Saturday, March 07, 2015

அபிதாவின் அரங்கேற்றம்.

எங்கூரில் எனக்குத் தெரிஞ்சு  இது முதல் பரதநாட்டிய அரங்கேற்றம். அழைப்பிதழை நேரில் கொடுக்க வந்த  நாட்டியமணியின் பெற்றோர் , நாங்க வீட்டில் இல்லாததால் தபால் பெட்டிக்குள் வச்சுட்டுப் போயிருந்தாங்க.
மறுநாள் தொலைபேசி, சமாச்சாரம் சொன்னவங்களிடம் கட்டாயம் வர்றோமுன்னு சொன்னேன்.

நியூஸிக்கு அவுங்க வந்தநாள் முதல் நமக்குத் தெரிஞ்சவங்கதான். அது ஆச்சு பதினாறு வருசம். கோயமுத்தூர் என்பதால் தமிழ்பேசும்  கேரளத்தினர். நமக்கு ரெண்டு வகையிலும் பேசலாம்:-)

எங்க ஊரில்  சுமார் பத்து வருசமா பரதநாட்டியம் கற்றுக் கொடுக்கும்  பள்ளி நடந்துக்கிட்டு இருக்குன்னா நீங்கள் நம்பணும்!

 வெலிங்டன் நகரில் நாட்டியப்பள்ளி நடத்திவரும் விவேக் கின்ரா (பஞ்சாப் மாநிலம்) நம்ம  கலாக்ஷேத்ராவில் படிச்சவர். அவர் க்ளாஸ்மேட் உங்களுக்கெல்லாம் நல்லாவே தெரிஞ்ச ஒருத்தர்தான். நடிகை அமலா.  விவேக்தான் எப்பவாவது  ரெண்டு வருசத்துக்கோ, மூணு வருசத்துக்கோ ஒருமுறை எங்க க்றைஸ்ட்சர்ச் நகருக்கு வந்து நாட்டிய நிகழ்ச்சி நடத்திட்டு போவார். மூணு நாள். நாளுக்கொன்னா மூணு ஷோ. தவறாமல் போய்ப் பார்த்துட்டு வந்துருவோம்.  அவரும் கூட நடனமாடும் ஒரு பெண்ணுமா வருவார்.

லைவ்  ம்யூஸிக் எல்லாம் கிடையாது. ஆரம்பத்தில்  பாட்டுகள் எல்லாம் டேப். அப்புறம் சி டி யாகிருச்சு.

ஒரு சமயம்  அவர் கூட ஆட வந்தவங்க நம்ம  ஃபிஜி அக்காவின் மருமகள். பெங்களூர் பொண்ணு. கையில் மூணு மாசக்குழந்தை. நம்ம வீட்டில்தான்  தங்குனாங்க. நமக்கு அந்த முறை ஓசி டிக்கெட்டும் கிடைச்சது. குழந்தையை மடியில் கிடத்திக்கிட்டு முன்வரிசை  வி ஐ பி ஸீட்டில் உக்கார்ந்துருக்கேன்.  குழந்தை அழுதா வெளியில் தூக்கிக்கிட்டுப் போயிறலாமுன்னு கோபால் சொல்லி இருந்தார். ஆனால்.... அந்தப் பிஞ்சு பாருங்களேன்....நாட்டியம் ஆரம்பிச்சது முதல்  முடியும்வரை நிம்மதியான தூக்கம்!   அம்மா ஆட்டத்தை என்னை அனுபவிக்க விட்டுச்சு, என் செல்லம்:-)

அப்புறம் இங்கேயே நடனப்பள்ளி வந்த  பிறகு விவேக்கின் வருகை குறைஞ்சுதான் போச்சு. அப்படியும்  இங்கே நடக்கும் பாடி ஃபெஸ்டிவல் என்ற திருவிழாவில்  ஒருநாள் வந்து ஆடினார். இந்தமுறை அவர்கூட ஆடியவங்களும் வெலிங்டனில் இருந்து வந்த ஒரு பெண்(குஜராத்) என்றாலும் நம்மூர் நடனப்பள்ளி ஆசிரியை அனுராதாவும்  ரெண்டு நடனங்களில் விவேக்குடன் சேர்ந்து ஆடினார்.

விவேக்கின் நடன நிகழ்ச்சிகளில் படம் எடுக்கத் தடை உண்டு. ஏமாற்றம்தான் என்றாலும் கலைஞரை மதிக்க வேணும் இல்லையா?

இதுதவிர  அனுராதா அவர்களும் அவ்வப்போது  விவேக்கின் முத்ரா டான்ஸ் ஸ்கூலுக்கு (வெலிங்டன். நியூஸியின் தலைநகர்) போய்  மேற்கொண்டு சிறப்புப் பயிற்சியும் பெற்றுகொண்டு வருவார்.  எந்தக் கலை என்றாலும் அதில்  மேம்படணும் என்றால் கற்றலை விடக் கூடாதில்லையா?

அனுராதா, இலங்கைத் தமிழர். இங்கே நியூஸிக்கு வந்த நாள் முதல் நமக்குப் பரிச்சயம் உண்டு. தொழில் வகையில்  ஒரு எஞ்சிநீயர். (University of Liecester.UK) இலங்கையில் இருந்தப்பவே தன்  ஆறாவது வயசில் நாட்டியக்கலையை கத்துக்க ஆரம்பிச்சாங்க. குருவாக அமைஞ்சவர் கலாக்ஷேத்ராவில் படிச்சவர். பலவருசப்படிப்பு வீண்போகாமல் இங்கே எங்களுக்கான நாட்டியப்பள்ளி ஆரம்பிச்சது எங்களுக்கு ரொம்பவே மகிழ்ச்சியான விஷயம்.  ஆரம்பத்தில் வெறும் மூணே மூணு மாணவிகள்தான்!  சமீபகாலமா இவுங்களும் தன் பள்ளி மாணவிகளுடன் 'நாட்டியம்' என்று  ஒரு ஷோ கேஸ் ப்ரோக்ராம் வருசாவருசம் நடத்தறாங்க. இப்போ இங்கே  சில வெள்ளைக்காரக் குழந்தைகளும் பரத நாட்டியம் கத்துக்கறாங்க என்பதில் எனக்குப் பரம சந்தோஷம்!



சின்னச் சின்னப்பிஞ்சுகள் மேடையில் ஆடுவது  நமக்கும் பார்க்க நல்லாவே இருக்கு. தாய்தகப்பனுக்கும்  தங்கள் குழந்தைகளை மேடையில் பார்ப்பது மகிழ்ச்சிதானே! இதில் கலையின் நேர்த்தி முக்கியமில்லை. பயம் இல்லாமல்  ஆடுவதே முக்கியம்.  பொதுவா இந்த நிகழ்ச்சிகளில்  ஆடும் குழந்தையின் தாத்தாபாட்டி, அப்பா அம்மா, உடன்பிறந்தோர் என்று பெரிய கூட்டமா  இருப்பதே சபை நிறைஞ்சுருக்குமுன்னு சொல்லலாம்:-)))

இப்படியாக நடனப்பள்ளியின் வளர்ச்சியை வருசந்தோறும் பார்த்து வருகிறோம். பள்ளியின் பெயர், பரதநாட்டியம் க்ரூப் ஆஃப் கிறைஸ்ட்சர்ச்.


இந்த ஊரில் நூத்தியெழுபத்தியஞ்சு  (மனித) இனங்கள் இருக்குன்னு ஒரு சமயம் நகரத்தந்தையுடன் பேசிக்கிட்டு இருந்தப்பச் சொன்னார். எல்லா இனங்களும் சேர்ந்து கொண்டாடும் விதமா கல்ச்சர் கலோர் (Culture Galore) என்ற பெயரில் ஒரு விழா, மார்ச் மாச முன் பாதியில் எதாவது ஒரு சனிக்கிழமைகளில் கடந்த 15 வருசமா நடந்துக்கிட்டு இருக்கு. இங்கத்து கோடைகாலம் ஃபிப்ரவரியோடு முடிஞ்சுரும். மிச்சம்மீதி இருக்கும் வெயிலை எதுக்குப் பாழாக்கணும்?

திறந்த வெளியில் உள்ளூர்  பார்க் ஒன்னில்  மேடை அமைச்சுருவாங்க.  மேடைக்கென்றே ஒரு பெரிய வேன் இருக்கு. கண்டெய்னர்  போல இருக்கும் இதைக் கொண்டு வந்து நிறுத்தி பக்கவாட்டுக் கதவைத் திறந்துட்டால்.....  மேடை!

இதிலும் நம்ம அனுராதாவின் பரதநாட்டியப்பள்ளியின் பெரிய க்ரேடு  மாணவிகள்  ரெண்டு நடனம் ஆடுவதுண்டு.  இப்படிப் பள்ளியின் வயசும் அபிதாவின் நாட்டியக் கல்வியின் வயசும் ஒன்னாவே தொடர்ந்து வருது.
இந்தப் பதிவை வெளியிடும் இன்று  கல்ச்சர் கலோர் 2015 நாள். பிற்பகல் 12 முதல் 4 வரை நடக்கும்விழா. கம்யூனிட்டி ஈவண்ட்.  போயிட்டு வந்தோம்.

இப்ப நம்மூரில் இன்னும் சில நாட்டியப்பள்ளிகள் (!) ஆரம்பிச்சு நடக்குதுன்னு கேள்வி!  அதுலே ஒரு பள்ளியின் மாணவிகள் நம்ம கேரளா க்ளப் ஓணம் விழாவில் ஆடுனாங்க.

குறிப்பிட்ட நாளில் நடன அரங்கேற்றத்துக்குப் போய்ச் சேர்ந்தோம். பள்ளிக்கூடத்தின்  ஹால்.  ஆம்பி தியேட்டர் போன்ற அமைப்புள்ளது.   ஒரு 150 பேர் அமரும் வசதி.  ஹாலின் முகப்பிலேயே   டென்னியும் ஆன்ஸியும் வரவேற்றாங்க. சொல்ல மறந்துட்டேனே.... இது நம்ம அனுராதாவின் மாணவிகள் கூட்டத்தில் முதல் அரங்கேற்றம். அவுங்களும் பரபரப்பாத்தான் இருந்தாங்க. சகல விவரங்களோடுள்ள நிகழ்ச்சிநிரல் நமக்குக் கொடுத்தாங்க.

அபியின் பெற்றோர்


குறிச்ச நேரத்துக்கு நிகழ்ச்சி ஆரம்பிச்சது.  கடவுள் வாழ்த்துப் பாடிய அனுராதா, நடராஜரின் பாதங்களில் வச்சுருந்த சலங்கைகளை எடுத்து அபிதாவிடம் கொடுத்து ஆசீர்வதிச்சாங்க. மேடையில் வந்து நின்ன பெற்றோருக்கும் பாட்டிக்கும் வணக்கம் செஞ்ச நடனமணி  உள்ளே போய் சலங்கையைக் காலில் அணிஞ்சு வந்ததும்  சலங்கை ஒலி ஆரம்பமாச்சு.





கஜானனம் சொல்லி பிள்ளையாரை வணங்கி புஷ்பாஞ்சலி, அலாரிப்பு  முடிஞ்சு நாட்டியக் கடவுளுக்கு  வணக்கம்.

 உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன்    
 நிலவு லாவிய நீர்மலி வேணியன்    
 அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்    
 மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்.     
 

சேக்கிழாரின் பெரிய புராணத்தில் உள்ள காப்புச் செய்யுள்.

ரெண்டாவதா ஜதிஸ்வரம். கால்களைக் கவனிச்சுக்கிட்டு இருந்தேன்.  பாதவேலைகள் அருமை.

மூணாவதா சப்தம். இதுக்குண்டான பாட்டு...  ராகமாலிகையில் அமைஞ்சது. காம்போதி, ஷண்முகப்ரியா, பிலஹரி, மத்யமாவதி  ராகங்கள்.

" ஆயர் சேரியர் அறிந்திடாமலும்,
அன்னை தந்தையர் அறிந்திடாமலும்
நேயர் கோபியர்  நெஞ்சம் கவர்ந்திட
மாயவன் குழல் ஊதுறான்
எங்கள் யாதவன் குழல் ஊதுறான்.

முகபாவங்கள் அருமை.   நடனத்துக்கு  கிருஷ்ணனும் ராமனும்  பொருத்தமா இருப்பது போல் வேற யாரும் இல்லைன்னு எனக்கொரு தோணல்.  அம்பாளும் சக்தியாக  இருந்து ஆடுவதும், சிவனின் தாண்டவமும் கூட  ரொம்பவே அழகுன்னாலும்  என் ஓட்டு க்ருஷ்ணனுக்கே!

வர்ணத்துக்கு ஒரு முருகன் பாட்டு. இயற்றியவர் ஆண்டவன் பிச்சை.  இந்தப்பெயரை இவருக்கு அளித்தவர் காஞ்சி மஹாபெரியவாதான்.  ஒரு சமயம் பெரியவர்  ஒரு கிராமத்துக்குப்போயிருக்கார். ஊர் மக்கள் பூரணகும்பத்தோடு காத்து நிக்கறாங்க. அப்போ ஒரு தம்பதிகளைப் பார்த்தவர்,வீட்டுள்ளே  பாத்திரம் தேய்க்கும் சிறுமியை அழைச்சு வரச்சொல்லி  இவள் ஆண்டவன் (போட்ட) பிச்சை என்றாராம்!

அதன்பிறகு  அந்தச் சிறுமி ஏராளமான பாட்டுகளை இயற்றி இருக்கார்.  முதலில் இவரைப் பற்றி எனக்கு அவ்வளவாத் தெரியாது. அப்புறமாத் தெரிஞ்சுக்கிட்டேன்.  நமக்கெல்லாம் ரொம்பவே தெரிஞ்ச 'உள்ளம் உருகுதையா  முருகா' என்ற பாட்டை எழுதியவர்.  அதைப் பாடிப் புகழ்பெறச் செய்தவர் நம்ம டி எம் எஸ்தான்.  1889 முதல் 1990 வரை  வாழ்ந்த இவர் ரிஷிகேஷில்   உலகவாழ்வை நீத்தார். இவர் முருகனின் பக்தை. இன்றைக்கு  அவர் எழுதிய முருகன் பாட்டுக்குத்தான் அபிநயம் பிடிச்சாங்க அபிதா.

பாட்டின் ஆரம்ப வரிகள் நினைவிலில்லை. மயில் மீதமர்ந்த அழகன் முருகனைக் கண்ணெதிரில்  கொண்டுவந்த  அபிநயத்தில் மெய்மறந்துட்டேன்னு சொல்லிக்கவா?

இன்றைக்கு (இந்தப்பதிவு எழுதிய நாள்) கல்ச்சர் கலோர் விழாவுக்குப் போயிருந்தேன்.அங்கு அனுவைப் பார்த்துப்பேசியபோது பாட்டுவிவரம் கேட்டுத்தெரிஞ்சுக்கிட்டேன்.  கொஞ்ச நேரத்தில் பாதிப்பாட்டு மனதில் நிக்கலை. அவுங்க பரதநாட்டியப்பள்ளியின்  நிகழ்ச்சி இருந்தது. மூன்று மாணவிகளுடன் சேர்ந்து ஒரு தில்லானா  ஆடுனாங்க. 

நிகழ்ச்சி முடிஞ்சதும் மறுபடி அனுவைச் சந்திச்சு பாட்டின் முதலடியைக் கேட்டு மனசுக்குள் வச்சுக்கிட்டேன். பாருங்க...ஒரு பதிவுக்கு என்ன கஷ்டமெல்லாம் படறேன்:-))))

"நீ மனமிரங்கி வந்தருள்வாய் முருகா நீலமயில் மீது........"

இடைவேளைன்னு  ஒரு  அரைமணி நேரம்.  ட்ரெஸ் மாத்திக்க அவகாசம் கொடுக்கவேணாமா?

ச்சும்மா நின்னு பேசாதீங்க. இதைச் சாப்பிட்டுக் கொண்டே பேசுங்கன்னு  ஒரு ஏற்பாடு செஞ்ச அபிதாவின் பெற்றோரைப் பாராட்டத்தான் வேணும்.  லட்டு, மசால்வடை,சமோஸாவுடன் ஆரஞ்சு ஜூஸ்!




அடுத்த பகுதியாக நடன நிகழ்ச்சியில்  நம்ம ஊத்துக்காடு வெங்கட சுப்பையரின் 'மரகத மணிமயசேலா'. இவரைப்பற்றித் தெரியாதவர்கள்  மிகவும் குறைவான எண்ணிக்கையில்தான் இருப்பாங்க. 'அலைபாயுதே கண்ணா' கேட்காதவர்கள் உண்டோ?  இதை எழுதியவர் இவரே. தமிழிலும், சமஸ்க்ருதத்திலும் மொழிப்புலமை உள்ளதால்  இந்த ரெண்டு மொழிகளிலுமே பாட்டுகள் எழுதி இருக்கார்.


'மரகதமணிமய சேலா, கோபாலா மதனா கோடி சௌந்தர்ய விஜிதா பரமானந்தா  கோவிந்தா முகுந்தா'  ன்னு பாட்டு போகும்.  ரொம்பவே அழகான பாட்டு.  இதை நம்ம யேசுதாஸ் பாடுனது யூ ட்யூபில் இருக்கு. கேட்டுப்பாருங்க.

நான் சொல்லலை....கிருஷ்ணனும் ராமனும் நாட்டியத்துக்கு ரொம்பப்பொருத்தமுன்னு! அதே போல் அடுத்த  பாட்டு ஒரு பஜனைப்பாடல். துளஸிதாஸின்

 "ஸ்ரீ ராம சந்த்ர க்ருபாளு பஜமன  ஹரண பவபய தாருணம்
நவ கஞ்ச லோசன கஞ்ச முக கர கஞ்ச பத கஞ்சாருணம்"

எத்தனை முறை கேட்டாலும் அலுக்கவே அலுக்காத ஒரு பஜனைப்பாடல். இதை நம்ம லதா குரலில் கேக்கணும்!  ஹைய்யோ!!!!


தேன் குடிச்ச நரியாட்டம் இருந்தேன்னு சொன்னால் அது பொய் இல்லை. (ஆமாம்....நரி தேன் குடிக்குமோ? ) கரடின்னு வச்சுக்கலாம்.  தேன் குடிச்ச கரடி:-)

ஸ்ரீராமனின் கம்பீரமும் வில் பிடிச்சுருக்கும் அழகும்  அப்பப்பா!!!!
நிகழ்ச்சியின் கடைசிப்பகுதிக்கு வந்துருந்தோம். தில்லானா.  பாட்டாக இல்லாமல்   இசைக்கருவிகளால் மட்டுமே  'நெய்த' இசை.


அரங்கேற்றத்தில் ஆடிய தில்லானாவை  இங்கே  யூ ட்யூபில் வலையேத்தி இருக்கேன்.


அடுத்து மங்களம் ஆடி முடிச்சுட்டாங்க.

உடை மாத்திக்கும் காரணம் இடைக்கிடை சில  சொற்பொழிவு, வயலின் & செல்லோ  ம்யூஸிக் என்று  சில.

மாலை ஆறுமணிக்கு ஆரம்பிச்ச நிகழ்ச்சியை கச்சிதமா எட்டரைக்கு முடிச்சுட்டாங்க. கலை ஆர்வத்துக்கு மதம் ஒரு தடையே இல்லைன்னு நிரூபிச்சுட்டாங்க  கிறிஸ்துவரான  அபிதா!

மனநிறைவோடு  அபிதாவை வாழ்த்திட்டு, நாங்களும் வீடு வந்தோம்.

மகளிர்தின சிறப்புப் பதிவாக வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

வணக்கம்.







29 comments:

said...

இங்கேயும் ஒரு ஆட்டக்காரி உருவாகிக் கொண்டிருக்கிறாள். ஆனால் இங்கே தனிப்பட்ட முறையில் ஆர்வத்தை வளர்க்க வாய்ப்புகள் குறைவு.

said...

வாங்க ஜோதிஜி.

என்ன இப்படிச் சொல்லிட்டீங்க? எந்தவகை நடனம்? பரதம் என்றால் கட்டாயம் யாராவது வகுப்பு நடத்துவார்கள்தான்.
தயவு செஞ்சு நல்லா விசாரிச்சுப் பாருங்களேன் ப்ளீஸ்.

ஆர்வம் இருக்குன்னா இதெல்லாம் ஒரு கொடுப்பினை. விட்டுடாதீங்க.

said...

வாவ் ! ரொம்ப ரசித்து எழுதியிருக்கீங்க அக்கா ..என் பொண்ணுக்கு சொல்லி கொடுக்க ஆசை ..அரைமண்டி போட சொன்னதுக்கே ஓடிட்டா ..

said...

பிரமாதம். எவ்வளவு நளினமான நடனம். தாயகத்தினின்று பலமைல்தூரங்கள் கடந்துவந்தும் பாரம்பரியம் போற்றும் அழகுக்கலையைப் பேணும் பெருமக்களுக்கு இனிய பாராட்டுகள்.

said...

நடன மணியின் ஆர்வமும் அதன் பெற்றோர்களின் ஆர்வமும் பாராட்டத்தகுந்தவைகள். விரிவான விமர்சனம் கொடுத்தமைக்குத் தங்களுக்கும் பாராட்டுகள்.

(மொதல்லயே சொல்லீருந்தா நானும் வந்திருப்பேன்ல?)

said...

ஒருவர் இயற்கையிலேயே எவ்வித பயிற்சியும் இன்றி ஓவியத்தில் மிகுந்த திறமைசாலியாக இருக்கின்றார். ஆனால் வாரத்தில் இரண்டு நாட்கள் ஒரு மணி நேரம் பயிற்சிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கட்டணமாம். அவர்கள் காசாக்கும் விதங்களில் தான் ஆர்வம் செலுத்துகின்றார்களே தவிர ஒருவரின் தனிப்பட்ட திறமையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த தயராக இல்லை. அடுத்தவர் நடனத்தில் ஆர்வமாக இருக்கின்றார். ஆனால் மூத்தவர் போல தேடிச் சென்று கற்கும் ஆர்வம் இல்லை. பள்ளிகளில் நடக்கும் அனைத்து விதமான நடனங்களில் பங்கெடுத்துக் கொள்வதில் அவர் ஆர்வம் முடிந்து போய்விடுகின்றது. பள்ளியில் பாடங்களைத் தவிர வேறு எந்த விசயங்களிலும் குழந்தைகளை ஆர்வம் செலுத்தவிடுவதில்லை. என்ன செய்யட்டும். பள்ளிக்கூட நிர்வாகம் நிறைய செய்ய முடியும். அவர்கள் அடுத்தடுத்து கட்டடம் கட்டுவதில் தான் முழுமையான ஆர்வம் போகின்றது. இங்கே எல்லா இடங்களிலும் எல்லோரிடமும் பணத்தை நோக்கிய ஓட்டமும் ஆர்வமும் தான் இருக்கின்றது. என்ன செய்ய?

said...


ரெண்டாவதா ஜதிஸ்வரம். கால்களைக் கவனிச்சுக்கிட்டு இருந்தேன். பாதவேலைகள் அருமை./உங்களுக்கு பரதம் தெரியுமா? மகளிர் தின வாழ்த்துக்கள்.

said...

அழகான ரசனை அம்மா... சந்தோச பூரிப்பு வரிகளில் தெரிகிறது...

said...

நீங்களும் ரசித்து, நாங்களும் ரசிக்கும் விதமாக மிக அழகாக எழுதியிருக்கீங்க துளசி மேடம்.
படங்கள் அனைத்தும் அருமை.

என் பெரிய பெண் பரதம் ஆடுவாள் ஆனால் அரங்கேற்றம் வரைக்கும் போகவில்லை.

said...

நிகழ்வுகளை இத்தனை விரிவாகச் சொல்லும் உங்கள் திறமைக்கு மனமார்ந்த பாராட்டுகள்......

நடன மங்கைக்கு எங்களது வாழ்த்துகளும்.....

மகளிர் தின நல்வாழ்த்துகள் டீச்சர்.

said...

நேரில் சென்றிருந்தால்கூட இந்த அளவு ரசித்திருக்கமுடியுமோ என்று எண்ணுமளவு கோர்வையாக நிகழ்வினை எடுத்துரைத்து, உரிய படங்களை இணைத்துத் தந்துள்ளமைக்கு நன்றி.

said...

ஆஹா.. ஆஹா!!

said...

thulasi ammaa ungal padhivugalukkum padangalukkum naan rasigai
nandri ammaa

said...

ரசிக்கத்தெரிந்தவர் முன் ஆடிய அந்தப் பெண் கொடுத்துவைத்தவர்தான்.
நீங்கள் ரசிக்கும் அழகே தனி. ஆண்டவன் பிச்சை அறிந்தவர்கள்
நம் லஸ் சர்ச் ரோடில் அதிகம். ஒரு வீட்டுக்கு வந்து கூட இருக்கிறார் என்று கேள்வி.
முருகனே பிரத்தியக்ஷம் அவருக்கு.
பக்திமயமான நாட்டியம். அட்டகாசமான பதிவுக்கும் மகளிர்தின வாழ்த்துகளுக்கும் நன்றி மா.

said...

காணொளி மூலம் நிகழ்வையும் காணத் தந்து விட்டீர்கள். அபிதா அவர்களுக்கு நல்வாழ்த்துகள்.

தங்களுக்கும் மகளுக்கும் மகளிர் தின வாழ்த்துகள் :)!

said...

வாங்க ஏஞ்சலீன்.

இங்கேயும் அதே கதைதான். அரைமண்டின்னா.... அரைக்கால் மண்டி கூட போடாதுங்க பசங்க:-)

மகள் இடுப்பு வணங்கட்டுமேன்னு இங்குள்ள எல்லாப் பிள்ளைகளையும் போலவே ஒரு காலத்தில் Ballet கத்துக்கக் கொண்டு போனேன். நாலு க்ரேடு பாஸ் செஞ்சாள். அப்புறம் அந்த ஸ்கூல் கைமாறுச்சு. அதுக்குப்பிறகு புது மிஸ் வந்துட்டாங்க. இவளுக்கும் வேணாமுன்னு தோணுச்சு நிறுத்திட்டேன்.

said...

வாங்க கீத மஞ்சரி.

உங்கள் பாராட்டுகளை நடன டீச்சரே பார்ப்பாங்க.

அவர்கள் சார்பிலும் அபிதாவின் சார்பிலும் நன்றி.

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

அடடா... உங்கஆர்வம் தெரியாமப் போச்சே:(

அடுத்த அரங்கேற்றத்துக்கு நீங்க கண்டிப்பா வர்றீங்க!

said...

ஆமாங்க ஜோதிஜி.

இப்ப எல்லா ஓட்டங்களும் காசைத் தேடித்தான்:(
அதான் பிள்ளைகளை இயல்பாக வளர விடமாட்டேங்கறோம்..ப்ச்....

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

வெவ்வேற ஊர்களில் போய் தட்டிக் கும்பிடப் படிச்சவள் நான். அம்மாவின் வேலை மாற்றல் காரணம் வருசம் ஒரு ஊர். அங்கே போய் டான்ஸ் டீச்சரைத்தேடி கற்றுக்க ஆரம்பிச்சுருப்பேன். ஆறே மாசத்தில் வேற ஊர்:(

எதோ கொஞ்சம் தெரியும் என்ற அளவில்தான்.

மகளிர் தின வாழ்த்துகளுக்கு நன்றி.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

யானைக்கு ஆசையையும் ஆர்வத்தையும் அடக்கமுடியலைன்னா இப்படித்தான்:-))

said...

வாங்க ரமா ரவி.
அரங்கேற்றம் என்பதே ஒரு கல்யாணம் மாதிரி ஆகிப்போச்சேப்பா.

மகளுக்கு என் வாழ்த்து(க்)கள்.

என் சிங்கைத்தோழியின் மகள் அரங்கேற்றம் இங்கே! நேரம் இருந்தால் பாருங்க.

http://thulasidhalam.blogspot.co.nz/2009/12/blog-post_26.html

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

வாழ்த்துகளுக்கு நன்றி.

யானை, மற்றவர்கள் ஆடும்போது கவனமாப் பார்த்து என்னென்ன தவிர்க்கணும் என்றெல்லாம் ஆலோசனை சொல்லும் என்பதால் அதுக்கு இங்கே தனி மரியாதை உண்டு:)

said...

வாங்க ஜம்புலிங்கம் ஐயா.

பொறுமையுடன் வாசித்த உங்களுக்கல்லவா நான் நன்றி சொல்ல வேணும்!

நன்றிகள்.

said...

வாங்க சாந்தி.

சாரல் மழையில் நனைஞ்சேன்:-)

said...

வாங்க என் ரசிகையே!

கிருபாவின் கிருபையே!

நல்வரவு!

said...

வாங்க வல்லி.

நான் சென்னையை மிஸ் செய்வது பாட்டுக்கும் நடனத்துக்கும்தான்ப்பா. உங்களுக்குத் தெரியாதா என்ன?

ஆண்டவன் பிச்சை பெயரை இப்பதான் முதல்முதலாக் கேட்டேன். ஆனால் அவர் பாட்டு 'உள்ளம் உருகுதையா முருகா' ரொம்பநாளாத் தெரியும். கவிஞர்/எழுத்தாளரை கண்டுக்கலையேன்னு இப்ப....ப்ச்.

said...

வாங்க ராமலக்ஷ்மி.

வருகைக்கும் கருத்துக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி.

said...

அபிதாவின் நடனமும், உங்களின் வர்ணனையும், படங்களும் அருமையாக இருந்தது டீச்சர்.

அபிதாவிற்கு வாழ்த்துகள்.