Friday, March 27, 2015

வயசு பத்தாச்சு இந்த வீட்டுக்கு ! (ஹோம் இம்ப்ரூவ்மெண்ட் : பகுதி 3 )

ஆச்சு இப்போ மார்ச் மாசம் 27 தேதி. எங்க கோடை காலம் முடிஞ்சும்  இப்போ  27 நாளாகிப்போச்சு. அடுத்த கோடை வரும்வரை  ஹோம் இம்ப்ரூவ்மெண்ட் என்ற பேச்சுக்கே இடமில்லை.

ஒவ்வொரு கோடை காலத்துக்கும் (டிசம்பர்  1 முதல் ஃபிப்ரவரி கடைசி வரை)  அந்த வருசத்துக் கடமைகளில் என்னென்ன  செய்ஞ்சுக்கணுமுன்னு ஒரு பட்டியல் போட்டு வச்சுக்கறது  ஒரு  வழக்கம். பெரும்பாலும் பெயிண்ட் வேலைகள் தான். பெயிண்ட் கடைக்காரர்களும் சம்மர்  ஸ்பெஷலுன்னு  இதைத்தான் டிவியிலும் பத்திரிகையிலும்,  ரேடியோவிலுமா கூவிக்கூவி விப்பாங்க.  தாய் தகப்பன்  வண்ணம் பூசும் வேலையில் பிஸின்னா.... பசங்களுக்குப் போரடிக்காம இருக்க பரமபதம்  விளையாடலாமாம். கடையின் உபயம்:-)


அதென்ன வருசா வருசம் பெயிண்டிங்கன்னா.... அப்படித்தான். மொத்த வீட்டுக்கும் ஒரே சமயம் பெயிண்ட் அடிச்சுக்க முடியாது.  வேலைக்கு ஆளா இருக்கு?  எல்லா வேலையும், ஹார்பிக் பயன் படுத்துமிடம்  உட்பட நாம்தானே செய்யணும்!  ஒவ்வொரு சம்மருக்கும்  ஒவ்வொரு பகுதியா  வேலையை முடிக்கணும். மொத்தம் முடியறதுக்குள்ளே  முதலில் ஆரம்பிச்ச இடத்துக்கு  பெயிண்ட் அடிக்கும் நாள் வந்திருக்கும்.

எங்க நண்பர் ஒருவர் ( போலீஸில் பெரிய வேலையில் இருக்கார்)  வீட்டில்  பெயிண்ட் அடிக்கப் போட்டு வச்ச சாரம் (scaffolding) வீட்டைச் சுற்றியே வெவ்வேற பகுதிகளில் எப்போதுமே நிரந்தரமா இருக்குது. அவுங்கவீடு  ரொம்பபெரிய மாளிகை என்றாலுமே வெளியே மரச்சட்டங்களால் ஆனது.  wooden  cladding வுட்டன் க்ளாடிங்.  நல்லவேளையா  வெள்ளை நிறக் கட்டிடம் என்பதால்  பார்த்தவுடன் அவ்வளவா  பழைய புதிய பெயிண்டிங் வித்தியாசம் தெரியாது. அவருக்கு ஓய்வு கிடைக்கணும். அப்போ கொஞ்சமாவது வெயிலும் இருக்கணும்.பெயிண்ட் அடிக்கக் கிளம்பிருவார்.

எங்க பழைய வீட்டை வாங்குனதும்,  கோடை  வந்தவுடன் முதலில்  செய்ய ஆரம்பிச்சது  வீட்டுக்குள் ஸிட்டிங் & லிவிங் ரூம் நிறத்தை மாற்றும் வேலைதான்.  பழைய ஓனரின் மனைவிக்கு என்ன ஆச்சோ.... அவுங்க  கடும் பச்சை நிறம் (ஆலிவ் கலர்) அடிச்சு வச்சுருந்தாங்க. அதை  ஹானஸ்ட் என்ற ஒரு வகை  இள ரோஜா வண்ணத்துக்கு மாத்தினோம். வாழ்க்கையில் முதல்முறையா பெயிண்ட் ப்ரஷைக் கையில் எடுத்தோம்.

பச்சையை மாத்த மூணு கோட்டிங் அடிக்க வேண்டியதாப் போச்சு. நமக்கோ ஒருஅனுபவமும் இல்லை பாருங்க.... அதனால் சரியா வரலைன்னதும், ரோலர் பிரஷ் மேலே பழியைப் போட்டுருவார் கோபால். அந்த வீட்டுக்குப் பக்கத்தில்  ஒரு ஹார்ட் வேர் கடை இருந்துச்சு. நான் ஓடிப்போய்  வேறொரு செட் பிரஷ்களை வாங்கியாருவேன்.  இப்படியே  வாங்கி வாங்கி பெயிண்டுக்கு செலவான காசைவிட பிரஷ்களுக்கும் ரோலர்களுக்கும் தான் அதிக செலவு:-)

(நான் கொஞ்சம் பெயிண்டிங்  செஞ்ச காலம் உண்டு. அது கலை!  ஆரம்பகால பூனா வாழ்க்கையில்  வாழ்த்து அட்டைகளைச் செய்யக் கத்துக்கிட்டேன். அங்கே ஒரு இடத்தில் கிடைக்கும் ஹேண்ட்மேட் பேப்பரில் படங்கள் வரைஞ்சு  உள்ளே வெள்ளைக் காகிதம் வச்சு வாழ்த்து அட்டைகள் தயாரிச்சு,  டிஃபென்ஸ் டாட்டூ நடக்கும்போது  ஸ்டால் போட்டு விற்கும் மகளிர் அணிக்கு நன்கொடையாக க் கொடுத்துருவோம்.  ஆர்மி, நேவி, ஆஃபீஸர்ஸ் மனைவிகளின் மகளிர் அணி இது:-)

நான் எப்படி அந்தக் கூட்டத்துலே போனேன்?  அப்ப நாங்கள் பூனா போன புதுசு.  வீடு கிடைப்பது  மகா கஷ்டம் அங்கே.  எங்கள் நண்பரின் உறவினரான  நேவி கமாண்டரின்  பிரமாண்ட மாளிகையில்  ஒரு மூணு மாசம் தங்கி இருந்தோம். கமாண்டரின் மனைவியும் நல்லா நட்பாக பழகுவாங்க.  பகல் முழுசும் நாங்க ச்சும்மா இருந்த காலங்கள்.  வீட்டுவேலைகளுக்குத்தான் ஏகப்பட்ட பணியாட்கள் இருந்தாங்களே!  லேடீஸ் க்ளப்,  சாரிட்டி ஒர்க் இப்படி எதாவது செய்வதுதான் முழுநேரப்பொழுது போக்கு! ஹை சொசைட்டி லேடீஸ் பாருங்க!

ஆனா ஒன்னு சொல்லணும், அந்த மூணு மாசங்களில்  மெழுகுவத்தி தயாரித்தல், பதீக் டிசைன் போட்டு  வண்ணம் சேர்ப்பது, பெயிண்டிங்,  வாயால் உபச்சார மொழிகள் பேசுதல்,  ரொம்ப  தாழ்மையாக இருப்பது போல் காட்டிக்கிட்டு ,'ஏய் உன்னைவிட நான் உசத்தியாக்கும்' என்று சொல்லாமல் சொல்லிக்கும் மேட்டுக்குடிப் பேச்சு, அதுக்கான பார்வை, உடல்மொழின்னு  நிறையத்தான் கத்துக்கிட்டேன்:-) நல்ல வேளையா வேற இடம் கிடைச்சு சாதாரண நிலைக்கு நான் திரும்பிட்டேன். இல்லைன்னா நம்ம கோபாலுக்கு ரொம்பவே கஷ்ட ஜீவனமா ஆகி இருக்கும்:-))))

வரைய ஆரம்பிச்ச புதுசில் வரைஞ்சவைகள்  எங்கியோ பரணில் போட்ட பெட்டிகளில் இருக்கணும். ஒருநாள் தேடிப்பார்க்கணும். ரெண்டு படங்கள் மட்டும் ஆப்ட்டது. இங்கே போட்டுருக்கேன். ஆரம்ப நிலை என்பதால் கொஞ்சம் க்ரேஸ் மார்க் போட்டுவிட்ருங்க:-)


எங்கியோ போயிட்டேன்....சரி. இப்போ வீட்டுக்குப் பெயிண்ட் அடிப்பதைப் பார்க்கலாம். புது வீடுன்னா முதல் அஞ்சு வருசத்துக்குப்பின்  பெயிண்ட் அடிக்கத்தான் வேணும். அப்படி பார்த்துப் பார்த்து வீட்டை மெயின்டெய்ன் செய்வதால்தான்  அம்பது அறுவது வருஷப்பழைய வீடுகள் கூட  எதோ சமீபத்துலே கட்டுனதைப்போல் இருக்கு, இங்கெல்லாம்.

நம்ம சென்னை வாழ்க்கையில்  பெஸண்ட் நகர் வீட்டுக்கு முதல் முதலில் வீடு பார்க்கப்போனபோது  கட்டிடத்தின் பக்கவாட்டு சுவரின் வெளிப்புறம் ஒரே பச்சை நிறத்தில் பாசி பிடிச்சு அழுக்காக் கிடந்துச்சு.  என்னன்னு விசாரிச்சதில்  ஓவர்ஹெட் டேங் தண்ணீர் ரொம்பி வழிஞ்ச  அடையாளமுன்னு சொன்னாங்க.  வீட்டு முன்புறமும் கூட ரொம்ப சுமார்தான். கடைசியில் பார்த்தால் அந்த வீடு கட்டியே ரெண்டரை வருசம்தான் ஆச்சாம்!   கடற்கரை, உப்புக் காத்து இப்படி பல காரணங்களும் சொல்லிக்கிட்டு இருந்தாங்க.

நம்ம வீட்டுக்கும்  அஞ்சு வருசம் ஆனதும் பெயிண்ட் அடிக்கணும்.  அரசாங்கமே உள்ளேயும் வெளியேயுமா மொத்த வீட்டுக்கும் பெயிண்ட் இலவசமா அடிச்சுக் கொடுத்துருச்சு. எப்படி? அதான் நிலநடுக்கத்தில் டேமேஜ் ஆனவைகளை எர்த் க்வேக்கமிஷன் ரிப்பேர் செஞ்சு கொடுக்குதே. நம்ம வீட்டுக்கு பெருசா ஒன்னும் ஆகலை .கட்டுமானவேலைகளில் பழுது ஒன்னும் ஆகலை. வெளிப்பூச்சுகளிலும், உள்ளே  ஜிப் பூச்சு வேலைகளிலும்  கொஞ்சம்  காஸ்மெடிக் டேமேஜ்தான்.  அதைப் பழுதுபார்த்து  மொத்த வீட்டுக்கும்  பெயிண்டிங் வேலை முடிச்சுக் கொடுத்ததால் நமக்கு வேலை மிச்சம்.

ஆனாலும் வீட்டைச் சரி செஞ்சாங்களே தவிர  முன்வாசல் ஸ்டாம்ப்டு காங்க்ரீட்டையும் சுத்தப்படுத்திக் கொடுத்துருக்கலாமுல்லெ:-)

ஆகக்கூடி, இந்த சுத்தப்படுத்தும்வேலை,  ஃபென்ஸுக்குப் பெயிண்ட் அடிக்கும் வேலை, முன்வாசல் கதவுக்கு எண்ணெய் பூசும் வேலையெல்லாம் நம்ம மெத்தனத்தாலே  சும்மாவே கிடந்தது. இனியும் தள்ளிப்போடக்கூடாதுன்னு இந்த சம்மர் ப்ராஜெக்ட்டாக் குறிச்சு வச்சுக்கிட்டோம்.

நம்ம வீட்டுத் தொழிலாளியும், சித்தாளுமா வேலையை  ஆரம்பிச்சு ஒவ்வொன்னா முடிச்சோம்.


 வாட்டர் ப்ளாஸ்டர் ஒன்னு வாங்கினதும் காங்க்ரீட் வேலை முடிஞ்சது. இங்கே தண்ணீர் கஷ்டம் இல்லை. தண்ணீருக்கும் மீட்டர் கிடையாது.  தண்ணீர் இருப்பு குறைஞ்சால் சிட்டிக் கவுன்ஸில் சிக்கனமா இருக்கச் சொல்லும். வீட்டு கதவிலக்கம் அனுசரிச்சு , வாரம் எந்தெந்த நாள்  செடிக்குத் தண்ணீர் விடலாம் என்று சொல்வாங்க. நாங்களும் சொன்னபேச்சைக் கேட்போம்.

Before 

After
அழுக்கு போனதும்  தரை பளிச்:-)

ஸ்ப்ரே கன் ஒன்னு வாங்கினதால் ஃபென்ஸ்க்கு பெயிண்ட் அடிப்பது  கஷ்டமில்லை. ஆனா  கைவிரல்கள்தான் மரத்துப்போச்சுன்னார்.  ஓடிப்போய்  மேங்கோ மில்க் ஷேக்  செஞ்சு கொடுத்தேன். கருவேப்பிலை மரத்தை(!) பெரிய தொட்டிக்கு மாத்தணுமுன்னு  வாங்கி வந்த நீலத்தொட்டிக்கு  பச்சை வண்ணம் அடிச்சு பசுமைப் புரட்சி(யும்) செஞ்சுட்டோம்லெ!


 Before
After


கட்டக்கடைசியா ஒரு வேலை பாக்கி இருந்தது. வாசக்கதவுக்கு  எண்ணெய் பூசுவது.  மரக்கதவு.  தேவதாரு மரம். இதுக்குன்னு கிடைக்கும் எண்ணெயைக் கதவு முழுசுக்கும் பெயிண்ட் ப்ரஷால் பூசணும். அதுக்கு முன் நல்லா அழுக்கைத் துடைச்சுட்டு, ஸ்டீல் வுல்  வச்சு லேசா தேய்ச்சு பழைய பிசுக்கை எடுக்கணும்.    பிசுக்குன்னு  பிசுக்கா இருக்காது. ஷுகர் ஸோப் போட்டும் கழுவலாம். மரத்தில் ஊறிப்போன எண்ணெய்ச் சுவடுகள்.

எண்ணெய்க்கு  ஆர்டர் கொடுத்துட்டு வந்த மூணாம்நாள் தயாரா இருக்குன்னு கூப்பிட்டுச் சொன்னாங்க. இவுங்க கடையில் 'கஷ்டமர்  மெம்பர்ஷிப்' எடுத்துக்கிட்டா  நல்ல டிஸ்கவுண்ட் கிடைக்குமாம்.  சரின்னு எழுதிக்கொடுத்தோம். கார்டு வரும்வரை ஒரு தாற்காலிக  அட்டை கொடுத்தாங்க.  அதுலே  இப்போ வாங்கும் எண்ணெய்க்கும் 20% கழிவு  தரேன்னு சொன்னது சூப்பர்!  ஒரு மாசம் கழிச்சு  கார்டு வந்துருச்சு என் பெயரில்:-)
தெரு வாசல் கதவுகள் ரெண்டு இருக்கு.  வேலை முடிஞ்சதும் மாவிலை தோரணம் ஒன்னு கட்டி விட்டோம்.  இந்த வீடு கட்டி, குடிவந்து  பத்து வருசம் ஆகுது.  கிரகப்பிரவேசமுன்னு ஒன்னும் அப்போ செஞ்சுக்கலை. வெறும் பால் காய்ச்சுனதோடு சரி. அதனால் இன்றைக்கு விசேஷமா எதாவது செய்யணுமுன்னு  நினைச்சதுலே.....  பெருமாளுக்கு நன்றி சொல்லிட்டு, ஒலகக்கோப்பை ஓப்பனிங் ஸெரிமனிக்குப் போய் கொண்டாடிட்டு வந்தாச்சு:-)

இனி அடுத்த கோடையில் என்ன வேலைன்னு  கோடை ஆரம்பிச்சதும் பார்க்கலாம். அதுவரை  கோபாலுக்குக் கொஞ்சம் ஒய்வு கொடுக்க முடிவு.
ஆனா ஒன்னு , அததுக்கான  கருவிகளை வாங்கிக் கொடுத்துட்டதால்    அவ்வளவாக்  கஷ்டப்படாம வேலைகளை சுலபமாச் செஞ்சு முடிச்சுட்டார் கோபால்:-)))

வேலைக் களைப்புத் தெரியாமல் இருக்க அப்பப்ப, ரோஸ்மில்க், ஃபலூடா, மேங்கோ, ராஸ்பெர்ரி  மில்க்‌ஷேக் வகைகள் செஞ்சு உபசரிப்பது இந்தச் சித்தாளின் வேலையாக்கும், கேட்டோ!

 கைவசம் தொழில் இருக்கு. பிழைச்சுக்கலாம்!PIN குறிப்பு: தொழிலாளியின் பலவகைத்தொழில்களின் படம் பதிவில் அங்கங்கே!  

தோட்டத்தொழிலாளி படங்கள் பின்னொரு நாளில் வரும்17 comments:

said...

ரெண்டு படங்களும் அழகு...

கைவிரல்கள் மரத்துப் போச்சின்னா, மேங்கோ மில்க் ஷேக்...! அட...!

இந்த மாதிரி உபசரித்தால் எத்தனை வேலைகளும் செய்யலாம்...!

said...

வீடு சூப்பரா இருக்கு.

said...


கோபால்தான் பாவமாகத் தெரிகிறார். சித்தாளா மேஸ்திரியா ? சந்தேகம் வருது.

said...

Thank you teacher for the lovely post. I'm living in Pune for last 10+ years.

said...

வெளிநாடுகள்ள.. குறிப்பா ஐரோப்பிய அமெரிக்க நாடுகள்ள எனக்குப் பிடிச்ச விஷயமே தன்னோட வீட்டு வேலைகளைத் தானே செஞ்சுக்கிறது.

வீட்டு வேலைகள் மட்டுமில்ல. தன்னுடைய பொருட்களையும் தாங்களே பாத்துக்கிறதுக்கு. துணியை அயர்ன் பண்றதுக்கு ஆளெல்லாம் இருக்காது. தானே செஞ்சுக்கனும். தானே டாய்லெட் கழுவிக்கனும். இப்படி நிறைய இருக்கு. இதுனால வீட்டோட மூலை முடுக்கெல்லாம் அத்துப்படியாகுறது இருக்க.. நம்ம வீடு நம்ம செஞ்சதுன்னு நமக்கே ஒரு மனத் திருப்தி இருக்கும்.

இந்தப் பதிவைப் படிக்கிறப்போ இந்த வேலைகளை எவ்வளவு ரசிச்சுச் செஞ்ச நிறைவு உங்களுக்கும் கோபால் சாருக்கும் இருந்திருக்கும்னு புரியுது. வாழ்க வாழ்க. எம்பெருமான் துணை காக்க. _/|\_

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

உபசாரத்தில் குறைவே வைக்கறதில்லையாக்கும்!

அந்த ரெண்டு படங்கள்..... நன்றீஸ்.

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

மிக்க நன்றி.

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

அவர் தொழிலாளி. நாந்தான் சித்தாள். ஆனால் அப்பப்பக் கொஞ்சம் மிரட்டி வேலை வாங்கும் மேஸ்திரியாகவும் ஆக்ட் கொடுப்பேன்:-)

said...

வாங்க விஸ்வநாத்.

இப்போ பூனா ரொம்பவே மாறிப்போச்சு. ராஸ்தாபெட் வாடாக்கள் எல்லாம் போச்!

நாங்க 77 முதல் 82 வரை அங்கே இருந்தோம். கோர்ப்புடி. கூர்க்கா ரெஜிமெண்ட்ஸ்க்கு முன்னால்!

said...

வாங்க ஜிரா.

வேலைக்கு ஆள்வச்சுக் கட்டுப்படி ஆகாதில்லையா? மணிக்கணக்குலே சம்பளம் . குறைஞ்சபட்சம் மணிக்கு 16 டாலர் அரசு நிர்ணயம் செஞ்சுருக்கு.

நாமே செய்வதால் நின்னு நிதானமா மூலை முடுக்கெல்லாம் பார்த்துப் பார்த்து சுத்தம் செஞ்சுக்கலாம். முக்கால்வாசி வாரவேலைகள்தான்.வீக் எண்ட் இதுக்குத்தானே வருது:-)))

said...


வீடு அழகாக உள்ளது! படங்கள் பேசுகின்றன!

said...

வீடு மிகவும் அழகாக இருக்கு துளசி! உங்களின் இரு ஓவியங்களும் மிக அழகு! தூரிகைகளை தூசி தட்டி பெயிண்டிங் வரைந்து வீட்டில் மாட்டுங்கள்! வீடு இன்னும் அழகாய் மிளிரும்!!

said...

before, after--- படங்கள் மிக அருமை. ஆனால் நிறைய கஷ்டமான வேலைதான் போலிருக்கு..கடைசியில் வீடு படம் மிக அழகு.....

said...

பத்து வருட நிறைவுக்கும் புதுப் பொலிவின் பின்னான உழைப்புக்கும் (உபசரிப்புக்கும்) வாழ்த்துகள்:)!

said...

சித்தாள்னு சொல்லிகிட்டு நீங்க செஞ்சதெல்லாம் வளைச்சு வளைச்சு வேலை நடப்பதை ஃபோட்டொ எடுப்பதும், ஃபோட்டோ எடுத்த களைப்புக்கு மில்க் ஷேக் குடிப்பதும்னு நல்லா புரியுது. :-) ஹி.. ஹி...

said...

உங்கள் ஷேக்குகள் ரொம்ப ஸ்வீட்டுங்கோ!!!! கண்ணைப் பரிக்குது..இங்கூட்டு ஒன்னு பார்சல் செய்தூடே!!!!! வீடும் நன்னாயிட்டுண்டு!! கேட்டோ!!!

சகோதரி விவரணம் அருமை! தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றோம். என்ன கொஞ்சம் தாமசம்.....

said...

teacher intha juice sapitavathu unga veetu varanum pola. very nice