும், நாங்க எதிர்பாராத விதமாக, அரைக்கால் நொடியில் மடியில் இருந்து எடுத்த ஒரு தண்டத்தால் போட்டாரே ஒரு போடு... நம்மவர்  முதுகில்!

க்ளிக்க மறந்துபோய் நின்ன என்னிடத்தில் தக்ஷிணைத் தட்டைக் கையால் காமிச்சார். நான் நின்னவாக்கிலேயே  கும்பிடு போட்டுட்டு நகர்ந்துட்டேன். அடி வாங்கிக்கிட்டு முன்னாலே போனவரைப் பார்த்தாக் கொஞ்சம் பாவமாத்தான் இருந்துச்சு. .....
பாருங்க,  எனக்கும் அடி விழுதான்னு பார்த்துக்கிட்டு நிக்கறதை :-)

இந்த அடி....யால் நம்முடைய  கெட்ட காலங்கள் எல்லாம் போயே போச்ன்னு  ஒரு நம்பிக்கையாம்.  வலிச்சதான்னு நம்மவரிடம் கேட்டேன்.  வெறும் பஞ்சு மூட்டை தண்டம்தான். ஆனால் எதிர்பாராத நேரத்தில்  'தட்'னு முதுகில் பட்டதும் கொஞ்சம் திக் னு ஆகிடுச்சுன்னார். எனக்கும்தான்...  ' தட்' டுக்கும் 'திக்' குக்கும் சரியாப் போயிருச்சு :-)
அப்ப  அங்கே வேற பக்தர்கள் இருந்துருந்தால்  என்ன நடக்குதுன்னு புரிஞ்சுருக்கும். நாமும் கொஞ்சம் உஷாரா இருந்துருப்போம் :-)  அங்கங்கே மூட்டை தண்டம் வச்சுருக்காங்க :-)  இங்கே பண்டிட் இலை :-)  இருந்துருந்தாலும்....  


இந்த  பூமா நிகேதன் ஆஷ்ரம் ஸ்வாமி  அச்யுதானந்த் தீர்த்  என்றவரால்  ஆரம்பிக்கப்பட்டு இப்ப ஏகத்துக்கும் வளர்ந்து இருக்கு!
2009 வது  வருசம் ஒரு பெரிய ஆஸ்பத்ரி கட்டி இருக்காங்க.  ஏழை எளியவர்களுக்குச் செய்யும் சேவை கடவுளுக்கு செய்யும் சேவைதான்.
இப்பெல்லாம் ஆஷ்ரமங்கள் மாடர்னா செயல்படறதால்  வெப்சைட், ஃபேஸ்புக் எல்லாம் கூட இவுங்க  சேவைகளைச்  சொல்லிக்கிட்டு இருக்கு.
இந்த  சாமியார்களிடம் எனக்குப் பிடிக்காத  ஒன்னு  சாமி சிலைகளில் சாமிக்குப் பதிலா    தங்கள் முகத்தை வச்சுக்கறது,. ..    பக்தர்கள் விருப்பப்பட்டாங்கன்னு  சொல்லிருவாங்க.  அவுங்க ஆயிரம் விருப்பப்படட்டுமே.....    சாமி சாமிதான். நான் ஆசாமி. அந்த சாமியின் செய்தியைச் சொல்ல வந்தவன்னு வாயைத் திறந்து சொல்லக்கூடாதா?  

இதுலே இன்னொரு சாமியார் ரொம்பவே வயசானவர்,  தலையில் க்ரீடம் வச்சுக்கிட்டுக் கையில் புல்லாங்குழலுடன் பக்தர்களுக்குப் போஸ் கொடுக்கறார்.  க்ருஷ்ணனைக்  கிழவனாப் பார்க்க எனக்குச் சகிக்கலை  போங்க....    இங்கே இல்லை ... வேறொரு தோழியின்  குரு அவர். என்னவோ போங்க...... எல்லாத்தையும் துறந்துதானே சந்நியாசம் வாங்கிக்கறாங்க.... அப்புறம் என்னத்துக்கு இந்த வேஷக்கெட்டெல்லாம்....  

இப்பவே மணி ஒன்னரையாகப்போகுது. இனியும் ஐயப்பனைத் தேடிக்கிட்டு இருக்கமுடியாதுன்னு நாங்க ரிஷிகேஷுக்கு   மெயின்ரோடு வழியாவே வந்துட்டோம். நம்ம ஷுப் யாத்ரா  ட்ராவல்   ஆஃபீஸ் கிட்டே வந்ததும்,  மறுநாள் பயணத்துக்கான ஐட்டினரியை வாங்கிக்கலாமுன்னு  அங்கே போனால்...  ட்ராவல்  கம்பெனி  ஓனர் நவீனுடன், அவர் மனைவியும்  மகனும் இருந்தாங்க.
ஐயப்பன் கோவில் தேடிக் கிடைக்கலைன்னு சொன்னதும், நவீனின் மனைவி மாயா, ரயில்வே ஸ்டேஷனுக்குப் பக்கம் இருக்குன்னு  சொன்னதுதான் ஜோர்! மாயா கொல்லத்து ஆளாக்கும், கேட்டோ!  இத்திரி  மலையாளத்துலே ஸம்சாரிச்சு,  ஞெங்கள் இப்போ பந்துக்களாயி :-)

மகனுக்கு நாளைக்குப் பொறந்தநாளாம்.  வாழ்த்திட்டுப் போன வேலையை முடிச்சுக்கிட்டுக் கிளம்பும்போது,  'மத்ராஸ் ஹொட்டலில்  நம்மட ஊணு கிட்டும்' னு  உபரித்தகவல்.  ஹே.... அதொக்க இந்நளெதன்னே கண்டு வச்சுட்டுண்டல்லோ  :-)

நேராப் போனது மெட்ராஸ் ஹொட்டேலுக்குத்தான்.  தாலி மீல்ஸ்  சொல்லிட்டுக் கொஞ்சம் காத்திருந்தோம். முகேஷ்  வேறெங்கியோ சாப்பிட்டு வரேன்னுட்டுப்  போனார்.
சாப்பாட்டை முடிச்சுக்கிட்டு  கங்காவியூவுக்கு வந்துட்டோம்.   மூணு மணி வெயில்.  கொஞ்சம்  ஓய்வெடுத்துட்டு  சாயங்காலம்  ரிஷிகேஷை இன்னொரு ரவுண்டு வரலாம். ஓக்கே...

PINகுறிப்பு:  மங்கள் கலஷில் எடுத்த படங்களை முக்கியமா சாமிகளை  தனி ஆல்பத்தில் போட்டு வச்சுருக்கேன். விருப்பமிருப்பவர்கள் பாருங்க.

தொடரும்....   :-)19 comments:

said...

// ஏகத்துக்கும் வளர்ந்து இருக்கு! // சாமியார் கூடத்தான். 'காவித் துறவியெல்லாம் மெலிஞ்சாத்தான் மதிப்பு' ன்னு வைரமுத்து பாட்டுல சொல்வாரு.

தொடர்கிறேன். நன்றி.

said...

கோவில் சிற்பங்கள் (சமீபத்தில் செய்தவைதான்) அழகாக இருக்கின்றன.

தண்டத்தால் மெத்தென்ற அடி. ஆஹா. எனக்கு பிளிகிரி ரங்கன் மலைக்கோவிலை ஞாபகப்படுத்திவிட்டது. அங்கு, பெரிய செருப்புகள் (பாதணிகள், ஆனால் 50 மடங்கு பெரிதான நாம் அணியும் செருப்புதான்) உண்டு. அதை வைத்து பக்தர்களுக்கு அடி கொடுப்பார்கள் (கடவுளே ஆசீர்வாதம் செய்வதாக ஐதீகம்).

மெட்ராஸ் ஹோட்டல் தாலி - அவ்வளவு அட்டஹாசமாக இருப்பதுபோல் தெரியவில்லையே. எப்படி இருந்தது உணவு?

said...

வாங்க விஸ்வநாத்,

வைரமுத்துதான் சாமியார்களுக்கு அத்தாரிட்டியா? :-) ஏற்கெனவே பெரியவர்கள் யாரோ சொல்லி வச்சதில்லையோ?

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

சாமிகிட்டே செருப்படி வாங்கிக்கணுமோ!!!!

அடடா.... அந்தக்கோவிலைக் கவனமா தவிர்த்துடணும். நல்லவேளை 108 இல் இல்லை :-)


தாலி எப்படியாவது இருந்துட்டுப் போகட்டுமுன்னுதான். பார்க்க குழம்பு ரசம் மோர் இருக்கா? வெறும்சோறுதான் எனக்கு. அதனால் பிரச்சனை இல்லை. கோபாலுக்கு நல்ல பசி. ரெண்டே முக்கால் ஆகி இருந்துச்சு. பசி ருசி அறியாது :-)

said...

இந்த  சாமியார்களிடம் எனக்குப் பிடிக்காத  ஒன்னு  சாமி சிலைகளில் சாமிக்குப் பதிலா    தங்கள் முகத்தை வச்சுக்கறது,. ..    பக்தர்கள் விருப்பப்பட்டாங்கன்னு  சொல்லிருவாங்க.  அவுங்க ஆயிரம் விருப்பப்படட்டுமே.....    சாமி சாமிதான். நான் ஆசாமி. அந்த சாமியின் செய்தியைச் சொல்ல வந்தவன்னு வாயைத் திறந்து சொல்லக்கூடாதா?  //

அதனே!

காசி காலபைரவர் கோவிலில் முதுகில் கறுப்பு தண்டத்தால் அடிப்பார் பண்டா.
வட நாட்டில் நிறைய கோவில்களில் இப்படி அடிபார்கள்.

said...

இந்த மாதிரி கதை சொல்லும் சிற்பங்களை மதுராவிலும் ராமேஸ்வரத்திலும் பார்த்திருக்கிறேன் காசி விஸ்வநாதர் கோவிலில் பைரவர் சந்நதியில் பண்டா முதுகில் அடிக்கிறார் நான் தடுத்து விட்டேன் என் அண்ணா அடி வாங்கியதைப் பார்த்ததும்

said...

படங்கள் அருமை

said...

பெருமாளுக்கு தாயார் காலமுக்கி விடறது பெண்ணடிமைத்தனம் இல்லையோ!

இடங்களும் படங்களும் சூப்பர்.

பத்து ரூபாய் கொடுத்து முதுகில் அடியா? ஹா... ஹா... ஹா.. ஒரு ரிஃப்ளக்ஸ் ஆக்ஷனில் திருப்பிக் கொடுத்திருக்கணும்!

ஓ... பஞ்சுப்பொதி தண்டமா? அப்போ ஓகே!

said...

அருமையான இடங்களுக்கு எங்களை அழைத்துச் செல்லும் உங்களுக்கு நன்றி.

said...

பெங்களூர்லயும் இது மாதிரி செட்டிங்ஸ் கோயில் ஒன்னு இருக்கு. மொதல்ல சின்ன அளவுல இருந்துச்சு. அப்புறம் கூட்டம் அள்ள அள்ள புதுசு புதுசா கொண்டு வந்தாங்க. காசு கொடுத்து அறுவது டாலர்கள் வாங்கி சாமியைப் பாக்கப் போற வழியில் இருக்கும் உண்டியல்ல போட்டுக்கிட்டே போகனும். பாவமெல்லாம் போயிருமாம்.

ஆனாலும் பள்ளி கொண்ட மகாவிஷ்ணுவும் சிவன் கங்கையைத் தாங்குறதும் மிக அழகா இருக்கு.

பத்து ரூபா போட்டதுக்கு முதுகுல அடியா? அடடா! அடிக்கிறானந்தா சுவாமிகள் போல அவர்.

said...

படங்கள் ரொம்ப அழகா இருக்கே...தண்டத்தினால் அடி ஹஹஹ் பரவால்ல மெத்துனுதானே!! அருமையான இடங்கள் கூட்டிட்டுப் போறீங்க எங்களையும்....அப்பப்ப வந்து தொடர்ந்து வாசிக்கறோம் ஆனா எல்லாத்துக்கும் கமென்ட் போட முடியாம போயிடுது....அதான் ப்ரெசன்ட் டீச்சர்னு இங்க ஆஜர் வைச்சாச்சு...

கீதா

said...

வாங்க கோமதி அரசு.

சாந்தமான தினத்தில் அடிச்சா தேவலை. சாமியார் கோவமா இருக்கும்போதுன்னா... பின்னிருவாரோ :-)

நல்ல வழக்கம் போங்க !!!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

காசி காலபைரவர் கோவிலுக்கு நாம் போனப்ப.... இந்த அடி இல்லையே.... பண்டா அன்றைக்கு லீவோ என்னவோ!!!!

said...

வாங்க ராஜி.

வருகைக்கு நன்றிப்பா.

said...

வாங்க ஸ்ரீராம்.

பெண்ணடிமைத்தனமா? ஹாஹா உள்ளே அம்மா, ஐயாவைத் தூக்கிப்போட்டு மிதிமிதின்னு மிதிக்கிற சிற்பத்தைப் பார்க்கலையா? (ஆல்பத்துலே போட்டுருக்கேன்)

பக்தர்களுக்குன்னு தனி தண்டம் வைக்கணுமுன்னு மனுப் போடணும் :-) திருப்பி அடிக்கத்தான் !!!

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

தொடர் வருகைக்கு நன்றி.

said...

வாங்க ஜிரா.

பாங்காக் புத்தர் கோவில்களிலும் இப்படி காசு கொடுத்து காசுக்கிண்ணம் வாங்கிக்கிட்டு, ஒவ்வொரு புத்தருக்கும் போட்டுக்கிட்டே போவாங்க. இதுலே ஒவ்வொரு கிழமை புத்தருக்கும் காசு எண்ணிக்கை வெவ்வேற! அதுக்குத் தகுந்தாப்லெ போடணும். புத்தரும் கையில் உருளி வச்சிருப்பார், காணிக்கையை வாங்கிக்க!!!

அடிக்கிறானந்தா சுவாமிகள் .... ஆஹா.... :-) :-)

said...

வாங்க துளசிதரன்/கீதா

நேரம் கிடைக்கும்போது பின்னூட்டுங்க. மத்தபடி வாசிப்புதான் முக்கியம் !

said...

இப்படி நிறைய ஆஸ்ரமங்கள் அங்கே உண்டு. மாதா வைஷ்ணவ தேவி கோவில் கூட அப்படியே மலைக்கோவில் மாதிரியே குகைகள் அமைத்து இருக்கிறார்கள். இப்படி சிலைகள் மூலம் கதை சொல்ல வருவதும் நல்லது தான். எத்தனை எத்தனை கோவில்கள் இங்கே....

வட இந்திய கோவில்கள் பலவற்றில் பண்டிட்கள் இப்படி தண்டத்தினாலோ, கையாலோ பக்தர்களை முதுகில் தட்டுவது வழக்கம். ஜம்முவின் கோவில் ஒன்றில் காசு கொடுக்கும் வரை அடித்துக் கொண்டே இருந்த ஒரு பண்டிட் பார்த்து அந்தப் பக்கம் போகும்போது பாய்ந்து வெளியே வந்திருக்கிறேன்! :)

தொடர்கிறேன்.