Wednesday, May 28, 2014

தங்க மாளிகை

முழுக்க முழுக்கத் தங்கத்தால் மாளிகை கட்டுனா எப்படி இருக்கும்? தசரத மகாராஜாவின் நாலு மகன்களில் நம்ம கைகேயிக்கு ரொம்பவே ஃபேவரிட்டான மகன் ராமன் தான். தன்னுடைய சொந்த மகன் பரதன் கூட ரெண்டாம் பட்சமே!

 'எடுத்தது கண்டார் இற்றது கேட்டார்'னு நம்ம கம்பர் விவரிச்சுச் சொன்னபடி சிவதனுசை ஒடித்து சீதையைக் கல்யாணம் கட்டுனபின் ராமன் அயோத்திக்கு திரும்பி வர்றான். புதுக் கல்யாணப்பொண் புருசன் வீட்டுக்குள் காலடி எடுத்து வைக்கிறாள். இங்கே அப்ப இருந்த வழக்கப்படி, புதுப்பொண் சமைச்சு மாமானார் மாமியார்களுக்கு அன்னம் கொடுக்கணும். பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் புழக்கத்துக்கு வரலை என்பதால் பொண்ணின் சமையல் திறன் யாருக்கும் தெரியாது அப்பெல்லாம்:-)

 (வால்மீகியார் சொல்படி அப்போ சீதைக்கு வயசு ஆறு. ஆனால் நம்ம கம்பன் என்ன சொல்றார்? 'அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்' நினைவிருக்கோ? ஆறு வயசுக் குழந்தை கண்ணில் காதலுடன்...... ஊஹூம்..... இருக்குங்கறீங்க? நோ சான்ஸ். அப்ப நம்ம கம்பனின் கணக்குப்படி இவளுக்குப் பதின்ம வயதாகி இருக்கணும்,இல்லே? ) 

 ஒவ்வொருத்தருக்கா தட்டில் சாப்பாட்டுவகைகள் வச்சு விளம்புறாள் சீதை. லேடீஸ் ஃபர்ஸ்ட் என்றாலும் இங்கே 'மாமியார்கள்' இருப்பதால் மூவரில் வயதில் குறைஞ்ச கடைசி மாமியாருக்கு முதல் தட்டு! தட்டைக் கையில் வாங்குன கையோடு புது மருமகளுக்கு எதாவது பரிசு கொடுப்பது வழக்கமாச்சேன்னு , (கை நீட்டம்?) சட்ன்னு இடுப்பில் இருந்து ஒரு சாவியை எடுத்துச் சீதையின் கையில் வச்சாங்க சின்ன மாமியார். அது..... ஒரு மாளிகையின் சாவி!!   தான் ஆசை ஆசையாக் கட்டுன புது வீட்டையே   மருமகளுக்குப் பரிசாக் கொடுத்த பெரிய மனசு கைகேயிக்கு! தங்க மனசுக்காரியின் தங்க மாளிகை. ஹிந்தியில் கனக் பவன்!

 மற்ற மாமியார்களான சுமித்ரை, கௌஸல்யா , நவமணிகள் பதிச்ச பொன் ஆபரணங்களைக் கொடுத்தாங்களாம். மாமனார் என்ன கொடுத்தார்? வரும் யுகங்களில் என் மகனை சீதாராமன் என்றே உன்பெயரோடு சேர்த்தே மக்கள் அழைப்பார்கள். நீதான் முன்னில் இடம் வகிப்பாய்ன்னு சொல்லி வரம் அருளினாராம். (மதுரைக்காரரா இருந்திருப்பாரோ:-))))))

 சீதையும் ராமனுமா இந்தத் தங்கமாளிகையில் ரொம்ப 'ஆனந்த'மா 12 வருசம் வாழ்ந்துருக்காங்க. அப்புறம்? அதான் மாளிகையைப் பரிசளித்த 'அதே கைகேயி' கேட்ட வரத்தால் பதினாலு வருச வனவாசம்
போக வேண்டியதாகிப் போச்சே!

 மேற்படிக் கதை நம்ம வேளுக்குடியார், போனவருசம் விஜய் டிவியில் வந்த 'ஸ்ரீ ராமனின் பாதையில்' என்ற தொலைக் காட்சித் தொடரில் சொல்லி இருந்தார். நான் ஜஸ்ட் கொஞ்சமே கொஞ்சம் துள்ஸீ'ஸ் மசாலா  தூவினேன். அம்புட்டுதான்:-)

 போனவருசம் (2013)இல் தொடர் வந்தபோதே மறக்காமல் ஒவ்வொரு வாரமும் (வலை வழியாக) பார்த்து வந்தேன். அதிலும் 'நாமெங்கே அயோத்யாவுக்குப் போகப்போறோம்' என்ற எண்ணம் இருந்ததால் கூடுதல் கவனம் செலுத்தித் தொடரை ரசித்துப் பார்த்தேன்:-) அறுநூறு பக்தர்களுடன் 15, 16 பேருந்துகளில் பயணம் போயிருக்கார். அந்தத் தங்கமாளிகையின் முன்புதான் இப்போ நிக்கறோம்.

ராம்ஜென்மபூமி தரிசனம் முடிச்சபின் பார்லிமெண்ட் அங்கங்களின் கூட்டம் நேரா இங்கேதான் வந்துருக்காங்க போல! வாசலில் நிறைய ஏகே 47 களின் தரிசனம். நாம் வண்டியை விட்டிறங்கி வாசலை சமீபிக்கும்போது அவர்கள் திரும்பி வெளியேவரத்தொடங்கி இருந்தார்கள். ஒரு இருபது பேர் இருக்கலாம். அவர்களுடைய உதவியாளர்கள் கூட்டம் அதைவிடப் பெருசு:-)))

அங்கங்கள்  பத்திரமாத் திரும்பிப்போறவரை ராணுவத்துக்கும் தலைவலிதான் இல்லே?


பத்தொன்பது படிகள் மேலேறிப்போகணும். (அதெல்லாம் எண்ணிட்டேன்:-) எப்போ இந்த 'எண்ணும்'குணம் விடுமோ தெரியலை!) நல்ல அகலம்தான். நடுவில் கம்பித் தடுப்பு வச்சு பிடிச்சுக்கிட்டு ஏற வசதியா இருக்கு. வயசானவர்களுக்கும் என்னை மாதிரி முட்டிக்கேஸ்களுக்கும் சிரமம் குறைவு. அஞ்சடுக்கு மாளிகை. அந்தக் காலத்தில் மாளிகை முழுசுமே தங்கமா இருந்துச்சாம். இப்போ தங்கக்கலர் பெயிண்ட்:-)

 படிகள் போய் ரெண்டாம் நிலையில் முடியுது. முன்னுள்ள பெரிய ஹாலைக் கடந்தால் ப்ரமாண்டமான முற்றம். பளபளக்கும் பளிங்குத்தரைகள். படு சுத்தம்! வலது கைப்பக்கம் பளிங்கினால் ஆன சின்ன மண்டபம். அழகோ அழகு! அதில் ஒரு மேடையில் ராமனின் பாத அடையாளம். மண்டபத்தைச் சுற்றிவந்து வணங்கும் பக்தர்கள். பரிக்ரமா என்பது இந்தப் பக்கங்களில் ரொம்பவே முக்கியம். 




முற்றம் கடந்து அடுத்த பகுதிக்குப் போறோம். இன்னொரு ப்ரமாண்டமான கூடம். அதுலே ஒரு பக்கம் கருவறை! இங்கேயும் மூணு வளைவு வாசல். நடுவாசல் வழியாக அர்த்தமண்டபத்தில் போய் நின்னு சேவிக்கலாம். சாமி அலங்காரம், மண்டபம் எல்லாம் தங்கமே தங்கம் என்று நினைச்சால்....

அவை மட்டும்  இல்லையாம்! அங்கிருக்கும் மூணு செட் ராமர் சீதா சிலைகள் கூடத் தங்கம்தானாம்! தங்கக் க்ரீடம், நகை நட்டுக்களோடு த்ரீ டைம்ஸ் டு ன்னு ஆறு பேரும் மேலே குமிஞ்சுருக்கும் பூக்குவியல்களையும் மீறி ஜொலிக்கறாங்க!

 சிலைகளின் அளவு கூட லார்ஜ், மீடியம் அண்ட் ஸ்மால் இப்படி:-)

 நமக்கு நல்ல தரிசனம் கிடைச்சது. தீப ஹாரத்தியும் ஆச்சு. சந்நிதி முன் தரையில் நாடாளுமன்ற அங்கங்கள் பலர் நெருக்கியடிச்சு உக்கார்ந்துருந்தாங்க என்பதால் ஸ்பெஷல் ஆரத்தி கேட்டோ:-)

ராமனும் சீதையும்  வனவாசம் முடிஞ்சு மீண்டும் இங்கே வந்து வசிச்சு இருப்பார்கள் என்றுதான் நம்பறேன். இந்த கனக் பவனத்தை பலமுறை புனரமைச்சு பராமரிப்பு செஞ்சுக்கிட்டே இருந்துருக்காங்க. ஸ்ரீராமரின் மூத்த மகன் குசன் முதல்முறையா ரிப்பேர் பண்ணாராம். இது த்ரேதாயுகம் முடிஞ்சு த்வாபர யுகம் ஜஸ்ட் ஆரம்பிச்ச காலத்தில்.

 மகாராஜா ரிஷபதேவ் காலத்தில் த்வாபரயுகத்தின் மத்திய காலத்தில் ஒரு முறை புனரமைப்பு நடந்துருக்கு. நம்ம ஸ்ரீ க்ருஷ்ணர் கூட த்வாபரயுகம் முடிஞ்சு கலியுகம் பிறக்கப்போகும் காலக்கட்டத்தில் இங்கே விஜயம் செஞ்சுருக்காராம்.

 கலியுகம் பிறந்த பிறகு மாளிகையை முதல்முதலாக புனரமைச்சுக் கட்டியவர் குப்த சாம்ராஜ்யத்தின் சமுத்திர குப்தர். காலம் 387 கி.பி. முகலாயர் படையெடுப்பால் (1027 கி பி) அழிஞ்சு போன மாளிகையை, சமீபத்தில் 1891 இல் மீண்டும் கட்டி எழுப்பியவர்கள் மஹாராஜா ப்ரதாப் சிங் அண்ட் மஹாராணி வ்ருஷ்பான் குமாரி அவர்கள். ( நாம் அலஹாபாதில் இருந்து இங்கே அயோத்தி வரும் வழியில் ப்ரதாப்கட் என்று ஒரு ஊர் வருது.அங்கே குதிரை மீது அமர்ந்த கோலத்தில் மஹாராஜா ப்ரதாப்சிங் அவர்களின் செப்புச் சிலையைப் பார்த்தேன். சட்னு க்ளிக்கினாலும் சிலையின் சைட் போஸ்தான்        கிடைச்சது .....)

 அதிலிருந்து மஹாராஜா குடும்பத்தினர்தான் பரம்பரையாக கோவில் நிர்வாகம் செய்யறாங்க. நாலு தலைமுறை கடந்து போயிருக்கு இதுவரை. ஆரம்பத்துலேயே ஒரு ட்ரஸ்ட் அமைச்சு இன்றுவரை நல்ல பராமரிப்புடன் கோவிலை கவனிச்சுக்கறாங்க என்பது மிகவும் மகிழ்ச்சியான சமாச்சாரமே!

 கருவறையில் பார்த்தோம் பாருங்க மூணு செட் சிலைகள், அதுக்கும் சின்னதா ஒரு வரலாறு இருக்கு! பெரிய சிலைகள் ரெண்டும் குப்த சாம்ராஜ்ய காலத்தில் சந்திரகுப்த விக்ரமாதித்யர் செய்து கொடுத்தவை. முகலாயப் படையெடுப்பு காலத்தில் ரகசியமா பூமியில் புதைச்சு வச்சுக் காப்பாற்றப் பட்டதாம். இது நம்ம ப்ரதாப் சிங் மஹாராஜாவுக்குத் தெரியாது போல:( மஹாராணி, பூஜைக்குச் சிலை வேணுமேன்னு செஞ்சு கொடுத்த சிலைகள்தான் மீடியம் சைஸ்.

 ரொம்பச் சின்னதா இன்னொரு ஜோடி இருக்கு பாருங்க, அதை ஸ்ரீ க்ருஷ்ணர், ஒரு ராம பக்தைக்குத் தந்தாராம். பூவுலகை விட்டு நீங்கும்போது, மண்ணில் புதைச்சு வச்சுட்டுப்போகும்படி உத்தரவாகி இருக்கு. அந்த சாமியாரிணியும் அதே போல் செஞ்சுருக்காங்க. விக்ரமாதித்தன் காலத்தில் கனக் பவனை புனரமைக்க அந்த இடத்தைத் தோண்டியபோது குட்டிச்சிலைகள் கிடைச்சதாம். ஆகக்கூடி இந்த மூணு ஜோடி சிலைகளில் மூத்தது ஸ்ரீ க்ருஷ்ணர் கொடுத்த சிலைகளே! ஆஹா....அதான் போல மூர்த்தி சிறிதானாலும் கீர்த்தி பெரியது என்பது!!!

குட்டிச்சிலைகள் கிடைச்சதுமே...  'ஆஹா...இதுதான் அந்தக் காலத்து கருவறை, சரியான இடத்தில்தான்  தோண்டிக்கிட்டு  இருக்கோம்' என்பது கன்ஃபர்ம் ஆச்சாம். அதேஇடத்தில் இப்போதைய கர்ப்பக்ரஹம் கட்டிட்டாங்க!

 சொல்லி வச்சது போல் இந்த மூன்று ஜோடிகளுமே சொக்கத் தங்கம்! கனக் பவனின் பெயருக்கேற்றமாதிரி கனக் சாமிகள்! (கனக் = ஸ்வர்ணம். ஹிந்தி)

 கருவறை முன்னால் இருக்கும் பெரிய ஹாலில் பக்தர்கள் கூட்டமா உக்கார்ந்து பஜனைப்பாடல்கள் பாடிக்கிட்டு இருக்காங்க.


நாங்கதான் சாமியைப் பார்க்கணுமுன்னு ராமர்கள் முகத்தைப் பார்த்துக்கிட்டு இருக்கோமே தவிர, அவுங்களுக்கெல்லாம் அந்த சந்நிதியில் உக்கார்ந்து ராமநாமம் பஜனை செய்வதே பேரானந்தமா இருக்கு.

 அவுங்க பாட்டுக்கு பஜனையைப் பாடியபடியே இருக்க, தரிசனத்துக்கு வரும் பக்தர்கள் சந்நிதியை மொய்ச்சுக்கிட்டே இருக்காங்க. கூட்டம் வந்துக்கிட்டே இருக்கு இங்கே!

 அடுத்த இடம் பார்க்கணுமே என்ற வேகத்தில் அங்கிருந்து கிளம்பினோம். வெளியே கனக் பவனுக்கு இடப்புறம் இன்னொரு பெரிய மாளிகை இருக்கு. ராம் தர்பார்னு இதையும் சொல்றாங்க. இங்கேயே சுத்திக்கிட்டு இருந்தால் எப்படின்னு உள்ளே போகாமல் வெளியே இருந்தே ஒரு க்ளிக்.

 தொடரும்..............:-)



12 comments:

said...

அதி அற்புதமான படங்களுடன்
விரிவான அருமையான விளக்கங்களுடன்
பிரமிக்க வைக்கிறது தங்கள் பதிவு
இது புத்தகமாக வெளியிடப்படுமாயின் இது நிச்சயம்
மிகச் சிறந்த பயணக்கட்டுரைப் புத்தகமாக இருக்கும்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

said...

இனிப்பு ரொம்பவே திகட்டுது. எதைப் பாக்கறது, எதை விடறதுன்னு தெரியல.

said...

அருமையான விளக்கங்களுடன் அழகிய படங்களுடன் கலக்கிட்டீங்க துளசி !!
பால ராமனை காணாமல் ஏமாந்த கண்களுக்கு லார்ஜ் ,மீடியம் , ஸ்மால் ராமனை ஜோடியுடன் காண வைத்தமைக்கு நன்றிகள் பல :))

said...

வாங்க ரமணி.

புத்தகமாக வெளிவந்தால் படங்கள் இருக்குமா? அப்படியமொன்னு ரெண்டு இருந்தாலும் வெறும் ப்ளாக் & ஒயிட்டாகத்தான் இருக்கும்.

பதிப்பகத்தார் கலர் போட மெனெக்கெடுவதில்லை. அடக்கவிலை அதிகமாப் போயிருமாம்:(

நீங்க சொன்னதே புத்தகம் வெளிவந்த மனநிறைவைத் தந்தது.

இனிய நன்றிகள்.

said...

வாங்க பழனி கந்தசாமி ஐயா.

டயாபடீஸ் வந்துட்டால்...எல்லாமே ஓவர் இனிப்புதான் (என்னையும் சேர்த்துக்குங்க. )

நல்லவேளை கண்ணால் மட்டும் தின்பதால் பயமில்லை, கேட்டோ:-))))

said...

வாங்க சசி கலா.

ரொம்ப நன்றீஸ்ப்பா.

குழந்தைப்பயல்தான் ஏமாத்திட்டான்,இல்லே:-)))

said...

கனக் பவன் கைகேயி கொடுத்ததா. ராஜாக்கள் தான் எத்தனை ஈடுபாடோடக் கட்டியிருக்காங்க. ராமனின் பாதையில் கொஞ்ச நாட்கள் பார்த்தேன். இந்த இடம் நினைவு இருக்கிறது. தங்கத்தை வெட்டி எடுத்திட்டுப் போகாமல் இருக்காங்களே. அதுவே போதும். ராமன் வீட்டில் லவகுசர்கள் இருந்திருப்பார்களே. இல்லை அது வேற இடமோ. ஜொலிக்கிறது பதிவு.

said...

கனக் பவன் - அதிலிருந்த தங்கம் முழுவதும் சுரண்டி பல காலம் ஆகிவிட்டது. இப்போது தங்கத்தில் விக்ரகங்கள் மட்டுமே என்று நினைக்கும்போது - முழு கனக் பவன் தங்கமும் இன்று இருந்தால் எவ்வளவு இருக்கும் என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை!

said...

வாங்க வல்லி.

இங்கே லவகுசர்களை பார்க்கலையேப்பா:(

ஆமாம்....தங்கத்தை வெட்டி எடுத்துப்போகலைன்னு யார் சொன்னது?

அதெல்லாம் ஆச்சு. இப்போ இருப்பது தங்கக்கலர் வண்ணம் மட்டுமே:(

said...

வாங்க வெங்கட் நாகராஜ்.

சிலைகள் கூட 'அது'வான்னு உள்ளுக்குள் ஒரு சந்தேகம் வர்றதைத் தடுக்கமுடியலை:(

நம்பிக்கைதான் வாழ்வு என்பதால் நம்ப முயற்சிக்கிறேன்.

said...

வேளுக்குடி சொன்ன கதைகளை வால்மிகியும் சொன்னதில்லை. கம்பனும் சொன்னதில்லை. இந்த மாதிரி கதை சொல்ற ரொம்பப் பேர் பல விஷயங்களை மறைச்சும் சில விஷயங்களைத் திரிச்சும் சொல்றாங்க. வேளுக்குடியுந்தான். அந்த இராமனுக்குத்தான் வெளிச்சம்.

சர்க்கடை மிட்டாய்ப் பிரசாதம் கர்நாடகாவுல இருந்தே தொடங்குது. எல்லாருக்கும் பிடிக்காதுன்னு புரிஞ்சிக்க மாட்டாங்களா! சீடை குடுக்கலாம்ல. :)

அடேங்கப்பா.. தங்கச் சிலைகள். அதுவும் ஒன்னில்ல ரெண்டில்ல மூனில்ல... மொத்தம் ஒம்போது தங்கச் சிலைகள்.

என்னதான் சொல்லுங்க... வடக்கத்திக் கோயில்களுக்குப் போனா கோயிலுக்குப் போன மாதிரியே தோணுறதில்ல. சர்ச்சுக்குப் போனாக்கூட இப்படித் தோணுறதில்ல.

டெல்லியில் பிர்லா மந்திர்னு ஒரு கோயிலுக்குப் போனேன். பளிங்குக்கல்லில் பளபளப்பு. சாமியும் பளபளப்புதான்.

நம்மூர் கோயிலுக்கு வந்தா அவங்களுக்கு வித்யாசமா இருக்குமோ என்னவோ.

வித்யாசம்னதும் ஒரு வித்யாசமான கோயிலுக்குப் போனது நினைவுக்கு வருது. செக் ரிபப்ளிக்ல பிராக் பக்கத்துல ஒரு சின்ன ஊர். பேர் மறந்து போச்சு. சர்ச் கட்டனும்னு தோண்டியிருக்காங்க. தோண்டத் தோண்ட எலும்புக்கூடுகள். எல்லாரும் மறந்து போன பழைய சுடுகாடு போல. அந்த எலும்புக்கூடுகளை உள்ளலங்கராம வெச்சே சர்ச்சைக் கட்டியிருக்காங்க. உள்ள போனப்போ கொஞ்சம் ஒரு மாதிரிதான் இருந்தது. ஏசுநாதரு கடவுள். அவருக்குப் பயமில்ல. நமக்கு அப்படியா?

said...

தங்கமாளிகை விளக்கத்துடன் கண்டுகொண்டோம்.