Wednesday, March 18, 2015

திருவமுண்டூர் என்னும் திருவண்வண்டூர் ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 31)

காலையில் அறையில் இருந்து கிளம்பிய அரைமணிக்குள் இங்கே  திருச்சிட்டாறு  வந்தோமா  கும்பிட்டோமான்னு  இருந்துருக்கோம். மணி இப்போ ஏழடிக்கப் பத்து மினிட். இன்னும் ரெண்டு கோவில்கள் இந்தப் பக்கத்துலேயேதான் இருக்கு. அவ்வளவா தூரமில்லை. அவைகளையும் முடிச்சுக்கிட்டே போனால் ஆச்சு.

இப்ப இங்கே கேரளாவில் மழைக்காலம். துலாவர்ஷம். துலா (நம்ம ஐப்பசி) மாசத்தில் இந்த மழை தவறாது வரும். இது மழைகளிலேயே நல்ல குணமுடைய மழையாக்கும் கேட்டோ! 'மாதங்களில் நான் மார்கழி என்றவன் மழைகளில் நான் ஐப்பசி' ன்னும் சொல்லி இருப்பான் போல:-) தினமும் மாலையில் ஆரம்பிச்சு  நள்ளிரவு  கடந்து  நின்னுரும். நாங்க கேரளாவிலிருந்தபோது மத்யானம் மூணரை மணிக்கு ஆரம்பிக்கும். பள்ளிக்கூடம் விட்டு வரும் பிள்ளைகள் எல்லாம்  மழையில் ஆட்டம் போட்டுக்கிட்டு வருவாங்க. இப்போ அதுக்கும்  என்னவோ கோளாறு. க்ளோபல் வார்மிங் காரணமுன்னு சொல்லிக்கலாம். நமக்குத் தொந்திரவு வேணாமேன்னு  ராத்திரி பத்துக்குமேல் ஆரம்பிச்சு பொழுது விடியுமுன் நின்னுருது.

திருசிட்டாறுக்கு நாம் வந்த பாதையையிலேயே திரும்பிப்போய் மெயின்  ரோடிலே (இதுக்குப் பெயரே மெயின் சென்ட்ரல் ரோடுதான்)சேர்ந்ததும்  செங்கண்ணூர் போகும்  வலது பக்கம் திரும்பாமல் இடது பக்கம்திரும்பி  கொஞ்சதூரம் போனால்  பம்பா நதி பாலம் வரும். ஏராளமான முறை கேட்ட  பெயர் என்பதால் பம்பா என்றதும்  பரவசத்தோடு, எங்கே எங்கேன்னு எட்டிப் பார்த்தேன்.

பாலம் கடந்து  கொஞ்ச தூரத்தில் மரம் அறுக்கும்  வேலை செய்யும் ஆட்களிடம்,  திருவண்வண்டூர் கோவில் எந்தப்பக்கம் என்று விசாரித்ததில்,  ஒரு நிமிட் தீர்க்கமா ஆலோசிச்சுட்டு, ' மஹாவிஷ்ணு க்ஷேத்ரமாணோ?  அது திருவமுண்டூரா.  ஈ வழிதன்னே  ரெண்டு கிலோமீட்டர் நேராயிட்டு போணும். ப்ராவடியில் இடத்து வசம் திரிச்சால்  பின்னேயும் ஒரு ரெண்டு கிலோ மீட்டர்.'

ஏது ப்ராவடியான்னு  இழுத்தப்போ... "அவிடத்தன்னே உண்டாகும்.  காணாம் பற்றும்"

இங்கெல்லாம் வழி கேட்டால்  அஞ்சு நிமிஷம் ட்ரைவ், பத்து நிமிஷ ட்ரைவ்ன்னு காலக்கணக்கில் யாரும் சொல்றதில்லை.  எல்லாம் மெட்ரிக் அளவுதான்.  அஞ்ஞூறு மீட்டர். நானூறு மீட்டர்ன்னு க்ருத்யமாகக் கணக்கு சொல்றாங்க. எங்களுக்கு இது ஒரு வேடிக்கையாப் போச்சு. அப்போ முதல், எங்கே வழி கேட்டாலும் மீட்டர் கணக்கு சொல்லும்போது  மனசுக்குள் ஒரு சிரி:-) ஆனா ஒன்னு, யாரும் தெரியலைன்னு சொல்றது இல்லை. அக்கம்பக்கம் ஆட்களிடம் விசாரிச்சாவது 'சரியான'  வழியைச் சொல்லிடறாங்க. மனஸிலாயோ?

சரி.ரெண்டு கிலோமீட்டர் போனதும் பார்க்கலாம். வேற யாரிடமாவது விசாரிச்சால் போச்சு. ஆனால்.... வேடிக்கை பார்த்துக்கிட்டே வந்த என் கண்ணில் சட்னு ஆப்ட்டது  அது.  பெரிய தூணின் மேல் கட்டி இருக்கும் புறாக்களின் மாடம். புறாவின் கூடு .  ஓ....இதுதானா   அந்த ப்ராவடி என்னும் ப்ராவின் கூடு!ஆமாம்.  இதுதான் என்று காமிக்க அங்கே ஒரு புறாவும் உக்கார்ந்திருந்தது.

 எதுக்கும் இருக்கட்டுமுன்னு அங்கே நின்றிருந்தவரிடம், 'திருவமுண்டூர் க்ஷேத்ரம்'  னு ஆரம்பிச்சப்ப ...இடதுபக்கம் கை காமிச்சு  'ஒரு ரெண்டு கிலோ  மீட்டர்' என்றார்.  வளரே நன்னி.

சின்ன  அலங்கார வளைவுக்குள்  போய்க்கோவில் வாசலில் இறங்கினோம். பெரிய மரக் கதவுகளில்  திட்டிவாசல் போல்  இருக்கு . விசேஷநாட்களில் முழுக்கதவுகளையும் திறப்பாங்கபோல! முகப்பு வாசலிலிலேயே  பக்கத்துக்கொருவராய்பெரிய சிறிய திருவடிகள் கைகூப்பிய நிலையில்! உச்சியில்  காளிங்கன் மேலாடும் க்ருஷ்ணன்.  கீழே கஜேந்திர மோக்ஷம். ரெண்டு பக்கங்களிலும்  நாரதரும், மிருதங்கம் வாசிக்கும் நந்தியும். அடுத்து இன்னும் கீழே ஒரு  ஹயக்ரீவர். இரு பக்கங்களிலும் ரெவ்வெண்டு  அவதாரங்கள். மச்சம்,  கூர்மம் ஒரு பக்கமும், நரசிம்மரும், வாமனரும் இன்னொரு பக்கமுமாக. இந்த  முகப்பு வாசலே அட்டகாசமா இருக்கு!

 காளிங்கனின்  உடல் வளைஞ்சு நெளிஞ்சு போய்,  வால் நாரதர் மாடத்துக்கு மேல் எட்டிப் பார்ப்பது ஜோர்:-)

கதவைக்கடந்து அந்தப்பக்கம் போய் முகப்பு வாசலைத் திரும்பிப்பார்த்தால்... ஹைய்யோ!   பரசுராமர், ராமர், பலராமர், க்ருஷ்ணன், வராக அவதாரங்களும்,  கீதோபதேசம், ப்ரம்மா, ஐய்யப்பன் என்று அழகோ அழகு! சின்னதா ரெண்டு திண்ணைகள்  கதவுக்கு ரெண்டு புறமும்.  சூப்பர்!!!


மிகப்பெரிய வளாகம்!  கண்  முன் கொஞ்ச தூரத்தில் இருக்கும் ஒரு  மண்டபத்தில் நிலவிளக்கொன்னு கத்திச்சு வச்சு , அடடா....   ஒரு ஃப்ளோலெ மலையாளம் வந்துருச்சு.... க்ஷமிக்கணும் கேட்டோ!

குத்து விளக்கு ஒன்றை ஏத்தி வச்சு  ஒரு ஒன்பது பெண்மணிகள் சுத்தி இருந்து கைகொட்டிக் களி என்னும் நடனம்(!)  ஆடுறாங்க. பாட்டு? நம்ம எல்லோருக்கும் தெரிஞ்சபாட்டுதான்.ஹரே ராமா ஹரே ராமா, ராமராமா  ஹரே ஹரே.
ஹரே க்ருஷ்ணா  ஹரே க்ருஷ்ணா,க்ருஷ்ண க்ருஷ்ணா ஹரே ஹரே!

நானும் கூடச்சேர்ந்து  நாலுவரி பாடிட்டு நகர்ந்தேன்.
எதோ வழிபாடு போலத் தெரிஞ்சது. வழிபாடு=ப்ரார்த்தனை.பளபளன்னு ஜொலிக்கும் கொடிமரம்.  சுற்றிவர பல  மண்டபங்களும் கட்டிடங்களுமா இருக்கு. இந்த வெளிப்ரகாரம்  கடந்து  உள்ளே போறோம். கூரையிட்ட முன்பகுதிக்குள் பலிபீடம். அதையும் கடந்தால்  ரெண்டு பக்கமும் திண்ணைகள் வச்சுருக்கும் நடை. அதுக்கு அப்புறம் திண்ணை மண்டபம்.  கருவறை  இப்படி. கேரளக்கோவில்கள் எல்லாம்  ஒன்னுபோலவே இருக்கே!

கருவறையில்  பாம்பணையப்பன் நின்ற கோலத்தில் ஸேவை சாதிக்கிறார். பாம்பணைன்னா ஆதிசேஷன் இல்லையோன்னு கொஞ்சம் முழிச்சேன். இல்லையாமே.... பம்பா நதி இந்தக் கோவிலைச் அணைச்சுக்கிட்டுச் சுற்றி ஓடுதாம். அந்தப் பம்பாதான் இங்கே பாம்பா ஆகிப்போச்சு போல! பம்பா நதி அணை அப்பன்!

நம்மாழ்வார் இங்கே வந்தும் பதினொரு பாசுரங்கள் பாடி மங்கள சாஸனம் செஞ்சுருக்கார்.

தாயார் பெயர் கமலவல்லி நாச்சியார்!  பெருமாளுக்கும் கமலநாதன் என்றும் ஒரு பெயர் உண்டு இங்கே!


கருவறையைச் சுற்றி உள்ப்ரகாரத்தில் வலம் வர்றோம். அதே  வட்டக் கருவறை. உச்சியில் செப்புத்தகடால் ஆன கூம்பு விமானம்.

பாண்டவர்களில் நகுலன் கட்டிய கோவில் இது.

இந்த ஊரில் வேறெதுக்கோ பூமியைத் தோண்டும்போது பெருமாளின் சிலைகள்   சில  கிடைச்சதாம். அவைகளைக் கோவிலுக்குள் கொண்டு வந்து  சந்நிதிகள் கட்டி பிரதிஷ்டை செஞ்சுருக்காங்க. வெளிப்ரகாரத்தில் நாம் பார்க்கும் அத்தனை மண்டபங்களும் சந்நிதிகளும் இப்படி  கட்டப்பட்டவைகளாம்.

வெளிப்ரகாரம் சுற்றி வந்தப்ப  கோபாலகிருஷ்ணன் சந்நிதியில் நல்ல கூட்டம். ஹை!  நம்ம கோகி!  தீபாராதனை நடந்துக்கிட்டு இருந்தது. துளசியும் பிரசாதமாகக் கிடைச்சது.

சிவனுக்கும் சாஸ்தாவுக்கும் தனிச்சந்நிதிகள்  இருந்தன.
பஞ்சபாண்டவர்கள் கட்டிய  ஐந்து கோவில்களில்   இங்கேதான்  அடிக்கடி  விழாக்களும் நிகழ்ச்சிகளும் நடக்குதாம். அதனால் கோவில் ரொம்ப நல்ல நிலையில் இருக்கு.

சிரஞ்சீவிகளில் ஒருவரான மார்கண்டேயருக்கு இங்கே தரிசனம் கொடுத்துருக்கார் கமலநாதன். கூடவே தன் மனைவி கமலவல்லியுடன்  என்பது விசேஷம். ஏற்கெனவே சிவனைத் தன் கண்ணாரக் கண்டவராச்சே. இப்ப விஷ்ணுவும்!  இருவரையும்  பார்த்த ஒருவர் ,இவர் மட்டுமே!

கோவிலுக்கு ஒரு புராணக்கதையும் உண்டு. நம்ம நாரதருக்கும் ப்ரம்மாவுக்கும்  ஏற்பட்ட ஒரு வாக்குவாதத்தில்  கோபம் அடைஞ்ச ப்ரம்மா தன் மானஸீக புத்திரனான நாரதரை சபிச்சிட்டார்.  தந்தையிடம்  சாபம்  வாங்கிய நாரதர் , இங்கே வந்து கடுமையான தவம் செஞ்சுருக்கார். ப்ரத்யக்ஷமான பெருமாளிடம், 'உலகத்துக்குத் தத்துவ ஞானத்தை உபதேசிக்கும் தொழில் தனக்கு வேணும்' என்று  வரம் கேட்டுருக்கார்.  அப்படியே ஆச்சு.இருபத்தியஞ்சாயிரம்  கிரந்தங்களில்  ஞான உபதேசங்களும், ஸ்ரீ நாராயணனை எவ்விதம் வணங்க வேண்டும் என்ற வழிமுறைகளையும் நாரதீய புராணமாக இயற்றி இருக்கார் நாரதர்.

ஓ  அதுதான் கோவில் முகப்பு அலங்காரத்தில் நாரதரும் தும்புருவும் இருக்காங்களோ! அப்ப அது நந்தியாக இருக்காது!  நாந்தான் தப்பா நினைச்சுருக்கேன்:(

திவ்யதேசக் கோவில்களின் வரிசையில் இக்கோவில் இருப்பது அறுபத்தி ஏழில். ஒவ்வொரு பட்டியலிலும் ஒவ்வொரு எண் சொல்லிடறாங்க. அதனால் இனி பேசாம திவ்யதேசக் கோவில்களில் ஒன்னு என்று சொல்லப் போறேன். அதுதான் உத்தமம்.

நம்மாழ்வார் பத்து பாசுரங்கள் பாடி மங்களசாஸனம் செஞ்சுருக்கார்.
திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு, திருவன்வண்டூர் மஹாக்ஷேத்ரம் என்று ஒரு போர்டு வச்சுருக்கு.

திருச்சிட்டாறு கோவிலில் இருந்து இங்கே வர  மொத்தமே அஞ்சரை கிலோமீட்டர் தூரம்தான். போக்குவரத்து அதிகம் இல்லாத ரோடாக இருப்பதால்  காமணியில் வந்து சேர்ந்திருந்தோம்.வந்து சேர்ந்த  இருபதே நிமிசத்தில் தரிஸனம் முடிச்சுக் கிளம்பியாச்சு. மணி இப்போ ஏழரைக்கு நாலு நிமிட்.

கோவில் திறந்திருக்கும் நேரம் காலை நாலரை முதல்  பதினொன்னு வரை. மாலை அஞ்சு முதல் எட்டு.

வாங்க அடுத்த ஒரு கோவிலுக்கும் போயிட்டுப் போயிறலாம்.

தொடரும்....:-)

19 comments:

said...

துளசிதளம்: திருவமுண்டூர் என்னும் திருவண்வண்டூர் ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 31)
THULASIDHALAM.BLOGSPOT.IN

ஆஹா. கேரள கோவில்கள் எவ்வளவு சுத்தமாக பராமரிக்கப் படுகின்றன. எனது பக்கத்தில் பகிர்கிறேன். நன்றி அம்மா Tulsi Gopal

said...

ஆகா...! அழகான......... சுத்தமான கோவில்...!

கலகம் நன்மையிலேயே முடிய வேண்டும் என்றும் வேண்டி இருப்பாரோ...?

ஐப்பசி அடைமழை என்று சொல்வார்கள்... மனஸிலாயோ...? ஹிஹி...

said...

நீங்க எழுதுவதன் மூலம் ஒரு பெரிய காரியத்தை செய்தீட்டீங்க. அடுத்த வருடம் நிச்சயம் மிகப் பெரிய பயணத் திட்டத்தை குடும்பத்துடன் சென்றே ஆக வேண்டும் என்ற வைராக்கியத்தை உருவாக்கியிருக்கீங்க.

said...

பலருக்கும் கிடைக்காத அபூர்வக் கோவில் தரிசங்கள் துளசி உங்கள் முயற்சியால் கிடைக்கிறது. அதுவும் நேரிலயே சென்ற மாதிரி ஒரு அனுபவப் பதிவாகிறது . எத்தனை நன்றி சொல்லணுமோ தெரியவில்லை. எவ்வளவு பிரம்மாண்டமான கோவில்ப்பா.
கோவில் கதைகளும் அழகாகச் சொல்கிறீர்கள். பாக்கியம் செய்தவர்கலள் நாங்கள் தான்.

said...

\\நம்மாழ்வார் இங்கே வந்தும் பதினொரு பாசுரங்கள் பாடி மங்கள சாஸனம் செஞ்சுருக்கார்.\\ Teacher nammalvar is a handicapped he never went outside. He stayed under tree and prayed by manasikam. Its ok. nanga intha kovilukku senra pothu nadai sathi irunthathal antha mandapathil paduthu uranginom. nice place

said...

நேரில் சென்று வந்த திருப்தி, ஆனால் சுத்தமாக இருக்கும் அந்தக் கோயிலை பார்க்கும் போது ஏதோ சினிமாவுக்கு போட்ட செட் போல் தோற்றம் தருகிறது.

said...

வாங்க ரத்னவேல்.

உங்கள் பக்கத்தில் பகிர்ந்தமைக்கு நன்றிகள்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

நமக்குத்தான் ஐப்பசி அடைமழை. அங்கே இடவப்பாதிதான் ( மே மாதம் 15 தேதிக்கு அப்புறம்) அடைமழையாக்கும், கேட்டோ!

சுத்தமான கோவிலைப் பார்ப்பதே அபூர்வமென்றாகிவிட்டதே!!!!

said...

வாங்க ஜோதிஜி.

பெரிய பயணம் முடியாவிட்டால் ஒரு நாலைஞ்சு நாட்கள் போனாலும் சரி.

பயணங்கள் கற்றுக்கொடுப்பவை அநேகம்.

said...

வாங்க வல்லி.

நம்ம துளசிதளம் ஃபார் ஆர்ம் சேர் ட்ராவலர்ஸ்தானே:-)))

தொடர்ந்து வாசிப்பதற்கு நானல்லவா நன்றி சொல்லணும்!!!

நன்றீஸ்ப்பா.

said...

வாங்க பித்தனின் வாக்கு.

மானஸீகமாவாப் போயிருக்கார்!
இல்லையே அவர் தனியாக 16 திவ்யதேசங்களுக்குப்போயிருக்காருன்னு ஒரு இடத்தில் வாசிச்சேனே. அதில் திருவண்வண்டூரும் ஒன்றாச்சே!

இடரில் போகம் மூழ்கி இணைந்தாடும் மடவன்னங்காள்
விடலில் வேதவொலி முழங்கும் தண்திருவண்வண்டூர்
கடலின் மேனிப்பிரான் கணணனை நெடுமாலைக் கண்டு
உடலம் நைந்து ஒருத்தி உருகுமென்று உணர்த்துமினே

நம்மாழ்வார்.

நடை திறந்ததும் தரிசனம் கிடைச்சதோ?

said...

வாங்க செந்தில் குமார்.

அழுக்கும்புழுக்குமா இருந்தால்தான் கோவிலென்று மனசுக்குப் பழகிப் போயிருக்கே!

சுத்தமானதை எப்படி ஏற்க மறுக்குதுன்னு பாருங்களேன்:-)

எல்லாம், தமிழ்நாட்டுக்கோவில்கள் படுத்தும் பாடு!

said...

அன்பின் டீச்சர்,

பதிவு அருமை. ஸ்தலங்களுக்கான வழியை நீங்கள் தெளிவாக எழுதியிருப்பதைப் பார்த்தே கோயில்களைத் தேடிப் போய் விடலாம். கூகுள் மேப்பே வேண்டாம் கேட்டோ :)

நான் கோயில்களுக்குப் போனால் அதிக நேரம் எடுத்துக் கொள்வது அழகான புராதன கல் மற்றும் மரங்களாலான சிற்பங்களைப் பார்ப்பதற்குத்தான். எவ்வளவு அழகு. இவற்றைச் செதுக்கிய சிற்பி எப்படியிருப்பார்? இம் மரங்கள், பாறைகள் எங்கெங்கு வளர்ந்திருக்கும்?...இப்படியே சிந்தனை போகும்.

அப்பொழுதெல்லாம் சிற்பிகளைப் பற்றியெல்லாம் ஏன் குறிப்புக்கள் இல்லையென எனக்குள் கேட்டுக் கொள்வேன். நேற்று அதற்கான பதில் கிடைத்தது.

'பெருந்தச்சன்' என்றொரு படம் பார்த்தேன். பெருந்தச்சன் சரஸ்வதி தேவியை அழகாகச் செதுக்கி முடிப்பார். அதற்கு உத்தரவிட்ட தம்புரான் நெடுமுடி வேணு அதனைப் பூஜைக்காகக் கொண்டு செல்வார். மகுடத்தில் ஒரு வரி மட்டும் மீதமிருக்கிறது என அதனைச் செதுக்க அனுமதி கேட்பார் பெருந்தச்சன். வேணு'நீ தொட்டால் தீட்டாகிவிடும்' என்பார். மிகுந்த வலியோடு பெருந்தச்சன் எனும் புகழ்பெற்ற சிற்பியாக நடிக்கும் திலகன் சொல்வார். 'கல்லோ மரமோ தேவியாகிக் கழிஞ்ஞால் பின்னே ஆசாரி யாரு?'

படம் முழுவதும் அழகான கோயில்களில் சிற்பங்களையும் மர வேலைப்பாடுகளையும் செதுக்கும் பணியை செவ்வனே நிறைவேற்றுவார்கள் திலகனும், அவரது மகன் பிரசாந்தும். செதுக்கி முடித்த பின்னால் அவர்கள் உள்ளே கூட நுழையக் கூடாது. இவ்வாறான நியதிகள் இருக்கும்போது அந்த அற்புதமான சிற்பிகள் குறித்த குறிப்புக்கள் எங்கேயிருக்கப் போகிறது இல்லையா?

காலம் காலமாக எவ்வளவு வலிகளைத் தாங்கியிருப்பர் இந்த சிற்பிகள்? அவர்களது சந்ததிகள் பற்றிய குறிப்புக்கள் கூட இல்லை.

டீச்சரோடு கோயில்களுக்குப் பயணிப்பதே ஒரு சுகானுபவம்தான். டீச்சர் கோயில்களில் சிற்பிகளைப் பற்றிய குறிப்புக்களைக் கண்டால் சிற்பங்களையும் அவற்றையும் ஒரு பதிவாக இட வேண்டும் என ஒரு சிறிய ஆசை.

said...

எம்.ரிஷான் ஷெரீப்

மிக சிறப்பான விமர்சனம். டீச்சர் இவர் இலங்கையைச் சேர்ந்தவர்கள் தானே?

இவர் எண்ணங்கள் தான் என் மனதிலும் பல முறை தோன்றும்.

said...

அழகு, அழகு..சுத்தமான பிரகாரங்கள்..பார்த்தாலே மனதுக்கு நிம்மதியாக இருக்கு மேடம்.
சிறப்பான பதிவு..

said...

ஐப்பசியில் அடைமழைன்னு சொல்வாங்களே. கூடவே வெல்ல மழையும் அடை மழையும் பெஞ்சா நல்லது. ஹிஹி

ப்ராவடின்னா புறாக்கள் தங்குமிடமா. அதென்னடா ப்ராவடி.. ஒருவேளை பாலத்தச் சொல்றாங்களோன்னு நெனச்சேன்.

கோகி கோயில்.. துளசி தீர்த்தம்.. அபாரம் :)

கேரளா படங்கள்ள சாலையோரம் தெரியும் பசுமை மிக அழகு. தமிழ்நாட்டையும் செழிப்பாக்கு முருகா.

அஞ்சு பேர் கட்டிய கோயில்கள்னு சொல்றீங்க. திரவுபதை எதுவும் கட்டலையா?

said...

திருவமுண்டூர் என்னும் திருவண்வண்டூர் கோவில் தரிசனம் ஆச்சு. நன்றி.
படங்கள் எல்லாம் மிக அழகு.

said...

வரலாறுகளுடன் அற்புதமான கோயில் கண்டுகொண்டோம்.

said...

arumaiyana dharisanam. nandri teacher.