Friday, May 19, 2017

மைய்யா.... கங்கா மைய்யா.... ஓ...கங்கா மையாமே.... (இந்திய மண்ணில் பயணம் 6 )


ஹரிகி பௌடியின்  இடதுபக்கம் போகும் பாதை இது.  ஒரே கூட்டமான சாலை.  வண்டியை எங்கியாவது பார்க் பண்ணிக்கறேன்னு முகேஷ் சொன்னதும் நாங்கள் இறங்கி மக்கள் வெள்ளத்தில் நீந்தி பாலம் கடந்து   பாய்ந்துவரும் கங்கையின் நடுவில் கட்டி இருக்கும் மாள்வியா தீவு(!) பக்கம்  இறங்கினோம். ( நம்ம பண்டிட் மதன்மோஹன் மாள்வியாதான். இவர் பாரத ரத்னா  பட்டமும் கிடைச்சுருக்கு! ) இங்கேதான்  பிர்லா க்ளாக் டவர் என்னும் மணிக்கூண்டு இருக்கு.

பாலத்தின் மேலே இருந்து பார்க்கும்போது.... கீழே அப்படி ஒரு கூட்டம்.
இவ்ளோ சனத்துக்கும்  எப்படி ஒரே மாதிரியான கடவுள் நம்பிக்கை இருக்குன்னு  நினைச்சுப் பார்த்தா.... ஆச்சரியம்தான். அதுலேயும்  ஏழ்மை நிலையில் இருந்தும்கூட  கங்காமாதாவை தேடி வரும் பல குடும்பங்களைப் பார்த்தால்.....   அவுங்களுக்கு இருக்கும் பக்தி நமக்கில்லையேன்னு  தோணும்...  இன்னும்  ஆன்மிகத்துலே போகும்தூரம் நிறைய இருக்குன்னு...

ஒருபாட்டியைப் பார்த்ததும்....  மனசுக்குள்ளே குற்ற உணர்வுதான்....  இப்படி இருந்தால் வெளியே கிளம்பி கோவில் குளமுன்னு தீர்த்த யாத்திரை போவேனா? .....  அந்த விநாடி  பெருமாளையே  பாட்டியாப் பார்த்தேன்....
ஹரி கி பௌடியில்  கலகலன்னு  கூட்டமான கூட்டம்.  நடுராத்ரி வந்தாலும் யாராவது கங்கையில்  முங்கிக் குளிச்சுக்கிட்டுதான் இருப்பாங்க போல.  இருபத்திநாலு மணி நேரமும் இப்படி.....
சின்னப்பையன், ஒரு நாலைஞ்சு வயசுள்ள  கணேஷ், சங்கிலியைப் பிடிச்சுக்கிட்டே படிகளுக்குப் பக்கத்துலேயே நீச்சல் பழகறார்:-)அப்பா ஒரு நாலு படிகளுக்கு மேலே உக்கார்ந்துருந்தார். பஸ் விபத்துலே கால் போயிருச்சாம்.  பார்க்கவே மனசுக்குக் கஷ்டமாப் போச்சு....
பாகீரதி ஸேது ....  பாலத்துக்குக்கீழே பாய்ஞ்சு  வர்றாள்!
இன்னொருக்காப் படிகள் ஏறி அந்தாண்டை  ஹரிகி பௌடி கங்காமாதா கோவில் இருக்கும் பகுதிப் போனோம்.  இந்தப் பகுதியில் படிகளே இல்லை. அப்படியே மேடான  நிலப்பகுதிதான்.  இங்கிருந்து நதியைக் கடக்கத்தான் பாலங்கள் போட்டுருக்காங்க.  ஆர்த்தி நடக்குமிடத்துக்கும் கங்கைக்கும்   அங்கிருந்தே இறங்கிப்போகும் அமைப்பு.
இந்த ஏரியாவில் காலணிக்கு அனுமதி இல்லை.  ஏகப்பட்ட  வாலன்டியர்கள் வந்து செருப்பு வைக்குமிடத்தைக் காமிக்கிறாங்க. நம்ம சனம்?   அங்கே போய் வைக்குமோ?   இங்கேயே காலில் இருப்பதைக் கழட்டிப்போட்டுட்டுப் போகுது.


கங்கா மாதா மந்திர்.  ஸ்ரீ கங்கா கோயில்னு தமிழில் எழுதி இருக்கு, பாருங்க!


நாங்க போய்  நாலைஞ்சு சந்நிதிகளைக் கும்பிட்டுக்கிட்டு கடைகள் இருக்கும் எதிர்வாடைக்குப் போனோம்.  கங்கை கொண்டு போக ஏகப்பட்ட செம்புப் பாத்திரங்கள் விற்பனை.  என்னமோ ஒன்னும் வாங்கிக்கத் தோணலை.  இப்ப இங்கே வந்தாட்டு, தண்ணி வச்சுக் குடிக்க ஒரு செம்புப் பாத்திரமாவது வாங்கியாந்துருக்கலாமேன்னு....  ப்ச்... விடுங்க ...

நேபாளில் பாசிமணிப் பித்து பிடிச்சுருக்குன்னு  சொல்லலை.... அதனால்  நீலப் பாசிமணி  மாலை  ஒரேமாதிரி    ரெண்டு (?) வாங்கிக்கிட்டு  இங்கே அங்கேன்னு வேடிக்கை பார்த்துக்கிட்டே காலை நீட்டிப்போட்டு கார் பார்க் வந்துட்டோம். நல்ல உச்சி வெயில், பனிரெண்டுக்கு என்ன சுத்தல்?


 இப்போ அடுத்த தேடல் அந்த ஐயப்பன் கோவில்:-) கார்பார்க்கில் ட்யூட்டியில்  இருந்த காவலர்கள் எதோ ஒரு வழியை முகேஷுக்குச் சொன்னாங்க.

 கிளம்பி வரும்போதுதான்  ஹரிகிபௌடியாண்டே  நிக்கும் பெரிய சிவன் சிலையைக் கிட்டப்போய் பார்க்கலையேன்னு .....   தனியார்கள் ஆஷ்ரம் வச்ச சிலையா இருக்கலாம். இப்போ தேட நேரமில்லைன்னு போனால்.....  போற வழியிலேயே  இருக்கும் ஒரு பார்க்குக்குள் இந்த சிலை  வச்சுருக்காங்க.
விவேகானந்தா பார்க்.  உள்ளே ரெண்டு பேருக்கும்தான் சிலைகள். ஆனா சிவன்  நூறு அடி உசரம்!  அங்கே போகணுமுன்னா  கொஞ்சம் சுத்திக்கிட்டுப் போகணும் என்றதால்....  போகப்போக  வண்டியில் இருந்தே சில க்ளிக்ஸ் ஆச்சு.

வாங்க,  நாம் போய் அந்த ஐயப்பனைத் தேடலாம்.......


PINகுறிப்பு.   ஹரிகி பௌடி கங்கைக்கரைப் படங்களைச் சும்மா விட மனசில்லை. தனி ஆல்பத்துலே போட்டுருக்கேன். சுட்டி இது. விருப்பம் இருப்பின் பார்க்கலாம். சுட்டி  வேலை செய்யலைன்னா.....    கீழே  உள்ளதைக் காப்பி & பேஸ்ட் தான் செஞ்சுக்கணும்.

https://www.facebook.com/media/set/?set=a.10209533077826370.1073741888.1309695969&type=1&l=0b6221ddc5

தொடரும்...... :-)


12 comments:

said...

படங்களும், விவரங்களும் சுவாரஸ்யம். கங்கை நீர் இந்த இடத்தில் 'வேறு எது'வும் மிதக்காமல் சுத்தமாக இருக்குமா?

said...

வாங்க ஸ்ரீராம்.

வேறு எதுவும் 'இங்கே' மிதக்கச் சான்ஸே இல்லை. உண்மையில் இது கரண்டு எடுத்த தண்ணீர் கால்வாய் வழியா இங்கே வந்து, பூஜை மரியாதைகளை வாங்கிக்கிட்டு கொஞ்சதூரம் தள்ளி அந்தாண்டை பெரிய கங்கையில் போய் சேர்ந்துருது.

காசியில் கூட அந்த 'வேறு எதுவும்' என்பயணத்தில் பார்க்கலை!

said...

// ஏகப்பட்ட வாலன்டியர்கள் வந்து செருப்பு வைக்குமிடத்தைக் காமிக்கிறாங்க. நம்ம சனம்? அங்கே போய் வைக்குமோ? //
நாங்க எப்போ சொல் பேச்சைக் கேட்டிருக்கோ ? அவன் என்ன சொல்றது, நான் என்ன கேட்குறது தானே எங்க பாலிசி.

அருமை. நன்றி.

said...

வாரணாசி ஹர்த்வார் ரிஷிகேஷ் போன்ற இடங்கள் எல்லாம்கண்முன்னே காட்சி தருது அங்கே எங்கோ ஒரு பெரிய ருத்ராக்ஷ மரம் பார்த்த நினைவு, நாங்கள் சென்றபோது கங்கா மாதாவின் கோவில் அருகே என் அண்ணி கூட்டத்தில் காணாமல் போக ஒரே தேடல் நினைவில்

said...

கங்கை கொண்டு போக ஏகப்பட்ட செம்புப் பாத்திரங்கள் விற்பனை. என்னமோ ஒன்னும் வாங்கிக்கத் தோணலை. இப்ப இங்கே வந்தாட்டு, தண்ணி வச்சுக் குடிக்க ஒரு செம்புப் பாத்திரமாவது வாங்கியாந்துருக்கலாமேன்னு.... ப்ச்... விடுங்க ...
நாங்க சென்ற மே மாதம் பத்ரிநாத் சென்ற போது ஹரித்வாரில் ஆர்த்தி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மிகுந்த மன நிறைவடைந்தோம் துளசி மா.. எங்களுக்கு நிறைய டைம் இருந்ததால் கடை கண்ணிகளை எல்லாம் பார்த்து ரசித்தோம். எங்கள் வீட்டில் செப்புக்குடம், குழாய் வைத்த செப்புக் குடம் எல்லாம் இருந்தும் ஹரித்வார் வந்த நினைவாக ஒரு சிறு செப்பு சொம்பு ரூபாய் நூற்றைம்பத்து மூன்றுக்கு வாங்கினோம் மா. வீட்டுக்கு வந்து அந்த செம்பில் தண்ணீர் நிறைத்து டேபிளில் வைத்தேன். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு விரிப்பில் செம்புக்குக் கீழே சிவப்பாக கறை இருந்தது. மேலும் இரு முறை நன்கு செக் செய்ததில் மீண்டும் மீண்டும் கறை வந்ததால் அந்த செம்பை நன்கு தேய்த்துக் கழுவியதில் செப்புக்கலர் எல்லாம் போயிட்டு ஸ்டீல் வெளியில் தெரிந்தது. நல்ல பெரிய கடையில் தான் வாங்கினோம். இவ்ளோ மூளையையும் திறமையையும் ஆக்கப்பூர்வமாக செயல்படுத்தினால் என்னவாம்

said...

உங்களோடயே கங்கைக்கு வந்த ஃபீலிங்.

விடாம, ஸ்கிரீன் பிரச்சனை உள்ள கேமராலேர்ந்து படம் போடறீங்களே... கோபால் சார் அப்போவே புது கேமரா வாங்கிக்கொடுத்திருப்பாரே...

"ஆன்மிகத்துலே போகும்தூரம் நிறைய இருக்குன்னு.." - அதுக்கு லிமிட் இல்லையே துளசி டீச்சர். 'காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி' என்று அப்பர் சொல்லற ஸ்டேஜே எங்க வாய்க்கிறது. அதுதான் ஆன்மீகத்தின் முதல் படி. அதுக்கு அப்புறம்தான் அந்தப் பாதை தொடங்குகிறது.

said...

வாங்க விஸ்வநாத்.

யார் பேச்சையும் என்ன, தன் பேச்சையே தான் கேக்காத டைப் இல்லையோ நாம் ? :-(

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

பாதரச லிங்கம் இருக்கும் கோவிலில் பெரிய ருத்ராக்ஷமரம் இருக்கு. பார்தேஷ்வர் மஹாதேவ் மந்திர். ருட்ரக்ஷ ன்னு தமிழில் எழுதி வச்சுருப்பாங்க !

said...

வாங்க கிருபா.

செம்பு நிறைய பொய் ஆகிருச்சே.... :-( பணம் பண்ண இப்படி ஏகப்பட்ட வழிகள் கண்டுபிடிச்சு வச்சுருக்கு நம்ம சனம்.... ப்ச்.....

said...

வாங்க நெல்லைத் தமிழன்.

அன்றைக்குக் கையில் கொண்டு போனது அந்தக் கெமெராதான். படம் எடுக்குமுன் ஞாபகமா லென்ஸ் கவரை விரலால் தள்ளி விட்டால் பிரச்சனை இல்லை. அவசரடியில் நினைவுக்கு வர்றதில்லை...:-(

உடனேன்னு போய் வாங்கிக்க முடியுமா? கொஞ்சம் கெமெரா ரிவ்யூ எல்லாம் பார்த்து, ஸேல் வரும்போது வாங்கிகணும். ஏற்கெனவே ஒரு கேனன் கொண்டுபோயிருந்தோம். அது இதைவிடக் கொஞ்சம் கனம் கூடுதல் என்பதால்.... தேவைப்பட்டால்தான் வெளியில் எடுப்பேன்.

இப்பப் பாருங்க முந்தாநாள் கோபால் அந்த ஸோனியை எங்கியோ தொலைச்சுட்டார். ஆஃபீஸ் கொண்டு போனவருக்கு எங்கே வச்சோமுன்னு நினைவில்லையாம்:-(

இப்பத்தான் வேறொன்னுக்கு அடிபோட்டு போய்ப் பார்த்துட்டு வந்தோம். ரெண்டு வாரத்துலே ஸேல் வருது. வெயிட்டிங் இப்போ :-)

பெருமாளாய்ப் பார்த்துக் கைபிடிச்சுக் கூட்டிக்கொண்டு போனால்தான் உண்டு ஆன்மிகப்பாதையில்.... இல்லே?

said...

கங்கைக் கரையில் மக்கள் வெள்ளம்.

கங்கைலையே நீச்சல் பழகுறானே பையன். தில்லாலங்கடிதான் பையன். அவனுடைய தந்தை நிலைதான் பாவம். ஆனாலும் மகனைக் கூட்டீட்டு வந்து தண்ணில எறக்கி விட்டிருக்காரே. பாராட்ட வேண்டிய விஷயம்.

said...

கங்கையின் பிரவாகமும், கங்கைக் கரை காட்சிகளும் காணத் திகட்டாதவை. பெரும்பாலான ஹரித்வார் பயணங்களில் கங்கைக் கரையில் வெகு நேரம் அமர்ந்து விடுவது வழக்கமாக இருந்தது. படங்கள் பார்த்ததும் அங்கே செல்ல வேண்டும் என்ற எண்ணம் வருகிறது - சென்று சில வருடங்களாகி விட்டன.....

தொடர்கிறேன்.