Monday, March 23, 2015

எதையும் தாங்கும் இதயத்தில் குடி புகுந்தவள் ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 32)

ஸ்ரீ வல்லப க்ஷேத்ரம் .  பாண்டவர்களில் சகாதேவன் கட்டிய கோவில். இந்த ஐவரில்  மிகவும் அறிவு பூர்வமாக சிந்திப்பவனும், சமநிலையில் இருப்பவனும்  சகாதேவன்தான் என்கிறார்கள். அதானே... இல்லாமலா  'பாரதப்போருக்கு நாள் குறிச்சுத் தா' ன்னு துரியோதனனே கேட்டுருப்பான்!

திருவமுண்டூர் க்ஷேத்ரத்தில் இருந்து திரும்பி மீண்டும் புறாவடிக்கு   வந்து  மெயின் ரோடில்  இடத்து வசம் திரும்பி மேலே  வடக்கோட்டு போயால்  திருவல்லா மார்கெட் பஸ் ஸ்டொப் எத்திக்காணும். பின்னே வீண்டும் இடத்து வசம் திரிச்சு ஒரு ரெண்டு கிலோ மீட்டர்.    மஹாவிஷ்ணு க்ஷேத்ரத்தின் படியில் எத்தி. சொல்றதுக்கு ஆகும்  நேரம் தான் அதிகம்.  மொத்ததில் வெறும் 7.3  கிமீ தொலைவுதான். 22 நிமிட் பயணம்:-)

திரு வல்லபன் வாழும் இடம்தான் திருவல்லா என்ற இந்த ஊர்.

ரோடு சைடில் வண்டி நிறுத்தும் இடத்திலேயே  ஒரு  கொடிமரம்! கோவில்  முன்மண்டபமா இப்ப இருக்கும் கட்டிடத்துக்கு வலது பக்கம். தொன்மையான கோவிலுக்குப் பொருந்தாத வகையில்  இருக்கும்  புதுச்சேர்க்கை:(
கொடிமரத்துக்குப்பின் இருக்கும் வாசல்வழியேதான் முந்தி கோவிலுக்குள் போயிருப்பாங்கபோல. இப்ப சிமெண்டு வச்சுக் கட்டினதா  இருப்பது ....  பிற்காலச் சேர்க்கை. கொஞ்சம் நல்லாதான் இல்லே:(  ஆனால்  இதுக்கு முன்னால்  ஒரு சின்ன சந்நிதியில் கருடாழ்வார் இருக்கார். இங்கே மற்ற கோவில்களில் இப்படி நான் பார்த்ததில்லை தமிழ்நாட்டுக் கோவில்கள் தவிர.


தினசரி பூஜா விபரங்கள் எழுதிப் போட்டுருக்காங்க.


இந்தக் கோவில் காலை நாலு மணிக்கே திறந்துடறாங்க. பதினொன்னரைக்கு  நடை அடைப்பு. மாலை அஞ்சு முதல் எட்டு.

உள்ளே  பெரிய வளாகமா இருக்கு.  ஆனை மண்டபம் உசரமா நிக்க அடுத்து  ஒரு மூணுநிலையில் கேரள ஸ்டைலில் அழகான கட்டிடம். இதுகூட பிற்சேர்க்கையாத்தான் இருக்கணும்.  அடுத்து  ஒரு கொடிமரம். இந்தப்பக்கம் ஆலயமணி. கொடிமரம்கடந்து போனால்  உம்மரம். திண்ணை வச்ச  நடை. உள்ப்ரகாரம். கருவறைக்கு முன் உயரம் குறைஞ்ச கூரையுடன்  திண்ணை மண்டபம் , வட்டக்கருவறை  இப்படி  காலையில் நாம் பார்த்த   கோவில்களைப்போலவே!

ஸ்ரீவல்லபர் என்னும் கோலப்பிரான் கிழக்கு நோக்கி நின்னு ஸேவை சாதிக்கிறார். தென் திருப்பதின்னு இந்தக் கோவிலைச் சொல்றாங்க.  நம்மாழ்வாரும், திருமங்கை ஆழ்வாரும் வந்து பாடி மங்களசாஸனம் செஞ்சுருக்காங்க என்பதால் இது 108 கோவில்களில் ஒன்னாக இருக்கு.

இங்கே மூலவரிடம் நாம் நின்னுக்கிட்டு இருக்கும்போது நாம் எதிர்பாராத ஒரு சேவையும் கிடைச்சது நம் பாக்கியமுன்னு சொல்லணும். கருவறையில் இருந்து சின்னதா இருக்கும் சிலையை  (உற்சவரோ?) ஒரு பட்டர்  தன் கைகளால்  அணைச்சுப்பிடிச்சாப்போல் ஏந்தி வெளியே வர,   சின்னதா ஒரு இடைக்கா மட்டும் ஒலிக்க திடீர்னு அங்கே  வந்த பட்டர்கள் ஏழெட்டுப்பேர் பின் தொடர  கருவறையைச் சுற்றி ஒரு ஊர்வலம்! பின்னே வெளியில் இருக்கும் கொடிமரம் வரை போய் திரும்பி வந்தாங்க. தினமும் காலை எட்டுக்கு நடக்கும் சீவேலியாம்!  நமக்கும் பின்னாலே போகணுமுன்னு ஆசை இருந்தாலும் அந்தக்கூட்டத்தில் பெண்கள் யாரும் கூடப்போகாததால்  நான் போகலை.  என்னால் இவரும் போகலை. புதுசாப் போகும் கோவில்களில் என்னென்ன நியமம் இருக்கோ,  யாருக்குத் தெரியும்?

கருவறை சுற்றி வந்தப்ப....  பெருமாளுக்குப் பின்பக்கம் இருக்கும் சக்கரத்தாழ்வாரை நாம் தரிசிக்கும் விதத்தில்  ஒரு ஜன்னல் போல ஒன்னு இருக்கு. பக்தர்களைக் காக்க தன் சக்கரத்தைக் கூடவே வச்சுருக்கார் என்று ஐதீகம்.

பிரஸாதமாச் சந்தனம் கொடுத்த வாழை நறுக்கில் துளி விபூதியும் இருந்துச்சு! சைவம் வைஷ்ணவம் ஒற்றுமை!  ஒரு சமயம் தனுர் மாசம் (நம்ம மார்கழி ) திருவாதிரை நட்சத்திர நாளில்  சிவபெருமான்,  வல்லபரை தரிசிக்க வந்தாராம். அந்த நினைவுக்காக  திருநீறும்  கொடுப்பது ஒரு வழக்கமா ஆகி இருக்கு.

 தாயாரின் பெயர்  செல்வத் திருக்கொழுந்து நாச்சியார். வாத்ஸல்ய தேவி. பெருமாளுக்கு இங்கே திருவாழ்மார்பன் என்ற பெயரும் உண்டு. ஏன்? கதை இருக்கான்னு கேட்டால், இருக்கே!

நரசிம்ஹ அவதாரம் எடுத்து ஹிரண்யகசிபுவை வதம் செய்ய வந்த  சமயம், கோபாவேசத்தால் உடல் அதிர்ந்துக்கிட்டு  இருக்கு. பயந்து போன  மஹாலக்ஷ்மி அந்தக்கணம்  அவளிருக்கும்  இடத்தை( விஷ்ணுவின் திருமார்பு)  விட்டு அகன்று தனியே வந்துட்டாள். இதுவும் நல்லதுக்குத்தானாம். அவள் கூடவே இருந்துருந்தால்  அந்த வதம் நடக்கவே விட்டுருக்கமாட்டாள்.  அவ்வளவு இரக்கம் உள்ள மனசுக்காரி. கெட்ட அசுரனுக்கும்  கூட தயை காமிக்கும் தாய் உள்ளம்.

வதம் முடிஞ்சாட்டும், கோபாவேசம் அடங்கலை.  அப்போதான்  பக்தன் ப்ரஹலாதனை  சிம்ஹத்தின்  கண் முன் காமிச்சு சமாதானப்படுத்துனதுன்னு கதை போகும்.  இன்னொரு வர்ஷனில்  தேவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி  சிவன், சரபேஸ்வரர் உருவமெடுத்து  நரசிம்ஹனைக் கட்டித் தழுவி  கோபத்தை ஆற்றினார் என்று புராணம் சொல்கிறது.  சரி, இப்போ லக்ஷ்மியைப் பார்க்கலாம்.

பெருமாளை விட்டகன்ற  மஹாலக்ஷ்மி, இங்கே வந்து தவம் செய்ததாயும், அப்போ மஹாவிஷ்ணு தோன்றி மீண்டும்  அவளை தன் மார்பில் இருத்திக்கொண்டார் என்றும் ஆனதால் திரு (செல்வம். செல்வத்தின் அதிபதி  மஹாலக்ஷ்மி) வாழ்கின்ற மார்பனாக  மீண்டும் மாறிவிட்டார் என்பதே கதை.
இப்போள் நல்லோணம் மனஸிலாயிக்காணும், அல்லே?

ஏகாதசி விரதம் இந்தக்கோவிலில் ரொம்பவே பிரபலம். இதுக்கும் ஒரு கதை வச்சுருக்காங்க.  முன்பொரு காலத்தில்  சங்கர மங்கலம் கிராமத்தில் இருந்த ஒரு  பெண்மணி (இவுங்களை சங்கரமங்கலத்து அம்மைன்னு சொல்றாங்க)  ஒவ்வொரு ஏகாதசிக்கும் விரதம் இருந்து மறுநாள் துவாதசிக்கு சமையல்  செஞ்சு ஒரு பிரம்மச்சாரிக்கு முதலில் அன்னமிட்டபின் அவுங்களும் சாப்பிட்டு விரதம் முடிப்பாங்களாம்.

அப்போ இருந்த  தோலாகாசுரன் என்ற ஒரு அசுரனுக்கு இது பிடிக்கலை. அதனால் எப்பவும் விரதபங்கம் செய்வானாம். யாரும் அவுங்க வீட்டுக்கு வரவிடாமல் தடுப்பானாம். இது அவுங்களுக்கு ரொம்ப மன உளைச்சலைக் கொடுத்தது. பெருமாளிடம் மனம் உருகி பிரார்த்தனை செஞ்சுக்கிட்டே இருந்துருக்காங்க. ஒரு ஏகாதசிநாள் இரவில்   யாரோ வீட்டுக்கருகே சண்டை போடறமாதிரி சப்தம் கேட்டது.  வெளியே போய்ப் பார்த்தால் அரக்கன்  உயிரை விட்டுருந்தான். மறுநாள் காலை துவாதசி நாளில் ஒரு அழகிய பிரம்மச்சாரி வீட்டுவாசலில் நின்றிருக்கார். அவருக்கு அன்னம் கொடுத்து உபசரிச்சுட்டு, இவுங்களும் சாப்பிட்டு விரதம் முடிச்சுக் கோவிலுக்குப்போய்  பெருமாள் முன் நின்னு  அவருக்கு நன்றி சொல்லிக் கும்பிட்டு நிமிர்ந்தபோது , பெருமாளின் உடலில் அந்த பிரம்மச்சாரி இளைஞனின்  உருவம் தோன்றி மறைஞ்சதாம். அப்போதான் தெரிஞ்சது இவர்கள் வீட்டுக்கு வந்துபோனதும் அரக்கனை வதம் செஞ்சதும் சாக்ஷாத் பெருமாள்தான் என்று.

நமக்குப் பொதுவாக வைகுண்ட ஏகாதசிக்கு உள்ள முக்கியத்துவம் மாதா மாதம் வரும் ஏகாதசிக்கு இருப்பதில்லை. நாங்கள் பூனாவில் இருந்தபோது  அங்கே எதிர் வீட்டில் இருந்த ஒரு கேரளப் பெண்மணி,  வளர்பிறை தேய்பிறைன்னு வரும் ரெண்டு ஏகாதசிக்கும் விரதம் இருப்பாங்க. நான்?  விரதமுன்னு நினைச்சாலே கபகபன்னு பசி வந்துரும், ஜென்மம் :(

நாம் போன சமயம்,  அங்கே எட்டு நாட்களுக்கு ஒரு விசேஷ பூஜை (உத்தான ஏகாதசி வ்ரதாசரணம்) நடக்குதுன்னு  தெரிஞ்சது. நேத்துதான் (அக்டோபர் 27) ஆரம்பிச்சுருக்கு.  நவம்பர் 3 வரை நடக்குமாம்.

கோவிலில் உள்ள தீர்த்தத்தின் பெயர் கண்டா கர்ண தீர்த்தம். கண்டா கர்ணனுக்கும் இங்கே பெருமாள் தரிசனம் கொடுத்தாராம். கதையும் இருக்கு.
கண்டாகர்ணன் என்பவன்  சிவனுடைய பூதகணங்களுக்குத் தலைவனாக இருந்தவனாம். மக்களை  இம்சை செய்வது அவனுக்கு வெல்லம் தின்னாப்போல.  சிவனுக்கு அவர்களை நரபலியாக் கொடுத்துட்டு, இறந்த உடலை தின்னுடுவானாம்.  இந்த சிவபக்தியால் தனக்குக் கட்டாயம் முக்தி கிடைக்கும் என்று இருந்தவனிடம், 'தீவிரவாத வெறியுடன் இருக்கும் பக்திக்கு மோக்ஷம் கிடையாது. சாந்த ஸ்வரூபனாக இருக்கும் விஷ்ணுவை தியானம்செய்தால்தான் முக்தி கிடைக்கும்' என்று சிவபெருமான்  சொல்லி அவனை இங்கே அனுப்பினார்.

'ஓம் நமோ நாராயணாய' என்ற எட்டெழுத்து மந்திரத்தை இடைவிடாமல் சொல்லிக்கிட்டே தவம் செய்ய ஆரம்பிச்சுருக்கான்.  இதைத்தவிர மற்ற ஓசைகள் ஏதும் செவிக்குள் ஏறாமல் இருக்க  காதை மறைத்து  என்னவோ  பொன்னால் ஆன காதணிகூடப் போட்டுருந்தானாமே!  இவனுக்கும் தரிசனம் கொடுத்துருக்கார்  திருமகள் எப்போதும் குடி இருக்கும் மார்பை உடைய திருவாழ்மார்பன்!இந்தக்கோவிலில்  இன்னும் ஒரு விசேஷம் தினமும் நடக்குதுன்னு சொன்னால் நம்புவதற்கு முடியாதுதான். அது என்னவாம்?   தினம் கதகளி நாட்டியம் நடக்குதாம். ஒவ்வொருநாளும்  இரவு பத்து மணிக்கு ஆரம்பிச்சு பொழுது விடியவிடிய நடக்குதாமே!  காலை நாலுமணி வரை நடக்குமுன்னு நினைக்கிறேன்.அப்பதானே நடை திறக்கும் நேரம். பார்க்கக்கொடுத்து வைக்கலை நமக்கு. முதலிலேயே தெரிஞ்சு இருந்தால் கூடுதலா ஒரு நாள் செங்கன்னூரில் தங்கி இருக்கலாம்.


ஓ...அதுதானா....கோவிலின் முன்பகுதி ஹால் மண்டபத்தில் கதகளி படங்களெல்லாம் வச்சுருந்தாங்க! அப்போ இதைப் பார்த்தாலும் என்ன ஏதுன்னு விசாரிக்கத் தோணலை பாருங்க:(


வெளிப்ரகாரம் வலம் வந்தப்ப தூரத்தில் ஒரு யானை! ஆஹான்னு  அங்கே போக இருந்தவளைத் தடுத்து , 'ஆனைக்கு மதம் இளகிட்டுண்டு.  அடுத்துச் செல்லேண்டா' என்றார் கோவில் ஊழியர். ப்ச்....  பாவம்.  சின்ன வயசுக்காரந்தான்.  என்ன ஆச்சோன்னு மனசுக்குக் கஷ்டமா இருந்துச்சு. தலையைத் தலையை ஒரு மாதிரி ஆட்டிக்கிட்டே இருந்தான். ஐயோ...பெருமாளே....இங்கே ஸ்ரீவல்லபன், ப்ரம்மச்சாரி என்பதால் பெண்கள்  சந்நிதி முன்பு வந்து கும்பிடக்கூடாது. வெளியே நின்னுதான் கும்பிடணுமுன்னு  ஒரு காலத்தில் நியமம் இருந்துருக்கு. என்ன பிரம்மச்சாரியோ? அதான்  மஹாலக்ஷ்மி  அவன் மார்பில் வாழ்ந்துக்கிட்டுத்தானே இருக்காள்! வருசத்தில் ரெண்டே நாட்களுக்கு மட்டும் அனுமதின்னு ஆச்சாம். தனுர் மாசத்தில் வரும் திருவாதிரை நக்ஷத்திர நாளிலும்,  புது வருசப்பிறப்பு  விஷூபண்டிகை நாளிலும் மட்டும் என்று.  நல்லவேளை அந்த  வேண்டாத நியமங்கள் எல்லாம் 1968 வருசம் போயே போச்.   இப்ப பிரச்சனை ஒன்னுமில்லையாக்கும்.


இப்ப யார்யார் கோவிலுக்குள் வரக்கூடாதுன்னு ஒரு நோட்டீஸ் போட்டு வச்சுருக்காங்க:(  எல்லாம் மனுஷ்யர் பண்ணும் (தலை) விதிகள்,  அட்டகாசம். என்னவோ போங்க.


ரொம்பவே அதிகாலையில் எழுந்து கிளம்ப முடியுமுன்னால்  செங்கண்ணூரில் இருந்து நேரா இங்கே வந்து தரிசனம் முடிச்சுக்கிட்டு, திருவமுண்டூர், முண்டன்காவுன்னு முடிச்சுட்டுப்போய்க்கிட்டே இருக்கலாம். பாருங்க நாம் காலை ஆறேகாலுக்கு அறையில் இருந்து கிளம்பி மூணு திவ்யதேசங்களை தரிசனம் செஞ்சுட்டு இப்போ எட்டரைக்குத் திரும்பி இருக்கோம்.  தென்திருப்பதியில் இருந்து பகவத் கார்டனுக்கு (நம்ம ஹொட்டேல்) திரும்பிவர  பத்தே கிலோ மீட்டர்தான்.

வாங்க,  போய்  நம்ம  ஆர்யாஸில்  காலை உணவை முடிச்சுக்கலாம் சரியா?

தொடரும்............:-)


18 comments:

said...

இரண்டு கதைகளுடன் படங்கள் அனைத்தும் பிரமாதம்...

தினமும் கதகளி நாட்டியம் ஆச்சரியம்....!

said...

அருமை..! அருமை..!! அற்புதமான பதிவு..!!!

said...

எங்கள் ஊர் திருவல்லாவைக் குறித்து இத்தர பறைஞ்சதினு நன்னி!

திருவாழ்மார்பன்....அதே பெயருடன் வீற்றிருக்கின்றார் திருவண்பரிசாரம் எனும் சிறிய கிராமத்தில்....தற்போது திருப்பதிசாரம் என்று வழங்கப்பட்டு வருகிறது(நம்ம மக்கள்தான் எப்பவுமே பேர மாத்தறுதுல கில்லாடிங்களாச்சே...எங்களுக்கு எல்லாம் ஷார்ட் அண்ட் ஸ்வீட்தான் பிடிக்குமஹஹ்) நாகர்கோவிலிலிருந்து திருநெல்வேலி போகும் வழியில் ஒழுகினசேரி தாண்டிச் செல்லும் போது, தேரேகால் புதூர் எனும் சிறிய ஊர் வரும் முன் இடது புறம் திரும்ப, ஆப்போசிட் வழி என்றால் வலது புறம்...ஒரு முக்கால் மைல் தூரம் போனால் இந்தச் சிறிய அழகான ஊர். கேரளத்து வழக்கத்தில். அதே பாணியிலான...நம்மாழ்வார் பாடல் பெற்ற ஸ்தலம். நம்மாழ்வாரின் தாயார் உடையநங்கை அவதரித்த ஊர். 108 திருப்பதிகளில் ஒன்று. குட்டைநாட்டுத் திருப்பதிகளிலும் ஒன்று.

மிக்க நன்றி சகோதரி. தொடர்கின்றோம்....

said...

சுவாரசியமான புராண கதைகளுடன் படங்களும் பதிவும் அருமை.

நாங்க கூட மாதத்தில் இரண்டு ஏகாதசி விரதம் இருப்பது வழக்கம். நீர் ஆகாரம்தான்..ஏகாதசியன்று முழு அரிசி (சாதம்) சாப்பிட கூடாது என்பது வழக்கம்.அதனால் சிலர் அதை பின்னப்படுத்தி( ரவை மாதிரி உடைத்து) சாதம் செய்து சாப்பிடுவார்கள்.

said...

நானும் போயிருக்கிறேன்.

said...

எத்தனை எத்தனை கதைகள் !! பயண அலுப்பு தெரியாமல் ஆங்காங்கே சின்ன சின்ன விவரங்கள் கலகலப்பாக சிரிக்க , பெருமாளின் தரிசனம் உங்கள் மூலமாக , நன்றிகள் பல . சுவாரசியம் குறையாமல் அழைத்து செல்கிறீ ர்கள் துளசி . கூடவே வருகிறோம் .

said...

கேரளக் கோவிகளில் நம்பூதிரி வாழை இலையில் பிரசாதத்தை தூக்கி எறிவாரே( தருவாரே). கவனித்தீர்களா கதைகள் இல்லாத கோவில்களே கிடையாதாக்கும் இந்தக் கதைகளின் குறிப்பை அவ்வப்போதே எழுதி வைத்துக் கொள்வீர்களா.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

அதுதான் எனக்கும் ஆச்சரியமா இருக்கு. கதகளிக்கு முக அலங்காரம் செய்யவே சுமார் நாலுமணி நேரமாகும். இதுலே தினமும் என்றால்......!!!!!

said...

வாங்க செந்தில் குமார்.

ரசித்தமைக்கு நன்றி.

said...

வாங்க துளசிதரன்.

உள்ளூர்க்காரர் வந்தது ரொம்ப மகிழ்ச்சி. எதாவது தகவல் பிழை இருந்தால் சொல்லுங்க. திருத்திக் கொள்வேன்.

நாகர்கோவில் கன்யாகுமரி பயணத்துலே இந்தக்கோவிலை (திருவண் பரிசாரம்) தவறவிட்டுட்டோம். இன்னொருமுறை போகணும்தான்.

திருவண் என்று ஆரம்பிக்கும் திவ்ய தேசம் மூணே மூணுதான் திருவண் புருஷோத்தமம் சேர்த்தால்.
எப்படியும் திருக்கண்ணபுரம் பயணம் ஒன்னு பாக்கி இருக்கு. அப்போ போகணும். 'அவன்' உத்தரவும் வரணும்!

108 இல் ஒரு 100 கிடைத்தாலும் திருப்தியே!

said...

வாங்க ரமா ரவி.

எங்க அம்மம்மாதான் விரதம் எக்ஸ்பர்ட் நம்ம வீட்டுலே.

அரிசி உப்புமா தான் ஏகாதசி ஸ்பெஷலாக்கும் அங்கே:-)

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

நல்லது. தகவல் சரிதானே?

said...

வாங்க சசி கலா.

கூடவே வருவது மகிழ்ச்சிப்பா!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

இந்தப் பயணத்தில் எறிப்ரஸாதம் கிடைக்கலை:-)

திருவனந்தபுரத்தில் ஒருமுறை துளிச் சந்தனம் பச்சக்ன்னு கையில் வந்து விழுந்தது:-)

பெயர்கள் மறந்து போகுமேன்னு அவைகளை மட்டும் குறிச்சு வைப்பேன். தினமும் எப்படியும் மெயில் செக் பண்ணுவதால், எனக்கே ஒரு மெயில் ட்ராஃப்ட்டில் போட்டு வைப்பேன். அதில் அன்றாடம் சந்தித்த பெயர்கள் இருக்கும்.

கதைகள் பலதும் பாட்டி சொன்னது அடிமனதில் இன்னும் இருக்கு. கேட்டதும் நினைவுக்கு வந்துரும்.

said...

சகாதேவன் தான் ஐவரில் மகாதேவன். அவ்வளவும் ஞானம். ஞானம் இருக்குற இடத்துல தானா அமைதியும் வந்திரும் போல.

அவன் கட்டிய கோயிலும் நல்லா அமைதியா இருக்கு. ஐவரில் சின்னவன்னு சின்னதாகக் கோயில் கட்டியிருக்காரு போல.

தென் திருப்பதின்னு நிறைய கோயில்களைச் சொல்றாங்களே டீச்சர். செங்கல்பட்டு தாண்டி வேடந்தாங்கலுக்குப் போகும் வழியில் மலை மேல் வேங்கடாஜலபதி வீற்றிருக்கும் திருமலைவையாவூரும் தென் திருப்பதின்னு சொல்றாங்க. நானும் போயிருக்கேன். திருப்பதி மாதிரியே அலங்காரம். மலை மேல கார் போக வழியிருக்கு.

அதே மாதிரி கோவை பக்கத்துல ஒன்னு இருக்குன்னு சொல்றாங்க. அரியக்குடியும் தென் திருப்பதிதான்னு சொல்றாங்க.

இது மாதிரி வேற தென் திருப்பதிகள் இருக்கா?

said...

darisanam kidaithathu kuriththu mikka makizhchi...

said...

வாங்க ஜிரா.

வசூல்ராஜா...ப்ராஞ்ச் ஆஃபீஸ் வச்சுக்கறதுலே மன்னர் இல்லையோ! திருநெல்வேலியில் கூட ஒரு தென் திருப்பதி இருக்கு.

சுருக்கத்தில் எல்லா மாவட்டங்களுக்கும் ஒவ்வொன்னு:-)

said...

வாங்க ரோஷ்ணியம்மா.

அரியர்ஸ் எல்லாம் முடிச்சுட்டீங்க போல!

சூப்பர். தனித்தனியா பதில் சொல்லணும்தான். கொஞ்சூண்டு பிஸி.

மாப்பு ப்ளீஸ்