Friday, March 20, 2015

இனி மேல் ஆயகலைகள் அறுபத்தியஞ்சு, இதையும் சேர்த்தால்!:-)


தெரு ஓவியம் தொடர்ச்சி....

இங்கே கலர்கலராக் கிடைக்கும் ஸ்ப்ரே கேன்களை வச்சு  சுவர்களில்  அசிங்கமாக் கண்டபடி  அடிச்சு வச்சுட்டுப் போகும் 'graffiti' கலாச்சாரம் ரொம்ப வருசமா இருக்கு.  அப்படிச் செஞ்சவனைப் பிடிச்சு நாலு சாத்து சாத்தாம... 'இளைஞர்கள் தங்கள் மன அழுத்தத்தை இப்படி வெளிப்படுத்தறாங்க' ன்னு  சப்பைக் கட்டுக் கட்டும் கூட்டம்தான் அதிகம்.

மனித உரிமை என்ற  பெயரில்  குண்டு போட்டு நூத்துக்கணக்கான உசுருகளைப் போக்கியவனுக்கும்,  பிஞ்சுக்குழந்தைகளை பாலியல் வக்ரமத்துக்கு  இரையாக்கும் கொடியவர்களுக்கும்,  ஒருதலைக் காதலா இவனா நினைச்சுக்கிட்டு, அவள் உடன்படலைன்னதும் முகத்தில் ஆஸிட் ஊத்திட்டு,  ஒரு தண்டனைக்கும் உள்ளாகாமல் வெளியே நடமாடும் மிருகங்களுக்கும் ஆதரவு காமிக்கும்  வகை போல இது  இல்லை என்றாலுமே.... 

தங்கள் வீட்டையோ, கட்டிடத்தையோ அசிங்கம் பண்ணிட்டுப்போறவனை ஒன்னும் செய்யமுடியாமல்  திரும்பத்திரும்ப  செலவு செஞ்சு  சரிப்படுத்தும் மக்களை நினைச்சால் பாவமாத்தானே இருக்கு! இன்ஷூரன்ஸ் கூட  பணம் கொடுக்காது,  இப்படியான க்ளெய்ம்களுக்கு:-(

கொஞ்சம் கொஞ்சமா இவுங்களே,  செய்யும் செய்கைக்கு அழகூட்டுவது போல செஞ்சுக்கலாமேன்னு நினைச்சுருப்பாங்க போல. திருடனாப் பார்த்துத் திருந்தினால்தான் உண்டு.  கொஞ்சம்   நல்லபடியாப் படம் போட ஆரம்பிச்சதும் இதை  'graffiti-style murals' என்று கொண்டாட ஆரம்பிச்ச நாடு இது:-)

இந்த விடலைகளைப்போல் இல்லாமல் உண்மையாகவே  இதை ஒரு கலை போலவே ஆராதிச்சு அருமையா சித்திரம் வரையற கலைஞர்களும் உருவாகிட்டாங்க  என்பதே உண்மை.  இதே கலர் கேன்ஸ்தான். ஆனால் வரைஞ்ச படங்களிருக்கே.... ஒவ்வொன்னும் அற்புதம்! எப்படி இதுலேயே  ரொம்பவே லைட்டாகவும், அதிகமான அழுத்த நிறமாகவும் ஸ்ப்ரே செஞ்சுருப்பாங்கன்னு என்னால் நினைச்சுக்கூடப் பார்க்க முடியலை. இந்தக் கலையும் ஆரம்பிச்சது  நம்ம பிக் ஆப்பிள் என்னும் நியூயார்க் நகரத்திலேதானாம்,  Graffiti  Artist  Donald J. White aka "Dondi" 1961-1998  என்பவரால்.


எங்கூர்  ஒய் எம் ஸி ஏ கட்டிடத்தில்  இந்தவகை தெரு ஓவியங்கள்  இருக்குன்னதும் எதுக்கு விடணுமுன்னு கிளம்பிப் போயிருந்தோம்.

அன்றைக்குத்தான்  அந்த டிஷர்ட் காட்சிக்கும் போய்வந்தது.

வாசல் முகப்புச் சுவரிலேயே மாண்டேலா  இருந்தார். வெறும்  காங்க்ரீட் சுவர்தான்.  அதுலே கண்ணைக் கவரும் படங்கள்.  முதல்தளத்துக்குப் போனோம். இந்தக் கலையை ஆரம்பிச்சு வச்ச Dondi க்கு ஒரு முதல்மரியாதையாக  இது.






முதலில்  ஒரு ஹாலை ரெண்டாத்தடுத்து ஒரு OP Shop. நமக்கு  வேண்டாத பொருள் இன்னொருவருக்கு ரொம்பவே வேண்டிய பொருளாகப் போயிருதே!

அதன்பின் ஒரு பெரிய ஹால் முழுக்கக்  கண்டமானம்  வரைஞ்சு தள்ளியவை. தரையிலிருந்து கூரை வரை!




அடுத்து இன்னொரு ஹாலில்  க்ராஃபிட்டி வீடியோ!!!  பல வண்ணங்களில் மாறிமாறிவந்தது பிடிச்சிருந்தது. லிமிட்லெஸ் என்ற தலைப்பாம்!  பத்து மில்லியன் மக்கள்ஸ் பார்த்துட்டாங்களாமே! ஒரு ஒன்னரை நிமிச வீடியோ வலை ஏத்தி இருக்கேன். நேரமிருந்தால்  பாருங்க.

அடுத்த  அரை அறையில்   ஒரு ஸிட்டிங் , டைனிங், ஆஃபீஸ் செட்டப்.  Panic Room! சரிபாதி அறை இப்படி! லேப்டாப்கூட இருக்கு.  ஆனால்....  மௌஸைக் காணோம்:-)


நெட்  ஒர்க் பண்ணலைன்னு சலிச்சுக்கிட்டே அடுத்த இன்னொரு இருட்டறைக்குள் போனால் இரவு வானம்.  நட்சத்திரங்கள்  அப்பப்ப  லேசா ஒளி வீசுது:-)  DTR Crew   Dcypher from Los Angeles.

இவர் ( Dcypher) பெயர் Guy Armstrong Boston Ellis.  ஒரு கிவிதான். இங்கே எங்கூரில்தான்  (கிறைஸ்ட்சர்ச்)  ஆர்ட்ஸ்  &  டிஸைன்ஸ் பட்டப்படிப்பு முடிச்சுட்டு, illustration and Graphic Design செய்வதில் கவனம் செலுத்தியிருக்கார். இப்ப வசிப்பது எல் ஏவில். இவருடைய வலைப்பக்கத்தைப் பார்த்தால் ப்ரமிப்புதான்.


 கையால் அவுட்லைன் வரையாம எப்படி ஓவியமாக்கறாங்கன்னு தோணிக்கிட்டே இருந்ததுக்கு  இவருடைய ஃபேஸ்புக்கில் இருக்கும்  அஞ்சு விநாடி வீடியோவிலும்,  இன்னொரு ஒன்னரை மினிட்டுக்கும் குறைவான வீடியோவிலும்  பதில் கிடைச்சது!



என்ன இருந்தாலும் எங்கூர்க்காரர் பாருங்க.  அதனாலேயே  ஒரு கர்வம் (எனக்குத்தான்) வந்தது என்பதே உண்மை:-)))


கட்டக்கடைசியா ஒரு பிரமாண்டமான ஹாலில்  எட்டு ஸ்ப்ரே கேன்களை நிறுத்தி வச்சுருக்காங்க. ஒவ்வொன்னும்  நாலரை மீட்டர் உசரம்!  அசப்புலே பார்த்தால் நம்ம திருமலைநாயகர் மஹல் தூண்களே! அதோட  மூக்கிலே இருந்து ஒளிவெள்ளம் பாய்ஞ்சு எதிர் சுவத்துக்குப் போகுது. அங்கே?

எட்டு  பெயிண்ட்டிங்ஸ்.  கூடத்தின் ஒரு கோடியில் இருந்து மறு கோடிவரை!

எதிர்ச்சுவரில் இருக்கும்  ஓவியத்துக்கு நேரா இருக்கும் ஒவ்வொரு  ஸ்ப்ரே கேனிலும்  அதை வரைந்த ஓவியக் கலைஞரைப் பற்றிய குறிப்புகள். இதுலே நாலு கிவி, ரெண்டு ஆஸி, ஒருத்தர் அமெரிகர், ஒருத்தர் ஃப்ரெஞ்ச்.




வெறும் காங்க்ரீட் ப்ளாக்ஸ் வச்சுக் கட்டுன சுவரில்  மந்திரம்  போட்டுட்டாங்க!

'வாய்  பிளந்து நின்னேன்'னு சொன்னால் அது பொய் இல்லையாக்கும்!





13 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அப்பப்பா...! பிரமாண்டம்... சிலது கசகசவென்று இருந்தாலும் அதுவும் அழகு தான்...

தருமி said...

இதைப் பார்த்துக்கிட்டு இருந்தப்போ மனசுல .... இந்த கோபால் -துளசி நல்ல காம்பினேஷன் இல்ல அப்டின்னு தோணிச்சி ... சுத்திப் போட்டுக்கங்க ...

அதென்ன OP ?

RAMA RAVI (RAMVI) said...

அருமை.. படங்கள் அனைத்தும் மிக அருமை. அந்த கடைசி படங்கள் பிரமிப்பை கொடுக்கிறது.

துளசி கோபால் said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

கசகசன்னு இருப்பதிலும் குழப்பம் இல்லாம வரைவதில் அவுங்க உழைப்பு தெரியுதே!

அதுவே அந்த ஒரு அழகு!

துளசி கோபால் said...

வாங்க தருமி.

//இந்த கோபால் -துளசி நல்ல காம்பினேஷன் ...//

ஆஹா.... அப்டீங்கறீங்க!

இந்த OP என்பது opportunity shop என்பதன் சுருக்.
charity shop, thrift shopன்னும் சொல்லலாம். நமக்கு வேண்டாத நல்ல சாமான்களை இவுங்களுக்குக் கொடுத்துட்டால் அதை விற்று வரும் காசு தர்மகாரியங்களுக்குப் போயிரும்.

ஃபர்னிச்சர், டிவி எல்லாம் இப்படிக் கொடுத்துருக்கோம். ஃபோன் செஞ்சா அவுங்களே வந்து எடுத்துக்கிட்டுப் போயிருவாங்க.

இப்ப ஒரு டிவி ச்சும்மாக் கிடக்கு. நியூஸி ஒளிபரப்பு டிஜிட்டல் ஆனதும் இது வேலை செய்யலை. டிகோடர் ஒன்னு இருக்குன்னாலும் நிறைய இடம் பிடிக்குதுன்னு அதை கராஜில் கொண்டு வச்சுட்டோம். இப்ப இங்கே
LED TV மலிவாக் கிடைப்பதால் இது யாருக்கும் வேண்டாத பொருளாக்கிடக்கு.

G.Ragavan said...

இதுவும் ஆயகலைல ஒருகலையான ஓவியம் தானே டீச்சர். யாரோ ஒரு பாண்டிய மன்னன் உண்மையிலேயே 64கலைகள் தெரிஞ்சு வெச்சிருந்தானாம். நிம்மதியான காலகட்டமா இருந்திருக்கும். அதான் அதுக்கெல்லாம் நேரமிருந்திருக்கு.

I like graffiti. குறிப்பா ஐரோப்பாவில் பார்த்ததெல்லாம் அருமை. நம்ம ஊர்ல இப்ப அங்கங்க நல்லதா வரையுறாங்க. கோட்டூர்புரம் ரயில்வே ஸ்டேஷன்ல, கிரீன்வேஸ் ரோடு ஸ்டேஷன்ல (திருவருட்செல்வர் சிவாஜி-பத்மினி ஓவியம்).. இப்படி நெறைய இடங்கள்ள வரஞ்சிருக்காங்க.

அந்த கிராபிட்டியை ஒரு கலையா மாத்தியது அருமை.

விஸ்வநாத் said...

Lovely drawings, like it.

கோமதி அரசு said...

வீடீயோ, ஓவியங்கள் எல்லாம் அழகு.

G.M Balasubramaniam said...

ஆய கலைகள் 64 என்னவென்று தேடிப்பிடித்து ஒரு பதிவு போட்டிருக்கிறே(னாக்கும்..) உங்கள் வழியில் .......!

ராமலக்ஷ்மி said...

பிரமிக்க வைக்கும் ஓவியங்கள்.”நாலரை மீட்டர் உசர”த்தில் ஓவியர்களின் திறமைக்கும் மரியாதை.

பகிர்வுக்கு நன்றி.

Thulasidharan V Thillaiakathu said...

நீங்க மட்டுமா வாய் பொளந்து நின்னீங்க..ஹஹ நாங்களும் உங்க புகைப்படங்களைப் பார்த்தே வாய் பொளந்துட்டோம்...அப்ப நேர்ல பார்த்திருந்தா ....

அருமை அருமை! சகோதரி! தொடர்கின்றோம்....

Unknown said...

super!!!!!!!!!!

ADHI VENKAT said...

super...