Wednesday, March 25, 2015

ஆரன்முளான்னு கேட்டால் உங்களுக்கு என்ன தோணும்? ( மூன்று மாநிலப் பயணம்- தொடர் : 33)

எனக்குச் சட்னு தோணியது ஓணசமயத்து அவிடே நடக்குன்ன  வள்ளம்களி. ஸ்நேக் போட் ரேஸ்ன்னு சொல்வாங்க.பாம்பு போல நீளமான படகுலே ரெண்டு பக்கமும் துடுப்புப்போடும் ஆட்கள் வரிசையா உக்காந்து துடுப்பு வலிக்க,  அவுங்களை உற்சாகப்படுத்தும்  பாட்டுக்காரர்கள்  பாட, பகுதி பகுதியா ஒவ்வொன்னுக்கும் ஒரு  டீம் லீடர் போல  நின்னு  'ஆகட்டும், இன்னும் வேகமா துடுப்பைப் போடுங்க'ன்னு  படகில்  நடுவில் இருக்கும் மேடையில்  நிற்கும் ஒரு எட்டாளுன்னு  அட்டகாசம்தான் போங்க.

இந்தப் படகுகளுக்குப் பள்ளியோடம் என்ற பெயர்.  ஒவ்வொரு படகிலும் ஸ்ரீ மஹாவிஷ்ணு  இருக்கிறார்னு ஒரு ஐதீகம். அதனால்  போட்டின்னதும் ஒருத்தரோடு ஒருத்தர் போட்டி போட்டுக்கிட்டு வருவாங்கன்னு நினைக்கப்டாது.  வஞ்சிப்பாட்டு என்றொரு  ஸ்டைலில் இருக்கும் பாட்டுப் பாடிக்கிட்டே கருடன் முகப்பு இருக்கும் பெருமாளின் படகுக்குத் துணையா வரும் பாம்புப் படகுகள்தான் இவை.   39  பகுதிகளில் இருந்து வருபவை.
படகின் நீளம் 103 அடி! துடுப்பு வலிக்கும் ஆட்கள்  64  பேர்னு  கோலாகலம்தான்.

 கடைசியில் இவுங்க கோவிலுக்குப் பின்னால் இருக்கும் கடவுக்கு வந்து சேர்வாங்க.  'உத்திரட்டாதி  வள்ளம்களி'ன்னு இதுக்குப்பெயர்!  சரியாச் சொன்னால் இது ஓணம் பண்டிகை முடிஞ்சு நாலாம் நாள் உத்திரட்டாதி நட்சத்திர தினத்தில் நடக்கும். இதெல்லாம் நம்ப  பம்பாநதியில்தானாக்கும், கேட்டோ!

இந்த 64 பேர் என்ற எண்  அறுபத்திநான்கு கலைகளையும், பாம்பின் தலைப்பகுதியில் நிற்கும்  நாலு மேஸ்திரிகள்  நான்கு வேதங்களையும், மேடையில்  நிற்கும் எட்டு ஆட்கள் அஷ்டதிக் பாலகர்களையும் குறிக்குதுன்னும் ஒரு ஐதீகமுண்டு.  இந்த படகு  தயாரிக்க ஆகும் செலவு ஒரு 16 லக்ஷம்  ரூபாய் !  குறைஞ்சது ரெண்டு வருசமாகுமாம் ஒரு பாம்புப் படகு தயாரிக்க.

படகுக்கும் கோவிலுக்கும் ஏன் இவ்வளவு முக்கியமாம்?   இங்கே பிரதிஷ்டை செய்ய மூலவரைக் கொண்டு வந்தப்ப, ஒரு காட்டு வழியில்  வெகுதூரம் வரவேணுமேன்னு  காட்டில் இருக்கும்  மூங்கில்களில்  ஆறு மூங்கில்களை வெட்டி அதை இணைச்சுக்கட்டிய தெப்பத்தில்   சாமியை வச்சுப் பம்பா நதியில்  ஓடம் போல ஓட்டிக்கிட்டு, இங்கே   கொண்டு வந்தாங்களாம்.   ஆரண்முளா.  (ஆறு மூங்கில்கள், ஆரண்யத்தில் இருக்கும் மூங்கில்கள்  ) இவ்ளோ கஷ்டப்பட்டது யாருன்னால்....எல்லாம் நம்ம அர்ஜுனன்தான். வில்லாளி!

பாரதப்போர் முடிஞ்சாட்டு  பல ஆண்டுகள் ஆட்சி செஞ்ச பாண்டவர்கள் , பேரன் பரீக்ஷித்துக்குப் பட்டம் கட்டுனபிறகு  மன நிம்மதி வேண்டி  யாத்திரை வந்தாங்கன்னு  ஆரம்பத்திலே சொன்னேன் பாருங்க அப்ப ஒவ்வொருத்தரும் ஒரு கோவிலாக் கட்டி எழுப்பி இருக்காங்க.

கர்ணன்,  தங்கள் அனைவருக்கும் மூத்த சகோதரன் என்ற விவரம் அறியாமல்,  போர்க்களத்தில், அவன்  பூமியில் அழுந்தியிருந்த தேர்ச்சக்கரத்தை  வெளியே இழுக்கும்  சமயத்தில் , வஞ்சகமா அவனைக் கொன்னுட்டோமேன்னு  அர்ஜுனனுக்கு மனதில்  ஓயாத குற்ற உணர்ச்சி. நினைச்சு நினைச்சு வெம்பிக்கிட்டு இருக்கான்.  'இதுதான் சமயம், அவனைக்கொன்னுடு'ன்னு சொன்ன  கிருஷ்ணன் பேச்சைக் கேட்டோமேன்னு வேற குமுறல்.
கிருஷ்ணனை தியானிச்சு, இப்படி என்னை பாவம் பண்ணவச்சுட்டீரேன்னு புலம்பும் சமயம், பெருமாளே  பார்த்தசாரதி உருவத்தில்  தரிசனம் கொடுத்துருக்கார்.  ஆனால் கையில்  வெறும் சாட்டை மட்டுமில்லாமல், வலது கையில் சக்கரமும் வச்சுருக்கார்!

 பீஷ்மர் மேல் அம்பு எய்ய விருப்பம் இல்லாமல்  அர்ஜுனன் தயங்குனது பொறுக்காமல் ' இப்ப நீ அவரைக் கொல்லத் தயங்கினால் நான் போய் கொல்லப்போறேன்'னு  அங்கே கீழே விழுந்திருந்த தேர்ச்சக்கரத்தைத்  தூக்கி வீசப்போறார்.  அப்போ அர்ஜுனன்,  'போர்க்களத்தில் ஆயுதம் ஏந்தமாட்டேன்னு வாக்கு கொடுத்தது மறந்து போச்சா'ன்னு கேட்டு அதைத் தடுத்து நிறுத்தினான்.

  அதுக்குப்பிறகுதான் பீஷ்மர் மேல் அம்பெய்தது.  பீஷ்மர் அம்புப் படுக்கையில்  இருந்தது.  அதன் பிறகுதான் அதுவரை போரில் பங்கெடுக்காமல் ஒதுங்கி இருந்த கர்ணன்  படைத்தலைமை ஏற்று பாரதப்போரில்  கலந்து கொண்டதுன்னு  பாரதக்கதை போய்க்கிட்டே இருக்கும். பாரதமுன்னு  ஒரு வார்த்தை சொன்னாலே எப்படி நீண்டு போய்க்கிட்டே இருக்கு பாருங்க:-)

 ஆர்யாஸில் எனக்கு  இட்லி, கோபாலுக்குப் பூரின்னு கிடைச்சது. சீனிவாசன் தோசை, பொங்கல் னு  வாங்கிக்கிட்டார். காஃபி   எப்படி இருக்குமோன்னு பயந்து, நாங்க டீ வாங்கிக்கிட்டோம். அறைக்குப்போய் சாமான்களை ஒதுக்கி ரெடியா வச்சுட்டு,  கீழே ரிஸப்ஷனில்  இருந்த  நந்தகோபாலிடம் (அப்படித்தான் நினைக்கிறேன்) எதுக்கும் இருக்கட்டுமுன்னு  ஆரண்முளா கோவிலுக்கு வழி கேட்டுக்கிட்டோம்.   ஒரு பத்து கிலோமீட்டர்தான்  தூரம் என்றார்.  இப்போ மணி ஒன்பதரைதான். இஷ்டம்போல் சமயம் உண்டு என்றார்:-)  கிளம்பிய இருவது நிமிசத்தில் கோவிலுக்கு வந்துட்டோம்.  சபரிமலைக்கு இதே ரோடில்தான் போகணுமாம்.



திருவாறன் விளை என்பது புராணப்பெயரா இருந்தாலும் இப்ப இந்த  இடத்துக்கு ஆரன்முளா என்ற பெயரே நிலைச்சுருச்சு.

கொஞ்சம் உயரத்தில் இருக்கு கோவில். எத்தனை படிகள் என்று  (என் வழக்கம்போல்)  எண்ணிப்பார்த்தேன். பதினெட்டு!  அந்தப் பதினெட்டுக்குப் பதிலா இந்தப் பதினெட்டு அய்க்கோட்டே!

படிகள் கடந்து கோவிலுக்குள் நுழையறோம். ரெண்டு பக்கமும் பிரமாண்டமான திண்ணைகளும் நடுவில்  விசாலமான  இடைநாழியுமா இருக்கு. ஒரு திண்ணையில் நிறைய சாமி படங்களுடம்,  வாமன அவதாரமோ என்று நான் நினைச்ச ஒரு  சிலையும். தாழங்குடை பிடிச்ச அந்தணர்.
இன்னொரு திண்ணையின் சுவரில்.....  ஆஹா....எல்லாம் நம்மாட்கள்!!!


கஜ சாம்ராட்  திருவாரன்முளா பார்த்தசாரதி,  கஜ ராஜன் திருவாரன்முளா ரகுநாதன்  கஜ கேசரி  திருவாரன்முளா மோஹனன்!  பெரிய படங்கள்.  தும்பிக்கை தரையில் மடங்கிக் கிடக்கு. அவ்ளோ நீளம். இப்ப இவுங்க யாருமே இங்கே  பகவான் சேவையில் இல்லை. சாமிக்கிட்டேயே போயிட்டாங்க.
இப்ப இருப்பவரைக் காணோம். வெளியே போயிருக்கலாம்.



முன்மண்டபம் ரொம்பவே பெருசு. அடுத்து  ரெண்டு பக்கமும் பெரிய தீபஸ்தம்பம், நடுவில்  வெயிலுக்கு ஷாமியானா போட்டு வச்சுருக்காங்க. அங்கங்கே வயசான பெரியவர்கள் பலர்.






தங்கக்கொடிமரம்  தகதக. கொடிமரத்தின் அடிப்பாகத்தில் சுற்றிலும்  அழகழகான  சாமி விக்கிரஹங்கள்!  தீபஸ்தம்பங்களின் உச்சியில் கைகூப்பிய கருடர்!




துலாபாரம் கொடுப்பது இங்கே விசேஷமாம். தராசுக்குப்பக்கத்தில் நிற்கும்  இன்னொரு சின்ன தீபஸ்தம்பத்திலும் வித்தியாசமான கருடர்.  மூக்கு..... அப்பப்பா...சூப்பர். காலத்தில் மூத்தது!   இதே போல் ஒன்னு கிடைக்குமான்னு கடைகளில் தேடிப் பார்த்தேன்.ஊஹூம்.:(

கேமராவை மரியாதையாகப்  கைப்பைக்குள் வச்சுட்டு  வெளிப்பிரகாரம் கடந்து கருவறைக்குப்போறோம். மூலவர் பார்த்தஸாரதி, நின்ற கோலத்தில் சாதிக்கிறார். கிழக்குப் பார்த்த சின்ன உருவம்தான்.  தங்கக்கவசம் போர்த்திக்கிட்டு இருந்தார். கையில் சக்கரம் இருக்கான்னு பார்த்தேன். இருக்கு! ப்ரயோகச் சக்கரம்!  இப்ப நினைச்சால் புறப்பட்டுப்போகும் வகையில்:-)

ப்ரம்மாவுக்கும்  வேதவ்யாஸருக்கும்  இங்கே தரிசனம் கொடுத்துருக்காராம்.
மூலவருக்குத்  திருக்குறளப்பன் என்ற பெயரும் உண்டு. ஓஹோ....அதான் வாமன ரூபச் சிலை திண்ணையில் இருக்கோ! வாமனரூபம்  காணவேண்டும் என்ற ப்ரம்மாவுக்காக  வாமனராக காட்சி கொடுத்ததாகவும் சொல்றாங்க.

சரியாகத்தான் இருக்கும்.  வாமனராக இருந்து  உருவம்பெருக்கி உலகளந்தான் ஆகி சத்யலோகமும் தாண்டி  பாதம் போயிருக்கும்போதுதானே ப்ரம்மாவும் பாத தரிசனம் செஞ்சுருப்பார்.

தாயார் பெயர் பத்மாஸனி நாச்சியார். பரசுராமருக்கும் தனியா  சந்நிதி இருக்கு.
பெரிய கோவில்தான். வெளிப்ரகாரம் சுற்றி வடக்குவாசல் வந்தால்  அந்தாண்டை பம்பா நதி.  நதிக்கரைக்குப்போக  57 படிகள் இறங்கணும்.

கோவில் உள்பிரகாரச்சுவர்களில்  ம்யூரல் வகை ஓவியங்கள் ஏராளம். எல்லாம்  பதினெட்டாம் நூற்றாண்டில் வரைந்தவையாம்!

சபரிமலை ஐயப்பஸ்வாமியின் திருவாபரணங்கள் எல்லாம் இங்கேதான்  பத்திரமா வச்சுருக்காங்க. மகரவிளக்கு சமயம் நகைப்பெட்டியையும்  ஐயப்பனுக்கு  உடுத்திக்கொள்ள தங்க அங்கியும் இங்கே இருந்துதான் செண்டைமேளதாளத்தோடு ஊர்வலமா எடுத்துக்கிட்டுப்போறாங்க. அதானால் ஐயப்ப சாமி பக்தர்களுக்கு இது ரொம்பவே வேண்டப்பட்ட க்ஷேத்திரம்!

1973 இல் மன்னர் சித்திரைத்திருநாள் அவர்களின் காணிக்கை இந்த தங்க அங்கி.

இந்த ஆரண்முளா பார்த்தஸாரதி கோவிலில் இருந்து சபரி மலைக்கு  75  கிமீதான் தூரம். ரெண்டுமணி நேரத்தில்  போயிடலாம்.  பதினெட்டாம் படி ஏறிப் போகணுமுன்னால்தான் நியமங்கள் அதிகம். ஒவ்வொரு மலையாள மாசத்திலும் முதல்  அஞ்சு நாட்கள் மட்டுமே நடை திறந்து வைப்பதால் டிமாண்ட் அதிகம். ச்சும்மா அதுவரை போய் பார்த்திருக்கலாமோன்னு  இப்பத் தோணுது.

நம்மாழ்வார் இங்கே வந்து  பெருமாளை தரிசனம் செஞ்சு  பத்துப்பாசுரங்கள் பாடி மங்களசாஸனம் செஞ்சுருக்கார்.  நூற்றியெட்டு திவ்யதேசக் கோவில்களில் இதுவும் ஒன்று.

அதிகாலை நாலரை முதல் பனிரெண்டரை வரையும்  மாலை ஐந்து முதல் எட்டு வரையும் கோவில் திறந்திருக்கும். நின்னு நிதானமாக்  கும்பிட்டு வரலாம்.

இங்கே நடக்கும் சில திருவிழாக்கள் வேறெங்கும் நான் கேள்விப்படாதவையாத்தான் இருக்கு. அதுலே ஒன்னு 'வல்லிய சத்யா' பெரிய விருந்துன்னு சொல்றதைவிட பிரமாண்டமான விருந்துன்னு சொல்லலாம்.  வள்ளம் களி முடிஞ்சதும்,  படகில் வந்த அந்த  39 பகுதிமக்களுக்கும்,  திருவிழாவுக்குக் கூடி இருக்கும் மற்றவர்களுக்கும் கோவில் ஒரு விருந்து சமைச்சுப்போடுது.  போனமுறை நாப்பாதாயிரம் மக்கள் விருந்துலே கலந்துக்கிட்டாங்களாம்!

இன்னுமொரு ஸ்பெஷல்,  இங்கே நடக்கும் காண்டவ வனம் தகனம் . கோவிலுக்குமுன்னால்  காடு போல்  தோற்றம் தரும் வகையில் (ஒரு  அடையாளமாத்தானாக்கும், கேட்டோ!) மரக்கிளைகளைகள் செடிகள் எல்லாம் நட்டு(!)  அதுக்குத் தீமூட்டி எரிச்சு  மகாபாரத சம்பவத்தை  நினைவூட்டும் திருவிழா.

தனுர் மாசத்திலே நடக்குது. இது நம்ம மார்கழி மாசம்தான். குளிருக்கு இதமா இருக்கும்:-)

கோவிலில் இருந்து வெளிவரும் சமயம் திண்ணையில் இருந்த ஒரு முதியவரிடம்,  கோவிலில் ஏகப்பட்ட முதியோர்,  மண்டபங்களில் அங்கங்கே  இருப்பதின் காரணம் என்னன்னு கேட்டேன். இங்கே  வேறெந்தக் கோவிலிலும் இப்படி ஒன்னு இதுவரை பார்க்கலை!  கோவில் நடத்தும் முதியோர் இல்லத்து மக்களாம். சாப்பாடு அங்கே மூணு வேளையும்  கிடைக்குதாம். சும்மா அங்கே போரடிச்சுக் கிடக்காம இப்படிக் கோவிலில் வந்து இருக்காங்களாம்.   இதர செலவுகளுக்கு  கொஞ்சம் காசு இங்கே வரும் பக்தர்களால் கிடைக்குது என்பதே காரணம் என்றார்.


மலைநாட்டு திவ்யதேசங்கள் பட்டியல் ஒன்னு போட்டு வச்சுருக்காங்க.


மீண்டும் பதினெட்டுப்படிகள்  இறங்கி  வந்தால் படிகளின் ஓரத்தில் சிலர்  இருந்து சட்னு கையை நீட்டுனாங்க. அவுங்க தமிழர்கள் என்று பேச்சில் தெரிஞ்சது:(

இதுவரை பார்த்த கோவில்கள் போல் இல்லாமல் இங்கே நிறைய கோவில்கடைகள் தெருமுழுசும்.  ஆரன்முளா கண்ணாடி என்பது இங்கே ரொம்ப ப்ரசித்தம். பஞ்சலோகத்தில் செஞ்சது. போலிகள் இதிலுமிருக்கு என்பதால்  இந்தக் கடைகளில் வாங்க யோசனையா இருக்கு.  நல்லதாக வாங்கணுமுன்னா அதுக்கான கடைகளைத் தேடிப்போகணும்.  நமக்கு எப்பதான் நேரமிருக்கு? ஹூம்...

திருவாறன் விளை பார்த்தஸாரதி கோவில் சுற்றி, தரிசனம் செஞ்சு கிளம்ப இருபதே நிமிசம்தான் ஆகி இருக்கு.  பார்த்தஸாரதின்னதும்  நம்ம தில்லக்கேணி, முறுக்கு மீசையும் விரித்த கண்களுமா, ஆஜானுபாகுவா  ஏழடி உசரத்தில் நிகுநிகுன்னு நிற்பவன்  'டான்'ன்னு நினைவுக்கு வந்துட்டான்:-)

இந்த பஞ்சபாண்டவர்கள் கட்டிய அஞ்சு கோவில்களும்  இதே செங்கண்ணுர் பகுதிலே இருக்கு பாருங்க, இதை இங்குள்ளவர்கள் அஞ்சம்பலம் என்று சொல்றாங்க.

சரியான திட்டம்போட்டால் ஒரு அரை நாளிலே இந்த அஞ்சு கோவில்களையும்  தரிசிக்கலாம். கோவில் நேரங்கள்  காலை நாலு முதல் பனிரெண்டரைன்னு நினைவில் வச்சுக்கணும்.  இதுலே நாலு கோவில்கள்  செங்கண்ணூருக்கு வடக்குப் பக்கம்தான்.  காலையில் ஏழுமணிக்குக் கிளம்பினாலும் அவைகளை ஒரு மூணு மணி நேரத்தில் பார்த்துடலாம். அதன்பின்  இந்த  ஆரண்முளாக் கோவிலுக்கு  வரலாம்.  இது ஒன்னுதான் பகல் பனிரெண்டரை வரை திறந்துருக்கு.

நம்மூர்க் கோவில்கள் போல  கோபுரங்கள், மண்டபத்தூண் சிற்பங்கள் இப்படி ஒன்னும் இல்லாமல் ரொம்பவே சிம்பிளா, ப்ளெய்னா இருக்கு எல்லாமே! சாமிகளின் சிலைகளும் கூட  அதிகபட்சம்  மூணடி வரை இருக்கும் சின்ன உருவங்களே!  ( திருவனந்தபுரம்  பதுமனுக்குத்தான் ஒரு   உசரக்குறைவான அகலக்கோபுரம். பதுமனும் 18 அடி நீளமானவன்! ) ஆடம்பரம் இல்லாமல் அமைதி தவழும் இடங்களாக் கோவில்கள் இருப்பது அபூர்வம்தான் இந்தக் காலங்களில்.


மனத்திருப்தியுடன்  செங்கண்ணூர் திரும்பி  ஹொட்டேலுக்கு வந்து அறையைக் காலி செஞ்சுட்டுக் கிளம்பிட்டோம்.

தொடரும்...........:-)

PIN குறிப்பு:  இதென்ன இந்தப்பதிவில்  நிறைய இடங்களில்  18, பதினெட்டுன்னே வந்துருக்கு!

21 comments:

said...

18 அறியாத தகவலாக்கும்...! ஹிஹி... நன்றி அம்மா...

said...

வயசானவாளுக்குன்னு ஒரு வசதி இருக்கோ? அங்க போயிடவேண்டியதுதான்.

சரி, ஆரண்முளா கண்ணாடி லோகப் பிரசித்தமோன்னோ, ஒண்ணு வாங்கீட்ருக்கலாம்! வடை போச்சே?

said...

இந்த முறை படங்களில் சிலிர்ப்பு கொஞ்சம் கம்மி

said...

ingaiyum pinnadi pamba river irukku. athula niraiya fish irukkum pori poduvathu nallathu. good pictures

said...

திருவாறன்விளா பார்த்தசாரதி..

உங்க புண்ணியத்துல திவ்யதேசங்களுக்கு நாங்களும் பயணிக்கிறோம்.

இந்தப் படகுப் போட்டிதானே கேரளாவில் ரொம்பப் பிரபலம்.

படகு ஒவ்வொன்னும் எவ்வளவு நீளம். அடேங்கப்பா. அடேங்கப்பா.

அதே மாதிரி ஒவ்வொரு ஆனையும் ஆகிருதி அமோகம்.

கோயிலுக்குள்ளயே முதியோர் இல்லமா. இது நல்லாருக்கே. படிச்ச மாநிலம்னு சொல்ற கேரளாவிலும் இப்படித்தானா நெலமை.

பிச்சையெடுக்குறதெல்லாம் முந்தி மாதிரி இல்ல டீச்சர். அதுக்குன்னே ஒரு கேங் இருக்குது. அவங்க பிசினஸ் மாதிரி செய்றாங்க. ஒரு ஊர்ல இருந்து இன்னொரு ஊருக்கு ரொட்டேஷன்லல்லாம் ஆள் அனுப்புறாங்களாம். பாவம். :(

said...

ஒரு முறை பட்டினம் திட்டாவிலிருந்து இந்தக் கோவிலுக்கு என் சம்பந்தி அழைத்துப் போனதாக நினைவு. தவறாயும் இருக்கலாம். இன்னும் எத்தனை கோவில்கள் பாக்கி இருக்கிறது.?

said...

ஆஹா எங்க ஊர் புராணங்கள் தொடர்கின்றதோ.....தகவல்கள் எதுவும் தவறு என்று சொல்வதற்கில்லை. ஏனென்றால் வரலாறு, புராணக் கதைகள் இவற்றில் எல்லாம் ஒவ்வொரு காலகட்டத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டு வழிவழியாய் சொல்லப்படுவதுதானே! நம் செவிக்கு எட்டியதை நாம் தெரிவிக்கின்றோம். எனவே தவறு என்று சொல்வதற்கில்லை சகோதரி! விவரணம் அருமை.

said...

சாதாரண் படகு போட்டிதான் நினைச்சுண்டு இருந்தேன் அதுக்கு இவ்வளவு ஐதீகம் இருக்கா? ஆச்சரியமான தகவல்..
அருமையான தகவல்கள், படங்கள்.

said...

அருமை !!!

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

தகவல் இல்லா துளசிதளம் உண்டோ!!! :-))))

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

வடை மட்டுமா? கண்ணாடியும்தான் போச்சு:(

said...

வாங்க ஜோதிஜி.

சிலிர்ப்பு அடுத்த புதன் கிழமையில்!!!

said...

வாங்க பித்தனின் வாக்கு.

ஆரண்முளா படகு ஊர்வலமே அந்த பம்பா நதியில்தான். கீழே இறங்கிப் போகலை:(

said...

வாங்க ஜிரா.

அந்தப்போட்டி இது இல்லை. அது ஆலப்புழாவில் நடக்கும் போட்டி.
Nehru Trophy Boat Race. புன்னமடக் காயலில் நடக்கும்.

யானை.... கோவிலுக்கு தெரிஞ்செடுக்கும் யானைகள் எல்லாம் தனிப்பட்ட வகையால்லே இருக்கு. தும்பிக்கை தரையில் புரளும் நீளம்!!!!

படிப்புக்கும் கருணைக்கும் சம்பந்தம் இருக்கா என்ன?

நான் கடவுள் படமும், ஏழாம்அறிவு நாவலும் என் வசமிருக்கு. இது ஒரு தொழில்! மூலதனம் கூட வேணும்!

said...

வாங்க ஜிஎம்பி ஐயா.

இந்தப் பகுதியை பந்தனம் திட்டா என்று சொல்கிறார்கள்.

கேரளாவில் ஏகப்பட்ட கோவில்கள் இருந்தாலும் நாங்க தரிசிக்க வந்தது 11 கோவில்களைத்தான். கூடுதலாக் கிடைச்சதெல்லாம் போனஸ்!

said...

வாங்க துளசிதரன்.

இன்னும் சிலநாட்கள் உங்கூரில்தான் சுற்றப் போகிறோம்! திவ்ய தேசக் கோவில்களிலே இன்னும் 6 பாக்கி இருக்கே:-)
இதைத்தவிர முக்கியமுன்னு நான் நினைச்ச சிலதும் உண்டு.

said...

வாங்க ரமா ரவி.
படகுக்கு மட்டுமா? கோவிலுக்கும் இன்னும் நிறையக் கதைகளிருக்கு! பதிவின் நீளம் கருதி அவைகளை இப்போ எழுதலை:(

அடுத்த விஸிட் போய் வந்தாட்டு எழுதவும் விஷயம் வேணாமா?:-)))

said...

வாங்க சசி கலா.

நன்றிப்பா.

said...

ஆனைப படங்கள படு ஜொரா இருக்கு. இரண்டு போட ரேஸ உண்டா.புதிய சேதி துளசி மா தமிழப பிழைகளை மன்னிக்கணும.

said...

ஆரன் மூளா படகில் இத்தனை தகவல்கள் இருக்கிறதா! அசத்திவிட்டீர்கள் அம்மா!

said...

ஆரண்முளா தகவல்களும், படங்களும் ஜோர். தும்பிக்கை தரையிலயே புரளுதே!! இங்க கூட ஆண்டாள் குளிச்சிட்டு வீட்டுக்கு போகும் போது தும்பிக்கையை மடக்கியே போவாள். ஈரத்தில மண் ஒட்டிக்குமாம்...:) ஆச்சரியப்பட்டு போனோம்.