Wednesday, May 07, 2014

மூலகந்தகுடீர் விஹார் சாரநாத்


திருமலை நாயக்கர் மஹால் தூண்களைப்போல் ரெண்டு. அதே மினுமினுப்புடன்.  சைஸ் மட்டும் மினி. மினியிலும் மினின்னு சொல்லலாம்.  பளபளன்னு ரெண்டு கணுக்காலிலும், பாதங்களிலும்   வீக்கம்.  செருப்புக்குள் சட்னு காலை நுழைக்கமுடியலை:(  அதுக்காக  வந்த வேலையை செய்யாமல் இருக்க முடியுமா?

ஒன்பது மணிக்குச் சொன்ன வண்டி, கொஞ்சம் லேட்டாத்தான் (ஒன்பதரைக்கு) வந்துச்சு. அதுவரை வரவேற்பு அலங்காரத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஃபர்ஸ்ட் இன்ப்ரெஷன் பெஸ்ட் என்பதால்  எல்லா ஹொட்டேல்களிலும்  ரிஸப்ஷன் ஹால் மட்டும் பிடுங்கித் தின்றது போல அமைச்சுடறாங்க:-)


இதோ..... கைலாஷ் வந்தாச்சு.  சலோ சாரநாத்!  ஊருக்குள் போகாம  கண்டோன்மென்ட் பகுதியில் (இங்கேதான் நம்ம ஹொட்டேல் இருக்கு) இருந்தே  போயிடலாம். சாலையின் பெயர் கௌதம்புத்தா ராஜ்பாத் !  ராஜவீதியில் எட்டேகால் கிமீ பயணிச்சால் போதும்!  அரைமணி நேரம் ஆச்சு இங்கு வந்து சேர.

வழியெல்லாம்  வண்டிகளில்  கொய்யாப்பழம் விற்கும் சாலையோரக் கடைகள். நாக்கு ஊறுது என்றாலும்  வரும்போது பார்த்துக்கலாமுன்னு இருந்தேன்.  என்ன யோசனைன்னா.....    கொய்யாப்பழத்தோல்கள் மேலே   என்னமோ அழுக்கு படிஞ்சமாதிரி கருப்பா அங்கங்கே இருக்கு.  விளைச்சலே அப்படித்தானாமே:(  மாசுமருவில்லாமல் பளிச்ன்னு இருக்கப்படாதோ?


சாரநாத் ஊருக்குள் நுழையும்போதே நம்ம ஆஞ்சி  கோவில்தான் முதலில் கண்ணில் பட்டது.  'ஹை ஆஞ்சி, பை ஆஞ்சி'ன்னுட்டுப் போய்க்கிட்டே இருந்தோம். முதலில் ஊரை ஒரு சுத்து வந்துட்டு,  எங்கே போகலாமுன்னு யோசிக்கணும்.   நடமாடும் மக்கள்ஸின் நல்ல கூட்டம்தான்! தீனி வண்டிகள் அன்றைய வியாபாரத்தில் பிஸி. பார்க்கும்போதே .......  தின்னலாமான்னு ஆசை வரும்படி அடுக்கி வச்சுருக்காங்க.  தின்னேன்  (கேமெரா) கண்களால், :-)

பெரிய விசித்திரமான கல் கட்டிடம் கண்முன்!  அசோக ஸ்தூபி என்றார் கைலாஷ். இன்னும் கொஞ்சதூரம் போனதும்  உசரமா ஒரு கோவில் கோபுரம் கண்ணில் பட்டது.  அங்கே போய் வண்டியை நிறுத்தினவுடன், ஜமுனா பாண்டே நம்மைப் பிடிச்சுட்டார்.  டூரிசம் அப்ரூவ்ட் கைடு. நூறு கொடுத்தால் போதும் சாரநாத் கோவில்களைச் சுத்திக்காட்டுவேன் என்றார். ஓக்கே.இங்கிருந்தே ஆரம்பிக்கலாம்.

பெரிய  தோட்டங்கள்  உள்ள ம்ருகதயா என்னும்   ஏரியாவாம் இது.  ஏராளமான மான்கள் கூட்டம் கூட்டமா இருக்குன்னார். ஆனால் கடைசிவரை ஒரு மான் கண்ணுலே ஆப்டலை:(   நீண்டு போகும் பாதையின் கடைசியில்  மூணு கோபுரத்துடன்  ஒரு கோவில்.  நடுக்கோபுரத்தின் உயரம் 110 அடி. மூலகந்தகுடி விஹார் என்ற பெயர் இந்தக் கோவிலுக்கு.  விசேஷம் என்னன்னா.......  சாக்ஷாத் புத்தரே இங்கு வந்து தங்கி இருக்கார்.   அவர் போதிகயாவில் மஹாநிர்வாணம் (ஞானம்) அடைஞ்ச  அஞ்சாவது வாரம்  நேரா வந்தது இங்கேதான்.

அப்ப இந்த இடம் ரிஷிப்பட்டணம் என்ற பெயரில் இருந்துருக்கு.  சமணர்கள் பெருமளவில் இருந்திருக்காங்க.  மஹாஞானம் அடைஞ்சபிறகு  இங்கே வந்த  கௌதமபுத்தர், தன்னுடைய முதல் ப்ரசங்கத்தை பேசுன இடம் இது என்பதால்  புத்தமதத்தினரிடையில் இது முக்கிய புண்ணிய பூமியா இருக்கு.  இங்கிருந்துதான் அவருடைய சிஷ்யர்கள் நாட்டின் பலபாகங்களுக்கும் போய் புத்தரின் கொள்கைகளைப் பரப்பினார்களாம். சமணர்களில் பலர் புத்த மதத்துக்கு மாறினாங்களாம் அப்போ!

கோவில் கட்டிடத்துக்கு இடப்பக்கம்  இன்னொரு வாசல்  தோட்டத்துக்குள் போகுது. அங்கேதான் காலணி வைக்கும் இடம் என்பதால் அதுக்குள் போனோம்.  ஆஹா.... என்ன ஒரு அழகு!

காண்டாமணி ஒன்னு கைக்கெட்டும் உயரத்தில் அழகாவும் அம்சமாவும் இருக்கு.

 இன்னும் ஒரு அழகான அலங்கார வாசல்.  உள்ளே.......

 பெரிய அரசமரம்  (போதி மரம்) ஒன்னு கம்பீரமா நிக்குது. அதுக்குக்கீழே ஒரு மண்டபத்தில்  சாக்கியமுனி புத்தர் கொஞ்சம் உயர்ந்த இடத்தில் அமர்ந்திருக்கார்.  ரெண்டு கைகளாலும் எதோ முத்திரை காமிக்கறார். கொஞ்சம் கீழே அவரைச் சுத்தி ஐந்து  சீடர்கள்  உக்கார்ந்துருக்காங்க. நல்ல ஜீவனுள்ள முகத்தோடு இருக்கும் சிலைகள். பர்மா புத்த சங்கத்தின் உதவியோடு இங்கே 1989 இல் அமைச்சுருக்காங்க.

(நான் க்ளிக்கிக்கிட்டு இருந்த போது, ஒரு வெளிநாட்டம்மா, புத்தர்  கைவிரல்களால் சொல்லும் சேதி  என்னன்னு கேட்டார்!  திக்ன்னு ஆச்சு எனக்கு. சின்முத்திரை வலது கையில், இடது கையில் 'ஙே'...  தர்மத்தை  உபதேசிப்பவராச்சே......   ' சிம்பல் ஆஃப் தர்மா'ன்னேன்.  அநேகமா சரிதானே? )

  போதி கயாவில்  கௌதம சித்தார்த்தர்  அமர்ந்து இருந்த  அரச மரத்தடியில்தான் அவருக்கு ஞானம் கிடைச்சதுன்னு  சொல்றாங்க பாருங்க. அதே மரத்தின் கிளையை  அசோக சக்ரவர்த்தியின் மகள் சங்கமித்திரை, இலங்கை அநுராதபுரம் கொண்டு போய் நட்டு பெரிய மரமா வளர்ந்து நிக்குது. அந்த  அநுராதபுரம்  போதி மரத்திலிருந்து  கொண்டு வந்த  கிளையை சாரநாத்தில்  நட்டு வச்சுருக்காங்க.

அதுதான் ப்ரமண்டமா கிளை பரப்பி  நிற்கும்   இந்த போதி மரம். மரத்தைச் சுத்தி  ரொம்ப அழகான  சுத்துச்சுவர். குட்டிமாடங்களில் புத்தர் சிலைகள் அழகோ அழகு!  சுவரின் மேலே தங்கத்தால் ஆன  (ரெய்லிங்ஸ்) கம்பிக் கைப்பிடிகள் !  கொழும்பு நகை வியாபாரி ஒருவரின் உபயம்!

ப்ரேயர்வீல் என்று சொல்லப்படுபவைகளை சுற்றிலும் நிறுவி இருக்காங்க.   போதி மரச் சந்நிதியைச் சுற்றி வலம் வரும்போது  நம் வலக்கையால் அவைகளை ஒவ்வொன்னா சுத்திக்கிட்டே  நாமம் ஜெபிக்கலாம்.  இது இல்லாமல் சுற்றிவர தர்ம சக்ர விளக்கங்கள் சிங்களத்திலும்   பாலி, ஆங்கிலம் மொழிகளிலும்  பளிங்கில் செதுக்கி வச்சுருக்காங்க.  'தம்ம சக்க பவட்டன சுட்டா' ன்னு  இருக்கு.  தர்மம் என்பதைத்தான்  புத்த மதத்தினர்  தம்ம என்று சொல்றாங்கன்னு நினைக்கிறேன்.  இதே தகவலடங்கிய இன்னொரு பளிங்குக் கல்வெட்டில் 'தர்ம சக்ர ப்ரவர்த்தன் சூத்ர'(ம்) ன்னு ஹிந்தி மொழியிலும் இருக்கு.

ரொம்ப அழகான  அமைதியான அமைப்பு இது. 1999 வது  ஆண்டு நம்ம தலாய்லாமா அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.  சுற்றுச் சுவர் எல்லாம் தனியாக் கட்டி விட்டுருக்காங்க.

இலங்கை புத்த மதத்தினரின் சங்கம், இந்தியாவோடு இணைஞ்சு  இந்த  ஏரியாவை பராமரிக்கிறாங்களாம்.  பார்க்கவே கோலாகலமா இருக்கு என்றதே நிஜம். துவராடை அணிஞ்ச பௌத்த துறவிகள் இங்கும் அங்குமா காணப்பட்டாங்க.  பௌத்தர்களுக்கு விசேஷமான நாட்களில்  உலகின் பலபாகங்களில் இருந்தும் துறவிகளும் பக்தர்களும்  வந்து கூடுவார்களாம்.  (ஓ.... அதான்  வாரணாசி ஏர்ப்போர்ட்டில்  தாய் ஏர்வேஸ் வந்து  இறங்குதா!!)

கோவிலுக்குள் நுழைஞ்சோம்.  அழகான நீண்ட  முன்மண்டபம். உள்ளே கருவறை. தங்கபுத்தர் ஜொலிக்கிறார்.   புத்தமதத்தின் பிறப்பிடம் என்று பீடத்தில்  எழுதி வச்சுருக்காங்க.


சுவரில் நிப்பானா ( நிர்வாணா, ஞானம்) எப்படிக் கிடைக்கும் என்று ஒரு படம்.  கிட்டப்போய்ப் பார்த்தேன். அஞ்ஞானியின் கண்களுக்கு ஒரு விவரமும் கிடைக்கலை:(  புத்தர் சம்பந்தப்பட்ட சுவர் ஓவியங்கள் அழகா இருக்கு. ஜப்பான்  நாட்டார்கள் வரைஞ்சு கொடுத்ததாம்.


மூலவருக்கு முன் ஒரு மேசையில் அழகான  மூடிபோட்ட கெண்டியில் தீர்த்தம் இருக்கு.  கூடவே கொஞ்சம் சக்கரை மிட்டாயும். நாமே எடுத்துக்கலாம்.  சாமிக்கும் நமக்கும் நடுவில் யாரும் இல்லையாக்கும்!

இப்ப இருக்கும் கோவில்  கட்டிடம் 1930 ஆம்  ஆண்டு மஹாபோதி சங்கத்தின் நிறுவனர் 'அனகாரிகா தர்மபாலர்' (Anagarika Dhammapala ) அவர்கள் முயற்சியால் புதுப்பிச்சுக்  கட்டப்பட்டது. இவர்தான்  மஹாபோதி சங்கத்தை 1891 இல் நிறுவியவர்.  நலிந்து கொண்டிருந்த புத்தரின் கொள்கைகளுக்கு மறு உயிர்  கொடுக்கும் நோக்கத்துடன்  இதை ஆரம்பிச்சு இருக்கார்.  பழைய புத்தர் கோவில்களைப் புதுப்பித்துக்கட்டுவது  இந்த சங்கத்தின் சேவைகளில் ஒன்னு.

சும்மாச் சொல்லக்கூடாது.....  தோட்டம் பலே ஜோர்.   அங்கங்கே  கொஞ்சம் குப்பைகள்  இருக்கு. அகற்றினால் இன்னும் ப்ரமாதமாக இருக்கும்.  தீவிரவாத பயம் இங்கேயுமா? :(  முதுகில் துப்பாக்கியுடன்  சில பாதுகாப்பு ஆட்கள் சுற்றிவந்துக்கிட்டு இருந்தாங்க.

பார்த்து முடிச்சாச்சா. இனி அடுத்த கோவிலுக்குப் போலாம் என்றார் ஜமுனா பாண்டே.தொடரும்.......:-)

11 comments:

said...

அழகோ அழகு...

நன்றி அம்மா...

said...

தங்களது பதிவுகளில் தாங்கள் பல்வேறு இடங்களைப் பற்றி அளிக்கும் விளக்கங்களும் தகவல்களும், பகிர்ந்து கொள்ளும் படங்களும் மிக அருமை. தங்களது வலைத்தலம் சுற்றுலா செல்ல நினைப்பவர்களுக்கு ஒரு தகவல் களஞ்சியமாக விளங்குகிறது. மிக்க நன்றி துளசி அம்மா. வாழ்த்துக்கள்.

said...

படங்கள் அருமையோ அருமை .
ஞானம் அடைந்த போதி மரத்தடிக்கு தங்கவேலி !!!!!!

said...

அருமையான படங்கள். சிறப்பான தகவல்கள். நானும் உங்களுடன் பயணிக்கிறேன்.

said...

இத்தனை சுத்தமாகப் பாதுகாப்பதே பெரிய வேலை இல்லையாம்மா துளசி. கண்களுக்கு மஹா விருந்து. புத்தர் முகம்தான் என்ன களை. புத்தரின் கைகள் விளக்குவது காருண்யமும் சரணடைந்தவர்களுக்குப் பாதுகாப்பும்னு முன்னாடி எப்பவோ படித்திருக்கிறேன். திருப்பித் திருப்பிச் சொன்னாலும் தகும். படங்கள் மிக அற்புதம். அங்கேயும் பாதுகாப்பு பயமா. ஏன் இந்த அவலம். துளசிமா. நான் இங்கெல்லாம் போவேன் என்ற நம்பிக்கை இல்லை. அதனால் உங்களுடன் மானசீகமாக வந்துவிடுகிறேன்.

said...

வாங்க திண்டுக்கல் தனபாலன்.

ரசிப்புக்கு நன்றிகள்.

said...

வாங்க புவனேஸ்வரி.

உங்கள் பின்னூட்டம் ஒரு டானிக்!

இன்னும் நல்லா எழுதணும் என்ற எண்ணம் வருகிறது.

நன்றீஸ்.

said...

வாங்க சசி கலா.

பொன் இல்லைன்னா கவனம் சிதறிப் போயிருமேப்பா:( அதான் சிறப்பு கவனம் பெற தங்க வேலி:-)

வேறெப்படி நம்ம மரியாதையை வெளிப்படுத்துவதாம்?
தங்கம்தானே திரும்பிப் பார்க்க வைக்கும்!

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

நீங்கதான் ஆன்னா ஊன்னா காசிக்குப் போறீங்களே!

வடக்கே இருந்தால் இது ஒரு வசதி:-)

வாங்க வாங்க. கூடவே வருவதில் இன்னும் மகிழ்ச்சி கூடுதலே!

said...

வாங்க வல்லி.

என் கூடவேதான் நீங்க எப்பவும் பயணிக்கறீங்க. அப்படியெல்லாம் உங்களை விட்டுட்டுப்போக முடியாதுப்பா:-)))


ஆனாலும் மனுச வாழ்க்கையில் எப்ப எது கிடைக்குமுன்னு நமக்குத் தெரியாததால்..... நம்பிக்கை இழக்க வேணாம்ப்பா.

அதுவரை என் கண்வழியே ....

said...

"அநுராதபுரம் போதி மரத்திலிருந்து கொண்டு" செல்லப்பட்டகிளை. தகவலுக்கு நன்றி.